தொகுப்பு

Archive for the ‘கட்டுரைகள்’ Category

தூர தேசத்து துயரங்கள் : உரத்த சிந்தனை

நவம்பர் 22, 2009 vayal மறுமொழியவும்

உலகின் 180 நாடுகளில் மூன்று கோடிக்கு மேல் இந்தியர்கள் உள்ளனர். இதில், ஒரு கோடியே 70 லட்சம் பேர் அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர். வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்பவர்கள் போலி ஏஜன்டுகளிடம் சிக்கி தவிக்கும் நிலையும், படிக்கச் செல்லும் மாணவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதும், குடியுரிமை பெற்றுள்ள இந்தியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் முக்கியத்துவம் கிடைக்க போராட வேண்டிய நிலையும் தற்போது தலை தூக்கி வருகிறது.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, கனடாவுக்கும், சவுதி அரேபியா, துபாய், குவைத் உட்பட வளைகுடா நாடுகளுக்கும் வேலைக்காக செல்பவர்கள், போலி ஏஜன்டுகளால் ஏமாற்றப்படுவது அதிகரித்துள்ளது. வளைகுடா நாடுகளில், பல்வேறு நகரங்களில், 2500 தமிழர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகங்கள் மூலம் அவர்களின் நிலை விசாரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் உள்ளன. இதில், சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் போலி ஏஜன்டுகளால் ஏமாற்றப்பட்ட 400 இந்தியர்கள் வேலையின்றி தவித்து வருவது குறித்து கனிமொழி எம்.பி., சமீபத்தில் ராஜ்யசபாவில் குரல் எழுப்பியதால், மத்திய அரசு அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மும்பை போலி ஏஜன்டுகளை நம்பி மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற 80 பேர் அங்கு கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டு, உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் கடந்த மாதம் தமிழகம் வந்தடைந்தனர். பஞ்சாபிலிருந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு வேலைக்கு சென்ற 63 பேர் ஏமாற்றப்பட்டு தாயகம் திரும்ப வழியின்றி, ஆறு வருடங்களாக வீதிகளில் தவித்து வருவதாகவும், இதில் ஐந்து பேர் அங்கு இறந்து போனதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளுக்கு அரசு மூலம் அனுப்பப்படுபவர்கள் மற்றும் படித்தவர்களுக்கு அவ்வளவாக பிரச்னையில் சிக்குவதில்லை. “எல்லாரும் வெளிநாடு போய் சம்பாதிக்கின்றனர்; நாமும் போவோம்’ என்று, படிக்காதவர்கள் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையால் அங்கு என்ன சம்பளம், என்ன வேலை, பாதுகாப்பு உத்தரவாதம் பற்றிய அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்ளாமல், போலி ஏஜன்டுகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். போலி ஏஜன்டுகளிடம் ஏமாறாமல் இருக்கவும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் உள்ள கஷ்ட, நஷ்டங்கள் குறித்தும், நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் மூலம் மக்கள் மத்தியில் குறிப்பாக கிராமப்புறங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.

துபாய், சவுதி அரேபியா உட்பட 17 வெளிநாடுகளில் பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களை மீட்க, “இந்தியர்கள் நல நிதி’க்காக மத்திய அரசு நான்கு கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. இத்துடன் விழிப்புணர்வு பிரசாரத்திற்கும் சேர்த்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். விழிப்புணர்வு பிரசாரத்திற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சமூக சேவை அமைப்புகளும் உறுதுணையாக இருக்க வேண்டும். ஏமாற்றும் ஏஜன்டுகளை தண்டிக்க போதுமான அளவில் தற்போதைய சட்டத்தில் இடமில்லை. ஏமாற்றும் ஏஜன்டுகளைத் தண்டிக்க, அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளைத் தண்டிக்க, குடியேற்றச் சட்டத்தில் மாற்றம் செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள், அங்கு இனவெறி தாக்குதலுக்கு உள்ளாவதும் தொடர்கிறது.

முன்னர் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய மாணவர்களில் 71 சதவீதம் பேர் அமெரிக்காவுக்கும், 8 சதவீதம் பேர் பிரிட்டனுக்கும், 7.6 சதவீதம் பேர் ஆஸ்திரேலியாவுக்கும் சென்றனர். அமெரிக்கா செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 56 சதவீதமாகக் குறைந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் நாடுகளுக்குச் செல்வது அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் படிப்பு உதவி வசதி, படிக்கும் போதே வேலையும் தேடிக்கொள்ளும் நிலையும் உள்ளதால், இந்தியாவைச் சேர்ந்த 95 ஆயிரம் மாணவர்கள் தற்போது அங்கு படித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய மாணவர்கள் மீது, 1400 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. பல இடங்களில் இனவெறி தாக்குதலும் நடத்தப்பட்ட போதும் கூட, அந்நாட்டு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இனவெறி தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்திய மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்காக வழங்கப்பட்ட விசாக்களுக்கான விதிமுறைகளை அந்நாடு, கடந்த மார்ச் மாதம் முதல் மிகவும் கடுமையாக்கியுள்ளதால், கடந்த மூன்று மாதங்களில் 41.9 சதவீதம் இந்திய மாணவர்களின் விசா நிராகரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் இந்தியர்களுக்கு, இந்தியர்களாலேயே பிரச்னை ஏற்படும் நிலையும் தலை தூக்கியுள்ளது. மலேசியாவில் இந்துக்களுக்கு சம உரிமை கோரியும், இந்து கோவில்கள் இடிக்கப்படுவதை தடுக்கவும் அங்குள்ள இந்தியர்கள் ஒன்றிணைந்து, “இன்ட்ராப்’ என்ற அமைப்பு மூலம் இரண்டாண்டுகளுக்கு முன் கோலாலம்பூரில் போராட்டம் நடத்தினர். இதில், 15 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 17 மாதங்கள் சிறையிலிருந்து வெளியே வந்த இன்ட்ராப் தலைவர்களின் ஒருவரான உதயகுமார், “மனித உரிமை கட்சி’யை கடந்த மே மாதம் துவங்கினார். “ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இந்தியர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு குறைகளை தீர்த்து வைக்க முயற்சிக்கவில்லை. மலேசியாவில் உள்ள இந்தியர்களின் உரிமைக்காக போராடுவதே கட்சியின் வேலையாக இருக்கும்’ என்று, உதயகுமார் அறிவித்துள்ளார். இது, வரவேற்கப்படக் கூடிய முடிவு என்றாலும் ஆளும் கட்சி அதிருப்தியில் உள்ளதால், இந்தியர்களின் ஒற்றுமை பலத்தை மறைமுகமாகக் குறைக்கும் நோக்கில் தனேந்திரன் தலைமையில், “மலேசிய மக்கள் சக்தி’ என்ற பெயரில் புதிய கட்சியை அந்நாட்டு பிரதமர் துவங்கி வைத்துள்ளதாகவும் மக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர்.

பல கட்சி கூட்டணி ஆட்சி நடக்கும் மலேசியாவில், இந்தியர்கள் 20 லட்சம் பேர் உள்ளனர். இது, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8 சதவீதம். அரசியல் மூலம் தனித்து ஆட்சியைப் பிடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இந்திய வம்சாவளியினருக்கு இல்லை. ஆளும் அரசை அனுசரித்தே காரியம் சாதித்துக் கொள்ள வேண்டிய நிலையே உள்ளது. எனவே, வெளிநாடுகளுக்கு பிழைக்கச் செல்பவர்கள் எப்போதும் உஷாராக இருப்பது நல்லது.

- வீ.சக்கரபாணி, பத்திரிகையாளர்

வீட்டுக் கடன் `டிப்ஸ்’!

நவம்பர் 19, 2009 vayal மறுமொழியவும்

உங்களுக்கு என்று ஒரு வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்வது தற்போது கொஞ்சம் எளிது. அதற்கு, வீட்டுக் கடனுக்குத்தான் நடுத்தர மக்கள் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் எந்த விவரமும் தெரியாமல் வீட்டுக் கடனுக்கு முயற்சிப்பது சரியல்ல. பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளிவந்தாலும், நீண்ட காலமாக நம்பிக்கையாகத் திகழும் வீட்டு வசதி நிறுவனம் அல்லது வங்கியைத் தேர்வு செய்வது நல்லது.

வீட்டில்தான் இதயம் இருக்கிறது! பெரும்பாலானவர்களுக்கு சொந்த வீடு என்பது வாழ்நாள் கனவு. சிறிது காலத்துக்கு முன்புதான் பொதுஜனத்துக்கு அது எட்டாத கனவாகத் தோன்றியது. நிலம், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை விண்ணை விசாரித்துக் கொண்டிருந்ததுதான் அதற்குக் காரணம்.

ஆனால் தற்போது வீட்டுக் கடன்கள் மற்றும் வீட்டுவசதிக் கடன் நிறுவனங்களின் வளர்ச்சி காரணமாக, சராசரி வருமானமுள்ள எல்லோரும் சொந்தமாக ஒரு நிழலுக்கு ஆசைப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

வீட்டுக்கடன் எளிதாகக் கிடைக்கிறது என்பது மட்டுமல்ல, வீட்டு வசதித் துறையில் ஏற்பட்டுள்ள தீவிரப் போட்டி காரணமாக, தகுதிவாய்ந்த வாடிக்கையாளரை ஈர்ப்பதற்காக நிறுவனங்கள் எல்லா வகையிலும் இறங்கிவரத் தொடங்கியிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன. பல புதுமையான வீட்டுவசதிக் கடன் திட்டங்கள் சந்தைக்கு வந்துள்ளன.

சரி, வீட்டுக் கடன் பெறுவதில் உதவும் `டிப்ஸ்’கள் என்னென்ன?

* வீட்டுக் கடன் பெறுவதற்கு பொதுவான `பார்முலா’ என்ற ஒன்று இல்லை. உங்களுக்கு நல்லதாக இருக்கக்கூடிய ஒன்று, மற்றொருவருக்கு நல்லதாக இருக்காமல் போகலாம். அதே மாதிரி, உங்களுக்கு நல்லதாக இல்லாத ஒரு திட்டம், இன்னொருவருக்கு அற்புதமானதாக இருக்கலாம். எனவே உங்கள் தேவைக்கு எந்தத் திட்டம் சரியாகப் பொருந்தும் என்று நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

* நீங்கள் உங்கள் தேவைகள், பணம் செலுத்துவதற்கான ஆதாரம், எதிர்காலத் திட்டம் ஆகியவற்றை வரையறுத்தபின், முக்கியமான கட்டம் வருகிறது. அது வீட்டு வசதி நிறுவனத்தைத் தேர்வு செய்வது. அதீத கவனத்துடனும், சரியான ஆலோசனையுடனும் வீட்டுக்கடன் நிறுவனத்தைத் தேர்வு செய்வது முக்கியமானது. நீங்கள் ஒரு வீட்டுவசதி நிறுவனம் அல்லது வங்கியுடன் நீண்ட காலத் தொடர்பு வைக்கப் போகிறீர்கள் என்பதால் அதன் பழைய கால வரலாற்றைப் பரிசோதிக்க வேண்டும். முடிந்தால், ஏற்கனவே குறிப்பிட்ட நிறுவனத்தில் கடன் பெற்ற சிலருடன் பேசி, அங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்படும் விதம் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.

