Daily Archives: பிப்ரவரி 2nd, 2012

‘குக்’கிங்குக்கு மட்டுமல்ல ‘கிச்சன்’-ரொமான்ஸுக்கும்தான்…!

Sex in Kitchen

தம்பதியர் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கும் இடங்களில் சமையலறை முக்கிய இடத்தினை பிடித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுமண தம்பதியர் மட்டும் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. திருமணமாகி 15 ஆண்டுகளைக் கடந்த அனுபவம் வாய்ந்த தம்பதியரும் கூட இந்த கருத்தை கூறியுள்ளதுதான் ஆச்சரியமான உண்மை.

மையலுக்கு ஏற்ற இடம்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 1000 தம்பதியரிடம் காதலுக்கும் உறவுக்கும் ஏற்ற இடம் எது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 53 சதவிகிதம் பேர் ரொமான்ஸ் செய்ய ஏற்ற இடமாக சமையலறையை பரிந்துரை செய்துள்ளனர். உணவு செய்யும் போது உறவுக்கான விதை விதைக்கப்பட்டு விடும் என்றும், அதே மூடோடு சமைப்பதால் சமையலிலும் ருசி கூடும் என்றும் கூறுகின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

தம்பதியர் காதல் கொள்ள அதிகம் விருப்பமுள்ள இடம் எது என்று கேட்கபட்ட கேள்விக்கு 44 சதவிகிதம் பேர் சமையலறையே மையலுக்கு ஏற்ற இடமாக தெரிவித்துள்ளனர். பத்தில் ஒரு தம்பதியர் வாரம் முறையாவது சமையலறையில் உறவில் ஈடுபட விரும்புவதாக கூறியுள்ளனர்.

ரொமான்ஸ் முக்கியம்

சமையல் செய்யும் போது தங்களுக்கு உதவுவது போல வந்து தங்களுடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்று பத்தில் 6 பெண்கள் விரும்புகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டே பண்டைய காலத்தில் இருந்து உணவுகளில் உறவிற்கு ஏற்ற பண்டங்களை சமைப்பதில் ஆர்வம் இருந்து வந்துள்ளது. கடல் உணவுகள், சாக்லேட்டுகள், போன்ற ஆர்வத்தை தூண்டும் உணவுகள் தினசரி விருந்தில் இடபெற்று வந்துள்ளது.

என்ன உங்க வீட்டு சமையலறையில் எப்படி? ரொமான்ஸ்க்கு இடமுண்டா?

ஐ.நா. பருவநிலை மாற்றம் மாநாடு-2011

பூமியின் சுற்றுச்சூழலில் மனிதர்களால் பல்வேறு வகையில் வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட கார்பனின் அளவு தொடர்ந்து அதிகரித்தபடியே இருப்பதால், பூமியின் சுற்றுச்சூழலில் வெப்பத்தின் அளவு அதிகரித்தபடியே உள்ளது. இப்படி பூமியின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தால், பூமியில் வாழும் உயிரினங்கள் பலவகையிலும் பாதிக்கப்படும். ஆகையால் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட கார்பனின் அளவை கடுமையாக குறைக்க வேண்டும். இதன் விளைவாக இந்த கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்து வதற்காக ஐ.நா. அமைப்பு சர்வதேச அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் சர்வதேச மாநாடுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் டர்பன் நகரில் பருவநிலை மாற்றம் மாநாடு-2011 நடந்து முடிந்தது. உலக நாடுகள் வெளியிடும் கார்பனின் அளவை கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட கியோடோ ஒப்பந்தம் விரைவில் முடிவடைய இருக்கும் பின்னணியில் இந்த டர்பன் மாநாடு நடத்தப்பட்டது.

கார்பன் வெளியேற்ற கட்டுப்பாடு 

வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட சீனாவும், இந்தியாவும், புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பதற்காக தற்போது அமலிலில் இருக்கும் சர்வதேச ஒப்பந்தமே தொடர வேண்டும் என்று கூறின. அடுத்த வருடம் முடிவுக்கு வரவிருக்கும் கியோட்டோ உடன் பாடுதான், செல்வந்த நாடுகள் தமது கார்பன் வெளியேற்ற அளவை குறைப்பது தொடர்பில் அவற்றை சட்டப்படி கட்டுப் படுத்தக் கூடிய ஒரே ஆவணம் என்று அவை வாதிட்டன.

