அங்காடி நாய்-கவியரசு கண்ணதாசன்(அர்த்தமுள்ள இந்து மதம்)

மனத்தை `அங்காடி நாய்’ என்கிறார் பட்டினத்தார். கடைத்தெருவில் ஒவ்வொரு கடையாக ஓடி அலைகின்ற நாயைப்போல், மனமும் ஓடுகிறது என்றார். மனிதனின் துயரங்களுக்கெல்லாம் காரணம் மனந்தானே!

`பேயாய் உழலும் சிறுமனமே’ என்கிறார் பாரதியார். மனத்தின் ஊசலாட்டத்தைப் பற்றி அவரும் கவலை கொள்கிறார். பயப்படக்கூடிய விஷயங்களிலே, சில சமயங்களில் இந்த மனம் துணிந்து நிற்கிறது.

துணியவேண்டிய நேரத்தில் பயந்து ஒடுங்குகிறது.

காரணம் இல்லாமல் கற்பனைகளை வளர்த்துக் கொண்டு கலங்குகிறது. நடந்துபோன காலங்களுக்காக அழுகிறது. நடக்கப்போகும் எதிர்காலத்தைக் கண்டு அஞ்சுகிறது. அடுத்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல முனைந்து நிற்கிறது. அந்த ஆறுதல் தனக்கே தேவைப்படும்போது சக்தியற்றுப் போய்விடுகிறது.    பசுமையைக் கண்டு மயங்குகிறது. வறட்சியைக் கண்டு குமுறுகிறது. உறவினருக்காகக் கலங்குகிறது.

ஒரு கட்டத்தில் மரத்துப்போய் விடுகிறது.

ஆசைகளை வளர்த்துக் கொள்கிறது.

ஆசாபாசங்களில் அலைமோதுகிறது. விரக்தியடைந்த நிலையில், தன் கழுத்தைத் தானே அறுத்துக்கொள்ளும் வலிமையைத் தன் கைகளுக்குக் கொடுத்துவிடுகிறது. கொலை, திருட்டு, பொய், இரக்கம், கருணை, பாசம் எல்லாவற்றுக்கும் மனமே காரணம். மனத்தின் இயக்கமே மனித இயக்கம். எதிலும் துணிந்து நிற்கக்கூடிய சக்தி எப்போது இந்த மனத்துக்கு வரும்?

`எல்லாம் மாயையே’ என்ற இந்து தத்துவத்தை நம்பினால் வரும். கீதையிலே கண்ணன் கூறுகிறான்:

“என்னைப் பரம் எனக் கொள்க; வேறொன்றில் பற்றையழித்து என்னைத் தியானித்து வழிபடுக. இறப்பும் பிறப்புமாகிய கடலிலிருந்து உன்னை நான் கைதூக்கி விடுவேன்”.

நல்லது; அப்படியே செய்து பார்ப்போம். ஆனாலும் முடியவில்லையே!

நெருப்புக்குத் தப்புகிறோம்; நீரில் மூழ்குகிறோம்.

நாய்க்குத் தப்புகிறோம்.

நரியின் வாயில் விழுகிறோம். ஒன்றை மறந்தால், இன்னொன்று வருகிறது. புகை பிடிப்பதை நிறுத்துவதற்காக வெற்றிலைப் போடப்போய், வெற்றிலைப் போட்டுக்கொண்டே புகைபிடிக்கும் இரட்டைப் பழக்கம் வருவதுபோல், மறக்க முயன்றவற்றை மறக்கமுடியாமல், புதிய நினைவுகளும் புகுந்துக்கொண்டு விடுகின்றன. கள்ள நோட்டு அடித்ததற்காக ஒருவனைச் சிறையில் தள்ளினார் களாம். அவன் சிறையில் இருந்துக் கொண்டே கள்ள நோட்டைத் தயாரித்தானாம்! இனி அவனை எங்கே கொண்டு போய்த் தள்ளுவது?

மனத்துக்கு, மனைவியைவிட மற்றொருத்தியே அழகாகத் தோன்றுகிறாள். கைக்குக் கிடைத்துவிட்ட மலரில் வாசம் தெரிவதில்லை. கிடைக்காத மலர்கள் கற்பனையில் எழுந்து மனத்தை இழுக்கின்றன. நிறைவேறிவிட்ட ஆசைகளில், மனது பெருமிதப்படுவதில்லை. நிறைவேறாத ஆசைகளுக்காகவே இது மரண பரியந்தம் போராடுகிறது. மகாலட்சுமியே மனைவியாகக் கிடைத்தாலும் சினிமா நடிகைக்காக ஏங்கி நிற்கும் ரசிகனைப்போல், உள்ளவற்றைவிட இல்லாதன குறித்தே மனம் ஏங்குகிறது.

பிறர் புகழும்போது நெக்குருகுகிறது. இகழும்போது கவலைப்படுகிறது. ஓராயிரம் பின்னல்கள்; ஓராயிரம் சிக்கல்கள்!

சிலந்தி எப்படி வலை கட்டிற்றென்று அதற்குத்தான் தெரியும். இந்தச் சிக்கல்கள் எப்படி வருகின்றன என்று இறைவனுக்குத்தான் தெரியும். கப்பலில் பயணம் செய்வது நம் பொறுப்பு. அதை கரை சேர்க்க வேண்டியது இறைவன் பொறுப்பு. அலை இல்லா கடல் ஒன்றை இறைவன் உருவாக்கும்போது சலனமில்லாத மனம் ஒன்றும் உருவாகி விடும். `மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்’ என்பார்கள். `எப்போது ஊற்றுவான்?’ என்று மனம் ஏங்குகிறது. சலனமும், சபலமும், கவலையும் இல்லாதவர்கள் யார் இருக்கிறார்கள்?

