நாற்பது வயதில் படிக்க வேண்டிய பாடங்கள்-அர்த்தமுள்ள இந்துமதம்


நாற்பது வயதை நீ தாண்டி விட்டால், இதற்கு முன்னாலே விளைவித்த பயிர்களை எல்லாம் அறுவடை செய்ய வேண்டியிருக்கும்.

அந்த நாள் உணவு, ஆட்டபாட்டங்கள் இவற்றின் எதிரொலி இப்போது தான் கேட்கத் தொடங்கும்.

இதற்கு முன்னால், உனக்கு மது அருந்தும் பழக்கம் இருந்திருக்குமானால், இப்போது உன் ஞாபக சக்தியை மெது மெதுவாக மேகங்கள் மூடும்.

இதற்கு முன்னால் கல்லும் உனக்கு ஜீரணமாகி இருக்கும்; இனி அரிசியும் பருப்புமே உன்னோடு சண்டை போடும்.

இதற்கு முன்னால் எதைச் சாப்பிடலாம் என்று நீ டாக்டரைக் கேட்டிருக்க மாட்டாய்; இனிக் கேட்க வேண்டி இருக்கும்.

முந்திய அத்தியாயங்களில் குறிப்பிட்டிருப்பதைப் போல், இதுவரை கீழ்கண்ட விஷயங்களை நீ கவனித்து வந்திருந்தால், இந்தப் பருவமும் உனக்கு இளமைப் பருவமே!

1. கைகள் இரண்டையும் வீசியபடி முடிந்த வரை நீண்ட தூரம் நடத்தல்.

2. வாயுப் பதார்த்தங்களைச் சாப்பிடாமல் இருத்தல்.

3. கடலைப் மாவு, கடலை எண்ணெய் ஆகியவற்றை ஒதுக்குதல்.

4. தவறான உறவுகள் கொள்ளாதிருத்தல்.

5. விழுந்து குளித்தல்.

6. இனம் அறிந்து சேருதல்.

7.இருதயத்திற்குத் துன்பம் கொடுக்கக் கூடிய தொல்லைகளில் மாட்டிக் கொள்ளாதிருத்தல்.

8. எதையும் அளவோடு வைத்திருத்தல்.

நாற்பது வயது வரை இவற்றை ஒருவன் கடைப்பிடித்தால், இப்போது அவனைப் பார்க்கிறவர்கள், `உங்களுக்கு இருபத்தைந்து வயதா?` என்று கேட்பார்கள்.

ஆயுள் எவ்வளவு என்று நிர்ணயிப்பது நம் கையில் இல்லை. ஆனால், ஆயுள் உள்ளவரை ஓடியாடிக் கொண்டிருக்கும் வித்தையில் நம்முடைய திறமையும், முயற்சியும் கூட அடங்கிக் கிடக்கின்றன.

தசரதன் அறுபதினாயிரம் மனைவியரை மணந்தது உண்மையோ இல்லையோ, அவனது வரலாற்றையும், அவன் ஆண்மை காத்ததையும் படிக்கும் போது, ஒரு ஆயிரம் மனைவியரையாவது திருப்தி செய்யக்கூடிய சக்தி அவனுக்கு நீண்ட காலம் இருந்திருக்கின்றது என்பது புலப்படுகிறது.

மனதறிந்து, புராணத்திலோ இதிகாசத்திலோ நல்ல பாத்திரங்கள் துன்பங்களை வரவழைத்துக் கொண்டதில்லை. தானே வரும் துன்பங்களை, `அவனவன் கர்மா’ என்பார்கள்.

பகவானால் கூட அவற்றைத் தவிர்க்க முடியவில்லை.

மீண்டும் உதாரணத்திற்கு, இராமாயணத்தையும் பாரதத்தையும் தான் நாம் திறக்க வேண்டிருக்கும்.

ஆகவே, நாற்பது வயதை ஒரு `எல்லைக்கல்’ என்று வைத்து, நீ வாழ்க்கையை நடத்த வேண்டும்.

நாற்பது வரையிலே ஒலி எழும்பும் வீணைகள், நாற்பதுக்கு மேலேதான் எதிரொலியைக் கேட்கத் தொடங்குகின்றன.

செய்த நன்மை, தீமைகளின் எதிரொலியும், இப்போது தான் கேட்கத் தொடங்கும்.