ஆனால், பல தொழில்வள நாடுகள் புதிய காலநிலை ஒப்பந்தம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று கோருகின்றன. 11 வருடமாக அமலில் இருக்கும் கியோட்டோ ஒப்பந்தத்தில் அதி வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகள் உள்ளடக்கப்படவில்லை. இந்த முரண்பாடான நிலைப்பாடுகள், தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த ஐ.நா.வின் வருடாந்த காலநிலை மாநாட்டில் ஒரு சுமூகமாக தீர்வு எட்டப் படவில்லை. இந்த இழுபறிநிலை காரணமாக கார்பன் வெளி யேற்றம் அதிகரித்து அதன் மூலமான அச்சுறுத்தல்களை தாம் அனுபவிக்க நேரிடும் என்று வளரும் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கவலை வெளியிட்டனர்.
முன்னதாக காலநிலை மாற்றம் குறித்த புதிய ஒப்பந்தத்துக்கான எதிர்பார்ப்புக்கள் குறைந்து வந்தபோதிலும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி குறித்த பேச்சுவார்த்தைகள் பற்றி சிறிதளவாவது இருந்தது.
ஆனால், கடந்துபோன சமரசப் பேச்சுக்களில் ஒரு பரந்துபட்ட பொது நிகழ்ச்சித் திட்டத்துக்கான உடன்பாடுகள் ஏற்படாததால்,தனிப்பட்ட விவகாரங்கள் முன்னிலைப்படுத்தப்படத் தொடங்கிவிட்டன. சில செல்வந்த நாடுகளைப் பொறுத்தவரை, இவையெல்லாவற்றையும் உள்ளடக்கியதாக ஒரு உடன்பாடு வரவேண்டும் இல்லாவிட்டால், எதுவும் இல்லை என்று கருத்தில் அவை இருக்கின்றன. கார்பன் வெட்டு தொடர்பில் சட்டரீதியாக அனைவரையும் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு உடன் படிக்கையை ஏற்க மறுக்கும் வளரும் நாடுகளுக்கு எதிராக செல்வந்த நாடுகளின் கருத்துக்கள் இருந்தன.
கார்பன் வெளியேற்ற குறைப்பு விவகாரத்தில் இருதரப்பும்  (வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள்)  இன்னமும் இழுபறியில் இருக்கும் நிலையில், அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய தான புதிய காலநிலை உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று மிகவும் வளரும் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. அது நடந்தால்கூட அடுத்த வருடம் நடக்கக்கூடிய ஐ.நா.வின் காலநிலை மாநாடு வரை அது தொடரரும்.
இந்த நிலையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி பற்றித்தான் தாம் மிகுந்த கவலை கொண்டிருப்பதாக வளரும் நாடுகள் கூறுகின்றன.
இருந்த போதிலும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்காக அண்மை வருடங்களில் வழங்கப்பட்ட சிறிய அளவிலான நிதியைக்கூட இந்த வளரும் நாடுகள் துஷ்பிர யோகம் செய்வதாகவும் பல வளரும் நாடுகள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மாநாட்டின் புதிய தீர்மானங்கள்
பருவநிலை மாற்றம் தொடர்பான புதிய ஒப்பந்தத்தை 2015-ஆம் ஆண்டுக்குள் மேற்கொள்ள வேண்டும் என டர்பன் நகரில் நடைபெற்ற மாநாட்டில் உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்த ஒப்பந்தம் 2020-ஆம் ஆண்டிலிலிருந்து நடை முறைக்கு வரும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம்:
பருவநிலை மாற்றம் தொடர்பாக இப்போது நடைமுறையில் உள்ளது கியோட்டோ ஒப்பந்தம். 2008-ஆம் ஆண்டில் இருந்து 2012-ஆம் ஆண்டுக்குள் உலகின் வெப்பநிலையை 5 சதவீத அளவுக்கு குறைக்க இந்த ஒப்பந்தத்தின் மூலம் வகை செய்யப் பட்டது. இந்த அளவானது 1990-ஆம் ஆண்டுக்கும் முன்பிருந்த நிலையாகும். இதன்படி பசுமை இல்ல வாயுவை (கார்பன் டை ஆக்ஸைடு) அதிகம் வெளியிடும் நாடுகள் இந்த அளவை எட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் 194 நாடுகளின் பிரதிநிதிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். விரைவாக முடிய வேண்டிய இந்த மாநாட்டின் பேச்சுவார்த்தை இந்தியா மற்றும் சீனாவின் எதிர்ப்பு காரணமாக 36 மணி நேரம் தாமதமாக முடிவுற்றது. இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளே பசுமை இல்ல வாயுவை அதிகளவு வெளியிடுவதாகவும், இந்நாடுகள்தான் புதிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு கருத்துத் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்தியாவும், சீனாவும் புதிய கட்டுப்பாடுகளினால் தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், லட்சக்கணக்கான மக்கள் வறுமையை எதிர்நோக்க நேரிடும் என்றன.