* ஒருவர் சொத்து விவகாரம் தொடர்பான பணிகளில் ஈடுபடும்போது, `ரியல் எஸ்டேட்’ மற்றும் `வீட்டுக் கடன்’ தொடர்பான துறை வார்த்தைகளால் மூச்சுத் திணற நேரிடும். முறையற்ற சக்திகளால் ஏமாற்றப்படாமல் தவிர்ப்பதற்கு ஒருவர் அந்த தொழில்ட்ப வார்த்தைகளுடன் நல்ல பரிச்சயத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியம். அந்த வார்த்தைகளை அறிந்த பின்னால், அவற்றுக்குப் பின்னால் பொதிந்துள்ள மறைமுக அர்த்தங்களை அறிவதும், அந்தக் கடினமான வணிக வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை அறிவதும் சற்று எளிது.

* வீடு வாங்குவது பெரும்பாலானோரின் கனவு. வீடு, நிலங்களின் விலை உயர்ந்துவந்த நிலையில், சராசரி வருமானம் உள்ள ஒருவருக்கு வீடு கட்டத் தேவையான பெருந்தொகையைத் திரட்டுவது என்பது கடினமே. அதனால் வீட்டுக்கடன் என்ற முறை உருவானது. தற்போது எண்ணற்ற வீட்டுவசதி நிறுவனங்களும், அவற்றுக்கு இணையான வங்கிகளும் வீட்டுக்கடனை வழங்கி வருகின்றன.

* சொந்த வீடு என்பது வாழ்வில் ஒரு பாதுகாப்பான உணர்வை அளிக்கிறது. ஒரு தைரியம், சாதித்த திருப்தி, பெருமித உணர்வை தருகிறது. சரியான வீட்டுக்கடன் நிறுவனத்தைத் தேர்வு செய்து, சரியான முறைகளை மேற்கொண்டு கடன் பெற்று வீட்டுக் கனவை நனவாக்கிக்கொண்டால் அது நிச்சயம் ஓர் இனிய அனுபவமாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையே!

————————————————————-
சுருக்கக் குறிப்புகள் சில…

வீட்டுக்கடனை எளிதாகப் பெறுவதை உறுதிப்படுத்தும் சில சுருக்கமான குறிப்புகள் இங்கே…

* நீங்கள் மாதச்சம்பளம் பெறும் வேலையில் இருந்தால், அந்த வேலையில் குறிப்பிட்ட காலம் வரையிலாவது நீடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அடிக்கடி வேலை மாறுவது, வீட்டுக் கடன் பெறும் உங்களின் வாய்ப்பைப் பாதிக்கும்.

* அதிகமாகக் கடன் பெறுவதைத் தவிருங்கள். ஏற் கனவே கடன்கள் இருக்கும் நிலையில், புதிதாக ஒரு கடனை உங்களால் திருப்பிச் செலுத்த முடியா? என்ற சந்தேகத்தை எழுப்பும். காரணம் நீங்கள் பழைய கடனுக்கு கொடுத்தது போக மீதி உள்ள குறைவான பணத்தைக் கொண்டு வீட்டுக் கடனைச் செலுத்த வேண்டும்.

* நீங்கள் பெருந்தொகையைக் கடனாகப் பெற வேண்டுமானால், சீரான வருமானம் உள்ள ஒருவரை இணை விண்ணப்பதாரராகச் சேர்த்துக்கொள்வது பலன் தரும்.

* ஆடம்பரமாகச் செலவழிப்பதையும், வங்கியிலிருந்து பெருந்தொகையை எடுப்பதையும் தவிருங்கள். ஒரு நல்ல `பாலன்ஸை’ பராமரிப்பது உங்களின் வலுவான பொருளாதார நிலையையும், கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனையும் எடுத்துக் கூறும்.

* விதிவிலக்குகள் உள்ளன என்றபோதும், 23 முதல் 48 வயதுக்கு இடைப்பட்டவர்களின் விண்ணப்பங்களை வங்கிகள் விரும்புகின்றன. ஓய்வுபெறும் வயதை நெருங்குபவர்களும், புதிதாக சம்பாதிக்கத் தொடங்கியிருப்பவர்களும் கடனைத் திருப்பிச் செலுத்துவது கடினம் என்று கடன் நிறுவனங்கள் நினைக்கின்றன.

* உங்களின் வருமானம், வயது, தகுதிகள், பொருளாதார நிலை, மற்ற கடப்பாடுகள் ஆகியவற்றைப் பொறுத்து வங்கி உங்களுக்கு ஒரு தொகைக்கு ஒப்புதல் அளிக்கும்.

* வீடு அல்லது நிலம் அமைந்துள்ள இடம், கடன் பெறுவதற்குத் தகுதியை நிர்ணயிக்கும் மற்றொரு விஷயமாகும். மிகவும் தொலைதூரத்தில் உள்ள சொத்துக்குக் கடன் அளிப்பதற்கு சில வங்கிகள் விரும்புவதில்லை.

* உங்களுக்கான அடையாள அட்டை, முகவரிச் சான்று, சம்பளப் பட்டியல், `பான் கார்டு’ நகல், முதலீட்டு விவரங்கள், கடந்த ஆறு மாத காலத்துக்கான வங்கி அறிக்கை உட்பட சரியான ஆவணங்களைச் சமர்ப்பியுங்கள்.

* `டவுன் பேமண்டு’க்காக சொத்தின் மதிப்பில் 10 முதல் 15 சதவீதத் தொகையைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

‘எதிர்த்து பேசாதே…’ என்று குழந்தைக்கு கட்டளையிடுவீங்களா?

நவம்பர் 18, 2009 vayal மறுமொழியவும்

உங்கள் வீட்டுக்கு வேலை செய்ய வரும் பெண் சிறுமியா? ரோட்டோர கடைகளில், ஓட்டல்களில் சிறுவர், சிறுமியர் வேலை செய்வதைப் பார்த்துப் பரிதாபப்படுகிறீர்களா? உங்களால் முடிந்த அளவு, ஒரு குழந்தையை அழைத்து, படிப்பு குறித்து, அதன் வாழ்வுரிமை குறித்து, குறைந்தபட்சம் அறிவுரையாவது வழங்குங்கள். நீங்கள் என்னவெல்லாம் எடுத்துரைக்கலாம் அவர்களிடம்… படியுங்கள்:
நவம்பர் 20ம் தேதி, உலகின் குழந்தைகள் அனைவருக்கும் ஒரு கொண்டாட்ட நாள். குழந் தையின் உரிமைகள் ஒப்பந்தத்தை, நவ., 20, 1989ல், ஐ.நா., மேற்கொண்டது.
இது 20வது ஆண்டு. ஐ.நா.,வின், “குழந்தையின் உரிமைகள் ஒப்பந்தத்தில்’ 54 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் முக்கியமான சில, இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
அனைத்துக் குழந்தைகளும் சமமான மதிப்புடையவர்களாகவும், தன் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், கொடுமை, பிறர் நலனுக்காக பயன்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படவும், தன் கருத்தை எடுத்துரைக்க, மரியாதை பெறுவதற்கும் உரிமை போன்றவை இந்த 54 அம்சங்களின் அடிப்படை தத்துவங்களாக உள்ளன.
1: இவ்வுரிமை, உலகிலுள்ள 18 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் பொருந்தும்.
2: அனைத்து குழந்தைகளும், சமமானவர்களாகவும், ஒரே மாதிரியான உரிமையுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் தோற்றம், நிறம், மொழி, மதங்களை போன்றவைகளால் அவர்களை வேறுபடுத்தி நடத்தக் கூடாது.
3: குழந்தைகளின் நன்மையை கருத்தில் கொண்டு, முடிவுகள் எடுக்க வேண்டும்.
6, 7: வாழ, வளர உரிமையும், பெயர் உரிமையும், நாட்டின் பிரஜையாக இருக்கவும் உரிமை உண்டு.
9: பெற்றோரோடு வாழ உரிமை.
12 முதல் 15: அனைத்துக் குழந்தைகளும், வீடு, பள்ளி, அதிகாரி, நீதிமன்றங்களில் தாங்கள் நினைப்பதை கூறலாம்.
18: வளர்ப்பு, வளர்ச்சிக்கு பெற்றோரே பொறுப்பு.
19: எவ்வித வன்முறை, கொடுமை, புறக் கணிப்பு, தவறாக நடத்தப்படுதலிலிருந்து பாதுகாப்பு. பெற்றோர் அல்லது மற்ற பாதுகாவலரின் சுயநலனுக்காக பயன்படுத்தப்படுவதை நிறுத்துவது.
20 – 21: பெற்றோரை இழந்தோர், தங்களைப் பாதுகாக்க யாரிடமாவது கோர உரிமையுண்டு.
22: நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப் பட்டிருந்தால், மற்ற நாடுகளிலுள்ள எல்லா குழந்தைகளுக்கான உரிமையும், தனியாக இருந்தால், விசேஷ பாதுகாப்பு, உதவி உண்டு. முடிந்தால் உங்கள் குடும்பத்துடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட வேண்டும்.
23: உடல்திறன் குறைந்தவர்களுக்கு கூடுதல் ஆதரவு மற்றும் உதவி பெற உரிமையுண்டு.
24: உடல்நலமின்றி இருந்தால், தேவையான அனைத்து உதவிகளையும் பெறலாம்.
28 – 29: பள்ளி செல்ல, மற்றவர் உரிமைகளுக்கு மரியாதை, மற்ற கலாசாரங்களுக்கு மரியாதை போன்ற விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
30: குழந்தைகளின் எண்ணம், நம்பிக்கைகள் மதிக்க வேண்டும். சொந்த கலாசாரம், சொந்த மொழி, மதத்தைப் பின்பற்ற உரிமை.
31: விளையாட்டு, ஓய்வு நேர உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழலில் வாழ உரிமை உண்டு.
32: கல்வி தடை, ஆரோக்கியத்தை குறைக்கும் ஆபத்தான வேலை செய்ய கட்டாயப்படுத்தப் படக்கூடாது.
34: தவறாக பயன்படுத்தவோ, விபசாரத்திற்கோ கட்டாயப்படுத்தினால், பாதுகாப்பு உதவி பெறலாம்.
35: கடத்தவோ, விற்கவோ யாருக்கும் அனுமதியில்லை.
37: கொடூரமான முறையில் தண்டிக்கக் கூடாது.
38: ராணுவ வீரராகவோ, ஆயுதமேந்திய மோதலில் பங்கேற்கவோ தேவையில்லை.
42: இந்த ஒப்பந்தத்தை, அனைத்து குழந்தைகளும் அறிந்து, உரிமைகளை தெரிந்து கொள்வதற்கான உரிமை.
இவ்வளவு உரிமைகள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளன. பல குடும்பங்களில், குறிப்பாக பெண் குழந்தைகள், இன்று கூட வாயில்லா பூச்சிக்களாக வளர்க்கப்படுகின்றனர்.
கவனமுடன் வளர்க்க வேண்டும் என்பது நியாயம் தான். ஆனால், அளவுக்கு அதிகமான கட்டுப்பாடு, குழந்தைகளின் சுய சிந்தனையை முறியடித்து விடும். “எதிர்த்துப் பேசாதே… உனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடாதே…’ போன்ற கட்டுப்பாடுகள் அதிகம் காணப்படுகின்றன.
ஒரே குழந்தை உள்ள வீடுகளில் இந்தக் கட்டுப்பாடுகள் அவ்வளவாக பின்பற்றப்படவில்லை என்பது ஆறுதலான விஷயம்.

