எனக்குத் தெரிந்தவரை…கவியரசு கண்ணதாசன்(அர்த்தமுள்ள இந்து மதம்)

“அன்புள்ள கவிஞ!

தாங்கள், `அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற தலைப்பில் எழுதிவரும் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். கட்டுரைகளில் எழும் ஐயங்களையும் அவற்றிற்குரிய தங்களின் பதில்களையும் உடனுக்குடன் இலங்கையிலிருந்து தொடர்புக் கொண்டு பெறமுடியாதிருப்பதால், இக்கடிதத்தின் மூலம் விளக்கம் பெற முனைந்துள்ளேன்.

1. தாங்கள் மூன்று வகை நண்பர்களைப் பற்றிக் கூறியுள்ளீர்கள். அவர்கள் பனை, தென்னை, வாழை போன்றவர்கள் என்று. `வாழை’ என்பது தவறானது. கமுகு என்பது சரியானது. இதனை நாலடியார் என்னும் நூலில் வரும் பாடல் ஒன்று விளக்குகிறது.

கடைஆயார் நட்பில் கமுகுஅனை யார் ஏனை
இடைஆயார் தெங்கின் அனையர் – தலைஆயார்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே
தொன்மை உடையார் தொடர்பு (நாலடியார் 216)

2. “ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்” என்று கூறியவர் வள்ளுவன் என்று கூறியுள்ளீர்கள். இப்படிக் கூறியவர் இளங்கோ அடிகளார்; வள்ளுவர் அல்லர்.

3. “அர்ச்சுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை” என்று எழுதியுள்ளீர்கள். பரந்தாமன் என்றழைக்கப்படும் மகாவிஷ்ணுவால் உபதேசிக்கப்பட்டதோ அல்லது கூறப்பட்டதோ அல்லது எழுதப்பட்டதோ அல்ல பகவத்கீதை. யாரோ ஒருவரோ அல்லது சிலரோ கூறிய கருத்துக்களைக் கண்ணன் கூறியது -அருளியது என்று வேறு யாரோ கதை கட்டிவிட்டார்கள்.

`கீதை பரந்தாமனால் பகரப்பட்ட கருத்து’ என்று திட்ட வட்டமாகத் தெரிந்திருந்தால், சங்கம் மருவிய காலத்தில் பிற்கூற்றில் வாழ்ந்த முதல் ஆழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேய் ஆழ்வார் போன்றோர், அல்லது பிற்காலத்தில் வாழ்ந்த ஏனைய ஒன்பது ஆழ்வார்கள் தமது பிரபந்தங்களில் விளக்கி காட்டியிருப்பர். கீதையைப் பற்றியோ அது பரந்தாமனால் ஆக்கப்பட்டது என்பது பற்றியோ எந்தவிதக் கருத்தையும் அவர்கள் கூறவில்லை. வைணவ மதத்துக்கும் அதன் கருத்துகளுக்கும் முன்னோடிகளான ஆழ்வார்கள் கூறாத கருத்தைப் பிற்காலத்தவர் தவறாக எடை போடுவது அறிவுக்கு ஏற்றதல்ல.

4. தங்களின் கட்டுரைகளில், `தமிழர் என்றால் இந்துக்கள், இந்துக்கள் என்றால் தமிழர்’ என்ற முரண்பாடான `தொனி’ காணப்படுகிறது. தமிழர் வேறு; இந்துக்கள் வேறு. தமிழிரில் ஒரு பகுதியினர் பிற்காலத்தில் இந்துக்களாக மாறினரே ஒழியத் தமிழர் அனைவரும் இந்துக்களல்லர். புத்த சமயம், கிறிஸ்தவ சமயம் முதலியன போல், `இந்துமத’மும் மிகப் பிற்காலத்தில் தமிழ் நாட்டுக்கு வந்து புகுந்ததேயன்றி, `தமிழர்’ என்ற ஓர் இனம் உருவானபோது, அவர்களிடையே எந்தவித மதப் பாகுபாடோ, மூடக் கருத்துகளோ இன்று காணப்படுவது போல் காணப்படவில்லை. அன்று வாழ்ந்த திராவிடத்தார் `மதம்’ அற்றவர்கள். அன்பு வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.

