மரத்தைத் தண்ணீரில் போடு-கவியரசு கண்ணதாசன்

மரத்தைத் தண்ணீரில் போடு

காஞ்சிப் பெரியவர்கள் ஒன்று கூறியிருக்கிறார்கள்:

“கிணற்று நீருக்குள் நீரை நிரப்பிக்கொண்ட குடத்தை இழுக்கும்போது கனம் தெரியவில்லை; ஆனால் தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பித்து விடுகிறது.

எளிதில் புரட்ட முடியாத பெரிய மரங்களை வெள்ளத்தில் உருட்டித்தான் புரட்டி இழுப்பது வழக்கம்.

அதேமாதிரி நம் துன்பங்களையெல்லாம் `ஞானம்’ என்னும் தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போதும் துக்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனால், தண்ணீருக்குள் இருக்கிற குடம் மாதிரித் துக்கம் பரமலேசாகி விடும்.”

லெளகீகத்தில் இருந்து சுத்தமாக விடுபட்டு விட்ட ஒரு சந்நியாசி, லெளகீக வாழ்வில் துக்கத்தைக் குறைப்பதற்குச் சொல்லும் அற்புத வழி அது.

இந்துமதம் லெளகீகத்தையே முதற்படியாகக் கொண்டது என்பதற்கு சாட்சி.

வாழ்வைப் பற்றிய சிக்கலில் மனதை ஈடுபடுத்திக் கொண்டு குழம்பித் தவிக்கும் கோடானுகோடி மக்களுக்கு இந்து மதம் ஒரு ஆறுதல் சொல்கிறது.

சித்தம் தெளிவற்றிருந்தால் பிரமை பிடித்து விடுகிறது. அது தெளியும்போது, ஞானஒளி பெற்று விடுகிறது.

இக வாழ்க்கையைச் சுகமாக்கித் தர, பிற மதங்கள் செய்யாத முயற்சியை இந்து மதம் செய்கிறது.

துக்கமே இல்லாத சந்நியாசிகள்கூடத் துக்கத்தைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்.

மரணமே இல்லாத பரமாத்மாகூட மரணத்தைப் பற்றிப் பேசுகிறது.

எங்கே எது இல்லை? காட்டில் மட்டுந்தானா முள் இருக்கிறது? அது ரோட்டிலும் இருக்கிறது! பார்த்து நடப்பவன் காட்டில்கூட நடந்துவிட முடியும்; பாராமல் நடப்பவன் ரோட்டில்கூட நடக்க முடியாது.

கவலை என்பது ஒரு வலை.

தனக்குத்தானே அதை வீசிக் கொள்கிறவர்கள் உண்டு.

பல நேரங்களில் ஆண்டவனும் அதை வீசுவதுண்டு.

வலைக்குத் தப்பிய மீன்கள், நீர் வற்றிவிட்டால், மரணத்துக்குத் தப்புவதில்லை.

காலம்தான் வித்தியாசம். சில முந்திக் கொள்கின்றன. சில பிந்திக் கொள்கின்றன.

ஒவ்வொருவன் கண்ணுக்கும், அடுத்தவன் சந்தோஷமாக இருப்பது போலவே தோன்றுகிறது.

அவன் பார்க்கும் கண்ணாடி நல்ல கண்ணாடியாக இருந்தால்தானே, அவன் முகத்தைக் காட்டும்.

வண்டியின் மீது மற்றவர்கள் பாரத்தை ஏற்றுக்கிறார்கள். வண்டி தானே ஏற்றிக்கொள்வதில்லை.

மனித மனமோ தானே சுமைகளை ஏற்றிக் கொள்கிறது.

ஏற்றிய சுமையை எளிமைப்படுத்த என்ன வழி?

`ஞானம் எனும் தண்ணீரை நிறையக் குடி’ என்கிறார்கள் காஞ்சிப் பெரியவர்கள்.

`ஞானம் ஞானம்’ என்கிறோமே அது என்ன?

சட்டையைப் போடும்போது, கிழிந்த சட்டை என்று தெரிந்தே போட்டுக் கொள்வது; பிறகு `ஐயோ, இது கிழிந்திருக்கிறதே’ என்று அங்கலாய்க்காமல் இருப்பது; அதன் பெயரே ஞானம்.

