தொகுப்பு

Archive for the ‘கிருபானந்த வாரியார்’ Category

கிருபானந்த வாரியார்- பக்திக்கு வேண்டாம் பணம்

நவம்பர் 30, 2009 vayal மறுமொழியவும்

ஒரு பறவை வானில் பறக்க வேண்டுமானால் அதற்கு இரண்டு இறக்கைகள் வேண்டும். அதுபோல இறைவழிபாட்டிற்கு அன்பும், ஆச்சாரமும் வேண்டும். அன்பில்லாத ஒழுக்கமோ அல்லது ஒழுக்கமில்லாத அன்போ பயனற்றதாகும்.
கண்ணால் காணமுடியாததால் கடவுள் இல்லை என்று கூறக்கூடாது. இந்த உடம்பிலேயுள்ள உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? உயிரைப் பார்க்க முடியாததால் நாங்கள் உயிரில்லாதவர்கள் என்று கூறினால் உலகம் சிரிக்குமல்லவா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் தெய்வமும் உறைந்திருக்கின்றன. ஆகவே, கடவுள் உயிர்கள் தோறும் உறைகின்றார். எவ்வுயிரும் இறைவன் சன்னிதியே. அதனால், எல்லா உயிர்களுக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மை கடவுளுக்குச் செய்யும் நன்மையாகும்.
கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்காகும். ஒவ்வொரு யுகத்திலும் இறைவனை அடையும் வழிகள் வேறுவேறாகும். கிருதயுகத்தில்ஞானத்தினாலும், திரேதாயுகத்தில் தானத்தினாலும், துவாபரயுகத்தில் யாகத்தினாலும், கலியுகத்தில் பக்தியினாலும் முக்தி பெறலாம். பக்தி செய்ய பணச்செலவு செய்ய வேண்டியதில்லை. இறைவனின் திருநாமத்தை அன்போடு அனுதினமும் உச்சரித்தால் போதும்.

கிருபானந்த வாரியார்- லட்சுமி கடாட்சம் கிடைக்க வழி

நவம்பர் 29, 2009 vayal மறுமொழியவும்

கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது எவ்வளவு பெரிய பாவமோ, அத்தனை பெரிய பாவம் இறைவனை நாள்தோறும் வணங்காததும் ஆகும். அதனால் தான் “என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றார் அப்பர். இறைவன் தந்த உடம்பினால் அவனை வழிபடுவதை ” அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்கிறார் மாணிக்கவாசகர்.

* பல இழைகள் ஒன்றுபட்டுத் திரித்த வடக்கயிற்றைக் கொண்டு பெரிய தேரை இழுத்து விடலாம். ஆனால், தனி இழையான துரும்பினைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஒரே சிந்தனையுடன் பல அன்பர்கள் கோவிலில் கூட்டு வழிபாடு செய்யும் போது இறைவனின் திருவருளை உறுதியாகப் பெற முடியும். பல காலமாக கணக்கு வழக்கில்லாமல் பிறவிகளை எடுத்து வருகின்ற நாம் இறைவனை உள்ளத்தூய்மையுடன் உருகி வழிபட்டு நாளும் அர்ச்சித்து வந்தால் நம் பிறவிநோய் தீரும். நம் வீட்டில் அனைவரும் இயன்ற வரையில் நாள்வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும் இல்லங்களில் குடும்ப ஒற்றுமை சிறந்து விளங்கும். தெய்வஅருளும், லட்சுமி கடாட்சமும் நிறைந்து இருக்கும். நீராடி தூய ஆடை அணிந்து நல்ல சிந்தனையுடன் ஒழுக்கநெறியில் கோவில்களுக்குச் செல்ல வேண்டும். கோவிலில் இருக்கும் நேரத்தில் மனம் ஒருமுகப்பட்ட நிலையில் இறைசிந்தனையுடன் இருப்பது மிக அவசியம்.

கிருபானந்த வாரியார்- அமைதி உங்கள் மனைவி

நவம்பர் 28, 2009 vayal மறுமொழியவும்

*சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தருமம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், அமைதி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்கள் மட்டுமே நமக்கு உகந்த உற வினர்கள் ஆவர்.

*விடாது கடைந்தால் பாலிலிருந்து வெண் ணெய் வெளிப்படும். அதுபோல, இடைய றாத தியானத்தாலும், வழிபாட்டாலும் இறைவன் நம் உள்ளத்தாமரையில் வெளிப்படுவான்.

*தெரியாத ஒருவனுக்கு ஒரு விஷயத்தை தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு அந்த விஷயத்தின் நுட்பங்களைக்கூறி மேலும் தெளிவுபடுத்தலாம். ஆனால், இது நல்லது இது கெட்டது என்று அறியாதவனைச் சீர்திருத்த ஆண்டவனாலும் முடியாது.