`இந்து’ என்ற சொல்லே, மிக்க அண்மைக்காலத்தில் தோன்றியதென்று அறிஞர்கள் ஆராய்ந்துள்ளார்கள். `அநேகமாக இந்தியாவில் முஸ்லீம் படையெடுப்புகள், தொடங்கிய கி.பி. 1001-க்குப் பின் உள்ள காலத்திற்றான் `இந்து’ என்ற சொல் ஒரு மதத்தைச் சுட்டி வருகிறது. அச்சொல் முதன் முதல் கி.பி. 8 – ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நூலிலேயே காணப்பட்டது என்று கூறப்படுகிறது. முஸ்லீம் படை எடுப்பாளர், இந்தியாவை `இந்துஸ்தான்’ என்றே அரேபியப் பெயரால் அழைத்தனர். அவர்களே முதன்முதலாக இந்திய மக்களின் மதத்தை `இந்துமதம்’ என்றும், அதனைப் பின்பற்றுவோரை இந்துக்கள் என்றும் அழைத்தனர்’ – ஆதாரம், அமெரிக்கக் கலை களஞ்சியம்.

(பிபகுக் ஞிசூக் ச்கி ஞ்குக் ஞுச்சுஙீக்ஷ பிஏகூஙூக்ஷஞிபீ ஞ்ச் க்ஷக்சூஷசுகூஸக் ஹ சுக்ஙீகூகீகூச்ஙூ சிசுச்ஸஹஸஙீட் சிச்சூஞ்க்ஷஹஞ்க்சூ ஞ்குக் ஙுஞிசூஙீகூஙு கூஙூஞீஹசூகூச்ஙூ ச்கி ஐஙூக்ஷகூஹ ஞுகுகூஷகு ஸக்கீஹஙூ கூஙூ 1001 அ.ஈ. ஞ்குக் ரச்சுக்ஷ கூஞ்சூக்ஙீகி கூசூ சூஹகூக்ஷ ச்கி ச்ஷஷஞிசு கிச்சு ஞ்குக் கிகூசுசூஞ் ஞ்கூஙுக் கூஙூ ஹ ஸச்ச்ஙி ச்கி ஞ்குக் 8ஞ்கு ஷக்ஙூஞ்ஞிசுட் அ.ஈ. பகுக் ஙஞிசூஙீகூஙு கூஙூஞீஹக்ஷக்சுசூ ஞுகுச்சூக் அசுஹஸகூஷ ஙூஹஙுக் கிச்சு ஐஙூக்ஷகூஹ ஞுஹசூ பிஏகூஙூக்ஷஞிசூஞ்ஹஙூபீ ஞுகுச் கிகூசுசூஞ் ஷஹஙீஙீக்க்ஷ ஞ்குக் சுக்ஙீகூகீகூச்ஙூ ச்கி ஞ்குக் சிக்ச்சிஙீக் ச்கி ஐஙூக்ஷகூஹ பிஏகூஙூக்ஷஞிகூசூஙுபீ ஹஙூக்ஷ கூஞ்சூ ஹக்ஷகுக்சுக்ஙூஞ்சூ ஏகூஙூக்ஷஞிசூ பகுக் உஙூஷட்ஷஙீச்சிக்க்ஷகூஹ அஙுக்சுகூஷஹஙூஹபீ.)

வரலாறு இப்படி இருக்கும்போது, தங்களின் கட்டுரை ஒன்றில் (மங்கல வழக்குகள்), “அடுத்தவர் வீட்டில் சாப்பிடும்போது சாப்பாடு மட்டமாக இருந்தாலும் அற்புதமாக இருக்கிறது என்று சொல்வது இந்துக்கள் வலியுறுத்தும் நாகரிகம்”.

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்

“நமது (இந்துக்கள் -?) நாகரிகமோ 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிவிட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

தங்களின் கூற்றுப்படி பார்த்தால் மதப் பாகுபாடற்ற – மதத்தைப் பற்றிப் பொருட்படுத்தாத `மதம்’ என்று ஒன்று இருக்கிறது; என்று எவ்விடத்திலும் கூறாத திருவள்ளுவரும், ஒர் இந்து; அவர் எழுதிய திருக்குறளும் இந்துமத நூல். ஏன், சங்க நூல்களே இந்துமத நூல்கள் என்றல்லவோ மக்கள் தவறாகக் கருதிவிடுவார்கள் என்று எண்ணுகின்றேன்.

முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்

என்று, திருக்குறளுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுந்த சங்க நூலான நற்றிணை, மேற்காட்டப்பட்ட திருக்குறளுடன் ஒத்த கருத்தைக் கூறுவதால், நற்றிணைக் காலத்துத் தமிழரும் இந்துக்களாகவன்றோ மாறிவிட்டிருப்பர்?

நான் இவ்வாறு கருதுவதற்குக் காரணம், தாங்கள் வேறோர் கட்டுரையில் `நான் ஒரு இந்து என்ற முறையில் எனது மதத்தின் மேன்மைகளை நான் குறிப்பிடுகிறேன்’ என்று, பெரியாரின் பள்ளியில் படித்த பாடத்தையும் மறந்து கூறியதாம்.

இவற்றிற்குத் தாங்கள் தக்க பதில் அளிப்பீர்கள் என்று கருதுகிறேன்.

யாழ்பாணம் அண்ணா இராசேந்திரம்

பதில்

நண்பரே, தங்கள் கேள்விக்குத் தாங்கள் கொடுத்துள்ள எண் வரிசையிலேயே நானும் பதில் தருகிறேன்.

1. தாங்கள் குறிப்பிட்டுள்ள நாலடியார் பாடல் எனக்கும் நினைவுக்கு வருகிறது.

இந்த நாலடியார் பாடலைக் கொண்டே `நல்ல நண்பர்கள்’ என்ற தலைப்பில் முன்பு தென்றலில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.

அதில் பனை, தென்னை, பாக்கு என்றே குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் பின்பு ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் விரிவுரை ஒன்றைக் கேட்டபோது, கடை நண்பர்களுக்குப் பாக்கு மரத்தைவிட வாழை மரம் பொருத்தம் என்று கருதினேன்.

வாழை மரத்தைச் சுட்டி அவரொரு பாடலும் சொல்லியதாக நினைவு.

தங்களைப் போலவே வேறு சில நண்பர்கள் சில பாடல்களைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்கள்.

அவர்களுக்கு நன்றி.

2. நீங்கள் சொன்னது சரி.

`ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்’ என்பது இளங்கோவடிகளின் கூற்றே. அது எனக்குத் தெரியும்.

ஆனால், எதை எடுத்தாலும் `வள்ளுவன் வள்ளுவன்’ என்று சொல்லிப் பழக்கப்பட்டு விட்டதால், மேற்கூறிய சொற்களையும் கவனக்குறைவாக வள்ளுவன் சொல்லியதாக எழுதிவிட்டேன்.

இதுநாள்வரை இதனைத் தங்களைத்தவிர வேறு யாரும் கவனப்படுத்தவில்லை.

காரணம், நான் தவறாகச் சொல்ல மாட்டேன் என்ற நம்பிக்கையாக இருக்கலாம்! அல்லது மேற்போக்காகப் படித்தபோது, இந்தத் தவறு புரியாமல் இருந்திருக்கலாம். எனது கவனக்குறைவை நினைவுபடுத்தியமைக்கு நன்றி.    3. பார்த்தனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது தான் `கீதை’ என்பதிலே எனக்கு எந்தவித ஐயப்பாடுமில்லை.

அர்ஜுனன் கண்ணனை விளித்துக் கேள்விக் கேட்பதும், கண்ணன் பதில் சொல்லுவதுமாகவே கீதையின் வடிவம் இருக்கிறது.

அதனை இடைச் செருக்கல் என்று யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

அன்றியும், திருக்குறளை ஒரு தொகுப்பு நூல் என்று சொன்னால், அது எவ்வளவு தவறாகுமோ, அவ்வளவு தவறு கீதையையும் தொகுப்பு நூல் என்பது.

சங்கம் மருவிய காலத்தில் வாழ்ந்த ஆழ்வார்களோ, பிற்கால ஆழ்வார்களோ, தமது பிரபந்தங்களில் `கீதா சாரியன் கண்ணன்’ என்று கூறுவதால், கீதை வெறும் தொகைநூல் என்றாகி விட்டது.