மனித நேயம்…?

நவம்பர் 14, 2009 vayal மறுமொழியவும்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அவர் எல்லா உயிர்களிடத்தும் அன்பைச் செலுத்தியவர். அதுபோல் திருவள்ளுவர்

அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு

என்று அன்புணர்வின் உன்னதத்தை சித்தரிக்கிறார்.

உயிரோடு கூடிய உடம்பு அன்பு வழியில் இயங்குவதாகும். அவ்வன்பில்லாதவர்களுக்கு உள்ள உடம்பானது எலும்பைத் தோலால் போர்த்திய வெற்றுடம்பாகும்.

மேலும், கனியன் பூங்குன்றனார்

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகளாவிய அறைக்கூவலை விடுக்கிறார்.

மதங்கள் அனைத்தும் அன்பையே முதன்மைப் படுத்தி போதிக்கின்றன. அன்பே கடவுள் என்கின்றன. ஆனால் மனிதன் நாகரிகம் வளர வளர புற உலக வாழ்க்கையில் ஈடுபட்டு தன்னை மறந்தான். பொருளாதார போராட்டத்தில் மனித நேயம் பறந்து போயிற்று.

எதிலும் ஒரு எதிர்பார்ப்பு கொண்டு வாழ்கிறான். இதனால் பரிசுத்தமான அன்பைக் கூட பாசாங்கு போலவே நினைக்கத் தோன்றுகிறது.

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் பெரியோர்கள், ஞானிகள், சித்தர்கள் வாழ்ந்த நம் தேசத்தின் இன்றைய நிலையோ பரிதாபமாக உள்ளது.

மனித நேயத்துடன் செயல்படுபவர்கள் போல் செயல்பட்டு சிலர் மக்களை ஏமாற்றுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு அண்டை வீட்டாரின் தொடர்புகள் சொல்லும் அளவுக்குக்கூட இல்லை. யாரோ வேற்றுக் கிரக மனிதனைப் பார்ப்பதுபோல் பார்க்கின்றனர். வீட்டிலுள்ள பெரியவர்களை சுமையாகக் கருதுகின்றனர். பெரியோர்களை மதிக்கும் தன்மை அறவே இல்லை. மனித வாழ்க்கையின் பாதி நேரம் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி முன்னே கரைந்து போய்க்கொண்டிருக்கிறது.

பொருளாதார ஏற்றத்தாழ்வு மனித நேயத்தை அழிக்கும் கிருமியாக வளர்ந்து வருகிறது.

இந்த நிலைக்குக் காரணம் பெரியோர்கள், வீட்டிலிருக்கும் மூத்தவர்களின் வழிகாட்டுதல் இல்லாமையே.

பழங்காலத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தனர். பெரியோர்கள் தங்களின் அனுபவ உண்மைகளை ஆராய்ந்து சொல்லும் அறிவுரைகள் எல்லாம் நலம் பயப்பதாகவே இருந்து வந்தது. இதனால் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி அனைவரிடமும் அனுசரித்து நட்பு பாராட்டி சிறந்த பண்புடன் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றோ குழந்தை பிறந்தவுடன் கிரச் (குழந்தைகள் காப்பகம்) சுக்கு அனுப்பிவிடுகின்றனர். அந்த குழந்தைகள் பெரியோர்களின் அன்பில் அரவணைப்பில் வாழவில்லை. பெரியோர்கள் குழந்தைக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கின்றனர். அனால் அவர்களுடன் அன்பு பாராட்ட நேரமில்லாமல் இருக்கின்றனர்.

மனிதனை மனிதனாக மதிப்பதில்லை. ஒருவரை ஒருவர் நம்பும் சூழ்நிலை இல்லை. அன்பு, பாசம் போன்ற உணர்வுகள் மறக்கப் பட்டும் மறுக்கப்பட்டும் வருகின்றன. மனித மனமானது அதிக வருமானம், கட்டுக்கட்டாய்ப் பணம், பேராசை, முறைகேடான உறவுமுறைகள், பதவி மோகம், கேளிக்கை விளையாட்டுகள் என ஒரு ஆடம்பரமான வாழ்க்கையைத் தேடி ஒரு வேட்டை நாயைப்போல அலைகிறது. ஆரறிவு படைத்த மனிதர்கள் உறவுகளை மறந்து, அன்பை மறந்து அரக்கத்தனமான வாழ்க்கைக்கு ஆயத்தமாகி விட்டனர்.

இதுபோல் இன்று நாளிதழ்களை புரட்டினாலே கொலைச்சம்பவங்கள் பற்றிதான் அதிகம் இருக்கின்றன. போதிய அன்பு கிடைக்காமலும், மனிதத் தன்மை இல்லாமலும் இருப்பதால் ஏற்படும் விபத்துக்கள்தான் இவை. இந்நிலை மாற, எதிர்கால சமுதாயத்தை வலுவாக உருவாக்க பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கு அன்பு, நேசம், பிறருக்கு உதவும் தன்மை போன்றவற்றை எடுத்துக் கூறிவரவேண்டும். பெரியோர்களை மதிக்கச் செய்யவேண்டும். பள்ளிகள் வெறும் பாடங்களைப் போதிக்கும் கூடங்களாக அல்லாமல் பாடத்துடன் மனித நேயத்தையும் போதிக்கும் ஒரு கல்விச் சோலையாக மாறவேண்டும். நமது புராணங்களில் வரும் கதாபாத்திரங்களையும், குட்டிக் கதைகளையும் சொல்லி அதிலுள்ள நல்ல விஷயங்களை அவர்களுக்கு புரிய வைத்தால் எதிர்கால சமுதாயம் மனித நேயம் மிக்க சமுதாயமாக மாறும்.

பக்கத்துவீட்டுக் காரர்கள், அண்டைவீட்டுக் காரர்களுடன் உறவு பாராட்ட வேண்டும். இன்றும் கிராமங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவுவதைப் பார்த்திருக்கலாம். படித்த நகர மக்களிடையே மனித நேயம் வளரவேண்டும். குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதை குறைக்க வேண்டும். இயற்கையின் அற்புதங்களைப் பற்றி எடுத்துச் சொல்லி குழந்தைகளை வளர்த்தால் மனித நேயத்துடன் இயற்கையையும் காக்கும் காவலர்களாக எதிர்கால சமுதாயம் விளங்கும் என்பது நிதர்சனமான உண்மை.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற தத்துவக் கோட்பாட்டின்படி மக்கள் வாழ்ந்தால் மனித நேயம் தழைத்தோங்கும்.

வழி நடத்தும் நன்னடத்தை!

நவம்பர் 7, 2009 vayal மறுமொழியவும்

இளைஞர்களே, நீங்களும் நிர்வாகி ஆகலாம். அதற்கான நிர்வாக மேலாண்மைத் திறன்களை உங்களில் ஏற்படுத்திக் கொள்ள தேவையான பயனுள்ள தகவல்களை இந்த பகுதியில் அளித்து வருகிறோம்.

நிர்வாகி என்பவர் தானும் உழைத்து, பணியாளர்களையும் வழிநடத்துபவராக இருக்க வேண்டும் என்பதை கடந்த வாரம் விளக்கி இருந்தோம். இந்த வாரம் நடத்தை பற்றிய பண்புகளை அறிந்து கொள்ளலாம்.

பெரும்பாலான நிர்வாகங்களில் பணியாளர்களை தேர்வு செய்யும்போது மதிப்பெண் சான்றிதழையே பெரிதும் கவனிக்கிறார்கள். அது அவர்களைப் பற்றிய எல்லா விஷயங்
களையும் தெரிவிக்கும் என்று சொல்ல முடியாது. மதிப்பெண் சான்றிதழானது அவர்களின் நினைவுத்திறனையோ அல்லது கவனிக்கும் திறனையோ மதிப்பிடுவதாகக் கொள்ளலாம். அதுவும் அவர் அந்தக் காலக்கட்டத்தில் இருந்த நிலைக்கு ஏற்ப எடுத்த மதிப்பெண்களே தவிர வாழ்க்கை முழுவதற்குமான மதிப்பீடு என்ற கோணத்தில் கருத்தில் கொள்ள முடியாது.

சான்றிதழுடன் இணைத்து நடத்தைக்கான (காண்டாக்ட் சர்ட்டிபிகேட்) சான்றிதழும் கொடுக்கப்படும். இந்த சான்றி தழ்களிலும் மாணவர்கள் நலன்கருதி பெரும்பாலும் நேர்மறையான குறிப்புகளே இருக்கின்றன என்பது வெளிப்படை. ஆனால் அவரது நடத்தையே நமது நிர்வாகத்துக்கு அவசியமானது.

நடத்தையை சான்றிதழ்கள் மூலம் ஓரளவு அறிய முடியுமே தவிர முழுத் தெளிவைத் தந்துவிடாது. எனவே ஒருவரது பின்புலத்தை அறிய சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது நிர்வாகியின் கடமை.

இதற்காக தங்கள் சேவை சார்ந்த மற்ற நிறுவனங்களுடன் வைத்திருக்கும் தொடர்பைக் கொண்டு பணி தேடி வருபவரின் நடத்தையை அறிய முயற்சிக்கின்றன. அது சரியான வழிமுறைதான். இதைக்கூட சில நிறுவனங்கள் செய்வதில்லை. வருபவரின் வார்த்தைகளை மட்டும் நம்பி பணியில் சேர்த்துக் கொள்கின்றன.