இதுவரை அவற்றை அலட்சியப்படுத்தக்கூடிய ரத்தம் இருந்தது; இப்போது ரத்தத்தைவிட, எதிரொலி சக்தி வாய்ந்ததாகக் காட்சியளிக்கும்.

துன்பத்தின் பரிபூரண சக்தியும், இப்போது தலையைச் சுற்றி வட்டமிடத் தொடங்கும்.

மனைவி, மக்கள், பொறுப்பு, பொருளாதார நிலை அனைத்தையும் பற்றிய கவலை, இந்தப் பருவத்தில் ஆரம்பமாகும்.

இதுவரை வாழ்க்கையை ஒழுங்காக வாழாதவனைச் சுற்றி அவை பேய் போல் நின்று கூத்தடிக்கும்.

`ஐயோ! தாங்க முடியவில்லை!’ என்ற ஓலம் இப்போது தான் ஆரம்பமாகும்.

`இதுவரை எப்படியோ வாழ்ந்துவிட்டேன். தெரியாமல் வாழ்ந்து விட்டேன். மன்னித்துக்கொள். என் துன்பங்களுக்குப் பரிகாரம் கூறு!’ என்கிறாயா? நல்லது.

பாவங்களுக்கு மன்னிப்புத் தருகிற பாதிரியார் நானல்ல என்றாலும், ஓரளவுக்குப் பரிகாரம் சொல்லக்
கூடிய பக்குவம் எனக்கு உண்டு.

நாற்பது வயது, ஞானம் பிறக்கும் வயது.

மீண்டும் நானே உதாரணமாகிறேன்.

`என்ன நீ பெரிய மேதையா! உன்னையே உதாரணமாக்கிக் கொண்டு போகிறாய்?’ என்று கேட்கிறீர்களா!

நான் பன்னிரண்டு வயதில் இருந்தே உலகத்தைப் பார்த்திருக்கிறேன். ஆகவே நான் அறிவியல் மேதை இல்லை என்றாலும், அனுபவ மேதை.

இதுவரை நான் சொல்லி வந்த எல்லா வகைத் துன்பங்களையும், நான் அனுபவித்திருக்கிறேன்.

ரத்த வேகம் என்ன செய்யும் என்பதை நான் அறிவேன்.

கள்வனாக, காமுகனாக, நாத்திகனாக, வெறியனாக, கடன்காரனாகப் பலவகையான பின்னல்களை நானே பின்னி, நானே அவிழ்க்க முயன்றிருக்கிறேன்.

உறவு, பகை இரண்டாலும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறேன்.

உலகத்தைப் பக்கத்தில் இருந்தும் பார்த்திருக்கிறேன்; தூரதிருஷ்டியிலும் கண்டிருக்கிறேன்.

பல நாள் பட்டினியுடன் கிடந்திருக்கிறேன்; வசதி வந்தபோது கருங்குரங்கில் இருந்து பச்சைப்பாம்பு வரை சாப்பிட்டும் பார்த்திருக்கிறேன்.

நான் `மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜெக்ட்ஸ்’ இல்லை என்றாலும், எத்தனை வியாதிகள் உண்டு, எத்தனை மருந்துகள் உண்டு என்பது எனக்குத் தெரியும்.

பெண்மையில் எத்தனை வகை உண்டு; எத்தனை குணம் உண்டு என்பதை நான் அறிவேன்.

துன்பங்களில் எத்தனை ரகம் உண்டு என்பதும் எனக்குப் புரியும்.

எனது நிலத்து விளைச்சலைக் கொண்டே, உனது பசியைத் தீர்க்க முயல்கிறேன்.

மூன்று வருஷங்களுக்கு முன், கவலைக்கு மருந்து என்று கருதிய நான் `பெதடின்’ போடத்தொடங்கினேன். அதைப் பற்றிப் பெருமையாக ஒரு கவிதையும் எழுதினேன்.

நாள் ஒன்றுக்கு 1200 மி.கி. பெதடின் போட்டேன்.

இருதய வியாதியால் துடிப்பவருக்கே 100 மில்லி கிராம் தான் போடுவார்கள். அந்த 100 மில்லி கிராமிலேயே அவர்கள் நான்கு நாட்கள் தூங்குவார்கள்.