*சந்திரன் இரவுப் பொழுதைப் பிரகாசிக்கச் செய்கிறது. சூரி யன் பகல் பொழுதினைப் பிரகாசிக்கச் செய்கிறது. ஒருவன் செய்த தருமம் மூன்று உலகங்களிலும் பிரகாசிக்கச் செய்யும். நல்ல பிள்ளை, பிறந்த குடும்பத்தை பிரகாசிக்கச் செய்கிறான்.

*ஆறுதரம் பூமியை வலம் வருவதாலும், பத்தாயிரம் தடவை கங்கையில் குளிப்பதாலும், பலநூறு முறை சேதுக்கரையில் தீர்த்தமாடுவதாலும் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்திப்பூர்வமாக ஒரே ஒருதரம் வணங்கினாலே கிடைத்து விடும்.

*பசுக்கள், வேதங்கள், பதிவிரதைகள், சத்தியசீலர்கள், பற்றற்ற ஞானிகள், தருமசீலர்கள் இவர்களாலேயே உலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது

கிருபானந்த வாரியார்- கடவுளை எளிமையாக வழிபடுங்கள்

நவம்பர் 27, 2009 vayal மறுமொழியவும்

உன்னை யாராவது புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. அதேபோல், உன்னை இகழும் போது கவலையும் கொள்ளாதே.
புகழையும், இகழையும் சமமாகக் கருதுபவனே மனஅமைதியுடன் வாழ முடியும். ஆண்டவனை வழிபடுவதைக் காட்டிலும், அடியாரை வழிபடுவது சிறந்தது. ஆண்டவனை வழிபட்டால் ஒரு மடங்கு பலன். அடியாரை வழிபடுவோருக்கு இருமடங்கு பலன். தாய், தந்தையரின் பழக்கம் தான் பிள்ளைகளிடத்தில் உண்டாகும். ஆகவே, நல்ல பழக்கவழக்கங்களைப் பிள்ளைகளிடத்தில் உண்டாக்க தாயும், தந்தையும் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.
நாம் செய்த செயல்களின் விளைவு நம்மை வந்து சேரும். நல்வினையும், தீவினையும் வயலில் விதைத்த விதைபோல, பலமடங்கு பெருகி நம்மையே வந்தடையும். இளகிய தங்கத்தில் ரத்தினக்கல் பதியும். அதுபோல,
இறைவனை மனமுருக வழிபட்டால் உருகிய நமது உள்ளத்தில் கடவுள் ஒன்றி விடுவார். எங்கும் நிறைந்த இறைவனை எளிமையாகவே வழிபடுங்கள். சாதாரணநீரும், பூவும் கொண்டு இறைவனின் திருப்பாதங்களை பூஜியுங்கள். அவரை ஆடம்பரமாக பூஜிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அன்பையும், ஒழுக்கத்தையும் மட்டுமே ஆண்டவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்

கிருபானந்த வாரியார்- பேசுவதால் பயனேதும் இல்லை

நவம்பர் 24, 2009 vayal மறுமொழியவும்

<img src="” alt=”" />

* வயலில் தூவப்படும் சில விதைகளே, பல ஆயிரம் மடங்காக பயிர்களை திருப்பித்தரும். அதைப்போலவே ஒருவர் செய்யும் நன்மையும், தீமையும் பல மடங்காக பெருகி அவரிடமே வந்து சேரும். ஆகவே, எப்போதும் நன்மை செய்பவர்களாகவே இருங்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாவிட்டாலும்கூட, நன்மை செய்வதிலிருந்து தவறாதீர்கள். இவ்வாறு செயல்படுபவர்களுக்கே விரைவில் இறைவன் அருள் கிடைக்கும்.

* சிலர் தேவையே இல்லாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். எதற்காக பேசுகிறோம், எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பேசுகிறோம் என்ற வரையறையே இல்லாமல் பேசுவதால் பேசுபவருக்கோ, பேச்சை கேட்பவருக்கோ எந்த நன்மையும் உண்டாகப் போவதில்லை. ஆகவே, அமைதியாகவே இருங்கள்.

* நெருப்பு எரியும் இடத்தில் இருந்து புகை கிளம்பிக் கொண்டிருக்கும். நெருப்பினால் நமக்கு தேவையானவற்றை சூடுபடுத்திக் கொள்ளாலாம் அல்லது பிற தேவைகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால், புகையால் பயன் ஏதும் இல்லை. புகையை நிறுத்த வேண்டுமானால் நெருப்பை அணைக்க வேண்டும். நெருப்பு என்ற பற்றினை அணைத்து விட்டால், புகை என்ற காரியமானது தாமாகவே அழிந்து விடுகிறது.

