Daily Archives: பிப்ரவரி 19th, 2012

கடுமையான மின் பற்றாக்குறையை சமாளிக்க 5 அம்ச திட்டம்: அரசு ஒப்புதல்

தமிழக மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க, ஐந்து விதமான திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வீடுகளுக்கான மின் வெட்டை பெருமளவு குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு தினமும் 11 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதில், தற்போது 3,500 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை உள்ளது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க, தமிழகம் முழுவதும் எட்டு மணி நேர மின்வெட்டு அமலாகிறது. மின்வெட்டால், வணிக நிறுவனங்கள், தொழிற்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., போன்ற பொதுத்தேர்வுகளும், மற்ற வகுப்புகளுக்கு, முழு ஆண்டுத்தேர்வும் வருவதால், மின்வெட்டால் படிக்க முடியாமல், மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, தமிழக மின்துறை அதிகாரிகளுடன், முதல்வர் ஜெயலலிதா கடந்த 17ம் தேதி ஆலோசனை நடத்தினார். இதில், தலைமை செயலர் தேவேந்திரநாத் சாரங்கி, மின்துறை முதன்மை செயலர் ரமேஷ்குமார் கண்ணா, மின்வாரிய சேர்மன் ராஜிவ் ரஞ்சன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், தமிழகத்தின் மின்சார தேவை எவ்வளவு, தற்போது மின்வாரியத்திடம் உற்பத்தியாகும் அளவு, மத்திய தொகுப்பிலிருந்து வரும் அளவு, தனியார் மற்றும் தன் பயனீட்டு நிலையத்தினர், காற்றாலை, மரபுசாரா எரிசக்தி மூலம் கிடைக்கும் மின்சார அளவு ஆகியவை குறித்து, பவர் பாயின்ட் பிரசன்டேஷன் மூலம் அதிகாரிகள் விளக்கினர். இதையடுத்து, மாணவர்களின் படிப்புக்கு இடையூறு இல்லாத வகையிலும், சாதாரண பொதுமக்களுக்கு ஓரளவாவது மின்சாரம் தர வேண்டும் என்ற அடிப்படையிலும், தொழிற்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த முதல்வர் ஆலோசனை கூறினார். இதன்படி, பொதுமக்களை பெரிய அளவில் பாதிக்காத வகையில், ஐந்து விதமான திட்டங்கள் மூலம், மின் தட்டுப்பாட்டை சமாளிக்க, அரசின் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

* அடிக்கடி முன்னறிவிப்பில்லாமல், மின்சாரம் தடைசெய்வது நிறுத்தப்படும்.

* பொதுமக்களுக்கான வீட்டு மின் பயன்பாடுக்கு, தற்போதைய எட்டு மணி நேர மின்வெட்டை குறைத்து, அதிகளவில் மின் வினியோகம் தரப்படும்.

* சென்னை நகருக்கு இரண்டு மணி நேரமும், சென்னைப் புறநகர் முதல் மற்ற அனைத்து மாவட்ட பகுதிகளுக்கும், ஐந்து மணி நேரத்திற்கு குறைவாகவும் மின்வெட்டு அமல்படுத்தப்படும்.

* மாணவர்கள் படிக்கும் நேரமான மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, மிகக்குறைந்த அளவுக்கு மின்வெட்டு அமல்படுத்தப்படும். இதற்காக, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, உயரழுத்த வணிகரீதியிலான மின் இணைப்புகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தனியாக கூடுதல் மின்வெட்டு அமல்படுத்தப்படும். இதில் சேமிப்பாகும் மின்சாரத்தை, மாணவர்கள் படிப்புக்காக வீடுகளுக்கு தரப்படும்.

* உயரழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக இணைப்புகளுக்கு, 20 சதவீதமாக இருக்கும், மின் பயன்பாடு கட்டுப்பாட்டை, 40 சதவீதமாக உயர்த்தி அமல்படுத்தப்படும்.

* தொழிற்சாலை சங்கங்கள் மற்றும் தொழிலதிபர்களின் கோரிக்கைப்படி, அவர்கள் விருப்பப்படும் வார நாட்களில் ஒரு நாள், 24 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும். இதுதொடர்பாக, தொழிற்சாலை சங்கங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மனு அளித்தால், அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.

* இனி அனைத்து இடங்களுக்கும், குறிப்பிட்ட நேரத்தை அறிவித்து, அதன்படி மட்டுமே மின்வெட்டு அமல்படுத்தப்படும். இதன்மூலம், மின்வெட்டு நேரத்தை கணக்கிட்டு, ஒவ்வொரு தரப்பினரும் தங்கள் பணிகளை திட்டமிடலாம். இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசின் ஆலோசனைப்படி, மின்துறை அதிகாரிகள் திட்டங்கள் தயாரித்து வருகின்றனர். மின்சார வார விடுமுறை குறித்து, தொழிற்சாலை சங்கங்களிடம் அவர்களது ஆலோசனை மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. இந்த மனுக்களின் முடிவுப்படி, விடுமுறை அமலாகும். கூடுதல் மின்வெட்டு முறை, நாளை முதல் பரீட்சார்த்த முறையில் அமலாக உள்ளது. இதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை ஆய்வு செய்த பின், முழுமையான அளவில் நடைமுறையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

