மதுவும் மதமும்-கவியரசு கண்ணதாசன்

மதுப் பழக்கம் உள்ள ஒருவனே மதுவினால் விளையும் தீமைகளைத் தெளிவாக எடுத்துரைக்க முடியும்.

`எனக்கு இருபதாண்டுகளாக அந்தப் பழக்கம் உண்டு’ என்பது ஒன்றும் புதிய செய்தியல்ல.

அந்தத் தார்மீக ஒழுக்கக் கேட்டிற்கு நான் வக்காலத்து வாங்க வரவில்லை.

ஆனால், `சட்டத்தினால் மதுவை ஒழிக்க முடியாது’ என்று நான் வாதிட்டிருக்கிறேன்.

சட்டம் போட்டு ஒன்றை மறைக்க, மறைக்க அது பற்றிய ஆசைகளே கிளர்ந்து எழும்.

முழுக்க மூடிக்கொண்டிருக்கும் பெண்ணைப் பார்க்க விரும்பும் கண்ணைப்போல், முழுக்க மறைக்கப்பட்ட ஒன்றைச் சுவைக்க விரும்புவது மனித இயல்பு.

ஆகவேதான், `மதுப்பழக்கம், விலைமாதர் உறவு இரண்டையும் சட்டத்தின் மூலம் ஒழிக்க முடியாது’ என்று நான் வாதிடுகிறேன்.

அடுத்தவனுக்குத் தீமை பயக்கக்கூடிய சமுதாய ஒழுக்கக்கேட்டை மட்டுமே சட்டம் தடுக்க முடியும்.

தனிமனிதனின் ஒழுக்கத்திற்கு அது உத்தரவாதம் தேடமுடியாது.

காரணம் அவன் எங்கேயாவது மறைந்து நின்று கொண்டு, அந்த ஒழுக்கக் கேட்டிற்குப் பலியாவான்.

ஆகவே, மது, விலைமாதர் என்ற இரு விஷயங்களில் அழுத்தமான `நீதி’ போதனையே மனிதனின் மனத்தை மாற்ற முடியும்.

“குடித்தால் உன் உடம்பு கெடும்.

மலத்துக்கும், சோற்றுக்கும் வித்தியாசம் தெரியாது.

காரணம் இல்லாமல் வீண் பகைகளைக் கொண்டுவந்து சேர்க்கும்.

நீ என்ன சொன்னாலும் உலகம் உன்னை நம்பாது.

நீ நிதானமாகப் பேசினாலும் கூட, `இது குடிகாரன் பேச்சு’ என்று தள்ளிவிடும்.

நீ குடிக்கும் மது, உன் குடும்பத்தின் வாழ்வைக் குடித்து
விடும்.

உன் வருமானம் பாழாகும்.

செய்ய வேண்டிய காரியத்தைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்ய முடியாது.

மதுவினால் நீ நோயுற்றால், உனக்காக யாரும் வருத்தப்பட மாட்டார்கள்.

குடும்பத்தாலும் சமுதாயத்தாலும் ஒதுக்கப்பட்ட புல்லாக, பூச்சியாக நீ மாறிவிடுவாய்.

நற்குலப் பெண்கள் உன் அருகில் வரவே பயப்படுவார்கள்.

மொத்தத்தில் நீ மனிதனாகவே வாழ முடியாது”

இப்படி அவனுக்கு இடித்துக் காட்டினால், ஒரு கட்டத்தில் இந்த அனுபவம் அவனுக்கு வந்து, மதுவைக் கைவிட்டு விடுவான்.

ஆகவே தான், இந்தியா தோன்றிய காலத்தில் இருந்து, பின் இந்து மதம் பிறந்த காலத்தில் இருந்து, மதுவுக்கு எதிராக மதம் வாதாடிப் போதித்திருக்கிறதே தவிர, அரசர்களிடம் தன் சக்தியைப் பயன்படுத்தி, அதைத் தடைசெய்யச் சொன்னதில்லை.

