Category Archives: அர்த்தமுள்ள இந்துமதம்

கடிவாளம்

 

நமது உடம்பு எங்கே இருக்கிறது என்பது முக்கியமல்ல; மனம் எங்கே இருக்கிறது என்பது தான் முக்கியம்.
உடம்பு போகின்ற இடங்களுக்கெல்லாம் மனது தொடர்ந்து வருவதில்லை. உடம்பை மயிலாப்பூரிலே உட்கார வைத்து விட்டு, மனது சிங்கப்பூர் வரையிலே சென்று திரும்பிவிடும்.
மனது போகின்ற வேகம் மிகப் பெரியது என்பதாலே தான் `வாயு வேக மனோ வேகம்…’ என்றெல்லாம் நம்முடைய மூதாதையர்கள் வருணித்தார்கள்.
அதைத்தான் சிவவாக்கியர் மிக அழகாகச் சொன்னார், `மனத்திலே அழுக்கைச் சுமந்தவன் காட்டிலே போய் இருந்தால் கூட அந்த அழுக்கு அவனோடேயே இருக்கும்’ என்று.
மனத்திலே அழுக்கில்லாதவன், ஒரு தாசியின் மார்பின் அருகிலே அமர்ந்திருந்தால் கூட, அவன் அந்த மார்பகத்தைப் பார்ப்பதில்லை. அவன் மனது அந்த தாசியை நாடுவதில்லை. பிறப்பை அறுத்து விட்ட பிறவியாகவே அவன் அங்கே காட்சியளிக்கிறான்.
ஆகவே, நன்மைகள் தீமைகள் அனைத்துமே மனத்தின் கண் தான் இருக்கின்றன என்பதனை, நான் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.
அனைத்தும் துறந்தும் கூட, கூட வந்த நாயைத் துறக்க முடியாத பத்ரகிரியாரைப் போல, எல்லாவற்றையும் துறந்தாலும் கூட இந்த மனது செய்கின்ற வேலையைத் துறக்க முடியாமல் நாம் அவதிப்படுகிறோம்.
`காதி விளையாடி இருகை வீசி வந்தாலும்
தாதி மனம் நீர்குடத்தே தான்’
என்றார் பட்டினத்தார்.
என்னதான் ஆட்டம் போட்டுக் கொண்டு போனாலும், தாதி நீர்க் குடத்திலே தான் மனத்தை வைத்திருப்பாள். தாதி என்றால்
வேலைக்காரி.தண்ணீர் தூக்கி வருகின்ற வேலைக்காரி, என்னதான் வேடிக்கைப் பேச்சுப் பேசட்டும், விளையாடட்டும், அவள் இடுப்பிலே இருக்கிற குடத்தின் மீதும், தண்ணீரின் மீதும்தான் மனது லயித்திருக்கும்.
ஞானிகளுடைய உள்ளமும் அப்படியே தான். அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதிலே லயித்து விடுவார்கள்.
ஆனால், சராசரி மனிதன் அவஸ்தைப்படுவதெல்லாம் இந்த மனத்தின் போக்கினாலே தான்.
கல்யாணத்தில் ஒரு கருப்புப் பெண் கிடைத்தால், மனது சிவப்புப் பெண்ணுக்காக ஏங்குகிறது; சிவப்புப் பெண் கிடைத்து விட்டால், கருப்புப் பெண்ணைக் காணும் போதெல்லாம் ஏங்குகிறது.
ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருப்பவனுக்கு வீட்டுச் சாப்பாடு பிரமாதமாக தோன்றுகிறது. வீட்டிலேயே சாப்பிட்டுக் கொண்டிருப்பவனுக்கு ஓட்டல் பலகாரம் மிக அற்புதமாகத் தோன்றுகிறது.
மாறுபட்ட உணர்வுகளே மனத்தின் லயங்கள்.
மனிதன் தன்னை அறியும்படி வைப்பதும் அந்த மனதுதான்; தன்னை அறிய விடாமல் தடுப்பதும் அந்த மனதுதான்.
நான் எல்லாவற்றையும் விட உயர்ந்தவன் என்ற ஆணவத்தை உண்டாக்குவதும் அந்த மனதுதான்; நான் எல்லாரையும் விடத் தாழ்ந்தவன் என்ற அறிவை உணர்த்துவதும் அந்த மனதுதான்.
`நாம் என்னதான் உயர்ந்தவர்களாக இருந்தாலும், பணிந்து போக வேண்டும்’, என்ற பணிவை உண்டாக்குவதும் அந்த மனதுதான்.
ஆகவே, தன்னை அறிய வேண்டிய மனிதன், முதன் முதலிலே வெல்ல வேண்டிய பெரிய எதிரி மனது.
உடம்பிலே ரத்தக் கொதிப்பு ஏறுவதற்கு உடம்பு மட்டும் காரணமல்ல; மனத்தின் டென்ஷன் தான் முக்கியமான காரணம் என்று மருத்துவ நிபுணர்களும், மனோதத்துவ நிபுணர்களும் கூறுகிறார்கள்.
ஒரு மனிதனைப் பார்த்து அனைவரும், `அடடா! எவ்வளவு அழகாக நீ இருக்கிறாய்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கட்டும். அவன் மனது அதைக் கேட்டுக்கேட்டு, தான் அழகாக இருப்பதாகவே நினைத்து, பூரித்துப் பூரித்து அவனுக்கு இல்லாத ஒரு அழகு முகத்திலும், மனத்திலும் வந்து விடுகிறது.
புவனத்திலுள்ள நிபுணர்களில் விஞ்ஞான நிபுணர்களைக் கூடப் பெரிதாக நினைப்பதில்லை; ஆனால், மனோதத்துவ நிபுணர்களையே உலகம் பெரிதும் மதிக்கிறது.
காரணம், மனத்தை நன்றாக அறிந்து கொண்டவன்தான், உலகை வெல்ல முடியும்; எதையும் வெல்ல முடியும் என்று உலகம் கருதுகிறது; ஒவ்வொரு மனிதனுடைய உள்ளமும் கருதுகிறது.
திருமூலர் திருமந்திரத்திலே சொன்னார்:
`தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமற் தானே கெடுகின்றான்.
தன்னையே அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே, அர்ச்சிக்கத் தானிருந் தானே!’
`தானே தனக்குப் பகைவனும், நண்பனும்
தானே தனக்கு மறுமையும், இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே!’
தன்னை அறிந்திருந்தால் அவனுக்குக் கேடில்லை.
மனிதன் எதனாலே கெடுகிறான்? தன்னை அறியாமலே கெடுகிறான்.
தன்னை அறியக்கூடிய அறிவு மட்டும் அவனுக்கு வந்து விடுமானால், எல்லோரும் தன்னை அர்ச்சிக்கும்படியும், தானே தனக்குப் பூஜை செய்யும்படியும் வளர்ந்து விடுவான்.
உனக்குப் பகைவன் யார்? நீயே!
உனக்கு மரணம் எது? நீயே!
உண்மை எது? நீயே!
நீ விதைத்த வினைப்பயனை அறுக்க வேண்டியவன் யார்? நீயே!
உனக்குத் தலைவன் யார்? நீயே!
உனக்குத் தொண்டன் யார்? நீயே!
எல்லாம் நீயே!
எல்லாம் நானே என்பதற்கு மூலம் எது? மனது!
`மனத்துக்கண் மாசிலன்ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற’
என்றான் வள்ளுவன்

உடம்பு களங்கப்பட்டிருக்கலாம்; ஆனால், மனது களங்கப்படாதிருக்குமானால், அந்த உணர்வு கூடப் பரிசுத்தமாக ஆகிவிடுகிறது.
முதலில் யார் மீதாவது நீ குற்றம் சாட்ட விரும்பினால், உன் மீதே குற்றம் சாட்டிப் பழகு.
ஒரு கண்ணாடியின் முன்னால் நின்று கொள். அதில் உன்னுடைய பிரதிபிம்பம் தெரியும். அதைப் பார்த்துக் கையைக் காட்டி, `நீ குற்றவாளி, நீ குற்றவாளி, நீ குற்றவாளி’ என்று மூன்று முறை சொல்.
நீ சொல்வது கண்ணாடியைப் பார்த்து; கண்ணாடி சொல்வது, உன்னைப் பார்த்து.
அதாவது, நீ உன் மனதுக்குச் சொல்கிறாய்; உன் மனது உனக்குச் சொல்கிறது.
மனது உனக்குச் சொல்கிறது என்னும் போது மனதுக்கு அப்பாற்பட்டது எது? உன் உடம்பு; உன் கண்; உன் உயிர்; அனைத்துக்குமே அந்த மனது சொல்கிறது, `நீ தான் குற்றவாளி’ என்று.
`நான் குற்றவாளி, நான் தவறானவன், நான் சிறியவன், நான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், நான் மரியாதையாக இருக்க வேண்டும்’ என்றெல்லாம் உணர, தன்னை உணர்ந்து கொள்கின்ற தன்மை என்பது ஒரு லயமாக, ஒரு ராகமாக, ஒரு சுருதியாக, ஒரு பாவமாக நம் மனதுக்குள்ளேயே எழுந்து விடுகின்றது.
எப்போது மனிதன், தன்னை உணர்ந்து கொண்டு விடுகிறானோ, அப்போது மனது பாடமாகி விடுகிறது.
பச்சை இலை தான் புகையிலை. அது பாடம் செய்து வைத்தால் எவ்வளவு நாட்கள் இருக்கின்றது?
ஒரு வெற்றிலையை எடுங்கள்; அதை ஒரு புத்தகத்துக்குள் வையுங்கள்; பல காலம் கழித்துப் பாருங்கள்; அந்த வெற்றிலையின் நிறம் மாறி, அது காய்ந்து போயிருந்தாலும் கூட அப்படியே, அதன் தன்மை கெடாமல் இருக்கும்.
இதுதான் மனத்தைப் பாடம் பண்ணுகிற முறையாகும்.
மனது பாடமாகி விட்டால், யார் இறந்தாலும் கூட அழுகை வராது; எது நிகழ்ந்தாலும் கூட அதிலே போய் மனது ஒட்டிக் கொள்ளாது.
காஞ்சிப் பெரியவர்களோ, மற்ற ஞானிகளோ எந்த மரணத்திற்காவது துக்கம் கொண்டாடினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யாருடைய மரணத்திற்காவது அவர்களுடைய கண்களிலே இருந்து கண்ணீர் வந்திருக்கிறது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
மரணம் ஏன் அவர்களை அழச் செய்யவில்லை? மனது மரத்துப் போய் விட்டது; மனம் பாடமாகி விட்டது.
மனத்தைப் பாடம் செய்து கொண்டு விட்டால், தன்னை உணருகின்ற தன்மை, மிகச் சுலபமாக வந்து விடும்.
ஆயிரம் பேர் கூடி, நம் மீது குற்றம் சாட்டினால் கூட, நமக்குச் சிரிப்பு வரும்.
பத்தாயிரம் பேர் கூடி நமக்குப் புகழ் மாலை சூட்டினாலும், நமக்கு உடம்பிலே புல்லரிப்பு ஏற்படாது.
அதனால்தான், மனத்தைப் பாடம் செய்து கொள்ள வேண்டும் என்றனர் ஞானிகள். கீழே உள்ள பாடல்களைப் பாருங்கள்:
`மனத்தகத் தழுக்கறாத மவுனஞான யோகிகள்
வனத்தகத் திருக்கினும் மனத்தகத் தழுக்கறார்
மனத்தகத் தழுக்கறுத்த மவுனஞான யோகிகள்
முலைத்தடத் திருக்கினும் பிறப்பறுத் திருப்பரே!’
– சிவவாக்கியர்
`அலையுமனத்தை யகத்தடக்கு மவனேசரியை கடந்தோனா
மலையுமனத்தை யகத்தடக்கு மவனேகிரியை முடிந்தோனா
மலையு மனத்தை யகத்தடக்கு மவனே யோக தற்பரனா
மலையு மனத்தை யகத்தடக்கு மவனே ஞானி யதிசூரன்’!
– நிட்டானுபூதி
`ஓங்கிய பரசீ வைக்கிய முணர்ந்திடு முணர் வாலன்றிச்
சாங்கிய மகத்தி னாலுஞ் சார்ந்திடு மியோகத் தாலும்
வீங்கிய கன்மத் தாலும் வேறுபா சனையி னாலு
மோங்கிய முத்திப் பேற்றை யொன்றுவ தென்றுமில்லை!’
– விவேக சூடாமணி
மனத்திலே அழுக்கு அற்றுப் போகாதவன், மனது பாடமாகாதவன், எதற்கும் வளைந்து கொடுக்கிறவன், எதிலும் ஆசை வைக்கிறவன், காட்டுக்கு ஓடினாலும் கூட, அவனுடைய ஆசை சுற்றிக் கொண்டே இருக்கும்.
அந்தக் காட்டிலே இருக்கின்ற மரங்களையும், சுற்றிலும் இருக்கின்ற நிலங்களையும் பார்த்தால், இதில் கொஞ்சம் நமக்கு இருக்கக் கூடாதா என்று தோன்றும்.
எவளாவது ஒரு பெண் வழியிலே போனால் கூட, `இவளை வைத்து நாம் குடும்பம் நடத்தக் கூடாதா?’ என்று தோன்றும்.
ஓடியது காட்டுக்கு; பாடியது துறவறப் பாட்டு; ஆனால், தேடியதோ பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை.
காட்டுக்குப் போனாலும் கூட மனது அப்படி ஆகி விட்டால், அந்த லயத்துக்கு ஆட்பட்டு விட்டால், அது இந்த உடம்பையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போய் விடுகிறது.
ஆனால், `மனது பக்குவப்பட்டு விட்டால், அவன் காட்டுக்குப் போக வேண்டியதில்லை’ என்பது தான் சிவவாக்கியர் வாக்கு.
அவன் அங்கே இருக்கட்டும், பங்களாவிலே இருந்தாலும் அதைக் காடாக மாற்றிக் கொள்ள முடியும்; காட்டிலே இருந்தாலும் அதைப் பங்களாவாக மாற்றிக் கொள்ள முடியும்.
ஓடுகின்ற வண்டிக்குள் இருந்து கொண்டே, ஓடாமல் இருப்பவனே உண்மை சந்நியாசி; உண்மையில் மனத்தை அடக்கியவன்.
சாப்பாட்டைக் காணும் போது பசி எடுக்காதவன், மனத்தை அடக்கியவன்.
பெண்ணைக் காணும்போது இச்சை கொள்ளாதவன் மனத்தை அடக்கியவன்.
பணத்தைக் காணும் போது, இது நமக்கு இருக்கிறதா என்று எண்ணாதவன், மனத்தை அடக்கியவன்.
அடுத்தவனுடைய வீட்டைப் பார்த்து, `ஐயோ! இவ்வளவு பெரிய வீடா!’ என்று எண்ணாதவன், மனத்தை அடக்கியவன்.
எந்த ஞானியைப் பார்த்தாலும், `மனத்தை அடக்கு, மனத்தை அடக்கு’ என்று ஏன் சொல்லுகிறார்கள்?
சகல துன்பங்களுக்கும் அதுதான் காரணம்.
நான் ஏற்கெனவே அர்த்தமுள்ள இந்துமதத்தின் இதர பகுதிகளில் விவரித்துள்ளபடி, `இந்த மனத்தின் லயத்தினாலே தான்’ மனிதன்
கெடுகிறான்.அதனால்தான், `மனஸ்’ என்ற மூலத்தைக் கொண்டு `மனுஷ்யன்’ என்ற வடமொழி வார்த்தை உருவாயிற்று.
கலைவாணர் ஒரு கதை சொல்லுவார். அதை நானும் பல தடவை மேடைகளில் சொல்லி இருக்கிறேன்.
நோயுற்ற ஒருவன், ஒரு வைத்தியரிடம் போனான். `ஐயா! எனக்கு இன்ன நோய், அதற்கு ஏதாவது வைத்தியம் செய்யுங்கள்’ என்று
கேட்டான்.அந்த சித்த மருத்துவன் ஒரு லேகியத்தை எடுத்துக் கொடுத்தான்.
`நல்லது ஐயா! இந்த லேகியத்தை சாப்பிடும் போது ஏதாவது பத்தியம் உண்டா?’ என்று கேட்டான் அந்த நோயாளி.
`பத்தியம் வேறொன்றுமில்லை. லேகியத்தைச் சாப்பிடும் போது, குரங்கை நினைத்துக் கொள்ளக் கூடாது; அவ்வளவு தான்!’ என்று மருத்துவன் சொன்னான்.
நடந்தது அவ்வளவுதான். பிறகு, அவன் எப்போது லேகியத்தை எடுத்தாலும், எதிரே குரங்கு வந்து நிற்பது போல் தோன்றும்; கடைசி வரையில் அவன் சாப்பிட முடியவில்லை.
ஏன்? `குரங்கை நினைத்துக் கொள்ளக் கூடாது’ என்று வைத்தியன் சொன்னது அவன் மனத்தில் பதிந்து விட்ட காரணத்தால், லேகியத்தைத் தொட்டாலே அவனுக்குக் குரங்கு ஞாபகம் வரத் தொடங்கிற்று.
லேகியத்திற்கும், குரங்கிற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? அவன் அதைச் சொல்லாமல் இருந்திருந்தால், இவன் அதை நினைக்கப் போகிறானா? கிடையாது.
அவன் சொல்லிவிட்ட காரணத்தால், மனது அதைச் சுற்றியே வட்டமிட்டது. லேகியத்தைத் தொடும் போதெல்லாம் `குரங்கு, குரங்கு’ என்கிற எண்ணமே வந்தது.
அதன் விளைவாகக் கடைசி வரை அவனால் அந்த லேகியத்தைச் சாப்பிட முடியவில்லை.
சில பேரைப் பார்க்கிறோம். தவறு செய்து விடுகிறார்கள். `ஏண்டா நீ இந்தத் தவறைச் செய்தாய்?’ என்று கோபத்தோடு கேட்டால், `ஐயோ, நான் என்ன செய்வேன்? என் மனது கேட்கவில்லையே! நான் அங்கே போனேன்’ என்கிறான்.
மனது எதற்குக் கேட்கும்? யாரிடம் கேட்கும்? நீ சொன்னால் மனது கேட்க வேண்டும்! அப்படிக் கேட்டால் தான் உனக்குள் அடங்கியது
மனது.மனதுக்குள் அடங்கியவனல்ல மனுஷ்யன்! மனுஷ்யனுக்குள் அடங்கியதுதான் மனது. இதுதான் வடமொழியினுடைய சாரம்.
பெரிய ஞானிகள் எல்லாம் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.
அவர்கள் ஏன் நீண்ட காலம் வாழ்ந்தார்கள்? மனத்திலே டென்ஷன் இல்லை; நோயில்லை; நோய்க்கு அவர்கள் மருத்துவம் பார்த்துக் கொள்வதுமில்லை. தனக்கு நோய் இருப்பதாக அவர்கள் உணர்வதும் இல்லை.
இந்த மனத்தை அடக்குவதற்கு வெறும் பக்தி லயம் மட்டும் போதுமா என்றால், போதாது. இது சாதாரணமாக வரக்கூடிய ஒன்றல்ல. எல்லோருக்கும் வந்து விடாது. எல்லோருக்கும் இது வந்து விடுமானால் ஊரிலே போட்டி இருக்காது; உலகத்தில் போர் இருக்காது.
சில பேருக்கு மட்டுமே இது வருகின்ற காரணத்தால்தான், உலகத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது; அவர்களை ஞானிகள் என்கிறோம். மேதைகள் என்கிறோம்.
நாமெல்லாம் மனதுக்குக் கட்டுப்பட்டவர்கள்.

`என் மனசாட்சி அப்படிச் சொல்கிறது; என் மனது இப்படிச் சொல்கிறது’ என்று நாம் அடிக்கடி பேசுவோம்.
மனது சொன்னதை எது கேட்கிறது. மூளையா, கண்ணா, காதா?
அந்த மனத்தாலே ஆட்டி வைக்கப்படும் இந்த உடம்பு கேட்கிறது; அந்த உடம்பு அதன்படி செயல்படுகிறது.
ஏன், அந்த மனத்தை உன்னுடைய இஷ்டத்துக்கு, உன் மூளையினுடைய இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கக் கூடாது, `நான் சொல்கிறபடி கேள்’ என்று?
முந்திய அத்தியாயங்களில் சொன்னது போல மனத்தை அடக்கி,
`மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்
ஒன்றைய பற்றி யூசலாடுவாய்’
என்றானே பாரதி, அப்படி ஊசலாடுகின்ற மனதை உள்ளுக்குள்ளேயே அடக்கி வைத்து, பக்குவப்படுத்தி, பாடம் பண்ணி வாழக் கற்றுக் கொண்டு விட்டால், உறவு, பந்தங்கள், இரவு, பகல், இறப்பு, பிறப்பு எதிலேயும் பற்றும், பாசமும் இன்பமும், கண்ணீரும், புன்னகையும் மாறி மாறி வர வேண்டிய அவசியமே இருக்காது.
கோடை வரலாம்; வசந்தம் வரலாம்; பனிக்காலங்கள் வரலாம்; பருவங்கள் மாறுமே தவிர, உலகத்தினுடைய உருவம் மாறினாலும் கூட, உன்னுடைய நிலைமை மாறாது, மனதை மட்டும் உன்னால் அடக்க முடியுமானால்.