செத்துப்போன தன் குழந்தையை உயிர் மீட்டுத் தரும்படி, புத்த தேவனிடம் ஒரு தாய் கெஞ்சினாளாம். “சாவே நிகழாத வீட்டில் சாம்பல் எடுத்துவா, மீட்டுத் தருகிறேன்” என்று புத்தர் சொன்னாராம். தாய், நாடெல்லாம் அலைந்து, “சாவு நிகழாத வீடே இல்லையே!” என்றாளாம். “இந்தக் கதையும் அதில் ஒன்றுதான்”, என்று கூறிப் புத்தர் அவளை வழியனுப்பினாராம். கவலையே இல்லாத மனிதன் என்று ஒருவனை நான் பார்த்துவிட்டால், நான் கவலைப்படுவதில் நியாயம் உண்டு.    எனக்கு நூறு என்றால் இன்னொருவனுக்கு இருநூறு. அதுவரைக்கும் நான் பாக்கியசாலி. அவனைவிடக் குறைவாகத்தானே இருக்கிறேன். எல்லாம் நிறைவேறி, நிம்மதியாக உயிர் விடும் வாய்ப்பு எவனுக்குமே இல்லை. ஒருவனுக்குத் துயரம் மனைவியால் வருகிறது. ஒருவனுக்கு மக்களால் வருகிறது. ஒருவனுக்கு நண்பனால் வருகிறது. ஒருவனுக்கு எதிரியால் வருகிறது.

ஒருவனுக்கு சம்பந்தமே இல்லாத எவனாலோ வருகிறது. கடலில் பாய்மரக் கப்பல்தான் காற்றிலே தள்ளாடுகிறது. எதிலும் கெட்டிக்காரனாக இருப்பவனுக்குத்தான் அடிக்கடி சஞ்சலம் வருகிறது. காகிதக் கப்பலுக்கு என்ன கவலை?

மனம் காகிதம்போல மென்மையாக இருக்கட்டும். சுகதுக்கங்கள், கோடை, பனி, மழை – அனைத்தையும் தாங்கட்டும். மனதுக்கு வருகின்ற துயரங்களைப் பரந்தாமனிடம் ஒப்படைத்து விடு. பிறர்க்குத் தொல்லையில்லாமல் உன் மகிழ்ச்சியை நீ அனுபவி. சாவைத்தான் தவிர்க்க முடியாது; சஞ்சலத்தைத் தவிர்க்க முடியும். சிறு வயதில் எனக்குத் தாய், தந்தையர்கள் சாவார்கள் என்று எண்ணும்போது தேகமெல்லாம் நடுங்கும். ஒரு நாள் அவர்கள் இறந்தே போனார்கள். நாற்பத்தெட்டு மணி நேரத்தில் நடுங்கிய தேகம் அடங்கிவிட்டது. “ஐயோ, இது நடந்துவிடுமோ?” என்று எண்ணினால்தான் துடிப்பு, பதைப்பு. “நடக்கத்தான் போகிறது” என்று முன்கூட்டியே முடிவு கட்டிவிட்டால், அதிர்ச்சி உன்னிடம் நெருங்காது. தர்மனும் அழுதான், பீமனும் அழுதான், ராமனும் அழுதான், ராவணனும் அழுதான். நெஞ்சத்தின் பதைப்பை, `கடன்பட்ட நெஞ்சம்’ என்றான் கம்பன். பட்ட கடன் ஒன்றானால், பத்திரத்தைத் தீர்த்து வாங்கிவிடலாம். ஒவ்வொரு கடனையும் தீர்த்த பிறகும், வட்டி பாக்கி நிற்கிறது. மழை நின்று விட்டாலும், துவானம் தொடர்கிறது. மரண பரியந்தம் மனம் தன் வித்தையைக் காட்டிக் கொண்டே இருக்கிறது. மனத்துக்கு இப்படியெல்லாம் சுபாவங்கள் உண்டு என்று இருபது வயதிலேயே தெரிந்து கொண்டு விட்டால், பிறகு வருவனவெல்லாம் மாயையே என்று வைராக்கியம் பிறந்துவிடும். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவனிருக்கிறான் மயங்காதே

செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றுங்கள். மனம் அங்காடி நாய்போல் அலைவதை அடக்குங்கள். சாகப்போகும் கட்டைக்குச் சஞ்சலம் எதற்கு?

செத்தார்க்கு நாம் அழுதோம்.

நாம் செத்தால் பிறரழுவார். அதோடு மறந்து விடுவார்.

மனத்துக்கு நிம்மதியைக் கொடுங்கள்.

பகவான் கிருஷ்ணனின் காலடிகளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்குங்கள்.

இங்கே இருந்தாலும் அவன்தான் காரணம்; அங்கு சென்றாலும் அவன்தான் காரணம். இங்கிருந்து அவன் கொண்டு போகும் தூதுவனுக்குப் பேர்தான் மரணம். அடுத்த ஜனனத்தை அவன் நிர்ணயிக்கட்டும்.