பட்டினத்தார் பாடலில் பற்றி எரிந்த கழு மரம்

பத்ரகிரியார் கூறுகிறார்:

சுவாமிகள் உரைத்த மொழி, என்னை ஆத்திரக்காரனாக்கவில்லை; சிந்தனையாளனாக்கிற்று.
அரண்மனைக்குச் சென்றேன். இளங்காற்றுத் தாலாட்டும் மேன்மாடத்தில் உலாத்தினேன்.
`எந்தப் பெண்ணுக்கும் இரண்டு மனம்; சக்தி தத்துவத்தைக் கூட அது விட்டதில்லையாமே!’

நான் அப்படி நினைக்கவில்லை.

எனது பட்டத்து ராணி ஒரு தெய்வத் திருமகள். அவளுக்கு ஒரே மனம். அது முற்றிலும் என் மீதே!

இரவுக்கு ஒரே நிலவு; பகலுக்கு ஒரே ஆதவன்.

எனக்கு அவள்; அவளுக்கு நான்!

நிலா முற்றத்துச் சாய்வு மஞ்சத்தில் அமர்ந்தேன்.

காற்சலங்கை ஒலி கேட்டது. அது என் தேவதை வரும் அறிவிப்பு!

தோள் தொட்டது தென்றல்; அது அவளது கைவிரல்!

பாடிற்று ஒரு குயில்; அது அவள் பேசிய மொழி.

மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன். அவள் முகத்தையே உற்று நோக்கினேன்.

களங்கம் நீங்கிய பூரண சந்திரனாயிற்றே இது! இதற்கா களங்கம்? நான் நம்ப மாட்டேன்.

`பிரபு’ என்றாள் ராணி.

`தேவி!’ என்றேன்.

`சிருங்கார சதகம் பாடும் நேரத்தில், சிந்தனைக்கு வேலை என்ன?’ என்றாள்.

`சிருங்காரலயத்தில், சோகம் இழைவது உண்டா?’ என்றேன்.

`மன மயக்கம் காதல்; மதி மயக்கம் சோகம்’ என்றாள் அவள்.

`என் மதி மயங்குகிறது!’ என்றேன்.

அவள் தனது மெல்லிய பஞ்சு போன்ற இதழ்களால் என் இதழ்களில் முத்தமிட்டாள்.

என் மதி மயக்கம் நீங்கி, மன மயக்கம் அதிகரித்து விட்டது.

எனது தேவி பாரம்பரிய ராஜகுமாரி அல்ல. தாய் ஒரு நாடு; தந்தை ஒரு நாடு; அவர்கள் வாழ்ந்தது உஜ்ஜைனி. பத்து வயது முதல் நான் அவளை அறிவேன். பதினாறாவது வயதில் மணம் முடித்தேன்.

சிருங்காரத்தைப் பற்றி எனக்குச் சில விஷயங்கள் தெரியும்.

ஒரு பெண் சுகமானவளா இல்லையா என்பதை, அவளை ஸ்பரிசிக்கும் போதே நான் கண்டு கொள்வேன்.

முதல் நாளிலேயே அவளை நான் தீண்டிய போது என்னை மெய்மறக்கச் செய்தது.

பல பெண்ணைச் சந்தித்த ஒருவன்தான் சரியான பெண்ணை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

வகை வகையான பெண்ணை ரசித்தது உண்டு. ஆனால், இவ்வளவு மகிழ்ச்சியை எவளிடமும் பெற்றதில்லை. அதனால் இவளை `ராஜ மோகினி’ என்று அழைப்பது பழக்கம்.

அவள் என்னை முத்தமிட்டதும், தெள்ளிய தடாகத்தில் சுவாமிகள் கிளப்பிவிட்டிருந்த அலை ஓய்ந்து விட்டது.

நான் அவளது கழுத்தில் முத்தமிட்டேன்.

பழங்கதையானதால், பச்சையாகச் சொல்கிறேன். அவளது கன்னத்தை என் உதட்டுக்குள் இழுத்துக் கொண்டேன்.

`என் தெய்வமே…’ என்றாள்.

மதுவினை ஊற்றிக் கொடுத்தாள். அதிகம் பருகினேன். பருகப்பருக அவளது பிணைப்பு அதிகமாயிற்று. பிறகென்ன உள்ளத்து ரகசியம் வெளிவரத் தொடங்கியது.

`உனக்கு இரண்டு மனம் என்று ஒரு ஆண்டி சொன்னான்’ என்றேன்.

`யாரவன்?’ என்றாள். அழுதாள்; அரற்றினாள்.

`உங்களைத் தவிர ஒருவரை நான் மனதாலும் நினைத்திருந்தால், அந்த நெருப்பு என்னைத் தீண்டட்டும்’ என்றாள்.

காம மயக்கத்தில் கண்டுண்ட ஒருவன் அந்த இன்பத்துக்குக் காரணமானவள் என்ன சொன்னாலும் கேட்பானல்லவா? இனந் தெரியாத விழுக்காடு காமம் ஒன்றுதானல்லவா?