திருக்குறளை மேற்கோளாகக் கொள்ளும் இளங்கோ அடிகள், குறள் வள்ளுவன் பாடியது என்று கூறாததால் அது வேறு எவரோ பாடியது ஆகாது.

பிற்காலக் கம்பன், சிலப்பதிகாரத்தையும் இளங்கோவையும் சுட்டிக் காட்டாததால், சிலம்பு இளங்கோ பாடியதல்ல என்றாகி விட்டது.

கண்ணனைப் போலவே, தங்களையும் ஆசாரியர்களாகக் கருதிக்கொண்ட ஆழ்வார்கள், அதனைச் சுட்டிக் காட்டாதிருக்கலாம்.

அதற்காகக் கீதையிலே மிகத் தெளிவாக தெரியும் பார்த்தன் – பரந்தாமன் உரையாடல் வடிவத்தைக் கட்டுக்கதை என்று ஏற்றுக் கொள்ள நான் தயாராயில்லை.

4. எனது கட்டுரைத் தொடரில் தமிழர் என்றால் இந்துக்கள் என்றோ, இந்துக்கள் என்றால் தமிழர்கள் என்றோ, மொத்தமாக நான் எங்கேயும் கூறவில்லை.

தமிழர்களில் இந்துக்களாக உள்ளவர்களின் பழக்க வழக்கங்களையே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

தாங்கள் கூறுவதுபோல, தமிழர்களில் ஒரு பகுதியினர், பிற்காலத்தில் இந்துக்களாக மாறினார்கள் என்பதையும் வாதத்துக்காக நான் ஒப்புக் கொள்கிறேன்.

நான் செய்துக் கொண்டிருப்பது `இந்து மதம்’ எப்போது தோன்றியது? என்ற ஆராய்ச்சி அல்ல.

இந்து மதத்திலுள்ள பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், மரபுகள், வழக்குகள் ஆகியவை பற்றிய விரிவுரையே.

`தமிழர்’ என்றொரு இனம் உருவானபோது, `அவர்களிடம் எந்தவிதமான மதக்
கருத்துகளும் இல்லை’ என்று நீங்கள் சொல்வது நகைப்புக்கு இடமானது.

உலகில் எந்த இனம் பிறந்தபோதும், மதமும் கூடவே பிறந்ததில்லை.

பிற்காலத்தில், அந்தந்த இனங்கள் ஒவ்வொரு அடிப்படைத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு, அதற்கொரு பெயர் வைத்துக்கொண்டது தான், மதத்தின் வரலாறு.

அப்படித்தான் தமிழர்களிலும் ஒரு பகுதியினர் இந்துக்கள் ஆனார்கள்.

`அன்று வாழ்ந்த திருவிடத்தார் மதம் அற்றவர்கள்’ என்பது வெறும் கட்டுக்கதை.

`பகுத்தறிவு’ என்ற பெயரால், பழைய தமிழனின் வரலாற்றையும் மலிவான விலைக்கு வாங்கித் திருத்தம் பெற்ற புதிய பதிப்பாக வெளியிட்டுச் சிலர் செய்த திருக்கூத்து.

சிந்துவெளி நாகரிகத்திலேயே தமிழர்களுக்கு இறை வழிபாடு இருந்திருக்கிறது.

இறைவழிபாடு உள்ளவர்களைத் தான் `மதம்’ என்ற சொல் ஒன்று சேர்க்கிறது.

தமிழர்களிடையே பலவகையான மதங்கள் இருந்தன என்பது உண்மையே தவிர, `மதமே இல்லை’ என்பது ஈரோட்டுக் கடைத் தெருவில் வாங்கி வந்து காஞ்சிபுரம் சந்தையில் விலையான வாதம்.

`இந்து’ என்ற சொல் எந்தக் காலத்தில் வந்தது என்ற ஆராய்ச்சி எனக்குத் தேவையில்லை என்றாலும், அது பிற்காலத்தில் வந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

அதற்காக, `இந்து’ என்ற வார்த்தை பிறந்த பிறகுதான் மதம் பிறந்தது’ என்றா நீங்கள் கருதுகிறீர்கள்?

