3 ஜி எதிர்காலக் கனவுகளின் ஏணி, தகவல் உலகின் ராணி

3 ஜி எதிர்காலக் கனவுகளின் ஏணி, தகவல் உலகின் ராணி


பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட போன் இன்று தகவல் தொழில் நுட்பத்தின் நுழைவாயிலாக, ஏங்க வைக்கும் எண்ணங்களின் டிஜிட்டல் தூதனாக, எதிர்காலக் கனவுகளின் ஏணியாக, உள்ளங்கைக்குள் உலகைக் கொண்டு வரும் ஒரு எளிய சாதனமாக மாறிவிட்டது. இதன் அடுத்த பரிமாணமாக நமக்கு இன்னும் இரு மாதங்களில் கிடைக்க இருப்பதுதான் 3ஜி மொபைல் போன். வெளிநாடுகளில் பயன்பாட்டில் வந்து சில ஆண்டுகள் ஆனாலும் இந்தியாவில், அரசின் பல்வேறு கொள்கைகளாலும்,  தாமதமாகிப் போன திட்டங்களாலும், தான் வருவதற்கான பாதையை இப்போதுதான் 3ஜி மொபைல் பெற்றிருக்கிறது. இதில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்ப்போம்.

மொபைல் போன் பயன்பாட்டில் மூன்றாவது தொழில் நுட்ப மேம்பாட்டினை 3ஜி என்ற சொல் குறிக்கிறது. இதில் ஜி என்பது ஆங்கிலத்தில் ஜெனரேஷன் என்ற சொல்லின் சுருக்கமாகும். தொழில் நுட்ப மேம்பாட்டில் அடிப்படையில் மாற்றங்கள் ஏற்பட்டு வசதிகளும் உயர்ந்த நிலைக்குச் செல்கையில் அதனை அடுத்த ஜெனரேஷன் என்று குறிப்பிடுகிறார்கள். சந்ததி என்று தமிழில் கூறலாம்.

1ஜி தொழில் நுட்பம் நமக்கு முதல் வயர்லெஸ் மொபைல் போனைத் தந்தது. இது அமெச்சூர் ரேடியோவைக் காட்டிலும் சிறிது மேம்பட்டிருந்தது. 1970 முதல் 1980 வரை இத்தகைய போன் பயன்பாட்டில் இருந்தது. இந்த போன்கள் செல்லுலர் மொபைல் ரேடியோ டெலிபோன் என அழைக்கப்பட்டன.

அடுத்த மேம்பாட்டின் அடிப்படையில் 2ஜி தொழில் நுட்பம் வடிவமைக்கப்பட்டு இன்று வரை நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்த வசதி 1990 முதல் வர்த்தக ரீதியான பயன்பாட்டில் இருந்து வருகிறது. சி.டி.எம்.ஏ. மற்றும் ஜி.எஸ்.எம். வழிகளில் டிஜிட்டல் வாய்ஸ் அமைப்பின் அடிப்படையில் இது இயங்கத் தொடங்கி இன்று பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. அலைவரிசை முன்னேற்றம், தகவல்கள் அனுப்புவதில் வேகம், மல்ட்டிமீடியா பரிமாற்றம் மற்றும் இயக்கம் என பல முனைகளில் இந்த பயன்பாடுகளை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இவற்றின் அடுத்த முன்னேற்றம் தான் 3ஜி.

3ஜி நுட்பம் தரும் சேவைகள் பலவாகும். திறன் கூடிய மல்ட்டி மீடியா வசதிகள்; வாய்ஸ், டேட்டா, வீடியோ மற்றும் ரிமோட் கண்ட்ரோல் என அனைத்து பிரிவுகளையும் மொபைல் போனில் கொண்டு வர முடியும். மொபைல் போன், இமெயில், பேக்ஸ்,வீடியோ கான்பரன்சிங் மற்றும் வெப் பிரவுசிங் ஆகிய வசதிகளை இந்த தொழில் நுட்பம் தருகிறது. மிக அகலமான பேண்ட்வித் மற்றும் அதிவேக தகவல் பரிமாற்றம் இதன் தனிச் சிறப்பு. உலகின் எந்த மூலையில் இருந்தும் இதன் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி, மேலே குறிப்பிட்ட வசதிகளை மேற்கொள்ளலாம்.

