கோபம், பாவம், சண்டாளம்!-கவியரசு கண்ணதாசன்

`ராமன் காடு செல்ல வேண்டும்’ என்று கைகேயி கேட்டுப் பெற்ற வரத்தால், ராமன் எள்ளளவும் சினம் கொள்ளவில்லை.

ஆனால், அவன் உடம்புக்கு வெளியே நிற்கும் உயிர் போல, அவனையே முற்றிலும் பற்றித் தொடர்ந்த இலக்குவன், பெருங்கோபம் கொள்கிறான்.

அவனை எவ்வளவோ சமாதானம் செய்கிறான் ராமன்.

`தம்பி! எனக்கு நீ வெளியில் நடமாடும் உயிரல்லவா? நான் சொல்வதைக் கேள். நீ தைரியசாலி, உன் கோபத்தையும் உன்னைப் பற்றிய துக்கத்தையும், நீ அடக்கியாள வேண்டும். இது உன்னைப் பிடித்துக் கொண்டு வெறியாட்டம் ஆட இடம் கொடுக்காதே.

தருமம் என்பதைப் பலமாகப் பற்றிப் பிடித்து, இப்போது ஏற்பட்ட அவமானத்தை ஒரு பெரிய சந்தோஷமாக மாற்றுவோம். பட்டாபிஷேகத்தை முற்றிலும் மறந்துவிட்டு நம் கருத்தை எல்லாம் வேறு துறையில் செலுத்துவோம்.

`நம்மைப் பெற்ற தந்தையின் நிலை இப்போது என்ன?’ என்பதை நன்றாக ஆலோசிப்போம். அவருக்கு ஏற்பட்டிருக்கும் பயன் என்ன என்பதை நாம் உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும்.

எந்தக் காரணத்தைக் கொண்டோ கொடுத்துவிட்ட ஒரு வரத்தை, `இல்லை’ என்று இப்போது சொன்னால் அசத்தியத்தில் இறங்கினதாகும். பாவம் வந்து சுற்றிக் கொள்ளும். இதுவரையில் அவர் நடத்திய சகல தர்மமும், தானமும், புண்ணிய கருமங்களும் பயனின்றிப் போகும். இந்தப் பெரும் பயத்தினால் நம் தந்தை வேதனைப்படுகிறார். அவரது பயத்தைத் தீர்ப்பதல்லவோ நம்முடைய கடமை?

என்னைப்பற்றி வருந்துகிறார். எனக்கு வருத்தம் கொஞ்சமும் இல்லை. உனக்கும் வருத்தம் இல்லை என்று அவரது சந்தேகத்தை முற்றிலும் போக்கி அவருக்கு நாம் வழி ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். நமக்கு உயிர் கொடுத்த தந்தையின் பயத்தைப் போக்கி அவர் மனம் நிம்மதியடையச் செய்வது புத்திரர்களாகிய நம்முடைய கடமை.

பரலோகத்தைப் பற்றி நம்முடைய தந்தை பயப்படுகிறார். அந்தப் பயத்தை நாம் போக்க வேண்டும். இதுவரையில் நாம் அவருக்கு எள்ளளவும் துக்கமோ அதிருப்தியோ தந்ததில்லை. இப்போது நாம், அவர் பரலோகத்தைக் குறித்து பயப்படுவதற்குக் காரணமாகி விட்டோம். அதைச் சுலபமாக நாம் தீர்க்கலாம். அப்படிச் செய்யாமல் அவருடைய சங்கடத்தை அதிகப்படுத்தலாமா?

