அர்த்தமுள்ள இந்துமதம்-(10. மங்கல வழக்குகள் – கவியரசு கண்ணதாசன்)

சுயமரியாதை, சீர்திருத்த இயக்கம் தீவிரமாக இருந்த காலம்.

கடவுள் ஒழிப்பு, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு,

மூட நம்பிக்கை ஒழிப்பு என, அது ஆரவாரம் செய்த காலம்.

அந்த ஆரவாரத்தால் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

கறுப்புச்சட்டை போட்டுக் கொள்வதும், மதங்களையும் மதவாதிகளையும் கேலி செய்வதும், அந்த நாளில் இளைஞர்களுக்கு வேடிக்கை விளையாட்டாக இருந்தது.

அது ஒரு தத்துவமா?, அதில் பொருள் உண்டா?,

பயனுண்டா? என்று அறியமுடியாத வயது.

அந்த வயதிலும், அந்த நிலையிலும், இந்துக்களின் மங்கல வழக்குகள் மீது எனக்குப் பிடிப்புண்டு.

சில சீர்த்திருத்தத் திருமணங்களுக்கு நான் தலைமை தாங்கியிருக்கிறேன்.

மற்றும் சில திருமணங்களில் நான் பேசியிருக்கிறேன்.

மேலவைத் தலைவர் திரு.சி.பி.சிற்றரசுவின் மகளுக்கு சீர்திருத்தத் திருமணம் நடந்த போது, நானும் அதில் கலந்து கொண்டேன்.

அங்கே பேசியவர்களில் பொன்னம்பலனார் என்று ஒருவரும் பேசினார்.

மணமக்களின் தலைமீது மஞ்சள் அரிசியும், புஷ்பங்களும் தூவப்பட்டது பற்றி அவர் குறிப்பிட்டார்.

“இங்கே மஞ்சள் அரிசி தூவினார்கள். இந்த முட்டாள்தனம் எதற்காக? பிணத்துக்கும்தான் மஞ்சள் அரிசி தூவுகிறார்கள். இவர்கள் மணமக்களா? இல்லை பிணங்களா?” என்று அவர் பேசினார்.

எனக்கு நெஞ்சில் அடிப்பது போலிருந்தது.

`திருமண வீட்டில் அமங்கலமாய்ப் பேசுகிறாரே’ என்று நான் வருந்தினேன்.

இன்னொரு சீர்திருத்தத் திருமணம்.

அங்கே ஒருவர் கீழ்க்கண்டவாறு பேசினார்.

“இங்கே நடப்பது சீர்த்திருத்தத் திருமணம். இரண்டே நிமிடத்தில் செலவில்லாமல் முடிந்துவிட்டது. ஐயர் வரவில்லை, ஓமம் வளர்க்கவில்லை, அம்மி மிதிக்கவில்லை, அருந்ததியும் பார்க்கவில்லை. இங்கே ஐயர் வராததால் இந்தப் பெண் வாழமாட்டாளா? இவளுக்குப் பிள்ளை பிறக்காதா? ஐயர் வந்து நடத்தாததால் இவள் விதவையாகிவிடப் போகிறாளா? அப்படியே விதவையாகிறாள் என்றே வைத்துக் கொள்வோம். ஐயர் நடத்தும் திருமணங்களில் பெண் விதவையாவதில்லையா? அந்த ஐயர் வீட்டிலேயே விதவைகள் இருப்பார்களே! அவர் வந்து கட்டினால்தான் தாலி நிலைக்குமா? நாங்கள் கட்டி வைத்தால் அறுந்து போகுமா?”

அவர் பேசி முடிக்கவில்லை. நான் அவர் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தேன்.

“நடப்பது திருமணம்; நீ பேசுவது விதவையாவது எப்படி என்பதைப்பற்றி, பேசாமல் உட்கார்” என்றேன்.

பிறகு நான் பேசும்போது நமது மங்கல மரபுகள் பற்றிக் குறிப்பிட்டேன்.

`மங்கலம்-அமங்கலம்’ என்று இந்துக்கள் பிரித்தது மூட நம்பிக்கையால் அல்ல; அது மனோதத்துவ மருத்துவம்.

நல்ல செய்திகள், வாழ்த்துக்கள் ஒரு மனிதனின் காதில் விழுந்துகொண்டே இருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது; ஆனந்தமும் அதிகரிக்கிறது.சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள் கேட்கும்போது, உன் உடல் எவ்வளவு புல்லரிக்கிறது.

மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டவை.

திருமணத்தில் மாங்கல்யம் கட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறார்கள்?

