கலப்படத்தால் உடல் நலத்தை கெடுக்கும் உணவுப்பொருட்கள்

‘பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் ’ என்பது ஒரு பொன்மொழி . ஆனால் இந்த பசியை போக்குவதற்காக மனிதர்கள் உண்ணும் உணவுப் பொருட்கள், இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் பல

நேரங்களில் உடல்நலத்திற்கும், சில நேரங்களில் உயிருக்கும் கூட உலை வைத்து விடுகிறது. இதற்கு காரணம் அசுர வேகத்தில் அரக்கனாய் மாறும் ரசாயனங்கள். பளிச்சென்று இருந்தால் அது தரமான உணவு என்ற எண்ணம், பாமரர்கள் மட்டுமன்றி, படித்தவர்களிடமும் பரவியிருப்பது விந்தையான வேதனை. கோடிகளில் புரள்வோரையும், தெருக்கோடிகளில் தவிப்போரையும் இணைக்கும் ஒரே புள்ளி பசி என்றால் அது மிகையல்ல. எனவே, ருசி பார்த்து அந்த பசியை போக்காமல், உணவின் தரம் பார்த்து  உட்கொண்டால் மட்டுமே, ஆரோக்கிய வாழ்வின் அடியொற்றி நடக்கும் நாளைய தலைமுறை. 

இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் விவசாயத்தில் இயற்கை உரமே பிரதானமாக இருந்தது. இதனால் உணவுப்பொருட்களில் இருந்த சத்து, நேரடியாக மனிதனுக்கு கிடைத்தது. இது மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு வழி வகுத்தது. நோய் நொடிகள் அவர்களை விட்டு காத தூரம் ஓடியது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் வந்த போது, மண்ணை மலடாக்கும் அரக்கனாய் வந்தது ரசாயன உரங்கள். இன்றைய சூழலில் ரசாயன உரம் கலக்காத பயிர்களே இல்லை. இதன் மூலம் விளைந்த உணவுப்பொருட்களை உண்ணும் மனித உயிர்களுக்கு விதம்,விதமான நோய்கள் ஆட்கொள்கிறது. 40 வயதிலேயே உடலில் வலிமை குறைந்துவிடுகிறது.

இது ஒரு புறமிருக்க, நாம் அருந்தும்  தண்ணீர் உள்பட அனைத்திலும் ரசாயன பொருட்களின் ஆக்கிரமிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. குறிப்பாக துரித வகை உணவுகளில் கலப்படமே பிரதானமாக உள்ளது என்றால் அது மிகையல்ல.   கலப்பட பொருட்களின் ஆதிக்கத்தை தவிர்க்க, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உணவு கலப்படம் என்பது வியாபார நோக்கத்திற்காக தரம் குறைந்த உணவுப்பொருட்களை, அதே உருவ அமைப்புள்ள உணவுப்பொருட்களுடன் கலப்பதாகும்.

அதேபோல் உணவுப்பொருட்களை தூய்மைப்படுத்துவதாக எண்ணி, அதிக வேதிப்பொருட்களை தயாரிப்பின்போது கலப்பதும், செயற்கை வண்ணங்களை கலப்பதும் உணவு கலப்படமாகும். இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களை கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதை உறுதி செய்ய உருவாக்கப்பட்டது தான் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006. இச்சட்டத்தின் படி, நுகர்வோருக்கு உணவு மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டமானது உணவு வணிகர்களுக்கு கற்பித்தல் முறையிலும் உள்ளது. அதன் அடிப்படையில் நுகர்வோர்கள் கலப்படத்தை வீட்டிலேயே கண்டறியலாம்.

