Category Archives: விவேகானந்தர்

விவேகானந்தரின் விளக்கம்!

ராஜபுதனத்தில் ஆழ்வார் என்று ஒரு சமஸ்தானம் இருந்தது. ஒரு தடவை சுவாமி விவேகானந்தர் அந்த சமஸ்தான மன்னரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தார்.

விவேகானந்தரின் ஆன்மிகப் பெருமையையும், அவருடைய அறிவாற்றலையும் கேள்விப்பட்டிருந்த மன்னர், விவேகானந்தரை தனது அரண்மனையிலேயே தங்கவைத்து மிகுந்த உபசாரம் செய்தார்.

அந்த சமஸ்தான மன்னருக்குப் பொதுவாக இந்து மதத்தின் மீது பற்றும், நம்பிக்கையும் இருந்தாலும், பலவிதமான மூட நம்பிக்கைகளால் இந்து மதத்தின் சிறப்புக்கு மாசு ஏற்படுகிறது என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

இந்து மதத்தில் வழக்கமாக உள்ள கடவுள்களின் திருவுருவ வழிபாடு என்பது ஓர் அர்த்தமற்ற மூடநம்பிக்கை என்பது மன்னரின் அழுத்தமான எண்ணம்.

ஒருநாள் மன்னரும், விவேகானந்தரும் இந்து மதத் தத்துவங்கள் குறித்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது மன்னர் விவேகானந்தரை நோக்கி, “சுவாமி, இந்து மதத்தில் நடைமுறையில் இருக்கும் தெய்வத் திருவுருவ வழிபாட்டைப் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உயிரற்ற கற்களாலும், உலோகங்களாலும் செய்யப்பட்ட தெய்வத் திருவுருவங்களில் ஏதோ மகிமை இருப்பதாக எண்ணிக்கொண்டு அவற்றுக்குப் பூஜை செய்வதும், வழிபாடு மேற்கொள்வதும் அறிவுக்கு ஒவ்வாத செயல்கள் அல்லவா? கல்லிலும், செம்பிலுமான உருவங்களில் கடவுள் குடிகொண்டிருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்டார்.

மன்னரின் அந்தக் கேள்வியைக் கேட்டு சுவாமி விவேகானந்தர் புன்முறுவல் பூத்தார்.

மன்னருக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை வெறும் வாய்விளக்கமாகக் கூறிப் போக்க முடியாது என்று அவர் நினைத்தார்.

வேறு எந்த வழியில் மன்னரின் ஐயத்தைப் போக்குவது என்று யோசித்த விவேகானந்தரின் கண்களில், சுவரில் மாட்டியிருந்த மன்னரின் தந்தையின் பெரிய திருவுருவப் படம் கண்களில் பட்டது.

“அது யாருடைய உருவப் படம்?” என்று விவேகானந்தர் வினவினார்.

“என் தந்தையின் படம் இது” என்றார் மன்னர்.

“இது என்ன படமா? எவ்வளவு அவலட்சணமான உருவம்! இந்தப் படத்தை இந்த இடத்தில் மாட்டி வைத்திருப்பதால் இந்த அறையின் அழகே கெட்டுப் போய்விடுகிறது. இதைக் கழற்றி சுக்குநூறாக உடைத்துக் குப்பைத் தொட்டியில் வீசுங்கள்!” என்று கூறினார் விவேகானந்தர்.

அவர் சொன்னதைக் கேட்டு மன்னர் ஆவேசமடைந்து விட்டார்.

“சுவாமி… என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள்! இதே சொற்களை வேறு யாராவது சொல்லியிருந்தால் இந்நேரம் அவர் தலையை வெட்டி வீழ்த்தியிருப்பேன்! என் தந்தையை நான் தெய்வமாகவே கருதி வழிபட்டு வருகிறேன். அவருடைய திருவுருவப் படத்தைப் பற்றி நீங்கள் எவ்வாறு இழிவாகப் பேசலாம்?” என்று ஆர்ப்பரித்தார்.

