குடும்பம் என்னும் தர்மம்-கவியரசு கண்ணதாசன்

வாழ்வின் நெறிமுறைகளை விளக்கும் தொடர் குடும்பம் என்னும் தர்மம்


ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.

தமிழர் ஒருவர் வெளி நாட்டிற்குச் சென்றிருந்தாராம். அங்கு ஓர் அமெரிக்கத் தம்பதிகளைச் சந்தித்தாராம். அவர்கள் ஹோட்டலுக்கு வெளியிலேயே கட்டிப் பிடித்துக்கொண்டு நின்றார்களாம்.

தமிழரைப் பார்த்து அந்த அமெரிக்கர், “இவள் எனது மூன்றாவது மனைவி” என்று அறிமுகப்படுத்தி வைத்தாராம்.

“முதல் இருவரையும் வெட்டி விட்டதாக” வேறு சொன்னாராம்.

“ஒத்து வரவில்லை என்றால் ஒதுக்கிவிடுவதுதான் நல்லது” என்று போதித்தாராம்.

“வாழ்க்கையை வாழ்க்கையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்; அதற்கென்று பண்பாடு எதற்காக?” என்று வேறு வினவினாராம்.

“கட்டிக்கொண்டு விட்டோம் ஒருத்தியை என்பதற்காகச் சண்டை போட்டுக்கொண்டே அவளோடு வாழ்வதில் என்ன அர்த்தம்? புதிதாக ஒன்றை ஏற்றுக் கொள்வதுதான் நியாயம்” என்று வேறு போதித்தாராம்.

ஆடு மாடுகள் இப்படித்தான் செய்கின்றன. ஆனால், அவை ஒப்பந்தத்திற்காகப் பதிவாளர் அலுவலகத்திற்கும் போவதில்லை; வெட்டுவதற்காக நீதிமன்றத்திற்கும் போவதில்லை.

`எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்று முடிவு கட்டிவிட்டால் ஆண் பெண் என்ற இரண்டு வகை மிருகங்கள் தான் மிஞ்சும்.

மாமன், மைத்துனன் என்ற பண்பாட்டு உறவுக்கு அங்கே வேலை இல்லை.

ஆனால், அந்த வகை உறவில்தான், இந்து தர்மம் உலகெங்கும் தலை தூக்கி நிற்கிறது.

குடும்ப வாழ்க்கையை ஒரு அறம் என்று போதித்தது இந்து தர்மம். அதனால்தான் தமிழ், அதனை `இல்லறம்’ என்றது.

இந்து தர்மத்தில் ஒருவன் எத்தனை மனைவியரை வேண்டுமானாலும் கொள்ளலாம். ஆனால், அத்தனை பேருக்கும் அவன் ஒருத்தன்தான் கணவன்.

ஒருத்தியை அவன் ஒதுக்கி வைத்திருந்தாலும், சாகும் வரையிலும் அவள், அவனது மனைவியே.

அவளை எல்லா வகையிலும் திருப்தி செய்ய வேண்டியது கணவனின் கடமை.

அந்தக் கடமையில் தவறுவோர் பலருண்டு.

அவர்கள் அந்தத் தர்மத்தை மறந்தவர்களே தவிர, அந்தத் தவற்றைச் செய்ய அனுமதிக்கப்பட்டவர்களல்ல.

இந்து மதத்திலும் சில பிரிவினரிடத்தில், அறுத்துக் கட்டும் பழக்கம் இருந்திருக்கிறது. சில இடங்களில் இன்னும் இருக்கிறது.

இதனை இந்து தர்மம் அங்கீகரிக்கவில்லை.

இது எப்படி ஏற்பட்டது?

கோஷ்டிச் சண்டைகளால் ஏற்பட்ட வஞ்சம் தீர்க்கும் மனப்பான்மையில் ஏற்பட்டது.

`பெண் கொடுத்துப் பெண் எடுப்பது’ என்றொரு பழக்கம் உண்டு.

ஒரு வீட்டினுள் ஓர் இளைஞனும் இளம் பெண்ணும் இருந்தால் அதேபோல ஓர் இளைஞனையும், இளம் பெண்ணையும் பெற்ற குடும்பத்தினர், தங்கள் பெண்ணைக் கொடுத்து அந்தப் பெண்ணை எடுத்துக் கொள்வார்கள்.

இதில் ஒரு ஜோடி சந்தோஷமாக வாழும்போது, இன்னொரு ஜோடி சண்டை போட்டுக்கொள்ள நேரலாம்.

சண்டைபோடும் கணவன், தன் மனைவியைப் பிறந்த வீட்டிற்கே திருப்பியனுப்பினால், அங்கே சந்தோஷமாக வாழ்கிற கணவன்கூடத் தன் மனைவியைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பி விடுவான்.

வஞ்சம் தீர்ப்பதற்காக தங்கள் பெண் கழுத்திலிருந்த தாலியை அறுத்துவிட்டு, வேறொருவனுக்கு அவளைக் கட்டி வைத்தால், அவர்களும் அதே போலச் செய்துவிடுவார்கள்.