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இந்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன், ஐரோப்பிய கூட்டமைப்பு தெரிவிக்கும் திட்டத்தில் அடங்கியுள்ள விஷயங்கள் என்ன என்பது தெரியாமலே, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை எங்கள் நாட்டினால் பணயம் வைக்க இயலாது என்று தெரிவித்தார். மேலும் தங்களைப் பிணையாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சுற்றுப்புறச் சூழல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான பொறுப்பு அனைவருக்கும் சமமானதே என்றும் அவர் தெரிவித்தார். தொழில்மயமாக்கப்பட்ட நாடு களைவிட, வளரும் நாடுகளின் பொறுப்புணர்ச்சி இவ் விஷயத்தில் குறைவு என்ற வாதத்தையும் அவர் நிராகரித்தார். ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆணையர் கோனி ஹெடிகார்டு மற்றும் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசி ஓர் சமரச முடிவை எட்ட வேண்டும் என்றும் பேசப்பட்டது. இதையடுத்து இரு தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து இருதரப்பினரும் 2015-ஆம் ஆண்டுக்குள் ஓர் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஒப்புக் கொண்டனர். மேலும் சுற்றுச் சூழல் மேம்பாட்டுக்கென வளரும் நாடுகளுக்கு நிதியளிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.  அதுவரை கியோட்டோ ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைப் பின் பற்றுவதாக ஐரோப்பிய கூட்டமைப்பு தெரிவித்தது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சீனப் பிரதி நிதிகளின் தலைவர் ஸிஸன்ஹுவா  அமையவுள்ள ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான அமைப்பின் விதிகளின்படியே அமையும் என்று தெரிவித்தார். இந்தியாவின் கருத்துகள் குறித்துத் தெரிவித்த ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆணையர் ஹெடிகார்டு, தனது பொருளா தாரத்துக்கு ஆபத்தான முடிவை எடுக்கும்படி இந்தியாவைத் தாங்கள் வலியுறுத்தவில்லை என்றும், அந்நாட்டின் வளர்ச்சியை முழுமையாக அங்கீகரிப்பதாகவும் தெரிவித்தார். அதேசமயம் ஒப்பந்தம் என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என்பதையும் மறுப்பதற்கில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மாநாட்டில் எந்த உறுதியான முடிவும் எட்டப்படாமல் அரைகுறையாக முடிந்துள்ளது. கார்பன் உமிழ்வை கட்டுப் படுத்தாத நிலையில் பூமியின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் உயரும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ள னர். அதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் பயங்கரமான விளைவுகள் இந்தியாவில் மட்டும் எப்படியிருக்கும். சில எடுத்துக்காட்டுகள்:
 இந்தியா முழுவதும் 1 செ.மீ. கடல்மட்டம் சராசரியாக உயர்ந்து வருகிறது. கடல்மட்டம் ஒரு மீட்டர் உயர்ந்தால் இந்திய கடற்கரைப் பகுதியில் 1,700 சதுர கி.மீ. மூழ்கி விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 மேற்குவங்கம் மாநிலத்தின் சுந்தரவனக் காடு பகுதியில் கடல்மட்ட உயர்வால் ஒரு தீவு முற்றிலும் மூழ்கிவிட்டது. 6000 குடும்பங்கள் வாழ்விழந்துள்ளன. 40 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். கடல்மட்டம் உயரும் நகரங்கள்  பட்டியலிலில் சென்னை, நாகப்பட்டினம் உள்ளன.
 இந்திய விவசாயம் 65 சதவீத பாதிப்பை சந்திக்கலாம். ஏற்கனவே இந்த ஆண்டு பருவமழை பொய்த்தது.
 ஒவ்வொரு 0.5 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வுக்கும் 17 முதல் 30 சதவீத அரிசி, கோதுமை விளைச்சல் பாதிக்கப் படும். ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால், 40-50 லட்சம் டன் கோதுமை விளைச்சல் குறையும்.
 50 சதவீத இந்தியக் காடுகள் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், நமது பருவநிலை காடுகளைச் சார்ந்து வாழும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
 2035-ஆம் ஆண்டுக்குள் வடக்கில் ஓடும் ஜீவநதிகளின் தாயான இமயமலை பனிச்சிகரங்கள் முற்றிலும் மறைந்து விட வாய்ப்புள்ளது.
 இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 27 சதவீதம் பாதிக்கப்படலாம்.
 கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யா போன்ற நோய்களின் தாக்குதல் அதிகரிக்கும்.
 இதுவரை 1998-ஆம் ஆண்டுதான் மிக வெப்பமான ஆண்டு. உலகின் மிக வெப்பமான 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகள், 1980-க்குப் பிறகே வந்துள்ளன. 2009 மிக வெப்பமான ஐந்தாவது ஆண்டு.
 20-ஆம் நூற்றாண்டில் பூமியின் சராசரி வெப்பநிலை 0.6 டிகிரி அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 2050க்குள் குளிர்கால சராசரி வெப்பநிலை 3.2 டிகிரி வரை, கோடை காலத்தில் சராசரி வெப்பநிலை 2.2 டிகிரி வரை உயர்ந்து விடும். ஆகையால் வல்லரசு இந்தியா என்ற லட்சியத்தைவிட பசுமையான இந்தியா என்பதே இன்று அவசியமான லட்சியம் ஆகும்.