விவேகானந்தரோ மிகவும் நிதானமாக மன்னரை நோக்கி, “மன்னவரே, உமது தந்தை மீது எனக்கு எவ்விதத் துவேஷமும் கிடையாது. அவரை இழிவுபடுத்துவதும் எனது நோக்கமல்ல. தெய்வத் திருவுருவ வழிபாட்டைப் பற்றி உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை விளக்குவதற்காகவே நான் இவ்வாறு நாடகமாடினேன்.

உங்கள் தந்தையாரின் உருவப் படத்துக்கு உயிர் இல்லை. இது ஓர் ஓவியரால் வரையப்பட்ட ஓவியம்தான். இந்த ஓவியத்தினுள் உங்கள் தந்தை ஒளிந்துகொண்டிருக்கவில்லை. ஆனால் உங்கள் தந்தை மீது உங்களுக்கு இருக்கும் அன்பு, மதிப்பு, மரியாதை காரணமாக இதை ஓர் நினைவுச்சின்னமாகப் போற்றி வருகிறீர்கள். தெய்வத் திருவுருவங்களை இந்து மதத்தைச் சார்ந்த மக்கள் வழிபடுவதன் நோக்கமும் இதுதான். இறைவனை நோக்கி வழிபடும்போது இறை சிந்தனையை நோக்கி மனதை ஒன்றுபடுத்துவதற்கு அந்த உருவங்கள் பயன்படுகின்றன” என்றார் விவேகானந்தர். சந்தேகம் நீங்கித் தெளிவுபெற்றார் மன்னர்.

 

மிரள வைத்த விவேகானந்தரின் `வலிமை’

ஒருமுறை ராஜஸ்தான் மாநிலத்தில் சுவாமி விவேகானந்தர் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் இருந்த பெட்டியில் அவரைத் தவிர
2 வெள்ளையர் இருந்தனர். விவேகானந்தர் அணிந்திருந்த காவி உடையை பார்த்த அவர்கள், அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவரை கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தனர். திட்டவும் கூட செய்தனர்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த விவேகானந்தர் அமைதியாகவே இருந்தார். தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை காட்டிக்கொள்ளவே இல்லை.

ஒரு ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும், அங்கிருந்த ஒருவரிடம், `இங்கே தண்ணீர் கிடைக்குமா?’ என்று ஆங்கிலத்தில் கேட்டார் விவேகானந்தர்.

இதை கவனித்த 2 வெள்ளையர்களும் அதிர்ச்சி ஆனார்கள். விவேகானந்தர் தனது இருக்கையில் வந்து அமர்ந்ததும் அவர் அருகில் பவ்வியமாக சென்றனர்.

`நாங்கள் இவ்வளவு நேரமும் உங்களை கேலி செய்தோம். நீங்கள் எங்களை எதிர்த்து ஒரு கேள்விகூட கேட்கவில்லையே… ஏன்..?’ என்று கேட்டனர்.

அதற்கு விவேகானந்தர், `நான் முட்டாள்களை சந்திப்பது இது முதல் தடவை அல்ல’ என்றார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த வெள்ளையர்கள், விவேகானந்தரை தாக்க முயன்றனர். விவேகானந்தரும் அதை எதிர்கொள்ள தயாராக எழுந்தார்.

அவரது வலிமையான உடல் அமைப்பையும், பலமான கைகளையும் பார்த்த அவர்கள், அப்படியே பெட்டிப் பாம்பாக அமைதியாகிவிட்டனர். செல்ல வேண்டிய இடம் வரும்வரை அப்படியே இருந்தனர்.

துறவிகளிடம் அமைதி, எளிமை, அன்பு மட்டுமின்றி, வலிமையும் இருக்கும் என்பதற்கு சுவாமி விவேகானந்தரே சிறந்த உதாரணம்.

குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர்


யார் மீது ஆன்மிக உணர்வு பெறுகிறோமோ அவரே நமக்கு உண்மையான குரு. ஆன்மிகப் பெருவெள்ளம் நம்மிடம் பாய்வதற்கான கால்வாய் அவர். தனிமனிதரை நம்புவது பலவீனத்திலும் உருவவழிபாட்டிலும் தான் கொண்டுபோய்விடும். ஆனால், ஆழ்ந்த குரு பக்தி நம்மைவிரைவில் முன்னேறச் செய்யும். உண்மையான குரு இருந்தால் அவரை மட்டுமே வணங்கு. அது மட்டுமே நம்மை கரை சேர்க்கும்.பகவான் ராமகிருஷ்ணர் குழந்தையைப் போல தூய்மையானவர்.

அவர் ஒரு போதும் பணத்தை தன் மனதாலும் தொட்டதில்லை. காமசிந்தனை அவரிடத்திலிருந்து முற்றிலும் நீங்கிவிட்டது. பெரிய மகான்கள் தங்கள் சிந்தனையை முழுமையாக ஆன்மிகத்திலே செலுத்தி விடுவர். உண்மையான ஞானியிடத்தில் பாவத்தை பார்க்க இயலாது. ராமகிருஷ்ணரின் கண்கள் தீயவற்றைக் காண இயலாத அளவுக்கு தூய்மை பெற்றிருக்கின்றன.

இத்தகைய பரமஹம்சர்கள் உலகில் இருப்பதால் தான் உலகம் செயல்படுகிறது. அவர்கள் அனைவரும் இறந்து விடுவார்களானால், உலகமே சுக்கல் சுக்கலாக நொறுங்கி மண்ணாகி விடும். குருவிற்கு கடமைப்பட்டிருக்கிறோம் என்பதற்காக அடிமைப்பட வேண்டியதில்லை. குரு நமக்கு உதவுபவர் என்ற கருத்தை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். உங்களுக்குள் நீங்களே முயன்று உண்மையைத் தேடுங்கள்.-விவேகானந்தர்

உன்னை பலவீனன் என எண்ணாதே -சுவாமி விவேகானந்தர்


செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விட வேண்டும்.

முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தாலும் கூட, ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோட்சமில்லை.

பாவம் என்ற ஒன்று உண்டென்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.

சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. உனது கடந்த கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்ததையும் அப்படி எதுவும் வராமற் போனதையும் தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள் இருந்தவையாகத்தான் இருக்கும்.

நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! கடவுளிடத்தில் நம்பிக்கை! இதுவே மகிமை பெறுவதன் ரகசியமாகும்.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய்.

* இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.

* அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். சரியான வழியில் செல்கின்ற மனம் என்றென்றைக்கும் காத்து ரட்சிக்கும்.

மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு -சுவாமி விவேகானந்தர்


துன்பங்களிலும் போராட்டங்களிலும் உழலும் போது இந்த உலகம் பயங்கரமானதாக நமக்குத் தோன்றுகிறது. இரண்டு நாய்க்குட்டிகள் கடித்து விளையாடிக் களிப்பதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அது ஒரு விளையாட்டு, சற்று காயப்படும்படி அவை கடித்துக் கொண்டாலும் அதனால் தீங்கு எதுவும் விளையாது என்பது நமக்குத் தெரியும். அதுபோலவே நமது போராட்டங்கள் எல்லாம் இறைவனின் கண்களுக்கு விளையாட்டே. இந்த உலகம் விளையாட்டுக்கென்றே அமைந்தது. அது இறைவனைக் களிப்படைய செய்கிறது. எதற்காகவும் அவன் கோபம் கொள்வதில்லை.