ஈஸ்வர லயம்

 

நர்மதையின் பிரவாகத்தை கமண்டலத்திலேயே அடக்கினாராம் ஆதிசங்கரர். கடலையே குடித்தானாம் குறுமுனிவன் அகத்தியன்.
எது ஆகும், யாராலே ஆகும் என்றெல்லாம் நாம் பயந்து கொண்டிருக்கத் தேவையில்லை. `நம்மாலே ஆகும்’ என்ற நம்பிக்கைதான் அதிலே முக்கியமாகும்.
எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டுச் செய்; அதிலே வில்லங்கம் வராது. அப்படி வந்தாலும் அது விரைவிலேயே தீர்ந்து விடும்.
ஒரு காரியம் வெற்றியடைந்து விட்டால், `நான் அப்படிச் செய்தேன்; இப்படிச் செய்தேன்; அதனாலே வெற்றி வந்தது’ என்று குதிக்காதே. `ஏதோ ஆண்டவன் அருளால் இந்த வெற்றி வந்தது’ என்று அவனையும் பங்காளியாகச் சேர்த்துக்கொள்.
கஷ்டம் வந்துவிட்டது என்றால், `நான் தான் தவறு செய்து விட்டேன்’ என்று கூட நீ வருந்தத் தேவையில்லை; `ஏதோ ஆண்டவன் கிருபை, இந்தக் கஷ்டம் இத்தோடு போயிற்று’ என்று அமைதியடை.
லாப நஷ்டங்களோ, நன்மை தீமைகளோ உன்னால் தான் விளைகின்றன என்றாலும், அதற்குப் பின்னணியில் இருப்பது ஆண்டவனுடைய இயக்கம்.

பலரிடம் திறமை இருக்கிறது; ஆனால், சிலருக்குத்தான் சந்தர்ப்பம் வாய்க்கிறது. அந்தச் சிலரிலேயும் மிகச் சிலர் தான் மிக வேகமாக முன்னேறுகிறார்கள்; உலகப் புகழ் பெறுகிறார்கள்.
ஏன்? ஆண்டவனுடைய இயக்கத்தில் அவனுடைய ஜாடை யார் மீது எப்பொழுது விழும் என்பதைச் சொல்ல முடியாது.
இறைவனை நம்புகிறவன், இறைவனுடைய கருணையை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டுமே தவிர, இறைவன் எப்போது வருவான் என்று ஆவலோடு இருக்க வேண்டுமே தவிர, இறைவனை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை.
பக்கம் பக்கமாக இரண்டு நிலங்கள். ஒன்று பச்சைப் பசேல் என்றிருக்கிறது; ஒன்று வறண்டு போய்க் காய்ந்துக் கிடக்கிறது.
ஏன்?
அருகருகே இரண்டு கிணறுகள். ஒன்றிலே தண்ணீர் சுரக்கிறது; ஒன்று வறண்டு போய்க் கிடக்கிறது.
அது ஏன்?
அழகழகாக இரண்டு பெண்கள். ஒருத்திக்கு வருஷம் ஒரு பிள்ளை பிறக்கிறது; ஒருத்தி மலடாகவே இருக்கிறாள்.
அது ஏன்?
நெருக்கமாக இரண்டு மரங்கள். ஒன்று பூத்துக் காய்த்துப் பழமாய் பழுத்துத் தள்ளுகிறது; இன்னொன்று வெறும் இலையாய் உதிர்த்துத் தள்ளுகிறது.
அது ஏன்?
தான் பதவியில் இருக்கும் போது தன் கட்சியை விட்டு ஒருவரை விலக்கினார் ஒருவர். இப்போது அவரது பதவி போய் விட்டது. யார் விலக்கப்பட்டாரோ அவர் வந்திருக்கிறார்.
இது ஏன்?
விதி என்று சொல்லுங்கள்; வினை என்று சொல்லுங்கள்! எதுவாயினும் இறைவனின் இயக்கம் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள்.
ஒரு தலைமுறை புகழ்பெற்று ஓயும்போது, அடுத்த தலைமுறை அந்தப் புகழையும் சேர்த்துக் கெடுப்பது போல பிறந்து தொலைக்கிறதே,
இது ஏன்?
டெல்லியில் இருந்து சென்னை வரை பதவியில் உயர்ந்தோர் ஒவ்வொருவரையும் பார்த்தால், அவர்கள் காலத்தில் அவர்கள் பெரும் புகழ்பெற்று விளங்குகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள், அவர்களுடைய பெயரைக் கெடுப்பதற்கென்றே பிறந்திருக்கின்றன.
ஏன் இந்தப் பிறப்பு? ஏன் இந்த நிலை? ஏன் இந்த முடிவு?
உகாண்டாவிலிருந்து அனாதையாகத் துரத்தப்பட்டு, தான்சானியாவில் அடைக்கலம் புகுந்த ஒருவர், நீண்ட நாட்களுக்குப் பிறகு, மீண்டும் உகாண்டாவினுடைய தலைவராக ஆகியிருக்கிறார். இவ்வளவு காலத்திற்குப் பிறகு எது அவரோடு ஒத்துழைத்தது?
கராச்சியில் சிறை வைக்கப்பட்டிருந்தபோது, முஜிபுர் ரஹ்மானுக்கு அந்தச் சிறையிலேயே ஒரு சவக்குழி தோண்டப்பட்டிருந்தது. ஆனால், அதிலிருந்து மீண்டும், பங்களாதேஷைக் கண்டு அவர் பதவிக்கு வந்த பிற்பாடு, அவருடைய சவக்குழி வெகு விரைவிலேயே பங்களாதேஷிலேயே அமைந்தது.
அங்கிருந்து தப்பியவர், இங்கே மாண்டது எப்படி? இயக்கியது எது? நடந்தது என்ன?
பூட்டோ பதவியில் இருந்தபோது யாரைத் தளபதியாக நியமித்தாரோ, அவரே பூட்டோவைக் கைது செய்து தூக்கிலே போட்டார்.
அங்கே விளையாடியது எது?
`இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கியே தீருவேன்’ என்று சபதமிட்ட காந்தியடிகள், சுதந்திரம் வாங்கிய மறு ஆண்டிலேதான் கொல்லப்பட்டார்.
அதுவரையில் அவரைக் காப்பாற்றியது எது? எந்த பக்தி? எது அவருக்குத் துணை நின்றது?
இந்தியா, பிரிட்டனுக்கு அடிமையாக இருந்தது. இன்றோ, பிரிட்டனை விட வலிமை உள்ளதாக இந்தியா விளங்குவதாக உலகம் கருதுகிறது.
எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது? இரண்டு தேசங்களுக்கிடையே ஏற்பட்ட நிலை என்ன? எந்த இயக்கத்தின் மூலம் அது நடந்தது?
எங்கோ ஒரு சக்தி இருக்கிறது. அதற்கு வடிவம் இல்லை என்கிறீர்களா? மெத்தச் சரி; `முருகன்தான்’ அது என்கிறீர்களா? அதுவும் சரி; `அல்லா தான் அது’ என்கிறீர்களா? அதுவும் சரி; `கிருஷ்ணன் தான்’ என்கிறீர்களா? அதுவும் சரி, `ஏசு தான்’ என்கிறீர்களா? அதுவும் சரி.
எதுவானால் என்ன? இறைவனுடைய இயக்கம் என்று ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதனை உணராதவன், அடிமடையனாவான்.

சிறுகூடற்பட்டி சாத்தப்பச்செட்டியாரும், பிள்ளையார்பட்டி விசாலாட்சி ஆட்சியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு எட்டாவதாக ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என்றும், ஆரம்பத்தில் அது முட்டாள் என்ற பெயரை எடுக்க வேண்டும் என்றும், பிறகு அது கவிஞனாக மாற வேண்டும் என்றும், மாறி அது சென்னையில் வந்து வாழ வேண்டும் என்றும், சென்னையில் இருந்து எல்லாத் தலைவர்களோடும் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், புதியதொரு உலகத்தைக் காண்பதிலே அந்தக் குழந்தைக்கு ஆசை வரவேண்டும் என்றும் எது விதித்தது? எது நடத்திற்று? எந்த இயக்கத்தில் அது நடந்தது?
இந்த இயக்கத்தைத்தான், நாத்திகர்கள் இயற்கை என்கிறார்கள்.
அப்படியே வைத்துக் கொள்ளட்டும்; இறைவனுக்கு அப்படியும் ஒரு பெயர் உண்டு.
`சுயம்பு’- இயற்கையாகத் தோன்றியவன் தானே இறைவன்!
என்னுடைய தாய் என்னைப் பெற்றாள்; அவளுடைய தாய் அவளைப் பெற்றாள்; அவளுடைய தாய் தந்தையர் அவளைப் பெற்றார்கள் என்று போய்க்கொண்டே இருந்தால் முதல் மூலம் ஒன்று வேண்டும். அந்த மூலத்திற்கும் ஒரு மூலம் வேண்டுமல்லவா? அதுதான், `ஆதிமூலம்’ என்று நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்.
கடவுள், விதி இவற்றை நம்புவதிலே ஒரு சுகம் இருக்கிறது.
கஷ்டங்களை அது தீர்த்து வைக்கிறதோ இல்லையோ, தீர்ந்து விட்டது போன்ற ஒரு நிம்மதி ஏற்படுகிறது.
`இது நம்மாலே ஆனதல்ல’ என்ற முடிவு தானாகவே தோன்றுகிறது.
`ஆனது ஆகட்டும்’ என்று நான் முன்பே சொன்னது போல, ஒரு அமைதி தோன்றுகிறது.
அமைதியை வரவழைப்பதற்காகவாவது, ஆண்டவன் பேரில் நம்பிக்கை வேண்டும்.
`இறை நம்பிக்கை, இறை நம்பிக்கை’ என்று நான் அடிக்கடி வலியுறுத்துகிறேன், அப்படி என்றால் என்ன?
தினமும் கோவிலுக்குப் போவதா? குளிப்பதா? விபூதி பூசுவதா? குங்குமம் வைப்பதா? இல்லை; ஈஸ்வரனோடு ஐக்கியமாகி விடுவது; சிவமும் தாமும் ஒன்றே என்று அறிவது! அந்த லயத்தில் ஈடுபட்டு விடுவது.
ஆண்டவனை விட்டுத் தான் பிரிந்ததில்லை; ஆண்டவனை விட்டுத் தன்னைப் பிரிக்க முடியாது; ஆண்டவன் என்கிற வடிவத்தின் மற்றொரு பிம்பமே `தான்’ என்பதை உணர்வதே இறைவழிபாடாகும்.
மீண்டும் பெரியவரை அழைக்கிறேன்:
ஞானிக்கு ஆத்ம விஸ்வரூபத்தைத் தவிர வேறெதுவுமே தெரிவதில்லை. ஒரே பரமாத்மா தான் இத்தனையாகவும் தெரிகிறது என்று கண்டு கொண்டவன் அவன். வெளியிலே தெரிகிற தோற்றத்தை மாயை என்று தள்ளிவிட்டு, எல்லாவற்றுக்கும் உள்ளேயிருக்கிற பரமாத்மா ஸ்வரூபத்தை மட்டுமே அனுபவிக்கிறவன் அவன். வெளிப்பார்வைக்குத் தெரிகிற உலகம் மாயை என்று ஆகிவிட்டதால், இந்த மாயா லோகத்தில் ஞானிக்குக் காரியம் எதுவுமே இல்லை. பார்க்கிறவன், பார்க்கப்படுகிற வஸ்து, பார்வை எல்லாமே ஒன்றாக அடங்கிப் போனவனுக்குக் காரியம் எப்படி இருக்க முடியும்? அவன் பிரம்மமாகவே இருக்கிறான் என்று உபநிஷத்து சொல்கிறது.
பிரம்மத்துக்குக் காரியம் இல்லை. ஆனால், அந்த மாயா உலகத்தில் அகப்பட்டுக் கொண்டு காரியங்களைச் செய்து வருகிறவர்கள் ஈஸ்வரன் என்று ஒரு வனைப் பூஜை செய்து, தங்கள் காரியங்களை நடத்தித் தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள். நல்ல காரியங்களுக்காக, நல்ல மனதோடு பிரார்த்தித்தால், ஈஸ்வரனும் இவற்றை நடத்தித் தருகிறார். இதிலிருந்து ஈஸ்வரனும் காரியமே இல்லாமல் இருப்பவரல்ல என்று தெரிகிறது. நாம் பிரார்த்தித்தாலும், பிரார்த்திக்கா விட்டாலும் சகல பிரபஞ்சங்களையும் இத்தனை ஒழுங்கான கதியில் நடத்திக் கொண்டு, சகல ஜீவராசிகளுக்கும் சோறு போடுகிற பெரிய காரியத்தைச் செய்கிறார்.
காரியம் இல்லாத பிரம்மம் வேறு, காரியம் செய்கிற ஈஸ்வரன் வேறு என்பதா? இல்லை. ஞானியின் பிரம்மமேதான் லோக காரியங்களை நிர்வகிக்கிற ஈஸ்வரனாகவும் இருக்கிறது.
சிவனின் தட்சிணாமூர்த்திக் கோலம் பிரம்ம நிலையைக் காட்டுகிறது. அங்கே காரியம் இல்லை. ஒரே மவுனம்தான். அதே பரமசிவன் எத்தனை காரியங்களைச் செய்திருக்கிறார்? சிதம்பரத்தில் ஒரேயடியாகக் கூத்தடிக்கிறார். தாருகாவனத்தில் பிக்ஷாடனனாக அலைந்து மோகிக்கச் செய்திருக்கிறார். தக்ஷயக்ஞத்தில் சூரியனைப் பளீரென்று அடித்துப் பல்லை உதிர்த்திருக்கின்றார்.
ஸ்வாமி எப்போதும் உள்ளே அடங்கிய பிரம்மமாக இருக்கிறார். வெளியிலே சகல காரியமும் செய்யும் ஈஸ்வரனாக இருக்கிறார்.
சாதாரண ஜனங்கள் ஏரியில், சம்ஸார அலைகளில் நீந்திக் கொண்டிருக்கிறார்கள். ஞானிகள் மறுபக்கம் வயலிலே நிற்கிறார்கள். நடுவில் ஏரிக்கரை. அது குறுக்கிடுவதால் ஞானிக்கு ஏரி தெரியாது. ஏரியில் இருக்கிற ஜனங்களுக்கு வயல் தெரியாது. ஸ்வாமியோ இரண்டுக்கும் மத்தியில் இருக்கிற கரை மேல் இருக்கிறார்.
ஏரித்தடத்தில் நிற்கிற `தடஸ்தன்’ அவர். அவருக்கு லோகமும் தெரியும். லோக திருஷ்டி நசித்துப் போன ஞானியின் நிலையும் தெரியும். `ஏரியில் முழுகுகிறவனைத் தூக்கிப் போடு’ என்று வயலில் இருக்கிறவனைக் கூப்பிட்டு அவர் சொல்ல முடியும்.
எல்லாமே தாமே என்பதை ஸ்வாமி அறிந்திருக்கின்றார்; ஆனாலும், அவரை வேறாகவே நினைத்திருக்கிற ஜீவர்களை அவரும் வேறு போலப் பார்த்து வேடிக்கையும் செய்வார். இதைப்பற்றி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷதரின் `சிவலீலார்ணவ’த்தில் ஓர் அழகான சுலோகம் உண்டு. அதன் தாத்பர்யத்தைச் சொல்கிறேன்.
பரமேசுவரன் கூலியாளாக வந்து, பிட்டுக்கு மண் சுமந்த கதை எல்லோருக்கும் தெரியும். அவர் உடைப்பு அடைத்து ஒழுங்காக வேலை செய்யாததைக் கண்டு பாண்டிய ராஜா அவரைப் பிரம்பால் அடித்தான். உடனே அந்தப் பிரம்படி, பாண்டியன் உள்பட சகல ஜீவராசிகளின் மீதும் விழுந்தது. இங்கே, தாமே எல்லாம் என்பதை அவர் காட்டி விட்டார்.
இதைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார்: `அது சரி, உன்னைத் தவிர வேறில்லை என்ற சிவாத்வைதம் பிரம்படி படுவதற்கு மட்டும் தானா?. நீ மதுரமான பிட்டை வாங்கித் தின்றாயே, அப்போது மட்டும் ஏன் எல்லா ஜீவராசிகளுக்கும் அதை உண்ட ஆனந்தம் இல்லை? அடிபடும் போது ஒன்று; ஆனந்திக்கும் போது வேறா?’
ஸ்வாமி, உள்ளே அடங்கிய பிரம்மமாகவும், வெளியே காரியம் செய்கிற ஈசுவரனாகவும் இருப்பதை இந்த ரசமான கேள்வி மூலம் தெரிந்து கொள்கிறோம். அவர் செய்கிற காரியங்களை ஐந்தாகச் சொல்வார்கள்.

