நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!

E_1370597416

பெண்ணாகப்பட்டவர்கள், இன்றைக்கும் பெரும்பாலோர் சுடுகாட்டின் சூழலை தாங்கக்கூடிய பக்குவம் இல்லாதவர்களாகத்தான் உள்ளனர், அங்கு எரியூட்டப்படும் அல்லது புதைக்கப்படும் பிணத்தை பார்க்கும் சக்தி கொண்டவர்கள் கிடையாது. இது போன்ற காரணங்களினால், எவ்வளவுதான் தனக்கு பிரியப்பட்ட கணவர், தந்தை, தனயன் என்ற உறவாக இருந்தாலும், மரணம் என்ற பிரிவு வரும்போது, வீட்டு வாசலோடு நின்று, இறந்த உறவுகளை வழியனுப்பி வைக்கவேண்டிய நிலையில்தான் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில், இரவு நேரங்களில் வரும் பிணத்தைக்கூட எரிக்கும், புதைக்கும் பக்குவத்துடன் ஒரு பெண் இருக்கிறார் என்றால் ஆச்சரியம்தானே.
ஆச்சரியமூட்டும் அந்த பெண்ணின் பெயர் வைரமணி, கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் வெட்டியான்(ள்)வேலை பார்த்து வருகிறார்.
இரவு பத்து மணியளவில் சுடுகாட்டில் எரிந்து கொண்டு இருக்கும் ஒரு பிணத்தை, சரிவர எரிகிறதா என்று அருகே இருந்து பார்த்தபடியும், அவ்வப்போது நெருப்பை தூண்டிவிட்டபடியும் தன்னந்தனியாக நிற்கிறார் .
பிணத்தை எரித்து முடித்த பிறகே பேசத் துவங்கினார்:
என் அப்பா கருப்பசாமிதான் இங்கு வெட்டியான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு எழுதப்படிக்க தெரியாது. ரொம்ப சின்ன வயசிலேயே எனக்கு கல்யாணமாகிருச்சு. மூணு குழந்தைகள் இருக்காங்க. வீட்டுக்காரருக்கு போதுமான வருமானம் இல்லை. இந்த நிலையில் திடீர்ன்னு அப்பா இறந்துட்டாரு. அவர் பார்த்த வெட்டியான் வேலையை எடுத்துச் செய்ய யாரும் முன்வரலை. குடும்ப சுமையை குறைச்சுக்கலாம், பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கலாம் என்ற எண்ணத்துல இந்த வெட்டியான் வேலையை நான் எடுத்துக்கிட்டேன்.
அப்பா பக்கத்துலயே இருந்து இந்த வேலைய பல நாள் பார்த்ததுனால எனக்கு எந்த பயமோ, தயக்கமோ இல்லை; இந்த பேய், பிசாசு மேலேயும் நம்பிக்கை இல்லை. உண்மைய சொல்லப்போனா இந்த சுடுகாட்டை, சிவன் வாசம் செய்யும் கோவிலாத்தான் நான் பார்க்கிறேன். இந்த தொழிலுக்கு வந்து இப்ப பதினைந்து வருஷமாகப்போகுது.
பிணத்தை புதைக்கணும்னாலும் சரி, எரிக்கணும்னாலும் சரி, இரண்டாயிரம் ரூபாய் கூலி வாங்குகிறேன். இதுல விறகு மற்றும் உதவியாள் கூலி போக, எனக்கு ஐநூறு ரூபாய் மிஞ்சுனா அதிகம்.
ஒரு பிணத்தை எரிக்க அல்லது புதைக்க வேண்டு மானாலும், ஆறு மணி நேரம் பிடிக்கும். "சாயந்திரம் பிணத்தை கொண்டு வர்றோம், எரிக்கணும், எல்லா ஏற்பாடும் செஞ்சு வையுங்க…’ என்று சொல்லி, முன்பணம் கொடுத்து செல்வார்கள், நள்ளிரவு பிணத்தை கொண்டு வந்து, கொள்ளி வச்சுட்டு போயிடுவாங்க. நான் தனியாளா நின்னு எரிச்சு முடிப்பேன்.
செத்தது கோடீசுவரராக இருப்பர்… ஆனா, எனக்கு கொடுக்க வேண்டிய கூலியை கொடுக்க ரொம்பவே பேரம் பேசுவாங்க. "கொடுக்கிறத கொடுங்கப்பான்னு கேட்டு வாங்கிப்பேன். குழந்தைகள் பிணத்தை பார்க்கும் போது மட்டும் மனசு வேதனையா இருக்கும்; மற்றபடி பிணங்களை பார்த்து, பார்த்து பழகிப் போச்சு.
பிணத்தை எரிக்கும் போது, அதன் உடலில் சிறு நூல் கயிறு கூட இருக்காது. ஆனாலும், அந்த பிணத்தின் கையில இருந்து கழட்டின கால் பவுன் மோதிரத்தை யாரு எடுத்துக்கிறதுன்னு சுடுகாட்டிலேயே சண்டைபோட்டு, மண்டைய ஒடைச்சுக்குவாங்க. போகும் போது எதையும் கொண்டு போக முடியாதுங்கிறத கண் எதிரே பார்த்துக்கிட்டே, இந்த ஜனங்க கால் பவுனுக்கு சண்டை போடுறத பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கும்.
உலகம் ரொம்ப அவசரமாயிடுச்சு. இப்ப யாருக்கும் ஆற அமர சுடுகாட்டில் நின்று பிணத்தை எரிக்கவோ, புதைக்கவோ பொறுமையில்லை, அதுனால, மின் மயானத்திற்கு போய் பத்து நிமிடத்துல வேலையை முடிக்கத்தான் விரும்புறாங்க. இதன் காரணமா இப்ப எனக்கு கொஞ்சம் தொழில், "டல்’ தாங்க…மாதத்திற்கு நாலோ, ஐந்தோ பிணங்கள் வர்றதே அதிகம், என்று கூறிய வைரமணியை, இரண்டு விஷயத்திற்காக பாராட்டியே ஆக வேண்டும்.
ஒன்று, ஆதரவில்லாமல் அனாதையாக இறந்து போனவர்களின் பிணங்களை, கூலி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பணத்திற்கு முக்கியத்துவம் தராமல், இறந்து போன பிணத்திற்கு முக்கியத்துவம் தந்து, உறவினர்கள் செய்வது போல காரியம் எல்லாம் செய்து, உரிய மரியாதையுடன் பிணத்தை புதைக்கிறார்.
இரண்டாவதாக, "குழந்தைகளை நன்றாக படிக்கவைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தொழிலை செய்து வருகிறார், இருந்தாலும், இதற்கென நிர்ணயம் செய்த தொகையைத் தவிர கூடுதலாக வாங்குவதில்லை. மேலும், "உழைக்காமல் மற்றவர் பணத்தை உதவியாக பெறுவதில் விருப்பமில்லை, ஆகவே, என்னைப்பற்றி எழுதுங்க; ஆனா, யாரும் பண உதவி செய்யவேணாம்ன்னு எழுதுங்க…’ என்று கூறி முடித்தார், இந்த வித்தியாசமான தன்னம்பிக்கை மனுஷி.

2 responses

  1. intha penmanikku enathu nenjarntha vanakkangal.kondu vanthathu ethuvum illai,kondu povathum ethuvum illai, idayil naam yen ippadi irukkirom endru enna thondrugirathu.thank yoy.

  2. வித்தியாசமான, தைரியமான, தன்மானமுள்ள பெண்! பெயர் பொருத்தம் அருமை.