`இது இவ்வளவுதான்; இப்படித்தான்’ என்று தேறுவதும் தெளிவதும் ஞானம்.

`எது எப்படியிருந்தால் என்ன; இறைவன் விட்ட வழி, என்றிருப்பது ஞானம்.

குடிசைகளே நிரம்பிய காட்டில்கூட ஏதாவது ஒரு ஓட்டு வீடு இருக்கிறல்லவா?

துயரங்களே நிரம்பியே மனதிற்கும் ஏதாவது ஒரு நிம்மதி வந்தே தீரும்.

எந்தச் சந்நிதியில் நிற்கிறோம் என்பது முக்கியம்.

குளிக்கும் அறைக்குள் போய் நின்று கொண்டு கோகுலக் கண்ணன் படத்தைத் தேடக்கூடாது. பூஜை அறைக்குள் `ஷவர்பாத்’ இல்லையே என்று வருந்தக் கூடாது.

தேர்வும் தெளிவும் சரியாக இருந்தால், ஞானம் சரியாகிவிடும்.

ஞானத்தண்ணீர் பெருகி ஓடினால், துன்ப மரங்கள் எளிமையாகி விடும்.

மாட்டி இருப்பது விலங்குதான் என்று தெரிந்து கொண்டு, நடக்க ஏன் முயல வேண்டும்?

“ஐயோ! நடக்கமுடியவில்லையே” என்று ஏன் அழ வேண்டும்?

ஒவ்வொரு மரமும் இடைவெளி விட்டு நிற்கும் தென்னந்தோப்பைப்போல இரண்டு சுகங்களுக்கிடையில் ஒரு துயரம் இருக்கிறது.

இரண்டு துயரங்களுக்கிடையே ஒரு சுகம் இருக்கிறது. இதுதான் லெளகீக வாழ்க்கை.

கல் குத்தினால் வலிக்கிறது. கண்ணாடி குத்தினால் ரத்தம் வருகிறது. கவனித்து மருந்து போட்டால் ஆறிவிடுகிறது. கவனிக்காமல் விட்டால் `ஸெப்டிக்’ ஆகிறது. கவனித்தும் `ஸெப்டிக்’ ஆனால் ஏதோ பூர்வ ஜென்ம பாபம் இருக்கிறது.

துன்பத்தின் கதை இத்தோடு முடிந்துவிடுகிறது.

ஜன்னலின் அளவைப் பொறுத்து காற்று வருகிறது.

ஜன்னல்கள் இல்லாத வீடு சுகாதாரத்தைக் கெடுக்கிறது.

அதுபோல், சூழ்நிலைகளைப் பொறுத்துத் துன்பம் வருகிறது; அந்தச் சூழ்நிலைகளை நீக்கிக்கொள்ளும் பொறுப்பு மனிதனுக்குத் தான் இருக்கிறது.

நம்மையறியாமல் வருவது நாம் அறியாமலே தீர்க்கப்படுகிறது.

நாம் அறிந்து வருவதை நாமே தீர்த்துவிட முடியும்.

இந்த இரண்டுவகைத் துன்பங்களில், முதல்வகை ஈஸ்வர பக்தியால் விலகுகிறது.

இரண்டாவது வகை, கூரிய புத்தியால் விலகுகிறது.

பக்தியும் இல்லாமல் புத்தியும் இல்லாமல், `ஐயோ அம்மா’ என்று அலறுவதில் என்ன பொருள்?

பசுவை வாங்கி வந்தால் பால் கறக்கலாம்; காளையை வாங்கிவிட்டுக் கடவுள்மீது குறை சொல்வதில் என்ன அர்த்தம்?

காரணத்தோடு வரும் துன்பங்களை, விவேகத்தோடு சமாளிக்க வேண்டும்.

குடித்துவிட்டுக் காரோட்டி விபத்திற்குள்ளானால் அது காரணத்தோடு வரும் துன்பம்.

ரயில் விபத்தில் நீ சிக்கிக்கொண்டால், அது காரணமில்லாமல் வரும் துன்பம்.

முன்னதை நீ தடுக்கலாம்; பின்னதைக் கடவுள் தான் தடுக்க வேண்டும்.