`பஞ்ச கிருத்யம்’ என்பார்கள். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்ற மூன்று உங்களுக்கே தெரியும். இந்த மூன்றும் மாயாலோக விஷயம்தான். இப்படி மாயையால் மறைகிற காரியம் `திரோதனம்’ எனப்படும். இந்த மாயையிலிருந்து விடுவிப்பதே அவன் செய்கிற மகா பெரிய காரியம். `அனுக்கிரகம்’ என்று அதற்கே பெயர்.
அத்வைத ஸித்தி நமக்கு ஏற்பட வேண்டும் என்றால் அதற்கு இந்த அனுக்கிரகம் இன்றி வேறு வழியில்லை. இந்த அனுக்கிரகத்தை வேண்டி வேண்டிச் செய்கிற உபாசனைக்கே, நம்மை அனுக்கிரகிக்கக் கூடிய கருணை படைத்தவர் அவர் என்று நம்பி, அவரிடம் நெஞ்சுருகி, அன்பு செலுத்துவதற்கே பக்தி என்று பெயர்.
இப்படி, தானே ஈஸ்வர லயமாகி விடுவதால் ஒரு வசதி உண்டு.
எதைச் செய்தாலும் கூட, இறைவன் செய்கின்றான் என்ற நோக்கம் எப்பொழுதும் தோன்றிக் கொண்டே இருக்கும்.
ஆண்டாளும், மீராவும் கண்ணனோடு ஐக்கியமானார்கள். ராதா, கண்ணனுடனே கலந்து விட்டாள்.
சைதன்ய சுவாமிகள் இறைவனோடு கலந்தார். கபீர்தாஸர் இறைவனோடு கலந்தார்.
இறைவனுக்கும் தனக்கும் பேதமில்லை என்ற உணர்வு ஏற்படும் போதே, இறைவனோடு பேசக்கூடிய வாய்ப்புத் தோன்றி விடுகிறது.
இறைவன் தன்னோடு உரையாடுவது போன்ற நினைப்பே வருகிறது.
தனக்குள்ளே தானாக நிறைந்து நிற்கின்ற ஆத்ம வடிவத்தைக் கோவிலிலே போய்த்தான் காணவேண்டும் என்பதில்லை.
வீட்டில் இருந்துகொண்டே காணலாம். பகலிலேயும் காணலாம்; இரவிலேயும் காணலாம்.
இப்படி ஈஸ்வரனோடு கலந்து விட்டவனைக் குளிர் நெருங்காது. நல்ல பனிக்கட்டியில் அவனைத் தூக்கிப் போட்டால் கூட, அது அவனைத் தொடாது.
வெயிலிலே தூக்கிப் போட்டாலும் கூட, அது அவனைச் சுடாது.
மழையிலே தூக்கிப் போட்டாலும் கூட, அது அவனை நனைக்காது.
காரணம், அந்த இறைவனோடு அவள் கலந்து விடுகிறான். தான் ஒரு மாமிசப் பிண்டம் என்பதையே அவன் மறந்து போகிறான்.
தான் ஒரு மனிதன் என்கிற உணர்வே அவனுக்கு அடிபட்டுப் போகிறது.
`எனக்கொரு சொந்தம் உண்டு; எனக்கொரு ஜீவன் உண்டு; பாசம் உண்டு; மனைவி மக்கள் உண்டு’ என்கிற எண்ணங்கள் அடிபட்டுப் போகின்றன.
`அவன் எனக்குத் துரோகம் செய்து விட்டான்; இவன் என்னை ஏமாற்றி விட்டான்; இவன் என்னோடு சண்டைக்கு வருகிறான்; இவன் என்னோடு போட்டி போடுகிறான்; இவன் என்னை எதிர்த்து நிற்கிறான்’ என்ற எண்ணங்களெல்லாம் லயத்தோடு ஒன்றியவர்களுக்கு வருவதே இல்லை.
இந்த ஈடுபாடு முடியுமா? நடக்கக் கூடியதுதானா?
ஏன் முடியாது? ஏன் நடக்காது?
கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து விடுகிறார்கள்.
பிள்ளைப் பாசத்தில் இரண்டறக் கலந்து விடுகிறோம்.
இறைவனோடு கலப்பதற்கு ஒரு ஆத்ம ஞானம் வேண்டும். ஆத்மாவுக்குள்ளே அந்த விளக்கு எரிந்து கொண்டே இருக்க வேண்டும். அது மிகப்பெரிய ஜோதியாக அனற்பிழம்பாக வெடிக்க வேண்டும்.
அப்படி வெடிக்கும்போது, உன்னை அணைத்து உன்னை அப்படியே சாம்பலாக்கிவிட்டு, நேரடியாகக் கொண்டு போய் இறைவனிடம் உன்னை அது சேர்த்து விடுகிறது.
ஆகவே, வாழ்நாளிலேயே இறைவனை அடைய விரும்புவோர், இறைவனும் தானும் ஒன்றே என்கிற உணர்வை முதலில் பெற்றாக வேண்டும்.
மகாகவி பாரதி கூறுகிறான்:
`சாமிநீ; சாமிநீ; கடவுள் நீயே;
தத்வமசி; தத்வமசி; நீயே அஃதாம்!
பூமியிலே நீகடவு ளில்லை யென்று
புகழ்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமிநீ; அம்மாயை தன்னை நீக்கி
சதாகாலம் `சிவோஹ’ மென்று சாதிப்பாயே!’
தெய்வம் உண்டென்பதை எப்படி அறிந்தோம்? உலகமிருப்பதாலேயே அறிந்தோம். தெய்வம் உயிர்; உலகம் அதன் வடிவம். உலகம் தெய்வந்தான்; உலகத்துச் செய்கைகளெல்லாம் தெய்வத்தின் செய்கைகளே; உலகத்தின் நடைகளிலிலும், வழிகளிலும் தெய்வத்தை உணர வேண்டும்.
செய்கை யாவும் தெய்வத்தின் செய்கை
சிந்தை யாவும் தெய்வத்தின் சிந்தை
உய்கை கொண்டதன் நாமத்தைக் கூறின்
உணர்வு கொண்டவர் தேவர்களாவர்.
வையமெல்லாம் தெய்வ வலியின்றி வேறில்லை
தெய்வம் நீயென்றுணர்.
வலிமையுடையது தெய்வம்நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம்.
உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவாதொன்றில்லை
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்
பயிலுமுயிர் வகைமட்டு மன்றியிங்கு
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்.
தெய்வ வலியுண்டு தீமையைப் போக்கும்.

பொய்யில்லா வாழ்க்கை

 

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
– என்றார் வள்ளுவனார்.
நீ குடிக்கலாம்; கூத்தியார் வைத்துக் கொள்ளலாம்; சூதாடலாம்; எந்தப் பாவங்களை நீ செய்தாலும் கூட, நீ கடைப்பிடிக்க வேண்டிய ஒரே ஒரு நியாயம், பொய் சொல்லாமல் இருப்பது.
எல்லாவற்றிலும் உண்மையே பேசுவது என்று முடிவு கட்டிக் கொண்டால், இந்தப் பாதகங்களில் இருந்து நீ விடுபடுவாய் என்கிறது வேதம்.
இந்தியாவில் மிக அரிதாகக் காணப்படுவது உண்மை பேசுவது!
அதிலேயும் ஜனநாயகம் என்ற ஒன்று இந்தியாவுக்கு வந்த பிற்பாடும், அரசியல்வாதிகள் என்போர் பொய்யே பேசுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களைப் பார்த்துச் சாதாரண மக்களும், சராசரி மனிதர்களும் பொய்யே பேசுவது என்று ஆரம்பித்து இருக்கிறார்கள்.
கிராமங்களிலே இருந்து நகரங்கள் வரையிலேயும் எல்லா இடங்களிலுமே பொய் பேசுவோர் அதிகரித்திருக்கிறார்கள்.
இந்தப் பொய்யினால் விளைகிற துன்பங்கள்தான், பஞ்சமா பாதகங்களிலேயே மிகப்பெரிய பாதகமாக முடிகின்ற துன்பமாகும்.
நான் தி.மு.க.வில் இருந்த போது காங்கிரஸ் காரர்களும், காங்கிரசில் இருந்த போது தி.மு.க.வினரும் எல்லோரும் பேசுவார்கள், `நான் குடிப்பவன்’ என்று.
எந்த மேடையிலும் நான் அதை மறுத்ததில்லை. சொல்லப் போனால் ஆரம்ப காலத்தில் அவர்கள் பேசிய போது எனக்குக் குடிப்பழக்கம் அதிகமில்லை. எப்போதோ மாதத்தில் ஒருமுறை, இருமுறைதான் குடிப்பது வழக்கம்.
ஆனாலும் கூட, அவர்கள் பேசிவிட்டார்கள் என்பதற்காக நான் அதை ஒப்புக் கொண்டு, `ஆமாம், நான் குடிப்பேன்’ என்று கூறி இருக்கிறேனே தவிர மறுத்ததில்லை; வாதாடியதில்லை.
திறந்த புத்தகமாக நாம் நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு விட்டால், அடுத்தவன் நம்மை விமர்சனம் செய்வதற்கு விஷயம்
கிடைக்காது.`இவன் இப்படிச் செய்தான், அப்படிச் செய்தான்’ என்று எதையும் ரகசியமாகப் பேச முடியாது.
நாம் இல்லவே இல்லை; செய்யவே இல்லை என்று மறுக்க வேண்டிய அவசியமும் கிடையாது.
`ஆம், செய்தேன்’ என்று ஒரு வார்த்தையின் மூலம், பல விமர்சனங்கள், பல விஷயங்கள், பல வார்த்தைகள் அடிப்பட்டுப் போகின்றன என்பதை மறந்து விடக்கூடாது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே நம்முடைய நாட்டில் பொய் பேசுவோர் அதிகமாகத்தான் இருந்திருக்கிறார்கள். இல்லையென்றால் வள்ளுவனார் அதை ஒரு முக்கியமான விஷயமாகக் குறிப்பிட்டிருக்க மாட்டாரல்லவா?
மதம் மனிதனுக்குக் கற்றுத் தரும் விஷயங்களில் மிக முக்கியமானது உண்மை பேசுவதாகும்.
`உண்மையே பேசு, உண்மையே பேசு’ என்று அது வெறும் வார்த்தையாகச் சொல்வது கிடையாது. உண்மை பேசியவன் எப்படி வாழ்ந்தான் என்பதற்குக் கதைகளையும் சொல்லி இருக்கிறது.
ஹரிச்சந்திரனுடைய வரலாறு, நாம் அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டிய வரலாறாகும். உண்மையே பேசுவது என்று வைத்திருந்ததாலே, ஹரிச்சந்திரன், வாழ்க்கையில் கஷ்டப்பட்டிருக்கலாம்; ஆனால், அப்படி ஒரு மன்னன் இந்தப் பூமியை ஆண்டான் என்பதை இன்று வரை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்.
நம்மை நினைவில் வைத்துக் கொள்ளச் சொல்லும் சரித்திரமாக அது எப்படி ஆனது?
அவன் தன் வாழ்க்கையில் உண்மையே பேசினான் என்ற ஒரே காரணத்திற்காக, அது சரித்திரமாகிவிட்டது. கால காலங்களுக்கு அது நிலைத்து நின்று விட்டது.
எங்கள் ஊரிலே ஒருவர்.
எனக்குத் தெரிய, கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில், இது வரையிலே அவர் ஒரு உண்மை கூடப் பேசியது கிடையாது. எதையெடுத்தாலும் பொய்யே பேசுவார்.
இது பொய் என்று நமக்கே நன்றாகத் தெரியும்; இவனுக்குப் பொய் என்று தெரிகின்றது என்று அவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் பொய்தான் சொல்லுவார்.
அது ஒருவகை வியாதி போலவே தோன்றிற்று, எனக்கு. அப்படிப் பொய் சொல்வது மட்டுமல்ல; பொய்தான், தம்மை வாழ வைக்கிறது என்றும் அவர் நம்பத் தொடங்கினார்.
தன்னுடைய மகளுக்கு அவர் திருமணம் பேசினார். லட்ச ரூபாய்க்குச் சீர் வரிசை தருவதாகவும், லட்ச ரூபாய் கையில் கொடுப்பதாகவும் ஒப்புக் கொண்டார். இரண்டு லட்ச ரூபாய்க்கு ஏற்பாடு செய்திருப்பதாகவே சொல்லிவிட்டார்.
அவர் கையிலே காலணா பணம் கிடையாது. சீர்வரிசை கொடுப்பதற்கு அவரிடம் பொருள்களும் கிடையாது. அது அவருக்குத் தெரியும்; அவருடைய மனைவிக்கும் தெரியும். ஆனால், யாரிடமும் அதைச் சொல்லவில்லை.
`பாப்பாவுக்காக நான் இரண்டு லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்திருக்கிறேன்; ஒதுக்கி வைத்திருக்கிறேன்’ என்று மட்டும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டே வந்தார்.
பலபேரிடம் வீட்டுத் தேவைக்கென்று இரவலாக நகைகளையும், பாத்திரங்களையும் வாங்கி வந்தார்.
கடன் வாங்கி வந்த பொருள்களை, எல்லாம் சீர்வரிசை என்று அடுக்கி வைத்துவிட்டார்.
மாப்பிள்ளை அழைப்பு நடந்து விட்டது; தாலி கட்ட வேண்டும். லட்ச ரூபாய் இவர் கொடுப்பதாகச் சொன்ன சீர்வரிசையை மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கேட்டார்கள்.
`இப்பொழுது கையிலே பணம் இல்லை. நோட்டெழுதித் தருகிறேன்’ என்றார்.
மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சரி, பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கருதித் தாலி கட்ட வைத்து விட்டார்கள்.
அவர்கள் நல்லவர்கள்; நல்ல குணமுடையவர்கள்; தரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
தாலி கட்டிய பிறகு தொகையைக் கேட்டார்கள். அவரிடம் பணமே இல்லை என்பது தெரிந்தது. இல்லை என்பது மட்டுமல்ல; சீர்வரிசையாகப் பல பொருட்களை வைத்திருந்தாரே, அவற்றையும் பல பேர் வந்து, `இது என்னுடையது, இது என்னுடையது’ என்று எடுத்துக் கொண்டு போக ஆரம்பித்தார்கள்.
மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் திகைத்தார்கள். `தவறான இடத்தில் திருமணம் செய்து விட்டோம்’ என்று அவர்கள் முடிவு கட்டினார்கள்.
கடைசியில் என்ன நடந்தது?

மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் மட்டும் கொஞ்சம் தரம் கெட்டவர்களாக இருந்திருந்தால், பெண்ணினுடைய வாழ்க்கை அதோகதியாகி இருக்கும். ஆனால், அவர்கள் கொஞ்சம் உயர்ந்த குணம் படைத்தவர்களாக இருந்த காரணத்தால், ஒரே ஒரு விஷயத்தைச் சொன்னார்கள்.
`சீர் கொடுப்பதாக நீங்களே சொன்னீர்கள்; ஏமாற்றி விட்டீர்கள்; பரவாயில்லை. அதற்காகப் பெண்ணினுடைய வாழ்க்கையை நாங்கள் கெடுக்க விரும்பவில்லை. பெண்ணை நாங்கள் அழைத்துக் கொண்டு போகிறோம். அந்தப் பெண், நீங்கள் வாக்களித்தபடியே சீர்வரிசை கொடுத்த பிறகுதான் தாய் வீட்டுக்கு வருவாள். அதுவரை அவள் தாய் வீட்டு வாசலை மிதிக்க மாட்டாள்’ என்று சொல்லி, அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்.
சாதாரணமாக மற்றக் குடும்பங்களில் என்ன நடக்கும்?
தாய் வீட்டுக்குப் பெண்ணை அனுப்பி, `சீர்வரிசையோடு திரும்பி வா’ என்று சொல்லி விடுவார்கள்.
இவர்கள் உயர்ந்த மனிதர்களானதாலே, பெண்ணைத் தங்களுடன் அழைத்துக் கொண்டுபோய், `தாய் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம்’ என்று கூறிவிட்டார்கள்.
பெண் இப்போது நிம்மதியாகத்தான் வாழ்கிறாள் என்றாலும், அந்தப் பெண்ணின் தகப்பனார் சொன்ன பொய்யை வைத்து ஊரே சிரிப்பாய்ச் சிரித்தது. அந்த ஊரிலே அவர் குடியிருக்க முடியாமல் வேறு ஊரில் போய்க் குடியிருக்கிறார், இப்போது.
கதைகள் நிறையக் கேட்கிறீர்கள்.
ஒரு பொய், பல உயிர்களைப் பலி வாங்கியது என்றும், ஒரு பொய் ஒரு மனிதனை வாழ விடாமல் ஆக்கிற்று என்றும், ஒரு பொய், ஒரு குடும்பத்தையே பாழாக்கிற்று என்றும் எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
அப்படி இருந்தும் கூடப் பொய் சொல்லுகிறவன் இல்லாமற் போனானா என்றால், அதுதான் இல்லை.
இந்தப் பொய் சொல்லுகின்றவனைத் திருத்துவதற்குத்தான், மதம் பல உபந்நியாசங்களைச் செய்தது. பல உபந்நியாசகர்கள் அதற்காகவே முயன்றார்கள்.
இன்றைக்கு மதவாதியாக இருக்கிறவன் பொய் சொல்லப் பயப்படுகிறான். `பொய் சொன்னால் நாக்கு வெந்து போகும்; பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது; பொய் சொன்னால் புற்று வைக்கும்’ என்றெல்லாம் பயந்து, பொய் சொல்லாமல் இருப்பதற்கு மத அடிப்படையிலே தான் அவன் கற்றுக் கொள்கிறான்.
அதனால்தான், தனி மனித ஒழுக்கத்தை மதம் காப்பாற்றுகிறது என்று நான் அடிக்கடி சொல்லுவது வழக்கம்.
நானென்ன, பெரியவர்கள், என்னைவிட வயதிலே மூத்தவர்கள் எல்லாம் சொல்லிப் போனதும் அது தான். மனிதனுடைய தனி வாழ்க்கையைச் செம்மைப் படுத்துவதும், சீர்படுத்துவதும், மதம்தான்.
`பொய் சொல்லாதே, நேர்மையாக நட, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடு, ஒழுங்காக இரு’… இவ்வளவையும் மதம் போதிக்கின்ற காரணத்தினால், அது முழு சந்நியாச மடமாக மட்டும் இல்லாமல், ஒழுக்கத்தைக் கற்பிக்கின்ற உன்னதப் பள்ளிக்கூடமாகவும், கலைக்கல்லூரியாகவும் அமைந்திருக்கிறது.
நான் பொய் சொல்லுகிறேன்; இன்னொருவன் அதிலே ஏமாறுகிறான். இதுதானே கதை?
இன்னொன்றை எண்ணிப் பாருங்கள். நானும் ஒரு பொய்யனிடம் மாட்டிக் கொண்டு, நான் ஒரு பொய் சொல்ல, அவன் ஒரு பொய் சொல்ல என்று இரண்டு பேரும் பொய் சொல்லிக் கொண்டிருந்தால், விஷயம் எப்படி இருக்கும்?
திருமூலர், திருமந்திரத்திலே சொன்னது போல், `குருடும் குருடும் குருட்டாட்டமடி, குருடும் குருடும் குழிவிழு மாறே’ என்று ஆகிவிடும்.
`வேதம் பொய், புராணம் பொய், இதிகாசம் பொய்’ என்று மேடையிலே முழங்குகிறானே, அவன் மேடையிலே பேசுவதெல்லாம் பொய்.
இன்னொன்றைப் பொய் என்று சொல்லி வருகிறவன், தானாவது பொய் சொல்லாமல் இருக்கிறானா என்றால், அதுதான் இல்லை.
வேதத்தினுடைய கதைகள் பொய்யாக இருக்கலாம்; புராணத்தினுடைய கதைகள் பொய்யாக இருக்கலாம்; ஆனால், பொய்யான கதைகள் உண்மையான நீதியைப் புகட்டுகின்றன.
மேடையிலே பேசுகின்ற நாத்திகன், பகுத்தறிவு என்ற பேராலே சொல்கின்ற பொய், எவ்வளவு குடும்பங்களைப் பாழடித்திருக்கிறது என்பதனை நான் அனுபவத்திலே அறிந்திருக்கிறேன்.
ஆங்கிலத்திலே ஒரு பழமொழி சொல்லுவார்கள், `உண்மை வாசற்படியைத் தாண்டுவதற்குள், பொய் ஊரைச் சுற்றி வந்துவிடும்’ என்று.
எவ்வளவுதான் பொய், ஊரையும் உலகத்தையும் சுற்றி வந்தாலும், கடைசியில் ஒரு நாள் அது பொய் என்பது தெரிந்து விடும்.
இறுதியிலே பொய், `உண்மை’ என்றே சாதிக்கப்பட்டு வெற்றி பெற்றதாக நீங்கள் வரலாறே கேட்டிருக்க முடியாது.
காலம்தான் வித்தியாசம். சில பொய்கள் ஆறுமணி நேரத்திலேயே வெளியாகிவிடும்; சில ஆறு நாள்; சில ஆறு வாரம்; சில ஆறு மாதம்; சில ஆறு வருஷம். ஆனால், ஆயுள் காலத்திற்குள்ளாக, நாம் சொன்ன பொய் நம்மையே வந்து திருப்பித் தாக்கும் என்பதனை வரலாறு காட்டுகிறது; வேதம் காட்டுகிறது; புராணம் காட்டுகிறது; இதிகாசம் காட்டுகிறது.
வடமொழியில், `சத்யமேவ ஜெயதே’ என்கிறார்கள்.
அந்த, `சத்யமேவ ஜெயதே’ என்பதை, `உண்மையே வெல்லும்’ என்று தமிழிலே மொழிபெயர்த்திருக்கிறார்கள். அப்படித் தமிழில் மொழிபெயர்த்தது தவறு.
மனம், வாக்கு, காயம் இம் மூன்றாலேயும் நேர்மையாக நடப்பதற்குப் பெயர்தான் சத்தியம் என்பதாகும். அந்தச் சத்தியம், இந்த மூன்றும் சேர்ந்து நீதி தவறாமல் நடப்பதாகும்.
புராண இதிகாசக் கதைகளிலே கூட, `மனோ வாக்குக் காயங்களாலே அவன் நியாயமாக நடந்தான்’ என்று தான் வரும்.
வெறும் வார்த்தையாலே மட்டும் நாணயமாக இருந்தால் போதாது; உடம்பும் நாணயமாக இருக்க வேண்டும்; மனதும் நாணயமாக இருக்க வேண்டும்.
இம் மூன்றாலேயும் நாணயமாக இருக்கும் ஒரு மனிதனை உலகம் மதிக்கும் என்பதற்குக் காந்தியடிகள் ஒரு உதாரணம்; நேரு ஒரு உதாரணம்; ராஜாஜி ஒரு உதாரணம்; மற்றும் மகான்களும் உதாரணம்; இந்தியாவுக்குள்ளே இவர்கள் உதாரண புருஷர்கள்.
ஆப்ரகாம் லிங்கனிலிருந்து உலகத்து மனிதர்கள் பல பேரையும் நீங்கள் பார்த்தால், புகழ் பெற்ற அத்தனை மனிதர்களும் உண்மை சொன்னதாலேயே புகழ் பெற்றார்களே தவிர, மிகப் பிரமாண்டமான பணி செய்ததினால் மட்டும் புகழ் பெற்றவர்களல்லர் என்பது தெரியும்.
ஆனால், எப்பொழுதும், எந்தக் கட்டத்திலும் உண்மையே பேச வேண்டும்; பொய்யே சொல்லக் கூடாதா என்று கேட்டால், அதற்கும் வள்ளுவன் ஒரு வழி வகுத்துக் காட்டியுள்ளான். நல்ல காரியம் நடக்கும் என்றால், அதற்காகப் பொய் சொல்லலாம். `பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்த்த நன்மை பயக்கும் எனின்’ என்றான் வள்ளுவன்.
பத்துப் பொய்யைச் சொல்வதனால் ஒரு பெண்ணின் திருமணம் நடந்து விடும் என்றால், அந்தப் பொய்யை நீ சொல்லலாம்.
இருபது பொய்யைச் சொல்லி ஒரு குழந்தையை உன்னால் காப்பாற்றி விட முடியும் என்றால், அந்தப் பொய்யை நீ சொல்லலாம்.
பொய்மை, வாய்மை ஆகிறது எப்போது? புரை தீர்த்த நன்மை பயக்கும் போது.
ஒரு குடிகாரக் கணவன். நன்றாகக் குடித்து விட்டுப் போதையில் மனைவியோடு சண்டை போடுகிறான். மனைவி ஏதோ வேகத்தில் திட்டி விடுகிறாள். அவள் திட்டிவிட்டாளே என்று அரிவாளை எடுத்துக் கொண்டு அவளைத் துரத்துகின்றான். துரத்தப்படும் மனைவி வெகு வேகமாக ஓடுகிறாள். ஓடிப்போனவள் கணவனுக்குத் தெரியாமல் ஒரு வீட்டில் அடைக்கலம் கேட்கிறாள். அவளுக்கு ஒருவன் அடைக்கலம் கொடுக்கிறான். வீட்டுக்குள்ளே அவளை மறைத்து வைக்கிறான். பின்னாலேயே கணவன் வருகிறான். `என் மனைவி இங்கே வந்தாளா?’ என்று கேட்கிறான்.
உடனே அடைக்கலம் கொடுத்தவன், `நாம் உண்மையல்லவா பேச வேண்டும்’ என்று கருதக்கூடாது.
என்ன செய்ய வேண்டும்?
`இல்லையே! உன் மனைவி இங்கே வரவில்லையே! அவள் யாரென்றே எனக்குத் தெரியாதே!’ என்று ஒரு பொய்யைச் சொல்ல வேண்டும்.
அப்படி அவன் பொய்யைச் சொன்னால், அவளின் கணவன் வேறொரு திசையிலே ஓடுவான். பிறகு போதை தெளிந்ததும் யோசிப்பான். `நல்ல வேளை, மனைவி கிடைக்காதது. கிடைத்திருந்தால் தவறல்லவா செய்திருப்போம்’ என்று அப்போதுதான் அவனுக்குப் புரியும்.
ஒரு பொய் உயிரைக் காப்பாற்றும்; ஒரு மனிதனைத் திருத்தும்.
அந்த மாதிரி இடங்களில் பொய் சொல்வது, நியாயம் என்கிறான் வள்ளுவன்.
ஆனால், பொய்யே சொல்லி வாழலாம் என்று முடிவு கட்டுகிறார்களே, அந்த அயோக்கியர்களைக் காணும்போது தான் எனக்கு அதிசயமாக இருந்தது.
திருமணத்திற்கு ஐயரைக் கூப்பிட்டுச் செலவு செய்வது தண்டம் என்று சொல்லிவிட்டு, `அந்தப் பணத்தை எனக்குக் கொடு’ என்று வாங்கிக் கொள்ளும் சீர்திருத்தவாதிகளை நான் பார்த்திருக்கிறேன்.
தான் பதவியில் இருக்கும்போது தவறான காரியங்களைச் செய்துவிட்டு, மற்றவன் அதே பதவிக்கு வந்து அதே காரியங்களைச் செய்தால், `ஐயோ! அநியாயம்!’ என்று சத்தம் போடும் அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறேன்.
தராசைத் தலைகீழாக நிறுத்தும் வணிகர்களை, வியாபாரிகளைப் பார்த்திருக்கிறேன்.
பத்து ரூபாய் கடன் கொடுத்து விட்டு, இருபது ரூபாய்க்கு எழுதி வாங்கும் வட்டிக் கடைக்காரனைப் பார்த்திருக்கிறேன்.
ஆயிரம் ரூபாய் நகையின் மீது இருநூறு ரூபாய் கடன் கொடுத்து, ஆறு மாதத்திற்குப் பிறகு, `நகை வட்டியில் மூழ்கி விட்டது’ என்று சொல்லும் அடகு பிடிப்பவனைப் பார்த்திருக்கிறேன்.
அரிசியிலே கலப்பதற்கென்று, தனிக் `கல் தொழிற்சாலை’யே நடத்தும் அரிசி வியாபாரியைப் பார்த்திருக்கிறேன்.
துவரம் பருப்பில் கலப்பதற்கென்று, வடக்கே இருந்து கேசரிப் பருப்பை வரவழைக்கும் வியாபாரிகளைப் பார்த்திருக்கிறேன்.
ஆட்டுக்கறியில் மாட்டுக்கறியைக் கலந்து, பிரியாணி போடும் அசைவ ஹோட்டல்களுக்குப் போயிருக்கிறேன்.
அவர்களே பதினைந்து ரூபாய்க்குக் கோழி வாங்கி, அதை எண்பது ரூபாய்க்கு விற்கின்ற அநியாயத்தைக் கண்டிருக்கிறேன்.
நாலு ரூபாய் அரிசியையும், இரண்டு ரூபாய் உளுந்தையும் கலந்து செய்கிற இட்லியை, நாற்பது ரூபாய்க்கு விற்கும் ஹோட்டல்காரர்களையும் பார்த்திருக்கிறேன்.

