சீட் பெல்ட்’ பிறந்தவிதம்!

நவீன வாகனங்களில் பாதுகாப்பை உறுதிசெய்யும் `சீட் பெல்ட்’ முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது விமானங்களில்தான். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஜார்ஜ் கெய்லி என்பவர் சீட் பெல்ட்டை கண்டுபிடித்தார். விமானங்களைத் தொடர்ந்து, இந்த பெல்ட்டுகளை கார்களிலும் பயன்படுத்துவது நல்லது என்று 1920-களில் டாக்டர்கள் பரிந்துரைக்கத் தொடங்கியதை அடுத்து அதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டன. ராணுவ பிளைட் இன்ஸ்பெக்டராக இருந்த எட்வர்ட் ஜெ. ஹாக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு பெல்ட்டையே போர்டு மோட்டார் கம்பெனி தனது துவக்க கால கார்களில் பயன்படுத்தியது.

1955-ல் `ஸாப்’ கார் தயாரிப்பு நிறுவனம் முதல்முறையாக சீட் பெல்ட்களை காரின் அடிப்படை வசதிகளில் ஒன்றாக ஏற்றுக்கொண்டது. காரின் முன் மற்றும் பின் சீட்டுகளில் இருப்போர் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று முதன்முதலில் கட்டாயமாக உத்தரவிட்டது ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம்.

வால்வோ நிறுவனம் 1956-ல் `டூ பாயின்ட் கிராஸ் செஸ்ட் டயகனல் பெல்ட்டு’களை அறிமுகப்படுத்தியது. அதையடுத்து 1958-ல் `த்ரீ பாயின்ட் சேப்டி பெல்ட்’கள் அறிமுகமாயின. சுவீடனில் 1959-லும், அமெரிக்காவில் 1963-லும் இந்த த்ரீ பாயின்ட் சேப்டி பெல்ட்கள் புழக்கத்தில் வந்தன.