கள்ளருந்துவதில் உள்ள ஒரே துயரம், நாம் எதை நினைக்கிறோமோ, அதை அது வளர்த்துவிடும்.

என் மனைவிக்கு இரண்டு மனம் என்று சொன்ன அந்த ஆண்டியை, என்னவோ செய்ய வேண்டும் போல் எனக்குத் தோன்றிற்று.

பொழுது விடியும் வரையில், போக அமளியில் அவளோடு விளையாடினேன்.

பின்னாளில் மகா நிர்வாணத்திற்குப் பக்குவப்பட்ட நான், அன்று அவளது முழு நிர்வாணத்தில் மோக வசப்பட்டேன்.

என்றைக்கும் இல்லாத மகிழ்ச்சியை அன்றைக்கு அவள் எனக்குத் தந்தாள்.

காலையில், எனக்குக் கள் வெறியும், காம வெறியும் தணிந்தன. தூக்க மயக்கத்தில் சாய்ந்து கிடந்தேன். ஆனால், அவளோ ஏதோ ஒரு வெறியில் உந்தப்பட்டவள் போல் காட்சியளித்தாள்.

குளித்துவிட்டு வந்தவுடனேயே அமைச்சரை அழைத்துக் கொண்டு சிறைச்சாலைக்குச் சென்றாள்.

போகட்டும்; என்ன வேண்டுமோ செய்யட்டும் என்று நான் பேசாமல் இருந்து விட்டேன்.

இனி, சுவாமிகள் சொல்வார்கள்.

பட்டினத்தார் கூறுகிறார்:

சிறைச்சாலை ஆனால், என்ன, அறச்சாலை ஆனால் என்ன?

செங்கதிர் முளைத்ததும் என் கடன் முடிந்தது. சிவனாரைத் தொழுவது என் பணி. அன்றும் அவ்வண்ணமே தொழுது கொண்டிருந்தேன்.

நான் ஒவ்வொரு வரியாகப் பாடப் பாட, பக்கத்து அறைக் கூடங்களில் இருந்த என் சீடர்கள், `போற்றி, போற்றி!’ என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

சலங்கை ஒலி கேட்டது! உமாதேவியார் வருகிறார்களா? நான் பாட்டை நிறுத்தவில்லை.

`ஏ ஆண்டி!’ என்றார்கள் அவர்கள்.

`நான் ஆண்டியைத்தான் பாடிக் கொண்டிருக்கிறேன்’ என்றேன்.

`ஆண்டி வேறு எதனைப் பாடுவான்?’ என்றார்கள்.

`அரசர்களும் அவன் முன்னால் ஆண்டிதான்’ என்றேன்.

`உன் நெற்றியில் உள்ள சாம்பல் போல் உன் உடம்பும் ஆகும்!’ என்றார்கள்.

`தங்கள் உடம்பு தங்கத்தால் ஆனதா!’ என்றேன்.

`சந்நியாசிக் கழுதைக்கு வாய்க்கொழுப்பா?’ என்றார்கள்.

`நானும் சம்சாரக் கழுதையாக இருந்தவன் தான்’ என்றேன்.

`யாரிடம் பேசுகிறாய் தெரியுமா…?’ என்றார்கள்.

`அந்த சிவபெருமானின் ரோமக் கால்களில் ஒன்று குதித்துக் கூத்தாடுகிறது,’ என்றேன்.

`நான் உஜ்ஜைனியின் பட்டத்து ராணி!’ என்றார்கள்.

`அந்த மாகாளியும் உங்களுக்கு அடுத்தபடிதானா?’ என்றேன்.

`நான் காளி ஆனால், காளி என் கைக்குழந்தையாவாள்’ என்றார்கள்.

`காளி கைக்குழந்தையானால் நான் தாயாகித் தாலாட்டுப் பாடுவேன்!’ என்றேன்.

`உனக்கு சக்தி இருந்தால், இந்தச் சிறைச்சாலையை உடைத்து வெளியே வா! பார்க்கலாம்..’

`நான் சித்தனல்ல தாயே! பக்தன், முக்தன்!’ என்றேன்.

`கையாலாகாத கழுதைக்குப் பேச்சென்ன பேச்சு?, ஆமாம், எனக்கு கூட இரண்டு மனது என்றாயாமே?’ என்றார்கள்.

`அந்த இறைவிக்கேகூட’ என்றேன்.

`என்னைவிட உயர்ந்த ஒருத்தியை உதாரணம் காட்டி விட்டதாக நினைப்போ?’ என்றார்கள்.

நான் சிரித்தேன்.

கிடைக்கக் கூடாதவனுக்குப் பதவி கிடைத்து விட்டால், அவனுக்கு வரக்கூடாத புத்தி எல்லாம் வந்து விடுகிறது.

ஆதிக்க வெறியால் அந்த அம்மையார் உலக மாதாவை அவமதித்தார்.

நான் ஒரே வரியில் சொன்னேன்:

`காற்றடிக்கும் போது துரும்பு, மலையை விட அதிக உயரத்தில் பறக்கக் கூடும். அதனால் துரும்பை விட மலை தாழ்ந்ததாகி விடாது’.

மகாராணியாருக்கு ஆத்திரம் அதிகமாகி விட்டது.