இது குறித்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில்,     ‘‘அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், அரசு நியாயவிலை கடைகள், சேமிப்பு கிடங்குகள் என்று அனைத்தும் உணவு பொருட்களை தயாரிப்பதற்கான பதிவுச்சான்று, உரிமம் பெற்றிருக்க வேண்டும். பதிவுச்சான்று, உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும். நுகர்வோர் வாங்கும் பொருட்களில் தயாரிப்பு, காலாவதி தேதி மற்றும் முகவரி போன்றவை சரியாக உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். தரமற்ற உணவுப்பொருள் என்று சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பைகளில் சூடான, டீ, காபி, சாம்பார், ரசம் விற்கக்கூடாது. எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை (வடை, பஜ்ஜி, போண்டா, சமோசா மற்றும் பூரி) செய்தித்தாள்களில் வைத்து வழங்கக்கூடாது. கடைகளில் உணவுப்பொருட்களை திறந்த நிலையில் வைத்து விற்பனை செய்யக்கூடாது. ஒருமுறை உபயோகப்படுத்திய சமையல் எண்ணெயை திரும்ப, திரும்ப பயன்படுத்தக்கூடாது. சுத்தமான, சுகாதாரமான முறையில் உணவுப்பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். பொட்டலமிடும் உணவுப்பொருட்களில் வணிக பெயர், தயாரிப்பாளர் முழு முகவரி, பொட்டலமிட்ட நாள், தயாரிப்பு விளக்கங்கள், பொருளின் எடை மற்றும் அளவு தொகுதி எண், அதிகபட்ச சில்லரை விலை, பயன்படுத்துவதற்கான கால அவகாசம் ஆகியவை குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்றிருக்கவேண்டும். சுகாதாரமான முறையில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் குடிநீர் நிரப்புதல் வேண்டும். நிரப்புகின்ற கேன்கள் மற்றும் பாட்டில்களில் அந்தந்த நிறுவனத்திற்குரிய லேபிள்களையும், தயாரித்த தேதி, காலாவதியான தேதி ஆகியவைகளையும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் கையுறைகள், தலைகவசம் அணிய வேண்டும். மருத்துவ சான்றுகள் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்,’’ என்றார்.

தண்டனைகள் ஏராளம்

உணவுப்பொருட்களில் கலப்படம் உறுதி செய்யப்பட்டால் தண்டனைகள் உள்ளது. சட்டப்பிரிவு (59)(1)ன் படி 6 மாதம் சிறைத்தண்டனை, ₹1 லட்சம் அபராதமும், 59 (2)ன் படி ஒரு ஆண்டு சிறைத்தண்டனை, ₹1 லட்சம் அபராதம், 59 (3)ன் படி 6 ஆண்டு சிறைத்தண்டனை, ₹5 லட்சம் அபராதம், 59 (4)ன் படி ₹7 ஆண்டு சிறைதண்டனை, ₹10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. சட்டப்பிரிவு(51)ன்படி தரம் குறைவு குற்றத்திற்காக ₹5 லட்சம் அபராதமும், சட்டப்பிரிவு (53)ன் படி தவறாக சித்தரிப்பது, தப்பு குறியீடு உள்ளிட்ட குற்றத்திற்காகவும் அபராதம் விதிக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு ஆகஸ்ட் வரை உணவுப்பொருளில் கலப்படம் சம்பந்தமாக  261 வழக்கும், தரம் குறைவு, தப்பு குறியீடு உள்ளிட்ட காரணங்களுக்காக 409 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கின்றனர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

இயற்கை  உணவுகள்  பெயரில் போலிகள்

‘‘தற்போது மக்களிடம் இயற்ைக உணவு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தி சிலர், இயற்ைக உணவுகள் என்ற பெயரில் போலிகளை விற்பனைக்கு விடும் அவலமும் தொடர்கிறது. இயற்ைக உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் மத்திய அரசின் ‘ஜெய்விக்பாரத்’ திட்டத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து உரிய முத்திரையை பெற்றிருக்க வேண்டும். அந்த முத்திரை, அவர்களின் உணவு பொட்டலங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது இயற்கை உணவாகும். இந்த முத்திரையை போலியாக தயாரிக்க முடியாத வகையில், பல்வேறு நுட்பங்கள் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி விவசாயிகள் தயாரிக்கும் இயற்கை உணவுகளை, சம்மந்தப்பட்ட மக்களே நேரில் ஆய்வு செய்து வாங்க வேண்டும்,’’ என்கின்றனர் அதிகாரிகள். 

24மணி நேரத்தில் உரிய நடவடிக்கை

ஆண்டுக்கு ₹12 லட்சத்திற்கும் குறைவாக வியாபாரம் செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு அலுவலரால் வழங்கப்படும், பதிவுச்சான்றிதழுக்கு ₹100 மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதும். கலப்படம், காலாவதியான, தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை குறித்து 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். 24 மணிநேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கண்டு பிடிக்க முடியாமல் நம்பி ஏமாந்து போகிறோம்

