கிளிப் போர்டு மேனேஜர்கள்

விண்டோஸ் மற்றும் வேர்ட் புரோகிராம்களில் செயல்படும் கிளிப் போர்டுகள் குறித்து பலமுறை இங்கு விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேர்ட் புரோகிராம் கொண்டிருக்கும் கிளிப் போர்டு எப்படி விண்டோஸ் கிளிப் போர்டினைக் காட்டிலும் கூடுதல் சிறப்பம்சங்களைக் கொண்டு நமக்குப் பல வசதிகளைத் தருகிறது என்பதனையும் நம் வாசகர்களுக்குத் தந்திருக்கிறோம்.  இங்கு இந்த கிளிப் போர்டுகளைக் கண்காணித்து அவற்றைப் பயன்படுத்தும் போது கூடுதல் வசதிகளைத் தரும் சில இலவச இணைய புரோகிராம்களைக் காணலாம்.

1. Flashpaste: இது விண்டோஸ் இயக்கத் தொகுப்பிற்கு உதவிடும் ஒரு புரோகிராம். இது கிளிப் போர்டில் காப்பி செய்யப்படும் டெக்ஸ்ட்டைக் கண்காணித்து அவற்றைத் தேவையானபோது பெற்று பேஸ்ட் செய்திட உதவுகிறது. இதன் மூலம் நாம் அடிக்கடி காப்பி செய்து பேஸ்ட் செய்திடும் டெக்ஸ்ட்டை பதிந்து வைத்து பயன்படுத்தவும் முடியும். எடுத்துக் காட்டாக நம் பெயர், முகவரி, இணைய முகவரிகள், சில இணைய அக்கவுண்ட் விபரங்கள் ஆகியவற்றை நிரந்தரமான கிளிப்பாக பதிந்து வைத்து இதிலிருந்து பெற்று பயன்படுத்தலாம்.

இத்துடன் ஒரு சிறிய மேக்ரோ மூலம் நேரம் மற்றும் நாளினை நாம் விரும்பும் பார்மட்டில் பேஸ்ட் செய்திட முடியும். அதே போல டாகுமெண்ட்களையும் இணைய பக்கங்களையும் குறிப்பிட்ட நாளில் திறக்க இதில் குறிப்புகளை எழுதி வைத்துப் பயன்படுத்தலாம். இந்த புரோகிராம் சில ஷார்ட் கட் கீகளை அமைத்திடவும் உதவுகிறது. இதனை ஒரு யு.எஸ்.பி. டிரைவிலும் வடிவமைத்திடலாம். இது முற்றிலும் இலவசமான புரோகிராம் அல்ல. முதல் 30 நாட்களுக்கு மட்டும் இதனை இலவசமாகப் பயன்படுத்தலாம். இதனைப் பெற http://flashpaste.com/  என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினை அணுகவும்.

2. ClipMate: இதனை விண்டோஸ் 98 முதல் விஸ்டா வரையிலான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்தலாம். இதுவும் கிளிப் போர்டில் காப்பி ஆகும் விஷயங்களை கண்காணிக்கிறது. காப்பி ஆகும் தகவல்களை, அவை பிட் மேப் பைல், ஆர்.டி.எப். டெக்ஸ்ட், எச்.டி.எம்.எல். என எதுவாக இருந்தாலும் அதனை ஷார்ட் கட் கீ (Shift + Ctrl + Q) மூலம் பேஸ்ட் செய்திட செட் செய்திடலாம்.

கிளிப் போர்டில் கிளிப் செய்யப்பட்டவற்றைப் பல வகைகளில் இது நிர்வகிக்கிறது. கிளிப்களை நீக்கலாம்; எடிட் செய்திடலாம்; என்கிரிப்ட் செய்திடலாம்; எதனுடனாவது இணைக்கலாம். இன்னும் பல செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். இந்த கிளிப் பிரவுசரில் ஒரு ஸ்பெல் செக்கர் உள்ளது. டெக்ஸ்ட் எழுத்து மாற்றும் வசதி கொண்டுள்ளது. குறுக்கு கோடுகளை நீக்கிடும் வசதி உள்ளது. எச்.டி.எம்.எல். மற்றும் யு.ஆர்.எல் ஆகியவற்றை ஹைலைட் செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது.

இவற்றுடன் கிளிப்களை அகர வரிசைப்படுத்திப் பயன்படுத்தலாம். ஹாட் கீ அமைக்கலாம். கிளிப்களைத் தனியாகவும் பிரிண்ட் செய்திடலாம். இன்னும் பல வசதிகளைக் கொண்ட இந்த புரோகிராம் டவுண்லோட் செய்து முதல் 30 நாட்களுக்கு மட்டும் இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் தரப்படுகிறது. இணைய முகவரி: http://www.thornsoft.com/ யு.எஸ்.பி. டிரைவில் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய பதிப்பு ஒன்றும் தரப்படுகிறது.

3. ClipMagic:  இந்த புரோகிராம் தனி நபர் பயன்பாட்டிற்கு இலவசம் என்ற அறிவிப்புடன் டவுண்லோட் செய்திடக் கிடைக்கிறது. http://www.clipmagic.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம். கிளிப் போர்டில் காப்பி செய்யப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் இமேஜ்களை இது பதிந்து வைத்துக் கொள்கிறது. பின் அவற்றை எப்போது வேண்டுமானாலும் பேஸ்ட் செய்திடவும் எடிட் செய்திடவும் முடியும். நிறைய கிளிப்கள் இருந்தால் அவற்றை வகைப்படுத்த முடியும். தொடர்ந்து கிடைக்கும் கிளிப்களைத் தாமாக அந்த அந்த வகைகளில் பதியும் படி அமைக்க முடியும். இன்னும் சில கூடுதல் வசதிகளையும் இந்த புரோகிராம் மூலம் அமைக்கலாம்: டெக்ஸ்ட் மற்றும் இமேஜ் கிளிப்களை பிரிவியூ செய்திடலாம்; எந்த இணைய தளங்களில் இருந்து டெக்ஸ்ட் காப்பி செய்யப்பட்டது என்று நினைவில் வைக்கலாம்; இதனுடன் இணைந்த வெப் பிரவுசரில் கிளிப்களை அதன் மூலத்திலேயே காணலாம்; ஸ்கிரின் இமேஜை முழுமையாகவும் தேவையான அளவிலும் வரையறை செய்து காப்பி செய்திடலாம்; கிளிப்களை டிஸ்க்கில் காப்பி செய்திடலாம். முன்பு காப்பி செய்த கிளிப்களை எளிதாகப் பெற கிளிப் மேஜிக்கில் அதன் மீது ரைட் கிளிக் செய்து “Item Properties” தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அந்த குறிப்பிட்ட கிளிப்பிற்கு ஹாட் ஷார்ட் கட் கீ அமைக்கலாம். எந்த நிலையிலும் கிளிப் ஒன்றினை பேஸ்ட் செய்திடலாம்.

4.ArsClip: விண்டோஸ் இயக்கத்தின் கிளிப் போர்டுக்கான இலவச என்ஹேண்சர் புரோகிராம் என இது அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிப் போர்டில் இறுதியாகக் காப்பி செய்யப்பட்ட 15 டெக்ஸ்ட்களையும் 5 டெக்ஸ்ட் அல்லாதவற்றையும் இந்த புரோகிராம் நினைவில் கொள்கிறது. இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால் Ctrl + Shift + Z என்ற ஹாட் கீகள் மூலம் பெறலாம். இந்த புரோகிராமினை இயக்குகையில் இது சிஸ்டம் ட்ரேயில் ஐகான் ஒன்றை அமைக்கிறது. இதன் மீது ரைட் கிளிக் செய்து கிளிப்களை செலக்ட் செய்திடலாம். எப்போதும் வேண்டும் சில கிளிப்களை நிரந்தரமாக காப்பி செய்து வைக்கலாம். அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு ஹாட் கீ ஏற்படுத்தி வைக்கலாம். நிரந்தரமாக ஒரு கிளிப்பை வைத்திட சிஸ்டம் ட்ரே ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Permanent Items”என்பதைத் தேர்ந்தெடுக்கவும். “ArsClip Permanent Items and Groups” என்னும் டயலாக் பாக்ஸ் உங்களுக்குக் கிடைக்கும். இதில் “Default” என்பதில் கிளிக் செய்திடவும். அதன்பின் “New Item”என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இனி நீங்கள் செலக்ட் செய்துள்ள கிளிப்பிற்கு ஒரு பெயரை டைப் செய்திடவும். இது ArsClip மெனுவில் காட்டப்படும். பின் இதனை இந்த புரோகிராமில் பேஸ்ட் செய்திடவும். பேஸ்ட் செய்த பின்னர் “Use Keystrokes / Commands” என்ற பாக்ஸில் டிக் செய்திடவும். இதன் மூலம் கீ ஸ்ட்ரோக்ஸ் அமைக்கலாம்.

இந்த புரோகிராம் மூலம் கிளிப் போர்டில் உள்ளவற்றை நீக்கலாம். கட்டளை ஒன்றை இயக்கலாம். இன்றைய தேதியை அல்லது ஒரு கிளிப்பினை டெக்ஸ்ட்டில் செருகலாம். இதனைப் பேஸ்ட் செய்வதற்குக் கூட ஒரு ஹாட் கீ அமைக்கலாம். அதன் பின் சேவ் செய்தால் ஒரு கிளிப்பிற்காக நீங்கள் மேற்கொண்ட, மேலே சொன்ன அனைத்தும் சேவ் செய்யப்படும். இதன் பின் “ArsClip Permanent Items and Groups” டயலாக் பாக்ஸை மூடவும்.இதன் பாப் அப் மெனுவினைப் பெறுகையில் எந்த ஒரு கிளிப்பினையும் பெர்மணன்ட் ஆக ஒரு சிறிய கிளிக் மூலம் ஆக்க முடியும்.

ஒரு செட் அப் புரோகிராம் மூலம் வந்தாலும், அது ஒரு எக்ஸிகியூட்டபிள் பைலாகத்தான் கிடைக்கிறது. இதனை ஹார்ட் டிஸ்க் அல்லது போர்ட்டபிள் பிளாஷ் டிரைவில் எந்த இடத்திலும் பதிந்து வைக்கலாம். http://www.joejoesoft.com/cms/showpage.php?cid=97 என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனை இலவசமாக டவுண்லோட் செய்திடலாம்.