காம உணர்ச்சி-கவியரசு கண்ணதாசன்

மனிதன் என்று ஒருவன் இருக்குமிடம் எங்கும், காமம் என்று ஒன்று இருந்தே தீருகிறது.

அது ஆண்மை, பெண்மை இரண்டையும் சோதிக்க ஆண்டவன் நடத்தும் லீலை.

உடல் உணர்வு அல்லது பாலுணர்ச்சி என்பது மேலோங்கிய நிலையிலேயே உலகத்தில் பாவங்கள் அதிகரித்தன.

நமது இதிகாசங்கள், புராணங்கள் மட்டுமல்லாது வரலாறும் அதையே குறிக்கிறது.

சரிந்துபோன சாம்ராஜ்யங்கள் பலவற்றிற்கு, காமமே முதல் காரணமாக இருக்கிறது.

தலைமறைவாக இருந்த கொள்ளைக்காரர்கள், புரட்சிக்காரர்களில் பலர், தம்மை மறந்த நிலையில் பிடிபட்டதற்கும், காமமே காரணமாக இருக்கிறது.

சராசரி மனித வாழ்வில் பசி, காமம் இரண்டும் தவிர்க்க முடியாதவை.

கட்டுப்பாடாக அதைத் தவிர்த்தவர்களுக்குப் பெயரே ஞானிகள்.

உடல் வற்றிப்போய் காய்ந்த எலும்புக்கூடக் கிடைக்காமல், பசியோடு அலையும் ஆண் நாய் ஒன்று ஒரு பெண் நாயைக் கண்டவுடன் பசியையும் மறந்து, காம உணர்வு கொள்வதாக ஒரு பாடல் உண்டு.

வட மொழியில் `காமம்’ என்ற வார்த்தைக்கு, `பாலுணர்ச்சி’ என்பது மட்டுமல்லாமல், வேறு பல பொருள்களும் உண்டு.

ஆனால், பாலுணர்ச்சியை மையமாகக் கொண்டு, இந்துமதத் தத்துவங்களை ஆராயப் புகுந்தால், அதைத் தவிர்ப்பதற்கு, அது சொல்லும் வழிகள் ஏராளம்.

முதலில், சந்நியாசிகளில் ஒரு வகையினர் நிர்வாணமாக இருப்பதே, இந்த உணர்ச்சியைத் தவிர்க்கத்தான்.

`பார்ப்பதற்கு அருவருப்பான ஒரு தோற்றத்தைத் தான் பெற்றிருந்தால், பெண்களுக்குத் தன்மீது ஆசை வராது’ என்பதே அந்த நிர்வாணத்தின் நோக்கம்.

ஆடை, அணி மணி அலங்காரங்களினால் மூடப்பட்ட உடம்பு, சுருதியைத் தூண்டி விடுகிறது.

அழகாக அலங்கரிக்கப்பட்ட சிகையும், சவரம் செய்யப்பட்ட முகமும் பெண்களின் உணர்ச்சித் தந்தியை மீட்டி விடுகின்றன.

ஆகவே, அலங்கோலமான உருவத்தைச் செயற்கையாக தேடிக்கொள்வதே ஜடாமுடி தரிப்பதன் நோக்கம்.

அவர்கள் வெறும் கோவணத்தோடு இருப்பதற்கும் காரணம் அதுதான்.

அண்மையில் `ஹரே கிருஷ்ணா ஹரே ராமா’ இயக்கம் அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியதும், அங்கு ஏற்படுத்தப்பட்ட ஆசிரமங்களில் ஒன்றில் ஒரு புது யாகத்தைத் தொடங்கினார்கள்.

சுமார் பன்னிரண்டு ஆண்களும் பெண்களும், `ஒரு ஆண் ஒரு பெண்’ என்று மாற்றி மாற்றி வட்டமாகத் தொடையளவு தண்ணீரில் நின்றார்கள்.

ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டுக்கொண்டார்கள்.

`ஒருவரது அங்கத்தை இன்னொருவர் பார்த்தாலும் தோளிலே கை போட்டுக் கொண்டாலும் உணர்ச்சி கிளர்ந்தெழாமல் அடக்கவேண்டும்’ என்பதே இந்த யாகத்தின் நோக்கம்.

`லைப்’ என்ற பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் இந்தப் படத்தை நான் பார்த்தேன்.

உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்போதே, காம வேகத்தைத் தவிர்ப்பதற்கு இந்து மதம் வழி காட்டுகிறது.

சகல உணர்வுகளையும், உறவுகளையும், துறந்து விட்டநிலைக்கு, `நிர்வாணம்’ என்பது பெயர்.

அந்த மகா நிர்வாணத்தை, இந்து தத்துவங்களில் இருந்தே பெளத்தம் எடுத்துக்கொண்டது.

இந்து மதமே உலகின் ஆதி மதம்.

`சந்நியாசம்’, `துறவு’ என்பவை அது உண்டாக்கியவையே.

அந்தத் துறவு நிலையை உடையவர்களே உலகத்திற்கு உபதேசிக்க முடியும் என்பதால் பின்னால் தோன்றிய ஒவ்வொரு மதமும் அதனை மேற்கொண்டன.