அடுத்த சலவையிலே சாயம் போகும் துணியை, அற்புதமான பட்டு என்று விற்பனை செய்யும் துணிக் கடைக்காரர்களைக் கண்டிருக்கிறேன்.
இந்தியாவிலே எவ்வளவுக்கெவ்வளவு புனிதமான கோயில்களைக் கண்டேனோ, அவ்வளவுக்கவ்வளவு அநியாயமாகப் பொய் சொல்பவர்களையும் கண்டிருக்கிறேன்.
இந்தப் பொய்யிலிருந்து மனிதனையும், நாட்டையும் மீட்பதற்கான ஒரே கருவி, மதம்.
ஒரே துணைக்கருவி, இறைவன்.
அந்த மதமும், இறைவனும் தான் மனிதர்களை மீட்க முடியும்.
மதத்தாலேயும், இறைவனாலேயும் பொய்யிலே இருந்து மீண்டவர்களை நான் பார்த்திருக்கிறேன்.
தெய்வ பக்தி வளர வளர, `நமக்கேன் வம்பு, ஆண்டவன் நம்மைச் சபித்து விடுவான்; ஆண்டவன் நம்மைக் கொன்று விடுவான்; ஆண்டவன் நம்மைத் தண்டித்து விடுவான்’ என்றெல்லாம் பயந்து, பொய் சொல்லாமலேயே இருக்கப் பழகியவர்கள் பலர் உண்டு.
சின்ன வயதில் பொய் சொல்லி, திருடி, ஜெயிலுக்குப் போய் வந்தவன் கூட, பெரிய வயதில் மனம் திருந்தி யோக்கியமாக இருப்பதற்கு மதம்தான் காரணமாக இருக்கிறது.
ஆகவே, மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால், அவனுக்கு மத நம்பிக்கை வேண்டும்.
அந்த மத நம்பிக்கையிலேயும், அவனை ஒழுங்காகத் திருத்தி, செம்மையாக வாழ வைக்கின்ற மதம், இந்து மதம்.
ஆம்; அதுதான் `அர்த்தமுள்ள இந்துமதம்’.

சேரிடம் அறிந்து சேர்

 

சுத்தமான சோம்பேறிகள் எப்படி சம்பாதிப்பது என முடிவு கட்டித் தொடங்கிய இயக்கமே, நாத்திக இயக்கம்.
உலகத்தின் மற்றப் பகுதிகளிலே, நம்பி நாத்திகர்களானவர்கள் உண்டு.
தமிழ் நாட்டில் பெரும்பாலும் திருடர்களும், அயோக்கியர்களுமே நாத்திகர்களானார்கள்.
திருவிழாவில் வழி தவறிப்போன குழந்தை, தேர்ச்சக்கரத்தில் சிக்கிக் கொண்டது போல், நான் இதில் சிக்கிக் கொண்டேன்.
தவறான சேர்க்கையாலே, பிறப்பின் அர்த்தத்தை மாற்ற முயற்சித்தேன்.
நான் யார் என்று புரியாத காரணத்தாலே, தங்களைப் பொறுத்தவரை கெட்டிகாரர்களாக இருந்தவர்கள் வலையில் விழுந்தேன்.
என்ன செய்வது? பக்குவமற்ற நிலை.
சின்ன வயதில் என் தாத்தா என்னைத் தோளிலே தூக்கி வைத்துக் கொள்வார்.
நான் ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களைக் காட்டி, `அவை என்ன தாத்தா?’ என்பேன்.
`நட்சத்திரங்கள்’ என்பார்.
`அப்படியென்றால் என்ன?’ என்று கேட்பேன்.
உடனே அவர் எனக்குப் புரிகின்ற பாஷையில் சொல்லத் தொடங்குவார்.
`அதாவது ஆகாயத்தில் தேவர்கள் இருக்கிறார்கள் அல்லவா, அவர்களெல்லாம் சுருட்டுப் பிடிக்கிறார்கள். அதுதான் இது!’ என்பார்.
நான் நம்பி விடுவேன்.
மழை பெய்யும்; `இது என்ன தாத்தா?’ என்பேன்.
`தேவர்களெல்லாம் குளிக்கிறார்கள்; அது தான் இது!’ என்பார்.
அதையும் நம்பி விடுவேன்.
இருபது வயதிலும் இப்படிப்பட்ட பக்குவத்தில் நான் இருந்தேன் என்பதை வெட்கமில்லாமல் ஒப்பு கொள்கிறேன்.
இல்லையென்றால் எவனோ ஒரு நாத்திகனோடு நட்பு ஏற்பட்டு, நான் நாத்திகனாகி இருப்பேனா?
ஒரு மாயா வாதம், போலித்தனம்-மனது அறிந்தே சொன்ன பொய், நாத்திகம் என்பது.
வாழ்க்கையில் அலுத்தவர்கள், சலித்தவர்கள், எவ்வளவோ காலம் கடவுளை வேண்டியும் பயனில்லையே என்று நினைத்தவர்கள்-இவர்களெல்லாம் சிக்கிக்கொண்ட வலையே நாத்திகம்.
சிக்கிக் கொண்ட ஈக்களைக் கடித்துத் தின்ன முயன்ற சிலந்திகளே, அதன் தலைவர்கள்.
அதற்கு அவர்கள் பூசிய சாயம், `பகுத்தறிவு’ என்பது.
சட்டையைக் கறுப்பாகப் போட்டுக் கொண்டு துக்கம் கொண்டாடிய அவர்கள், உள்ளத்தையும் `கறுப்பாகவே’ வைத்திருந்தார்கள்.
பெண்டாட்டியைக் கோவிலுக்கு அனுப்புவார்கள்; பிள்ளையை ஜாதகம் எழுதி வாங்கி வரச் சொல்வார்கள்; மேடையில், `எல்லாம் பொய்’ என்று பேசுவார்கள். நான் அதை நம்பினேன்.
அதுவரை கேளாத புதிய விஷயமாக இருந்ததால் அதைச் சொல்வதைப் பெருமை என்று நினைத்தேன். எதையும் மறுப்பது அறிவுக்கு அடையாளம் என்று முடிவு கட்டினேன்.

இவ்வளவு கூத்தும், இரண்டு மூன்று ஆண்டுகளே.
ஆயினும், இந்த அனுபவங் களையும், அந்தத் தலைவர்களையும் என்னால் மறக்க முடியாது.
பொய்யும் அயோக்கியத்தனமும் நிறைந்த ஒரு உலகத்தை, புனித உலகமாகச் சித்திரித்த அந்தக் கெட்டிக்காரர்களை, எப்படி நான் மறக்க முடியும்?
அவர்கள் கடவுளைப் பற்றிய கதைகளின் மீதும், புராண இதிகாசங்களின் மீதும் விளையாடினார்களே தவிர, அடிப்படைக் கடவுள் தத்துவத்திற்குச் சரியான விளக்கமும், மறுப்பும் கொடுக்க முடியவில்லை.
அதனால் தான், நான் விரைவிலேயே அதிலிருந்து மீண்டு விட்டேன்.
பிறப்புக்கு முந்தியதென்ன? இறப்புக்குப் பிந்தியதென்ன?
விஞ்ஞானிகளே திண்டாடும் இந்தக் கேள்விக்கு, இந்த அரைவேக்காடுகள் என்ன பதில் சொல்ல முடியும்?
`அம்மிக் குழவி சாமி’ என்றும், `அந்தக் கல்லை உடைத்து ரோடு போடுவோம்’ என்றும் ஊர்ச்சாப்பாட்டைச் சாப்பிட்டுக் கொண்டு திமிர் பிடித்துப் பேச முடிந்ததே தவிர, இன்னின்ன காரணங் களால் கடவுள் இல்லை என்று எவனுமே விளக்கம் சொன்னதில்லை.
அதிலே, சிக்கிக்கொண்ட நானும், அவர்கள் பாணியிலேயே, `அடியே, காஞ்சி காமாட்சி! மதுரை மீனாட்சி! காசி விசாலாட்சி! உங்களுக்கு ஏனடி மண்டபங்கள்?’ என்று பேசத் தொடங்கினேன்.
எந்த வெயிலிலும், வற்றிப் போகக்கூடிய அந்தக் காட்டு வெள்ளம் என்னையும், இழுத்துக் கொண்டு போயிற்று.
நாத்திக வாதம் ஒரு போலித்தனம் என்பதை என்னால் உணர முடியவில்லையே, அப்போது!
அவர்களை மட்டுமே குறை சொல்லி என்ன பயன்? அந்தப் பக்குவம் எனக்கில்லையே, அப்போது!
நான் யார் என்பதை முற்றிலும் அறியவில்லையே அப்போது!
மகத்தான காவியங்களைப் படைக்கக் கூடிய உள்ளறிவு எனக்கிருப்பதாகத் தோன்றவில்லையே, அப்போது!
கூட்டம் கூடுவார்கள்; ஆட்டம் போடுவார்கள்; வசூல் செய்வார்கள்; வாழ்க்கை நடத்துவார்கள்; நானோ கைச்செலவு செய்து கொண்டு, கத்திக் கொண்டிருப்பேன்.
காரைக்குடிக்குப் போகும் போதெல்லாம் சில செட்டியார்கள் கேட்பார்கள், `ஏண்டா தம்பி, எவ்வளவோ பெரிய திறமையை வைத்துக்கொண்டு இந்தக் கூட்டத்தில் போய்க் கிடக் கிறாயே’ என்று.
அப்போது எனக்குப் புரிந்ததில்லை.
பல்லாயிரம் ஆண்டு காலப் பண்பாடுகளைப் பற்றிய வரலாற்று அறிவு எனக்குக் கொஞ்சம் கூட இருந்ததில்லை என்பதை, வெட்கத்தோடு ஒப்புக்கொள்கிறேன்.
அந்த இரண்டு மூன்று ஆண்டுகள், நானும் கறுப்புச் சட்டை போட்டிருந்தேன்.
பார்ப்பதற்கே அருவறுப்பானதும், வெயில் காலத்துக்கு ஒத்து வராததுமான கறுப்புச் சட்டையை, நான் விருப்பத்தோடு தான்
போட்டேன்.சீதையைப் பற்றியும், திரவுபதியைப் பற்றியும் கேவலமாக எழுதினேன்; கம்பனைக் கேலி செய்தேன்.
சுய உணர்வில்லாத செம்மறி ஆடு, கசாப்புக் கடைக்குத் தானே போய்க் கழுத்தை நீட்டுவது போல, நீட்டினேன்.
நல்ல வேளை; கத்தி விழும் முன்பாகவே புத்தி வந்து வெளியேறினேன்.
நாத்திகன் சொல்வது என்ன?
திரும்பத் திரும்ப ஒன்றுதான்.
`சூரியன் இயற்கையாக வருகிறது; சந்திரன் இயற்கையாக வருகிறது; பிள்ளை தகப்பனாலே பிறக்கிறது; மரணம் இயற்கையாகவே நடக்கிறது; இதிலே கடவுள் என்றொருவன் இல்லவே இல்லை’ என்பதே அது.
அதிலே எனக்குப் புரியாத ஒன்று, சில தகப்பன்மார்கள் இருந்தும் அவர்களுக்குக் குழந்தை இல்லையே ஏன்?
அதுவும் இயற்கைதானா? இல்லை, அவன் ஆண் மகன் இல்லையா?
நான், யாரையும் குறிப்பிடவில்லை; பொதுவாகவே சொல்கிறேன்.
எல்லாமே இயற்கையாக நடக்கும் என்றால், செத்துப் போன பிறகு, தானே ஏன் அந்தச் சடலம் சுடுகாட்டுக்குப் போகக் கூடாது?
அப்போது மட்டும் நான்கு பேர் தேவைப்படுகிறதே, ஏன்?
இந்தச் சிந்தனை, என் கண்களைத் திறந்தது.
உள்ளே இழுக்கும் காற்று, பிராணன்; வெளியே விடும் காற்று, அபானன், இந்தக் காற்றைப் பத்திரமாகப் பாதுகாக்க உடம்பிலே எந்த மூடியும் இல்லை. ஆனால், ஓட்டைகளோ ஒன்பதிருக்கின்றன!
தினம் தினம் போய்ப் போய் வந்து கொண்டிருக்கும் காற்று, ஒரு நாள் போனால் திரும்புவதில்லை.
முன்பே குறிப்பிட்டுள்ள இந்தக் கேள்வியும், என் கண்களைத் திறந்தது.
நான் ஆசைப்படுவது எனக்குக் கிடைக்கவில்லை; `அதுதானடா விதி’ என்பாள், என் தாய்.
அந்த வாசகமும் என் அறிவுக்குத் தீனி போட்டது.
நான் படித்தது குறைவு; தோன்றிய கற்பனைகள் அதிகம்.
`இது ஏதோவொரு அருள்’ என்பார்கள் பெரியவர்கள்.
`கடவுளின் அருளா?’
அப்படியொரு கேள்வி எனக்குள் எழுந்தது.
உலக வரலாறு என் உணர்வுக்குப் புதிய உரம் ஏற்றிற்று.
கோவலனின் விதியிலிருந்து சர்வாதிகாரி ஹிட்லரின் விதி வரையில் சிந்தித்துப் பார்த்தேன்.
மாபெரும் விஞ்ஞானி கூட, சர்ச்சுக்குப் போவதைச் சிந்தித்தேன்.
இறையுணர்வு என்பது தவிர்க்க முடியாதது என்றும், அதை மறுப்பது ஒரு வியாபாரத் தந்திரமே என்றும் எனக்குத் தோன்றிற்று.
1949-இல் நாத்திகம் பேசத் தொடங்கிய நான், 1954-இல் `மங்கையர் திலகம்’ என்ற படத்தில் துளசி பூஜைப் பாட்டெழுதி விட்டேன்.

