தொகுப்பு
தமிழுக்கு பெருமை!-ஜூன் 12 – சேக்கிழார் குருபூஜை
பெரிய புராணம் என்னும் அற்புத காவியத்தை ஆன்மிக உலகிற்கு அளித்தவர் சேக்கிழார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிறந்தவர். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் அருண்மொழி தேவர்.
சேக்கிழாரின் தந்தை, அநபாய சோழ மன்னனின் அமைச்சராக இருந்தார். அரண் மனைக்கு செல்லும் போதெல்லாம், மகனையும் உடன் அழைத்து செல்வார். அங்கு நடக்கும் அரசியல் நடவடிக்கை களை சேக்கிழார் கவனித்து வந்ததால், அரசு நிர்வாக காரியங்களில் கை தேர்ந்தவர் ஆனார். அதனால், தந்தைக்குப் பின் சேக்கிழாருக்கு, முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
சேக்கிழாரின் நிர்வாகத் திறனைப் பாராட்டிய மன்னன், அவருக்கு "உத்தம சோழ பல்லவன்’ என்ற பட்டத்தை வழங்கினார்.
ஒருமுறை, சேக்கிழார் கும்ப கோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலுக்கு சென்றார். அங்குள்ள இறைவனைக் கண்டதும், அவருக்கு தன்னையறியாமல் கண்ணீர் வழிந்தது. உடலை இறைசக்தி ஆட்டுவித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அக்கணமே அரசபதவியை துறந்து, இறைப்பணிக்கு சென்று விட எண்ணினார். ஆனால், அதற்கான நேரம் இது வல்ல என்பதை உணர்ந்தார். காரணம், மன்னன் அநபாயன் சமண மத இலக்கியமான சீவக சிந்தாமணியைப் படித்து, சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்தான்.
மன்னனின் சமண மத ஈடுபாட்டை கண்டு கவலையடைந்த சேக்கிழார், இதை இப்படியே விட்டு விட்டால், சைவ சமயத்திற்கு ஆபத்து வந்துவிடும் எனக் கருதி, சைவ சமய நூல்களின் சிறப்பை விளக்கி, அவற்றை படிக்குமாறு மன்னனைத் தூண்டினார்.
சேக்கிழாரின் தூண்டுதலினால், சைவ மத நூல்களைப் படித்த மன்னன், சைவ சமயத்தின் அருமையை <உணர்ந்து கொண்டான். மேலும் அந்நூல்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினார்.
"அமைச்சரே… சிவக்கதைகளை உருவாக்கியது யார், அவை பழங்கால கதைகளா, இடைக் காலத்தில் <உருவானதா, அந்தக் கதைகள் குறித்த நூல்கள் இருக்கிறதா?’ எனக் கேட்டான். சேக்கிழார் அதற்குரிய விளக்கத்தை எடுத்துக் கூறி, "மன்னா… நம்பியாண்டார் நம்பி எழுதிய திருவந்தாதியை, ராஜராஜசோழன் செப்பேடு செய்து, சைவ சமயத்தின் <<உண்மை நெறியை மக்களுக்கு கொண்டு சென்றார். அவர் பரம்பரையில் வந்த நீங்களும், சைவம் தழைக்க ஏதாவது செய்ய வேண்டும்…’ என்றார்.
மன்னனின் மனம் மாறியது. சிவபெருமானுக்கு சேவை செய்த திருத்தொண்டர்களின் கதையைத் தொகுக்கும் பொறுப்பை, சேக்கிழாரிடம் ஒப்படைத்தான்.
சேக்கிழார் சிதம்பரம் சென்று நடராஜரை வணங்கி, "தில்லையம்பலத்தானே! உன் அடியவர்களின் வரலாற்றை எழுத அடியெடுத்துக் கொடுக்க வேண்டும்…’ என்று வேண்டினார். அப்போது, "உலகெலாம்’ என்று குரல் கேட்டது. அவ்வார்த்தையை முதல் வார்த்தை யாகக் கொண்டு, திருத்தொண்டர் புராணத்தை எழுத ஆரம்பித்தார் சேக்கிழார்.
"உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்’ என்று முதல் பாடல் தொடங்கி, 4,253 பாடல்களை எழுதி முடித்தார். மிக நீண்ட புராணம் என்பதாலும், பெரிய நூலாக இருந்தபடியாலும், அதற்கு, "பெரிய புராணம்’ என்ற பெயர் வந்தது. நூலை எழுதி முடித்த சேக்கிழார், நடராஜரின் பாதத்தில் அந்நூலை சமர்ப்பித்தார்.
சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று, பெரியபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. மன்னனின் தலைமையில், 63 நாயன்மார்களின் கதையை பாடி முடிக்க, சேக்கிழாருக்கு ஒரு ஆண்டு ஆனது. சொற்பொழிவு சமயத்தில், சேக்கிழாருக்கு வியர்த்துக் கொட்டியது. அநபாய மன்னனே அவருக்கு சாமரம் வீசினான். இது தமிழுக்கு கிடைத்த பெருமை.
இதன் பிறகு, சேக்கிழாரின் சகோதரர் பாலறாவாயர் சோழ நாட்டின் அமைச் சராக்கப்பட்டார். சேக்கிழார் தில்லை நடராஜரின் புகழ்பாடி, அவர் திருவடி சேர்ந்தார். தமிழுக்குப் பெருமை சேர்த்த சேக்கிழாரின் குருபூஜை, வைகாசி பூச நட்சத்திரத்தில் நடைபெறும். அவர் பிறந்த குன்றத்தூர் சேக்கிழார் கோவிலில், இந்த விழா 11 நாட்கள் நடத்தப்படுகிறது.
***