ஆண்டவன் அருளை நாடுங்கள் -(அதிவீரராமபாண்டியன்)

* காலமெல்லாம் சென்றுவிட்டது. இளமை நம்மைவிட்டு
நீங்கிவிட்டது. நம் எதிரே இப்போது காத்துக்கொண்டிருப்பது
இறப்பு ஒன்றுதான் என்பதனை எண்ணியேனும் இறைவனை
எண்ணிக்கிடக்க வேண்டும்.

* நம் உயிர் நம்மைவிட்டு நீங்கும் சமயத்தில், அலைந்து
தேடி வைத்த செல்வமும், அருமை மனையாளும், மக்களும் ஏது
செய்தும் நம் இறப்பைத் தவிர்க்க முடியாது ‘இறைவா’ என்று
வேண்டினால், அப்போதும் ஆண்டவன் அருள் கிடைக்கும்.

* பூமிக்குப் பாரமாய், அவல வாழ்க்கையில் ஆசை வைத்து
உடலைச் சுமந்து திரியும் உயிருக்கு நற்கதியைத் தேடிக்கொள்ள
வேண்டும்.

* உயிரை ஓடவிட்ட உடலை, உற்றார் உறவினர் எடுத்துக்
கொண்டுபோய் இடுகாட்டில் வைத்து விறகால் சுட்டுப்
பொசுக்கும் நிலையினைப் பெறுவதற்கு முன், ஆண்டவனை எண்ணி
மோட்சத்துக்கு வழி தேடிக் கொள்ள வேண்டும்.

* இறைவனை எண்ணாதவர்கள், எல்லா நலன்களையும் இழந்து,
மானமிழந்து, நற்குணங்கள் அற்று வறுமை வாய்ப்பட்டு பலபேர்
பார்த்து இகழக்கூடிய இழிநிலைக்கு உள்ளாகிச் சாவார்கள்.

* மனைவி, வீடு மற்றும் அறிந்தவர்கள் ஊரோடு சரி; உறவினர்
தெரு வரை; ஆனால், ஆண்டவன் அருள்நமக்கு கிடைக்குமானால் நாம்
செல்லுமிடமெல்லாம் அது நம்மை பின்தொடரும்.

* இவர் உறவினர், இவர் பகைவர் என்பதெல்லாம் அவரவர் செய்த
வினையால் தான். ஆனால், அந்தச் செய்வினை யாரால்? அது
ஆண்டவனால்;

* நாவுக்கு அழகு ஆண்டவன் நாமத்தைச் சொல்லல்; பாடலுக்கு
அழகு ஆண்டவனைப் பாடுதல்; கலைக்கு அழகு அறிவோடிருத்தல்;
தலைக்கு அழகு ஆண்டவன் தாளைத் தாங்குதல்.