இந்தக் காரணத்தினால், லட்சுமணா! பட்டாபிஷேகத்தைப் பற்றி முற்றிலும் என் மனம் விலகி, வனம் போவதிலேயே ஈடுபட்டு விட்டது. நான் காட்டுக்குப் போய் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதே என்னுடைய ஆசையும் மகிழ்ச்சியுமாகி விட்டது. இதைத் தாமதப்படுத்தினால் கைகேயிக்குச் சந்தேகம் உண்டாகும். ஆனபடியால், இன்றே வனம் சென்று அவளுடைய மனம் நிம்மதியடையச் செய்யவேண்டும். சத்தியப் பிரதிக்ஞையைப் பற்றிய பயம் தீர்ந்துபோய் நம் தந்தை சுகமாக இருப்பார்.

நான் துயரமடைவேன் என்றல்லவா அவர் வேதனைப்படுகிறார். எனக்குக் கொஞ்சமும் துக்கமில்லை என்று அவருக்குத் தெளிவாகச் செய்தால் அவருடைய வேதனை அவரை விட்டு விலகும். இதனாலேயேதான் நான் அவசரப்படுகிறேன்.

கைகேயியைப் பற்றி நாம் கோபித்துக் கொள்ளக் கூடாது. நம்மிடத்தில் அவள் இதுவரையில் எவ்வளவு ப்ரீதி வைத்திருந்தாள்! திடீரென்று இம்மாதிரியான எண்ணம் அவளுக்கு உண்டானது விதியின் காரணம். நாம் அவளை நிந்திக்கலாகாது.

மனிதர்கள் ஏதேதோ சங்கற்பம் செய்வார்கள்; ஆனால் விதி வேறு விதமாகத் தீர்த்து விடுகிறது! இது கைகேயினுடைய காரியமே அல்ல. விதி அவளை ஒரு அறிவில்லாத கருவியாகப் பயன்படுத்திஇருக்கிறது. பழியைச் சுமக்கும் துக்கம் அவளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அவளிடத்தில் நாம் வைத்து வந்த அன்பு அப்படியே இருக்க வேண்டும். வஞ்சக எண்ணம் அவள் உள்ளத்தில் முந்தியே இருந்திருந்தால், அவள் நடவடிக்கை வேறு விதமாக இருந்திருக்கும். திடீரென இந்த விதம் நிர்த்தாட்சண்யமாக, ராமனை `நீ வனவாசம் செல்’ என்று தன் வாயாலே சொல்வதற்குக் காரணம் தெய்வச் செயலே! சந்தேகமில்லை!

அவள் மேல் நாம் கோபம் கொள்ளக்கூடாது! அவள் எவ்வளவு மேன்மைக் குணம் பொருந்தியவள். நம்மைப் பெற்ற தாயைப் போலப் பார்த்து வந்தாள். பண்பாடு அடைந்தவள், புருஷன் எதிரில் இம்மாதிரிக் கூச்சமின்றி ஏன் நடந்துகொண்டாள்? இதற்குத் தெய்வத்தின் செயல் அல்லாமல் வேறு காரணம் இருக்க முடியாது. விதியை யார் தான் எதிர்க்கமுடியும்?

மகா தீரர்களான ரிஷிகள் கூடத் தங்கள் தவத்திலிருந்து திடீரென வழுவிப் போயிருக்கிறார்கள். தெய்வத்தால் வந்ததை எதிர்க்கும் ஆற்றலைக் கைகேயி எப்படிப் பெறுவாள்? நம்முடைய மனோ தைரியத்தால் இந்த அனர்த்தத்தை நாம் சந்தோஷ நிகழ்ச்சியாகச் செய்து விடுவோம். அதுவே நம் வீரத்திற்கு அடையாளம்.

லட்சுமணா! வனம் செல்வதற்குச் சங்கற்பம் முறைப்படி செய்து பெரியோர்களுடைய ஆசியைப் பெற்றுக்கொண்டு நாம் உடனே போகவேண்டும். தாமதம் கூடாது. அபிஷேகத்திற்குக் கொண்டு வந்திருக்கும் கங்கை ஜலத்தைக் கொண்டுவா. அதையே வனவாச விரத சங்கல்பத்திற்கு உபயோகித்துக் கொள்கிறேன்; இல்லை! வேண்டாம், அந்த ஜலம் பட்டாபிஷேகத்திற்கு உபயோகப்பட வேண்டிய ராஜாங்கப் பொருள். அதை நாம் எப்படித் தொடலாம்.