ஏதாவது ஒரு மூலையில், யாரோ யாரையோ, `நீ நாசமாய்ப் போக’ என்றோ, `உன் தலையில் இடி விழ’ என்றோ அமங்கலமாய்த் திட்டிக் கொண்டிருக்கக்கூடும்.

அத்தகைய வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழக் கூடாது என்பதற்காகவே, அந்தச் சத்தத்தை அடக்குவதற்காகவே பலமாகக் கெட்டிமேளம் தட்டப்படுகிறது.

இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லிக் கொண்டு துள்ளி வந்த சீர்திருத்தம், களை எடுக்கிற வேகத்தில் பயிரையே பிடுங்க ஆரம்பித்தது.

நமது மங்கல வழக்குகள் ஒரு நாகரிக சம்பிரதாயத்தையே உருவாக்கியுள்ளன. அவற்றுள் பல விஞ்ஞான ரீதியானவை.

மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்லுகிறார்கள்.

மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்?

ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகிறார்கள்?

எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன? காரணம், பூமியே வலப்புறமாகச் சுழல்கிறது என்பதுதான்.

மனிதனின் இரண்டு கால்களில் இரண்டு கைகளில் இடது கால் கைகளைவிட, வலது கால் கைகள் பலம் வாய்ந்தவை.

`சக்தியோடு வாழ’ நிரந்தரமாக எதிலும் `வலப்புறமாக வருவது நன்று’ என இந்துக்கள் நம்பினார்கள்; நம்புகிறார்கள்.

`வலம்’ என்பது `நாம் வலிமையடைவோம்’ என்றும் பொருள் தருகிறது.

`வலியோம், வல்லோம், வல்லம், வலம்’

இந்த நான்கு வார்த்தைகளும் ஒரே பொருள் உடையவை.

தனது வலிமையின் மீது நம்பிக்கை வைத்து வாழ்வதற்கே வலது காலை முதலில் எடுத்து வைக்கச் சொன்னார்கள் இந்துக்கள்.

சாதாரணமாக, நண்பர்கள் வீட்டுக்கோ, திருமணங்களுக்கோ போகிறவர்கள், திரும்பிச் செல்லும் போது, `போய் வருகிறேன்’ என்று சொல்லிக் கொண்டு போவார்கள்.

அதன் பொருள், “இன்னும் பல திருமணங்கள், விழாக்கள் உன் வீட்டில் நடைபெறும்; நாங்கள் மீண்டும் வருகிறோம்” என்பதே.

அமங்கல வீடுகளுக்குச் செல்கிறவர்கள் திரும்பும் போது, “போகிறேன்” என்று சொல்லிக்கொண்டு போவார்கள்.

அதன் பொருள், “இனி உன் வீட்டில் அமங்கலம் நேராது. நாங்கள் வரவேண்டியதாயிருக்காது” என்று நம்பிக்கைட்டுவதாகும்.

மணமக்களை, “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று ஏன் வாழ்த்துகிறார்கள்?

உலகத்திலுள்ள வாழ்க்கைப் பேறுகள்,

இந்துக்களால் பதினாறு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

அவை மக்கட்பேறு, செல்வப்பேறு, உடல் நலம் எனப் பதினாறு வகையாக விரியும்.

மணமக்கள் அவ்வளவு சுகமும் பெறவேண்டும் என்பதையே, இந்துக்கள் `பதினாறும் பெற வேண்டும்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகள், விழுது விட்டு விழுது விட்டுத் தழைக்கும் மரம் ஆலமரம் ஒன்றுதான்!

ஓரிடத்தில் முளைக்கும் அருகம்புல் அத்தனையையும் ஒருங்கு சேர்ப்பது ஒரே வேர்தான்.

இப்படித் தழைத்து நிற்பவை, வேரோடு வாழ்பவை பெருமைக்குரிய பேறுகள் அனைத்தையும், மங்கலவழக்கில் சேர்த்தார்கள் இந்துக்கள்.

`கணவரின் பெயரை மனைவி சொன்னால்கூட மரியாதையும் குறையும், மங்கலமும் குறையும்’ என்று நம்பினார்கள்.

யாராவது ஒருவர் தும்மினால், பக்கத்தில் இருக்கிறவர்கள் `வாழ்க’ என்பார்கள்.

`தும்மினேனாக வழுத்தினாள்’ என்றான் வள்ளுவன்.

தும்மும் போது சிலர் `நூறு வயது’ என்பார்கள்.