இரண்டுக்கும் `ஞானம்’ என்றுதான் பெயர்.

சம்பாதிப்பது போதவில்லை என்றால் அது ஒருவகைத் துன்பம். நிறையச் சம்பாதித்தும் போதவில்லை என்றால் அது ஒருவகைத் துன்பம். சம்பாத்தியமே இல்லை என்றால் அது ஒருவகைத் துன்பம்.

எது உன் வாழ்க்கையில் நேர்ந்தாலும், அதன் மறுபகுதி துன்பம்.

தலையில் கை வைத்துக்கொண்டு தடுமாறுகிறவனுக்குத் துன்பம் தீராது.

ஞானம் என்ற தண்ணீரில் துன்பத்தை அமுக்கி இழுத்தால் பாரம் குறையும்.

நம்மைப் பிறக்க வைத்தபோது, தாய் பட்டது துன்பம்;
தாய் இறந்துபோனால் உறவினர் படப்போவது துன்பம்; இரண்டுக்கும் இடையிலே நாம் அனுபவிப்பது துன்பம்.

எல்லாவற்றுக்கும் பரிகாரம் மனதை ஞானத்தண்ணீரில் முக்கி எடுப்பதே.

வாழ்க்கையில் எந்தப் படிக்கட்டில் துன்பம் இல்லை?

பணம் இல்லை என்றால் துன்பம்.

அதிகம் சேர்ந்துவிட்டால் வருமான வரித்துன்பம்.

வடதுருவத்திற்குப் போனாலும் பனிக்கட்டிதான்; தென் துருவத்திற்குப் போனாலும் பனிக் கட்டிதான்.

`துன்பம் ஒரு சோதனை’ என்று முன்பே நான் எழுதி இருக்கிறேன்.

துக்கச் சுமையைக் குறைக்கக் காஞ்சிப் பெரியவர்கள் சொன்ன உதாரணம் என்னை மெய்சிலிர்க்க வைத்ததால், இதனை மீண்டும் எழுதுகிறேன்.

`ராமன் கிடைப்பானா?’ என்று கலங்கிய சீதை;

அவன் கிடைத்த பின்னாலும் காடு சென்று கலங்கிய சீதை;

காட்டிலும் ஒருவனால் தூக்கிச் செல்லப்பட்டுக் கலங்கிய சீதை;

அவனைக் காணாமல் தினந்தினமும் கலங்கிய சீதை;

வந்து தன்னை மீட்டதும் அவனால் சந்தேகிக்கப் பட்ட சீதை!

சீதையின் வாழ்க்கையிலே ஒரு சுவடுக்கு மறுசுவடு துன்பம் என்றால், என் நிலையும் உன் நிலையும் என்ன?

காட்டில் முளைத்த மரமும் கவலையுறும் காலம் இலையுதிர் காலம்.

ஆற்று மணலும், கவலைப்படும் காலம், கோடைக் காலம்.

பகுத்தறிவற்ற விலங்குகளும் கவலைப்படும் காலம், அவை பயப்படும் காலம்.

இவற்றுக்கெல்லாம் யார் ஆறுதல் கூறப்போனார்கள்?

மானிட ஜாதி ஆறுதல் தேடுகிறது.

திடீரென்று கேரளாவில் இருந்தொருவர் `ட்ரங்கால்’ போட்டுத் தம் துன்பங்களைச் சொல்லி என்னிடம் ஆறுதல் கேட்கிறார்.

அதையே அவர் பக்கத்து வீட்டுக்காரனிடம் சொன்னால், அவன் தன் துன்பங்களைச் சொல்வான்; அதுவே ஆறுதலாகி விடும்.

மறுபடியும் தொடக்கத்தைச் சொல்லி முடிக்கிறேன்.

மரங்களைத் தண்ணீரில் போட்டு இழுப்பது போல், துக்கங்களை ஞானத்திலும் நிதானத்திலும் இழுத்துப் பாருங்கள்.

அப்போதும் அது குறையவில்லையென்றால், துக்கப்படுவதையே வாழ்க்கையாக்கிக் கொள்ளுங்கள்; வேறென்ன செய்வது?