மனதில் நோய் வேண்டாமே!
மனதில் நோய் வேண்டாமே!நாக்கு உள்ளவன் பிறரின் நாக்கையும் சகித்துக்கொள்ள
வேண்டும்.
மோகவெறி போன்ற நெருப்பு வேறெதுவுமில்லை. துவேஷத்தைப்
போன்ற முதலை வேறெதுவுமில்லை. சித்த மயக்கத்தைப் போன்ற வலை
வேறெதுவுமில்லை. ஆசைகளைப் போன்ற ஆற்று வெள்ளம்
வேறெதுவுமில்லை.
மெய்யறிவு பெறாத மனிதனான நரனை, ஆடையற்ற கோலமோ,
சடைத்தலையோ, புழுதிமேனியோ, உபவாசமோ, வெறுந்தரையில்
கிடப்பதோ, நீறுபூசுதலோ, முழங்காலிட்டு அசையாது
நிஷ்டையிலிருப்பதோ எதுவும் புனிதப்படுத்திவிடாது.
நிந்தனைக்கு ஆளாகாதவன் இந்த உலகில் எவனுமே இல்லை.
போர் முனையில் தன்னை நோக்கிப் பாய்ந்துவரும் அம்புகளை
யானை தாங்கிக் கொள்வது போல நான் பிறரின் நிந்தனைச்
சொற்களைத் தாங்கிக் கொள்வேன். ஏனெனில் அந்தத் தீமைதான்
உலகத்தின் பண்பு.
ஜீவவதை செய்பவன், திருடுபவன், புளுகுபவன், பிறன்
மனைவியை இச்சிப்பவன் – அவனை அறிஞர் நிந்திப்பார்.
நிர்வாணம் என்றால் விடுதலை என்று அர்த்தம்.
அறிவாளிகள் எப்போதும் வலுவான சக்திகள் படைத்தவராய்,
சிந்தனை ஒருமிப்புடனும், தளராத உறுதியுடனும், சீரான
போக்குடனும், நிர்வாணத்தை அடைகின்றனர். அந்த நிர்வாணமே அதி
உன்னதமான ஆனந்தம்.
‘என் உடல் நோய் பிடித்ததாயிருந்தாலும் என் மனம் நோய்
பிடித்ததாக இருக்கக்கூடாது’ என்று நீங்களே உங்களைப்
பயிற்சி செய்துகொள்ள வேண்டும்.