உணர்ச்சியைத் தூண்டும் உணவுப் பொருள்களையும் உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுப் பொருள்களையும் விலக்கி, கடுங்குளிரிலும்கூட குளிர்ந்த நீரிலே நீராடி, காம உணர்வை அகற்றினர் இந்து ஞானிகள்.

ஆண் பெண் உறுப்புக்களுக்கு அவர்கள் `ஜனனேந்திரியங்கள்’ என்று பெயர் கொடுத்தார்கள்.

சில உயிர்களுக்குப் பிறப்பைக் கொடுப்பதற்காக மட்டுமே இந்த அங்கங்கள் படைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் நம்பினார்கள்.

அதில் ஏற்படுகின்ற சுகத்தை `அற்ப சுகம்’ என்றார்கள்.

தமிழுங்கூட அதைச் `சிற்றின்பம்’ என்றே அழைத்தது.

மனைவி என்பவள் தன் கணவனின் காமச் சூட்டைத் தணிப்பதற்காக வரும் வெறும் கருவியல்ல.

அதற்கு மேற்பட்ட சமூக சம்பிரதாயங்களே அவளுக்கு அதிகம்.

ஆணைவிடப் பெண்ணுக்கு ஐந்து மடங்கு அதிகமான உணர்ச்சி உண்டு.

ஆனால், பத்து மடங்கு அடக்கம் உண்டு.

இது இயற்கையாக அவளுக்கு வந்ததல்ல.

இந்து மதம் காலகாலங்களாகப் பெண்ணை அப்படிப் புடம் போட்டு எடுத்தது.

இழிந்த குலப்பெண்கள், இதன் மறு எல்லைக்குப் போவதுண்டு.

அந்த இரண்டு வகைப் பெண்களையும் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றும், சமண இலக்கியங்களில் ஒன்றுமான `சீவக சிந்தாமணி’ காட்டுகிறது.

ஒரு பாடலில் உயர்ந்த பெண்ணைக் குறிக்கும் போது,

சாமெனில் சாதல் நோதல்
தன்னவன் தணந்த காலை
பூமனும் புனைதல் இன்றிப்
பொற்புடன் புலம்ப வைகிக்
காமனை என்றும் சொல்லார்
கணவற்கை தொழுது வாழ்வார்!
தேமலர்த் திருவோ டொப்பார்
சேர்ந்தவன் செல்லல், தீர்ப்பார்!

என்கிறது.

தாழ்ந்த பெண்டிரைக் குறிக்கும்போது,

பெண்ணெனப் படுவ கேண்மோ
பீடில பிறப்பு நோக்கா
உள்நிறை உடைய வல்ல
ஓராயிரம் மனத்த வாகும்,
எண்ணிப்பத் தங்கை யிட்டால்
இந்திரன் மகளும் ஆங்கே
வெண்ணெய்க்குள் றெரியுற் றாற்போல்
மெலிந்துபின் நிற்கு மன்றே!

என்கிறது.

இந்த இருவகைப் பெண்டிரில், முதல் வகையினர் நூற்றுக்குத் தொண்ணூறு பேராவர்.

இரண்டாம் வகையினர் விதிவிலக்கில் சேர்க்கப் படவேண்டியவர்கள்.

ஒரு குல மகளுக்குப் பள்ளியறையும், காம உணர்ச்சியும், ஒரு குழந்தைக்குத் தாயாகிற தொழிலுணர்ச்சியே தவிர, சுகம் முதல் காரணமாகாது.

`சுகமும் அதிலே ஒன்று’ என்பதைத் தவிர, அதற்கு ஒரு தனி முக்கியத்துவத்தை அவர்கள் கொடுப்பதில்லை.

காரணம், இந்து மதம் அவர்களை அப்படி வளர்த்திருக்கிறது.

கணவனிடம் அத்தகைய சுகம் கிடைக்கா விட்டாலும் குழந்தைக்குப் பாலூட்டுவதிலேயே அதைப் பெற்றுவிடுகிறாள் ஒரு இந்துப் பெண்.

காமத்தின் மின்சாரத் தாக்குதல், நற்குடிப் பிறந்த இந்துப் பெண்களிடம் பலிப்பதில்லை.

ஆனால், ஆடவர்களது நிலை வேறு.

அவர்களது ரத்த அரிப்பு, அந்த எல்லைக்கும் அவர்களைத் துவண்டுகிறது.

லெளகீக மனிதனுக்கு இந்த ராட்சத அரிப்பு ஏற்படும் போது, குலப்பெண்களைக் கெடுக்காமல், அவன் அந்த உணர்ச்சியைத் தணித்துக்கொள்வதற்காகவே `தேவதாசி முறை’ ஏற்பட்டது.

முடிந்தவர்களுக்கு ஏக பத்தினி விரதத்தையும், முடியாதவர்களுக்கு இந்த வகை வாழ்க்கையையும், அது அனுமதித்தது.

ஒரே இதிகாசத்தில் ஒரே அரண்மனையில், இந்த இருவகைக் காட்சிகளையும் அது காட்டிற்று.

`தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவியர்’ என்றது.

அவன் மகன் ராமன், `ஏகபத்தினி விரதன்’ என்றது.

அது தசரதன் செயலைக் குற்றம் சாட்டவில்லை.

ஆனால், ராமனின் நடத்தையைப் புகழ்ந்துரைத்தது.

பல மாதர் உறவுக்கு அது நியாயம் கற்பிக்கவில்லை.

ஆனால், அனுமதித்தது.

அதே சமயம், ஒருதார வாழ்க்கையை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றிற்று.

அதைத் `தெய்வீகம்’ என்றது.

மனித மனத்தின் சபலங்களை அங்கீகரித்து, அதைத் தட்டிக் கொடுத்து, மெதுமெதுவாக மீட்பதே அதுசெய்யும் பணி.

எந்த உணர்ச்சியையும், அது அறுவைச் சிகிச்சை மூலம் தீர்க்க விரும்பவில்லை.

அங்கீகரித்துத் திருத்தும் நாகரிகத்தைக் கையாண்டது.

“நீ பன்றியைக் கூடச் சாப்பிடலாம்; ஆனால் உடலில் கொழுப்பேறிவிடும், பார்த்துச் சாப்பிடு” என்று சொன்னதே தவிர, கட்டளையிடவில்லை.

எண்ணெய் ஸ்நானம் செய்த அன்று மனைவியோடு உறவு கொண்டால், சிலருக்கு ஜன்னி காணும்.

அந்த உடற்கூற்று உண்மையைக்கூட, அது நாகரிகமாக `தரித்திரம் பிறக்கும்’ என்று சொன்னதே தவிர `ஜன்னி காணும்’ என்று பயமுறுத்தவில்லை.

அது காமத்தை ஒருவகைக் குற்றமாகக் கருதவில்லை.

ஆனால், குற்றங்களுக்குக் காரணமான காமத்தை அது கதைகளிலே விவரிக்கிறது.

இளம் விதவைகள் வேதம் படிக்கிறார்கள், புராணம் படிக்கிறார்கள், இதிகாசம் படிக்கிறார்கள். உணர்ச்சியடங்கி விடுகிறதே! எப்படி?

அவர்களே நமது வாரப் பத்திரிகைகளையும், மாதப் பத்திரிகைகளையும் தொடர்ந்து படித்தால் என்னவாகும்?

சராசரி மனிதனின் தவிர்க்கமுடியாத உணர்ச்சியாகிய காமத்தை, இந்து மதம் எவ்வளவு வைதீகமாகக் கையாளுகிறது.

`காமம் எப்போது பாவமாகிறது’ என்பதை அது எவ்வளவு அற்புதமாக விவரிக்கிறது.

இந்து சாஸ்திரங்களில், ஓரிடத்தில் `உடலுக்கு ஏற்ற உறவு எது?’ என்பதுகூடக் கூறப்பட்டிருக்கிறது.

`தன்னைவிடப் பத்து வயதுக்குமேல் அதிகமான ஒரு பெண்ணுடன் ஒருவன் உறவு கொண்டால், அவன் உடம்பு மெலிந்து முகம் களையிழந்து போகிறது.

வயது குறைந்த பெண்ணோடு தொடர்பு கொண்டால் முகம் பிரகாசமடைகிறது.

ஒரு மத சாஸ்திரம் இதை ஏன் விவரிக்க வேண்டும்?

ஒன்று ஒரு ஆரோக்கியமான உடம்புக்குப் பொறுப்பேற்றுக் கொள்வது.

இரண்டு பத்து வயது அதிகமான பெண் குறைந்த வயதுடைய ஆணுடன் தொடர்பு கொள்ள வருகிறாள் என்றால், ஒன்று அவள் கெட்ட நடத்தையுடையவளாக இருக்கவேண்டும்; அல்லது இன்னொருவன் மனைவியாக இருக்கவேண்டும்; அதைத் தடுப்பது.

அப்படியென்றால் குறைந்த வயதுடைய பெண்ணோடு தொடர்பு கொள்வதைச் சிலாகித்துப் பேசுவது கற்பழிப்பதற்கு வகை செய்யாதா?

இல்லை; அதனால்தான் அது பல தார மணத்தை ஏற்றுக் கொண்டது.

நீ எதை விரும்பினாலும், அதற்கொரு அளவை நிர்ணயித்து அதை அனுமதித்துப் பின் உன்னை ஞானியாக்குவதே இந்து மதம்.

காம உணர்ச்சியிலும் அதன் கட்டம் அத்தகையது தான்.

எப்போது காம உணர்ச்சி பாவமாகிறதோ, அப்போது தண்டனை கடுமையாகிறது.

இந்து மதத்தின் பயமுறுத்தல் என்பது அங்கே மட்டும்தான் வருகிறது.

`யாரையும் கெடுக்காத, யாருக்கும் தீங்கிழைக்காத ஒரு ஆடவனின் உணர்ச்சிகளை, இந்து மதம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது’ என்று நான் சொன்னால் யார் அதை மறுக்கமுடியும்?