.மூட்டு மாற்று ஆபரேஷன் : லேட்டஸ்ட் இது தான்!

.மூட்டு மாற்று ஆபரேஷன் : லேட்டஸ்ட் இது தான்!

* இமூட்டு வலி – வயதானவர்களுக்கு தான் வரும் என்பதெல்லாம் பழைய காலம். இப்போது, குழந்தைகளுக்கு கூட வருகிறது. “லைப் ஸ்டைல்’ மாற்றத்தால், இளம் வயதினருக்கு அதிகமாகவே ஏற்படுகிறது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் எவ்வளவோ முறைகள் வந்தாலும், இப்போது லேட்டஸ்ட்டாக வந்திருப்பது, கம்ப்யூட்டர் திரையில் பார்த்து துல்லியமாக செய்யும் தொழில்நுட்பம் தான். மற்ற மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளில் உள்ள கஷ்டங்கள், இதில் முழுமையாக போக்கப்படுகிறது; எளிதில் சிகிச்சை முடிந்து பழையபடி காலை நீட்டி, மடக்க முடிகிறது.

* எப்படி ஏற்படுகிறது?

முழங்காலில் உள்ள மூட்டு, இரண்டு பக்க எலும்பு களுக்கு இடையே பந்து போல உருண்டுகொண்டிருக்கிறது. வழவழப்பான குருத்தெலும்புகளால் தான் மூட்டு இயங்கி, காலை நீட்டி, மடக்க முடிகிறது. பல்வேறு காரணங்களால், குருத்தெலும்பு தேய்ந்து, சேதம் அடைந்து போனால், மூட்டு இயங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், மூட்டில் வலி ஏற்படும்: அது மாமூலாக நகராமல் இறுக்கம் ஏற்படும்; அதனால், கால்களை நீட்டி, மடக்க முடியாது; ஏன் , நடக்க கூட சிரமம் ஏற்படும். இதனால், வீக்கத்தில் ஆரம்பித்து, மூட்டு பிரச்னை அதி கரிக்க ஆரம்பிக்கும். அப்போது தான் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.

*எத்தனை காரணங்கள்?

மூட்டு வலிக்கு இது தான் காரணம் என்று கூற முடியாது. 200 வகையான காரணங்கள் உள்ளன. அவற்றில் பொதுவாக ஏற்படும் மூட்டு வலிக்கு சில காரணங்கள் உள்ளன. வயதாக ஆக, மூட்டு தேய ஆரம்பிக்கும். அப்போது குருத்தெலும்பு தேய்ந்து, மூட்டு இறுக்கமாகி விடும்; நகர முடியாது. வீட்டுக்கதவை தாங்கிப்பிடிக்கும் “கீல்’ போல, மூட்டிலும் கீல் சரியாக இருந்தால் தான் அது இயங்கும். அதில் பிரச்னை ஏற்படுவது தான் கீல்வாத பாதிப்பு. விபத்து போன்ற சூழ்நிலைகளில், மூட்டு எலும்பு முறிவை சரிப்படுத்தும் போது மூட்டு பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. உடனே மூட்டு பிரச்னை ஏற்படாது என்றாலும், இதன் காரணமாக, பின்னாளில் மூட்டு வலி வரும்.

* எந்த வயதில் வரும்?
முன்பெல்லாம், கீல்வாத பாதிப்பால் மூட்டு பிரச்னை, 40 – 50 வயதில் வரும். ஆனால், இப்போது, இளம் வயதினரிடம் அதிகம் காணப்படுகிறது. கீல்வாத பிரச்னை, இளம் வயதினரை மட்டுமல்ல, குழந்தைகளையும் கூட பாதிக்கிறது. இவர்களில் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, 15 – 20 வயதில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

* தீர்வு என்ன?

மூட்டு இயக்கம் பாதிக்காமல் இருக்க 19ம் நூற்றாண்டிலேயே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பன்றியின் பித்தநீர்ப்பை, நைலான், “செலோபன்’ தாள் போன்றவற்றை பயன்படுத்தி, மூட்டு இயங்க இரு எலும்பு இணைப்புக்கு இடையே பொருத்தி முயற்சி மேற்கொள்ளப்பட்டது: ஆனால், பலன் அளிக்கவில்லை. கடந்த 1950களில், மூட்டு இணைப்பின் பாதிக்கப்பட்ட பகுதி மட்டும் மாற்றி முயற்சி செய்யப்பட்டது. அதுவும் திருப்தி தரவில்லை. 1970 களில் தான் முதன் முறையாக மூன்றடுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பிக்கப்பட்டது. மாற்று மூட்டு வடிவம், அதற்கான தொழில்நுட்பம் எல்லாமே நுண்ணிய அளவில் உருவாக்கப்பட்டது. இப்போது மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில், பெரும் பலன் கிடைக்கிறது. வலி இல்லாத அறுவை சிகிச்சை; 120 டிகிரி வளைக்கும் வகையில் மாற்று மூட்டு இணைப்பு ஏற் படுத்தும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது.

* இன்றைய சவால்?

இப்போதுள்ள இளைய தலைமுறையினரின் வாழ்க்கை முறை மாறிவிட்டது. அதனால், இளம் தலைமுறையினர் கூட, மூட்டு பாதிப்பால் அவஸ்தைப்படுகின்றனர். அதனால், மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் போது, மிக துல்லியமாக செய்தால் தான் நீண்ட காலம் மூட்டு பிரச்னை வராமல் தடுக்க முடியும் என்று நிபுணர்கள் சிந்திக்க ஆரம்பித்தனர். பாதிக்கப்பட்ட மூட்டுக்கு பதில், மாற்று மூட்டு பொருத்தும் போது, தொழில்நுட்ப ரீதியாக சரியாக பொருத்துவது, மிருதுவான திசுக்களின் செயல் பாட்டை துல்லியமாக கணிப்பது போன்றவை முக்கியமானதாக  கருதப்படுகிறது.

* எது கைகொடுக்குது?

இப்படி முழுமையான மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு, துல்லியமான தொழில்நுட்ப உதவி தேவை என்று மூத்த நிபுணர்கள் முடிவுக்கு வந்தனர். இப்படி தொழில்நுட்ப உதவியை நிபுணர்களுக்கு தந்து, அறுவை சிகிச்சையை நுணுக்கமாக செய்ய உதவுவது, கம்ப்யூட்டர் வழிகாட்டும் நவீன முறையாகத்தான் இருக்கும் என்றும் திடமாக முடிவு செய்யப்பட்டது. கம்ப்யூட்டர் உதவியுடன் செய்யப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின், ஒருவர் 20 ஆண்டுகள் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க முடியும் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

* கம்ப்யூட்டர் எப்படி?

நோயாளியின் முழங்கால் எலும்புக்கும், அறுவை சிகிச்சை இயந்திரங்களுக்கும் இடையே கேமரா பொருத்தப்படுகிறது. ஆபரேஷன் செய்யவேண்டிய மூட்டுப் பகுதியை அது முழுமையாக படம் பிடிக்கிறது. புற ஊதாக்கதிர் வீச்சு மூலம் அது மூட்டுப் பகுதியை துல்லியமாக காட்டுகிறது. இந்த புற ஊதாக்கதிர், டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு, கம்ப்யூட்டர் மானிட்டரில் தெரிய வைக்கப்படுகிறது. கம்ப்யூட்டரில் மூட்டு மாதிரி வடிவம் தெரிகிறது. கம்ப்யூட்டரில் மூட்டு பகுதியை 0.1 மில்லிமீட்டர் அளவுக்கு கூட துல்லியமாக பார்த்தவாறே, நுண்ணிய அளவில் அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது. இப்படி செய்வதால் தவறு குறைகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் எலும்பு துண்டித்த அளவு துல்லியமாக கணக்கிடப்படுகிறது. இப்படி துல்லியமாக கம்ப்யூட்டர் வழிகாட்ட, அறுவை சிகிச்சை செய்யும் போது, அதிக ரத்தம் வீணாவதில்லை. தொழில்நுட்ப சிக்கலும் ஏற்படுவதில்லை.

* வலியே இருக்காதா?

முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போது, இரண்டு விஷயத்தில் கவலைப்பட வேண்டும். ஒன்று, ஆபரேஷனுக்கு பின் வலி இருக்கும்; இரண்டாவது, ரணம் ஆறும் காலம் அதிகமாகும். ஆனால், குறைந்தபட்ச அளவில் சாதனங்களை பயன் படுத்தி , கம்ப்யூட்டர் மூலம் முழு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போது, முழுமையாக திறந்து செய்ய வேண்டியதில்லை. கம்ப்யூட்டர் துணையுடன் நடத்தப்படுவதால், புது தொழில்நுட்ப உதவியுடன், எளிமையான முறையில், குறைந்தபட்ச அளவில் , வலியில்லாத, ரத்தம் சேதமாகாத அறுவை சிகிச்சை செய்ய வழி ஏற்படுகிறது.

* எத்தனை நாள்?

கம்ப்யூட்டர் மூலம் செய்யப்படும் நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பெறும் ஒரு நோயாளிக்கு இரண்டு வாரத்தில் குணம் தெரியும். ஒரு மாதத்தில் முழு குணம் ஏற்படும். அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள அவரால் முடியும். ஸ்டூலில் கூட ஏற முடியும்; மாடிப்படிகளில் ஏற முடியும். அந்த அளவுக்கு மூட்டு மிக இலகுவாக செயல்பட ஆரம்பிக்கும். ரிவிஷன் சர்ஜரியில் வழக்கமாக செய்யப்படும் அறுவை சிகிச்சையில், மாற்று மூட்டு பகுதி தளர்ந்து போனால், மீண்டும் பழைய மூட்டை அகற்றி விட்டு, புது மூட்டு இணைப்பை பொருத்த வேண்டும். அப்படி செய்யும் போது, எலும்புப் பகுதி மீண்டும் சேதமாகும். ஆனால், கம்ப்யூட்டர் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சையில், இப்படிப்பட்ட கோளாறு ஏற்பட வாய்ப்பே இல்லை. துல்லியமாக பொருத்தப்படுவதால், மாற்று மூட்டு இணைப்பு தேயவோ, தளர்ந்து போகவோ வாய்ப்பில்லை.

– சென்னை “மியாட்’ மருத்துவமனை மருத்துவ இதழில் இருந்து.