“மது உள்ளே போனால், மதி வெளியே போகும்.”

“சாராயத்தை உள்ளே போட்டால், பூராயம் எல்லாம் வெளியே வந்துவிடும்”

“குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாக்கப் போச்சு”

“கள்ளுக் குடிச்சவனுக்குச் சொல்லுப் புத்தி ஏறாது.”

இவையெல்லாம் கிராமத்துப் பழமொழிகள்.

மதுவிலக்குப் பிரச்சாரம் இந்தியாவில் பல கோணங்களில், பல விதங்களில், பல கட்டங்களில் நடைபெற்று வந்திருக்கிறது.

அப்பொழுதெல்லாம், நாட்டிலே குடிகாரர்கள் குறைவாகவே இருந்தார்கள்.

என்று மதுவிலக்குச் சட்டம் வந்ததோ, அன்றிலிருந்துதான் குடிப்பவர்கள் அதிகமானார்கள்.

ஆகவே, இந்த வகையிலும் மதம் போதித்து எழுப்பும் தார்மீகச் சக்தியை சட்டம் உருவாக்க முடியாது.

இந்து மதம், மது உண்பவர்களையே `அரக்கர்கள்’ என்று அழைத்தது.

மதுவினால் மதியிழந்தோர் கதைகள் இந்துமத ஏடுகளில் ஏராளம், ஏராளம்.

எங்கள் குடும்பத்தில் நான்தான் குடிக்கப் பழகிய முதல் மனிதன்.

எனக்கு முந்திய தலைமுறையில் ஒவ்வொருவரும் குடித்து விட்டு வருவோனைக் கண்டால், காலால் உதைப்பார்கள்.

என் தந்தை ஒரு கிராம முன்சீப்பையே அப்படி உதைத்திருக்கிறார்.

அந்நாளில், அரசாங்கம் லைசென்ஸ் கொடுத்தாலும் ஊருக்குள்ளே கள்ளுக்கடையோ சாராயக் கடையோ வைக்க எந்தக் கிராமத்திலும் யாரும் இடம் கொடுக்க மாட்டார்கள்.

குடித்துவிட்டுச் சபைக்கு வரும் ஒருவனை அந்நாளில் காணவே முடியாது.

குடிப்பவனுக்குப் பெண் கொடுக்க மாட்டார்கள்.

காரணம், இந்து மதத்தின் உணர்ச்சிகரமான போதனை அவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தது.

தாங்கள் குடிப்பதற்குப் பெரும்பாலோர் சொல்லும் காரணம் `கவலைகளை மறப்பதற்கே’ என்பதாகும்.

ஒரு இடத்தில் கம்பன், இதனை சுக்ரீவன் வாய்மொழியாக மிக அழகாகச் சொல்லுகிறான்.

“நெருப்பை நெய்யால் அணைத்தேன்” என்கிறான்.

கவலைக்காகக் குடிக்க ஆரம்பித்தால், உள்ளே போய் விழுந்த மது, அந்தக் கவலையை அதிகப்படுத்துமே தவிரக் குறைக்காது.

ஒரு குடிகாரன், குடிக்க ஆரம்பிக்கும்போது எதை நினைத்துக் கொண்டு குடிக்கத் துவங்குகிறானோ, அதுதான் அவன் குடித்து முடித்துத் தூங்கும்வரை விசுவரூபம் எடுத்து நிற்கும்.

முதல் ரவுண்டு குடிக்கும் போது, `ஒருவனை உதைக்க வேண்டும்’ என்று நீ நினைத்தால் மூன்றாவது ரவுண்டு முடிந்ததும், அவனைத் தேடி உன்னைப் போகச் சொல்லுமே தவிர, அந்தக் கோபத்தை அது குறைக்காது.

அதனால்தான், மேலை நாட்டார் தனியாகக் குடிப்பது இல்லை.

`சொசைட்டி டிரிங்கிங்’ என்று கூட்டம் கூட்டமாகக் குடிக்கத் தொடங்கினார்கள்.