ஒருவர் ஒரு பணி நிறுவனத்தில் ஓராண்டுக்கு மேல் நிலைத்து வேலை செய்ததே இல்லை. 6 ஆண்டுகளில் 6 நிறுவனத்துக்கு மாறியவர். புதிதாக தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் அவரை பல நிறுவனங்களில் அனுபவம் பெற்றவர் என்ற முறையில் முன்னுரிமை கொடுத்து எடுத்துக் கொண்டது. உயர்ந்த பதவி கொடுத்து கவனித்து வந்தது. புதிய நிறுவனம் என்பதால் போட்டிகளை சமாளிக்க பல யுக்திகளை கையாண்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருந்தது. அடுத்த வருடமோ அந்த நபர், நான் அங்கு உயரிய பொறுப்பை வகித்தேன், அதன் வளர்ச்சிக்கு நான்தான் காரணம் என்று கூறிக்கொண்டு போட்டியான மற்றொரு நிறுவனத்துக்கு மாறிவிட்டார். அந்த புதிய நிறுவனம் சற்று தடுமாறித்தான் போனது.

உரிய விவரங்களை சேகரிக்காமல் பணி அளித்துவிடுவது பின்னாளில் நிர்வாகத்துக்கு இதுபோன்ற இடைறுகளை ஏற்படுத்தலாம். எனவே நடத்தையைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரின் நடத்தையை அவரது பாவனைகளை வைத்து ஓரளவு அறியலாம். அவர் உங்கள் முன் அவர் நடந்து கொள்ளும் விதத்திலேயே கணிக்கலாம். சிலர் நமக்காக ஒரு மாதிரியும், தனியாக இருக்கும்போது ஒரு மாதிரியும், பழக்கம் உடையவர்கள் வட்டத்தில் ஒருவிதமாகவும் நடந்து கொள்வார்கள். இப்படிப்பட்ட பண்புடைய ஒருவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பது சிக்கலானது. எனவே ஆரம்பத்திலேயே அவரை கண்காணித்து அறிந்து கொள்ள வேண்டும்.

“ஒருவனைப் பற்றி அறிய வேண்டுமா? அவனிடத்தில் பொறுப்பை கொடுத்து பாருங்கள்” என்று கூறுவார்கள். இந்த விதத்தில் ஒரு பணியைக் கொடுத்தும் ஒருவரின் நடத்தை, செயல்படும் விதத்தை அறியலாம்.

ஒருவரின் கடந்த காலத்தை வைத்து எதிர்காலத்தை ஓரளவு கிக்க முடியும். அதன் அடிப்படையிலேயே ஒருவரின் நடத்தை பரிசோதிக்கப்படுகிறது. நமது சட்ட மேதை அம்பேத்கார், `வரலாறு தெரியாதவன் வரலாறு படைக்க முடியாது’ என்று கூறிஇருக்கிறார். நேருவோ, “கடந்த கால வரலாறைப் படிக்கும்போது நிகழ்காலம் புரிகிறது, எதிர்காலத்தையும் கணிக்க முடிகிறது” என்கிறார். இந்த உண்மை மொழிகளை நிர்வாகத்தோடும் பொருத்திப் பார்க்கலாம். அதாவது பணியாளர், போட்டியாளரின் வரலாறை (நடத்தை, கடந்தகாலத்தை) அறிவதன் மூலம் நமது நிர்வாகத்தை திறம்பட செய்ய முடியும்.

இப்படி பண்புகளைக் கொண்டு தேர்வு செய்யும்போது சில பிரச்சினைகள் வரலாம். அதாவது அவரின் நடத்தை உங்கள் விருப்பப்படி அமைந்திருந்தும், நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் அவருக்கு ஒத்துவரவில்லை என்றாலும் பணியில் சிக்கல் ஏற்படும். ஏனெனில் தனி மனிதர்கள் சூழலின் தாக்கத்திற்கு உள்ளாகக் கூடியவர்கள்
தான்.

ஆகவே கடினமான உழைப்பு, தன்னம்பிக்கை, நம்பகத்தன்மை இவற்றை எதிர்பார்த்து ஒருவரை தேர்வு செய்வதால் மட்டும் சிறந்த பணியாளராகவோ, நிர்வாகியாகவோ செயல்பட மாட்டார். ஒருவரது நடத்தையை கண்காணித்து பொறுப்பு கொடுத்தால் அதை அவர் சரியாக செய்து முடிப்பார் என்பது கண்கூடு.

வருமுன் காவாதான் வாழ்க்கை!-கட்டுரைகள்

நவம்பர் 6, 2009 vayal 1 மறுமொழி

உலகின் 2-வது மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியா, 1962-ம் ஆண்டு சீனாவுடனான யுத்தத்தில் அவமானகரமான தோல்வியைத் தழுவியது. ஒட்டுமொத்த இந்திய சமூகத்துக்கு நேரிட்ட இந்த அவமானத்தால் இந்திய நாடு, தனக்குச் சொந்தமான 40 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பை இழந்தது. மேலும், இந்தியாவுக்குச் சொந்தமான 90 ஆயிரம் சதுர கி.மீ. நிலப்பரப்பை இன்றுவரை சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

இந்துக்களின் மிகப் புனித யாத்திரை தலமாகவும், சிவபெருமானின் உறைவிடமாகவும் கருதப்படும் கைலாச மலை மற்றும் புனித மானசரோவர் ஏரி ஆகியவை சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளன.

1962-ம் ஆண்டு யுத்தத்துக்கு முன்பாகவே இந்தியாவின் மீது திடீர் தாக்குதல் தொடுக்க அனைத்து விதமான ராஜதந்திர நடவடிக்கைகளையும் சீனா மேற்கொண்டது. இந்தியாவாலும், சீனாவாலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வரையறுக்கப்பட்ட இந்தியா – சீனா இடையேயான மக்-மோகன் எல்லைக்கோட்டைத் தாண்டி பல்வேறு விதமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டது.

திபெத்தை சட்டவிரோதமாக சர்வதேச விதிமுறைகளுக்கு முரணாக ஆக்கிரமித்துக் கொண்டு திபெத்தியர்களை கொடுமைப்படுத்தியதோடு, திபெத்தியர்களின் மதத் தலைவர் தலாய்லாமாவை திபெத்தை விட்டு விரட்டியடித்தது. அப்போதைய சர்வதேசத் தலைவர்கள் இதுவிஷயத்தில் சீனாவுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தபோதும் நேருவின் தலைமையிலான சுதந்திர இந்திய அரசு இதுவிஷயத்தில் வேடிக்கை பார்க்கும் நிலையிலேயே இருந்தது.

இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்து, இந்திய மக்களிடம் வரி வசூலித்து வந்தது. இதுவிஷயம் இந்திய மக்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டது. இதுகுறித்து பாரதிய ஜனசங்கத்தின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேருவிடம் கேள்வி எழுப்பினார். இந்திய எல்லையைத் தாண்டி இந்திய நிலப்பரப்பைச் சீனா ஆக்கிரமித்ததை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார். அதற்குப் பதில் அளித்த நேரு, சீனா ஆக்கிரமித்துள்ளதாகச் சொல்லப்படும் பகுதி மனிதர்கள் வாழத் தகுந்த பூமி அல்ல என்றும், மண்ணும், கற்களும் நிறைந்த அப்பகுதியில் புல் பூண்டு கூட முளைக்காது என்றும், இதற்காக நாம் சீனாவுடன் சச்சரவுகள் எதுவும் செய்து கொள்ள வேண்டியதில்லை என்றும் பதிலளித்தது நாடாளுமன்றக் குறிப்பில் பதிவாகி இருக்கிறது. இந்தப் பதிலில் கோபம் கொண்ட ஜனசங்க உறுப்பினர் நாடாளுமன்ற அவையில் தனது வழுக்கைத்தலையைக் காட்டி, நேரு அவர்களே! என் தலையில்கூட புல் பூண்டு முளைப்பதில்லை, அதற்காக என் தலையை அன்னியன் ஆக்கிரமிக்க விடலாமா? புல் பூண்டு முளைக்காத பூமியானாலும் அதை அன்னியன் ஆக்கிரமிக்க விடலாமா? சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், “இந்தி – சீனி பாய் பாய்’ என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. இந்தியா வந்த அப்போதைய சீன அதிபர் சூ யென் லாய்க்குச் சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு நேரு சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பஞ்சசீலக் கொள்கையை பெய்ஜிங்கில் அறிவித்தார். சீனாவுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார். ஒருபுறத்தில் நேரு பஞ்சசீலக் கொள்கையில் கையெழுத்திட்ட மை காயும் முன்பே இந்தியாவின் மீது சீனா போர் தொடுத்து, தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

சீனா, இந்தியாவின் மீது 1962-ம் ஆண்டு போர் தொடுக்கும் என முன்கூட்டியே இந்திய நல விரும்பிகள் சொன்னபோது, அதை நேரு காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதனால், இந்திய ராணுவத்தையும், அதற்குத் தேவையான போர் தளவாடங்களையும், இந்திய மக்களையும், இந்திய அரசையும் சீனாவின் ஆக்கிரமிப்புத் திட்டத்துக்கு எதிராகத் தயார்படுத்தி வைத்துக்கொள்ளும் நிலையில் நேருவின் அரசு இல்லை.

எனவே, உலகையே வென்ற அலெக்சாண்டரை விரட்டியடித்த இந்திய நாடு, 1962-ல் அவமானகரமான தோல்வியைத் தழுவியது. 3,800 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதோடு, 40 ஆயிரம் சதுர கி.மீ. நிலப்பரப்பை இந்தியா இழந்தது.

இருந்தபோதும், 1962-ல் இந்திய மக்கள் மத்தியில் ஏற்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு காரணமாகவும், தேசபக்த எழுச்சி காரணமாகவும், தேசபக்தி கொண்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களாலும் சீனா ஆக்கிரமிப்பு ஓரளவுக்கு முறியடிக்கப்பட்டது.

சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து நேரு கருத்துக் கூறும்போது, “சீனா என்னை ஏமாற்றி விட்டது, என் முதுகில் குத்திவிட்டது’ என்று விரக்தியை வெளிப்படுத்தினார். கிருஷ்ணமேனன் ராணுவ அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகுதான், இந்திய ராணுவத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை நேரு உணர்ந்து கொண்டார்.

1962-ம் ஆண்டுக்கு முன்பாக எத்தகைய சூழ்நிலை நிலவியதோ அதே நிலைதான் இன்றும் நிலவுகிறது. இப்போதும் சீனா நமது எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி ஆக்கிரமிப்பதோடு நமது நிலப்பரப்பில் உள்ள பாறைகளில் சிவப்பு எழுத்துகளில் சீனா என்ற பெயரை எழுதியுள்ளது.

அருணாசலப் பிரதேசத்தில் திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமா மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்தைக் கடுமையாக சீனா எதிர்க்கிறது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சுற்றுப்பயணத்தைக்கூட சீனா கடுமையாக எதிர்க்கிறது.