அவர்களே கைதட்டிக் காவலர்களை அழைத்துச் சொன்னார்கள்: `நாளை காலையில் சூரியோதயத்தில் இவனைக் கழுவிலே ஏற்றுங்கள்’ என்றார்கள்.

ஆணை பிறப்பித்தவுடன் அதிகாரி ஏன் நிற்கப் போகிறார்? அவர்கள் போய்விட்டார்கள்.

நான் கலங்கிவிடவில்லை.

ஏற்கெனவே செத்து விட்டதாக நினைக்கிற ஒருவனுக்கு எப்போது சாவு வந்தாலும் அது ஒரு சடங்கு என்று தானே நினைப்பான்? ஸ்தூலத்தில் என்ன இருக்கிறது? எல்லாம் ஆத்மாவிலே அடங்கி இருக்கிறது.

பாம்பு, சட்டை கழற்றுவது போல், ஆன்மா இந்தக் கூண்டை ஒரு நாள் கழற்றி விடுகிறது.

காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த ஒரு வணிக மகன் உடம்பு, உஜ்ஜைனியில் எரிக்கப்பட வேண்டும் என்பது அந்தக் காளத்திநாதன் அருளானால், நான் யாரை, எதைத் தடுக்க?

பக்கத்துக் கூடங்களில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த என் சீடர்கள் வாய்விட்டு அழுதார்கள்.

மரணத்தைப் பற்றி எவ்வளவு சொல்லி, நான் அவர்களைப் பக்குவப்படுத்தி இருந்தென்ன? அப்படியும் அவர்கள் அழுகிறார்கள்.

சிறு வயதில் நான், திருமால் கோயிலில் கேட்ட கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

அர்ஜுனனுக்கு பகவத் கீதையை முழுக்க முழுக்க உபதேசித்து விட்டு, ரதத்தின் மேற்குடையிலே போய் உட்கார்ந்து கொண்டானாம் கிருஷ்ணன். யுத்தம் நடந்ததாம். அர்ஜுனனின் மகன் அபிமன்யு அதிலே இறந்து விட்டானாம். அர்ஜுனன் புலம்பி அழுதானாம்.

அப்போது மேற் குடையில் இருந்து பத்துச் சொட்டுக் கண்ணீர் அர்ஜுனன் தலையிலே விழுந்ததாம்.

ஆம்; கண்ணனும் அழுது கொண்டிருந்தானாம்.

உடனே அர்ஜுனன் கேட்டானாம், `கண்ணா! நான் தான் மகனுக்காக அழுகிறேன்; மரணத்தைப் பற்றிக் கவலைப்படாத நீ ஏன் அழுகிறாய்?’ என்று.

கண்ணன் சொன்னானாம். `இல்லையடா அர்ஜுனா! மனத்தைத் திடமாக வைத்துக் கொள்வது பற்றி உனக்கு இவ்வளவு நேரம் கீதை உபதேசித்தேனே, அது எவ்வளவு சீக்கிரம் வீணாகிவிட்டது!’ என்று.

அது போலவே என் சீடர்கள் இருந்தார்கள்.

நாளை கழுவிலேற்றப்பட வேண்டியவன் என்ற முறையில் ஒவ்வொரு காவலரும் மெதுமெதுவாக என்னைப் பார்த்து விட்டுப் போனார்கள்.

நான் ஆளுக்குக் கொஞ்சம் திருநீறு கொடுத்தேன்.

மறுநாள் பொழுது புலர்ந்தது.

மகாராணியின் மேற்பார்வையில் என்னைக் கழுவிலேற்றும் பணி துவங்கியது.

மகாராஜா என்ன ஆனார், என்று எனக்குத் தெரியாது. பின்னாளில் அவர் கூறியதிலிருந்து அவர் முழுக்க மதுவில் ஆழ்ந்து கிடந்ததையும், அவருக்கு மகிழ்ச்சி ஊட்ட மகாராணியாரே நான்கு பெண்களை ஏற்பாடு செய்திருந்ததையும் நான் தெரிந்து கொண்டேன்.

காவலர்கள் என்னைத் தூக்கி கழுவிலே உட்கார வைத்தபோது நான் பாடினேன்:

என்செய லாவதியாதொன்று மில்லை; இனித்தெய்வமே
உன்செய லெயென் றுணரப் பெற்றேன்; இந்த வூனெடுத்த
பின்செய்த தீவினையாதொன்று மில்லை பிறப்பதற்கு
முன்செய்த தீவினை யோலிங்ங னேவந்து மூண்டதுவே!

பாடி முடித்தபோது நான் சுய நினைவில் இல்லை.

விழித்துப் பார்த்த போது, சிறைச்சாலையில் படுக்க வைக்கப்பட்டிருந்தேன்.

இடையில் கழுமரம் தீப்பற்றி எரிந்ததாகவும், காவலர்கள் மயங்கி மயங்கி விழுந்ததாகவும், மகாராணியாரை ஒரு நாகப் பாம்பு துரத்தியதாகவும் என்னிடம் சொன்னார்கள்.

இது என்ன லீலையோ நானறியேன்!