நானோ 1200 மில்லி கிராம் பெதடினோடு, ஏராளமான மதுவும் அருந்துவேன்.

அதே நேரத்தில் ஈரலைக் காப்பாற்றிக் கொள்ள மாத்திரைகளும் சாப்பிடுவேன்.

என் குழந்தைகள் எல்லாம் பெருந்தலைவர் காமராஜ் அவர்களிடம் போய் அழுதன.

அப்பொழுது முதலமைச்சராக இருந்த என் அருமை நண்பர் கருணாநிதியிடம் போய் அழுதன.

காமராஜ் என்னைக் கூப்பிட்டு, `இந்த சனியனை நிறுத்தி விடேன்!’ என்றார்.

கருணாநிதியோ, `எங்களைச் சீக்கிரமாக அழ வைக்க விரும்புகிறாயா?’ என்று கேட்டார்.

பல திசைகளில் இருந்தும் பலர் புத்திமதி சொல்லத் தலைப்பட்டார்கள்.

`பல பேருக்குப் புத்தி சொல்லக் கூடிய ஒருவனுக்கு இது தேவைதானா?’ என்று ஒருநாள் நானே யோசித்தேன்.

பெதடின் பழகிக் கொண்டவர்களை, `அடிமைகள்’ என்பார்கள்.

மதுப் பழக்கத்தை யாரும் விட முடியும். ஆனால், இந்தப் பழக்கத்தை எவனும், தானே விட்டதாக உலகத்தில் வரலாறே கிடையாது.

அதிலேயும் ஒன்றரை வருஷ காலம் அதற்கு நான் அடிமையாகவே ஆகியிருந்தேன்.

திடீரென்று ஒரு நாள் ஏதோ எனக்குத் தோன்றிற்று. அது 1975-ஆம் ஆண்டு, ஏப்ரல் 29-ம் தேதி.

நேரே சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள திரு.நாகிரெட்டியார் அவர்களின் ஹாஸ்பிட்டலுக்குப் போனேன்.

நாகிரெட்டியாரின் மகளை மணந்த மாப்பிள்ளை, அந்த ஹாஸ்பிடலின் தலைமை டாக்டராக இருந்தார்.

பெத்தடினை விட்டுவிட விரும்புவதாக அவரிடம் சொன்னேன்.

`உண்மையிலேயா?’ என்று கேட்டார்.

அவர் மீது தவறில்லை. அப்படி வந்தவர்களில் சிலர் அர்த்த ராத்திரியிலேயே ஓடி விட்டார்களாம்.

நானோ, `நிச்சயமாக விட விரும்புகிறேன். எனக்குக் குழந்தைகள் அதிகம். எல்லாக் குழந்தைகளும் அழுகின்றன. இதனால் உடம்பில் என்ன எதிரொலி வந்தாலும் பரவாயில்லை!’ என்றேன்.

வசதிகள் மிக்க விஜயா ஹாஸ்பிடலில், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை விடச் சிறந்த அறைகள் உண்டு.

அவற்றிலே ஒரு அறையை அவர் எனக்காக ஏற்பாடு செய்தார்.

`இதோ பாருங்கள், உங்கள் ஆசை எனக்குப் புரிகிறது. ஆனால் இந்த அடிமைத்தனம் சீக்கிரம் விலகி விடாது. இன்றோ நாளையோ உங்களுக்கு பெதடின் போட்டுக் கொள்ள வேண்டும் போல் தோன்றினால் என்னிடம் கேளுங்கள்; வெளியிலே போகாதீர்கள்!’ என்றார்.

அன்று மாலையே என்னால் தாங்க முடியவில்லை. `ஒன்றே ஒன்று போடுங்கள்’ என்று கெஞ்சினேன். போட்டார்.

இரவிலே மறுபடியும் கேட்டேன்; மறுத்து விட்டார். அதிகாலையில் ஒரு டாக்ஸி வைத்து கொண்டு வெளியே போய் ஒரு டாக்டரிடம் போட்டுக் கொண்டு வந்துவிட்டேன்.

அவருக்கு நம்பிக்கை போய்விட்டது.

எனக்கே என்மீது கோபம் வந்தது.

`சீ! என்ன எழுதி என்ன பயன்? இந்த யோக்கியதை கூட நமக்கு இல்லாமல் போய்விட்டதே’ என்று அழுகை அழுகையாக வந்தது.