`எங்கள் குலதேவி நீயே, ஸ்ரீ துளசி அம்மா அன்புத் தாயே’ என்று தொடங்கும் பாடல் அது.
அப்போதும், இப்போதும் அந்தக் கட்சியில், என்னை எதிர்ப்பதற்கென்றே ஒருவர் இருக்கிறார்; அவர் உடனே அதை ஒரு பெரிய பிரச்சினையாக்கினார்.
ஆனால், திரு. அண்ணா அவர்கள் என்னோடு பேசும் போது, `உனக்குச் சரியென்று பட்டதைச் செய்; கடவுள் இல்லவே இல்லை என்ற கொள்கையில் எனக்கும் உடன்பாடல்ல!’ என்றார்.
அதைத் தொடர்ந்து தான், `ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்று அவர் கோஷம் கொடுத்தார்.
மூன்று வருஷங்கள் நாத்திகனாக இருந்த நான், கடவுள் பாடல்கள் எழுதத் தொடங்கினேன்.
நாளாக நாளாகக் கடவுள் தத்துவங்கள் மலரத் தொடங்கின.
இந்த நிலையில், `நான் யார்?’ என்பதைக் கண்டு கொள்ள எனக்கு இவ்வளவு காலங்கள் தேவைப்பட்டன.
ஆகவே, உனக்கு நான் சொல்வது, `உன்னையே நீ ஒழுங்காக அறிய வேண்டும்’ என்றால், முதலில் யாரோடு சேருகிறாய் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
நீ யாரோடு சேருகிறாயோ, அவனது குணத்தை மட்டுமல்ல, பிறப்பையும் பார்க்க வேண்டும்.
நன்மைகள், தீமைகள் ஓரளவுக்குப் பிறப்பிலிருந்தே உருவாக்கப்படுகின்றன.
ஸ்ரீ ஆதி சங்கரர் சொன்னபடி, நல்ல உறவுகள் ஏற்பட்டால், `என் வீடு, என் சொத்து’ என்ற எண்ணம் மறைந்து விடும்.
அந்த எண்ணம் மறைந்து விட்டால், அது தேவை, இது தேவை என்ற ஆசை மறைந்து விடும்.
அந்த ஆசை மறைந்து விட்டால், சலனமற்ற நிம்மதி கிடைக்கும்.
நிம்மதியான வாழ்க்கையில் ஆன்மா சாந்தியடையும்.
ஆகவே, உன்னையே நீ அறிவதின் முதற்படி, `சேரிடம் அறிந்து சேர்’ என்ற பழமொழியாகும்.

பதில் இல்லாத கேள்வி

 

சிறு வயதில் குருகுல வாசத்தை விட்டு நான் வெளியிலே வந்த போது, கோழிக்குஞ்சு முட்டையில் இருந்து வெளிவந்தது போல் தான் இருந்தேன்.
`நான் யார்’ என்பதே எனக்கு தெரியாது. விபரம் தெரியாத நிலை; பக்குவமற்ற சூழ்நிலை.
காபி ஓட்டல்களையும், தியேட்டர்களையும் கூட ஆச்சரியமாகப் பார்க்கின்ற சூழ்நிலை.
குருகுலம், நல்ல பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் கற்பித்தது என்றாலும், வெளி உலகத்தைக் காண விடாமல் வைத்திருந்தது.
ஆகவே, தெளிந்த இதயத்தோடும் உலக அனுபவம் அற்ற நிலையிலும் நான் வெளியே வந்தேன்.
வந்ததிலும் தவறில்லை; நான் வாழ்ந்ததிலும் தவறில்லை; ஆனால், ஒரு முக்கியமான கேள்விக்கு விடை காண முடியாமல் தவித்தேன்.
அந்தக் கேள்வி என்ன?
"நான் யார்?” என்பதே அது.
நான் யார்?
அண்ட சராசரங்கள் அனைத்துமே அதைத்தான் கேட்டுக் கொள்கின்றனவாம்!

மனிதன் அறிய வேண்டிய அறிவுகளில் எல்லாம் முக்கியமான அறிவு, தன்னை அறிதலே.
ஒவ்வொரு விலங்கும், ஓரளவுக்குத் தன்னை அறிகின்றது.
பருந்து பாய்ந்து வந்தால், கோழி ஆத்திரப்படுகின்றது.
நாயை கண்டதும், முயல் ஓடுகிறது.
புலியைக் கண்டதும், மான் ஓடுகிறது.
உயிரின் மீது உள்ள இந்த நாட்டம், ஓரளவுக்குத் தன்னைப் பற்றிய உணர்வே ஆகும்.
ஆனால், இந்த உணர்வு வேறு; தான் யார் என்று அறிந்து கொள்ளும் அறிவு வேறு.
தாயினாலும், தகப்பனாலும் நாம் இந்த பூமிக்கு வந்து விட்டோம். ஆனால், ஏன் வந்தோம்; நம் வருகைக்கான நோக்கம் என்ன என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
வந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்று பல பேர் மடிந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் வரவு- செலவு பார்த்திருக்கிறார்கள்.
சிலர் காதலித்து, வெற்றி காண முடியாமல் மாண்டிருக்கிறார்கள்.
சிலர் மணம் முடித்து, மக்களைப் பெற்று அவதிப்பட்டு இறந்திருக்கிறார்கள்.
சிலர், `பதவி பதவி’ என்று அலைந்து செத்து இருக்கிறார்கள்.
சிலர், `உதவி உதவி’ என்று ஓடி, ஆடி உயிரை விட்டிருக்கிறார்கள்.
இவர்களிலே, `தான் யார்’
என்பதைக் கண்டு கொண்டு உலகிற்குச் சொல்லிவிட்டு, மறைந்த ஞானிகள் எத்தனை பேர்?
அவர்கள் பெரும் கூட்டமாக இல்லை; விரல் விட்டு எண்ணக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.

நான் யார்?
சினிமாப் பாட்டு எழுதுகிறானே, அந்தக் கண்ணதாசன் தானா நான்?
தொடர்கதை எழுதுகிறானே, அந்தக் கண்ணதாசன் தானா நான்?
மதுவிலும் சிற்றின்பத்திலும் மயங்கிக் கிடப்பவன் தானா நான்?
அரசியல் வாண வேடிக்கையில் அடிக்கடி பங்கு கொள்கிறவன் தானா நான்?
நல்லது கெட்டது பாராமல் நடக்கும், ஒரு முரட்டு மாடுதானா நான்?
இன்றைக்கு ஐம்பத்திரண்டு தீபாவளிகளைக் கொண்டாடி, அடுத்தது என்ன என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான் யார்?
நான் ஏன் பிறந்தேன்?
நான் விரும்பிப் பிறக்கவில்லை என்றாலும், இதுவும் ஒரு நியாயமான கேள்விதான்.
இயற்கையின் நியதியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்
கும் நோக்கம் இருக்கும்போது, என் பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும்.
அது எனக்குப் புரியவில்லையே தவிர, ஏதோ ஒரு லட்சியத்துக்காகவே நான் சிருஷ்டிக்கப்பட்டு இருக்கிறேன் என்பது உண்மை.
ஒவ்வொரு ஜீவனும், ஒவ்வொரு லட்சியத்திற்காகவே படைக்கப்பட்டு இருக்கின்றன.
ஜீவனற்ற அஃறிணைப் பொருளும் அவ்வாறே.
தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும், வயல்களை வளப்படுத்தவும், உணவுப் பொருள்களுக்கு உரமாகவும் படைக்கப்பட்டு இருக்கிறது.
அந்தத் தண்ணீரில் வாழும் மீன் அழுக்கைத் தின்று நீரைச் சுத்தப்படுத்தவும், மனிதனுக்கும், பறவைகளுக்கும் ஆகாரமாகவும் படைக்கப்பட்டு இருக்கிறது.
ஒரு காக்கையின் பிறப்புக்கு கூட ஒரு சிறிய காரணம் இருக்கிறது.
அப்படி என்றால், என் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே?
காலையில் இட்லி, தோசை; மத்தியானம் சாப்பாடு; ராத்திரியில் மீண்டும் பலகாரம்; இதற்காகவா நான் படைக்கப்பட்டேன்?
தமிழில் எல்லாச் சொல்லுக்கும் பொருள் உண்டு என்று சூத்திரம் சொல்கிறது. அது போலவே எல்லா ஜீவனுக்கும் காரணம் உண்டு.
நான் முன்பே சொன்ன சனத்குமாரர்- நாரதர் கதை தான்.
எல்லாம் தெரிகிறது எனக்கு; என்னைத் தெரியவில்லை.
கண்ணாடியில் முகம் தெரிகிறது; மனம் தெரியவில்லை.
யோசித்துப் பார்த்தால் மனம் தெரிகிறது. ஆனால் அது ஏன் படைக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாகப் பற்றிக் கொண்டே போனாலும் கூட, நான் படைக்கப்பட்டதன் மூலக் காரணத்தை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.
`இப்படித்தான் இருக்கும், இதற்காகத்தான் இருக்கும்’ என்று ஒரு காரணத்தை நானே வகுத்துக் கொண்டு, என்னை நானே அறிய முற்படுகிறேன்.

இந்த ஒரு ஆன்மா, ஒரு லட்சம் ஆன்மாக்களுக்காவது வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவே, நான் படைக்கப்பட்டு இருக்கிறேன்.
நன்மை- தீமை புரியாமல், நியாய அநியாயம் தெரியாமல் தடுமாறும் மானிட ஜாதிக்கு, ஒரு அரிக்கேன் விளக்கையாவது ஏற்றி நான் வழிகாட்டியாக வேண்டும்.
நீதி சொல்வதில், நான் வள்ளுவனாக முடியாது. ஏன்? இன்னொரு வள்ளுவன் பிறக்கவே முடியாது.
ஆனால், என் அனுபவம் சுட்டிக் காட்டுகிற நீதிகளில் வள்ளுவன் சொல்லாததும் இருக்கக்கூடும்.
தர்மோபதேசம் செய்வதில் நான் வடலூர் வள்ளலாராக முடியாது. ஏன், இன்னொரு வள்ளலார் இந்தத் தலைமுறையில் பிறக்கப் போவதும் கிடையாது.
ஆனால், என் உடலில் பட்ட காயங்களில் வள்ளலார் காணாத காட்சிகளும் இருக்கக்கூடும்.
நான் நீண்ட தூரப் பிரயாணி.
மலைச் சரிவுகளிலும் பயணம் செய்து இருக்கின்றேன். சமவெளிகளிலும் பயணம் செய்திருக்கின்றேன்.
நான் யார் என்பது தெரியாத பிரக்ஞையற்ற நிலையிலேயே, அனுபவங்களைச் சேகரித்து இருக்கிறேன்.
இந்த உலகத்தை ஓரளவு எனக்குத் தெரியும்.
நான் எழுத்தாளனாக இருக்கிறேன்; ஆகவே, வறுமையை அறிவேன்.
அரசியலில் இருந்திருக்கிறேன்; ஆகவே, அயோக்கியத்தனம் என்ன என்பது புரியும்.
கலைத்துறையில் இருந்திருக்கிறேன்; ஆகவே, ஏற்ற இறக்கங்களை அறிவேன்.
எப்படி எல்லாம் வாழக்கூடாதோ, அப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறேன்.
ஆகவே, இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்லக்கூடிய யோக்கியதை எனக்கு உண்டு.
முதன் முதலில் நான் நாத்திகனாக இருந்த காலங்களை எடுத்துக் கொள்கிறேன்.
இப்போது நான் நாத்திகன்.
`கடவுள் இல்லை’ என்று மிகவும் அழுத்தம் திருத்தமாக நாக்கு வலிக்கச் சொல்லும் ஒரு நாத்திகன்.
என் பின்னால் வாருங்கள்.

சில தத்துவங்கள்

 

சக்திக்கும் சிவனுக்கும் நாரதர் ஒரு மாம்பழத்தை அளித்தார்.
சக்தி தேவிக்கு அதை மூத்த மகனுக்கு அளிக்க வேண்டும் என்ற ஆசை.
சிவபிரானுக்கோ இளைய மகனுக்குத் தர வேண்டும் என்று விருப்பம்.
பிள்ளைகள் போட்டியே, பெற்றோர்கள் போட்டியாகி விட்டது.
`சரி, எதற்கு வம்பு? உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே இந்த மாங்கனி!’ என்று கூறிவிட்டார் சிவன்.
முருகனிடம் மயில் இருக்கிறது. கணபதியிடம் மூஞ்சூறு தானே இருக்கிறது!
மயில் மீது ஏறி முருகப் பெருமான் உலகை வலம் வரத் தொடங்கினார்.
தாய்-தகப்பனை மூன்று முறை சுற்றினார்; கையை நீட்டினார் விநாயகப் பெருமான். மாங்கனி அவருக்குப் போய்விட்டது.
இது கதை!
`உலகத்தைவிட மிகப் பெரியவர்கள் தாயும் தகப்பனுமே’ என்ற தத்துவத்தை இந்துக்கள் எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார்கள்!
மகாலட்சுமிக்குச் சுயம்வரம்.
சாதாரண லட்சுமிக்குத் திருமணம் என்றாலே, ஊர் எவ்வளவு அல்லோலகல்லோலப் படுகிறது?
பத்திரிகைகளில் எல்லாம் அந்தச் செய்திதானே வருகிறது.
மகாலட்சுமிக்கே சுயம்வரம் என்றால் ஏழு உலகங்களும், தேவாதி தேவர்களும் திரளக்கூடும் இல்லையா?
முப்பத்து முக்கோடி தேவர்களும் கழுத்தை நீட்டினார்கள்.
ஆனால், மகாலட்சுமி ஒரு நிபந்தனை வைத்தாள்.
`என்னை எவன் விரும்பவில்லையோ, அவனைத்தான் மணப்பேன்’ என்றாள்.
`அவளை விரும்பாதது மாதிரி’ தேவர்களால் நடிக்கக்கூட முடியவில்லை.
ஏழு உலகங்களிலும் நடந்தாள், மகாலட்சுமி.
கடைசியில் பாற்கடலில் நடந்தாள்.
அங்கே பள்ளி கொண்டிருந்தது ஒரு கரிய திருமேனி.
மகாலட்சுமியை அது லட்சியம் செய்யவே இல்லை.
`என்ன, உங்களுக்கு ஆசையே இல்லையா?’ என்று கேட்டாள் மகாலட்சுமி.
`நீ யாரம்மா?’ என்று கேட்டது திருமேனி.
`நான் தான் மகாலட்சுமி!’ என்றாள்.
`அப்படியென்றால்…?’ என்று அது திருப்பிக் கேட்டது.
மகாலட்சுமிக்குச் சிரிப்பு வந்தது.
`உன்னை அறிவது தான் என் வேலையா? உலகத்தில் எனக்கு வேறு வேலை இருக்கிறது!’ என்றார் திருமால்.
அவர் கழுத்தில் மாலையைப் போட்டுக் காலடியிலேயே உட்கார்ந்து விட்டாள் மகாலட்சுமி.
உலக ரட்சகன் எதிலும் மயங்கி விடுவதில்லை என்பதையும், மனிதனும் அப்படி மயங்காமல் இருக்கும் வரைதான் மரியாதை என்பதையும் இந்தக் கதை எவ்வளவு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது!
ஒரு அரண்மனை, அதன் மேன்மாடத்திலே ஒரு ராஜா. அவர் பக்கத்திலே அழகான ராணி. இருவரும் பழங்களை உரித்துத் தின்றபடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சுளைகளைத் தின்றுவிட்டு தோல்களை வெளியே எறிகிறார்கள்.
ஒரு சந்நியாசி. அவனுக்கோ பசி. வெளித் திண்ணையில் அவன் உட்கார்ந்திருக்கிறான். ராஜா தூக்கியெறிந்த தோல்களை எடுத்து அவன் தின்கிறான். சேவகர்கள் பார்க்கிறார்கள். சந்நியாசியை இழுத்துக் கொண்டுபோய் ராஜா முன்னால் நிறுத்துகிறார்கள்.
அவனைச் சவுக்கால் அடிக்கும்படி ராஜா ஆணையிடுகிறான்.

அடி விழ, அடி விழச் சந்நியாசி சிரிக்கிறான்.
`ஏன் சிரிக்கிறாய்?’ என்று ராஜா கேட்கிறான்.
`அரசே, தோலைத் தின்றவனுக்கே இவ்வளவு அடி என்றால் சுளையைத் தின்றவனுக்கு எவ்வளவு அடி என்று எண்ணிப் பார்த்தேன். சிரிப்பு வந்து விட்டது!’ என்றான் சந்நியாசி.
பாவத்தின் அளவுக்கே தண்டனை என்பதற்கு இதை விடவா வேறு கதை வேண்டும்?
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுக்குத் துலாபாரம்.
துலாபாரம் என்றால் இந்தக் காலம் போல வெங்காயம், விறகு, பத்துக்காசு நாணயம் அல்ல. தங்கத்திலே துலாபாரம்!
சத்தியபாமா தன் நகைகளையெல்லாம் கழற்றி வைக்கிறாள்.
தான் செல்வம் படைத்தவள் என்பதைக் காட்டத் தாய் வீட்டுச் சீதனங்களையெல்லாம் கொண்டுவந்து வைக்கிறாள்.
தட்டு நகரவில்லை.
மெதுவாக வருகிறாள் ருக்மணி.
ஒரு துளசி தளத்தைக் கொண்டு வந்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் கால்களைத் தொட்டு வணங்கி விட்டு, அதைத் தட்டிலே வைக்கிறாள்.
என்ன ஆச்சரியம், தராசு சமமாகிறது!
ஆணவத்தோடு கொடுக்கப்படும் தங்கத்தைவிட அன்போடு கொடுக்கப்படும் இலை தழைகளுக்குச் சக்தியும், மரியாதையும் அதிகம் என்பதை இந்தக் கதை நிரூபிக்கவில்லையா?
பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர் வந்தார்.
`சுவாமி! ஒரு சந்தேகம்!’ என்றார்.
`என்ன?’ என்று கேட்டார் பரமஹம்சர்.
`நீங்கள் விஷ்ணு என்கிறீர்கள், சிவன் என்கிறீர்கள். அதே விஷ்ணுவின் அவதாரம் தான் ராமனும், கிருஷ்ணனும் என்கிறீர்கள். ஒரே விஷ்ணுவுக்கு இத்தனை வடிவங்கள் எதற்கு? ஏன் ஒரே கடவுளாக வைத்துக் கொண்டால் என்ன?’ என்று கேட்டார்.
அதற்குப் பரமஹம்சர் உடனே, `ஐயா! ஒரு விஷயம். நீங்கள் ஒருவர் தான். ஆனால் உங்கள் அப்பாவுக்கு மகன், மகனுக்கு அப்பா, மனைவிக்கு கணவன், மாமனாருக்கு மாப்பிள்ளை, மாப்பிள்ளைக்கு மாமனார், மைத்துனனுக்கு மைத்துனன், பாட்டனுக்குப் பேரன், பேரனுக்குப் பாட்டன். உங்கள் ஒருவருக்கே இத்தனை வடிவங்கள் இருக்கும்போது, ஈஸ்வரனுக்கு இருக்கக் கூடாதா?’ என்றார்.
கேள்வி கேட்டவர் முகத்திலே அசடு வழிந்தது.
பல தெய்வ வணக்கம் நியாயம் என்பதற்கு இதற்கு மேல் ஒரு உதாரணம் தேவையா?
இந்தப் பல தேவதை வணக்கத்தைப் பற்றி காஞ் சிப் பெரியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
மனுஷ்யர்களின் மனப்பான்மைகள் பல தினுசாக இருக்கின்றன. ஒவ்வொரு விதமான மனப்பான்மை உள்ளவர்களையும் ஆகர்ஷித்து, அவர்களைப் பக்தி செலுத்த வைத்து, அவர்களுடைய மனதைச் சுத்தம் செய்து, சித்தத்தை ஏகாரப் (ஒருமைப்) படுத்தவே பரமாத்மா பலப்பல தேவதா ரூபங்களாக வந்திருக் கிறது.
`இந்த இந்துக்களுக்கு எத்தனை கோடிச் சாமிகள்!’ என்று அந்நிய மதத்தவர்கள் நம்மைக் கேலி செய்வதுண்டு. உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வாமி இருப்பதாக விஷயம் தெரிந்த எந்த இந்துவும் எண்ணவில்லை. இந்த வைதிக மதம் ஸ்வாமி ஒருவரே என்று கண்டது மட்டுமில்லை; இந்த ஜீவனும்கூட அதே ஸ்வாமி தான் என்று வேறெந்த மதமும் கண்டு பிடிக்காததையும் கண்டு பிடித்திருக்கிறது. எனவே பிரபஞ்ச வியாபாரத்தை நடத்துகிற மகாசக்தியாக ஒரு ஸ்வாமி தான் இருக்கிறது என்பதில், எந்த விஷயமறிந்த இந்துவுக்கும் சந்தேகமில்லை. ஆனால், அந்த ஒரு ஸ்வாமி பல ரூபத்தில் வர முடியும்; அப்படிப்பட்ட யோக்கியதையும் கருணையும் அதற்கு உண்டு என்று இவன் நம்புகிறான்.
ஒரே ஸ்வாமி நம் தேசத்தின் மகா புருஷர் களுக்கும் பல ரூபங்களில் தரிசனம் தந்திருக் கிறார். அந்தந்த ரூபங்களுக்குரிய மந்திரம், உபாசனா மார்க்கம் எல்லாவற்றையும் அந்த மகா புருஷர்கள் நமக்குத் தந்திருக்கிறார்கள். இவற்றை முறைப்படி அனுஷ்டித்தால் நாமும் அந்தந்தத் தேவதை அனுக்கிரகத்தைப் பெற முடியும். எந்தத் தேவதையாக இருந்தாலும் சரி, அது முடிவில் பரமாத்மாவே! ஆகையால், நாம் சந்தேகம் கொள்ளாமல் பூரண சிரத்தையோடு பக்தி வைத்தால் அது நமக்கு சம்ஸார பந்தத்திலிருந்து விடுதலை தரும். இந்த விடுதலைக்கு நாம் பக்குவப்படுவதற்கு முன் நம் லெளகீக வேண்டுதலைக் கூட நிறைவேற்றி அனுக்கிரகிக்கும்.
அவரவர் மனதைப் பொறுத்து ஒன்றில் பிடிமானம் கொள்வதற்கென்றே இத்தனைத் தேவதைகள் இருக்கின்றன. தாயாரிடம் குழந்தை போல் பரமாத்மாவை அனுபவிக்க வேண்டும் என்கிற மனப்பான்மை உடையவனுக்கு, அம்பாள் உபாசனை இருக்கிறது. ஒரே சாந்தத்தில் அழுந்திப் போக வேண்டும் என்ற மனோபாவம் உள்ளவனுக்குத் தட்சிணாமூர்த்தி இருக்கிறார். ஆனந்தமாக ஆடிப் பாடி பக்தி செலுத்துவதற்குக் கிருஷ்ண பரமாத்மா இருக்கிறார்.
இஷ்டம் இருந்தாலும், இஷ்டம் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு மகாசக்தியிடம் பக்தி செய்வது என்று ஏதோ ஒரு தத்துவத்தை மட்டும் காட்டாமல், நம் மனசுக்கு எப்படி இஷ்டமோ, அதற்கு அனுசரணையாகவே அந்த மகா சக்தியை ஒரு மூர்த்தியில் பாவித்து, வெறும் தத்துவத்தை ஜீவனுள்ள ஒரு அன்பு உருவமாகப் பாவித்து பக்தி செய்வதற்கு நம் மதத்திலுள்ள `இஷ்ட தேவதை’ வழிபாடே வழி வகுக்கிறது. அன்போடு உபசரிக்க வேண்டுமானால் உபாசனைக்குரிய மூர்த்தி நம் மனோபாவத்துக்குப் பிடித்தமானதாக இருந்தால் தானே முடியும்? இதனாலேயே இஷ்ட தேவதை என்று தனக்குப் பிடித்த மூர்த்தியை உபாசிக்க நமது மதம் சுதந்திரம் தருகிறது. `நம் மனப் போக்குக்குப் பிடித்தது’ என்கிற நிலையில் ஆரம்பத்தில் ஏதோ மூர்த்தியை இஷ்ட தேவதையாக்கிக் கொண்டாலும், போகப் போக, அதனிடம் உண்மையான பக்தி உண்டாக உண்டாக, `நமக்கென்று என்ன ஒரு தனி மனப்போக்கு?’ என்று அதையும் விட்டுவிட அந்தத் தேவதையே அனுக்கிரகம் செய்யும்.

அவரவரும் தமக்கு இஷ்டமான தேவதையை உபாசிக்கும் போதே மற்றவர்களுடைய இஷ்ட தேவதைகளைத் தாழ்வாக எண்ணக்கூடாது. நமக்கு எப்படிப் பரமாத்மா அனுக்கிரகம் பண்ணுகிறாரோ அப்படியே மற்றவர்களுக்கு மற்ற ரூபங்களின் மூலம் அனுக்கிரகம் பண்ணுகிறார் என்று தெளிவு பெற வேண்டும். `அந்த அந்தத் தேவதைக்குரிய புராணத்தைப் பார்த்தால் அது ஒன்றே ஸ்வாமி, மற்ற தேவதையெல்லாம் அதற்குக் கீழானவை. இதை அவை பூஜை செய்தன. இதனிடம் அவை தோற்றுப் போயின என்றெல்லாம் இருக்கிறது’, என்று கேட்கலாம். இதற்கு `நஹி நிந்தா நியாயம்’ என்று பெயர். அதாவது இதர தேவதைகளை நிந்திப்பது பெளராணிகரின் நோக்கமல்ல. இந்த ஒரு தேவதையை ஆராதிப்பவருக்கு மனது சிதறாமல் இது ஒன்றிடமே தீவிரமாகப் பற்றுதல் ஏற்படுத்த வேண்டும் என்பதே புராணத்தின் நோக்கம்! இதற்காகவே இந்தத் தேவதைக்கு மட்டும் மற்ற தேவதைக்கு இல்லாத உத்கர்ஷம் சொல்லப்படுகிறது.
மகானுபாவர்களாக இருந்தவர்கள் எல்லாத் தேவதைகளையும் சமமாகவே பார்த்தார்கள். மகா கவிகளான காளிதாசன், பாணன் முதலியவர்களும், `ஒரே வஸ்து தான் பல மூர்த்திகளாகவும் வருகிறது’ என்று சந்தேகமில்லாமல் கூறுகிறார்கள்.
பக்தர்களின் மனோபாவத்தை பொறுத்துப் பரமாத்மா பல ரூபம் கொள்கிற போதே, பிரபஞ்சத்தில் தன்னுடைய வெவ்வேறு காரியங்களைப் பொறுத்தும் வெவ்வேறு ரூபங்களை எடுத்துக் கொள்கிறது. ரஜோ குணத்தால் சிருஷ்டி செய்யும் போது அதற்கேற்ப பிரம்மாவாகிறது. ஸத்வ குணத்தால் பரிபாலிக்கும் போது அதற்கேற்ப மகா விஷ்ணுவாகிறது; தமோ குணத்தால் சம்ஹரிக்கும் போது அதற்குரிய முறையில் ருத்ர ரூபம் கொள்கிறது. இந்த மூன்றைப் பாணனும், காளிதாசனும் ஒரே சக்தியின் மூன்று வடிவங்களாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த மூன்றுக்கும் பொருந்துவது முப்பத்து முக்கோடி தேவதைகளுக்கும் பொருந்தும்.
எனவே, `என் தெய்வம் உசந்தது; உன் தெய்வம் தாழ்ந்தது’ என்று சண்டை பிடிப்பதில் அர்த்தமே இல்லை. ஆனாலும், நம் தேசத்தில் பல இஷ்ட தெய்வங்கள் இருந்தாலும் கூடப் பிரதானமாக இருந்து வரும் சைவத்திற்கும், வைணவத்திற்கும் இடையே ரொம்பவும் சண்டை நடந்துதான் வந்திருக்கிறது. நன்றாக ஆலோசித்துப் பார்த்தால் இந்த இரண்டும் ஒரே வஸ்து தான் என்ற ஞானம் பெறுவோம்.

பெரியது கேட்பின்…

 

சனத்குமாரர் என்ற மகாயோகியை நாரதர் அணுகி, `ஐயனே! எனக்கு உபதேசம் செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
`நல்லது நாரதா! உபதேசம் செய்வதற்கு முன்னால் ஒரு வார்த்தை. உனக்கு ஏற்கெனவே என்னென்ன தெரியும் என்பதை முன்கூட்டிச் சொல்லிவிடு. அதன் பிறகுதான் எதை உபதேசிக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்!’ என்றார் சனத்குமாரர்.
நாரதர் தான் கற்ற வித்தைகளைக் கூறத் தொடங்கினார்.
`குருதேவா! எனக்கு ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் தெரியும். இதிகாச புராணங்கள் தெரியும். வேதங்களின் வேதமாகிய இலக்கணம், பிதுரு, கல்பம், கணித சாஸ்திரம், சகுன சாஸ்திரம், கால நிர்ணயம், தர்க்க சாஸ்திரம், நீதி சாஸ்திரம், நிருத்தம், பூதவித்தை, போர்முறை, வான சாஸ்திரம், சர்ப்ப வித்தை, கந்தர்வ வித்தை, இவை அனைத்துமே தெரியும்’ என்றார் நாரதர்.
அப்படிச் சொன்ன நாரதர் தன் சந்தேகம் ஒன்றையும் தெளிவுபடுத்தினார்.
`தேவா! இவ்வளவு வேத மந்திரங்களை நான் கற்றுக் கொண்டேனே தவிர, துன்பங்களைக் கடந்து செல்லும் ஆத்ம யோகத்தை அறிந்தவனாக இல்லை. `எவனொருவன் ஆத்மாவை அறிந்து கொள்கிறானோ அவனே துன்பத்தைக் கடப்பான்’ என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். தயை கூர்ந்து எனக்கு நீங்கள் துன்பத்தைக் கடக்கும் மார்க்கத்தைக் கற்றுத் தர வேண்டும்’ என்றார், நாரதர்.
சனத்குமாரர் சிரித்தார்.
`நாரதரே! நீர் கற்றுக் கொண்ட வித்தைகள் எல்லாம் பெயரளவில் வித்தைகளே. அவற்றை விடப் பெரிய விஷயங்கள் சில உண்டு. அவற்றின் மூலமே ஆத்மாவை அறிய முடியும்’ என்றார் அவர்.
`எவையெவை பெரியவை?’ என்று கேட்டார் நாரதர்.
`நீ சொன்ன பெயர்களை எல்லாம் விட வாக்குப் பெரியது. அந்த வாக்கைவிட மனது பெரியது. எப்படி ஒரு கைப்பிடிக்குள் இரண்டு நெல்லிக்காயோ, இலந்தைப் பழமோ அடங்கி விடுகிறதோ, அப்படியே பெயரும், வாக்கும் மனதுக்குள் அடங்கி விடும். மனத்தால் நினைத்த பின்தானே நீ சொல்லுகிறாய். செயலில் இறங்குகிறாய். அந்த மனதுதான் ஆத்மா. அந்த மனதுதான் உலகம். அந்த மனது தான் பிரம்மம். ஆகையால் மனதை நேசிப்பாயாக. அதே நேரத்தில் இன்னொன்று: சங்கற்பம் செய்வது மனதைவிடப் பெரியது. எப்போது ஒருவன் சங்கற்பம் செய்யத் தொடங்குகிறானோ, அப்போது யோசிக்கத் தொடங்குகிறான். அது மனது. உடனே பேச ஆரம்பிக்கிறான்; அது வாக்கு. அந்த வாக்கு பெயர் வடிவமாகிறது. அதில் மந்திரங்கள் ஒடுங்கி விடுகின்றன. மந்திரங்களில் கருமங்கள் ஒடுங்கி விடுகின்றன. அதே நேரத்தில் சங்கற்பத்தைக் காட்டிலும் தியானம் பெரியது. பூமி தியானம் செய்கிறது. வானம் தியானம் செய்கிறது. மலைகள் தியானம் செய்கின்றன. ஆகையால் பெருமைக்குரிய மனிதர்கள் தியான பலத்தில் ஒரு அம்சத்தையாவது பெற்றிருக்கிறார்கள். அற்பர்களுக்கும் கலகக்காரர்களுக்கும் அது வாய்ப்பதில்லை.’
`தியானத்தை விடவும் பெரியது எது என்று கேட்கிறாயா? விஞ்ஞானம் பெரியது. ஆத்ம பலம் விஞ்ஞானத்தைக் காட்டிலும் பெரியது. விஞ்ஞானம் என்பது அனுபவ விஞ்ஞானம். ஆத்ம பலம் படைத்த யோகி நூறு விஞ்ஞானவான்களை ஆட்டி வைக்க முடியும். ஒருவன் பலமுள்ளவனாக இருந்தால் அவன் படுக்கையில் கிடக்க மாட்டான்; எழுவான்; நடப்பான்; சேவை செய்வான்.’
நாரதருக்கும் சனத்குமாரருக்கும் நடந்த இந்த விவாதத்தில் ஆத்ம பலமே பொதுவாகப் பேசப்படுகிறது.

ஆத்ம பலம் என்பது என்ன?
தன்னை உணர்தல்.
`நானே பிரம்மம்! நானே ஈஸ்வரன்’ என்ற நிலையை எய்துதல்.
கடமைகளை ஒழுங்காகச் செய்வதன் மூலம் ஆத்மா பலம் பெறுகிறது.
ஒரு கதை உண்டு.
ஒரு நதியில் வெள்ளம் வந்து, பாலத்தின் இரண்டு பக்கங்களையும் அடித்துக் கொண்டு போய் விட்டது. பாலத்தின் நடுவே ஒரு குடும்பம் நின்று தத்தளித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட ஒரு பணக்காரர், ஒரு ஓடக்காரனைக் கூப்பிட்டு அவர்களைக் காப்பாற்றும்படியும் நூறு ரூபாய் தருவதாகவும் சொன்னார்.
ஓடக்காரன் அவர்களைக் காப்பாற்றினான்.
நூறு ரூபாய் எடுத்து அவர் கொடுத்தார்.
அவன் `இது என் கடமை’ என்று கூறிப் பணத்தை வாங்காமல் மறுத்து விட்டான்.
இந்த பலன் கருதாத கருமமே `கடமை’ என்பது.
இதைக் கருமம் என்பதைவிடத் `தர்மம்’ என்பது பொருந்தும்.
இத்தகைய தர்மம் தலைமாட்டில் நின்று காப்பாற்றும்.
`நான் லண்டனுக்குப் போனேன்; நான் பாரிஸுக்குப் போனேன். அனுபவித்தேன்’ என்ற அகங்காரம் கடைசிக் காலத்தில் எந்த உதவியையும் செய்யாது.
முதலில் இந்த `நான்’ தன்மையை வென்றவர்கள் தான் பெரிய யோகிகளாக மாறுகிறார்கள்.
அந்த யோகிகளிடம் இறைவனே வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால், `பொன்னைக் கொடு, பொருளைக் கொடு’ என்று கேட்க மாட்டார்கள்; `என்னையே எனக்குக் கொடு’ என்றுதான் கேட்பார்கள்.
இப்படி தன்னை உணர்ந்து கொண்டுவிட்ட மனிதன் மரணத்தில் இருந்து விடுதலை பெற்று விடுகிறான்.
`அவன் செத்து விட்டான்’ என்று சொன்னால் `அவன் உடம்பு தான் செத்து விட்டது. ஆத்மா சாகவில்லை’ என்பது பொருள்.

`என்னையே எனக்குக் கொடு’ எனும் தத்துவத்தில் ஆன்மாவே உணரப்படுகிறது. அதற்குள் இருக்கும் ஈஸ்வரன் அறியப்படுகிறான்.
துயரங்கள் தோன்றாமல், சிரித்துக் கொண்டே அவன் மரணமடைந்து விடுகிறான். அதாவது அவன் உடம்பு அழிந்து விடுகிறது.
இந்த ஆன்ம யோகத்தை மிக ஆழமாக நமது சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் சிந்தித்தார்கள்.
இமய மலையில் குடி புகுந்தவன் மாத்திரை வாங்குவதற்காக டாக்டரைப் பார்த்ததுண்டா?
ஆன்மாவை உணர்ந்து கொண்டவன் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது?
அவனுக்குச் சொல்வதற்குத்தான் பிறரிடம் என்ன இருக்கிறது?

நாத்திக வாதம்

நாத்திக வாதம் ஒரு மாய மான். கற்பனை மிக்க சொற்பொழிவுகளிலேயே அது உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. இப்போது யாரும் சொல்லாமல் தானாகவே செத்துவிட்டது.
நான் நாத்திகனாக இருந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன்.
எவ்வளவு போலித்தனமான புரட்டு வேலைகளுக்கு நம்மை ஒப்புக் கொடுத்திருந்தோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போதே, எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது.
கடவுள் இல்லை என்று மறுப்பவன் கால காலங்களுக்கு உயிரோடிருப்பானானால், `இல்லை’ என்ற எண்ணத்தையே நான் இன்றும் கொண்டிருப்பேன்.
அவரவரும் பெற வேண்டிய தண்டனையைப் பெற்றுப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அவர்களுடைய வாதங்கள் எல்லாம் செல்லு படியாகாமல், விலையாகா மல் கிடக்கின்றன.

நாத்திகன் எழுதிய போற்றத்தக்க புத்தகம் என்று எதுவும் இல்லை.
நாத்திக வாதத்தில் ஆழமோ, அழுத்தமோ, நியாயமோ இல்லாததால், அவர்களது எழுத்துக்கள் காலத்தால் செத்து விட்டன.
தேவாரமும், திருவாசகமும் நிற்பதைப் போல, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அவை நிற்க வேண்டாம். ஆனால், அவர்கள் தலைமுறையிலேயே அவை அழிந்து போனது தான் ஆச்சரியம்.
இதில் ஆச்சரியம் என்ன ஆச்சரியம்; அதுதான் நடக்கக் கூடியது.
மேலை நாட்டில் கிறிஸ்துவத்திற்கு எதிராக நாத்திகர்கள் தோன்றினார்கள். அவர்களை எதிர்த்துக் கிறிஸ்துவம் போர் புரிந்தது.
இஸ்லாத்தை எதிர்த்து நாத்திகம் தோன்றவே முடியாதபடி அது பயங்கர ஆயுதத்தோடு நிற்கிறது.
இந்து மதத்தில் நாத்திகம் தோன்றுவது சுலபம். காரணம் அது சாத்விக மதம். இது யாரையும் எதிர்த்துப் போர் புரியாது. காலத்தால் தன் கடமைகளைச் செய்து கொண்டே போகும். அதன் விளைவுகளுக்கு இறைவனையே பொறுப்பாக்கும்.
அப்படி இந்து மதம் போர் புரியாமலேயே நாத்திகம் மடிந்து விட்டது.
காரணத்தை ஆராய்வது கடினமல்ல. அதன் வாதங்கள் போலித்தனமானவை; அவ்வளவுதான்.
பல்லாயிரம் ஆண்டு காலமாக வளர்ந்து நிற்கும் ஒரு இமயமலையைச் சில செம்மறி ஆட்டுக் குட்டிகள் சாய்த்து விட முயன்றன. அவற்றின் கொம்பொடிந்தது தான் மிச்சமே தவிர, மலை, மலையாகவே நிற்கிறது.
பழைய திராவிடர் கழகச் செயலாளர்கள் எல்லாம் திருப்பதியில் அங்கப் பிரதட்சணம் வருவதை நான் பார்க்கிறேன்.
இங்கர்சால் போன்ற மேலை நாட்டு அறிஞர்கள் மத குருமார்களின் தவறுகளுக்கு எதிராகப் போர் புரிந்தார்களே தவிர, இறைவனே இல்லை என்ற வாதத்தில் அவர்கள் உறுதியாக இல்லை. அவர்களுக்குள்ளாகவே சபலமும், சலனமும் இருந்தன. ஒரு துளி நீரில் இவ்வளவு பெரிய உடம்பு முளைத்தெழுவதும், ஒரு சிறு காற்றில் அது உலாவிக் கொண்டிருப்பதும், ஒரு பொறி நெருப்பில் அது அழிந்து விடுவதும் ஏதோ ஒரு சக்தியின் இயக்கம் என்பதை அவர்களும் மறுக்க இயலவில்லை.

இறைவனது இயக்கம் இல்லை என்றால் காலங்களும் பருவங்களும் ஏது?
சந்திர கதி, சூரிய கதி ஏது?
நாத்திகன் இதை நம்பாமல் இல்லை. இதை எதிர்ப்பதன் மூலம் புரட்சிக்காரன் என்று பெயர் வாங்க விரும்பினான். நம்புகிற மக்களிடம் பணம் வாங்க விரும்பினான்.
என்னுடைய நண்பர் ஒருவர், அந்தக் கட்சிகளில் மிகப் பெரிய தலைவர். ஒரு கோயிலுக்கு இரண்டு லட்ச ரூபாய்களுக்கு மேல் கொடுத்திருக்கிறார்.
நான் அவரைக் கேட்டபோது, `ஏதோ ஒரு பொருளை மட்டுமே தான் கொடுத்ததாக’க் கூறினார். கும்பகோணத்தில் இருந்து அடிக்கடி ஜாதகம் எழுதி வாங்கி வருகிறார். ஆனாலும் மேடைகளில் அவர் இங்கர்சால் ஆகிறார்.
கடவுளை அதிகமாகக் கேலி செய்த இன்னொரு நண்பர். அவர் ஒரு நடிகர். சமீபத்தில் திருப்பதிக்குப் போய் வந்து, `ஏதோ ஒரு சக்தி இருக்கு! இருக்கு!’ என்கிறார்.
மேடைகளில் நடைபெறும் வார்த்தை விளையாட்டுகளில் மயங்கி நாத்திகர்களானவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவன். `கருப்புச் சட்டைக்காரன்’ என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டவன்.
எல்லாம் ஒரு சில ஆண்டுகளே!
நாத்திகனாக இருக்கும் வரையில் எதைப் பற்றியும் அதிகமாகப் பாட முடியவில்லையே?
நாத்திகத்தில் என்ன இருக்கிறது பாடுவதற்கு?
ஆத்திக உள்ளம் வந்த பிற்பாடுதான் ஆயிரக்கணக்கான பாடல்கள் பிறந்தன.
கடல் போன்று பரந்து விரிந்து நிற்பது, கடவுள் தன்மை.
நீந்தத் தெரிந்தவன் அந்தக் கடலில் இறங்கி விட்டால், ஒரே உற்சாகம் தான்.
நான் இன்னும் பார்க்கிறேன். கவிஞர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் சிலர், மேடைகளில் பாடும்போது, `நான் பெரியார் பாசறையில் புடம் போட்டு எடுக்கப்பட்டவன்’ என்கிறார்கள். அவர்கள் கவிதைகள் நிற்கவும் இல்லை; அவை கவிதைகளாகவும் இல்லை.
பாசறையில் எப்படிப் புடம் போடுவதோ எனக்கும் புரியவில்லை.
எல்லாம் போலித்தனம்! அபத்தம்!
`கண்ணதாசன் எழுதுகிற அளவு நம்மால் எழுத முடியவில்லையே’ என்று ஆதங்கப்படுகிறார்கள்.
நான் எழுதுகிற அளவுக்கு அவர்கள் எழுத வேண்டுமானால், முதலில் தாங்கள் இந்துக்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
வேத, உபநிஷத, இதிகாச புராணங்களைப் படிக்க வேண்டும்.
வெறும் வார்த்தை விளையாட்டுகள் பலிக்க மாட்டா.
மீண்டும் சொல்கிறேன், நம்முடைய பல்லாண்டுக் கால மூதாதையர்கள் ஒன்றும் முட்டாள்களல்லர்.
திருமணத்துக்கென்று அவர்கள் சில சடங்குகள் வைத்திருக்கிறார்கள். அவை ஒன்றும் பார்ப்பனச் சடங்குகளல்ல.
அவை பார்ப்பனச் சடங்குகள் ஆனால், சிலப்பதிகாரமும் பார்ப்பனக் காவியமாக வேண்டும்.
அந்தச் சடங்குகளில் இருந்து மாறுபட்டுச் சுயமரியாதைத் திருமணம் என்ற பெயரில் நாத்திகர்கள் ஒரு கோமாளிக் கூத்தை ஏற்படுத்தினார்கள்.
ஆடு, மாடுகள் குட்டிச் சுவர் களுக்கிடையே கூடிக்கொள்கிற மாதிரி, அது ஒரு திருமண முறை.

தலைவர் முன்னிலையில் மாலை மாற்றுவதாம்! தாலியும் கிடையாதாம்!
மாலையைக் கழற்றிய உடனே மணப் பந்தமும் அகன்று விடுமே?
நாத்திகன், சடங்குகளை மட்டுமல்ல; மாதரார் கற்பையும் மதித்ததில்லை.
`கற்பு என்ன, கற்பு! ஒருத்திக்கு ஒருவன் என்பதே முட்டாள்தனம்!’ என்று பேசியவர் பெரியார்.
ஆகவே, நாகரிக உலகத்தில் ஒரு காட்டுமிராண்டி தர்மத்தை உருவாக்க வந்தவர்களே, நாத்திகர்கள்.
சில சுய மரியாதைத் திருமணங்களுக்கு நான் தலைமை வகித்திருக்கிறேன்.
தாலி அறுப்பதைப் பற்றியும், விதவையாவதைப் பற்றியும் சீர்திருத்தவாதிகள் பேசுவார்கள்.
சாதாரண மனித நாகரிகத்துக்கு ஒத்து வராத மடத்தனம் இது என்பது, அவர்களுக்கு மறந்தே போய்விட்டது.
எங்களூரில், `நாத்திகனை நம்பி வீட்டுக்குள் விடாதே’ என்பார்கள்.
`அவன் பண்பாடு தெரியாதவன். பவித்திரமில்லாதவன். யாருடைய பெண்டாட்டியையும் கை வைத்து விடுவான்’ என்பார்கள்.
தெய்வத்திற்குப் பயப்படாதவன் வேறு எந்த நியாயத்துக்குப் பயப்படுவான்?
பழைய காலங்களில் எது எது எங்கெங்கு இருக்க வேண்டுமோ, அது அது அங்கங்கே இருந்தது.
இப்போதோ, கழுதை கட்டிலில் படுத்திருக்கிறது! யானை தொட்டிலில் தூங்க ஆசைப்படுகிறது; பூனை புல்லாங்குழல் வாசிக்க விரும்புகிறது; புள்ளிமான் உப்புக்கண்டமாகிறது.
நாகரிகத்திலேயே தர்மம் தடம் புரளுமானால், நாத்திகத்தின் விளைவு என்ன?
எனக்குத் தெரிந்தவரை, நாத்திகம் பேசிய உண்மையானவர்களில் பலர் சொத்தை இழந்தவர்கள். சில உத்தமத் தொண்டர்கள், பெண்டாட்டியை இழந்தார்கள்.
அக்கிரமக்காரர்கள் மட்டுமேதான் அனுபவித்தார்கள்.
பூஜை அறைக்கும், குளிக்கும் அறைக்கும் பேதம் தெரிந்தவன், ஆத்திகன்.
மல ஜலம் கழிக்கும் இடத்திலேயே சாப்பிட்டுப் பழகியவன் நாத்திகன்.
தாய்க்கும், தாரத்திற்கும் பேதம் தெரிந்தவன், ஆத்திகன்.
எதுவும் தாரம்தான் என்று கருதுகிறவன், நாத்திகன்.
தர்மம் தர்மம் என்று பயப்படுகிறவன், ஆத்திகன்.
அனுபவிப்பதே தர்மம் என்று நினைப்பவன், நாத்திகன்.
ஆத்திகன் மனிதனாக வாழ்ந்து தெய்வமாகச் சாகிறான்.
நாத்திகன், மனிதன் போலக் காட்சியளித்து, மிருகமாகச் சாகிறான்.
உண்மையிலேயே ஒருவன் நாத்திகம் பேசினால் அவன் உணர்ச்சியற்ற ஜடம்; ஆராயும் அறிவற்ற முடம்.
பகுத்தறிவு ஒழுங்காக வேலை செய்யுமானால், அது கடைசியாக இறைவனைக் கண்டுபிடிக்குமே தவிரச் சூனியத்தைச் சரணடையாது.

தெய்வத்தை அணுகும் முறை

 

உலகத்திலேயே மனிதன் அதிகமாக நேசிக்கக் கூடியது அமைதியும், நிம்மதியுமே.
பணம் வரலாம்; போகலாம். பல தாரங்களை மணந்து கொள்ளலாம்; வீடு வாங்கலாம்; விற்கலாம்; நிலம் வாங்கலாம்; சொத்தைப் பெருக்கலாம்; எல்லாம் இருந்தும் கூட நிம்மதி இல்லை என்றால் அவன் வாழ்ந்து என்ன பயன்?
சேர்க்கின்ற சொத்து நிம்மதிக்காக.
கட்டுகிற மனைவி நிம்மதிக்காகவே.
தேடுகின்ற வீடும், நிலமும் நிம்மதிக்காக.
எப்போது அவன் நிம்மதியை நாடுகிறானோ, அப்போது அவனுக்கு அவஸ்தை வந்து சேருகிறது.
ஆரம்பத்தில் மனிதன் விரும்பியோ விரும்பாமலோ பல சிக்கல்களைத் தானே உண்டாக்கிக் கொள்கிறான்.
தானே கிணறு வெட்டுகிறான்; அதில் தானே விழுகிறான்.
தானே தொழில் தொடங்குகிறான்; தவியாய்த் தவிக்கிறான்.
தானே காதலிக்கிறான்; அதற்காக உருகுகிறான்.
தானே ஒரு பெண்ணை விரும்பிக் கல்யாணம் செய்து கொள்கிறான்; பிறகு இது பெண்ணா?, பேயா? என்று துடியாய்த் துடிக்கிறான்.
எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் மனித வாழ்க்கை துன்பகரமாகவே காட்சியளிக்கிறது.
ஆகவேதான், மனிதன் ஏதாவது ஒரு புகலிடத்தை நாடுகிறான்.
தனக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று தேடுகிறான்.
மனிதர்களோ அவதூறு பேசுகிறார்கள்; கேலி செய்கிறார்கள்.
ஆகவே, அவன் தெய்வத்தைச் சரணடைகிறான்.
அந்தத் தெய்வம் அவன் குறையைக் கேட் கிறதோ இல்லையோ, காட்சியிலேயே நிம்மதியைத் தருகிறது.
இந்தத் தெய்வ பக்தியில் மிக முக்கியமானது அணுகும் முறை.
எல்லோரையும் போல கோவிலுக்குப் போனோம்; ஒரு தேங்காய் உடைத்தோம்; இரண்டு பழங்களை வாங்கிச் சென்றோம் என்பதில் லாபமில்லை.
கோவிலில் பாடப்படும் `கோரஸ்’ அல்லது கோஷ்டி கானத்தில் பெரும் பயனடைவதில்லை.
ஏழை ஒருவன் வள்ளல் வீட்டுப் படிக்கட்டுகளில் நம்பிக்கையோடு ஏறுவது போல், இறைவனை அணுக வேண்டும்.
இறைவனை ஒரு உன்னதமான இடத்தில் வைத்து, அடிமையைப் போல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவனைத் தோழனாகவே பாவிக்கலாம்.

தனியறையில் உட்கார்ந்து கொண்டு, ஒரு தெய்வப் பிரதிமையின் முன்னால் குறைகளைச் சொல்லி அழுவதில் பயனிருக்கிறது.
எங்கள் கிராமங்களில் ஒரு காரியம் நடக்குமா நடக்காதா என்பதற்குப் பூக்கட்டி வைத்துப் பார்ப்பார்கள். வெற்றிலைப் பாக்கு வைத்துக் கேட்பார்கள். சாமி அனுமதித்தால் மட்டுமே அந்தக் காரியத்தைச் செய்வார்கள்.
எல்லாவற்றிற்குமே தெய்வத்தை நம்பி, அதன் மூலம் அவர்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.
`திருவுளம்’ கேட்பது என்பது கிராமங்களில் இருக்கும் ஒருமுறை. `நான் மேற்கொண்ட காரியம் நடக்கும் என்றால் பல்லி சொல்ல வேண்டும்’ என்று வேண்டிக் கொள்வார்கள்.
கோவிலின் ஏதாவது ஒரு பகுதியில் பல்லி சொன்னால், இறைவனின் திருவுளம் இரங்கி விட்டதென மகிழ்வார்கள். அது சொல்லவில்லை என்றால், அந்தக் காரியத்தில் ஈடுபடமாட்டார்கள்.
மனிதனின் மிகவும் குறைந்த பட்சத் தேவை நிம்மதி. அதைத் தெய்வத்திடம் இருந்து பெற்றுக் கொள்பவனுக்குப் பெயர் தான் இந்து.
தெய்வத்தை அணுகுவதில் திறமையுள்ளவர்கள் தங்கள் காரியங்களைக் கண் முன்னாலேயே சாதித்துக் கொண்டிருக்கிறார் கள்.
`முருகா முருகா’ என்று எல்லோரும்தான் கூவுகிறோம்; சிலருக்கு மட்டும் தொட்டதெல்லாம் பலிக் கிறதே, ஏன்?
அவர்கள் தெய்வத்தை அணுகத் தெரிந்து கொண்டு விட்டார்கள் என்பதே, அதன் பொருள்.
கொல்கத்தா காளி கோவிலைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள்.
ஒரு ஏழை உழைப்பாளி. அந்தக் கோவில் வாசலில் போய்ப் படுத்துக் கொள்வானாம். காலையில் கண் விழிக்கும் போது சந்நிதானத்தில் தான் கண் விழிப்பானாம். காளி தேவியிடம் வேண்டிக் கொண்டுதான் தொழிலுக்குப் புறப்படுவானாம். எப்படியும் அன்றைக்குப் பத்து ரூபாய் சம்பாதித்து விடுவானாம். என்றைக்கு அவன் ஞாபக மறதியாகச் சந்நிதானத்தைப் பார்த்துக் கண் விழிக்காமல் தெருவைப் பார்த்து விழிக்கிறானோ, அன்றைக்கு அவன் வாழ்க்கையில் சிரமம் ஏற்படுமாம்.
இதை எப்படிச் சொல்கிறார்கள் என்றால், `இன்றைக்கு இவனுக்கு லாபமில்லாத நாள் என்று தெரிந்து, ஈஸ்வரியே அவனை வேறு பக்கம் விழிக்க வைக்கிறாள்’ என்கிறார்கள்.
இதுதான் உண்மை என்று நான் நம்புகிறேன். எனக்கும் இதில் ஒரு அனுபவம் உண்டு.
நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் என் கவிதா ஹோட்டல், தேவர் திருமண மண்டபத்தில் உட்கார்ந்திருந்த போது ஒரு கேரளத்து நண்பர் என்னைப் பார்க்க வந்தார். வந்தவர் ஒரு சிறிய குருவாயூரப்பன் புகைப்படத்தைக் கொடுத்து விட்டுப் போனார்.
அதை நான் என் சட்டைப் பையிலே வைத்திருந்தேன்.
காலையில் சட்டை மாற்றும்போது எதை வைக்க மறந்தாலும், அந்தப் படத்தை வைக்க மறக்கமாட்டேன்.
அது `பெதடின்’ பழக்கத்தை விட்டு விட்ட நேரம். உடம்பிலே சில எதிரொலிகள் ஏற்பட்டு அடங்கிவிட்டன.
குருவாயூரப்பன் படம் வந்ததில் இருந்து உடம்பு மிக நன்றாக இருந்தது.
காலை குளித்துப் பலகாரம் சாப்பிட்டு விட்டு `இன்சுலின்’ போட்டுக் கொண்டால், மதியம் வரையிலே சுறுசுறுப்பாக இருக்கும்.
மதியம் நல்ல கீரையோடு சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் படுத்தால், மாத்திரை இல்லாமலே தூக்கம் வரும்.
சாயங்காலம் எழுந்து குளித்தால், உலகமே புதிதாகத் தோன்றும்.
உடனே மண்டபத்துக்கு வந்து மாலைப் பத்திரிகைகள் அனைத்தும் படித்து முடிப்பேன். ஏதாவது எழுதுவேன். உடம்பு அவ்வளவு நன்றாக இருந்தது.
அப்போது எனக்கு மலேசியாவில் இருந்து அழைப்பு வந்தது. `உடம்பு தான் நன்றாக இருக்கிறதே, போய் வரலாம்’ என்று முடிவு கட்டினேன்.
புறப்படுவதற்கு முதல் நாள் இரவு நான் நீர் சாப்பிடும் கண்ணாடித் தம்பளர் விழுந்து உடைந்தது. என்னுடைய கைக்கடிகாரம் கழன்று விழுந்தது. `என்ன துர்ச்சகுணங்களோ’ என்று எண்ணியபடி விட்டு விட்டேன்.
மறுநாள் காலை பத்தரை மணிக்கு விமானம்.
காலை இட்லி கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டு விட்டேன்.
`அதிகமாகச் சாப்பிட்டு விட்டோம்’ என்று நானே எண்ணிக் கொண்டு, `இன்சுலின்’ மருந்தை வழக்கத்துக்கு விரோதமாக அதிகம் போட்டுக் கொண்டு விட்டேன்.
சற்று மயக்கமாக இருந்தது.
விமான தளத்துக்குப் போகும் போது பையைத் தடவிப் பார்த்தேன். குருவாயூரப்பன் படத்தைக் காணவில்லை. பழைய சட்டையில் தேடிப் பார்க்கச் சொன்னேன். அதிலும் இல்லை.
விமான நிலையத்துக்கு வந்த போது ஆட்களையே அடையாளம் தெரியாத நிலை ஏற்பட்டு விட்டது.
என் குழந்தைகள், பேரன், பேத்திகளெல்லாம் விமான நிலையத்துக்கு வந்திருந்தார்கள்.
யாரோடு பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்பதே எனக்குப் புரியவில்லை.
என்னோடு கனரா பாங்க் நண்பர்களும் விமானத்தில் வந்தார்கள்.
விமானத்தில் இனிப்பு வாங்கிச் சாப்பிட்டேன்; குடித்துப் பார்த்தேன்; மயக்கம் மயக்கம் தான்.
இது நடந்தது 1975 செப்டம்பர் 28ஆம் தேதி.
மலேசியாவில் நான் போய்க் கோலாலம்பூரில் இறங்கி அங்கிருந்து 250 மைல் தூரத்திலுள்ள சித்தியவான் என்ற ஊருக்குப் போய்விட்டேன்.
அந்தச் சித்தியவான் நகரில் எனக்கு ஒரு அற்புதமான நண்பர் உண்டு. அவர் சிவகங்கைப் பகுதியைச் சேர்ந்தவர். கிருஷ்ணன் என்று பெயர்.
கோலாலம்பூர் கூட்டங்களுக்குத் தப்பி, ஓய்வுக்காக நான் அங்கே சென்றேன்.
அங்கிருந்து மூன்றாவது மைலில் ஒரு கடற்கரை உண்டு. அதன் கரையில் ஒரு சிற்றூர் உண்டு. அதன் பெயர் `லுமுட்’. அங்கே ஒரு தென்னந்தோப்பில் அழகான ஒரு காட்டேஜில் நான் தங்கி இருந்தேன்.
சரியாக மூன்றாவது நாள் அங்கிருந்து நான் சித்தியவான் நகருக்கு வந்தபோது, தமிழர்களெல்லாம் சென்னை வானொலியைச் சிரமப்பட்டுத் திருப்பிக் கொண்டிருந்தார்கள்.
நான் கிருஷ்ணன் வீட்டுப் படியேறிப் போகும் சமயம், அங்கிருந்த கிருஷ்ணனின் குமாரர், `ஐயா, காமராஜ் இறந்து விட்டார்’ என்றார்.
மறுநாள் மதியம், சென்னையில் இருந்து எனக்கு டிரங்க் கால் வந்தது, `அதே அக்டோபர் இரண்டாம் தேதியில் என் உடன் பிறந்த சகோதரியும் இறந்து விட்டதாக!’
நான் சென்னை வரமுடியவில்லை. மலேசியப் பயணத்தை ஒரு நாள்கூட ரசிக்க முடியவில்லை. ஒரே ரத்தக் கொதிப்பு; சர்க்கரைக் குறைவு; மயக்கம்; மயக்கம்; மயக்கம்!
இந்த நிலையிலும், `நான் இந்தோனேஷியாவுக்கு வந்தேயாக வேண்டும்’ என்று வற்புறுத்தினார்கள்.
பினாங்கில் புறப்படும் விமானம் இருபது நிமிஷத்தில் சுமத்திரா தீவுக்குப் போய் விடுகிறது.
நான் அங்கிருந்து கோலாலம்பூர் திரும்பியதும், சென்னையில் இருந்து டிரங்க்கால் வந்தது. என் சகோதரரை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக.
உடனே நான் தங்கியிருந்த பசிபிக் ஹோட்டல் டிராவல் ஏஜெண்டிடம் டிக்கெட்டைக் கொடுத்து ஏர் இந்தியாவில் உறுதி செய்யச் சொன்னேன். அவர் உறுதி செய்து விட்டார். ஆனால், என்னிடம் டிக்கெட்டைக் கொடுக்கவில்லை.
மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. காலை எட்டரை மணிக்கு விமானம். டிராவல் ஏஜெண்ட் வரவில்லை.
என்னை அழைத்துப் போயிருந்த துணை பப்ளிக் பிராஸிக்யூட்டர் நண்பர் சம்பந்தமூர்த்தி, விமான நிலையத்திலேயே டாலர் கட்டி எனக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தார்.

எத்தனை துயரங்கள்! எத்தனை சோதனைகள்!
`இவற்றுக்கெல்லாம் நாம் ஏன் காரணமாக இருக்க வேண்டும்?’ என்று தானே, குருவாயூரப்பன் காணாமல் போனான்!
விதி தவறாக இருக்குமானால், தெய்வம் கண்ணை மூடிக் கொள்ளும். அதற்காக அழுது பயனில்லை.
தெய்வத்தை அணுகும் முறையில் இருந்தே பல விஷயங்களை நாம் முன் கூட்டித் தெரிந்து கொள்ளலாம்.
தெய்வ நம்பிக்கை உள்ளவனுக்கு சகுனத் தடை ஏற்பட்டால், அதைத் தெய்வத்தின் கட்டளை என்றும், நமது கர்மா என்றும் கொள்ள
வேண்டும்.தடைதான் ஏற்படுமே தவிர, பெரும் கொடுமைகள் நிகழமாட்டா.
மலேஷியாவில் இருந்து திரும்பிய பிறகும் என் உடல்நிலை சரியாக இல்லை. உடம்பு இளைத்துக் கொண்டே வந்தது.
முப்பது பவுண்டு இளைத்து விட்டேன்.
இப்போது பார்க்கும் டாக்டர்கள் எல்லாம், இதுதான் சரியான எடை என்கிறார்கள்.
இதுவும் நான் விரும்பி நடந்ததல்ல.
பகவான் சில காலங்களில் சில காரியம் நடக்கும் என்று நிர்ணயிக்கிறான்; நம்முடைய பிரக்ஞை இல்லாமலே அவை நடந்து விடுகின்றன.
தெய்வத்தை அணுகினால் பலன்கிடைக்கும் என்பதற்காகக் கண்ட கோவிலுக்கெல்லாம் ஓடிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.
ஒரு தெய்வத்தை உளமாரப் பற்ற வேண்டும். பெரும்பாலும் சக்தி வணக்கம் உதவி செய்யக் கூடியது.
புவனேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி, அகிலாண்டேஸ்வரி, கற்பகாம்பாள், மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி எல்லாமே சக்தியின் பிம்பங்களாக இருப்பதால், சக்தி உபாசனை பலன் தரும்.
ஆண் தெய்வங்களில் அவரவர் விருப்பப்படி சிவ தத்துவத்தையோ, விஷ்ணு தத்துவத்தையோ ஏற்றுக் கொள்ளலாம்.
இரவில் படுக்கப் போகும் போது தூங்குவதற்கு முன் கடைசியாகச் சொல்லும் வார்த்தை, தெய்வத்தின் பெயராக இருக்க வேண்டும்.
அதன் பிறகும் யாருடனாவது பேச வேண்டி வந்தால் மீண்டும் தெய்வத்தின் பெயரைச் சொல்லி விட்டுத் தூங்க வேண்டும்.
சின்னப்பாத் தேவர் யாரைக் கண்டாலும், `வணக்கம் முருகா’ என்பார்.
எம்.ஜி.ஆர். யாரைக் கண்டாலும், `வணக்கம் ஆண்டவனே’ என்பார்.
ஐயப்ப பக்தர்கள், `சாமி சரணம்’ என்பார்கள்.
தெய்வத்தை நாம் நடு வீட்டில் நிற்க வைத்தால், அது உள் வீட்டிலேயே வந்து உட்கார்ந்து கொள்ளும்.
நன்றி கெட்டவன் மனிதன்; நன்றியுள்ளது தெய்வம்.

கடவுள் மனிதனாக

 

`கடவுளுடைய திருநாமம் பேசப்படும் இடமெல்லாம் புண்ணியத் தலங்களே’.
இவ்வாறு இருக்க, அவர் திருநாமத்தைக் கூறுகிறவர் எவ்வளவு புண்ணிய வடிவாய் இருக்க வேண்டும்?
தெய்விக உண்மையைப் புலப்படுத்தும் அவரிடம் நாம் எவ்வளவு பக்தியுடன் இருக்க வேண்டும்?
ஆனால், உலகத்தில் ஆன்மிக உண்மையை அளிக்கும் மகான்கள் மிகவும் குறைவானவர்களே. அவர்கள் இல்லாமல் உலகம் ஒருமிக்க வாழவும் இயலாது. மானிட வாழ்க்கையின் அழகுமிக்க மலர்கள் அவர்கள்; `தமக்கென்று நோக்கமெதுவுமில்லாத கருணா சமுத்திரம்!’.
`குருவை நான் என்று அறி’ என்று கிருஷ்ண பகவான் பாகவதத்தில் பகருகிறார். இத்தகையோர்கள் எந்தக் கணம் முதல் இல்லாமல் போகிறார்களோ அப்பொழுதே உலகம் பயங்கரமான நரகமாகி அதன் அழிவை நோக்கித் துரிதமாகச் செல்லத் தொடங்குகிறது. இவர்களை விட உயர்வும் மகிமையும் உள்ள ஆசாரியர்கள் உலகில் தோன்றுகிறார்கள். அவர்களே ஈஸ்வர அவதாரங்கள்.
அவர்கள் தங்கள் விருப்பத்தாலேயே, ஒரு முறை தொடுவதாலேயே ஆன்மிக அறிவைப் பிறரிடம் பாய்ச்சுவார்கள். அவர்கள் கட்டளையினால் மிக இழிந்தவர்களும் ஒரு விநாடியிலே பெரிய ஞானிகள் ஆகிவிடக் கூடும். அவர்கள் ஆசாரியர்களுக்கும் ஆசாரியர்கள்; கடவுள் மனித உருவத்தில் தம்மைத் தெரிவித்துக் கொள்ளும் பெரிய அவதாரங்களே அவர்கள். அவர்கள் மூலமாகவன்றிக் கடவுளை நாம் காண முடியாது. அவர்களை நாம் பூஜிக்காமல் இருக்க இயலாது. உண்மையாக அவர்களே நம் பூஜைக்கு உரியவர்கள்.
இந்த மானிட உருவத்தில் அளிக்கப்படும் தோற்றங்களிலன்றி இறைவனை வேறு விதத்தில் எவரும் காண இயலாது. வேறு வழியில் நாம் அவரைக் காண முயலும் போது அவரே வெறுக்கத்தக்க ஒரு போலியை உருவாக்கி, அதுவே அவர் என்று நம்புகிறோம்.
இதை விளக்கும் ஒரு கதை உண்டு.
ஒருவனைச் சிவபிரான் உருவத்தைச் செய்யச் சொன்னார்கள். அவன் நெடுநாள் முயன்று ஒரு குரங்கு உருவத்தைப் படைத்தானாம். ஆகவே, கடவுளை அவரது பரிபூரண நிலையிலிருத்திப் பார்க்க முயலும் போதெல்லாம் நமக்குத் தோல்வியே உண்டாகிறது. நாம் மனிதராய் இருக்குமட்டும், மனித நிலையை விட்டு வேறாக நாம் அவரைக் கருத இயலாது. நாம் நம் மானிட நிலையைத் தாண்டி மேலேறுவோமானால், அவரை அவர் உள்ளபடி நாம் உணரக் கூடும்.
ஆனால், நாம் மனிதராய் இருக்கும் மட்டும் அவரை மனிதரில் வைத்து மனிதராகவே பூஜிக்க வேண்டும். நீ எதை வேண்டுமானாலும் பேசலாம். எப்படி வேண்டுமானாலும் முயலலாம். ஆனால், கடவுளை மனிதராக அல்லாமல் வேறு எந்த வகையிலும் உன்னால் நினைக்க முடியாது. இதைத் தவிர வேறு வழியில்லை.
இறைவனையும், நானிலத்துள்ள பொருள்கள் அனைத்தையும் பற்றி அறிவொளி மிக்க பெருஞ் சொற்பொழிவாற்றலாம். தருக்க நிபுணராய்த் திகழ்ந்து இறைவனின் மனித அவதாரங்களைப் பற்றிய நிகழ்ச்சிகள் யாவும் பேதைமையென்று திருப்தியுற நீர் மெய்ப்பிக்கலாம். ஆனால், செயல் முறைக்கு உதவும் பொது அறிவு நிலைக்குச் சற்றே செல்வோம்.
இத்தகைய அறிவுப் பொலிவின் பின்னுள்ளது யாது? சூனியமே! ஒன்றுமின்மையே! அவ்வளவும் நுரை மட்டுமே! கடவுளின் அவதார வழிபாட்டை எதிர்த்து ஒருவர் அறிவு நலம் மிக்க சொற்
பொழிவை நீர் அடுத்த முறை கேட்குங்கால், அவரைப் பற்றி இழுத்து, `கடவுளைப் பற்றி நீர் கொண்ட கருத்து யாது? ஸர்வ சக்தித்துவம்.’ `ஸர்வ வியாகபத்துவம்’ என்பவற்றிற்கும் இவை போன்ற பிற மொழிகட்கும் அவற்றின் எழுத்துகளுக்கு அப்பால் நீர் கண்ட பொருள்கள் எவை?’ என்று வினவுவீராக.
அவற்றால் அவர் அறிந்தது யாதுமில்லை என்பதே உண்மை. அவரது சொந்த மனித இயற்கையால் பாதிக்கப்படாத எக்கருத்தையேனும் அவற்றின் பொருளாக அவர்க்கு வரையறுத்துக் கூற இயலாது. இது பற்றிப் பேசின், ஒரு நூலையும் வாசித்திராதொரு மனிதன் அமைதியாய் இருப்பான். உலக அமைதியைக் குலைக்காதிருப்பான். ஆனால், இப்பெரிய பேச்சாளரோ மன்னுயிருக்குத் தொந்தரவையும், துயரத்தையும் படைத்தளிப்பார். யாது கூறினாலும் சமயம் என்பது அனுபூதியே, பேச்சுக்கு. அனுபூதி ஞானத்திற்கும் மிகச் செவ்வனே வரையறுக்கப்பட்டுள்ள வேறுபாட்டைக் காண வேண்டும்.

நாம் ஆன்மாவிற்குள் ஆழத்தைப் பெறும் அனுபவமே மெய்யுணர்வாகும். இப் பொருள் பற்றியவரை பொது அறிவைப் போன்ற அத்துணை அசாதாரணமானது உண்மையிற் பிறிதொன்றில்லை.
நமது இப்போதைய அமைப்பால் நாம் வரையறையுற்றவர் ஆதலின், இறைவனை மனிதனாகக் காணும் கட்டுப்பாட்டுக்கு உள்ளாவோம். உதாரணமாக எருமைகள் இறைவனை வணங்க விரும்புமாயின், அவை தமது சொந்த இயற்கைக் கேற்ப, அவரை ஒரு பேரெருமையாகவே காணும். ஒரு மீன் இறைவனை வழிபட விரும்புமாயின், அவரைப் பற்றிய ஒரு கருத்து ஒரு பெரும் மீனாகவே அமைய வேண்டியதாகும். மனிதனும் அவரை மனிதனாகவே நினைக்க வேண்டியவனாவான்.
இப் பல்வகைக் கருத்துகளும் நோயினால் விரைவுற்ற கற்பனையில் எழுந்தவையல்ல. மனிதனும், எருமையும், மீனும் யாவும் அத்தனை வேறு வேறான கலங்களைக் குறிப்பதாகக் கருதலாம். இத்தனைக் கலங்களும் தத்தம் சுய வடிவிற்கும், கொள்ளும் அளவிற்கும் ஏற்ப நீரை நிரப்பிக் கொள்ளும் பொருட்டு இறைவன் என்னும் கடலுக்குச் செல்லுகின்றன. மனித கலத்தில் நீர் மனித வடிவையும், எருமைக் கலத்தில் எருமை வடிவையும், மீன் கலத்தில் மீன் வடிவையும் பெறுகிறது. இக்கலங்கள் ஒவ்வொன்றிலும் இறைவன் என்னும் கடலிலுள்ள இதே நீர் உள்ளது. மனிதர் இறைவனைக் காணும் போது, அவனை மனிதனாகக் காண்கின்றனர். விலங்குகளிடம் இறைவனைப் பற்றிய கருத்து இம்மியேனும் உண்டாயின் ஒவ்வொன்றும் அதன் தன் சொந்த இலட்சயத்திற்கு ஏற்ப அந்தந்த விலங்காகத்தான் அவரை கண்டு தீர வேண்டும். ஆதலால் இறைவனை மனிதனாகக் காணுதல் நமக்கு தடுக்க வொண்ணாதது. ஆதலால் அவரை மனிதனாக வழிபடும் கட்டுப்பாட்டுக்கு உள்ளாகிஇருக்கிறோம்.
கடவுளை மனிதனாக வழிபடாதவர் இரு வகையினர். அவருள் மதம் என்பதில்லாத காட்டுமிராண்டிகள் ஒரு வகையினர்; மானிட எளிமைகளெல்லாம் தாண்டி அப்பாற் சென்றவர்களும், தங்களுக்கு இயல்பான மானிட சுபாவத்தின் எல்லையைக் கடந்தவர்களுமான பரமஹம்சர்கள் மற்றொரு வகையினர். அவர்களுக்கு `பிருகிருதி’ எல்லாம் தாமே ஆகிவிடுகின்றன. அவர்களே கடவுளை அவருடைய உண்மை நிலையில் வைத்துப் பூஜிக்கக் கூடும். பிற விஷயங்களில் போல இரண்டு ஓரங்களும் மடமையின் எல்லையும், ஞானத்தின் எல்லையும் ஒன்று கூடுகின்றன.
இவ்விருவரும் பூஜை புரிய வேண்டியதில்லை. காட்டுமிராண்டி, தன் அஞ்ஞானத்தால் பூஜை செய்வதில்லை. ஜீவன் முக்தர்கள் (வீடு பெற்றவர்கள்) கடவுளைத் தம்மிடத்தில் காண்பதால் பூஜை செய்வதில்லை. இவ்விரு நிலைகளுக்கும் இடையிலே நிற்கும் எவனேனும் கடவுளைத் தான் பூஜை செய்யப் போவதில்லை என்று கூறுவானானால் அவனிடம் விழிப்பாயிரு. மரியாதையாகச் சொல்லுவோமானால், அவன் பொறுப்பற்றுப் பேசுகிறவன். அவன் மதம் நேர்மையற்றது; அறிவற்றவர்களுக்கே ஏற்றது எனலாம்.
மானிடர்க்குரிய குறைகளைக் கடவுள் அறிகிறார். மானிட இனத்திற்கு நன்மை புரியும் பொருட்டு அவர் ஒரு மனிதராகிறார். `தர்மம் குறைந்து அதர்மம் தலையெடுக்கும் போதெல்லாம் நான் அவதரிக்கிறேன்; யுகந்தோறும் அறத்தை நிலை நிறுத்தவும், மறத்தை அழிக்கவும், நல்லோர்களைக் காக்கவும் நான் வருகிறேன்.’
`முரடர்கள் மானிட உருவெடுத்து என்னை, நான் சர்வ லோகங்களுக்கும் பிரபு என்பதை உணராமல் இகழ்கிறார்கள்’. இதுவரை அவதாரங்களைப் பற்றி கீதையில் சொல்லப்பட்டவை, `பெரும் புயல் வரும் போதே சிறிய வாய்க்கால்களும், சாக்கடைகளும் தாம் அறியாமலே வெள்ளத்தால் நிரம்பி விடுகின்றன. அப்படியே அவதாரம் என்று உலகில் ஏற்படும் போது, பெரியதோர் ஆன்மிக வெள்ளம் உலகத்தில் பரவ, மக்கள் யாவரும் வானமெல்லாம் ஆன்மிகம் நிறைந்துள்ளதை உணர்கிறார்கள்!’ என்று பகவான் இராமகிருஷ்ணர் கூறுகிறார்.
மேலே நான் குறிப்பிட்டிருப்பது சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவில் ஒரு பகுதியாகும்.
கீதையை உபதேசித்த கண்ணன் யார்? அவன் மனிதனா, கடவுளா? கடவுளை மனிதனாகக் காண்பது சாத்தியமா?
இந்தக் கேள்விகளுக்குத்தான் சுவாமி விவேகானந்தர் மேலே கண்டபடி பதில் அளிக்கிறார்.
மற்ற மதங்கள், கடவுளை மனிதரின் தூதுவராகக் காண்கின்றன.
இந்துக்கள் கடவுளையே மனிதராகக் காண்கிறார்கள்.
சுவாமி விவேகானந்தர் சொல்வது போல், எருமையின் கண்ணுக்குக் கடவுள் ஒரு பெரிய எருமை என்றால், மனிதனின் கண்ணுக்குக் கடவுள் ஒரு மனிதர் தான்.
அதனால்தான், அவதார புருஷர்களை நாம் வழிபடுகிறோம்.
இராமாவதாரத்தையும், கிருஷ்ணாவதாரத்தையும் மனிதர்கள் என்றே வைத்துக் கொண்டாலும் கூட, அந்த இருவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த அவதாரங்கள்.
அவர்களிலே கிருஷ்ணன் ஒரு ஞானாசிரியன்; இராமன் ஒழுக்கத்துக்கு இலக்கணமான பேராசிரியன்.
கடவுளை மனிதனாகப் பார்ப்பதால் தான் அவனைக் காதலியாக, காதலனாகப் பாவிக்கிறோம்.
இந்த பாவனையில் தெய்வத்தின் ஸ்வரூபமல்லாது, விஸ்வரூபம் வெளியாகிறது.
தாயைப் பார்க்கும் மகனைப் போல ஆண்டவனை நாம் பார்க்கிறோம்.
மனிதர்கள் அணியும் ஆடைகளையே அவனுக்கும் அணிவிக்கிறோம்.
மனிதர்கள் சூடிக் கொள்ளும் மலர்களையே இறைவனுக்கும் சூட்டுகிறோம்.
அந்த மனித பாவத்தில், நம்முடைய அறிவு லயித்து விடுகிறது.
தெய்வம் என்பது எல்லாவற்றையும் கடந்தது என்ற நிலைபோய், அது நம்மோடுஇருக்கும் ஒன்று என்ற நிலை வந்து விடுகிறது.
மனிதனுடைய பகுத்தறிவு, தெய்வத்தைப் பக்கத்தில் காணவே விரும்பி இருக்கிறது. அந்த விருப்பத்தின் உருவங்களே அவதாரங்கள்.
அத்தகைய அவதார புருஷர்கள் பிற்காலத்தில் பிறக்கவே இல்லையா என்றால், இன்றும் பிறந்திருக்கிறார்கள் என்பதே பதிலாகும்.
ஆடி, ஓடி, அலுத்துக் களைத்து, நோய்வாய்ப்பட்டுச் சாகும் மனிதனுக்குக் காட்டுக்கு நடுவே இருக்கும் ரோட்டைக் காட்டுவது போல், ஞானத்தை ஊட்டும் நல்லாசிரியர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
அவர்களில் பலர், தங்களைக் கடவுளின் அவதாரங்கள் என்று அழைத்துக் கொள்வதில்லை. ஆனால், அவதாரங்களாகவே வாழ்கிறார்கள்.
உயர்தர மருத்துவர்களே, `என் விதி முடிந்து விட்டது’ என்று சொல்லும் போது, உள்ளூர் மருத்துவர்கள் ஏன் கையைப் பிடித்துப் பார்க்க வேண்டும் என்பது போல, ரமண மகரிஷி இறைவன் திருவடிகளை அடைந்தார்.

சில சட்டதிட்டங்கள் கட்டுப்பாடுகளுக்கு அவர்கள் தங்களை ஒப்புக் கொடுத்து விடுகிறார்கள். அந்த இடத்திலேயே நிலையாக நின்று விடுகிறார்கள்.
அவர்களில் ஒருவரை நாடி, உபதேசம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பால வயதில் இருந்து குருசிஷ்ய பாவத்தில் ஈடுபடாதவர்கள் நடுத்தர வயதில் அப்படியொருவரை அணுகுவதே நிம்மதிக்கு வழி.
வெறும் புத்தகங்களைப் படிப்பதின் மூலமே ஞானம் பெற்றுவிட முடியாது.
யாராவது ஒருவர் ஆறுதல் சொன்னால் தான் அழுகை அடங்குகிறது.
யாராவது ஒரு ஞானாசிரியரிடம் உபதேசம் கேட்டுக் கொண்ட பின்னாலே தான், ஏற்கெனவே இருந்த மனோபாவம் மாற முடியும்.
வாழ்க்கை வெறும் கேள்விக் குறிகளாலே ஆனது.
சிக்கல் விழுந்துவிட்ட அந்த நூலை அறுந்து விடாமல் ஜாக்கிரதையாகப் பிரிக்க வேண்டும்.
அந்த வேலை தையல்காரருக்குத் தெரிந்த அளவு நமக்குத் தெரியாது.
நாமே நமக்குள் பெற்றுக் கொள்ளக் கூடிய நிம்மதியை நூறு மடங்காக ஆக்கத் தெரிந்தவர்கள் ஞானிகள் மட்டுமே.
அவர்களை அண்டி, மிச்சக் கால வாழ்க்கையை மேன்மைப்படுத்திக் கொள்ள முயல்வதே நிம்மதிக்கு ஒரே வழி.