தொகுப்பு

Archive for the ‘படித்த செய்திகள்’ Category

மின் கம்பியை பிடித்த பாகனை காப்பாற்றிய பாசக்கார யானை

நவம்பர் 24, 2009 vayal மறுமொழியவும்

ஓசூர் அருகே மின் கம்பியில் தொங்கிய யானைப் பாகனை யானை காப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமாக 50 வயது மதிக்கத்தக்க “சுமா’ என்ற யானை உள்ளது. இந்த யானையை திருமணம், அரசியல் தலைவர்கள் வரவேற்பு, திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு அனுப்பி வைப்பார். யானையை பாதுகாக்கவும், நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லவும் யானைப் பாகன்கள் தேனியை சேர்ந்த விக்னேஷ் (23), சீர்காழியை சேர்ந்த நாகப்பன் (35), சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த அசோக் (20) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.நேற்று முன் தினம் ஓசூர் சிப்காட்டில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு, யானையை விக்னேஷ், நாகப்பன், அசோக் ஆகியோர் அழைத்து வந்தனர். இரவு மாப்பிள்ளை வரவேற்பு முடிந்தது. நேற்று காலை யானையை பாகன்கள் மூவரும், ஓசூரில் இருந்து சேலத்தில் நடக்கும் மற்றொரு நிகழ்ச்சிக்கு கால்நடையாக அழைத்து வந்தனர்.

ஓசூரை அடுத்த காளேகுண்டம் கிராமத்தில் செல்லும் போது, யானைக்கு தீனி போட முடிவு செய்தனர். அசோக் யானை மீது அமர்ந்து கொண்டு சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் இருந்த மட்டைகளை வெட்டி கீழே போட்டுக் கொண்டிருந்தார். விக்னேஷ் மற்றும் நாகப்பன் ஆகியோர் அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றனர்.தென்னை மட்டையை வெட்டிய போது, மட்டைக்கு இடையில் மின் கம்பி சென்றதை அறியாத அசோக், தெரியாமல் அதைப் பிடித்து விட்டார். உடன் மின்சாரம் பாய்ந்து அலறினார்.யானைக்கும் லேசாக மின்சாரம் பாய்ந்ததால், அதிர்ச்சியும், பீதியும் அடைந்த யானை, மின் கம்பியில் தொங்கிய பாகன் அசோக்கை தும்பிக்கையால் இழுத்ததில், கம்பியின் பிடியில் இருந்து தப்பிய அசோக் யானையின் தும்பிக்கையின் பிடியில் தலைகீழாக தொங்கினார்.

யானை அசோக்கை தூக்கியபடி ஓடியதால், அந்த பகுதியில் உள்ளவர்கள் உண்மை நிலவரம் அறியாமல் யானைக்கு மதம் பிடித்து விட்டது என மிரண்டு, பீதியில் ஓட்டம் பிடித்தனர். சிறிது தூரம் கட்டுப்பாடு இல்லாமல் ஓடிய யானை, பின்னர் அமைதியாகி பாகனை கீழே இறக்கி விட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு குவிந்தனர். டீ குடிக்க சென்ற மற்ற பாகனங்களும் பதறியடித்து அங்கு வந்தனர். யானையால் காப்பாற்றப்பட்ட பாகன் அசோக்கின் கை மின்சாரம் பாய்ந்ததில் கருகியது; பலத்த காயம் ஏற்பட்டது. மின்சாரம் பாய்ந்த பாகன் அசோக்கை யானை காப்பாற்றியதோடு, மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சியில் யானை மிரண்டு ஓடிய உண்மை தெரிந்து, பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.யானையால் உயிர் தப்பிய அசோக் யானையை அன்போடு, தட்டிக் கொடுத்து ஆனந்த கண்ணீர் வடித்தார். வேடிக்கை பார்க்க கூடிய பொதுமக்களும் யானையின் அதிவேக செயலால் பாகன் தப்பியதை அறிந்து, யானையை வணங்கிச் சென்றனர்.

அமெரிக்க மேயரான முதல் சீக்கியர் :’பாங்க்ரா’ நடனத்துடன் கோலாகலம்

நவம்பர் 22, 2009 vayal மறுமொழியவும்

யுபா சிட்டி : அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் ஒரு நகரத்தின் மேயராக பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட சீக்கியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பதவியேற்பு விழா, “பாங்க்ரா’ நடனத்துடன் கோலாகலமாக நடந்தது.

அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் யுபா சிட்டி என்ற நகரம் உள்ளது. இங்கு இந்தியர்கள் அதிகம் வசிக்கின்றனர். அமெரிக்காவில் முதல் முதலாக இந்தியர்கள் இந்த நகரத்தில் தான் குடியேறியதாக கூறப்படுகிறது. சீக்கியர், இந்து, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு மதங்களை சேர்ந்த, 15 ஆயிரம் இந்தியர்கள் இங்கு வசிக்கின்றனர். இவர்களில், பெரும்பான்மையானோர் பஞ்சாபை பூர்வீகமாக கொண்டவர்கள்.இந்த நகரத்தில் மொத்த மக்கள் தொகை 65 ஆயிரம் தான். இந்த நகரத்தின் மேயராக, பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட சீக்கியர் காஷ்மீர் கில் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவரது பதவியேற்பு விழா, யுபா சிட்டியில் சமீபத்தில் நடந்தது. யுபா சிட்டியை தவிர, அமெரிக்காவின் மற்ற நகரங்களில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரும், பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். விருந்தினர்களுக்கு, சமோசா, சென்னா மசாலா, சப்பாத்தி போன்ற இந்திய உணவு வகைகள் சுடச் சுட பரிமாறப்பட்டன. பஞ்சாபின் பிரபலமான “பாங்க்ரா’ நடனத்துடன், இசை நிகழ்ச்சியும் அங்கு நடந்தது.