அப்போது என் பேரக் குழந்தைகள் எல்லாம் என்னைப் பார்க்க வந்தார்கள். எனக்கொரு வைராக்கியம் பிறந்தது.

மென்டல் ஹாஸ்பிடல் டாக்டர் ராமச்சந்திரன் வரவழைக்கப்பட்டார்.

அவர் என்னைக் காலைப் பலகாரம் சாப்பிட வைத்து வாலியம்-5 மாத்திரையில் இரண்டும், லிபிரியம்-10 மாத்திரையில் இரண்டும், `பைசெப்டோன்’ மாத்திரையும் கொடுத்தார்.

நன்றாகத் தூங்கினேன்.

மதிய உணவிற்குப் பிறகும் அதே மாத்திரைகள்; இரவிலும் அதே மாத்திரைகள்.

இப்படி ஏழு நாட்களுக்கு பிரக்ஞை இல்லாமல் தூங்கினேன்.

பிறகு எதிரொலிகள் ஆரம்பமாயின.

கடுமையான கால்-கை வலி; திடீர் என்று சர்க்கரைக் குறைவு; ரத்தக் கொதிப்பு ஏறுதல்-இறங்குதல்; நான் பேசுவது எனக்கே புரியாத நிலை; எழுத முடியாத மயக்கம். இதனை (With Reaction) என்பார்கள்.

ஒரு வருஷ காலம் படாத பாடுபட்ட பிற்பாடு, இப்போது ஓரளவுக்கு நான் பழைய மனிதனாகி விட்டேன்.

அதுவும் ஓரளவுக்குத் தான்.

இடையில் எத்தனையோ முறை `பெதடின்’ தாகம் வந்தது. கட்டுப்பாடாக ஒதுக்கி விட்டேன்.

இது என்னுடைய சக்தியால் அல்ல; பகவான் அருளால்.

உலகத்தில் உள்ள எந்த நன்மை தீமையைப் பற்றி நீ சொன்னாலும், அதில் ஓரளவாவது எனக்கு அனுபவம் உண்டு.

எப்போதும் நான் வெற்றியில் குதிப்பதில்லை; இப்போதும் அப்படித்தான்.

ஆனால், முன்பெல்லாம் துன்பங்கள் என்னை சுட்டெரிக்கும்; பகவான் அருளால் இப்போது அவை என்னை நெருங்க முடிவதில்லை. மிகச் சுலபமாக அவற்றை அலட்சியப்படுத்த முடிகிறது.

கடந்த காலங்களில் ஒழுங்காக வாழவில்லையே என்று வருந்துகிற, நாற்பது வயதுக்கு மேற்பட்ட நண்பர்களுக்கு என் யோசனை இதுதான்:

அலட்சியப் படுத்துங்கள்! அலட்சியப் படுத்துங்கள்!

மனித விளையாட்டில் கடைசி விளையாட்டு மரணம்! அதற்குத் தப்பியவன் எவனுமில்லை.

ஆகவே, அழுவதற்கு நேரம் ஒதுக்குவது வீண் வேலை.

இனி நாம் புதுப்பருவம் எடுக்கப் போவது, அடுத்த ஜென்மத்தில் தான்.

ஆகவே, இனி, ஜாக்கிரதையாகப் போகும் இளைஞர்களைப் பார்த்து ஏங்குவதில் பயனில்லை.

`இடுக்கண் வருங்கால் நகுக.’

தொல்லைகள் அதிகமாகும் போது கிராமத்துப் பெரியவர்களைப் போல், `எல்லாம் பகவான் செயல்’ என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

மேலும் மேலும் தொல்லைகள் வந்தால், `எவ்வளவு தூரம் நடத்துகிறானோ, நடத்தட்டும்,’ என்று அமைதியாகச் சொல்லுங்கள்.

மாரடைப்பு வருகிற மாதிரிச் சிந்திக்காதீர்கள்.

மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.

ஆற்றாமை என்று யார் சொன்னாலும் பரவாயில்லை; துரோகிகளைக்கூட மன்னித்து விடுங்கள்.

அது நம் கருணையினால் அல்ல; நாமும் மகாத்மா ஆவதற்கல்ல; நம் இதயத்தைக் காப்பாற்றிக் கொள்ள.