நாமே கங்கை சென்று ஜலம் கொண்டு வருவது நலம். தம்பி! விசனப்படாதே! ராஜ்யம் சம்பத்து இவைப்பற்றிச் சிந்தனை செய்யாதே. வனவாசம் எனக்கு மேன்மையான பாக்கியம். நம்முடைய சிறிய அன்னை பெயரில் கோபிக்க வேண்டாம். தெய்வம் வகுத்ததை அவள் பெயரில் போடலாகாது’ என்றான்.

எந்தக் காரியம் நடந்தாலும், அதற்கு `விதிதான்’ காரணம் என்று முடிவு கட்டிவிட்டால், கோபம் வராது அல்லவா?

`இன்னார் தன்னை வஞ்சம் தீர்த்துக் கொள்ள முயன்றார்கள்’ என்று நினைத்து வேதனையடைவதைவிட, `இதிலே விதி விளையாடுகிறது’ என்று முடிவு கட்டிவிடுவது கோபமே எழாமல் செய்துவிடும் அல்லவா?

நதியின் பிழையன்று நறும்புன லின்மை; அற்றே

பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்

மதியின் பிழையன்று; மகன்பிழை யன்று மைந்த!

விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்ட தென்றான்.

கம்பர் சித்திரத்தில் இலக்குவன் கோபத்தையடக்க ராமன் சொன்ன சமாதானம் இது.

உவமைதான் எவ்வளவு சுவையானது!

தண்ணீரில்லாமல் போவது, நதி செய்த குற்றமல்லவே?

அதுபோலவே காய்ந்து போய்க் கிடப்பது காடு செய்த குற்றமல்லவே?

கடலில் திமிங்கலங்கள் இருப்பது கடல் செய்த குற்றமல்லவே?

ஒன்றுக்காகவே ஒன்றைக் கோபித்துக்கொண்டால் நிம்மதியை இழப்பதுதான் மிஞ்சும்.

ஆகவே, `எந்தக் கட்டத்திலும், எந்தச் சூழலிலும் கோபமே வரக்கூடாது’ என்று போதிக்கிறது இந்துமதம்.

`ஆறுவது சினம்’ என்றார் ஔவையார்.

`எரிகிறதைப் பிடுங்கினால். கொதிக்கிறது அடங்கிப் போகும்’ என்பது கிராமத்துப் பழமொழி.

`சினம் என்பது சேர்ந்தாரையே கொல்லும்’ என்றார் வள்ளுவர்.

அதற்குச் `சேர்ந்தாரைக் கொல்லி’ என்றே ஒரு பட்டம் கொடுத்தார்.

உன் கோபம் செல்லாத இடத்தில் நீ கோபம் கொள்ளுவது தீமை பயக்கும்.

`செல்லக்கூடிய இடத்திலும் அதைவிடத் தீமை எதுவுமே இல்லை’ என்றார் அவர்.

செல்லா இடத்துச் சினந்தீது; அல்லிடத்தும்

இல்லதெனில் தீய பிற.

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்; அல்லிடத்துக் காக்கிலென் காவாக்கால் என்?

 

உன் மனைவியை நீ உதைத்தால் யாரும் உன்னைக் கேட்க முடியாது.

அவளும் உன்னைத் திருப்பி உதைக்க மாட்டாள்.

இது உன் கோபம் செல்லக்கூடிய இடந்தான்.

ஒரு பயில்வானிடம் நீ கோபம் கொண்டால் அவன் உன்னைத் தீர்த்துக் கட்டிவிடுவான்.

அது உன் கோபம் செல்லாத இடம்.

இந்த இரண்டு இடங்களிலுமே கோபம் தவறு என்கிறார் வள்ளுவர்.

