காங்கிரஸின் “கிராண்ட் மாஸ்டர்’
காங்கிரஸின் “கிராண்ட் மாஸ்டர்’
சிரித்தால் பளிச்சென்று குழிவிழும் கன்னம். சுறுசுறுப்பான நடை. நறுக்குத் தெரித்தாற்போலப் பேசும் பாங்கு. எந்தவொரு விஷயத்தையும் ஆழமாகத் தெரிந்து கொள்ள விழையும் ஆர்வம். அப்பாவைப்போலவே அப்பாவித்தனமான குழந்தை முகம் – இதுதான் ஜூன் 17, 1970-ல் பிறந்த ராகுல் காந்தி!
மன்னராட்சியில்கூட, ஐந்து தலைமுறையாகத் தொடர்ந்து மக்கள் செல்வாக்குடன் ஆட்சி செய்த அரச குடும்பங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். உலக ஜனநாயக சரித்திரத்தில் தொடர்ந்து ஐந்து தலைமுறையாக அரசியலில் கொடிகட்டிப் பறக்கும் ஒரே குடும்பம் மோதிலால் நேருவின் குடும்பமாகத்தான் இருக்கும்.
நமது மனதில் முதன்முதலில் பதிந்த ராகுல் காந்தியின் முகம், சோடாபுட்டிக் கண்ணாடியுடன், பாட்டி இந்திரா காந்தியின் சடலத்துக்குத் தந்தை ராஜீவ் காந்தி தீ மூட்டும்போது, அழுதபடி சகோதரி பிரியங்காவைக் கட்டிப்பிடித்த சிறுவனைத்தான். அடுத்தபடியாக நாம் பார்த்தது, அப்பா ராஜீவ் காந்தியின் சிதைக்குத் தீ மூட்டிய இளைஞனை. அடுத்தாற்போல, ராகுல் காந்தியைப் பற்றி நாம் கேள்விப்பட்டது, 2004 தேர்தலில் அவர் அமேதி தொகுதியில் மக்களவைக்குப் போட்டியிட்டபோதுதான்.
இடைப்பட்ட 13 ஆண்டு இடைவெளியில் ராகுல் காந்தி என்ன செய்தார், எப்படி, எங்கே இருந்தார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். நேரு குடும்பம் ஆட்சியில் இல்லாமல் இருந்ததுகூடக் காரணமாக இருக்கலாம். இப்போது மீண்டும் நேரு குடும்பம் அதிகார மையத்தில் இருப்பதால், அத்தனை கண்களும் அந்தக் குடும்பத்தின் அடுத்த வாரிசான ராகுல் காந்தியின்மீது பதிந்திருப்பதில் ஆச்சரியமில்லை.
ராகுல் காந்தி முதலில் தில்லியிலுள்ள மாடர்ன் பள்ளியில் சேர்க்கப்பட்டபோதும், அடுத்த சில மாதங்களிலேயே தந்தையும் சித்தப்பாவும் படித்த டூன் பள்ளிக்கூடத்துக்கு மாற்றப்பட்டார். இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக வீட்டிலிருந்தபடி படிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
தில்லியிலுள்ள புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் ராகுலைச் சேர்க்க அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி விரும்பியபோது, அவ்வளவு சுலபமாக அவரால் அந்தக் கல்லூரியில் சேர்க்க முடியவில்லை. காரணம், ராகுலுக்குப் படிப்பில் அவ்வளவு கெட்டிக்காரத்தனம் இல்லாமல் இருந்ததுதான். விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டை சாக்கிட்டு, துப்பாக்கி சுடுவதில் தேர்ச்சி பெற்றவர் என்று கூறி, பலமான சிபாரிசுடன் ராகுல் காந்தி புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அதிக நாள் அங்கே அவரால் தொடர முடியவில்லை.
1989 தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததும், தனது குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டார் ராஜீவ் காந்தி. பிரியங்கா இத்தாலியில் தாய்வழிப் பாட்டியின் வீட்டிற்கும், ராகுல் காந்தி அமெரிக்காவுக்கும் அனுப்பப்பட்டனர். அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாநிலத்தில் அமைந்த ரோலின்ஸ் கல்லூரியில் சேர்க்கப்பட்டார் ராகுல். ஃப்ளோரிடாவில் அவருடன் படித்த கல்லூரித் தோழர் இப்போது மத்திய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சராக இருக்கும் ஜோதிராதித்ய சிந்தியா. அன்று தொடங்கிய நெருங்கிய நட்பு இப்போதும் தொடர்கிறது.