இதுகுறித்து காஷ்மீர் கில் கூறியதாவது:யுபா சிட்டியின் மேயராக பதவியேற்றுள்ளதன் மூலம், புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்த பதவியை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து, 100 ஆண்டுகளுக்கு முன்பு என் முன்னோர்கள் இங்கு குடியேறினர். இங்கு வசிப்பதற்காக பெருமைப்படுகிறேன். வாழ்நாளின் எஞ்சியுள்ள காலத்தையும் இங்கு கழிக்க திட்டமிட்டுள்ளேன்.இவ்வாறு கில் கூறினார்.அமெரிக்க நகரத்தின் முதல் சீக்கிய மேயர் என்ற பெருமையும், கில்லுக்கு கிடைத்துள்ளது.

அக்னி – 2 ஏவுகணை -( 23 ம் தேதி ) விண்ணில் செலுத்தி சோதனை

நவம்பர் 22, 2009 vayal மறுமொழியவும்


அணு ஆயுதம் சுமந்து சென்று எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி – 2 ஏவுகணையை இந்தியா நாளை ( 23 ம் தேதி ) விண்ணில் செலுத்தி சோதனை செய்கிறது . சமீப கால தளவாட உலகில் பாதுகாப்பு , முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. இதற்கென உலக அளவில் வல்லரசு நாடுகள் ஆயிரம் கோடிக்கணக்கில் செலவழித்து வருகிறது. கடந்த சில நாடகளுக்கு முன்னதாக சீனா 60 ம் ஆண்டு விழா கொண்டாடிய தருணத்தில் ராணுவ அணிவகுப்பு மற்றும் ஆயுதங்கள் குவிப்பை உலகிற்கு காட்டி பெருமை கொண்டது.

இந்நேரத்தில் இந்தியாவும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி தங்களது படைக்கு பலம் சேர்த்து வருகின்றனர். மத்திய ரக அக்னி -2 ஏவுகணை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. இது 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள எதிரிகளின் இலக்கை தாக்கும்.

முதல் முறையாக இரவு நேர சோதனை : இது 17 டன் எடை கொண்டதாகும். 20 மீட்டர் நீளம் கொண்டதாகும். தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும். இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி (டி.ஆர்.டி.ஓ.,) துறையினரும் இணைந்து இந்த ஏவுகணையை தயாரித்துள்ளனர். நாளை ஒரிசா மாநிலம் பாலசோர் கடல் பகுதியில் இருந்து இந்த சோதனை நடத்தப்படுகிறது. இதில் ஒரு விசேஷம் என்னவெனில் இந்த முறை இரவில் சோதனை நடத்தப்படுகிறது என்பது முக்கிய விஷயம் ஆகும். இது முதல் முறையாக முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

அழகில்லையா? கெட்-அவுட் டேட்டிங் வெப்சைட் தடா

நவம்பர் 15, 2009 vayal மறுமொழியவும்

கோபன்ஹேகன்:”டேட்டிங்’ செல்லப் போகிறீர்களா? அப்படியானால் முதலில் உங்கள் புகைப்படத்தை அனுப்புங்கள். அழகாக இருந்தால் அனுமதி. அழகில்லை என்றால் “கெட் அவுட்’ இப்படியொரு வெப்சைட் விளம்பரப்படுத்தியுள்ளது.

டேட்டிங் என்பது தனக்குப் பிடித்த பிறரிடம் தன்னைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆரம்பித்து, ஷாப்பிங், ஓட்டல், சுற்றுலா என்றெல்லாம் சுற்றிக் கடைசியில் வேறெங்கோ போய் முடிவது நமக்குத் தெரிந்ததுதான். மேற்கத்திய கலாசாரம், இப்போது நம்மவர்களையும் பீடித்துள்ளது.

இந்த டேட்டிங் குக்கு அழகானவர்கள் மட்டுமே தங்கள் புகைப்படங்களை அனுப் பிப் பதிவு செய்ய வேண்டும் என்று சொன்னால் எப்படியிருக்கும்? ஆம், டென்மார்க்கில் தான் இப்படியொரு வெப்சைட்டை ஆரம்பித்துள்ளனர்.அந்த வெப்சைட்டில் இணைபவர்கள், உலகளாவிய அளவில் தங்கள் “நண்பர்களோடு’ அளவளாவி, தங்கள் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

இதில் பல மொழி வசதி, சுற்றுலாத் தகவல்கள், நவீன வீடியோ தொடர்பு போன்ற பல வசதிகள் உள்ளன.அதோடு, “கவர்ச்சியானவர்கள், உலகளாவிய தொடர்பு, உறுதியான ஒப்பந்தம், தலைசிறந்த மாடலிங் நிறுவனங்களின் தொடர்பு’ என்றெல்லாம் விளம்பரப்படுத்தியுள்ள அந்த வெப்சைட், கடைசியாக, “அழகில்லாதவர்கள் தயவு செய்து அணுக வேண்டாம்’ என்றும் தெரிவித்துள்ளது.இதில் பதிவு செய்பவர்களில் 20 சதவீதம்தான் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர்.