`கோபம் பாவம், சண்டாளம்’ என்கிறார்கள் நமது மூதாதையர்கள்.

இராமாயணத்தில் முக்கியமான கட்டம் எங்கிருந்து தொடங்குகிறது?

முதலில் சூர்ப்பனகை மீது இலக்குவன் கொண்ட கோபம்.

அதனால் மூக்கிழந்து நின்ற தங்கையைப் பார்த்து, இராவணன் கொண்ட கோபம்.

இலக்குவன் கோபம், செல்லக்கூடிய இடத்திலேயே நிகழ்ந்தது.

இராவணன் கோபம், செல்லாத இடத்திலே நிகழ்ந்தது.

இராம கதையில் ஒரு முடிச்சு விழுந்தது.

ஆத்திரத்தில் மகனை வெட்டியவன், குழந்தையைக் கொன்றவன் என்று எத்தனை குற்றவாளிகளை நீ வாழ்க்கையில் சந்தித்திருக்கிறாய்!

`கொலை’ என்பது எந்தக் காரணத்திற்காக நிகழ்ந்தாலும், அதற்கு மூலகாரணம் கோபந்தானே!

சிறைச்சாலையில் உள்ள கொலைக் குற்றவாளிகள் அனைவருமே ஆத்திரத்தால் அறிவிழந்தவர்கள் தான்.

நான் திருச்சி சிறையில் இருந்தபோது, அண்ணன் தம்பிகளாகவே ஜோடி ஜோடிகளாகச் சில ஆயுட்காலக் கைதிகள் இருந்தார்கள்.

வயற்காட்டுக்குக் கஞ்சி கொண்டுபோன அண்ணனின் மனைவியை ஒருவன் கையைப் பிடித்து இழுத்தான்.

அவனை வெட்டிக் கொல்ல அண்ணன் போனான்.

கூடவே தம்பியும் போனான்.

விளைவு!

கைப்பிடித்து இழுத்தவன் கொல்லப்பட்டான்.

ஆனால், அண்ணனின் மனைவி நிர்க்கதியானாள்.

காவலுக்கு ஆள் இல்லாத நிலையிலேயே, கொல்லப்பட்டவனின் உறவினர்கள் சிலராலே அவள் கற்பழிக்கப்பட்டாள்.

அதைத் தடுக்க அந்தச் சகோதரர்களால் முடியவில்லையே!

எதன்மீது ஆத்திரமுற்று அவர்கள் கொலை புரிந்தார்களோ அதே காரியம் நடந்தே விட்டது.

அப்போது அவர்கள் அந்தக் கொலையை மட்டும் செய்யாமல், வேறு வழியில் எதிரியைப் பழி வாங்கியிருந்தால், வெளியிலேயே இருந்து தங்கள் குலமகளைக் காப்பாற்றி இருக்க முடியும்.

கோபம் முதற்கட்டத்தில் `வென்றது’ போலத் தெரிந்தால் `நிரந்தரமாகத் தோல்வியடையப் போகிறது’ என்று பொருள்.

திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் வழியில் மலையடிவாரத்தில் ஒரு சிற்றூர்.

அங்கே இரண்டு சகோதரர்கள்.

இருவரும் `ரெட்டியார்’ சாதியைச் சேர்ந்தவர்கள்.

அவர்களுடைய சிற்றன்னைக்கும், அந்த ஊர்க் கிராம முன்சீப்பிற்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டது.

தன் சொத்துக்களை எல்லாம் அந்தக் கிராம முன்சீப்பிற்கு அவள் கொடுக்கப்போவதாக, அவர்கள் கேள்விப்பட்டார்கள்,

ஆத்திரமுற்றார்கள்.பட்டப்பகலில் இருவரும் சிற்றன்னையை வெட்டிக் கொன்றார்கள்.

கண்கண்ட சாட்சிகள் ஏராளம்.

இருவரும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்கள்.

விளைவு?