ஆத்திரத்தில் உருவான இந்தப் பழக்கம், கடைசியில் ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது.

இந்தச் சம்பிரதாயத்தை வெறும் கதைகளிலேகூட இந்து தர்மம் ஏற்றுக்கொண்டதில்லை.

தர்மங்களின் வரிசையில் குடும்ப தர்மத்தையும் அது சேர்த்தது.

உடலைவிட மனைவியின் ஆன்மாவையே முதலில் கணவன் திருப்தி செய்ய வேண்டும்.

ஆனால், மனைவியோ கணவனின் உடலைத் திருப்தி செய்து, ஆன்மாவைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

கணவன், மனைவியின் உடலைத் திருப்தி செய்வதும் இன்றியமையாததாகவே கருதப்பட்டது. ஆனால், அது இரண்டாம் பட்சமாக வைக்கப்பட்டது.

உண்மையை ஒப்புக் கொள்வதானால் நூற்றுக்கு எண்பது ஆடவர்கள் உடல் உறவில் தம் மனைவிக்கு முழுத்திருப்தியையும் அளித்ததில்லை. இதுவே மேல் நாடாக இருந்தால் விவாகரத்துக்கு இந்த ஒரு காரணம் போதும்.

தான் திருப்தியுறும் அளவையே தேவையான அளவாகக் கருதுகிறவள் இந்து மத மனைவி.

அந்தப் பொறுமையின் மூலம் ஒரு கட்டத்தில் முழுத் திருப்தியடைந்து விடுகிறாள்.

விரிவாகப் பார்ப்போம்.

திருமணம் ஆன புதிதில், கொஞ்ச காலத்துக்குக் கணவன் மட்டுமே சந்தோஷமடைகிறான்.

உடம்பில் இருந்த வெறியும் சூடும் காமக் கலப்பில் இவனைப் பலவீனமாக்கி விடுகின்றன.

ஒரே உடலில் அவன் தொடர்ந்து உறவு கொள்வதால் நாளாக நாளாக அவனது பலவீனம் மறைந்து பலசாலியாகி விடுகிறான்.

மனைவியின் உடம்பில் சேமிக்கப்பட்டிருந்த வெறி வெள்ளம், அவனைப் பலவீனமாக்கிச் சீக்கிரம் திருப்தியுறச் செய்துவிடுகிறது.

ஒரே தம்பதிகள் நீடித்து வாழ்வதன் மூலம், உணர்ச்சிக் கலப்பில் சம கால போகத்திற்கு வந்து விடுகிறார்கள்.

கணவனின் உடம்பிலிருந்து சுக்கிலமும், மனைவியின் உடம்பிலிருந்து சுரதமும் வெளியாகும் நேரம் ஒரே நேரமாகயிருந்தால் அது சமகால போகம் என்றழைக்கப்படும்.

அந்த சமகால போகத்தில் இருவர் உடம்பும் பலமடைகின்றன.

மழைத் தண்ணீர் சாலை வழியாக ஏரியில் விழும் போது, ஏரியிலுள்ள மீன் அந்தத் தண்ணீர் வழியாகச் சாலைக்கு வருவது போல், சுக்கிலத்தின் ஜீவ அணுக்கள் மனைவியின் உடம்பிலும், சுரதத்தின் ஜீவ அணுக்கள் கணவனின் உடம்பிலும் மாறி மாறிப் புகுந்து கொள்கின்றன.

ஒரே தம்பதிகள் நீண்ட நாள் வாழ்வதன் மூலமே இந்தச் சமகால போகம் சாத்தியமாகிறது.

ஒருவர் மீது ஒருவருக்குள்ள பிடிப்பு அதிகமாகிறது.

நோய் நொடியில்லாத ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கின்றன.

தாய் தந்தை மீது பாசத்தோடு அவை வளர்கின்றன.

அங்கு ஒரு மகிழ்ச்சிகரமான இல்லம் உதயமாகிறது.

அத்தகைய, இல்லங்களின் மீது ஒரு ஆரோக்கியமான நாடு உருவாகிறது.

ஆகவேதான் இந்து தர்மம் இல்லறத்தை வலியுறுத்திற்று.

இல்லறத்தில் உடல் உறவு ஒரு பகுதியே.

அதில் மற்றொரு பகுதி, வெளி உலகத்தோடு தொடர்புடையது.

அதன் பெயரே விருந்தோம்பல்.

செல்கின்ற விருந்தினரை வழியனுப்பி, வருகின்ற விருந்தினருக்காகக் காத்திருப்பவன் இல்லறவாசி.

அதனை ஒருவகை நாகரிகம் என்கின்றது இந்து தர்மம்.

குறைந்தபட்சம், ஓர் அதிதிக்காவது சோறு போடாமல் கணவனும் மனைவியும் சாப்பிடக்கூடாது.