எங்கள் பாண்டிய நாட்டில் பிச்சைக்காரர்கள் வந்து சோறு கேட்கும்போது, சோறு இல்லை என்றால் `இல்லை’ என்று சொல்ல மாட்டார்கள்.`நிறைய இருக்கிறது; நாளைக்கு வா’ என்பார்கள்.

தீபத்தை அணைக்கச் சொல்லும்போது, `அணையுங்கள்’ என்று சொல்லமாட்டார்கள். `வளர்த்து விடு’ என்பார்கள்.

வீட்டில் ஒருவர் இறந்துவிட்டதைக் குறிக்கும் போது `சிவலோகப் பதவியடைந்தார்; பரலோகப் பிராப்தியடைந்தார்’ என்பார்கள்.

பெண் ருதுவாவதைப் `பூப்படைந்தாள், புஷ்பவதியானாள்’ என்பார்கள்.

அதாவது `பெண் மொட்டாக இருந்து புஷ்பம் போல் மலர்ந்திருக்கிறாள்’ என்பது அதன் பொருள்.

மணமக்களின் முதலிரவை `சாந்தி முகூர்த்தம்’ என்பார்கள்.

“காதலில் துடித்துக் கொண்டிருந்த உள்ளம், ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்குச் சாந்தியடைகிறது” என்பது அதன் பொருள்.

இந்துக்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையிலும் மங்கலமே நிறைந்திருக்கும்.

நான் சொல்லுவது சராசரி இந்துக்களை.

ஆத்திரக்காரர்கள் அமங்கலமாகப் பேசுவது இந்துக்களின் மரபைச் சேர்ந்ததல்ல.

நன்றாக வாழ்கிற பெண்ணை எங்களூரில் `வாழ்வரசி’ என்பார்கள். கொச்சைத் தமிழில் `வாவரசி’ என்பார்கள்.

பெரும்பாலான இந்து சமூகங்களில் `கணவனை இழந்த பெண் வெள்ளைச் சேலை அணியவேண்டும்’ என்று விதிவகுத்து வைத்திருப்பது ஏன்?

`இவள் கணவனை இழந்தவள்’ என்று தனித்துக் காட்டுவதற்காகவும் கணவனை இழந்தும் `தூய்மையானவள்’ என்று குறிப்பதற்காகவும்.

ஆக, மங்கல மரபு அல்லது வழக்கு என்பது வாழ்க்கையில் நம்பிக்கையும் உற்சாகமும் உண்டாவதற்காகவே.

அமங்கலங்கள் குறிக்கப்படும்போதெல்லாம், அவற்றில் அடக்கமும் அமைதியும் வற்புறுத்தப்படுகின்றன.

“இந்தத் துயரங்கள் உனக்கு இறைவனால் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை நீ ஏற்றுக் கொள்” எனக் கூறுவதே அமங்கலங்களில் பலர் கூடிப் பரிந்துரைப்பதன் நோக்கம்.

வாழாமல் இறந்துபோன குழந்தைகளை, வாலிபர்களை,கன்னிப்பெண்களை, இந்துக்கள் புதைக்கிறார்கள்.
கொஞ்ச நாளாவது வாழ்ந்து இறந்தவர்களை எரிக்கிறார்கள்.

வாழாத உடம்பு மண்ணிலே கலந்து நிம்மதியடையவும், வாழ்ந்த உடம்பு விண்ணிலே கலந்து ஐக்கியமாகவும் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்.

சாம்பலை ஏன் நதியில் கரைக்கிறார்கள்?

“ஆறுபோல உன் ஆத்மா ஓடிக் கடல் போலிருக்கும் இறைவனோடு கலக்கட்டும்” என்பதற்கே.

இந்துக்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும், பழக்க வழக்கங்களையும் கூர்ந்து நோக்குங்கள்.

அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் பொருள் விரித்துப் பாருங்கள்.

இயற்கையாகவே மங்கலம், அமங்கலம் தெரிந்துவிடும்.

மங்கலச் சொற்கள், மங்கல அணி, மங்கல விழா என்ற வார்த்தைகள் இந்துக்களின் பண்பாட்டு உணர்ச்சியை அறிவுறுத்தும்.

அடுத்தவர் வீட்டில் சாப்பிடும்போது, சாப்பாடு மட்டமாக இருந்தாலும், `அற்புதமாக இருக்கிறது’ என்று சொல்லுவது இந்துக்கள் வலியுறுத்தும் நாகரிகம்.

“பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர், நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.”

என்றான் வள்ளுவன்.

உலகத்தில், நாகரிகம் என்பது இருபதாம் நூற்றாண்டின் பழக்க வழக்கங்களைக் குறிக்கிறது.

நமது நாகரிகமோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது.