Category Archives:

பெண்களைத் திட்டாதீர்கள்

குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி
பண்ணுகிறான். குடும்பம் நாகரிகமடையா விட்டால் தேசம்
நாகரிகமடையாது. குடும்பத்தில் விடுதலையிராவிடில்,
தேசத்தில் விடுதலை இராது.

குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்வீக
குணத்தையும், அதனால் விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த
விரும்புவோர், தாய், மனைவி முதலிய ஸ்திரீகள் தமக்கு
வெறுப்புண்டாகத் தகுந்த வார்த்தை பேசும் போது, வாயை மூடிக்
கொண்டு பொறுமையுடன், கேட்டுக் கேட்டுப் பழக வேண்டும்.
அவ்வாறின்றி ஒரு ஸ்திரீ வாயைத் திறந்த மாத்திரத்திலேயே,
அவள் மீது புலிப்பாய்ச்சல் பாயும் ஆண் மக்கள் நாளுக்கு
நாள் பொங்கிப் பொங்கித் துயர்பட்டுத் துயர்பட்டு
மடிவார்.

தான் ஒரு குற்றஞ் செய்தால், அதைச் சுண்டைக்காய்
போலவும், அதே குற்றத்தை மற்றவன் செய்தால், அதைப்
பூசணிக்காய் போலவும் நினைக்கிறார்கள். மூடன் தான் செய்த
குற்றத்தை மறந்து விடுகிறான். அல்லது பிறருக்குத்
தெரியாமல் மறைக்கிறான். அல்லதுபொய்க் காரணங்கள் சொல்லி,
அது குற்றமில்லை என்று ருஜுப்படுத்த முயற்சி செய்கிறான்.
ஜனங்கள் குற்றஞ் செய்யாமல் நீதிக்காரர் பார்த்துக் கொள்ள
வேண்டும். நீதிக்காரர் குற்றம் செய்யாமல் ஜனங்கள்
பார்த்துக் கொள்ள வேண்டும்.

குற்றம் செய்த மனிதனைச் சீர்திருத்தி இனிமேல் அவன்
குற்றம் செய்யாதபடி அறிவிலும் ஒழுக்கத்திலும் மேம்பட வழி
செய்ய வேண்டும். குற்றத்திற்குக் காரணம் அறியாமை; அதை
நீக்கும் வழி சத்சங்கமும்; தைரியமும். பிறர் குற்றங்களை
மன்னிக்கும் குணம், குற்றமில்லாதவர்களிடத்திலே தான்
காணப்படும்.

கடவுளே அறிவின் வடிவம்



* உடலுக்கு உயிர் எப்படி அவசியமோ, அது போலவே உயிருக்கு
அறிவு அவசியம். ஒருவருக்கு கிடைக்கும் செல்வத்திற்கு அறிவு
மட்டுமே வேராக இருக்கிறது. அறிவே, வலிமைகளில் எல்லாம்
உயர்ந்ததாகத் திகழ்கிறது. அறிவின் சொல்படிதான் மனமும்
செயல்பட வேண்டும். அத்தகைய மனிதனே அனைத்திலும் முன்னிலை
பெறுவான்.

* அறிவால் உயர்ந்தவர்களே, வாழ்க்கையில் அனைத்து
நிலைகளிலும் சிறப்பிடம் பெற்று உயர்கிறார்கள். செல்வத்தால்
உயர்ந்திருப்பவர்களைக் காட்டிலும், அறிவால் சிறந்தோரே
உண்மையில் உயர்ந்தவர் ஆவர். அறிவாளிகளை யாரும்
அடிமைப்படுத்தவோ, கீழ்த்தரமாகவோ நடத்தவோ முடியாது. இவர்கள்
யாருக்கும் அச்சப்படுபவர்களாகவும் இருக்கமாட்டார்கள்.

* பரிபூரணமான அறிவைப் பெற்றிருப்பவர்கள், எப்போதும்
தெளிந்த நிலையிலேயே இருப்பார்கள். இவர்கள் எந்த
இன்பத்திற்கும் அடிமையாகாமல், தம்மை அடக்கி
வைத்திருப்பார்கள். ஒரு பொருளை பார்த்தவுடன் அதன்
வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து கணிக்காமல், அதன்
உட்பொருள் தன்மையையும், உண்மை நிலையையும் எளிதில் கணித்து
விடுவார்கள்.

* மனிதர்கள் சிறந்து திகழ அறிவு தேவை. கடவுளே அறிவின்
வடிவமாக இருக்கிறார். அந்த அறிவாகிய இறைவன் உள்ளே
வருவதற்கு இதயம் சுத்தமாக இருக்க வேண்டும். இதயத்தை
சுத்தப்படுத்த இறைவனிடத்தில் பக்தி செலுத்த வேண்டும்.

சத்தியவான் சாவித்திரி போல் வாழுங்கள்

மூன்று நாட்களில் மாறக்கூடிய புதுமை உணர்ச்சிக்குக்
காதல் என்று பெயரில்லை. அதன் பெயர் மனப்பிராந்தி. காதல்
என்பது தேவலோகத்து வஸ்து. இவ்வுலகத்திற்கு வாழ்க்கை
மாறியபோதிலும் அது மாறாது.

சாவித்திரியும், சத்தியவானும் (திருமணத்திற்கு பின்)
கொண்டிருந்தார்களே…அதன் பெயர் தான் உண்மைக் காதல்.
அதுஅழியாத நித்திய வஸ்து.

இமயமலை கடலில் மிதந்தபோதிலும், காதல்
பொய்த்துப்போகாது.

அது தெய்வீகமானது. உண்மையான காதல் ஜீவன்முக்திக்குப்
பெரிய சாதனமாகும்.

பொருளில்லாவிடினும், கல்வியில்லாவிடினும் ஒருவன் ஜீவன்
முக்தி பதமெய்தலாம். ஆனால், காதல் விஷயத்தில் வெற்றி
பெறாதவன் முக்தியடைந்து இவ்வுலகில் வாழ்வது மிகவும் சிரமம்
என்று தோன்றுகிறது.

உயிருக்கும், மனதுக்கும், ஆத்மாவுக்கும் ஒருசேர
இன்பமளிப்பதால் காதலின்பம் இவ்வுலக இன்பங்கள் அனைத்திலும்
தலைமைப்பட்டதாயிற்று. ஒரு ஆண் ஒரு பெண்ணையோ, ஒரு பெண் ஒரு
ஆணையோ மனம் மாறாமல், உண்மையிலேயே காதல் செய்யும் வழக்கம்
ஏற்படுமாயின், காதல் இன்பம் எத்தனை சிறந்தது என்பதை
உணர்ந்து கொள்ள முடியும்.

இவ்வுலகத்தில் காணப்படும் எல்லா இன்பங்களைக் காட்டிலும்
காதலின்பம் சாலவும் சிறந்தது. அதில் உண்மையும் உறுதியும்
கொண்டு நின்றால், அது எப்போதும் தவறாததோர் இன்ப ஊற்றாகி,
மனித வாழ்வை அமர வாழ்வுக்கு நிகராகப் புரிந்துவிடும்.

காதல் கோயில் போன்றது. இது மிகவும் தூய்மை கொண்ட
கோயில். ஒருமுறை அங்கு போய்ப் பாவம் செய்து வெளியேறியவன்,
மீண்டும் அதனுள் புகுவதற்கு மிகுந்த சிரமப்பட
வேண்டும்.

பயம், சந்தேகம், சலனம் வேண்டாம்

ஒன்று கூடிக் கடவுளை வணங்கச் செல்லும் போது,
மனிதர்களின் மனங்கள் ஒருமைப்பட்டுத் தமக்குள் இருக்கும்.
ஆத்மவொருமையை அவர்கள் தெரிந்து கொள்ள இடமுண்டாகும். எனவே
தான் நம் முன்னோர் கோயில்களை உருவாக்கினார்கள்.

சிவன் நீ; சக்தி உன் மனைவி. விஷ்ணு நீ; லட்சுமி உன்
மனைவி.

பிரம்மா நீ; சரஸ்வதி உன் மனைவி. இதைக் காட்டி மிருக
நிலையிலிருந்து மனிதரை தேவநிலைக்கு கொண்டு சேர்க்கும்
பொருட்டாக ஏற்பட்ட தேவப்பள்ளிக்கூடங்களே கோயில்கள்
ஆகும்.

சகுனம் பார்க்கும் வழக்கமும் காரியங்களுக்குப்
பெருந்தடையாக வந்து முண்டிருக்கிறது.

சகல மனிதரும் சகோதரர். சகோதர உணர்ச்சியைப் பற்றி
கவிதைகள் பாடுவதும், நீதி நூல்கள் புகழ்வதும்
இவ்வுலகத்தில் சாதாரணமாக இருக்கிறது. ஆனால், நடைமுறையில்
எந்தக் கண்டத்திலும் எந்த மூலையிலும் அந்த முயற்சி
காணப்படவில்லை. அது நடைமுறைக்கு வர வேண்டும்.

சக்தியால் உலகம் வாழ்கிறது. நாம் வாழ்வை
விரும்புகிறோம்.

ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம். ஒவ்வொருவனுக்கும்
அறிவு, செல்வம், தைரியம் ஆகிய மூன்று சக்திகள் வேண்டும்.
இந்த மூன்றும் நமக்கு இகலோக இன்பம் கிடைக்கும்படியாகவும்,
பரலோக இன்பங்கள் சாத்தியமாகும் படியாகவும் செய்கின்றன.
ஆத்மா உணர்வாகவும், சக்தி செய்கையாகவும் உள்ளது.

விரும்புதல், அறிதல், நடத்துதல் என்ற மூவகையான சக்தி
இல்வுலகத்தை ஆளுகிறது. இதை பூர்வ சாஸ்திரங்கள் இச்சா
சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று சொல்கின்றன. பயம்,
சந்தேகம், சலனம் மூன்றையும் வெறுக்க வேண்டும். இதனால்
சக்தி ஏற்படும்.