புறக்கணிக்கப்படுபவர்கள் வெறுத்துப் போய், வெப்சைட்டை நிறுவிய டேட்டிங் ஏஜென்சிக்கு கொலை மிரட்டல் விடுமளவுக்கு வெப்சைட் பிரபலமாகியுள்ளது.இதன் நிறுவனர் ராபர்ட் ஹின்ட்சே கூறுகையில், ” தன்னை ஈர்ப்பவர்களோடு நெருக்கமாக இருப்பதை ஒவ்வொருவரும் விரும்புவர். அதுதான் “பியூட்டிபுல்பீப்பிள்.காம்’ (http://www.beautifulpeople.com)மின் கொள்கை. ஏனெனில் அழகை விரும்புவது இயற்கைதானே’ என கூலாக சொல்கிறார். இப்போது இந்த வெப்சைட் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் பரவிவிட்டது.

ஆதிக்கத்தை இழக்கிறது அமெரிக்க டாலர், இனி அடுத்தது என்ன… ?

நவம்பர் 15, 2009 vayal மறுமொழியவும்

அமெரிக்க டாலருக்கு வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இனி உலகிலேயே முன்னணி கரன்சி என்ற அதீத கவுரவம் இனி தொடருமா என்று அலசப்படும் அளவிற்கு, நிலைமை கீழிறங்கி வருகிறது.உலகப் பொருளாதாரத்திற்கு தரப்படும் ஊக்குவிப்புகளால், அடுத் தடுத்து ஓரளவு நிலைமை சீராகும் என்ற கருத்து பேசப்பட்டாலும், அது அமெரிக்க கரன்சியான டாலரின் ஸ்திரத்தன்மைக்கு வலு சேர்க்கவில்லை.

பல்வேறு நாடுகளின் கரன்சிகளுடன் ஒப்பிடும் போது, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, கடந்த பதினைந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது. உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் கையிருப்பு கரன்சியாக 64 சதவீதம் அமெரிக்க டாலர் இருக்கிறது. அப்படியிருக்கும் போது யூரோ கரன்சி, அல்லது அந்தந்த நாட்டின் கரன்சி எப்படி முன்னுக்கு வரும் என்ற கேள்வி எழும்.

சீனாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா விஜயம் மேற்கொள்ளும் போது, அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள பரிவர்த்தனையில் அமெரிக்க டாலர் வீழ்ச்சி அடையாமல், ஏற்பாடுகள் செய்வார் என்ற பேச்சு இருக்கிறது.நெருடல் உறவு :அதிக அளவு அமெரிக்க டாலரை கையிருப்பாக வைத்திருக்கும் நாடுகளில் சீனாவுக்கு முதலிடம் உண்டு.

அமெரிக்காவின் பொருளாதார வெற்றி சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படி எதிர்பார்த்த வெற்றி ஏற்படவில்லை என்றால், அது அமெரிக்க – சீன பொருளாதார உறவை பாதிக்கும். வேண்டுமென்றே தன் கரன்சியான யுவானை சற்று மதிப்புக் குறைவாக சீனா வைத்திருப்பதின் மூலம், அமெரிக்காவுக்கு தன் பொருட்களை அதிக ஏற்றுமதி செய்யப் பார்க்கிறது என்ற பேச்சும் இருக்கிறது. இந்த நெருடல்களை எப்படி அமெரிக்காவும், சீனாவும் பேசித் தீர்க்கப் போகின்றன என்பது இனி தான் முடிவாகும்.

கடந்த சில வாரங்களில் ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கரன்சிகள் அன்னியச் செலாவணி வர்த்தகத்தில் மதிப்பு கூடி நிற்கின்றன. இதில், மற்றொரு கரன்சியான யூரோ அதிக நம்பிக்கை தரும் கரன்சியாக பிரிட்டன் ஸ்டெர்லிங் பவுண்டை விட முந்தி நிற்கிறது. அமெரிக்க டாலர் மதிப்பில் மட்டும் உள்ள பொருட்கள் மவுசு குறைந்து வருகிறது.

இவை எல்லாம் பார்க்கும் போது, என்னதான் வளர்ந்த நாடுகள் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் அதிகப் பணத்தை ஊக்குவிப்புகள் என்ற பெயரில் கொட்டினாலும், மேலும் ஏதாவது அபாயம் வந்து விடுமோ என்ற அச்சம் வந்து விட்டது. அதன் எதிரொலியாக, அதிக அளவு நிதி வைத்திருப்பவர்கள் வழக்கத்திற்கு மாறாக தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனர்.