சிற்றன்னையின் சொத்துக்களை அவள் விரும்பியது போலவே கிராம முன்சீப்பே அனுபவிக்க ஆரம்பித்தார்.

இதன் பொருள் என்ன?

`எது நடக்கக்கூடாது’ என்பதற்காக நீ கோபப்படுகிறாயோ, நீ கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்திற்காக, அது நடந்தே விடுகிறது.

ஆகவே, எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு `நிதானம்’ தான் அற்புதமான ஆயுதமே தவிர கோபம் அல்ல.

கைகேயி வாங்கிய வரங்கேட்டு இலக்குவன் கோபப்பட்டது போலவே இராமனும் கோபப்பட்டிருந்தால், அந்த வரத்தை மீறி முடி சூட்டிக்கொண்டிருந்தால் `ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி’ என்ற தியாக புருஷனை நாம் வணங்கப்போவதில்லை.

பாகிஸ்தானில் இந்துக்களுக்கு நேர்ந்த அநீதியை எதிர்த்து அப்பொழுதே நேருஜி நேரடி யுத்தம் தொடர்ந்திருந்தால், உலகத்தில் அவருடைய மரியாதையும் உயர்ந்திருக்காது. நம்முடைய மரியாதையும் உயர்ந்திருக்காது.

அரபு நாடுகளின் நட்புறவும் கிடைத்திருக்காது.

உள்நாட்டில் நிம்மதியும் இருந்திருக்காது.

அவரது நீண்டகாலச் சகிப்புத் தன்மையின் விளைவாக எதிரிகள் தாங்களாகவே பணிந்தார்கள்.

வெற்றிக்கு மேல் வெற்றி பெற்ற ஹிட்லரின் கோபம் தானே, அவனது சடலத்தைக்கூட ஜெர்மானிய மக்கள் காண முடியாமல் அழித்து

விட்டது.காமம், குரோதம், லோபம், மதம், மாச்சரியம் என்று ஐந்து தீய குணங்களை வடமொழி குறிப்பிடுகிறது.

இதில், `குரோதம்’ இரண்டாவது இடத்தை வகிக்கிறது.

`பஞ்சமாபாதகங்களில் கோபம் ஒன்று’ என்கிறது.

எவ்வளவு பெரிய கொடுமை உனக்கு இழைக்கப்பட்டாலும், அந்த நேரத்தில், அதை விதி என்று சகித்துக் கொண்டுவிட்டால், கொஞ்ச நாளில் நிலைமையே தலை கீழாகி விடும்.

கோபத்தில் உடனே நீ நடவடிக்கை எடுத்தால் நிலைமை பயங்கரமாகி விடும்.

முன்பெல்லாம் `எவரையாவது தாக்கி எழுத வேண்டும்’ என்று எனக்குத் தோன்றினால் அவசரமாக எழுதிவிடுவேன்.

பிறகு சாவகாசத்தில் சங்கடப்படுவேன்.

இப்பொழுதெல்லாம் எழுதத் தோன்றுவதை இரண்டு நாள் ஒத்திவைக்கிறேன்.

சூடு தணிந்து மனோபாவம் மாறிவிடுகிறது.

முன்பு, தினமும் ஒரு எதிரியைச் சம்பாதித்துக் கொள்வேன்.

இப்போது அது இல்லை.

எல்லா மனிதரும் கோபத்தை மட்டும் கைவிட்டு விட்டால், கோர்ட்டுகளின் வேலை குறைந்து போகும்.

பத்திரிகைகளுக்குப் பரபரப்பான செய்தி கிடைக்காது.

ஒவ்வொரு மனித ஆத்மாவும் `மகாத்மா’ ஆகிவிடும்.

சரீர தத்துவப்படி ஒரு உணர்ச்சியில் இதயம் விழுந்து கொதிக்கும்போது, உடம்பும் கொதிக்கிறது.

அந்தக் கொதிப்பு மூளையிலும் ஏறுகிறது.