`சைவர்கள்’ என்றும் `வைணவர்கள்’ என்றும் தனித் தனியாக அழைக்கப்பட்ட எல்லாரையும் ஒன்றாகச் சேர்த்துப் பிற்காலத்தில் சூட்டப்பட்ட பெயரே `இந்து’ என்பது. அது நீங்கள் குறிப்பிட்ட காலத்தில்தானா அல்லது வேறு காலத்திலா என்பது, அதுபற்றி ஆராய்ச்சி செய்வபவர்தாம் கூறவேண்டும்.

வள்ளுவர் குறள்களில் பல்வேறு சமயக் கருத்துகளும் காணக் கிடக்கின்றன.

பௌத்த கருத்துகளும் அதில் இருந்தாலும், வள்ளுவன் ஒரு புனிதமான இந்து என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

அவன் இறைவனை `ஆதிபகவன்’ என்றழைக்கிறான்.

“பகவான் என்றால் என்ன?”

“பகவானே ஈசன்; மாயோன் பங்கயன் சினனே புத்தன்” – என்பது சூத்திரம்.

`பகவான்’ என்ற வார்த்தை, `ஈசன்’ என்ற சிவனையும், `மாயோன்’ என்ற திருமாலையும், `பங்கயன்’ என்ற பிரம்மாவையும், `சினன்’ என்ற ஜைனனையும், புத்தனையும் குறிக்கிறது.

(நான் முதல் இதழில் `ஆதிபகவான்’ என்பது ஜைன – சமணக் கடவுள்களையே குறிக்கிறது என்றே எழுதியிருக்கிறேன்.

ஆனால், சூத்திரப்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற இந்துக் கடவுள்களையும், அந்த வார்த்தை சுட்டிக் காட்டுகிறது.

அஃதன்றியும்,

`தாமரைக் கண்ணன்’ என்றும், `அறவாழி அந்தணன்’ என்றும், `வேண்டுதல் வேண்டாமை இலான்’ என்றும் பல இடங்களில் அவன் குறிப்பிடும் இறைவன் கருத்து, இந்துமதக் கருத்தாகவே இருக்கிறது.

(அடுத்த இதழில், `வள்ளுவன் ஒரு இந்துவே’ என்பதை நிலைநாட்ட ஒரு முழுக் கட்டுரையே எழுதுகிறேன்.)

“நாகரிகம்’ பற்றிய கருத்து நற்றிணையிலும் காணப்படுவதால், “நற்றிணைக் காலத் தமிழர்கள் இந்துக்களா?” எனக் கேட்கிறீர்கள்.

அதே நாகரிகம் இன்று இந்துக்களாக இருக்கிற தமிழர்களிடம் காணப்படுகிறது என்றுதான் நான் கூறினேனே தவிர, அந்த நாகரிகத்திற்கு என்ன வயது என்று நான் ஆராயவில்லை.

நற்றிணைக் காலத்தில் இந்துமதம் இருந்ததில்லை என்பதற்கு நீங்கள் காட்டும் ஆதாரம் என்ன?

நீங்கள் இரண்டு வரி ஆதாரம் காட்டினால், இருந்தது என்பதற்கு நான் நான்கு வரி காட்டுவேன்.

அது வெறும் ஆராய்ச்சியே!

கடந்து போன காலங்களைப் பற்றிக் கற்பனாவாத ஆராய்ச்சியில் நான் ஈடுபட விரும்பவில்லை.

இந்து மதத்தில் என்னென்ன அர்த்தங்கள் உள்ளன என்பதே நான் எழுதும் விரிவுரை.

நான் பெரியார் பள்ளியில் படித்தவன் என்பதை மறந்து விட்டதாகக் கூறுகிறீர்கள்.

நான் சுயமரியாதை இயக்கத்திலோ கருஞ்சட்டைப் படையிலோ, திராவிடர் கழகத்திலோ இருந்ததே இல்லை.

தி.மு.க. ஆரம்பிக்கப்பட்டபோது அதில்தான் நான் சேர்ந்தேன்.

அங்கேயும் நாத்திக வாதம் நாலைந்து ஆண்டுகள் தான் நடந்தது.

பிறகு, அவர்களே `ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்று ஆரம்பித்து விட்டார்கள்.

அவர்கள் சொல்லும் ஒருவன் `யார்’ என்பதை அவர்களுக்குச் சொல்வதே என் கட்டுரை.