சீனா வெளியிடும் தேச வரைபடங்களில் அருணாசலப் பிரதேசத்தை தனக்குட்பட்ட பகுதியாகக் காட்டிக் கொள்கிறது. காஷ்மீரைத் தனி நாடாக அங்கீகரித்து, அதற்கு சிறப்புத் தூதரை நியமித்துள்ளது.

இந்தியா மீது சீனா மீண்டும் போர் தொடுப்பதற்குண்டான அனைத்து விதமான முன்தயாரிப்புகளையும் திட்டமிட்டுச் செய்து வருகிறது.

சமீபத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் சம்மேளனம் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்கள்படி, இந்தியாவின் பெருநகரங்களைக் குறிவைத்து ஏவுகணைகளை சீனா நிறுத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் மூலம் அணுகுண்டு தாக்குதலை நடத்த சீனா திட்டமிட்டுள்ளது. ஹைனன் தீவில் அணுஆயுத நீர்முழ்கிக் கப்பல் தளத்தை சீனா ஏற்படுத்தியுள்ளது. இத் தளத்தில் இருபதுக்கும் மேற்பட்ட அணுஆயுதக் கப்பல்களை நிறுத்தி இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருகிறது.

இந்தியாவின் விமானப்படை தலைமை மார்ஷல் பாலிஹோமி மேஜர், இந்திய அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், “சீனா, இந்திய எல்லையில் ஏராளமான விமானப்படையைக் குவித்து வருகிறது. அதனால் நாமும் நம் விமானப்படையை சீனாவுக்கு நிகராக வலுப்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் முப்படைத் தளபதிகளும் ராணுவ நிபுணர்களும் ராஜதந்திரிகளும் சீனா ஆக்கிரமிப்பு குறித்து ஆதரங்களுடன் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். வெளியுறவுத் துறை அமைச்சரும், ராணுவ அமைச்சரும், பிரதமர் மன்மோகன் சிங்கும் இதுவிஷயத்தில் நேருவின் பாணியிலேயே செயல்பட்டு வருகின்றனர். இந்திய எல்லையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினரை சீனா நிறுத்தியுள்ளது. சீனா- இந்தியா இடையே 3,500 கி.மீ. வரை எல்லைக்கோடு உள்ளது. காஷ்மீர் பகுதியில் மட்டும் 36 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பை ஆக்கிரமித்துவிட்டது.

சமீபத்தில் சீனா வெளியுறவுத் துறை அதிகாரிகள் இந்தியாவை 36 துண்டாக உடைத்துப் பிரித்து பலவீனப்படுத்த வேண்டும் என பகிரங்கமாகப் பேசியுள்ளனர். நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் மூலம் மறைமுகமாக ஆட்சியை தன் கையில் வைத்துள்ள சீன அரசு, இந்தியாவுக்கு எதிராக நேபாள நாட்டை உருவாக்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தியாவில் உள்ள நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள், உல்பா தீவிரவாதிகள், மணிப்பூர் போர்க் குழுக்கள், நாகா தீவிரவாதிகள் ஆகிய பயங்கரவாதக் குழுக்களுக்கு மறைமுகமாக சீனா ஆயுத, பொருளாதார உதவிகளைச் செய்து வருகிறது.

சமீபத்தில் அருணாசலப் பிரதேசத்தைச் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரி கணேஷ் கோயு, இந்தியாவின் சார்பில் சீனாவுக்குச் செல்லும் பயிற்சி அதிகாரிகளின் குழுவில் இடம்பெற்றிருந்தார். சீனா, அவருக்கு மட்டும் விசா வழங்க மறுத்தது. அருணாசலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி, அதனால், கணேஷ் கோயு சீன நாட்டு பிரஜை. அதனால் விசா வழங்கத் தேவையில்லை எனக் கூறிவிட்டது. இதன் காரணமாக, சீனாவுக்கு அனுப்ப இருந்த இந்தியக் குழுவின் பயணத்தையே இந்திய அரசு ரத்து செய்தது.

அருணாசலப் பிரதேசத்தில் இந்திய அரசு ரூ. 3,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியை அணுகியது. இதுவிஷயத்தில் சீனா தலையிட்டு, இந்திய அரசுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி கொடுக்க வேண்டிய தொகையை வழங்கக் கூடாதென நிர்பந்தம் செய்தது. அருணாசலப் பிரதேசத்தில் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை சீனா தடுக்கிறது.

இந்தியாவின் வற்றாத மிக நீளமான பிரம்மபுத்திரா இந்தியாவில் உற்பத்தியாகி சீனாவுக்குள் புகுந்து, மீண்டும் இந்தியாவுக்குப் பாயும் நதியை சர்வதேச நதி நீர் கொள்கைக்கு எதிராக சீன அரசு, அணை கட்டித் தடுப்பதன் மூலம் இந்தியாவின் நீர் திட்டம், நீர்மின் திட்டங்களை முடக்க  நினைக்கிறது.

இந்தியாவைச் சுற்றியுள்ள சிறிய அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளில் இந்திய விரோத எண்ணங்களை வளர்ப்பதோடு, மேற்கண்ட நாடுகளுக்கு “எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற கருத்துக்கேற்ப சீனா பல்லாயிரம் கோடி ரூபாயை மேற்கண்ட நாடுகளில் முதலீடு செய்து, போக்குவரத்து சாலைகள், துறைமுகங்கள் மின் உற்பத்தி நிலையங்கள், அணுஆயுதக் கிடங்குகள் ஆகியவற்றை அமைத்து வருவதோடு ராணுவத் தடவாளங்களையும் ராணுவத் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கி வருகிறது.

இந்திய – சீனா போர் ஏற்பட்டால், அந்தந்தப் பகுதிகளில் உள்ள வசதிகளை சீன ராணுவம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும்.

பாகிஸ்தானில் கவுடார், வங்கதேசத்தில் சிட்டகாங், மியான்மரில் சிட்வி, இலங்கையில் ஹம்மன்தோட்டா ஆகிய இடங்களில் புதிய துறைமுகங்களை சீனா ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துறைமுகங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் திட்டத்துக்கு “ஆபரேஷன் முத்துமாலை’த் திட்டம் என்று பெயர்.

இந்த முத்துமாலைத் திட்டம் எப்போது வேண்டுமானாலும், ராணுவத் துறைமுகங்களாக மாற்றப்பட்டு, இந்தியாவின் குரல்வளையை நெரிக்கும் திட்டமாக மாறும்.

1950-ம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்தபோது, இந்தியா வாய்மூடி மெüனமாக இருந்த காரணத்தால் – சீனாவின் அடாவடித்தனத்தை இந்தியா வெளிப்படையாகக் கண்டிக்கத் தவறிய காரணத்தால், இன்றுவரை திபெத் விஷயத்தில் சர்வதேச சமூகத்தின் கண்டனங்களில் இருந்து சீனா தப்பி வருகிறது. இதுவிஷயத்தில் சர்வதேச அரங்கில் இந்தியா, சீனாவுக்கு எதிரான ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு திபெத் மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.

அதேபோல், இலங்கை சிங்கள அரசுக்கு, சீனா கொடுக்கும் ஒத்துழைப்பு உதவிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கையில் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு உகந்த, இந்தியாவுக்கு விசுவாசமான தமிழ் ஈழ மக்களை ஆதரிக்க வேண்டும்.

“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்’ என வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார். ஏற்கெனவே, தனது பலவீனமான வெளியுறவுக் கொள்கையால் ஏராளமான நிலப்பரப்பை இந்தியா இழந்துள்ளது. அதைப் போரிட்டு மீட்காவிட்டாலும், இருக்கும் நிலப்பரப்பையாவது நேரு பாணியில் இருந்து விலகி, மன்மோகன் சிங் அரசு பாதுகாக்க வேண்டும் என்பதுதான் தேசபக்தர்களின் வேண்டுகோள்.

நன்றி தினமணி

வங்கிப் பணியில் சாதனை புரிந்த டி.எஸ்.நாராயணசுவாமி! (கட்டுரை)

நவம்பர் 1, 2009 vayal மறுமொழியவும்

ஜூலை 19, 1969ல், 14 பெரிய வங்கிகளை, தேசிய மயமாக்கினார், அப்போதைய பிரதமர் இந்திரா. அந்த எண்ணிக்கை இப்போது 21 ஆக உயர்ந்துள்ளது. கடந்த நாற்பது வருடங்களில், இதுவரை யாரும் செய்யாத சாதனையை, டி.எஸ்.நாராயணசுவாமி செய்திருக்கிறார். மூன்று பெரிய வங்கிகளுக்கு, சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் பொறுப்பை வகித்து, வங்கிகளை திறம்பட நடத்தி இருக்கிறார்.
கடந்த 2000 முதல், ஏப்ரல் 2004 வரை, பஞ்சாப் நேஷனல் வங்கியின் எக்சிக்யூட்டிவ் டைரக்டராக, வங்கியில், இரண்டாவது முக்கிய பதவியை வகித்திருக்கிறார்; 2004 ஏப்ரல் முதல், 2005 மே வரை, ஆந்திரா வங்கியின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டராகவும்; ஜூன் 2005 முதல், மே 2007 வரை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டராகவும்; ஜூன் 2007 முதல், மே 2009 வரை, பாங்க் ஆப் இந்தியாவின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டராகவும் பணிபுரிந்து இருக்கிறார்.
மூன்று வங்கிகளுக்கு தலைமைப் பொறுப்பு ஏற்று, சிறப்பாக செயல்பட்ட முதல் இந்தியர், டி.எஸ்.நாராயணசுவாமி மட்டும் தான். வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தற்போது, புதியதாக ஆரம்பிக்கப்பட்ட, “யுனைட்டெட் ஸ்டாக் எக்ஸ்சேஞ்’ தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார். இவரது விசேஷ பேட்டி…

வங்கிகளின் எக்சிக்யூடிவ் டைரக்டர், சேர்மன் ஆகிய பதவிகளுக்கு எப்படி தேர்வு செய்கின்றனர்?
அடுத்த ஆண்டு அல்லது 18 மாதங்களில், 21 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், எக்சிக்யூடிவ் டைரக்டர்கள், எவ்வளவு பேர் ஓய்வு பெறுகின்றனர், எவ்வளவு பதவி நிரப்பப்பட வேண்டும் என்று முதலில் தகவல் சேகரித்து, எண்ணிக்கையை முடிவு செய்கின்றனர். ஜெனரல் மேனேஜராக, குறைந்தபட்சம், இரண்டு வருட அனுபவம் பெற்றவராக, ஓய்வு பெறுவதற்கு இன்னும் மூன்று வருட சர்வீஸ் மீதம் இருப்பவர்களை தேர்வுக்கு அழைக்கின்றனர்.
எவ்வளவு பதவிகள் காலியாக போகின்றன என்பதை பொறுத்து, மேலே சொன்ன அடிப்படை விதிகள், வருடங்களைப் பொறுத்தவரை மாறுபடலாம்.
இந்த தேர்வை, “இன்டர்வியூ’ என்று இல்லாமல், “இன்டர் ஆக்ஷன்’ – கலந்து பேசுதல் என்றே அழைக்கின்றனர். மத்திய அரசின் வங்கித் துறை, அடிஷனல் செகரட்டரி, நிதி இலாகாவின் காரியதரிசி, ரிசர்வ் வங்கியின் டெபுடி கவர்னர், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் போன்ற அமைப்புகளிலிருந்து, இரு நிபுணர்கள் அடங்கிய ஐவர் குழு, இன்டர் ஆக்ஷன் நடத்துகிறது. குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் திறமையாக செயல்பட்ட எக்சிக்யூடிவ் டைரக்டர்களிலிருந்து, வங்கி சேர்மன் பதவியை நிரப்ப, இதே முறையில் தேர்ந்தெடுத்து, பதவி உயர்வு அளிக்கின்றனர்.
மேலே குறிப்பிட்டவை, 21 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு பொருந்தும்; பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதை சார்ந்த வங்கிகளுக்கு (ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், திருவாங்கூர் போன்ற வங்கிகள்) பொருந்தாது; அவற்றுக்கு வேறு அமைப்பு.