உஷ்ணத்தால் தாக்கப்பட்ட மூளை நிதானமிழந்து போகிறது.

ஆகவே, செய்தியைக் காதில் வாங்கும்போதே மிகச் சாதாரணமாக, சகஜமாக வாங்கிக் கொள்வது ஒன்றே கோபம் வராமல் தடுக்க ஒரே வழி.

கடைசியாக-

கோபத்தைப் பற்றி, காஞ்சிப் பெரியவர்கள் கூறியுள்ள கருத்தை அப்படியே கொடுத்து முடிக்கிறேன்.

அவர் சொல்கிறார்:

`நமக்கு அநேக சந்தர்ப்பங்களில் கோபம் வருகிறது; முக்கியமாக இரண்டு விதங்களில் கோபம் வருகிறது.

ஒருவன் ஒரு தப்புக் காரியம் செய்தால் அவனிடம் கோபம் ஏற்படுகிறது. அல்லது ஒருவன் நம்மைத் தூஷித்தால் அவனிடம் கோபம் வருகிறது. யோசித்துப் பார்த்தால் இந்த இரண்டு விதங்களிலும், எவரிடமும் கோபம் கொள்வதற்கு நமக்கு யோக்கியதை இல்லை என்று தெரியும்.

ஒருவன் தப்புப் பண்ணுகிறான் என்றால் கோபம் கொள்கிறோமே, அப்படியானால் நாம் தப்புப் பண்ணாதவர்களா? ஒருவனைப் பாவம் என்று நாம் துவேஷிக்கும் போது, நாம் அந்த பாவத்தைப் பண்ணாதவர் தானா என்று நினைத்துப் பார்க்க வேண்டும். காரியத்தில் பண்ணாவிட்டாலும் மனசால் பண்ணிக் கொண்டேதான் இருக்கிறோம். நம்மைவிடப் பாவமும் தப்பும் பண்ணுகிறவர்கள் இருக்கலாம். நம் மனசு ஏதோ ஒரு அளவுக்குப் பக்குவம் அடைந்திருப்பதால், நாம் இந்த அளவு பாவத்தோடு நிற்கிறோம். அவனுடைய மனசுக்கு இந்தப் பக்குவம்கூட வராததால் இன்னும் பெரிய பாவம் பண்ணுகிறான்.

நாம் செய்கிற தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு எத்தனை பாடுபட வேண்டியிருக்கிறது? நம்மையும்விட மோசமான நிலைக்கு இறங்கிப் பாவங்களைச் செய்யப் பழகிவிட்ட இன்னொருத்தனின் மனசுக்கும் அதிலிருந்து மீளுவது சிரமமான காரியம்தான்.

அப்படிப்பட்டவனோடு நாம் சேர்ந்திருக்க வேண்டும் என்பதில்லை. அஸத்ஸங்கத்தை விட்டு ஸத்ஸங்கத்தில் சேர்வதுதான் ஆத்மா விருத்திக்கு முதல் படி என்று சகல சாஸ்திரங்களும் சொல்கின்றன.

ஆனால் பாவிகளை நாம் வெறுப்பதிலும் கோபிப்பதிலும் பயனில்லை. `அவர்களுடைய மனசும் நல்ல வழியில் திரும்ப வேண்டும்’ என்று பிரார்த்திப்பதொன்றே நாம் செய்ய வேண்டியது. ஈசுவரானுக்கிரகத்தில், நம்மில் யாருக்காவது அனுக்கிரக சக்தி கிடைத்திருந்தால், அதை இந்தப் பாவிகள் கரையேறுவதற்கே உபயோகிக்க வேண்டும்.

