அறிவும் திருவும்- கவியரசு கண்ணதாசன்

இந்துக்களின் கடவுள் கொள்கை முற்றிலும் லெளகீகத்தை ஒட்டியதே.

குடும்ப வாழ்க்கையின் கூறுகளே, தெய்வ அம்சங்களாகச் சித்தரிக்கப்பட்டிருகின்றன.

சிவனுக்குப் பார்வதி என்று ஒரு மனைவி உண்டென்றும், முருகன், கணபதி ஆகிய மக்கள் உண்டென்றும், ஒரு குடும்பத்தைக் காட்டினார்கள்.

சிவனுடைய ஒவ்வொரு அவதாரத்திலும், சக்தியும் அவதாரம் செய்து, கணவன் – மனைவி ஆகிறார்கள்.

சிவன் சொக்கநாதர் ஆனால், சக்தி மீனாட்சி ஆகிறாள்.

சிவன் விசுவநாதரானால், சக்தி விசாலாட்சி ஆகிறாள்.

சிவன் ஏகாம்பரேசுவரர் ஆனால், சக்தி காமாட்சி ஆகிறாள்.

அதுபோல், பிரகதீசுவரர் – பிரகதாம்பாள்.

ஒவ்வொரு சிவன் கோவிலிலும், சிவசக்தியின் பெயர் மாற்றமிருக்கும்.

அது போலவே,

திருமால் கண்ணனானால், திருமகள் ருக்மணி ஆகிறாள்.

திருமால் வேங்கடத்தான் ஆனால், திருமகள் அலர்மேலு மங்கை ஆகிறாள்.

திருப்பதியில் இருந்து, ஸ்ரீரங்கமும், திருவல்லிக்கேணி, அரியக்குடி அத்தனை இடங்களிலுமுள்ள திருமால் கோயில்கள் வேறு பெயர்களைச் சுட்டுகின்றன.

சைவர்கள் சிவனையும், வைணவர்கள் திருமாலையும் தந்தையாகக் கொண்டு இயங்குகிறார்கள்.

சைவர்களுக்கு வைணவர்கள் சம்பந்திகள்.

சைவ – வைணவத் தகராறு என்பது, சம்பந்திகள் தகராறே!

திருமாலின் தங்கையைத்தான் சிவன் மணந்தார்.

அதுபோல், ஒவ்வொரு கடவுளுக்கும் பத்தினி உண்டு.

பிரும்மாவுக்கு சரஸ்வதி; இந்திரனுக்கு இந்திராணி; முருகனுக்குத் தெய்வானை-வள்ளி; கணபதி மட்டுமே பிரம்மசாரி.

இப்படி ஏன் கடவுளுக்குக் குடும்பங்களை வகுத்தார்கள்?

தெய்வமும் லெளகீகத்துக்குத் தப்பவில்லை என்பதைக் குறிக்கவே!

இந்துமதம் என்பது லெளகீகத்தையே முதற்படியாகக்
கருதுகிறது.

துறவு என்பது இரண்டாம் பட்சமே.

குடும்பங்களில் கணவன்-மனைவி தகராறு வருவது போல், சிவனுக்கும் சக்திக்கும் தகராறு வந்ததாகக் கதைகள் உண்டு.

மனிதக் குடும்பங்களில் என்னென்ன காரணங்களுக்காகத் தகராறு வருமோ, அதே காரணங்களுக்காகத்தான் கடவுள் குடும்பங்களிலும் தகராறு வந்திருக்கிறது.

இதைக் கேட்கின்ற வேறு நாட்டவர்களுக்கு வியப்பாக இருக்கும்.

எந்த மதமும் கணவன் – மனைவியாகக் கடவுளைக் கண்டதில்லை.

கணவனுக்குரிய இடம் எது? மனைவிக்குரிய இடம் எது?

இந்துமதக் கதைகள் பதில் சொல்லும்.

இந்துமதம் வெறும் சந்நியாசிகளுக்கும், வாழ்க்கையைக் கண்டு பயந்தவர்களுக்கும் மட்டும் அடைக்கலம் கொடுப்பதல்ல.

அது போலவே, மனித வாழ்க்கையின் நாகரிகம் கலைகள் அனைத்தையுமே இந்துமதம் எதிரொலிக்கிறது.

சினம்-சினத்தால் அழிவு.

பொறாமை – பொறாமையால் அழிவு.