அம்மா! வாழ்வெனும் கடலில் என் படகு மூழ்கிக் கொண்டிருக்கிறது. மனமயக்கம் என்னும் சூறைக்காற்றும், பற்று என்னும் புயலும் கணந்தோறும் அதிகரிக்கின்றன. படகோட்டிகள் ஐவரும் (ஐந்து புலன்களும்) வெறும் முட்டாள்கள், சுக்கான் பிடிப்பவனோ (மனம்) மெலிந்தவன். நிலைகுலைத்து என் படகு மூழ்குகிறது. அன்னையே, என்னைக் காப்பாற்று!

அன்னையே! மகான் என்றோ, பாவி என்றோ உன் அருள் பிரித்துப் பார்ப்பதில்லை. பக்தனிலும் அதேபோல் கொலைகாரனிலும் அது பிரகாசிக்கிறது. எல்லாவற்றின் மூலமும் அன்னையே வெளிப்படுகிறாள்.

ஒளிபாயும் பொருட்களில் மாசு இருக்கலாம். அதனால் ஒளி கெடுவதில்லை. பயன் பெறுவதும் இல்லை. மாற்றம் அடையாமல் மாசுபடியாமல் திகழ்கிறது அந்த ஒளி. ஒருபோதும் மாறாத, தூய, அன்புமயமான ‘அன்னை’ ஒவ்வோர் உயிரின் பின்னாலும் நிற்கிறாள்.

உன்னை எதுவும் துன்புறுத்த முடியாது என்பதை உணர்ந்து கொள். ஏனெனில் நீ சுதந்திரன். நீயே ஆன்மா.

பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும் -சுவாமி விவேகானந்தர்


* எல்லா நாடுகளுக்குள்ளும் நம் நாடு பலவீனமாகவும், பின்தங்கியும் இருப்பதற்குக் காரணம் என்னவென்றால் நம் நாட்டில் பெண்மை அவமானம் செய்யப்படுவதேயாகும்.

* ”எங்கெல்லாம் மாதர் உயர்வாக நடத்தப்படுகிறார்களோ, அங்கெல்லாம் தேவர்கள் மகிழ்ச்சியுடன் வாசம் செய்வார்கள்,” என்று புராதன மனு கூறியுள்ளார்.

* பெண்களின் முன்னேற்றமும், பொதுமக்களின் விழிப்பும் நம் நாட்டில் ஏற்பட வேண்டும். அதன் பிறகுதான் நமது நாட்டிற்கு உண்மையான நன்மை ஏதாவது ஏற்படும்.

* மாதர் தங்களுடைய பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் நிலையில் வைக்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் பிரச்னைகளைத் தாங்களாகவே தீர்த்துக் கொள்வார்கள்.

* நம் நாட்டில் பெண்களின் நிலை உயர்த்தப்பட வேண்டும். அவர்கள் மூலம்தான் நம் வருங்கால மக்கள் உயர்ந்த கருத்துகளைப் பெறுவார்கள். பெண்களின் நிலை உயர்த்தப்பட்டால், அவர்கள் மூலம் பண்பாடு, கல்வி, ஆற்றல், பக்தி ஆகியவை நாட்டில் மலரும்.

* கற்பு என்பது இந்து மாதரின் பரம்பரைச் சொத்தாகும். முதலில் இந்த லட்சியத்தை அவர்களிடையே உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் எத்தகைய நிலையிலிருப்பினும் தங்கள் ஒழுக்கத்தை விட்டுத் தவறுவதை விட, உயிரை விடத்தக்க அஞ்சாத தன்மையையும் திடமனத்தையும் இந்த லட்சியம் அளிக்கும்.

* மனைவி இல்லாமல் எந்த ஒரு சடங்கையும் இந்தியாவில் செய்ய இயலாது. பக்கத்தில் வாழ்க்கைத் துணைவியை வைத்துக் கொண்டுதான் எந்தச் சடங்கையும் செய்ய வேண்டும். மனைவி இல்லாமல் செய்யும் எந்தச் சடங்கும் சாத்திர சம்மதம் ஆகாது.