ஐரோப்பாவில் எந்த ரசீதும் இல்லாமல் தங்கக் கட்டிகளை வாங்கி சேமிப்பாக வைக்கின்றனர். இதுவரை இல்லாத வகையில், வெள்ளிக்கும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. நூறு கிராம் எடையுள்ள தங்கக்கட்டி உள்ளங்கையில் அடங்கிவிடும், அதன்விலை 3,500 டாலர், அதாவது அதன் மதிப்பு 1.60 லட்சம் ரூபாய். உலக கோல்டு கவுன்சில் தகவலின்படி, இந்த ஆண்டில் இதுவரை 20 சதவீதம் தங்கம் விற்பனை அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் ரிசர்வ் வங்கியும், கையிருப்பில் உள்ள டாலரைக் கொண்டு 200 டன் தங்கத்தை சர்வதேச நிதி நிறுவனமான ஐ.எம்.எப்.,மிடம் இருந்து வாங்கியிருக்கிறது. மத்திய நிதியமைச்சர் பிரணாபோ, “பணம் இருந்ததால் தங்கம் வாங்கினோம்: இன்னமும் அன்னியச் செலாவணிக்கு போதிய கையிருப்பு இருக்கிறது’ என்றிருக்கிறார்.ஆஸ்திரேலிய நாடு, தொழில்துறைக்கு தேவையான கச்சாப் பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு. இங்கே, அந்த நாட்டு டாலர் மதிப்பு கூடியிருக்கிறது. அடுத்தாற்போல் தங்கள் நாட்டு டாலர் மதிப்பு சரியவிடாமல் இருக்க யுக்தியை வகுக்கத் திட்டமிட்டிருக்கின்றனர்.

முக்கியமாக எண்ணெய் உற்பத்தி நாடுகள் மத்தியில் டாலர் மதிப்பு வீழ்ச்சி கவலை தருகிறது. அமெரிக்காவின் நெருக்கமான நாடான சவுதி எண்ணெய் வர்த்தகம் டாலர் கரன்சியில் தொடர்ந்து இருக்க விரும்புகிறது. ஆனால், கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் ( ஒபெக்) கூட்டத்தில் வெனிசூயலா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும், கடந்த இரு ஆண்டுகளாகவே கேள்வி எழுப்புகின்றன.

கச்சா எண்ணெயை விற்று டாலராகப் பெற்று, அதை வைத்து நமக்குத் தேவையான பொருட்கள் வாங்கும் போது டாலர் வீழ்ச்சியால் அப்பொருட்கள் கூடுதல் விலை மதிப்பு பெறுகின்றன. இதைத் தடுக்க யூரோ, யென் போன்ற கரன்சிகளுக்கும் வர்த்தகம் செய்தால் என்ன என்பது இவர்கள் கேள்வி. இதற்கு இன்னமும் விடை காணவில்லை.

ஆனால் ரஷ்யாவும், சீனாவும் தங்களுக்குள் நடக்கும் வர்த்தகத்தில் டாலர் தேவையின்றி, பரஸ்பரம் இருநாட்டு கரன்சிகளை பயன்படுத்திக் கொள்வது என்ற முடிவுக்கு ஏற்கனவே வந்து ஒப்பந்தமும் ஆகியிருக்கிறது. இப்பாணியில் பிரேசில், இந்தியா பேச்சு நடைபெறுகிறது.

இவைகளை எல்லாம் பார்க்கும் போது, அடுத்த சில மாதங்களில் டாலர் வலுப்பெறும் தன்மை அதிகரிக்காத பட்சத்தில், உலக நாடுகள் பலவும் தங்களது கரன்சியை சரிய விடாமல் காக்க, புதிய அணுகுமுறைகளை அமல் படுத்த நேரிடும் நிலைக்கு தள்ளப்படும் புதிய சூழ்நிலை உருவாகி வருகிறது.

ஆட்டய போடுவதில் உலகின் நெம்பர் -1 இந்தியா தானாம்

நவம்பர் 14, 2009 vayal மறுமொழியவும்

வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் “சென்ட்’களில் ஒவ்வொன்றாய் திறந்து, சட்டையில் அடித்து வாசனை பார்ப்பதில் சிலருக்கு அலாதி பிரியம்.குண்டூசி டப்பா, பிளேடுகள், பென்சில், பேனா, ரப்பர் போன்றவற்றை “அமுக்கி’ விடுவதில் சிலர் மகா கில்லாடிகள்.

தண்ணீர், குளிர்பான பாட்டிலை திறந்து குடித்துவிட்டு, அங்கேயே போட்டு விட்டு நடையை கட்டுவோரும் உண்டு. சுயசேவை வசதி உள்ள அங்காடிகளில் (மால்) இது போல தினமும் நடக்கத்தான் செய்கிறது. இப்படி “ஆட்டய’ போடுவதால் இந்தியாவுக்கு பெரும் “பெருமை’ கிடைத்துள்ளது தெரியுமா? ஆம், உலகில், 41 நாடுகளில் தான் கடைகளில் “லபக்’குவது அதிகமாக நடக்கிறது; அந்த பட்டியலில் இந்தியா தான் நெம்பர் 1.”குளோபல் ரீடெய்ல் தெப்ட் பாரோமீட்டர்’ என்ற சர்வே ஒவ்வொரு ஆண்டும் பல நாடுகளில் நடக்கிறது. தனியார் அமைப்புகள் சேர்ந்து நடந்தும் இந்த சர்வேயில் தான் இந்தியாவின் “சாதனை’ அம்பலமாகி உள்ளது.சர்வேயில், இந்தியா பற்றி கிடைத்த சில தகவல்கள்: கடைகளில் குண்டூசி முதல் நகைகள் வரை “லபக்’கப்படுகின்றன.