நம் கோபம் எதிராளியை மாற்றாது. அவனுக்கு நம்மிடத்தில் கோபத்தை உண்டாக்குவதுதான் அதன் பலன். இரண்டு பக்கங்களிலும் துவேஷம் வளர்ந்துக் கொண்டே போகும். ஒருவன் தன் தப்பைத் தானே உணர்ந்து திருந்தச் செய்யாமல், நம் கோபத்துக்குப் பயந்து நடந்து காட்டுவதில், நமக்குப் பெருமையில்லை. இது நிலைத்தும் நிற்காது. அன்பினாலேயே பிறரை மாற்றுவதுதான் நமக்குப் பெருமை; அதுதான் நிலைத்து நிற்கும்.

ஒருத்தன் பாவம் செய்ய அவனுடைய மனசு, சந்தர்ப்பம் இரண்டும் காரணமாகின்றன. நாம் பல பாவங்களைச் செய்யாமல் சந்தர்ப்பங்களே நம்மைக் கட்டிப் போட்டிருக்கலாம். எனவே ஒரு பாவியைப் பார்க்கும் போது, `அம்பிகே! இந்தப் பாவத்தை நானும் கூட செய்திருக்கலாம். ஆனால், அந்தச் சந்தர்ப்பம் தராமல் நீ கிருபை செய்தாய். அந்தக் கிருபையை இவனுக்கும் செய்யம்மா’ என்று பிரார்த்திக்க வேண்டும்.

இரண்டாவதாக நம்மை ஒருத்தர் துவேஷிக்கிறார் என்றும் கோபம் கொள்ள வேண்டியதில்லை. நாம் எத்தனை தூஷணைக்குத் தக்கவர் என்பது நம் உள்மனசுக்குத் தெரியும். ஒரு வேளை நம்மைத் தூஷிக்கிறவர் நாம் செய்யாத தவறுக்காக நம்மைத் திட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் செய்த தவறுகள் அதைவிடப் பெரியவை என்று நம் அந்தரங்கத்திற்குத் தெரியும். நம் தவறுகளைக் கழுவிக்கொள்வதற்காக, ஒவ்வொரு நாளும், அம்பாளிடம் பச்சாதாபத்துடன் அழவேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். இந்த நிலையில் உள்ள நாம் பிறரைத் தப்புக் கண்டுபிடித்துக் கோபிக்க நியாயம் ஏது?

நாம் தப்பே செய்யவில்லை என்றால், அப்போது பிறரைக் கோபிக் கலாமா என்றால், இப்படித் தப்பே பண்ணாத நிலையில் நாம் அன்புமயமாகி விடுவோம். அப்போது நமக்குப் பாவியிடமும் கருணை தவிர வேறு எந்தப் பாவனையும் இராது; கோபமே உண்டாகாது. நாம் தப்புச் செய்தவர்கள் என்றாலோ, நமக்குப் பிறரைக் கோபிக்க யோக்கியதை இல்லை. தப்பே பண்ணாத நிலையிலோ, எல்லாம் அம்பாள் லீலைதான் என்று தெரிகிறது. லீலையில் யாரைப் பூஜிப்பது, யாரைத் தூஷிப்பது?எப்படிப் பார்த்தாலும் கோபம் கூடாதுதான்.

மனிதனைப் பாவத்தில் அழுத்துகிற இரண்டு பெரும் சக்திகள், `காமமும் குராதமுமே’ என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. அதாவது நம் கோபத்தினால் நமக்கே தான் தீங்கு செய்து கொள்கிறோம். பெரும்பாலும், நம்முடைய கோபத்தை எதிராளி பொருட்படுத்துவதே கிடையாது. ஆத்திரப்படுவதால், நாமே நம் மனசு, சரீரம் இரண்டையும் கெடுத்துக் கொள்வதோடு சரி. அன்பாக இருப்பதுதான் மனிதனின் ஸ்வபாவமான தர்மம். அதுதான் ஆனந்தமும். அன்பு நமக்கும் ஆனந்தம் எதிராளிக்கும். `அன்பே சிவம்’ என்பார்கள். நாம் எல்லாரும் அன்பே சிவமாக அமர்ந்திருக்கப் பிரயாசைப்பட வேண்டும்.’