ஆணவம் – ஆணவத்தால் அழிவு.

துரோகம் – துரோகத்தால் அழிவு.

– இவைபோல் வாழ்க்கையில் எத்தனை கோணங்கள் உண்டோ, அத்தனை கோணங்களும் இந்துமதக் கொள்கைகளில் உண்டு.

கல்வி பற்றியும், கல்லாமை பற்றியும் கதைகள் உண்டு.

கல்விக்கு சரஸ்வதி, செல்வத்துக்கு லட்சுமி என்றெல்லாம் வாழ்க்கைத் தேவைக்கும் கடவுள்களை வைத்தது இந்துமதம்.

ஏன், கலைகளைக்கூட இந்துமதம் தன் வழிகளில் ஒன்றாக ஏற்றுக்கொண்டது.

கடவுள் நாட்டியமாடுவதாக எந்த மதத்திலாவது கதைகள் உண்டா?

சரசுவதி வீணை வாசிக்கிறாள்! நாரதர் தம்புரா மீட்டுகிறார்! நந்தி மத்தளம் கொட்டுகிறார்.

நடராசர் நாட்டியமாடுகிறார்.

இப்படி, மனிதர்களின் ஆசைகளுக்கும் உல்லாசப் பொழுது போக்குக்குங்கூட இந்துமதம் வழிவகுத்துத் தருகிறது.

போர் செய்வது பற்றியும் கதைகளுண்டு; சமாதானம் பற்றியும் கதைகளுண்டு; தூது செல்வது பற்றியும் கதைகளுண்டு; பேரம் பேசுவது பற்றியும் கதைகளுண்டு; கடன் வாங்குவது பற்றியும் கதைகளுண்டு.

பொய் சொல்வது பற்றியும், பொய் சொல்லாதது பற்றியும், அரிச்சந்திரன் கதைபோல் இப்படி ஆயிரங் கதைகளுண்டு.

இந்துமதத்தின் மூல நோக்கம் வாழ்க்கையின் சகல பகுதிகளையும் சுட்டிக் காட்டுவதே!

அடுத்தவன் மனைவியைத் தாயாக நினைத்த கதை நூற்றுக்கணக்கிலுண்டு.

அடுத்தவன் மனைவியைக் கெடுத்து இழிநிலை அடைந்த கதைகள் உண்டு.

இந்திரன்-அகலிகை.

சந்திரன்- தாரை.

வள்ளுவன் குறள், எப்படிப் போகின்ற பக்கமெல்லாம் எதிரொலிக்கின்றதோ, ஒவ்வொரு அனுபவத்திலும் ஓடி வந்து நிற்கிறதோ, அதுபோல, இந்தப் புராணக் கதைகளும் வந்து நிற்கின்றன.

விஞ்ஞான ரீதியாகவும் இந்துக்கள் சிந்தித்தார்கள்.

வானத்தில் பறக்கும் புஷ்பக விமானத்தைக் கற்பனை செய்தார்கள்.

கடல் நீரை மேகம் வாங்கி மழையாகப் பொழிவதை அப்பொழுதே சொல்லிவிட்டார்கள்.

பூமி சுற்றுவதைப் பிரதட்சணம், அப்பிரதட்சணம் என்று அப்பொழுதே சுட்டிக் காட்டினார்கள்.

சந்திர கிரகணத்தைத் தத்துவமாகச் சொன்னார்கள்.

நட்சத்திரங்களின் நடமாட்டத்தை விரிவாக எழுதி வைத்தார்கள்.

சந்திரமண்டலம் பூமியிலிருந்து எவ்வளவு தூரத்திலிருக்கிறது என்பதையும், செவ்வாய்க் கிரகம் அதைவிடத் தூரம் என்பதையும், அப்பொழுதே சொல்லிவிட்டார்கள்.

இந்துக்களின் விஞ்ஞான அறிவை விரிவாக ஆயிரம் பக்கங்களிலே எழுதலாம்.

மகாபாரதத்திலும், ராமாயணத்திலும் வரும் அஸ்திரங்களின் வகைகளைப் படிக்கும்போது, அவற்றைப் பார்த்துத்தான் குண்டு செய்யவே மேலைநாடு கற்றுக்கொண்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

தஞ்சை சரசுவதி மகாலிலிருந்து ஏராளமான ஏடுகளை இங்கிலாந்துக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்.