எனக்கு எப்போதுமே பெருங்கோபம் வருவது சாப்பாட்டிலே தான்.

நான் விரும்பியவாறு உணவு அமையவில்லையென்றால் அதை அப்படியே தூக்கி சமைத்தவரின் முகத்திலே கொட்டிவிடுவேன்.

இப்போதெல்லாம் பிடிக்காததை ஒதுக்கி விட்டுக் கண்களை மூடிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்கிறேன்.

துன்பம் வரும்; அது வரத்தான் செய்யும். இறைவனின் இயக்கத்தில் அது சரிபாதி.

பகல் என்றால் இரவு உண்டு.

வசந்தத்தின் பிறகு கோடை.

பூமியை பகவான் ஒரு முறை காயப்போடுகிறான்; ஒரு முறை வளப்படுத்துகிறான்.

மரத்தில் இருந்து இலைகளை உதிர்க்கிறான்; தழைக்க வைக்கிறான்.

ஒரு ஜீவனுக்குப் பிறப்பைக் கொடுக்கிறான்; ஒரு ஜீவனை எடுத்துக் கொள்கிறான்.

அவனது பேரேட்டிலே வரவுக்குத் தக்கபடி செலவிருக்கிறது.

ஏழையின் கவலையைவிடப் பணக்காரனின் கவலை அதிகம்.

அடுத்தவன் நன்றாக இருப்பதாக எண்ணுவது வெறும் மயக்கம்.

`தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை

அம்மா பெரிதென்று அகமகிழ்க!’

`உனக்குக் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு.

என் தாயார் அடிக்கடி சொல்லுவார்கள், `நம்மிலும் தாழ்ந்து நாலாயிரம் பதினாயிரம்’ என்று.

காலுக்குச் செருப்பில்லாதவர்கள், கால் இல்லாதவர்
களைப் பார்த்து ஆறுதலடையுங்கள்.

தலைக்கு எண்ணெய் இல்லாதவர்கள், முடி இல்லாதவர்களைப் பார்த்து ஆறுதலடையுங்கள்.

யானை மீது ஏறியவன் கீழே விழுவதைப் பார்த்து, நமக்கு யானை வேண்டாம் என்று முடிவு கட்டுங்கள்.

`உங்கள் கையில் இருந்து ஒரு விரலை எடுக்க வேண்டும்” என்று டாக்டர் சொன்னால், ஏற்கெனவே கால் எடுக்கப்பட்டவனைப் பார்த்து நிம்மதியடையுங்கள்.

`துன்பங்களிலெல்லாம் குறைந்தபட்சத் துன்பம் நமக்கு வந்ததுதான்’ என்று கருதினால், எந்தத் துன்பமும் துன்பமாக இருக்காது.

நாற்பது வயதுக்கு மேற்பட்ட பருவம்தான், மனிதன் உடம்பை அலட்டிக் கொள்ளும் பருவம்.

உடம்பிலே காற்றுப் பட்டாலும், கணை பாய்கிறது போல் தோன்றும் பருவம்.

அலோபதி மருத்துவத்தில் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ள வியாதிகள் எல்லாம், இந்த வயதுக்கு மேலே தான் வருகின்றன.

காரணம், உடம்பு மட்டுமல்ல; மனமும் கூட.

அந்த மனத்தை – ஐம்புலன்களை, ஆத்மாவில் அடக்கச் சொன்னான் பகவான் கீதையிலே.

இன்பம்-துன்பம், இருட்டு-வெளிச்சம் இவற்றைச் சமமாக நோக்கச் சொன்னான்.

`இப்படி நோக்குகிறவர்கள் இவ்வுலகிலும், அவ்வுலகிலும் இணையற்றிருப்பார்கள்` என்றான்.

மகாகவி பாரதியின் பாடல் ஒன்று எனக்குத் தெளிவான வழி காட்டிற்று.

அது இது:

சென்றதினி மீளாது மூடரே நீர்

சென்றதையே எந்நாளும் சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில்வீழ்ந்து

குமையாதீர்…

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்!

ஒரு மறுமொழி

  1. `எல்லாம் பகவான் செயல்’ என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

    மேலும் மேலும் தொல்லைகள் வந்தால், `எவ்வளவு தூரம் நடத்துகிறானோ, நடத்தட்டும்,’ …… nice

    Very good …..
    Cheran s