மொபைல் போன், ஐபாட், எம்.பி.,3, உட்பட கையடக்க எலக்ட்ரானிக் சாதனங்கள், சென்ட், லிப்ஸ்டிக் போன்ற அழகு சாதனங்கள், ஜட்டி, பிரா, பனியன், உள்ளாடைகள், டீ ஷர்ட், சுரிதார் போன்ற துணிவகைகள், நகைகள் ஆகியவை தான் அதிக அளவில் “எடுக்கப்’படுகின்றன. இல்லாதவர்கள் தான் திருடுகின்றனர் என்ற எண்ணவேண்டாம்; வசதி படைத்தவர்களும் “ஜாலி’க்காக இப்படி செய்கின்றனர். இளம் வயதினர் தான் இதில் கணிசமான பேர்.”சென்ட்’ அடித்துப்பார்ப்பது, குளிர் பானம் பருகுவது போன்ற செயல்களை இளம் வயதினர் தான் செய்கின்றனர்.இப்படிப்பட்ட “லபக்’குகள் எல்லாம் “மால்’களில் தான் அதிகம் நடக்கின்றன. இந்தியா முழுவதும் இந்த “லபக்’குகளால் ஒரு நாளைக்கு 33 கோடி ரூபாய்க்கு சில்லரை வர்த்தக இழப்பு ஏற்படுகிறது. ஒரு ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய்.”ஆட்டய’ போடுவதில் 41 நாடுகள் உள்ளன. அதில் , இந்தியாவில் மொத்த சில்லரை வர்த்தகத்தில் 3.2 சதவீதம் இதனால் இழப்பு ஏற்படுகிறது.

இந்தியாவின் இரும்பு மனுஷி’-இந்திரா காந்தி

நவம்பர் 11, 2009 vayal மறுமொழியவும்

`இந்தியாவின் இரும்பு மனுஷி’ என்று ஆதரவாளர்களாலும், எதிர்பாளர்களாலும் ஏற்றுக்கொள்ளபட்டவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. இந்திரா காந்தி காலமாகி கால் நுற்றாண்டாகிவிட்ட நிலையில், அவருடன் நெருங்கி பழகிய சிலர், அவருடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

சித்தார்த்த சங்கர் ரே:

1923-ம் ஆண்டு, இந்திரா காந்தியின் தாத்தா மோதிலால் நேருவைச் சந்திப்பதற்காக எனது தாத்தா சித்தரஞ்சன் தாஸ் என்னை அலகாபாத்துக்கு ரெயிலில் அழைத்துச் சென்றார். மோதிலால் நேரு எனக்கு ஒரு பொம்மை வாங்கிக் கொடுத்தார். அப்போது ஐந்து வயதுச் சிறுமியான இந்திரா, பொம்மை கேட்டு என்னிடம் சண்டையிட்டார். கடைசியில் இநதிரா பொம்மையின் ஒரு காலோடு ஓடிவிட, என் கையில் தலை மட்டும் எஞ்சியிருந்தது. மீதமுள்ள பாகம் அந்தக் களேபரத்தில் எங்கோ போய் விழுந்துவிட்டது.

இந்திரா தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் ஒரு போராளியாகவே இருந்தார். ஒருமுறை ஒரிசாவில் ஒரு கலவரக்காரன் இந்திராவின் மீது கல்லை எறிந்து அவர் முக்கை உடைத்துவிட்டான். அவரை `பாண்டேஜ்’ போட்ட முக்குடன் பார்த்த நான், “நீங்கள் உங்களின் நீளமான முக்கை எல்லோருடைய விஷயங்களிலும் நுழைத்தால் இன்னும் நிறைய காயப்பட வேண்டி வரும்” என்று நகைச்சுவையாகக் கூறினேன். அதற்கு பதிலடியாக இந்திரா சொன்னார்: “எனது நீண்ட முக்கைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அது நீளமானது என்பதால் என்னால் தொலைவில் நடப்பதைக் கூட மோப்பம் பிடிக்க முடியும்! என்றார். இந்த சமயோசிதம் என்னைக் கவர்ந்தது”

எழுத்தாளர் குஷ்வந்த்சிங்:

இந்திரா அவரது தந்தை நேருவிடமிருந்து வேறுபட்டவர். ஜவகர்லால் நேருவுக்கு இந்தியாவை பற்றி ஒரு மாபெரும் தொலைநோக்கு இருந்தது. ஐந்தாண்டுத் திட்டங்கள் அவரது யோசனைதான். அவர் தனது கனவுகளில் இலேசாகத் தவறு புரிந்தார். உறவினர், நண்பர்களுக்குச் சலுகை அளிக்கும் பலவீனமும் நேருவுக்கு இருந்தது.

ஆனால் இந்திரா, உறவினர், நண்பர்களுக்குச் சலுகை அளிக்கவில்லை. எனவே அவரால் தனது தந்தையின் நிழலிலிருந்து மீண்டு வர முடிந்தது. இந்திராவின் கணவர் பெரோஸ் காந்தி. இந்திராவின் கணவராக இருந்தும் அவருக்கென்று தனி முக்கியத்துவம் எதுவும் கிடைத்ததில்லை.

1971-ம் ஆண்டு நடந்த போர் இந்திராவுக்கு ஒரு பெரும் தோற்றத்தை உருவாக்கித் தந்தது.

இந்திரா ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோது அவரை நான் நன்கு அறிந்தேன். அந்தக் காலகட்டத்தில் நான் ஏறக்குறைய தினந்தோறும் அவரை பார்ப்பேன். அப்போது அவரது சில குறைபாடுகளையும்,

அரசியல் உச்சத்தை அடைவதற்காக அவர் மேற்கொண்ட வழிகளையும் கண்டேன்.