இணையம் – ஓர் இனிய தோழன்

1. இன்டர்நெட் தான், மக்களை அவர்கள் வசிக்கும் இடத்தின் அடிப்படையில் அல்லாமல், அவர்களின் பொதுவான ஆர்வம் மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் சமுதாயத்தை அமைக்க உதவியுள்ளது. தமிழ் பேசுவோர், டிஜிட்டல் போட்டோ எடுப்போர், ரஜினி ரசிகர்கள், கல்லூரி அறைத் தோழர்கள் எனப் பல குழு சமுதாயங்களை அமைக்க முடிகிறது. இதனால்நல்ல உறவு தொடர்கிறது.
2. உலக மக்கள் அனைவரும் கேட்கும் வகையில் உங்கள் குரலை எடுத்துத் தரும் பெரிய மெகா போன் உண்டா? இல்லை, ஆனால் இன்டர்நெட் அந்த மெகாபோனைத் தந்துள்ளது. நீங்கள் எது குறித்து வேண்டுமானாலும் உங்கள் கருத்தைப் பதிக்கலாம்; அதனை உலக மக்கள் அனைவராலும் படிக்க முடியும்.
3.வெறும் பேச்சு, கருத்து சுதந்திரம், தகவல் பரிமாற்றம் மட்டுமல்ல, வர்த்தகம் மேற்கொள்ளும் மிகப் பெரிய சந்தையாக இன்டர்நெட் மாறி உள்ளது. பல கோடிக்கணக்கான டாலர் அளவில் வர்த்தகம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஆப்பிள் ஐ போனுக்கான பாடலாயினும் சரி, நீங்கள் உருவாக்கும் சிறிய படகுக்கான உபரி உபகரணங்களானாலும் சரி, இணையத்தில் உங்களால் வாங்க முடியும்.
4. பதிவு செய்யப்பட்ட வெப்சைட்டு களின் எண்ணிக்கை தற்போது, நெட்கிராப்ட் அமைப்பின் கணக்குப்படி, 25 கோடியைத் தாண்டியுள்ளது.
5. தற்போது ஏற்பட்டு வரும் இன்டர்நெட் புரட்சி கிளவ்ட் கம்ப்யூட்டிங் ஆகும். இணையத்திலேயே சாப்ட்வேர் தொகுப்புகளைப் பெற்று, நமக்கான பைல்களை உருவாக்கிக் கொள்ள முடியும். நம் கம்ப்யூட்டரில் அவை தேவையில்லை.