3ஜி / 2ஜி வேறுபாடு: தகவல் பரிமாறும் நேரம் மற்றும் வேகம் தான் இதன் குறிப்பிட்ட வேறுபாடு எனச் சொல்லலாம். 3ஜி நொடிக்கு 3 மெகா பிட்ஸ் அளவில் தகவல்களைக் கொண்டு செல்ல வல்லது. அதாவது 3 நிமிடம் பாடக் கூடிய ஒரு பாடலின் எம்பி3 பைலை 15 விநாடிகளில் இறக்கிக் கொடுக்கும். இதனுடன் 2ஜியை ஒப்பிடுகையில் அதன் வேகம் நொடிக்கு 144 கிலோ பிட்ஸ் தான். மேலே சொன்ன பாடல் பைலை இறக்கம் செய்திட 2ஜி மூலம் 8 நிமிடங்கள் ஆகும். எனவே தான் பெரிய அளவில் உள்ள மல்ட்டி மீடியா பைல்களை (பாடல், ஆடல், வீடியோ) ஆகியவற்றை இன்டர்நெட்டிலிருந்து இறக்கம் செய்திட இது ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

3ஜி போன்கள் அனைத்தும் ஏறத் தாழ ஒரு சிறிய லேப் டாப் கம்ப்யூட்டரைப் போல் செயல் படும். பிராட் பேண்ட் இணைப் பில் மேற்கொள்ளக் கூடிய வீடியோ கான்பரன்சிங், இணையத்திலிருந்து ஸ்ட்ரீமிங் வீடியோ, பேக்ஸ் செய்திகளை உடனுடக்குடன் இணையத்திலிருந்து இறக்க, இணைக்கப் பட்டவை எவ்வளவு பெரிய பைல்களானாலும், இமெயில்களுடன் இறக்கி எந்நேரமும் படிக்க என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

மொபைல் டிவி மற்றும் தொலைவில் பல இடங்களில் உள்ளவர்கள் ஆங்காங்கு இருந்தவாறே கருத்துக்களைப் பரிமாறும் வீடியோ கான்பரன்சிங் ஆகியவை 3ஜியில் கிடைக்கும். 2ஜி அலைவரிசையில் நமக்குப் பயன்படுத்தக் கிடைப்பது எஸ்.எம்.எஸ். மற்றும் ஆடியோ மட்டுமே. இடையே 2.5ஜி என்று அழைக்கப்படும் தொழில் நுட்பத்தில் 3ஜியின் வசதிகளின் தொடக்க நிலைகள் கிடைத்தன. இன்று நாம் பயன்படுத்தும் ஜி.பி.ஆர்.எஸ். போன்ற வசதிகள் இதன் அடிப்படையிலேதான் வந்தன.  3ஜி சேவை வழங்குவதையும் பெறுவதையும் நடைமுறைப்படுத்த சேவை நிறுவனங்கள் புதிய வகை கோபுரங்களையும் உயர்நிலை சாதனங்களையும் அமைக்க வேண்டும். இந்த வரிசையில் இறுதியில் உள்ள பயனாளிகள் 3ஜி தொழில் நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலான போன் செட்களை வாங்க வேண்டும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் 2ஜி சேவைகளை 3ஜி அலைவரிசையில் தரலாம்; ஆனால் 3ஜி அலைவரிசை சேவைகளை 2ஜி அலைவரிசைக்கான சாதனங்கள் வழி தர முடியாது.
3ஜி சேவையினைப் பெற பயனாளர்கள் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டி வரும். 3ஜி தொழில் நுட்பம் மூலம் கிடைக்கக் கூடிய சேவைகள் அனைத்தும் முதல் நிலையிலேயே கிடைக்காது. படிப்படியாகத் தான் இவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவை வழங்கிட அதிக அளவில் லைசன்ஸ் கட்டணம் விதிக்கப்படும். மேல் நாடுகளில் இதனை மக்களுக்கு தருவதனைச் சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பட்ட பல நிறுவனங்கள் தொடக்கத்தில் அதிக செலவு செய்தும் செய்திட முடியாமலும் கஷ்டங்களை அனுபவித்தன. அதே நிலை இங்கும் ஏற்படலாம். நிதிச் சுமையில் இந்த நிறுவனங்கள் சிக்கிக் கொண்டால் அரசு இவர்களுக்கு சலுகைகள் வழங்கிட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இந்த அலைவரிசையில் உருவாகும் எலக்ட்ரோ மேக்னடிக் அலைகள் உடல் நலத்திற்கு எந்த அளவில் தீங்கு விளைவிக்கும் என்ற ஆய்வு இன்னும் மேற்கொள்ள பட்டு வருகிறது. இது குறித்து முரணான தகவல்களும் முடிவுகளும் வெளியாகி வருகின்றன.

முதன் முதலில் பெரிய அளவில் வர்த்தக ரீதியாக 3ஜி போன்களை நடைமுறைக்குக் கொண்டுவந்தது ஜப்பான் நாடு. 2005ல் ஜப்பானில் வயர்லெஸ் இணைப்பு பயன்படுத்திய 40% மக்கள் 3ஜி தொழில் நுட்பத்தின் அடிப்படையைப் பயன்படுத்தினார்கள். வீடியோ டெலிபோன் என்பது இந்த தொழில் நுட்பத்தின் மிகச் சிறிய பயன்பாடு; இன்னும் பெரிய அளவில் இதனைப் பயன்படுத்தலாம் என்று பிற நாடுகளுக்கு ஜப்பான் வல்லுநர்கள் காட்டினார்கள். அவையே பிற நாடுகளுக்கும் பரவியது. ஹை ஸ்பீட் இன்டர்நெட் மற்றும் வீடியோ டெலிபோன் ஆகிய இரண்டு வசதிகளும் இன்று சிறு பிள்ளைகள் கூடப் பயன்படுத்தும் அளவில் முன்னேறியுள்ளது. 3ஜி போன் சேவை வழங்குவதில் நிச்சயம் போட்டி இருக்கும். வெளிநாட்டு நிறுவனங்களும் இதில் கலந்து கொள்ளும். எனவே இந்த சந்தையில் நுகர்வோராகிய மக்கள் தான் எஜமானர்களாக இருப்பார்கள். குறைந்த கட்டணத்தில் கூடுதல் சேவை கிடைக்கும். ஆனால் அனைத்து பிரிவு மக்களும் 3ஜி சேவையில் கிடைக்கும் கூடுதல் மற்றும் நவீன வசதிகளை உடனே பயன்படுத்துவார்களா என்பது சந்தேகமே.

3ஜி வகை ஆப்பிள் நிறுவனத்தின் ஐ–போன்களை பார்தி ஏர்டெல் நிறுவனம் வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான புக்கிங் கூட தொடங்கப்பட்டுவிட்டது. ஏர் டெல் நிறுவனத்தின் மையங்களில் 3ஜி ஆப்பிள் ஐ–போனை யாரும் எளிதாக வாங்கிக் கொள்ள முடியும். 3ஜி ஐ–போனில் ஐ–போனுக்கான வசதிகளுடன் 3ஜி அலைவரிசை தரும் வசதிகளை மேற்கொள்ள தொழில் நுட்பம் தரப்படும். முதலில் வெளிவந்த ஐ–போனைக் காட்டிலும் இரு மடங்கு வேகம் மற்றும் திறன் கொண்டதாக
3ஜி ஐ–போன் இருக்கும். ஒரு போன் இயங்கும் இடத்தை மையமாகக் கொண்டு சேவைகள் வழங்கும் தொழில் நுட்பம் இதில் இணைந்திருக்கும்.

ஐ–போன் சாப்ட்வேர் பதிப்பு 2 இதில் தரப்பட்டிருக்கும். இதன் மூலம் மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் தரும் வசதிகளை இயக்கலாம். மூன்றாம் நபர் தரும் நூற்றுக் கணக்கான இணைப்பு புரோகிராம்களை இயக்கலாம். நிறுவனங்களிடையே போட்டியும் அதனால் ஆரோக்கியமற்ற தொழில் முறை உறவுகள் ஏற்படலாம். மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பங்காக மொபைல் போன் மாறிவிட்டது. தனிநபர் ஒருவரின் ஆசா பாசங்களுக்குட்பட்ட பல வகையான பயன்பாடுகள் இதில் கிடைக்கத் தொடங்கிவிட்டன.
இதில் 3ஜி போன் மூலம் கூடுதலாக வசதிகள் தந்து வாடிக்கையாளர்களைத் தக்க வைத்திட நிறுவனங்களிடையே போட்டி ஏற்படலாம். தொடர்ந்த போட்டி, தொடர் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் விரிவடையும் வசதிகளுக்கான பின்னலமைப்பினை உறுதிப்படுத்துவது என்ற பல முனை செயல்பாடுகளில் 3ஜி சேவை நிறுவனங்கள் ஈடுபடும். போன்களில் மாற்றங்கள் ஏற்பட்டு அவற்றை அனைத்து பிரிவினரும் நாடும் வகையில் அமைக்கப் படலாம்.

மல்ட்டிமீடியா பணிகளுக்கு மொபைல் போன்கள் பயன்படுத்தப்படுவதாக இருந்தால் அவற்றின் பேட்டரிகள் ஒரு பிரச்னையாகக் கருதப்படும். எனவே பேட்டரியினை மேம்படுத்த புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படலாம். 2008 முதல் 2010 வரை 3ஜி அடிப்படையில் வசதிகளைத் தருவது பெரிய அளவில் வர்த்தக நடவடிக்கையாகவும் அதிக லாபம் தருவதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மக்கள் அனைவரும் இந்த நவீன புதிய வசதிகளைத் தங்கள் மொபைல் போனில் பயன்படுத்த விரும்புவார்களா என்பதும் இயலுமா என்பதுவும் கேள்விக் குறியே. இதற்கு இந்த வசதிகளைத் தரும் நிறுவனங்கள் மக்களிடையே புதிய வசதிகள் குறித்தும் அதனால் கிடைக்கும் பயன்கள் குறித்தும் தெரிவிக்க வேண்டும். மேலும் இந்த வசதிகளுக்கான கூடுதல் கட்டணத்தை மக்கள் செலுத்தும் அளவிற்கு பொருளாதார நிலை அமைய வேண்டும். இந்த நிலையில் இது உயர்நிலை மக்களுக்கானதாக மாறிவிடும் அபாயம் உள்ளது.