அவர் மிகவும் அழகான தோற்றம் கொண்ட பெண். ஆனால் மிகவும் இறுக்கமானவர். பெண்களுக்கே உரிய குணமான, அழகான மற்ற பெண்களை விரும்பாத பலவீனம் இந்திராவுக்கும் இருந்தது.

மருமகள் மேனகா குறித்து இந்திரா தானாக ஒரு முடிவு எடுத்ததால் இந்திராவுடனான எனது உறவு பாதிக்கபட்டது. நான் மேனகாவின் பக்கம் இருப்பதாக இந்திரா நினைத்தார். ஆனால் அது உண்மையில்லை. ஆனால் யார் உண்மையை இந்திராவிடம் எடுத்துச் சொல்வது? மேனகாவையோ, அவரது அம்மாவையோ இந்திராவுக்குச் சுத்தமாக பிடிக்கவில்லை. அவர்களுக்கு இடையிலான உறவு முறிவு மிக மோசமாக இருந்தது. இப்போதைய தலைவர்கள் எவரைம் இந்திராவுடன் ஒப்பிட முடியாது.

ஆர்.கே. தவான்:

1984-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி மாலையில் இந்திரா காந்தி ஒரிசாவிலிருந்து திரும்பினார். நாடு முழுவதிலும் இருந்து வருபவர்களை தனது சதர்ஜங் இல்லத்தில் காலை 8 மணிக்கு பார்ப்பது இந்திராவின் வழக்கம். ஆனால் அவர் மாலையில் வெளியிலிருந்து திரும்பி வந்தால் மறுநாள் காலை சந்திப்பை ரத்து செய்வது என்பது ஒரு விதியானது. அதன்படி மறுநாள் காலை சந்திப்பை ரத்து செய்துவிட்டு ஓய்வெடுக்கும்படி நான் அவருக்கு ஆலோசனை கூறினேன். ஆனால் தான், பி.பி.சி.யின் பீட்டர் உஸ்டினோவுக்கு அப்பாயிட்மென்ட் கொடுத்துவிட்டதாகவும், அவர் ஏற்கனவே ஒரிசாவில் ஒரு பகுதியை பதிவு செய்திருப்பதால் மாற்ற முடியாது என்றும் கூறி விட்டார்.

எனவே தனது இருப்பிடத்தில் பார்வையாளர்களைச் சந்திப்பதற்கு பதிலாக அக்பர் ரோடு 1-ம் எண் இல்லத்தில் உஸ்டினோவைச் சந்திப்பது என்று முடிவானது. நான் வழக்கம்போல் அக்டோபர் 31 அன்று சதர்ஜங் 1-ம் எண் வீட்டை அடைந்தேன். ஒரு நல்ல சிகையலங்காரக் கலைஞர் வேண்டும் என்று இந்திரா காந்தி கேட்டதால் அவரது உதவியாளர் நாது ராம் அதற்கு ஏற்பாடு செய்தார்.

நான் இந்திரா காந்தியின் அறைக்குள் நுழைந்தபோது அவருக்குச் சிகை ஒழுங்குபடுத்தபட்டுக் கொண்டிருந்தது. அவர் தனது தனிபட்ட அலங்காரத்தில் மிகவும் கவனமானவர். அவரது தலையில் ஒரு முடி விலகியிருந்தாலும் நான் எனது தலையில் கைவைத்து அதைச் சைகையால் சுட்டிக் காட்டுவது வழக்கம். சிகையலங்காரக் கலைஞர் இந்திராவின் தலைமுடியை ஒழுங்குபடுத்திக் கொடிருந்தபோதே அவர் என்னை நோக்கித் திரும்பினார். ஜனாதிபதி ஜயில்சிங் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டு அன்றுதான் நாடு திரும்பினார்.

அன்று மாலை தனது வீட்டில் இளவரசி ஆன்னேவுக்கு டின்னர் அளிக்க இந்திரா திட்டமிட்டிருந்தார். விருந்தினர்கள் பற்றிய சில குறிப்பான விஷயங்களை அவர் என்னிடம் கூறினார். நான் தேவையானவற்றைக் குறிப்பெடுத்துக் கொண்டேன்.

சில நிமிடங்களிலேயே இந்திரா பேட்டிக்குத் தயாராகிவிட்டார். தொலைக்காட்சி பேட்டிகளின்போது எப்போதும் இந்திராவுடன் இருக்கக்கூடிய சாரதா பிரசாத், அக்பர் ரோடு இல்லத்திலிருந்து ஒரு செய்தியை அனுப்பினார்.

அதாவது, அங்கு வெடித்த தீபாவளி பட்டாசுக் காகிதங்களை இன்னும் சுத்தம் செய்யவில்லை, எனவே பேட்டியைத் தொடங்க மேலும் சில நிமிடங்கள் ஆகும் என்று தெரிவித்தார். அது இந்திராவுக்கு பிடிக்கவில்லை. காமிரா ஓடத் தொடங்கும்போது புல்வெளி சுத்தமாக இருக்கும்படி என்னை அதைக் கவனிக்கச் சொன்னார்.