குடித்துவிட்டு நாட்டியமாடத் தொடங்கினார்கள்.

விளைவு

`எவ்வளவு குடிக்கிறோம்’ என்ற அளவு தெரியாமல் அற்ப ஆயுளிலேயே மாண்டு போனார்கள்.

தனியாகக் குடித்தால், கவலையின் அளவு அதிகமாகிறது. கூட்டமாகக் குடித்தால், குடிக்கும் அளவு அதிகமாகிறது.

நமது புராணங்களில், `குடிப்பவனது வயிறு பெரிதாக இருக்கும்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

அரக்கர்களின் வயிற்றை அப்படியே வர்ணிக்கிறார்கள்.

இது ஒரு மருத்துவ உண்மை.

குடிக்க குடிக்க, வயிற்றுக்குள்ளே Fluid உற்பத்தியாகிறது.

`வயிறு மகோதரம்’ போல் ஆகிவிடுகிறது.

ஈரலில் Liver Sirosis என்ற நோய் உற்பத்தியாகிறது.

ஆரம்ப காலத்தில், குடிகாரர்கள் நிறையச் சாப்பாடு சாப்பிடுவார்கள்.

நாள் ஆகஆக, குடி அதிகமாகி சாப்பாடு குறைந்துவிடும்.

`மரணம் வாசல் வரைக்கும் வந்துவிட்டது’ என்பது இதன் பொருள்.

தண்ணீரையும் நாம் குடிக்கிறோம்; பாலையும் குடிக்கிறோம்.

ஆனால், எதையும் `குடி’ என்று அழைப்பதில்லை.

இதை மட்டும் ஏன் `குடி’ என்கிறோம்? இது ஒன்றுதான், உயிரைக் குடிக்கிறது.

குடியைப்பற்றிச் சொல்கின்ற புராண இதிகாசங்கள் எல்லாம் `அவர்கள் குடித்தார்கள்’ என்று கூறிவிட்டு அதன் மூலம் என்னென்ன தவறுகள் செய்தார்கள் என்பதையே விவரிக்கின்றன.

வள்ளுவர், சுருக்கமாக, `நஞ்சுண்பார் கள்ளுண்பவர்’ என்றார்.

`இந்திரன் மதி மயங்கி, அகலிகை கெடுக்கப்பட்டதற்கும் மதுவேதான் காரணம்’ என்று ஓர் உபன்யாசகர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

என் அனுபவத்தில், சாராசரி மூளை சுறுசுறுப்பாக வேலை செய்து கடைசியில் முட்டாள்தனமாக முடிவெடுக்கும்படி வைப்பது மது ஒன்றே.

இரவு நேரத்தில், அக்கம் பக்கத்தார் விழித்துக் கொள்ளும்படியாகக்கூட நான் சத்தம் போட்டிருக்கிறேன்.

எவ்வளவு அறிவுள்ள மனிதனையும் முட்டாளாக்கி விடும் அந்த மதுவிற்கு அடிமையாகி விட்டால், பிறகு மீள்வது கடினம்.

கம்பராமாயணத்தில், மதுவுண்டு மயங்கிய சுக்ரீவன், தன் நிலமைக்கு இரங்கி, கீழ்க்கண்டவாறு புலம்புகிறான்.

“உறவுண்ட சிந்தை யானும்
உரைசெய்வான்! ஒருவற்கு இன்னம்
பெறல் உண்டோ?அவரால் ஈண்டுயான்
பெற்றபேர் உதவி; உற்றது
இறல்உண்டோ? என்னின் தீர்வான்
இருந்தபேர் இடரை எல்லாம்
நறவுஉண்டு மறந்தேன்! காண
நாணுவல், மைந்த!” என்றான்.