பற்களில் இடைவெளி தவிருங்கள்

“பல் இல்லேன்னா சொல் போச்சு’ என்ற சொலவடை பழக்கத்தில் உள்ளது. முகத்தின் வடிவத்தை, கட்டமைப்புடன் வைப்பதில், பல்லுக்கு இன்றியமையாத பங்கு உண்டு.
பற்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை எனில், வெகு சீக்கிரமே சொத்தை ஏற்பட்டு, பல பிரச்னைகளைக் கொடுத்து விடும்.
அனைவரும், ஆண்டுக்கு ஒரு முறை, பல் மருத்துவரிடம் சென்று, பற்களைச் சுத்தம் செய்து, சீர்கேடு இருப்பின், சரி செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
நாற்பது வயதைத் தாண்டினாலே, பற்களில் இடுக்கு விழத் துவங்கி விடும். இதைப் பலரும் கவனத்தில் கொள்வதே இல்லை; கவனித்தாலும், முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை.
பற்களைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ளாவிட்டால், முகம் விகாரமடையத் துவங்கும். பல் நகர்ந்த இடத்தில் ஏற்படும் குழிக்கு, மாற்றுப் பல் பொருத்திக் கொள்ளலாம்.

பல் குறித்த மேலும் பல சந்தேகங்களுக்கு, இதோ சில அறிவுரைகள்:
பற்சொத்தை, நுண்ணிய நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்கள் உள்ள பகுதியை பாதிக்கும்போது, பல்வலி ஏற்படுகிறது. பற்சொத்தை ஆழமாக ஊடுருவியதால் வேர் சிகிச்சை மூலம் சுத்தம் செய்து, பல்லை அடைக்க வேண்டும்.
இச்சிகிச்சையின் போது பல்லிற்கு உணர்வு அளிக்கக் கூடிய நரம்புகள் மற்றும் ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுவதால் அவை அகற்றப்படும். பல்லுக்கு நீர்ச்சத்துகள் இல்லாமல் இருந்தால் எளிதில் நொறுங்கும்.
வேர்சிகிச்சை முடிந்தபின், பல் மேல், “கேப்’ செய்து பொருத்த வேண்டும். பல்லின் ஒரு பகுதி உடைந்து இருந்தால், வேர் சிகிச்சை செய்த வேர்களின் உள்ளே, “பேஸ்ட்’ போன்ற சிறிய பொருளால் பல்லை உறுதிப்படுத்தி, “கேப்’ செய்யலாம். இரண்டாக உடைந்து இருந்தால் அப்பல்லை எடுத்துவிட்டு செயற்கை பல்லை பொருத்த வேண்டும்.

குழந்தைகள் விளையாடும் போது…
ஸ்கேட்டிங், குத்துச்சண்டை, கால்பந்து விளையாட்டுக்களில் குழந்தைகளுக்கு முகத்தில் அடிபட வாய்ப்புகள் அதிகம். இவர்கள் “மவுத் கார்டு’ உபகரணத்தை வாயினுள் பொருத்தி விளையாடலாம். இது ரப்பர் போன்று வளையும் தன்மை உடையது.
குழந்தைகள் தாடை அளவுக்கு ஏற்றாற்போல செய்யலாம். இதனால் விளையாடும்போது நேரடியாக பற்களுக்கு வரும் பாதிப்பை தவிர்க்கலாம்.