9 மணிக்கு இந்திரா பேட்டிக்குத் தயாராகி, சதர்ஜங் வீட்டை அக்பர் ரோடு வீட்டுடன் இணைக்கும் சிறுகதவை நோக்கி நடக்கத் தொடங்கினார். வழக்கம்போல் அவருக்கு பின்னால் சில அடிகள் தள்ளி நான் நடந்தேன். அவர் சுறுசுறுப்பாக நடக்கக்கூடியவர். சிலசமயங்களில் அவரது வேகத்துக்கு ஈடுகொடுத்து நடப்பதே கஷ்டம். நாங்கள் நடந்து சென்றபோது, ஓர் உதவியாளர் ஒரு தட்டில் `கப் அண்ட் சாசருடன்’ சென்று கொண்டிருந்தார்.இந்திரா அவரை நிறுத்தி, எங்கே அவற்றைக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் என்று கேட்டார். நேர்முகத்தின்போது ஒரு டீ- கப் செட்டை இந்திராவுக்கு முன் வைத்திருக்க வேண்டும் என்று உஸ்டினோவ் கூறியதாக அவர் தெரிவித்தார். உடனடியாக அந்த டீ- செட்டை வேண்டாம் என்று நிராகரித்த இந்திரா, வேறு நல்லதாகக் கொண்டுவரும்படி கூறினார். பின்னர் அவர் தொடர்ந்து நடந்தார். அந்தக் கணம் பல யுகங்கள் போல எனக்குத் தோன்றுகிறது. வரலாறு அதன் அனைத்து சோகமான வடிவங்களிலும் என் கண் முன் விரிவதை நான் கண்டேன்.

அவர் சிறுகதவை எட்டியதுமே, பாதுகாவலர்களுக்கு கரம் குவித்து `நமஸ்தே’ தெரிவித்தார். அப்போது பியாந்த் சிங் தனது பிஸ்டலை உயர்த்தி இந்திராவைச் சுடுவதை நான் கண்டேன். அவர் சுருண்டு தரையில் விழுந்தார். இந்திரா விழுந்தபின்னும் சத்வந்த் சிங் தனது இயந்திரத் துப்பாக்கியால் அவரைச் சுட்டார். சத்வந்த் சிங் சுட்டபோது இந்திரா நின்றுகொண்டிருக்கக்கூட இல்லை. அவ்வளவு கொடூரமானது அது.

நான் என்னவென்றே புரியாது திகைத்து போனேன். நான் அப்போது பார்த்ததை இன்றும் மறக்க முயல்கிறேன். நான் ஒருநிலைக்கு வர முயல, பியாந்த் சிங் பஞ்சாபி மொழியில் கத்தினார், “நாங்க செய்ய வேண்டியதை நாங்க செஞ்சுட்டோம். இப்போ நீங்க செய்ய வேண்டியதை நீங்க செய்யலாம்!”-என்றார்.

இந்திராகாந்தியை நாடு இழந்துவிட்டாலும், அவர் இந்த நாட்டிற்காக செய்த தியாகங்கள் மறக்கமுடியாதவை. அவரால் இந்தியா பல துறைகளில் தலைநிமிர்ந்தது.

`பிளாஸ்டிக்’ – சில உண்மைகள்

நவம்பர் 8, 2009 vayal மறுமொழியவும்

வாகனங்கள், கம்யூட்டர்கள், செல்போன்கள் என அனைத்தும் பிளாஸ்டிக்மயமாகி விட்ட இன்றைய சூழ்நிலையில், சமீப காலமாக பிளாஸ்டிக்குக்கு எதிரான போராட்டங்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை அறவே நீக்குவது சாத்தியமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்பதற்கு எந்தவிதமான திட்டங்களைம் தீட்டாமல், வெறும் கோஷங்கள், ஆர்பாட்டங்கள், முகாம்கள் மட்டும் நடத்துவதில் பயன் ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது.

பிளாஸ்டிக்குக்கு இணையான மாற்று பொருட்கள் தகுந்த அளவில் கண்டுபிடிக்கப்படாததால், வரும் ஆண்டுகளில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு பன்மடங்கு அதிகரிக்கும் என சென்னையில் நடந்த பன்னாட்டு பிளாஸ்டிக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. வளர்ந்த நாடுகளில் ஒருவர் ஆண்டொன்றுக்கு சராசரியாக 25 கிலோ பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறார் எனவும், அதே சமயத்தில் இந்தியாவில் உள்ள ஒருவர் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 5.2 கிலோ மட்டுமே பயன்படுத்துவதாகவும் இந்திய பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

`எளிதில் மட்காமல் பலநுறு ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியது பிளாஸ்டிக்’ என்ற தவறான எண்ணம் மக்களிடையே பரவி விட்டது. இதை நன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, தீமையாக கருதக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுபுறச் சூழ்நிலைக்கு தீங்கு செய்வதில்லை என்பதை நன்கு கூர்ந்து கவனித்தால் தெரியும். பழுதடைந்த பிளாஸ்டிக் பொருட்களை ஆங்காங்கே வீசி எறிம்போது தான் பிரச்சினைகள் தோன்றுகின்றன. கலர் கலரான பிளாஸ்டிக் பொருட்களை தவறுதலாக விலங்குகள் உட்கொள்வதாலும், கழிவுநீர்க் கால்வாய் களில் அடைப்பை ஏற்படுத்துவதாலும் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. எனவே, உடைந்த பிளாஸ்டிக் பொருட்களை வீசி எறியாமல் , சேர்த்து வைத்து மறுசுழற்சி செய்வதன் முலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம். சிங்கப்பூரில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, மறுசுழற்சி முறையில் பொருட்களை தயாரிக்கின்றனர். இவ்வாறு தயாரிக்கபட்ட பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன என்பதும் நிதர்சனமான உண்மை.