விஞ்ஞானத்தில் பலதுறைகளை அவற்றிலிருந்தே கண்டு பிடித்ததாக ஓர் ஆங்கிலேயர் எழுதிய கட்டுரையை பதினெட்டாண்டுகளுக்கு முன் ஒரு மொழிபெயர்ப்பில் நான் படித்தேன்.

பல நூற்றாண்டுகளாக, வாழ்க்கையின் சகல கோணங்களையும் விஞ்ஞான ரீதியாக இந்துக்கள் கூறி வைத்திருக்கிறார்கள்.

நீருக்கு ஒரு கடவுள் – வருணன்.

நெருப்புக்கு ஒரு கடவுள் – அக்கினி.

காற்றுக்கு ஒரு கடவுள் – வாயு.

வெளிச்சத்துக்கு ஒரு கடவுள் – சூரியன்.

இந்துமதத்தின் ஆரம்ப காலத்தில் சூரிய வணக்கமே தெய்வ வணக்கமாக இருந்து வந்திருக்கிறது.

காலங்களில் அது வளர்ந்து ஒவ்வொரு துறையாகக் கண்டு
பிடிக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு அனுபவத்தின் மீதும் புதிய புதிய தத்துவங்கள் தோன்றியிருக்கின்றன. இது நீண்ட கால மதமாகையால், ஆண்டுக்காண்டு பக்குவப்பட்டு, இன்று தழைத்துக் குலுங்கி நிற்கிறது.

ஆராய்ந்து பார்த்தால், இந்துக்களின் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஓர் அர்த்தமிருக்கிறது.

இப்போது நாம் சரசுவதி பூஜையையும், ஆயுத பூஜையையும் கொண்டாடுகிறோம்.

சரசுவதியையும், மகாலட்சுமியையும் வணங்கினோம்.

அதாவது அறிவையும், செல்வத்தையும் வணங்கினோம்.

வாழ்க்கை என்பது என்ன? – அறிவும் செல்வமுந்தான். அறிவுக்குத் தலைவியான சரசுவதி யார்?

அவளுக்குக் கலைமகள், வாணி, சரசுவதி என்ற பெயர்களும் உண்டு.

திருப்பாற் கடலில் தேவர்கள் அமுதம் கடைந்த போது அதில் உண்டானவள் சரசுவதி என்பது ஐதீகக் கதை.

அவள் கல்வி, கலைக்கு மட்டுமே தலைவி.

அமிர்தம் கடைந்தபோது அவள் உருவானவள் என்று ஏன் குறிப்பிட்டார்கள்.

உள்ளத்தை அறிவால் தோண்டி எடுக்கும்போது வாழ்க்கை ஒளி அடைகிறது என்பதாம்.

கலைக்கு முக்கியம், தெய்வத்தை வணங்கித் தொடங்குவது.

அதுவே கலைமகள் கையில் உள்ள ஜெபமாலை.

அவள் ஒரு கையில் ஏடு வைத்திருக்கிறாள்.

– அது கல்வி வடிவம்.

கையில் உள்ள வீணை, நாத வடிவம்.

அவளுக்கு வெள்ளை உடை.

அமர்ந்திருப்பது வெள்ளைத் தாமரை மீது.

வெள்ளை உள்ளமே கல்வியும், கலையும் வளர்வதற்கு முக்கியம் என்று அவை குறிக்கின்றன.

கயவனுக்கும், திருடனுக்கும் கல்வி வராது; கலையுணர்ச்சி இருக்காது.

அதுபோலவே திருமகள் வடிவம்.

கல்வி மட்டும் போதாது. வாழ்க்கைக்குப் பொருளும் வேண்டும் என்பதைக் குறிக்கவே திருமகள் வடிவம்.

பூமியில் வாழும் உயிர்களுக்கெல்லாம் திருமால் வடிவம் கூறப்பட்டிருக்கிறது.

அந்த உயிர்களுக்குச் செல்வம் வழங்குபவள் திருமாலின் மனைவியான திருமகள்.

பொதுவில் மனித வாழ்க்கையின் குறிக்கோளை இந்து
மதமே பூர்த்தி செய்கிறது.

அதன் தத்துவங்கள், கல்வெட்டுகள்.

அறிவுடையோர் அதனை மதிப்பர்;

திருவுடையோர் அதற்கு நன்றி கூறுவர்.