* ஆசை அழிக்கும் குணமுடையது. அன்பு வளர்க்கும் குணத்தை உடையது. நீங்கள் வளர்க்கும் குணமுடையவர்களாக இருங்கள். வீணான ஆசைகளால் துன்பம் நேருமே தவிர நன்மை எதுவும் உண்டாகிவிடாது என்பதால் ஆசையை அழித்து விடுங்கள்.

கிருபானந்த வாரியார்- ஏக்கத்துடன் காத்திருப்போம்

நவம்பர் 24, 2009 vayal மறுமொழியவும்

* திருநாவுக்கரசு சுவாமிகள் சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தது நான்கே ஆண்டுகள் தான். அப்போது அவருக்கு வயது 77 இருக்கும். ஆறுநாட்கள் மட்டுமே பக்தனாக முழு அடியவராக வாழ்ந்து இறைவனை அடைந்தவர் கண்ணப்ப நாயனார். சுந்தரமூர்த்தி நாயனார் இரண்டே இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிவசிந்தனையோடு வாழ்ந்தார். இறைவன் சுந்தரரை தடுத்தாட்கொண்டது பதினாறு வயதில் தான். அவர் கயிலாயம் போனது பதினெட்டாவது வயதில். ஆகையால், பக்திக்கு வயது முக்கியம் இல்லை.
* பக்தி இளமையில் வரவில்லையெனில், அதற்குரிய மனப்பக்குவம் வரட்டும் என்ற ஏக்கத்துடன் நல்லவனாக காத்திருப்பது தான் வழி. பக்குவ காலம் எப்படியும் தானாகவே வந்து சேரும். அப்படி மனப்பக்குவம் வந்ததும், உண்மையான பக்தி செய்து இறைவனை சிந்தித்து வாழ்ந்தாலே முழுபலனும் கிடைத்து விடும்.
* செம்பு என்ற என்ற ஒன்று இருந்தால், அதனுள் களிம்பும் ஒட்டியிருக்கும். அதை துலக்கிப் பயன்படுத்த வேண்டும். நெல் என்று இருந்தால் உமியும் சேர்ந்திருக்கும். அதை நாம் விலக்கிச் சமைக்க வேண்டும். அதுபோல நம்மிடம் உள்ள தீமைகளை விடுத்து நல்லவற்றை மட்டும் சிந்தித்து நல்லவனாக வாழ்ந்தால் மனப்பக்குவம் கிடைத்து விடும்.

கிருபானந்த வாரியார்- இளமையில் வளையுங்கள்

நவம்பர் 23, 2009 vayal மறுமொழியவும்

* எதனையும் பலமுறை மனதில் சிந்தனை செய்யுங்கள். ஒருவர் போன வழியில் சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம்.
* எங்கும் நிறைந்த இறைவனை எளிதாகக் கிடைக்கும் பூவினாலும், நீராலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.
* சுகமாக வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்.
* நாவின் சுவைக்காக நல்லுணவைத் தேடி அலையாதீர்கள். இறையருளால் அன்றாடம் கிடைக்கும் எளிய உணவையும் உண்டு திருப்தி கொள்ளுங்கள்.
* தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுங்கள். அது உங்களுக்கு அமைதியையும், அன்பையும் தரும்.
* இளமையில் வளையாவிட்டால் முதுமையில் அல்லல்படவேண்டி வரும். இளமைப்பருவம் உழைப்பதற்கு ஏற்றது. அதன் அருமையை உணர்ந்து பணியாற்றுங்கள்.
* உடம்பில் எத்தனையோ உறுப்புக்கள் இருந்தாலும் கண் மிக முக்கியமானது. கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம். கண்ணைப் பார்த்தாலே ஒருவனின் குணத்தை அறிந்து கொள்ளலாம்.