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் ஸ்டார்ச் மற்றும் பாலி லாக்டிக் ஆசிட் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கபட்டு பயன்படுத்தபடுகின்றன. அங்கு வரிச்சலுகைகள் கொடுத்து இதுபோன்று இயற்கையான முறையில் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பதற்கு ஊக்கமளிக்கின்றனர். முயற்சி செய்தால் இந்தியாவிலும் இதுபோன்ற இயற்கை பிளாஸ்டிக்கைத் தயாரிக்க முடியும். அதே நேரத்தில் இது சிறிதளவே செயற்கை பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக அமையும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாகும். எனவே, பிளாஸ்டிக்கை எதிர்த்து குரல் கொடுப்பது ஒருபுறம் இருந்தாலும், அதற்கான மாற்றுபொருட்களை கண்டுபிடிபதிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

எதிரிகளின் எதிரி

நவம்பர் 8, 2009 vayal மறுமொழியவும்


யுத்தகளம் என்றவுடன் நினைவுக்கு வருவது போர்த்திறன். போர்த்திறனைப் பற்றி சொன்னவுடன் நமக்கு நெப்போலியனோ, அலெக்சாண்டரோ, தமிழ்மன்னர்களோ நினைவுக்கு வரலாம். ஆனால் வளர்ந்து வரும் விஞ்ஞானமோ போர்க்களத்தை நவீன ஆயுதங்களால் நிரப்பி வருகிறது.

அணுகுண்டுகள், ரசாயன குண்டுகள் என நீள்கிறது ஆயுத பட்டியல். ரோபோக்
களும் கூட களமிறக்கப்பட்டுவிட்டன. அந்த வரிசையில் எதிரிகளுக்கு எதிரியாய் புதிதாக வந்திருக்கும் ரோபோ பற்றிய தகவல் இது.

எதிரிகளின் நிலையை அப்பட்டமாக காட்டும் 2 ரோபோக்கள்தான் போர்க்களத்தின் புதிய வரவுகள். எதிரிகளை நெருங்கி தகவல் அறியும் பாம்பு ரோபோ, தவளை ரோபோ போன்றதே இவை. இரண்டுமே சாதாரண மரக்கட்டைகள் போன்ற தோற்றத்தில் இருக்கும். 500 கிராம் எடை கொண்டவை. ஒரு கருவி குழந்தைகள் கையில் வைத்து சுற்றிவிடும் காற்றாடி போல இருக்கும், மற்றொன்று `டம்பிள்ஸ்’ போல இருக்கும்.

இரண்டும் பறக்கும் தன்மை உடையது. ரிமோட் மூலம் இயக்கலாம். ரோபோவின் சுற்றுப்புறத்தில் உள்ள எதிரிகளை, நமது கையில் இருக்கும் திரையில் பார்க்கலாம். இதன் மூலம் எதிரிகள் கவனக்குறைவாய் இருக்கும்போது வீழ்த்தி நமது வெற்றிக்கு வலு சேர்க்க முடியும்.

இந்தக் கருவி இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பிரிஸ்டோல் பகுதியில் சோதித்து பார்க்கப்பட்டது.

பார்த்து ரசித்தது

நவம்பர் 6, 2009 vayal மறுமொழியவும்


என்னது, கட்சியில… உள்கட்சிப் பூசலா… எனக்கு… இப்போவெல்லாம் இந்த மாதிரி விஷயங்கள் பத்தி பேசினாலே காது சரியா கேக்கறதில்லை… வேற ஏதாவது விஷயம் இருந்தா சொல்லுங்க…

 


முல்லைப் பெரியாறு புது அணை ஆய்வு விஷயத்தில நான் மாட்டினது இருக்கட்டும்… அடுத்ததா அணை கட்டப் பணம் கேட்டு கேரளாக்காரங்க உங்க கிட்டேதான் வருவாங்க மாண்டேக் சிங் ஜி… அப்போ என்ன செய்யப் போறீங்கன்னு பாக்கத்தானே போறேன்…

 


அடுத்து என்ன செய்யப்போறீங்கன்னு கேட்டா இப்படி “கை” காண்பிக்கறீங்களே… பத்திரிகைக்காரங்க பொல்லாதவங்க… காங்கிரசில் சேரப்போவதாக ராஜ்நாத்சிங் சூசக தகவல்-னு செய்தி போட்டாலும் போட்டிடுவாங்க… ஜாக்கிரதை…

 


இதுலதான் சொர்க்கம் இருக்குதுன்னு எல்லாரும் சொல்றாங்க… நானும் ரொம்ப நேரமாத் தேடறேன்… கண்டுபிடிக்க முடியலியே…!

 


நாங்க ரெட்டி பிரதர்ஸா இல்ல வெட்டி பிரதர்ஸான்னு கேள்வி கேக்கறீங்களே…. மீடியாக்காரங்கன்னா என்ன வேணா கேள்வி கேக்கலாமா…? இதெல்லாம் டூ…..மச்….

 


ஏம்மா, சபா செகரெட்டரி இப்போ என்ன சொல்லிட்டாருன்னு இப்படி வானத்துக்கும் பூமிக்குமா குதிக்கறீங்க…?