பல் இடைவெளிக்கு…
எல்லா பற்களிடையேயும் இடைவெளி இருந்தால் அவற்றை அடைப்பது தவறு. அப்படி அடைக்க முயன்றால், பற்களின் ஈறுகள் பாதிக்கப்படலாம். பற்கள் அளவு பெரிதாகவும் செயற்கையாகவும், தோற்றமளிக்கும். “கிளிப்’ அணிவது சிறந்த வழி.
இதன் மூலம் பற்கள் தாடை எலும்பினுள் நகர்ந்து நெருங்குவதால், நிரந்தர சிகிச்சை முறையாக கருதப்படுகிறது. “கிளிப்’ அணிய தயக்கமாக இருந்தால், தற்போது பற்களின் மேல் பொருந்தக் கூடிய நிறமில்லாத, கவர் போன்ற உபகரணங்கள் வந்துள்ளன.
அதை குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு அணிய வேண்டும். பற்கள் நகரத் துவங்கும்போது, வேறு, “செட்’ வழங்கப்படும். பல்சீரமைப்பு நிபுணரை கலந்து ஆலோசனை பெற்று, தொடர் சிகிச்சையாக குறைந்த பட்சம் ஒரு ஆண்டு காலம் இவற்றை அணிந்தால் பற்களை சீராக்கலாம்.
– டாக்டர் எஸ்.முத்துராமன்,
பல் மருத்துவர், மதுரை.

சுக பிரசவத்திலும் மயக்கவியலின் பங்கு

நம் உடலை தாக்கும் ஒவ்வொரு நோய்க்கும், அந்நோயை குணப்படுத்தும் வல்லமை மிக்க டாக்டர்கள் உள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட ஒரு நோயை குணப்படுத்துவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள். சில நோய்கள் மற்றும் பாதிப்புகளுக்கு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை இருப்பின், டாக்டர்களுக்கு மிகமிக முக்கிய பங்காற்றுபவர்கள், மயக்கவியல் நிபுணர்கள்.
அறுவை சிகிச்சை தேவைப்படும் நபருக்கு, முதலில் மயக்க மருந்து கொடுக்க வேண்டும். மயக்க மருந்து கொடுத்த பின், ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் அறுவை சிகிச்சையை துவக்கி, குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டியது அவசியம்.

உடல்நிலை பரிசோதனை
அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்கு, உடனடியாக மயக்க மருந்து செலுத்துவது ஆபத்தில் முடியும். நோயாளியை மயக்கமடைய செய்வதற்கு முன், அவர் உடல்நிலையை பரிசோதிப்பது முக்கியம். அவர் உடல் மயக்க மருந்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் உள்ளதா என்பதை முதலில் அறிந்து, அதன் பின்தான் மயக்க மருந்து செலுத்த வேண்டும்.
ரத்தத்தில், செல், ஹீமோகுளோபின், யூரியா, சர்க்கரை உட்பட அனைத்தும், சிறுநீர், மார்பு எக்ஸ்ரே, ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி., தேவைப்பட்டால் டிரட்மில் பரிசோதனையும் செய்து, இருதயம் உள்ளிட்டவை சரியாக இயங்குவதை உறுதி செய்வது அவசியம். இந்த நடைமுறையை மயக்கவியல் நிபுணர் தெரிவித்து, அதன் பின் பரிசோதனைகளை செய்வதை விட, அறுவை சிகிச்சை தேவைப்படும் நபருக்கு, அறுவை சிகிச்சைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே இப்பரிசோதனைகளை மேற்கொண்டு, அதன் அறிக்கையை தயாராக வைத்திருப்பது, மருத்துவமனைகளின் முக்கியப் பணி.
இந்த பரிசோதனைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், நோயாளிகள் மற்றும் உறவினர்கள், “பணம் செலவாகுமே…’ என்று, இவற்றை தவிர்க்க முயல்கின்றனர்.
நோயாளி மயக்க நிலையில் இருக்கும் போது ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பக்க விளைவுகளை தவிர்க்க, இப்பரிசோதனைகள் மிகமிக அவசியம். இருந்தாலும், உயிருக்கு போராடும் நோயாளிக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு இந்த பரிசோதனைகள் செய்வதில்லை; அனுபவம் வாய்ந்த மயக்கவியல் நிபுணர் மூலம், அந்நோயாளிக்கு தேவையான மயக்க மருந்து செலுத்தி, சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