பானிபூரி விற்கும் தள்ளுவண்டி கடைகள் சில சுகாதாரமற்று, சாக்கடைக்கு அருகிலேயே இருக்கின்றன. சுகாதார குறைபாடுள்ள பானிபூரியை சாப்பிடும் நமக்கு என்னாகும்? நொறுக்கு உணவுகளிலேயே அதிகம் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பது பானிபூரியில் தான். குறிப்பாக இவற்றை குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அவசியம் தவிர்க்க வேண்டும். உணவு பொருட்களில் டீத்தூளில் தான்  அதிகமாக கலப்படம் செய்யப்படுகிறது. அதிக கலர் வர மூன்று விதமான  ரசாயன பொருட்கள், டீத்தூளில்  கலக்கப்படுகிறது. ஜவ்வரிசி உற்பத்தியில் மக்காச்சோள மாவு  மற்றும் ரசாயனம் கலக்கப்படுகிறது. வெல்லம் உற்பத்தியில் சர்க்கரை அதிகளவில் சேர்க்கப்படுகிறது. கடைகளில் நம்பி வாங்கும் உணவுப்பொருட்களில், நாம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாதபடி பல வகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகின்றன. இது தெரியாமல் அதை காசு கொடுத்து வாங்கி உண்டு, நம் உடல்நலத்தை கெடுத்து கொள்கிறோம் என்பது சுகாதார ஆர்வலர்களின் குமுறல்.

கலப்படம் தெரிந்தும்  புகார் கொடுப்பதில்லை

சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் பிரபாகரன் கூறுகையில், ‘‘உணவுப்பொருட்களில் கலப்படம் என்று புகார் சென்றால் மட்டுமே, அதிகாரிகள் ஆய்வுக்கு செல்கின்றனர். ஆய்வு என்றால் திடீரென நடத்தப்பட வேண்டும். அப்போது தான் அந்த இடத்தில் என்னென்ன கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று கண்டறிய முடியும். உணவுப்பொருளில் கலப்படம் உள்ளது என்று தெரிந்தாலும், மக்கள் புகார் அளிக்க முன்வருவதில்லை. நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி கொள்கின்றனர். வாய் மொழியாக தான் புகார் கூறுகின்றனர். எழுத்து பூர்வமாக புகார் அளிக்க தயக்கம் காட்டுகின்றனர். கலப்படம் குறித்து புகார் அளித்தால், நிச்சயம் அதற்கான தீர்வு இருக்கிறது. சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு நீதிமன்றம் மூலம் நியாயம், இழப்பீடு தொகை கிடைக்கும். சம்பந்தப்பட்ட நிறுவனத்தையும் தண்டிக்க முடியும். உணவுப்பொருளில் கலப்படம் இருப்பது தெரிந்தால், புகார் கொடுக்க முன்வர வேண்டும்,’’ என்றார்.

15 ஆண்டுகளாக கலப்படம் இல்லை  வணிகர்கள் பெருமிதம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி கூறுகையில், ‘‘மளிகைப்பொருட்களில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை கலப்படம் இருந்தது உண்மை தான். மிளகில் பப்பாளி விதையும், கசகசாவில் கீரை விதை, ரவையும், லவங்கம்பட்டையில் சென்ட் அடித்த மரப்பட்டையும், மிளகாய், மஞ்சள் தூளில் மைதா மாவும், டீத்தூளில் மரப்பட்டை தூளும் கலப்படம் செய்யப்பட்டு வந்தது. இவைகள் எடைக்காகவே கலக்கப்பட்டது. ஆனால், தற்போது பெரும்பாலான மளிகைப்பொருட்களில் கலப்படம் குறைந்துள்ளது.

தற்போது அரிசியில் கூட கல், குருணை நீக்கப்பட்ட அரிசி என்று விற்கப்படுகிறது. சந்தைகளில் நடக்கும் ஒரு சில தினசரி கடைகள், நடமாடும் கடைகளில் மட்டும் கலப்படம் உள்ளது. தற்போது நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். மளிகைப்பொருட்களில் கலப்படம் இருந்தால், உடனே கடைக்கு வந்து கேள்வி கேட்கின்றனர். அதனால் கலப்படம் என்பது கடந்த 15 ஆண்டுகளில் இல்லை,’’ என்றார்.

இப்படியும் கண்டுபிடிக்கலாம்* பாலில் நீர் கலந்திருந்தால்….

பளபளப்பான சாய்தள பரப்பின் மீது, ஒரு சொட்டு பாலினை ஊற்ற வேண்டும். பாலாக இருந்தால் அப்படியே இருக்கும் அல்லது வெண்மைத்தடம் பதித்து மெதுவாக கீழிறங்கும். நீர் கலப்படம் செய்யப்பட்ட பால் எனில் வெண்மைத்தடம் பதிக்காமல் உடனே கீழிறங்கும்.

* பாலில் சலவைத்தூள் இருந்தால்….
5 அல்லது 10 மில்லி பால் மற்றும் அதே அளவுள்ள நீர் எடுத்து கொள்ளவும். அதனை கலந்து நன்றாக குலுக்கி கலக்க வேண்டும். பாலுடன் சலவைத்தூளின் தடிமமான படலம் உருவாகும். தூய பால் எனில் மெலிதான படலம் உருவாகும்.

* நெய், வெண்ணெயில் உருளைக்கிழங்கு பிசைந்தால்….