என்ன காரணத்தாலோ, ரோலின்ஸ் கல்லூரியில் மூன்று வருடங்கள் படித்தும், எந்தவிதப் பட்டமும் பெறாமல் அமெரிக்காவிலுள்ள இன்னொரு பல்கலைக்கழகத்துக்குத் தாவினார் ராகுல். அங்கே அவர் பட்டப்படிப்பை முடித்தார் என்று கூறப்படுகிறது. 1995-ல் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ட்ரினிட்டி கல்லூரியில் அக்டோபர் 1994 முதல் ஜூலை 1995 வரை படித்து எம்.பில். பட்டம் பெற்றதாகச் சொல்கிறார்கள். “பத்து மாதம் எங்கள் கல்லூரியில் படித்து எம்.பில். பட்டம் பெற்றார் ராகுல் காந்தி’ என்று சமீபத்தில் அந்தப் பல்கலைக்கழகத் துணைவேந்தரே சான்றிதழ் கொடுத்திருக்கிறார்.
ஹார்வர்ட் பிசினஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் போர்ட்டர் என்பவர் நடத்தும் “மானிட்டர்’ நிலையத்தில், தகவல் தொடர்புத் துறையின் ஆய்வாளராக ராகுல் காந்தி சில காலம் பணியாற்றினார். பிறகு இந்தியா திரும்பி மும்பையில் சொந்தமாக ஒரு கன்சல்டென்சி நிறுவனம் நடத்தி வந்தார். இப்போது அதையும் மூடிவிட்டதாகத் தெரிகிறது. இவையெல்லாம்தான் ராகுல் காந்தி பற்றிய இளமைக் காலத் தகவல்கள்.
2004 தேர்தலில் ராகுல் காந்தி வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானது முதல், அவரது தனிப்பட்ட வாழ்க்கை அரசியல் வட்டாரங்களில் சற்று அதிகமாகவே அலசப்படுகிறது. 39 வயதாகிவிட்ட ராகுல் காந்தி திருமணமாகாமல் இருப்பது ஏன் என்கிற கேள்வி எழுவதில் தவறொன்றும் இல்லை. அதுவும், தனக்கு ஒரு காதலி இருப்பதாக அவரே ஒரு பத்திரிகை பேட்டியில் கூறிவிட்ட பிறகு, அவரது திருமணம் பற்றிய பேச்சு எழுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது!
அதேநேரத்தில், ராகுல் காந்தி தான் காதலிக்கும் பெண்ணைக் கைபிடிப்பாரா இல்லையா என்பதைப் பொருத்துத்தான் ராகுல் காந்தியின் அரசியல் வருங்காலமும், காங்கிரஸ் கட்சியின் வருங்காலமும் அமையும் எனும்போது, ஆச்சரியம் விவாதமாக மாறத்தானே செய்யும்?
ராகுல் காந்தியின் கொலம்பியாக் காதலி என்று எழுதுகிறார்களே, அவர்கள் ராகுல் – வெரோனிக்கா உறவைப் பற்றி அரைகுறையாகத் தெரிந்தவர்கள். அவர் கொலம்பியப் பெண்ணே அல்ல. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வெரோனிக்காவின் பெற்றோர் வசிப்பது வெனிசுலாவில். இவர்களது காதல் கடந்த 13 வருடங்களாகத் தொடர்கிறது.
சோனியா மற்றும் பிரியங்காவுக்கு ராகுலின் காதலைப் பற்றி நன்றாகவே தெரியும். வெரோனிக்கா இந்தியா வந்திருந்தார் என்பது மட்டுமல்ல, தில்லியில் சோனியா காந்தியின் வீட்டிலேயே தங்கி இருந்தார். வெரோனிக்காவை அழைத்துக் கொண்டு கேரளம் மற்றும் லட்சத்தீவுக்கு உல்லாசப் பயணம் போக அனுப்பியதே சோனியாதான்.