சிகிச்சை முறை
அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நபரை, முழு மயக்க நிலைக்கு கொண்டு சென்று, மூச்சுக்குழாய் வழியாக டியூப் மூலம் ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு செலுத்தப்படுகிறது. ஆக்ஸிஜன், நோயாளியின் சுவாசத்துக்காகவும், நைட்ரஸ் ஆக்சைடு மூளை மற்றும் திசுக்களை கட்டுப்படுத்தும் பணியையும் செய்கின்றன.
அறுவை சிகிச்சை முடிந்தவுடன் சில மருந்துகளை நோயாளிக்கு செலுத்தி, மயக்க நிலையை சிறிது சிறிதாக எடுக்க வேண்டும். நோயாளிக்கு நினைவு திரும்பியவுடன் தனி அறையில் அல்லது அவசர சிகிச்சைப் பிரிவில், போதிய மருத்துவப் பாதுகாப்புடன் சில மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.
உடல் ரீதியான எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை, ஏற்பட வாய்ப்பில்லை என்பதை உறுதிசெய்த பின், நோயாளிக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அனுமதிக்கப்படுவார். மயக்க நிலைக்கு கொண்டு செல்ல செலுத்தப்படும் மருந்தின் அளவு அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
குறிப்பிட்ட பகுதி முழு மயக்க நிலை இல்லாமல், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் செயலிழக்கச் செய்யலாம். குறிப்பாக, வயிற்றுக்கீழ் பகுதி முழுவதையும் செயலிழக்கச் செய்து, அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.
இதுபோன்ற சிகிச்சையின் போது, முதுகு தண்டில் மயக்க மருந்து செலுத்தப்படுகிறது; அறுவை சிகிச்சை செய்யப்படும் நேரத்துக்கு ஏற்ப, சிறிது சிறிதாக மருந்து செலுத்தப்படுகிறது. இதுபோன்ற சிகிச்சை முறையில் வலி குறைவாக இருக்கும்; ஆபத்தும் ஏற்படாது.

உறுப்பு
இதேபோல், லோக்கல் அனஸ்தீசியா முறையும் உள்ளது. இதில், ஒரு உறுப்பை மட்டும் செயலிழக்கச் செய்து அந்த உறுப்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நபர், ஏற்கனவே ஏதாவது நோய் பாதிப்புக்காக மருந்து, மாத்திரைகளை தொடர்ந்து உட்கொண்டு வருபவராக இருந்தால், அவற்றை அறுவை சிகிச்சை செய்யும் நாள் வரை தொடர்ந்து உட்கொள்ளலாம்; நிறுத்தக் கூடாது. டாக்டரின் பரிந்துரையின் பேரில், ஒரு சில மாத்திரைகளை மட்டும் தவிர்க்க வேண்டும்.

பிரசவம்
பிரசவம் என்பது, தாயின் மறு பிறப்பு. சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை முறையில் பிரசவம் பார்க்கப்படுகிறது. இதில், சிசேரியன் முறைக்கு மட்டுமே மயக்கவியல் நிபுணர்களின் பங்களிப்பு இருந்து வந்தது.
தற்போது சுகப்பிரசவத்துக்கும் மயக்கவியல் நிபுணரின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில், “பெயின்லஸ் எபிடூரல் டெக்னிக்’ முறையில், கர்ப்பிணிகளுக்கு வலியில்லாமல் சுகப்பிரசவம் பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் இம்முறையில் பிரசவங்கள் ஒரு சில மருத்துவமனைகளில் நடக்கின்றன. இம்முறையில் கர்ப்பிணியின் முதுகுத்தண்டுவடத்தில் மெல்லிய டியூப் ஒன்றை செருகி, அதன் வழியாக மருந்தை தேவையான அளவு சிறிது சிறிதாக செலுத்தி வந்தால், சுகப்பிரசவத்தின் போது வலி ஏற்படாது.

– இ.எஸ்.ஐ., மருத்துவமனை முன்னாள் மயக்கவியல் துறை நிபுணர் மற்றும் கோவை அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., டாக்டர் சிவப்பிரகாசம்.