கண்ணாடி கிண்ணத்தில் அரை தேக்கரண்டி நெய், வெண்ணெய் எடுத்துக்கொள்ளவும், டிங்சர் அயோடினை 2 அல்லது 3 சொட்டுகள் சேர்க்க வேண்டும். நீல வண்ணம் தோன்றினால் பிசைந்த உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் வேறு ஸ்டார்ச் கலப்படம் உள்ளது என்று அர்த்தம்.

*  தேனில் சர்க்கரை  கரைசல்  இருந்தால்….

கண்ணாடி டம்ளரில் நீர் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு சொட்டு தேன் விட வேண்டும். தூய்மையான தேன் நீரில் கலக்காது. தேன் நீரில் கலந்தால் அதில் சர்க்கரை கலப்படம் உள்ளது என்று அர்த்தம்.

*  சர்க்கரை, வெல்லத்தில்    சாக்குபொடி கலந்தால்…

கண்ணாடி டம்ளரில் நீர் எடுத்து கொள்ள வேண்டும். 10 கிராம் மாதிரி பொருளை நீரில் கலக்க வேண்டும். சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றில் சாக்குப்பொடி கலப்படம் இருந்தால் கலப்பட பொருள் டம்ளரின் அடியில் படியும்.

* உணவு தானியங்களில் வண்ணம் …

கண்ணாடி டம்ளரில் நீர் எடுத்து கொள்ளவேண்டும். ேதக்கரண்டி உணவு தானியத்தை எடுத்து நீரில் கலக்க வேண்டும். தூய உணவு தானியம் வண்ணங்களை வெளியிடாது. கலப்படம் செய்யப்பட்ட உணவு தானியம் உடனே வண்ணங்களை வெளியிடும்.

* பெருங்காயத்தில் வேறு பிசின்கள் சேர்த்தால்…

துருப்பிடிக்காத கரண்டியில் சிறிதளவு பெருங்காயத்தை எடுத்து நெருப்பில் எரிக்கவேண்டும். தூய பெருங்காயம் கற்பூரம் எரிவது போல் பிரகாசமான ஒளியுடன் எரியும். கலப்பட பெருங்காயம் கற்பூரம்போல் பிரகாசமான சுடருடன் எரியாது.

* மிளகில் பப்பாளி விதைகள் கலந்தால்…

சிறிதளவு மிளகை எடுத்து கண்ணாடி டம்ளரில் நீரில் போட வேண்டும். தூய மிளகு டம்ளரின் அடியில் தேங்கும். கலப்பட மிளகு எனில் பப்பாளி விதைகள் நீரில் மிதக்கும்.

* பச்சைப்பட்டாணி செயற்கையானால்…

கண்ணாடி டம்ளரில் சிறிதளவு பச்சைப்பட்டாணி எடுத்து அதில் நீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அரைமணி நேரம் அப்படியே நிலையாக வைக்க வேண்டும். நீரின் நிறம் மாறினால் அது கலப்பட பட்டாணியாகும்.

* மிளகாய் பொடியில் மரத்தூள் இருந்தால்….


கண்ணாடி டம்ளர் நீரில் மிளகாய் பொடி தூவ வேண்டும். மரத்தூள் நீரின் மேற்பரப்பில் மிதக்கும். மிளகாய் பொடி நீரின்அடியில் தங்கும். மிளகாய் பொடியில் செயற்கை வண்ணம் கலக்கப்பட்டிருந்தால் வண்ண கோடுகளாக கீழிறங்கும். அதேபோல் மஞ்சள் பொடியில் கலப்படம் இருந்தால் இயற்கை மஞ்சள் பொடி கீழிறங்கும் போது வெளிர் மஞ்சள் நிறத்தை கொடுக்கும். கலப்பட மஞ்சள் பொடி அடர் மஞ்சள் நிறத்தை தரும்.

* காபித்தூளில் சிக்கரி தூள் கலந்திருந்தால்…

கண்ணாடி டம்ளரில் நீர் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு தேக்கரண்டி காப்பித்தூளை சேர்க்க வேண்டும். காப்பித்தூள் மிதக்கும். சிக்கரித்தூள் மூழ்கும். காலாவதியான தேயிலை என்பதை கண்டறிய, வடிகட்டும் தாள் எடுத்து அதில் சில தேநீர் இலைகளை பரப்பி வைக்க வேண்டும். குடிநீரில் வடிகட்டி தாளை கழுவவும். அதில் கறை இருந்தால் கலப்படம் என்று அர்த்தம். தூய தேநீர் இலைகளாக இருந்தால் வடிக்கட்டி தாளில் கறை இருக்காது. 

%d bloggers like this: