உற்சாகம் வேண்டுமா? இப்படி மாறுங்கள்!

நீங்க எப்போதும் துறுதுறுவென்று சுறு சுறுப்பாக இயங்க வேண்டுமா? `அது ரொம்ப சுலபம்’ என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரியும். காலையில் 5 மணிக்கு எழுந்து உடல் வலிக்க உடற்பயிற்சி செய்யச் சொல்லுவீங்க?” அப்படித்தானே யோசிச்சீங்க, அதுதான் இல்லை. “கவலையேபடாதீங்க. நம்மகிட்ட விசேஷமான ஒரு தைலம்/டானிக் இருக்கு, சீக்கிரமே உங்க களைப்பு ஓடியே போகும்”, “கண்டிப்பா ஆபரேஷன் செய்தாகணும்” என்பது போன்ற கரடு முரடான ஐடியாக்கள் கொடுத்து இருப்பார்களோ என்றால் அதுவும்இல்லை.

நமது சாப்பாட்டு விஷயத்தில் சிறிது கவனம் செலுத்தினாலே போதுமாம். சில சத்துக்கள் அளவுக்கு அதிகமாகும்போது தேவையற்ற பிரச்சினைகளை இழுத்து வந்துவிடுகிறது. அப்படிப்பட்ட சத்துக்களில் கொழுப்பும், கார்போஹைட்ரேட்டும் முக்கிய இடம் பிடிக்கிறது. இவை இரண்டுமே உடல்பருமனை அதிகரித்து பல்வேறு நோய்த் தொற்றுக்கும் காரணமாக அமைந்துவிடுவதுண்டு.

இந்த இரண்டு சத்துக்களையும் கட்டுப்பாட்டோடு சேர்த்துக் கொண்டால் என்ன ஆகும் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அப்போதுதான் நமது சோம்பேறித்தனத்துக்கு மொத்த உருவமாக இருப்பதே கொழுப்புதான் என்று தெரியவந்தது.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இதற்கான ஆய்வு நடந்தது. சராசரியாக 50 வயதுடைய 106 பேரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அவர்களில் 55 பேருக்கு குறைவான கார்போஹைட்ரேட் சத்தும், அதிகமான கொழுப்புச்சத்தும் நிறைந்த உணவு கொடுக்கப்பட்டது. 51 பேருக்கு அதிக கார்போஹைட்ரேட் சத்தும், குறைந்த கொழுப்புச் சத்தும் நிறைந்த உணவு கொடுத்து சோதனை செய்யப்பட்டது. ஒரு வருடத்துக்குப் பிறகு இரு குழுவினரையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் சில வியப்பூட்டும் முடிவுகள் கிடைத்தன.

இரு குழுவினருமே முந்தைய நிலையில் இருந்து தலைகீழாக மாறிவிட்டனர். எடை விஷயத்தில் இரு குழுவைச் சேர்ந்தவர்களும் சராசரியாக 13 கிலோவுக்கு மேல் குறைந்திருந்தனர். ஆனால் சுறுசுறுப்பு விஷயத்தில் இரு தரப்பினருக்கும் நிறையவே வேறுபாடுகள் காணப்பட்டது. குறைந்த கொழுப்புள்ள உணவு சாப்பிட்டவர்களுக்கு சுறுசுறுப்பு அதிகரித்திருந்தது, மனநிலையும் அற்புதமாக இருந்தது. இந்த மாற்றங்கள் 2 மாதங்களிலேயே அவர்களுக்குள் ஏற்படத் தொடங்கிவிட்டது.

அதிக கொழுப்புள்ள உணவை சாப்பிட்டவர்கள், சுறுசுறுப்பில் ஆய்வுக்கு முந்தைய நிலையில் இருந்ததுபோலவே காணப்பட்டார்கள். எந்தவித மாற்றமும் இல்லை. மன நிலையும் மந்தமாகவே காணப்பட்டது.

இந்த ஆய்வைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் குறைந்த கலோரி, குறைந்த கொழுப்புள்ள உணவுகள் தயாரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

“அப்பாடா… நான் இனிமே சுறுசுறுப்பாகி விடுவேன்னு நீங்க நினைக்கிறீங்களா?” முயற்சி பண்ணித்தான் பாருங்களேன்!