இதுதான் உங்கள் இன்டர்நெட்

இதுதான் உங்கள் இன்டர்நெட்

ஜஸ்ட்கன்சல்ட் என்ற அமைப்பு இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆய்வில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் நுகர்வோர்களாகக் கருதப்படுகின்றனர். அண்மையில் இந்தியா ஆன்லைன் 2008 என்ற தலைப்பில் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. சென்ற மார்ச் மாதம் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.


40 நகரங்களில் வாழ்க்கையில் பல நிலைகளில் வாழ்பவர்கள் 12,500 பேர் தெர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டனர். 160 கிராமங்களில் 4 ஆயிரம் பேர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். ஆன்லைன் சர்வே மூலம் 15 ஆயிரம் பேரின் பங்கீடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டன. அனைத்து ரக மக்கள் மற்றும் வாழ்க்கை அமைப்புகள் இந்த ஆய்வில் பிரதிபலிக்கும் வகையில் மக்கள் சர்வே அமைந்தது.  இந்தியாவில் தொடர்ந்து இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நகரங்களில் 3 கோடி; கிராமப் புறங்களில் 50 லட்சம் பேர். 2007 ஐக் காட்டிலும் இந்த ஆண்டில் 19% பேர் கூடுதலாக இன்டர்நெட் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இவர்களில் தினந்தோறும் பயன்படுத்துபவர்கள் 2 கோடியே 50 லட்சம் பேர்.

இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 19 முதல் 35 வரை வயதுடையவர்கள் 77% பேர். மொத்த பயனாளர்களில் 77% பேர் பெரிய சிறிய நகரங்களில் வாழ்பவர்கள்.

இவர்களில் 51% பேர் மாத ஊதியம் பெறும் பணியில் இருப்பவர்கள். இவர்களில் 63% பேர் ஏதாவது ஒரு வாகனம் வைத்திருக்கின்றனர். மொத்தப் பேரில் 28% பேர்தான் ஆங்கிலத்தில் தகவல்களைப் பெற விரும்புகின்றனர். மற்றவர்கள் தங்கள் தாய் மொழியிலேயே பெற ஆசைப்படுகின்றனர். இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 100 பேரைக் கணக்கெடுத்தால் அவர்களில் 90 பேர் கலர் டிவி வைத்துள்ளனர். மொபைல் போன் 87%. பேங்க் அக்கவுண்ட் 84%. கம்ப்யூட்டர் அல்லது லேப் டாப் வைத்துள்ளவர்கள் 72%. பிரிட்ஜ் 68%.

இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளவர்கள் 53%. இரு சக்கர வாகனம் வைத்துள்ளவர்கள் 46%. கிரெடிட் கார்ட் 31%. ஏர் கண்டிஷனர் 19%. கார் 17%. ஷேர்களில் பணம் போட்டுள்ளவர்கள் 11%.

இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் வீடுகளில் பயன்படுத்த விரும்புபவர்கள் 41%. பத்தில் ஒன்பது பேர் வீடு அல்லது அலுவலகத்தில் பயன்படுத்துகின்றனர். மற்ற இடங்களைக் காட்டிலும் வீடுகளில் பயன்படுத்துபவர்கள் கூடுதலாக 2 மணி நேரம் பயன்படுத்துகின்றனர்.  இன்டர்நெட் மக்களில் 81 சதவிகிதம் பேர் பல சமுதாய தளங்கள் மூலம் நண்பர்களைப் பெற்று தகவல்களைப் பரிமாறிக் கொண்டு சொந்த விஷயங்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.

இன்டர்நெட்டில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைப் பட்டியலிடுகையில் கீழ்க்காணும் தகவல்கள் கிடைக்கின்றன. இமெயில் – 91%; வேலை தேடுதல் – 72%; அரட்டை மற்றும் உடனடி செய்தி பரிமாறுதல் – 70%; செய்தி தெரிந்து கொள்ள – 63%; விளையாட்டு குறித்து அறிந்து கொள்ள 57%; மியூசிக் மற்றும் திரைப்படங்கள் இறக்க – 54%; கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க – 50%; திருமண வரன் தேட – 49%;  மொத்தத்தில் 15 வகையான செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஒருவர் பத்தில் ஏழு செயல்பாடுகள் தன் சொந்த நலன் சார்ந்ததாகவே உள்ளது. தங்கள் தாய்மொழி இணைய தளங்களைப் பார்ப்பவரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் 20% அதிகரித்து வருகிறது.

இணையத்தின் வழி பொருள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆன்லைன் ஷாப்பிங் தளங்களைப் பார்வையிடுபவர்களில் மூன்றில் ஒருவர் நிச்சயமாய் ஏதேனும் பொருள் வாங்குகிறார். பயணங்கள் சார்ந்து டிக்கட் மற்றும் பிற பொருட்களை வாங்குபவர்களே மிக அதிகம். பயணப் பொருட்களை அடுத்து மக்கள் வாங்கும் மற்ற பொருட்களாக புத்தகங்கள், சிடி மற்றும் டிவிடிக்கள் உள்ளன. அதிகம் தேடப்பட்ட பொருட்களாக கம்ப்யூட்டர் மற்றும் சார்ந்த பொருட்கள் உள்ளன. இந்தியாவில் ஏறத்தாழ 80 லட்சம் பேர் பொருட்களை வாங்குகின்றனர். இன்டர்நெட்டில் மேற்கொள்ளப்படும் சில செயல்பாடுகளும் அவற்றிற்கு அதிகம் பேர் பயன்படுத்தும் முதல் இடம் பிடித்துள்ள தளங்களையும் பார்க்கலாம்.