
டிச., 10 – மெய்ப்பொருளார் குருபூஜை
பக்தி உடையவர்களுக்கு, பகைவர்களே கிடையாது. பகைவர்கள் துன்பமிழைத்தாலும், தங்களுக்கே உரித்தான பொறுமை சுபாவத்தால், அவர்களை மன்னிக்கும் ஆற்றலை பக்தர்கள் பெற்று விடுகின்றனர். பகைவனை மன்னிக்கும் குணம் எந்த மனிதனிடம் இருக்கிறதோ, அவன் தெய்வநிலைக்கு உயர்த்தப்படுகிறான்.
திருக்கோவிலூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தார் மெய்ப்பொருளார் என்னும் மன்னர். இவர், தீவிர சிவபக்தர்; பல சிவாலயங்களில் திருப்பணி செய்தவர்; வீரத்திலும் இவருக்கு இணை இவரே. இவருக்கு கட்டுப்பட்ட சிற்றரசர்களாகவே பல தேசத்து மன்னர்களும் இருந்தனர். இதுகண்டு, பக்கத்து நாட்டு மன்னனான முத்தநாதன் என்பவனுக்கு பொறாமை ஏற்பட்டது; ஆனால், கோழையான அவனிடம், மெய்ப்பொருளாரை எதிர்த்து நிற்கும் திராணி இல்லை.
கோழைகளின் உள்ளத்தில் தான் வஞ்சக எண்ணங்கள் எழும்; முத்தநாதனின் மனதிலும்,மெய்ப்பொருளாரை குறுக்கு வழியில் கொல்லும் வஞ்சக எண்ணம் பிறந்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் எது பலமோ, அதுவே பலவீனம் என்ற மனோதத்துவத்தை அறிந்த முத்தப்பன், மெய்ப்பொருளாரின் சிவபக்தி என்னும் பலத்தையே, பலவீனமாக்கிக் கொள்ள முடிவெடுத்தான். சிவனடியாரைப் போல வேடமிட்ட அவன், உடலெங்கும் திருநீறு பூசி, நீண்ட தாடி வைத்து திருக்கோவிலூர் வந்து சேர்ந்தான். தங்கள் ஊருக்கு வந்துள்ள சிவனடியாரை, அன்புடன் வரவேற்று, மரியாதையுடன், அரண்மனைக்கு அழைத்து வந்தனர் மக்கள். அந்த அரண்மனைக்குள் சிவனடியார்கள் நுழைய எவ்வித தடையும் கிடையாது என்பதால், அரசரின் அந்தப்புர அறைக்கே சென்று விட்டான் முத்தப்பன்.
“ராணியாருடன் அரசர் தனித்திருக்கிறார்…’ என்று, அரசரின் மெய்க்காப்பாளரான தத்தன் சொன்னதை பொருட்படுத்தாத முத்தப்பன், அவனையும் மீறி அந்தப்புரத்துக்குள் நுழைந்து விட்டான். அவனது கைகளில் சில ஓலைச்சுவடிகளும், அதனுள் ஒரு உடைவாளும் இருந்தது. தங்கள் அறைக்குள் யாரோ வருவதை அறிந்த ராணி, சுதாரித்து, மன்னரை எழுப்பினாள்.
தன் முன், சிவனடியார் ஒருவர் நிற்பதைக் கண்ட மன்னர், அவரைப் பணிந்து வணங்கினார்.
“அடியவரே… அந்தப்புரத்துக்குள்ளேயே நுழைய வேண்டுமென்றால், தாங்கள் அவசர காரியமாகத்தான் வந்திருப்பீர்கள். தாங்கள் எது கேட்டாலும், செய்கிறேன்…’ என்றதுடன், முத்தப்பனுக்கு ஆசனம் அளித்து கவுரவித்தார்.
“மன்னா… என் கையிலுள்ள ஓலைச்சுவடிகள், எனக்கு, நேரடியாக சிவபெருமானால் தரப்பட்டவை. இதிலுள்ளவற்றை உங்களிடம் வாசித்துக் காட்டவே வந்தேன்…’ என்றதும், மன்னரும், ராணியும் மிகவும் மகிழ்ந்தனர்; தங்கள் வாழ்வில் கிடைத்த பேறாகக் கருதினர்.
“இதை வாசிக்கும் போது பெண்கள் உடனிருக்கக் கூடாது…’ என்று, முத்தப்பன் சொன்னதால், உள்ளே போய்விட்டாள் ராணி. முத்தப்பன் முன் தரையில் அமர்ந்தார் மன்னர். ஓலைச்சுவடியை வாசிக்கும்படி முத்தப்பனின் பாதத்தில் குனிந்து வணங்கினார். அப்போது, மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து, மன்னரின் முதுகில் குத்திவிட்டான் முத்தப்பன். வெளியே நின்ற தத்தன், இதைப் பார்த்து ஓடிவந்து, முத்தப்பனைக் கொல்ல முயன்றான்.
“திருநீறு பூசிய அடியவர்களைக் கொல்வது பாவம். இவர் நம்மவர்…’ என்று தடுத்த மன்னர், உடனடியாக, நாட்டின் எல்லை வரை பாதுகாப்புடன் முத்தப்பனை விட்டு வருமாறு தத்தனுக்கு உத்தரவிட்டார். செய்தியறிந்த, பக்தி வாய்ந்த மக்களும், மன்னரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, முத்தப்பனை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டனர். மன்னரின் உயிர் பிரிந்தது, ராணி அழுதாள். அப்போது, அங்கு தோன்றி, மன்னருக்கு உயிர் கொடுத்து, பக்தனுக்கு தேவை பொறுமையும், தியாக மனப்பான்மையுமே என்பதை உணர்த்தவே இந்த லீலையை நிகழ்த்தியதாகக் கூறினார் சிவபெருமான்.
பொறுமைசீலரான மெய்ப்பொருளார், கார்த்திகை மாத உத்திரநட்சத்திரத்தன்று முக்தியடைந்தார். அவரது குருபூஜை நாளில், பகைவர்களையும் மன்னிக்கும் குணம் வேண்டி பிரார்த்திப்போம்.
SocialVibe