தேசிய மயமாக்கப்பட்ட மூன்று வங்கிகளின் சேர்மனாக பணிபுரிந்த அனுபவம் பற்றி?
மூன்று, பெரிய, புகழ்பெற்ற வங்கிகளின் சேர்மனாக பணிபுரிந்தது, எனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. எக்சிக்யூட்டிவ் டைரக்டராக பணிபுரிந்த பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட நான்கு மாறுபட்ட கலாசாரம், பணி சூழ்நிலை, உடன் பணிபுரிந்த நிபுணர்கள், வங்கிகளின் கிளைகள் அமைந்திருந்த வேறுபட்ட மாநிலங்களில் பணியாற்றியது, எனக்கு கிடைத்த சவாலாக கருதுகிறேன்.
இந்த வங்கிகளின் சேர்மன் பதவிகள் நிரப்பப்பட வேண்டிய நேரங்கள், எனக்கு சாதகமாக அமைந்துவிட்டன.
ஏற்கனவே எனக்கு கிடைத்துள்ள அனுபவத்தில், சமுதாயத்தில், பலதரப்பட்ட மக்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், சிறு தொழில் புரிவோர் என்று அனைவரோடும், சுலபமாக பழக முடிந்தது. இந்த பெரும் வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரையும் அறிந்து கொண்டதில், எனக்கு பெரு மகிழ்ச்சி.

வெளிநாடுகளில் இயங்கும் நமது வங்கிகளின் கிளைகளையும், அந்தந்த நாடுகளின் வங்கிகளையும் ஒப்பிட்டு பார்த்தால், உங்கள் கருத்து?
பாங்க் ஆப் இந்தியாவிற்கு, 25 கிளைகள் வெளிநாடுகளில் இயங்குகின்றன. லண்டன் கிளை, 60 வருடமாக இயங்குகிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும், சிங்கப்பூர் போன்ற இடங்களில், 60 ஆண்டுகளாக கிளைகள் இயங்குகின்றன.
வெளிநாடுகளில் இயங்கும் இந்திய வங்கிகளின் கிளைகளுக்கு, அதிகமான வாடிக்கையாளர்கள், அங்கு வசிக்கும் இந்தியர்களும், அங்கு இயங்கும் இந்திய வியாபார, தொழில் நிறுவனங்கள் தான். 99 சதவீதம் இப்படித்தான். வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வெகு குறைவு.
இந்தியாவில் ரிசர்வ் வங்கி போல, அந்தந்த நாடுகளில் இயங்கும் ரெகுலேட்டர்களின் விதிமுறைகளை, நமது வங்கிகள் பின்பற்றி நடக்க வேண்டும்; அப்படித்தான் செயல்படுகின்றன. திடீர் அவசரம் என்றால், இந்திய வங்கிகள், வேண்டிய உதவிகளை தங்களுக்குள் செய்து கொள்கின்றன. அவர்களுக்குள் நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது.
நமது வங்கிகளின் மொத்த வால்யூம், அதாவது, வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும் டிபாசிட்டுகள், பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்கள், வெளிநாட்டு வங்கிகளின் வால்யூமை விட ரொம்ப குறைவு.

வங்கிப் பணியில் உங்கள் சாதனைகளாக கருதுவது…
என் தனிப்பட்ட சாதனை என்பதைவிட, நான் தலைவராக செயல்பட்ட வங்கிகளின் சாதனைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்…
ஏப்ரல் 2004லிருந்து, மே 2005 வரையான ஒரு ஆண்டின் ஆந்திரா வங்கியின் பிசினஸ், 36 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 45 ஆயிரம் கோடியாக வளர்ந்தது. ஜூன் 2005லிருந்து, மே 2007 வரையான இரு ஆண்டிற்கான ஐ.ஒ.பி.,யின் பிசினஸ் 65 சதவீதம் உயர்ந்தது. 2006 – 07 ஒரு ஆண்டில், ஐ.ஒ.பி.,யில் ரிகார்டு லாபமாக ஆயிரம் கோடியை தாண்டியது. லாபம் 1008 கோடி ரூபாய்.
மேலும், கே.பி.எம்.ஜி., என்ற ஆடிட்டிங் நிறுவனமும், எர்னஸ்ட் அண்டு யங் என்ற ஆடிட்டிங் நிறுவனமும் எடுத்த தனித்தனி சர்வேயில், 2006 – 07 ஆண்டில் சிறப்பாக இயங்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்று அறிவித்திருக்கிறது.
கடந்த 2008 – 09 நிதி ஆண்டில், பாங்க் ஆப் இந்தியாவின் லாபம், 3007 கோடி ரூபாயாக உயர்ந்தது. (2007 – 08 ஆண்டின் லாபம் 2009 கோடி ரூபாய்).
இதுவரை இந்தியாவில், வேறு எந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கியும் செய்யாத மற்றொரு சாதனையை, பாங்க் ஆப் இந்தியா செய்திருக்கிறது. மத்திய அரசு அனுமதியோடு, பதினைந்தே நாட்களில், 1400 கோடி ரூபாய், பெரிய நிறுவனங்களிடமிருந்து பெற்றோம். 10 ரூபாய் பேஸ் வேல்யூ உள்ள பங்கை, 360 ரூபாய்க்கு விற்று, வங்கியின் மூலதனத்தை உயர்த்தினோம்.
பொதுமக்களிடம் பங்குகள் விற்காமல், எல்.ஐ.சி., இன்சூரன்ஸ் நிறுவனங்கள், யூனிட்டிரஸ்ட் ஆப் இந்தியா போன்ற சில முக்கிய நிறுவனங்களுக்கு மட்டும் விற்பனை. என்.டி.டி.வி., பிசினஸ் வேர்ல்டு போன்ற ஊடகங்களால், 2007 – 08 ஆண்டில், சிறப்பாக செயல்படும் வங்கியாக, பாங்க் ஆப் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.
எந்த விஷயத்திலும், தாமதம் செய்யாமல் முடிவுகள் எடுக்கும் பழக்கம், தேவையான அதிகாரத்தை, செயல்படும் சுதந்திரத்தை தகுதியானவர்களுக்கு அளிப்பது, வங்கிக்கு பொது மக்களிடையே போதுமான விளம்பரம் பெறுதல், அரசு தொழில் துறை, நிர்வாகம், வியாபாரம் என்று பல துறைகளிலும் தேவையான வியாபார தொடர்பை உருவாக்குவது, பப்ளிக் ரிலேஷன்ஸ், வங்கியில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள், தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்குதல் போன்ற என் கொள்கைகளும், பணியில் வெற்றி பெற உறுதுணையாக, உதவியாக இருந்தன; இவை எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும்.

வங்கி செயல்பாடுகளில் அதிகமான விஷயங்கள், அரசு விதிகளின்படி நடக்க வேண்டியிருக்கிறது. அப்படி இருக்க, உங்களுக்கு சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு உள்ளதா?
இந்திய பொருளாதார வளர்ச்சியில், வங்கிகள் பெரும் பங்கு வகிப்பதால், நாட்டின் பொருளாதார நன்மை கருதி, ரிசர்வ் வங்கி, சில, “கெய்ட்லைன்ஸ்’களை பின்பற்றுமாறு வங்கிகளுக்கு வகை செய்கிறது. வங்கிகள், பொது மக்களின் பணத்தை பெற்று, அவற்றை, தேவைப்படும் பிரிவினருக்கு கடனாக கொடுத்து வருகிறது. பொதுமக்களின் பணம் பத்திரமாக இருப்பதற்கும், அவர்களுக்கு அதனால் பலன் கிட்டுவதற்கும் இந்த விதிமுறைகள் அவசியம்.
வங்கி சீர்திருத்தங்களுக்காக நியமிக்கப்பட்ட சந்தானம் கமிட்டி, இப்போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், மத்திய அரசு வைத்திருக்கும் 51 சதவீத பங்குகளை மேலும் குறைத்து, 39 சதவீதமாக ஆக்க வேண்டும் என்று சிபாரிசு செய்திருக்கிறது. சென்ற ஆண்டு வரை, உலகில் சிறந்த ரெகுலேட்டராக, அமெரிக்காவில் இருந்த சிஸ்டம் கருதப்பட்டது. சில அமெரிக்க வங்கிகளின் தடுமாறும் நிலைமையை அடுத்து, வங்கிகளை வழிநடத்தும் ரெகுலேட்டர்களில், நமது வங்கித்துறை, வலுவானதாக கருதப்படுகிறது.

இந்தியாவில், வங்கிகளின் எதிர்காலம் பற்றி…
நமது நாட்டில், வங்கிகளுக்கு, வங்கித்துறைக்கு, பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில், வியக்கத்தக்க அளவு நமது வங்கிகள் வளர்ச்சிப் பெற்றிருக்கிறது. வராத கடன் என்ற அளவு கோல், 15 சதவீதத்திலிருந்து ஒன்றரை சதவீதமாக குறைந்திருப்பது, மற்றொரு சாதகமான விஷயம். இது போன்று பல முக்கிய விகிதங்கள், இப்போது சாதகமாகவே உள்ளன.
ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்டிரா, பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது, ஒரு ஆரம்ப கட்டம். மேலும், சில வங்கிகள், பெரிய வங்கிகளுடன் இணைக்கப்படும் வாய்ப்புகள் ஏற்படலாம். இந்த மாற்றத்தால் பல நன்மைகள் கிடைக்கின்றன. ரிசர்வ் வங்கியில் தொடர்ந்து செய்யப்படும் மேற்பார்வை, வங்கித்துறையை தொடர்ந்து கவனித்து, வங்கித் துறைக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெகுலேட்டரின் வழிகாட்டுதல், நமது வங்கித் துறை வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக, இன்றியமையாததாக உள்ளது.)

தலையங்கம்:யாருக்குத் தேவையற்றது?

அக்டோபர் 19, 2009 vayal மறுமொழியவும்

அக்டோபர் 6-ம் தேதியிலிருந்து 12-ம் தேதி வரை நாடு முழுவதும் தகவல் அறியும் சட்ட விழிப்புணர்வுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெற்றன. அரசுத் துறை மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள்தான் இதை நடத்தின. இக்கூட்டங்களில் பேசிய அரசு அதிகாரிகள் இந்தச் சட்டத்தைப் பாராட்டிப் பேசினாலும், “மக்கள் தேவையற்ற கேள்விகளைக் கேட்கிறார்கள். இதைத் தடுக்க வழி காண வேண்டும்’ என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர்.

ஏதோ ஓரிரு கூட்டங்களில் இதுபோன்ற கருத்துகள் தலைகாட்டியிருந்தால் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பெரும்பாலும் எல்லாக் கூட்டங்களிலும் இதுபற்றிப் பேசுகிறபோது, ஏன் இதை முன்வைக்கிறார்கள்? என்றே அச்சம் எழுகிறது.

இதற்கு சிகரம் வைத்தாற்போல அமைந்திருக்கிறது அக்டோபர் 12-ம் தேதி நடைபெற்ற தேசிய தகவல் ஆணையத்தின் ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பேசிய பேச்சு. அவரும் இதே கருத்தைச் சொல்கிறார்: “இந்தச் சட்டத்தின் கீழ் பலர் உபயோகமற்ற தகவல்களைக் கோருகின்றனர். இதனால் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் பெருமளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. உபயோகமற்ற தகவல்கள் கோரும் விண்ணப்பங்களுக்குப் பதில் அளிக்கத் தேவையில்லை’

இந்தியாவின் முதல்குடிமகனே இத்தகைய கருத்தை வெளியிட்டால், அரசு அதிகாரிகளைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த பின்னர்தான் மெத்தனப்போக்கில் இருந்த பல அரசுத் திட்டங்கள் உயிர்பெற்றன. சில கேள்விகளுக்குக் கிடைத்த பதில் மூலம்தான், திட்டம் நடைபெறாமலேயே பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. சில கேள்விகள் எழுப்பப்பட்டதாலேயே, கையூட்டுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட கோப்புகள் நகர்ந்தன. இத்தனை நல்ல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கும்போது, எதற்காக “உபயோகமற்ற கேள்விகள் கேட்கிறார்கள்’ என்ற கருத்தும், “உபயோகமற்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தேவையில்லை’ என்ற அறிவுரையும் எதற்காக? யாரைக் காப்பாற்ற?

ஒரு குடும்ப அட்டை வழங்கப்படவில்லை என்றாலோ, அல்லது ரத்து செய்யப்பட்டாலோகூட, இச்சட்டத்தின்கீழ் ஏன் மறுக்கப்பட்டது அல்லது வழங்கப்படவில்லை என்று கேட்கும் உரிமையை இந்தியக் குடிமகனுக்கு இந்தச் சட்டம் வழங்கியுள்ளது. பக்கத்துத் தெருவுக்கு கான்கிரீட் சாலை அமைத்துவிட்டு, தங்கள் தெருவுக்கு மட்டும் ஏன் கப்பிக்கல் சாலை போட்டீர்கள்? என்று பொதுவான விஷயத்தைக் கேட்கவும்கூட தனிநபருக்கு இந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எங்கள் தொகுதி எம்எல்ஏ, எம்பி செலவழித்த செலவினங்களின் பட்டியல் வேண்டும் என்றும் கேட்கலாம்.

ஆனால் இதை அரசு நிர்வாகம் விரும்பவில்லை. ரகசியங்களால் மட்டுமே ஊழலைப் பொத்தி வைக்க முடியும். ஆகவே அண்மைக் காலமாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவுகளில் உங்கள் கேள்வி அமையவில்லை என்றும், உங்கள் மனக்குறை என்றும் சொல்லி, பதில் அளிப்பதைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளனர். அதனால்தான் 75 சதவீதம் பேர் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் இத்தகைய விழிப்புணர்வு வாரத்தில் அரசு வலியுறுத்தியிருக்க வேண்டிய விஷயங்கள் இவையாகத்தான் இருந்திருக்க வேண்டும்: “மேல்முறையீடுகளைக் குறைக்கும் வகையில் பதில்களை வெளிப்படையாகச் சொல்லுங்கள். பதில் அளிப்பது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது தெரியவந்தால், அதிகாரிகள் மீது அதிகபட்ச அபராதமும், துறை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிப்பதாக இந்தக் கூட்டங்கள், கருத்தரங்குகள் அமைந்திருக்க வேண்டும்.

ஆனால், இதை விட்டுவிட்டு, தேவையற்ற கேள்விகளைத் தடுக்க வழிகாண வேண்டும் என்றும், உபயோகமற்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தேவையில்லை என்றும் சொல்வது இந்தச் சட்டத்தை நீர்த்துப்போக அரசு நிர்வாகம் முயற்சி செய்கிறது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்தச் சட்டத்தின் அடிப்படையான நோக்கமே, “”மக்களவையிலோ அல்லது சட்டப்பேரவையிலோ எந்தெந்தத் தகவல்கள், ஆவணங்கள், விவரங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள முடியுமோ, அத்தகைய தகவல்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமை உள்ளது” என்பதுதான்.

தேவையற்ற கேள்விகள் என்று தீர்மானிப்பது யார்? இது எப்படி இருக்கிறது என்றால், அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை தேவையில்லை; யாருக்கு அரசியல் சார்பு இருக்கிறதோ அவர்கள் மட்டும் வாக்களித்தால் போதும் என்பதைப் போன்று இருக்கிறது.

கவிஞர் ஞானக்கூத்தனின் கவிதை ஒன்று: “உழைத்தால் உயரலாம் உழைத்தால் உயரலாம் என்கிறார்கள். யார் உழைத்தால் யார் உயரலாம்’. அதேபோன்றுதான் கேட்கத் தோன்றுகிறது: யாருக்குத் தேவையில்லாத கேள்வி?

மக்களுக்குத் தேவைப்படும் கேள்வி, அரசுக்குத் தேவையில்லாத கேள்வி!

ஊழல் மீதும், நிர்வாக மெத்தனத்தின் மீதும் வெளிச்சம்போடும் எல்லா கேள்விகளும் இவர்களுக்குத் தேவையில்லாத கேள்விகள்தானே!

நன்றி- தினமணி

தலையங்கம்: அப்படி என்ன தேவை?

அக்டோபர் 18, 2009 vayal மறுமொழியவும்

மரபீனி மாற்றுக் கத்தரிக்காயின் வர்த்தக உற்பத்திக்கு மத்திய அரசின் மரபீனி பொறியியல் அங்கீகாரக் குழுமம் (GEAC) அனுமதி அளித்துவிட்டது என்றும், இது குறித்து அரசு இன்னும் முடிவு மேற்கொள்ளவில்லை என்றும் மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

அங்கீகாரக் குழுமம் இந்த ஆண்டு ஜனவரி மாதமே இதற்கு அனுமதி அளித்துவிட்டது என்பதும், தற்போது அமைச்சர் முன்னிலையில் நடந்த கூட்டம், வெளிப்படையாக அறிவிக்கும் முன்பாக நடந்த ஆய்வுக்கூட்டம் என்பதும் சொல்லப்படாத உண்மை. இந்த அறிவிப்பை மத்திய அரசு ஏப்ரல் மாதமே அறிவிப்பு செய்திருக்கும். ஆனால், கிரீன்பீஸ் அமைப்புகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காய் குறித்து மைக்கோ சமர்பித்த களஆய்வு அறிக்கைகளைப் பெற்று, ஆராய்ச்சியாளர்களிடம் கொடுத்து கருத்து அறிந்தன. அதில் உள்ள குறைபாடுகள் பற்றிப் பேசத் தொடங்கின. அதனால் அரசு இத்தனை மாதங்களாக இந்த அறிவிப்பைத் தள்ளி வைத்து வந்தது.

மைக்கோ சமர்ப்பித்த ஆய்வுக்கூட அறிக்கைகள் முறையாகத் தயாரிக்கப்பட்டவை அல்ல என்பதும், பல முடிவுகள் சாதகமாக காட்டப்பட்டுள்ளன, அறிவியல்பூர்வமானவை அல்ல என்பதும் கிரீன்பீஸ் அமைப்புகளின் வாதங்கள். அவற்றில் அவர்கள் குறை சொல்லும் முக்கியமான மூன்று விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை:

அ) மரபீனி மாறுதல் புகுத்தப்பட்ட இந்தக் கத்தரிக்காய், அதன் புரதத்தில் எத்தகைய மாற்றத்தைப் பெறுகிறது என்பதற்கும், இந்தப் புரதம் மனிதருக்குத் தீமையாக அமையாது; நச்சுத்தன்மை கட்டுக்குள் இருக்கிறது என்பதற்கும் ஆய்வு முடிவுகள் இணைக்கப்படவில்லை.

ஆ) மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காயை உண்போருக்கு இனப்பெருக்கக் கோளாறுகள் ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வு முடிவுகள் இணைக்கப்படவில்லை.

இ) இந்த ஆய்வு 90 நாள்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. நீண்டகால ஆய்வுகள் இருந்தால்தான், புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கான காரணியாக மரபீனி கத்தரிக்காய் மாறுகிறதா என்பதை அறிய முடியும்.

கிரீன்பீஸ் அமைப்பினர் சுட்டிக்காட்டிய இந்தக் குறைபாடுகள் குறித்து மறுஆய்வுகள் செய்யப்பட்டனவா இல்லையா என்ற எந்தத் தகவலும் இல்லாமல், மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மட்டுமே அமைச்சர் கூறியிருக்கிறார். அங்கீகாரக் குழுவின் பரிந்துரையை ஏற்று அனுமதிப்பதைத் தவிர அரசு செய்யப்போவது ஏதுமில்லை என்பது மட்டும் நிச்சயம்.

உலக நாடுகளில் உற்பத்தியாகும் கத்தரிக்காயில் 26 சதவீதம் இந்தியாவில் விளைகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது. மொத்தம் 4.72 லட்சம் ஹெக்டேரில் 76 லட்சம் டன் கத்தரிக்காய் விளைகிறது. பூச்சிகள் பாதிப்பால் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காயால் இந்திய மக்களுக்கும் இந்திய வணிகத்துக்கும் எந்த வகையிலும் லாபம் இல்லை.