ஏயின அது அலால், மற்று ஏழைமைப் பாலது என்னோ?
“தாய் இவள் மனைவி” என்னும் தெளிவு இன்றேல்!
தருமம் என் ஆம்?
விவினை ஐந்தின் ஒன்று ஆம்; அன்றியின் திருக்கு நீங்க
மாயையின் மயங்குகின்றோம்; மயங்கினமேல்
மயக்கம்வைத்தோம்.
`தெளிந்து தீவினையைச் செற்றார் பிறவியின் தீர்வர்’ என்ன
தீளிந்திலா உணர்வி னோரும் வேதமும் விளம்ப வேயும்
தெளிந்து உறை புழுவை நீக்கி, நறவு உண்டு
நிறைகின்றேனால்
அளிந்து அகத்து: எரியும் தீயை நெய்யினால்
அவிக்கின்றாரின்,
`தன்னைத்தான் உணரத் தீரும் தகைஅறு பிறவி,
என்பது என்னத்தான் மறையும் மற்றத் துறைகளும்
இசைத்த எல்லாம்
முன்னை, தான் தன்னை ஓராமுழுப்பிணி அழுக்கின் மேலே
பின்னைத்தான் பெறுவது அம்மா; நறவுஉண்டு திகைக்கும்
பித்தோ?
அளித்தவர் அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர், அறிவில், மூழ்கிக்
குளித்தவர், இன்ப துன்பம் குறைந்தவர், அன்றி வேரி
ஒளித்தவர் உண்டு, மீண்டும் இவ்வுலகு எல்லாம் உணர
ஓடிக் களித்தவர் எய்தி நின்ற கதிஒன்று கண்டது உண்டோ?
செற்றது பகைஞர், நாட்டார் செய்தபேர் உதவி தானும்
கற்றதும், கண்கூடாகக் கண்டதும், நிலைவ லாளர்
சொற்றதும், மானம் வந்து தொடர்ந்ததும் படர்ந்த இன்பம்
உற்றதும் உணரார் ஆயின் இறுதிவேறு இதனின் உண்டோ?
வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும் மரபுஇல்
கொட்பும்
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும், களிப்பும் தாக்கும்
கஞ்சமெல் அணங்கும் தீரும், கள்ளினால்! அருந்தினாரை
நஞ்சமும் கொல்வது அல்லால்; நரகினை நல்காது அன்றே
கேட்டனன் `நறவால் கேடுவரும்’ எனக் கிடைத்த
அச்சொல்
காட்டியது; அனுமன் நீதிக் கல்வியால் கடந்தது அல்லால்
மீட்டு இனி உரைப்பதே என்ன? விரைவின் வந்து
அடைந்த வீரன்
மூட்டிய வெகுளி யால்யாம் முடிவதற்கு ஐயம் உண்டா?
“ஐய நான் அஞ்சினேன்; இந்நறவனின் அரிய கேடு;
கையினால் அன்றி யேயும் கருதுதல் கருமம் அன்றால்;
வெய்யது ஆம் மதுவை; இன்னம் விரும்பினேன் என்னின்
செய்ய தாமரைகள் அன்ன சேவடி சிதைக்க” என்றான் வீரன்!

இந்தக் கட்டுரைத் தொடரில், நான் ஏன் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்ய வருகிறேன் என்றால், சில வேதங்களையும், கம்ப ராமாயணத்தையும், திருக்குறளையும் படித்தது ஒன்று; என் அனுபவம் இரண்டு.

மதுவினால், உண்மையிலேயே நான் போய்ச் சேர வேண்டிய ஊருக்குப் போய்ச் சேர முடியாமல் ரயிலைத் தவற விட்டிருக்கிறேன். வாழ்க்கை ரயிலையும் தவற விட்டிருக்கிறேன்.

ஒரு இந்து, மது அருந்துவதை மதம் நியாயப்படுத்தவில்லை.

வழக்கம்போலவே அவனைத் தட்டிக் கொடுத்துத் தர்ம போதனை மூலம் திருப்புகிறது.

மதுவிலக்கை சரியாகச் செயல்படுத்த வேண்டும் என்றால், அது நமது போலீஸ்காரர்களால் இயலாது.

மத விரிவுரையாளர்களால் மட்டுமே இயலும்.