வீட்டாரைப் பொருத்தவரை ராகுல் காந்தி வெரோனிக்காவைத் திருமணம் செய்து கொள்வதில் எதிர்ப்பில்லை. ஆனால், ராகுல் காந்தி ஓர் ஐரோப்பியப் பெண்ணை மணந்து கொள்வதை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? இது சோனியா குடும்பத்திலும், காங்கிரஸôர் மத்தியிலும் எழும் நியாயமான கவலை. ராகுல் – வெரோனிகா உறவு முறிந்து விட்டதா, இன்டர்நெட் “சாட்டிங்’கில் தொடர்கிறதா என்பது சோனியா குடும்பத்துக்கே வெளிச்சம்!
பாட்டி, அப்பா, அம்மா ஆகிய மூன்று பேரிலிருந்தும் மிகவும் வித்தியாசப்படுகிறார் ராகுல் காந்தி என்பதை அவரது அமேதி செயல்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன. வீணான புகழுரைகள், ஜால்ரா கூட்டங்கள் என்று எதையுமே அவர் அனுமதிப்பதில்லை. தொகுதி மக்களிடம் அவர் சொல்லும் விஷயம்~ “உழைத்துப் பிழைக்க வழி கேளுங்கள். செய்கிறேன். நன்கொடையில் வாழ நான் உதவி செய்ய முடியாது!’
காங்கிரஸ் கட்சிக்கு இளமைப் பொலிவை ஏற்படுத்தும் சக்தி ராகுல் காந்திக்கு இருக்கிறது என்பதை, காங்கிரஸ் அல்லாத கட்சியினரே ஒத்துக் கொள்கிறார்கள். ராகுலின் பின்னால், ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட், ஜிதின் பிரசாதா, நிதின் ஜிண்டால், மிலிந்த் தேவ்ரா என்று மெத்தப் படித்த ஒரு வாரிசுகள் பட்டாளமே திரண்டு நிற்கிறது.
2007 முதல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் ராகுல் காந்தி இந்தியா முழுவதிலிருந்தும் 40 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்துக் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். தில்லியிலுள்ள அவரது இல்லமான 12, துக்ளக் லேன் இப்போது ஓர் அலுவலகமாக மாற்றப்பட்டு, காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்திலிருந்து பலப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.
ராகுல் காந்திக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது உண்மை. அவர் போகும் இடங்களிலெல்லாம் இளைஞர் கூட்டம் அவரை மொய்க்கிறது. ஆனால், அவர் பிரசாரத்துக்குப் போன சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெறுகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் உத்தரப் பிரதேசம், பிறகு குஜராத், அடுத்தது கர்நாடகம் என்று ராகுல் முழுமூச்சாக இறங்கிப் பிரசாரம் செய்த மாநிலங்களில் எல்லாம் தோல்வி மேல் தோல்வி.
இந்தத் தோல்விகள் ராகுல் காந்தியைச் சோர்வடையச் செய்துவிடவில்லை. ஒரு குறிக்கோளுடனும் லட்சியத்துடனும் களமிறங்கி இருக்கிறார் அவர். இந்த மக்களவைத் தேர்தலிலேயே, உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரில் தனித்துப் போட்டியிடுவது என்பது ராகுலின் முடிவுதான் என்கிறார்கள். தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை, கட்சி அமைப்புகளைப் பலப்படுத்துவதுதான் முக்கியம் என்பது அவரது கருத்து.
இடம், பொருள், ஏவல் தெரியாமல் ராகுல் காந்தி பேசி, காங்கிரஸ் தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறார் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ராகுல் காந்தி கவலையேபடுவதில்லை. அவர் ஒரு திட்டத்துடன்தான் களமிறங்கி இருக்கிறார் என்று தோன்றுகிறது. தனது சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றுப் பிரதமராக வேண்டும் என்று அவர் திட்டமிட்டாலும்கூட அதிசயப்பட ஒன்றுமில்லை.
ராகுல் காந்தியின் பொழுதுபோக்கும் அவர் அடிக்கடி விரும்பி விளையாடுவதும் “செஸ்’ ஆட்டத்தைத்தான். எப்படி, எங்கே காயை நகர்த்தி “செக்’ வைப்பது என்பதுதான் “செஸ்’ விளையாட்டின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் விஷயம். அரசியலிலும் அப்படியே!
கட்டுரையாளர்
‘க்ளோஸ் – அப்’- சத்தீஷ்
dinamani



SocialVibe