யாராவது ஒரு அன்னக்காவடி, பரதேசி, பிச்சைக்காரன் வருகிறானா என்று பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

வருகின்ற விருந்தாளிக்கும் ஒரு நாகரிகத்தைப் போதித்தது இந்து மதம்.

சாப்பாடு நன்றாக இல்லாவிட்டாலும் `பிரமாதம்’ என்று சொல்லிவிட்டுப் போவதே அந்த நாகரிகம்.

இன்னும் அற்புதமான நாகரிகம் என்னவென்றால் கணவன் சாப்பிட்ட இலையிலேயே மனைவி சாப்பிடுவது.

`அது ஆரோக்கியக் குறை’ என்போர் உண்டு.

`கணவனுக்கு எவ்வளவு ஆரோக்கியம் இருக்கிறதோ அவ்வளவு தனக்கும் இருக்க வேண்டும்’ என்று நினைப்பவளே இந்து மனைவி.

கணவன் காசநோய்க்காரன் என்றால், அந்த நோயைத் தானும் ஏற்றுக்கொள்ளவே, அவள் அவனது இலையில் சாப்பிடுகிறாள்.

கடல்கொண்ட `லெமூரியா’ கண்டத்தில் வாழ்ந்தவரிடையே ஒரு பழக்கம் இருந்ததாம்.

மணமகனின் வலதுகைப் பெருவிரலைக் கத்தியால் லேசாகக் கிழித்து, அதுபோல் மணமகளின் பெருவிரலையும் கிழித்து, இரண்டையும் ஒன்றாக வைத்துக் கட்டுப்போட்டு விடுவார்களாம்.

ரத்தம் கலந்து விடவேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

அதைத் தார்மிகமாகவே செய்து விடுகிறாள் இந்து மனைவி.

கணவன் சாப்பிடுவதற்கு முன்பு அவள் சாப்பிடுவதில்லை; அது எத்தனை நாளாயினும் சரி.

தீனிக்குப் பேர் போன மேல்நாட்டில், மனைவி சாப்பிட்ட மிச்சம் கணவனுக்குக் கிடைத்தால் பெரிய விஷயம்.

இப்போது குலமகளிர் அனைவரும் எல்லா நாள்களிலும் மல்லிகைப் பூவைத் தலையில் சூடுகிறார்கள்.

ஆனால், அந்நாளில் ஒரு அற்புதமான பழக்கம் இருந்தது.

பலர் அறியக் கணவனும் மனைவியும் படுக்கைக்குச் செல்லாத காலம் அது.

நடு இரவில் சந்தித்துப் பிரிந்து, தனியே படுக்கும் காலம் அது.

மாலை நேரத்தில் கணவனுக்கு மனைவியின் உடல் நிலை தெரிந்துவிடும்.

அவள் தலையில் மல்லிகைப்பூ இல்லை என்றால் அவள் வீட்டுக்கு விலக்காகி இருக்கிறாள் என்று பொருள்.

பெரும்பாலும் வீட்டுக்கு விலக்கானவர்கள், தனி அறையில் இருப்பது பழக்கம்.

கணவனும் மனைவியும் தனியாக இருக்காத வீட்டில் மனைவி தன் நிலையைக் கணவனுக்குத் தெரிவிக்கும் ஜாடையே மலர் இல்லாத கூந்தல்.

மனைவி கருவுற்றால், அவள் கருவுற்றிருப்பதை மாமியார் அறிந்துதான் மகனுக்குச் சொல்வாளே தவிர மனைவியே சொல்வதில்லை.

அது திருமணத்திற்குப் பின்வரும் `தோன்றா நாணம்’ எனப்படும்.

அஃதன்றியும், தன் கணவனைப் பற்றி மற்றவர்களிடம் குறிப்பிடும் சமயம் வரும்போது, `என் கணவர் என்றோ, என் அத்தான் என்றோ கூறுவதில்லை. தன் குழந்தையின் பெயரைச் சொல்லி `அவனுடைய தகப்பனார்’ என்று சொல்வது வழக்கம்.

அது கணவனுக்கும், உலகத்திற்கும் செய்யும் சத்தியமாகும்.

“தாய் அறியாத சூல் உண்டோ?” என்பார்கள்.

`தான் கருவுற்றது தன் கணவனுக்கே’ என்று அவள் சத்தியம் செய்கிறாள்.

எங்கள் ஜாதியில் கணவன் இறந்ததும் மனைவி பாடும் ஒப்பாரிப் பாட்டில், கணவனை `பிஞ்சு மக்கள் ஐயா’ என்றுதான் அழைப்பாள்.

இல்லறத்தில் அற்புதமான சட்டதிட்டங்களை வகுத்துக் கொடுத்தது இந்து தர்மம்.

அவ்வப்போது வரும் கோபதாபங்களை நீக்கி விட்டுப் பார்த்தால், ஒரு இந்துக் குடும்பம் இரண்டாயிரம் கோயில்களுக்குச் சமமாகக் காட்சியளிக்கும்.