சகிப்புத்தன்மை வேண்டும் -சுவாமி விவேகானந்தர்

மக்களுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு.

நாத்திகனுக்கு தர்மசிந்தனை இருக்கலாம். ஆனால், மதகோட்பாடு இருக்க இயலாது. மதத்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தர்மசிந்தை அவசியம் இருக்க வேண்டும்.

குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றவர்களும் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர்.

நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும், இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதைவிட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு.

செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனைவிட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக நினைத்துவாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது.

மரணத்தை வென்று, அதற்கு மேல் உள்ள மெய்ப்பொருள் என்ன என்பதனைத் தெரிந்து கொள்ளத் துடிக்கும் துறவற வாழ்க்கையே மேல்.

இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும், பயத்தை உண்டுபண்ணுகிற எதையும் எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றுடன் போராட வேண்டும். பயந்து ஓடலாகாது.

மிருகத்தை மனிதனாக்குவதும், மனிதத்தைத் தெய்வம் ஆக்குவதும் மதம்.

மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்டவேண்டும்.

மதங்கள் எல்லாமே உண்மையானவை தாம்! ஆனால், ஒரு மதத்திலிருந்து வேறொரு மதத்திற்கு மக்களை மாறச்செய்வது பொருளற்றது. ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

நீ தான் அனைவருக்கும் தலைவன் – சுவாமி விவேகானந்தர்

* பாவங்களிலேயே மிகப்பெரிய பாவம், நீ உன்னைப் பலவீனன் என்று நினைப்பதே. உயர்ந்தவர் என்று யாரும் இல்லை. நீ பிரம்மமே என்பதை உணர். நீ கொடுக்கும் சக்தியைத் தவிர வேறு எங்கும் எந்தச் சக்தியும் இல்லை. சூரியனையும், நட்சத்திரங்களையும், பிரபஞ்சத்தையும் கடந்தவர்கள் நாம். மனிதனின் தெய்வீகத் தன்மையை அவனுக்குச் சொல். தீமையை மறுத்துவிடு, எதையும் உண்டுபண்ணாதே. எழுந்து நின்று, ‘நானே தலைவன், அனைத்திற்கும் நானே தலைவன்’ என்று கூறு. நாமே தடையை உண்டாக்கிக் கொள்கிறோம். நம்மால்தான் அதனை உடைத்து எறியவும் முடியும்.

* எந்தச் செயலும் உனக்கு முக்தி தர இயலாது. ஞானம் மட்டுமே அதைத் தர முடியும். ஞானத்தைத் தடுக்க முடியாது. அதை ஏற்பதோ தடுப்பதோ மனத்தால் முடியாது. ஞானம் வரும்போது மனம் அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். எனவே, ஞானம் மனத்தின் செயல் அல்ல. மனத்தின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

* உன் சொந்த இயல்பிற்கு உன்னைத் திரும்பக் கொண்டு வரவே, செயலும், வழிபாடும் அமைந்துள்ளன. உடலை ஆன்மா எனக் கருதுவது முழு மனமயக்கம். உடலுடன் இருக்கும்போதே நாம் முக்தர்களாகலாம். உடலுக்கும் ஆன்மாவிற்கும் பொதுவான எதுவும் இல்லை.

* ‘சித்’, ‘அசித்’, ‘ஈஸ்வரன்’ என்பதற்கு, ஆன்மா, இயற்கை, கடவுள் என்றும், உணர்வுள்ளது, உணர்வற்றது, உணர்வைக் கடந்தது என்றும் ராமானுஜர் மூன்றாகப் பிரிக்கிறார். இதற்கு மாறாக சங்கரர், ‘சித்’ அதாவது ஆன்மாவும், இறைவனும் ஒன்றே என்கிறார். இறைவனே உண்மை, இறைவனே அறிவு, இறைவனே எல்லையற்றவர்.

உழைக்கும்போதே உயிர் பிரியட்டும் -விவேகானந்தர்

* தங்களுடைய தாய்நாட்டின் நன்மைக்காக எல்லாவற்றையும் துறக்கவும் தங்களுடைய உயிரைத் தியாகம் செய்யவும் கூடியவர்களாக ஒரு சில இளைஞர்களே நமக்குத் தேவை. முதலில் அவர்களுடைய வாழ்க்கையை நாம் நல்ல முறையிலே உருவாக்க வேண்டும். அதன் பிறகுதான் ஏதாவது உண்மையான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

* மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது. மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு நினைப்பதுங்கூடச் சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமது இருதயத்திற்குப் படிப்படியாகத் தருகிறது. நான் உங்களை எல்லாம் மிகவும் நேசிக்கிறேன். என்றாலும், நீங்கள் அனைவரும் பிறருக்காக உழைத்து உழைத்து அந்தப் பணியில் இறந்து போவதையே நான் விரும்புகிறேன். நீங்கள் அவ்விதம் இறந்து போனால் நான் மிகவும் மகிழ்வேன். எழுந்திருங்கள்! தேச முன்னேற்றம் என்னும் சக்கரத்தை நகர்த்துவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள். இந்த வாழ்க்கை எவ்வளவு காலத்திற்கு நிலைத்திருக்கப் போகிறது? இந்த உலகத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பின்னால் நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கு அறிகுறியாக எதையாவது விட்டுச் செல்லுங்கள். அப்படி இல்லாவிட்டால் இந்த மரம், கல் முதலியவற்றுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

* உங்களிடமே நீங்கள் நம்பிக்கை வையுங்கள். ஒரு காலத்தில் நீங்கள் வேதகாலத்தைச் சேர்ந்த ரிஷிகளாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் வேறுவித வடிவம் தாங்கி வந்திருக்கிறீர்கள். அவ்வளவுதான் விஷயம். உங்கள் அனைவரிடமும் எல்லையற்ற ஆற்றல் குடிகொண்டிருக்கிறது. அதனை பயன்படுத்துங்கள்.

லட்சியம் இல்லாமல் வாழாதே -விவேகானந்தர்


இளைஞர்களே! பெருஞ்செயல்களை செய்து முடிப்பதில் எப்போதும் முன்னேறிச் செல்லுங்கள். ஏழைகளிடமும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களிடமும் இரக்கம் காட்டுங்கள். நமக்கு மரணமே வாய்த்தாலும்கூட அவர்களுக்கு இரக்கம் காட்டுவது நமது லட்சியம் ஆகும்.

என்னுடைய லட்சியத்தை உண்மையில் சில சொற்களில் சொல்லி முடித்துவிடலாம். அதாவது, மக்களுக்கு அவர்களுடைய தெய்வீகத் தன்மையை எடுத்துச் சொல்வதும், வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது என்பதை எடுத்துச் சொல்வதும்தான் அது.

எழுந்திருங்கள். விழித்திருங்கள். நீங்களும் விழித்திருங்கள், மற்றவர்களையும் விழிக்கச் செய்யுங்கள். உங்களுடைய இந்த உலக வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னால், மனிதப்பிறவியினால் பெறுவதற்கரிய பெரிய நன்மையை அடையுங்கள். லட்சியத்தை அடையும் வரையில் நில்லாமல் முன்னேறிச் செல்லுங்கள்.

உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் ஒன்றுமில்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்று நான் உறுதியாக சொல்வேன்.

மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள் புரியட்டும், அல்லது புரியாமல் போகட்டும். உன் உடல் இன்றைக்கே வீழ்ந்து போகட்டும். ஆனால் நீ, உண்மை என்னும் பாதையிலிருந்து மட்டும் அணுவளவேனும் பிறழ்ந்து செல்லாமல் இருப்பதில் கவனமாக இரு. மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவன் ஆகிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளை கடந்தாக வேண்டும்