கிருபானந்த வாரியார்- குடும்பம் ஒரு மரம்

நவம்பர் 22, 2009 vayal மறுமொழியவும்

* ஒரு மனிதனோடு பழகும் போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும்போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல், யாரிடம் பழகி னாலும் அளந்து பழகாவிட்டால் துன்பம் வந்து சேரும்.
* நம் உடம்பின் அளவுகோல் கண். கண்ணின் தன்மையைக் கொண்டே அவன் எப்படிப் பட்டவன் என்பதை கணக்கிட்டு விடலாம். மனிதனின் மனநிலையைக் கண்களே காட்டிக் கொடுத்து விடும்.
* இரவில் முறையாக தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. தூக்கம் வந்தால் ஒழிய படுக்கையில் படுப்பது கூடாது. தூக்கம் வராவிட்டால் மனதை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் அறநூல்களையும், தர்மசாஸ்திரங்களையும் படியுங்கள்.
* குடும்பம் பசுமரத்தைப் போன்றது. அதில் மனைவி வேர். கணவன் அடிமரம். பிள்ளைகள் கிளைகள். அன்பு இலைகள். கருணை மலர்கள். அம்மரத்தில் விளையும் பழங்கள் தான் அறச்செயல்கள். மரங்கள் பலவிதமான உயிர்களுக்கும், பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் நிழலும், கனிகளும் தருவது போல, நமது குடும்பம் என்னும் மரத்தால் மற்றவர்கள் பயன்பெற வேண்டும்.

கிருபானந்த வாரியார்- தியானத்தை விட சிறந்தது எது

நவம்பர் 21, 2009 vayal மறுமொழியவும்

வேண்டாமே பரபரப்பு!
* ஏழைகளையும், இயலாமையால் வருந்துபவர்களையும் ஆணவத்தால் இழிவாக நடத்துபவன் மறுபிறப்பில் அதற்கான தண்டனையை அடைவான்.
* எல்லா உயிர்களும் ஈசனின் கோவில்களே. அதனால், எல்லா உயிர்களையும் மதிப்பது நம் கடமையாகும். இதுவே மேலான அறமாகும்.
*உணவருந்தும் போது வேண்டாத பரபரப்பும், வேகமும் கூடாது. அதே நேரத்தில் வேண்டாத கால தாமதமும் கூடாது.
* உயிர்களிடம் அளவு கடந்த கருணை‌யோடு இருந்தால் அன்றி கடவுளின் பூரண அருளைப் பெற முடியாது.
* கடவுள் இல்லவே இல்லை என்று நாத்திகம் பேசுபவர்களையும் காப்பாற்றுவதே கடவுளின் எல்லையில்லாத கருணைக்கு அடையாளமாகும்.
* ஞானத்தைத் தருபவர் நல்லாசிரியரே. வாழ்வில் நல்ல வழிகாட்டியான ஞான ஆசிரியரைப் பெற்றுவிட்டால் நிச்சயம் பிறவிக்கடலைத் தாண்டி விடலாம்.
* கடவுள் வணக்கம் தேவையா? கடவுளை வணங்காமல் வாழமுடியாதா? என்றெல்லாம் சிந்திக்கிறோம். மானம் உள்ளவன் ஆடை உடுப்பான். ஆடையில்லாமல் வாழ முடியாதா என்ன! அதுபோல, மனம் உள்ளவன் கடவுளை வணங்குவான்.

கிருபானந்த வாரியார்- முருகனுக்குள் பிள்ளையார்

நவம்பர் 20, 2009 vayal மறுமொழியவும்

* இறைவன் ஒருவன் தான். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்னார் திருமூலர். கடவுளை நாம் தான், நமக்குப் பிரியமான வடிவத்தில் குழந்தையாகவும், தாயாகவும், பெருமானாகவும் வைத்து வணங்குகிறோம். இஷ்டப்பட்ட ஒரு வடிவம் மனத்தில் தங்கி விடுகிறது.
* நெருப்பு என்று எடுத்துக் கொண்டால் அது சிவபெருமானின் வடிவம். அதன் சூடு பராசக்தி. அதன் செம்மை மகாகணபதி. அதன் ஒளி முருகப்பெருமான். எல்லாமே ஒன்று தான். ஆனால், அந்த ஒரே பொருளை வெவ்வேறு வாயிலாக நாம் உணர்கிறோம். நெருப்பு  சுடுகிறது. பிரகாசமாக இருக்கிறது. சிவந்த நிறத்தில் இருக்கிறது. ஆனால், நெருப்பு என்பது என்னவோ ஒரே பொருள் தான்!
* மலர் என்று எடுத்துக் கொண்டால் அதன் வண்ணம் கணபதி. வடிவம் பார்வதி. வாசனை முருகன். தாயிடம் இரண்டு குழந்தைகளும் இரு பண்புகளாக இருக்கின்றன. இதில், நமக்கு உகந்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். அதை இஷ்டமுடன் வழிபாடு செய்கிறோம். அதுவே இஷ்ட தெய்வம்.
* உங்களுடைய இஷ்ட தெய்வத்தை நீங்கள் எந்த உருவிலும் காணலாம். முருகனிடம் கூட நீங்கள் பிள்ளையாரைக் காணமுடியும். “”பிடித்தால் பிள்ளையார்” என்று சொல்லுகின்றனர் அல்லவா? அது இது தான்.