அமெரிக்கா மட்டுமே மரபீனி மாற்றுப் பயிர் நிறுவனங்களை ஆதரிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த மரபீனி மாற்றப்பட்ட உணவுப்பொருள்களுக்குத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை உலக வர்த்தக நிறுவனத்தின் (ரபஞ) சட்ட திட்டத்துக்கு எதிரானது. இருந்தாலும்கூட, தைரியமாகத் தடை விதித்துள்ளது. தடையை நீக்க வேண்டும் என்று மான்சான்டோ, மைக்கோ உள்ளிட்ட அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

இந்தியாவில் 56 உணவுப் பயிர்களுக்கு மரபீனி மாற்றுப் பயிர் களஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் நெல், சோளம், தக்காளி, உருளை ஆகியனவும் உள்ளன. இதில் முதல் வர்த்தக உற்பத்தி அனுமதியைப் பெறுவது மரபீனி மாற்றுக் கத்தரிக்காய்.

இந்தியாவில் மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காய் சந்தைக்கு வரும்போது, அவற்றின் மீது லேபிள் ஒட்டப்படுமா என்பது குறித்து இன்னும் மத்திய அரசு விளக்கம் சொல்லவில்லை. அத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டாலும், உற்பத்தி அதிகம்; விலை மலிவு என்ற காரணத்தால் நாட்டுக் கத்தரிக்காயுடன் கலந்து விற்கப்படும் ஆபத்து நிறையவே இருக்கிறது.

மரபீனி மாற்றுக் கத்தரிக்காயின் வர்த்தக உற்பத்திக்கு அப்படியென்ன தேவை இருக்கிறது? என்று கேட்டால் அதற்கு கிரீன்பீஸ் அமைப்பினர் சொல்லும் முதல் காரணம், இதன் மூலம் காப்புரிமை என்கிற பெயரில் விதைகளை இந்திய விவசாயி பயன்படுத்தும்போதெல்லாம் இதை அறிமுகப்படுத்திய பன்னாட்டு நிறுவனத்துக்கு “ராயல்டி’ செலுத்தியாக வேண்டும். இரண்டாவதாக, அமெரிக்காவில் மரபீனி மாற்றப்பட்ட உணவுப் பொருள்களுக்கு வரவேற்பில்லை. அங்குள்ள விவசாயிகளும் அதை விரும்புவதில்லை. ஆகவே அவர்களது தொழில்நுட்பத்தை இந்தியாவில் விற்க முயற்சிக்கிறார்கள்.

உலகமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் என்கிற பெயரில் “ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ என்கிற கதையாகிவிட்டது இந்தியாவின் நிலைமை. திட்டமிட்டு விவசாயத்தை அழிக்க முனைந்து செயல்படுகிறார்கள். என்ன அரசோ? என்ன ஆட்சியோ?

நன்றி- தினமணி

தலையங்கம்: ‘நோபல்’ சிந்தனைகள்!

அக்டோபர் 18, 2009 vayal மறுமொழியவும்

உலகின் தலைசிறந்த விருது என்று கருதப்படும் நோபல் பரிசு இந்த ஆண்டு ஓர் இந்தியருக்கும், அதிலும் குறிப்பாக, தமிழருக்குக் கிடைத்திருக்கிறது என்பது நமக்குப் பெருமை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பற்றிய ஆச்சரியத்தை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது.

யார் இந்த ஆல்பிரட் நோபல்? சுவீடன் நாட்டுக்காரரான ஆல்பிரட் நோபல் அமெரிக்காவில் குடியேறுகிறார். 1862-ம் ஆண்டு நைட்ரோ கிளிசரினில் தனது ரசாயன ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் மூலம் “டைனமைட்’ வெடிமருந்தை 1867-ல் கண்டுபிடித்து 40 வயதில் உலக மகா கோடீஸ்வரராகிறார். இத்தாலியில் உள்ள தனது வீட்டில் 1896-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி ஆல்பிரட் நோபல் ஓர் உயில் எழுதி வைத்துவிட்டு மரணமடைகிறார்.

அந்த உயிலின் அடிப்படையில் நோபல் விருது உருவாக்கப்பட்டு 1901 முதல் வழங்கப்படுகிறது. உலக அழிவுக்குப் பிள்ளையார் சுழி போடும் டைனமைட் என்கிற வெடிமருந்தைக் கண்டுபிடித்த குற்ற உணர்வுதான் ஆல்பிரட் நோபலை இப்படி ஒரு விருது வழங்கத் தூண்டியது என்று கூடக் கூறுவார்கள். அதெல்லாம் இருக்கட்டும். இந்த ஆண்டு நோபல் விருதைப் பற்றிய விவாதத்துக்கு வருவோம்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருப்பது அவரையே வியப்பில் ஆழ்த்தி இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? ஒபாமா ஒரு மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர். தேர்ந்த அரசியல்வாதி. அவரது தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் பாராட்டுக்குரியவை. அமெரிக்க சரித்திரத்திலும், உலக வரலாற்றிலும் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் வெள்ளையர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது முக்கியமான திருப்புமுனை, சந்தேகமே இல்லை.

ஆனால், நோபல் விருது என்பது, குறிப்பாக உலக சமாதானத்துக்கான நோபல் விருது என்பது மேலே குறிப்பிட்ட சாதனைகளுக்காகத் தரப்படுவதல்ல. மார்டின் லூதர் கிங் ஜூனியருக்கு நிகரான இனவெறிக்கு எதிரான போராட்டம் எதையும் ஒபாமா தலைமையேற்று நடத்தினாரா என்றால் கிடையாது. சரி, முதலாவது உலகப் போருக்குப் பிறகு உலக நாடுகளின் இணையம் ஏற்படுத்தி உலக ஒற்றுமைக்காக முன்னாள் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனுக்கு நிகரான பங்களிப்பு எதுவும் ஒபாமா செய்திருக்கிறாரா என்றால் இல்லை. அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மனித உரிமைக்காக ஜிம்மி கார்ட்டர் உலகம் முழுவதும் சுற்றி வந்து பாடுபட்டதுபோல, ஒபாமாவுக்கு நோபல் பரிசு பெறத் தகுதி இருக்கிறதா என்றால் அப்படி எதையும் குறிப்பிட முடியவில்லை.

இப்போதும், இராக்கும், ஆப்கானிஸ்தானமும் அமெரிக்காவின் மறைமுகக் கட்டுப்பாட்டில், அமெரிக்கப் படைகளின் கண்காணிப்பில்தான் இருக்கின்றன. அமெரிக்காவால் பேச முடிகிறதே தவிர, பாலஸ்தீனப் பிரச்னையில் சுமுகமான முடிவு எதையும் கொண்டுவர முடிந்திருக்கிறதா என்றால் கிடையாது. இப்போதும் உலகிலேயே மிக அதிகமான அணு ஆயுதக் குவியல் அமெரிக்காவிடம்தான் இருக்கிறது. அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதும், தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை மெல்ல மெல்ல அழிப்பதும் தனது குறிக்கோள் என்று அதிபர் ஒபாமா கூறியிருப்பதை அவரது ஆதரவாளர்களும், அமெரிக்க நிர்வாகமும் ஆதரிக்குமா என்பதும் சந்தேகம்தான்.

இப்படியொரு சூழ்நிலையில், என்ன அடிப்படையில் அதிபர் ஒபாமாவுக்கு உலக சமாதானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருக்கிறது? அவரை உலக சமாதானத்துக்காகப் பாடுபட ஊக்குவிப்பதற்காக இந்த விருது என்று சொன்னால் அதைவிடக் கேலிக்கூத்து எதுவும் இருக்க முடியாது. ஊக்கமளிப்பதற்காக விருது வழங்குவார்களா என்ன? ஒபாமாவின் பத்து மாத சாதனை என்ன என்று கேட்டால், எதுவுமே செய்யாததற்காக நோபல் விருது பெற்றதாகத்தான் இருக்கும்.

அடுத்தபடியாக, நம்ம ஊர் “வெங்கி’ என்று செல்லமாக அழைக்கப்படும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு விஞ்ஞானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருப்பதற்கு வருவோம். சிதம்பரம்தான் பூர்வீகம் என்றாலும், குஜராத் மாநிலம் வதோதராவும், பிறகு அமெரிக்க யேல் பல்கலைக்கழகமும்தான் அவரது விருதுக்குப் பின்னணியில் இருந்தவை என்பதுதான் உண்மை.

பௌதீகம் படித்த ராமகிருஷ்ணனுக்கு உயிரியலில் நாட்டம் வந்தது. தனது படிப்பை மாற்றிக் கொண்டு, இப்போது மூலக்கூறு இயலுக்காக, ரசாயனத்துக்கான நோபல் விருதை தாமஸ் ஸ்டீட்ஸ் மற்றும் யெடா யோனத் இருவருடனும் ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொள்கிறார்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய முதல் விஷயம், ராமகிருஷ்ணன் கணினி அறிவியலோ, பொறியியல் படிப்போ படிக்கவில்லை. அடிப்படை விஞ்ஞானமான பௌதீகம் படித்திருக்கிறார். இதற்கு முன் நோபல் விருது பெற்ற இன்னொரு இந்தியரான அமார்த்ய சென் பொருளாதாரம் படித்தவர். கலை (பி.ஏ.) மற்றும் அறிவியல் (பி.எஸ்ஸி) என்று சொன்னாலே முகம் சுளித்து, லட்சக்கணக்கில் நன்கொடை வழங்கிப் பொறியியல் படிக்கப் பைத்தியமாய் அலையும் இளைஞர்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள். என்ன படிக்கிறோம் என்பதைவிட, எப்படிப் படிக்கிறோம் என்பதையும், எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் சாதனையாளராக உயர முடியும் என்பதையும் ராமகிருஷ்ணனுக்குக் கிடைத்திருக்கும் நோபல் விருது நமக்கு உணர்த்துகிறது.

ராமகிருஷ்ணன் அமெரிக்கா போகாமல் இந்தியாவில் இருந்திருந்தால் இந்த உலக சாதனையைப் படைத்திருக்க முடியுமா? நமது நிர்வாக அமைப்பு அதற்கு உதவி இருக்குமா? இளங்கலை பௌதீகம் படித்த ஒருவர் மேற்படிப்பில் உயிரியலுக்கு மாறுவதற்கும், ரசாயனத்தில் ஆராய்ச்சி செய்வதற்கும் நமது அமைப்பு அனுமதி அளிக்குமா? திறமை என்பது தண்ணீரைப் போலத் தனது பாதையையும், தளத்தையும் நிர்ணயித்துக் கொண்டுவிடும் என்பதும், தடைகள் அதற்கு ஒரு பொருட்டல்ல என்பதும் ராமகிருஷ்ணனால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். இப்போதும் இந்தியர்களுடனும், இந்தியப் பல்கலைக்கழகங்களுடனும் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது நோபல் விருது அவருக்குக் கிடைத்ததைவிட மகிழ்ச்சியை அளிக்கிறது!

நன்றி- தினமணி