தொழிற்சாலைகளுக்கு “வாட்’ சலுகை: தொழிற்சாலைகள் மற்றும் உயரழுத்த வணிக இணைப்பு உள்ளவர்கள், டீசல் ஜெனரேட்டர்களை அதிகளவில் பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். டீசல் விலை அதிகமாக உள்ளதால், அவர்களுக்கு வாட் வரியில், உள் பயனீட்டு சலுகை வழங்கவும், மின்துறையிலிருந்து அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோல், பெரிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களுக்கு வெளிச்சந்தையிலும், தனியார் மின்சார நிலையங்களிடமும், தனியாக மின்கொள்முதல் செய்து கொள்ளவும், மின்துறையிலிருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அன்பே சிவம்!-பிப். 20 மகாசிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி எந்த நாளில் வருகிறதோ, அது, “சிவராத்திரி’ இரவு ஆகும். இதை, “மாத சிவராத்திரி’ என்பர். அந்த இரவுகளில், மாசி சிவராத்திரி மகிமை மிக்கதாக இருப்பதால், அது, “மகா சிவராத்திரி’ எனப்படுகிறது.
திருமாலை, “மகாவிஷ்ணு’ என்பது போல சிவனை, “மகாசிவன்’ என்பதில்லை. ஆனால், அவருக்கு விருப்பமான இரவு பொழுதுக்கு, “மகா’ என்ற அடைமொழி சேர்த்துள்ளனர். இதற்கு காரணம் உண்டு.
சிவனுக்கு பல திருநாமங்கள் உண்டு. அதில் எட்டு மிக உயர்ந்தது. அதில் ஒன்று, “மகான்’ என்பதாகும். பவன், சர்வன், ஈசானன், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன் ஆகியவை மற்ற பெயர்கள்.
கோவில்களில் சிவனுக்கு சிறப்பு பூஜை நடக்கும் போது, அஷ்டோத்திரம் எனும், 108 நாமங்களால் அர்ச்சிப்பர். இதில், கடைசி நாமம், “மஹதே தேவாய நமஹ!’ இதையே, “மகாதேவன்’ என்கின்றனர்.
பெரும்பாலான கோவில்களின் மூலஸ்தானத்தில் சிவன், லிங்க வடிவமாக இருக்கிறார். இந்த லிங்கத்தைக் கூட, “மகா லிங்கம்’ என்பர். சிவனுக்கு ஏன் லிங்க வடிவம் தரப்பட்டது என்பதற்கும் காரணம் உண்டு.
“லிங்கம்’ என்னும் சொல்லுக்கு, “அடையாளம்’ அல்லது “அறிகுறி’ என்று பொருள். விஷ்ணு, அம்பாள், முருகன் உள்ளிட்ட பிற தெய்வங்களுக்கு கண், காது, மூக்கு, வாய் என, எல்லா உறுப்புகளும், மனிதர்களைப் போலவே இருக்கிறது. ஆனால், லிங்கம் ஒரு நீள் வட்ட வடிவமாக இருக்கிறது. நாம் வானத்தை அண்ணாந்து பார்க்கிறோம். அதன் நான்கு மூலைகளையும் பார்த்தால் ஒரு வளைவு இருப்பதைப் பார்க்கலாம். இந்த பிரபஞ்சம் வளைந்திருப்பது போல, லிங்கமும் வளைந்துள்ளது. ஆக, பிரபஞ்சமே சிவனின் வடிவம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதனால் தான் அவரை, “மகேஸ்வரன்’ என்றும் சொல்வர்.
மகேஸ்வரன் என்ற சொல்லுக்கு, ஆட்சி செலுத்து பவன், திமான் தலைவன் என்ற அர்த்தங்கள் உண்டு. ஈஸ்வரனை, “ஈச்வரன்’ என்றே உச்சரிக்க வேண்டும். “ஈச்’ என்றால், “உரிமை’ என்று அர்த்தம். ஆக,”ஈஸ்வரன்’ என்ற சொல்லுக்கு, “உரிமையாளர்’ என்று பொருள். இந்த உலகத்துக்கே உரிமையாளராக இருக்கிறார் சிவன். அந்த ஈஸ்வரனுக்கு, “மகா’ என்னும் அடைமொழி சூட்டி, “மகேஸ்வரன்’ என்று பெருமைப்படுத்தியுள்ளனர்.
சிவனை, “மகாசிவன்’ என்று அழைப்பதற்கு பதிலாக, “சதாசிவன்’ என்ற பெயரால் அழைப்பர். இந்த சொல்லுக்கு ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு. மகா கணபதி, மகாலட்சுமி, மகாசாஸ்தா, முருகனுக்கு கூட, “மகாசேனன்’ என்ற பெயர்களெல்லாம் உண்டு. ஆனால், சிவனுக்கு மட்டுமே, “சதா’ என்ற சிறப்புச் சொல் உண்டு. வேறு எந்த தெய்வத்தின் பெயரிலும், “சதா’வைப் பயன்படுத்து வதில்லை. “சதா’ என்றால், “எங்கும், எப்போதும்’ என்று பொருள் கொள்ளலாம். எங்கும் சிவம், எதிலும் சிவம், எப்போதும் சிவம்’ என்று சதாசிவத்தைப் பொருள்படுத்தலாம். 11 மற்றும் 25 தலைகள் கொண்ட சதா சிவத்தை, சில கோவில் கோபுரங்களில் பார்க்கலாம்.
சிவன் என்பது மிகப் பழமையான சொல்லாகும். உலகின் முதல் நூல் என புகழப்படும் ரிக் வேதத்தில், “சிவ’ நாமம் வருகிறது. அமரகோசம் என்ற சமஸ்கிருத அகராதியில், “சிவம்’ என்றால் கல்யாணம், மங்களம், பத்ரம்(சுபம்) என்ற அர்த்தங்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த வார்த்தைகளை உற்று நோக்கினால் நன்மை, மகிழ்ச்சி, சவுக்கியம், லட்சுமிகரம் என்றே பொருள் கொள்ளலாம். இவை அனைத்துக்கும் அடிப்படை அன்பு. அன்பிருக்கும் இடத்தில் தான் இவை அனைத்தும் இருக்கும். இதனால் தான், “அன்பே சிவம்’ என்கின்றனர்.
கலியுகத்திற்கு மிகவும் தேவையானது அன்பு. சிவனை வணங்கினால் அன்பு ஊற்றெடுக்கும். சிவராத்திரி நன்னாளில், பிறர் மீது அன்பு செலுத்த உறுதியெடுப்போம்.

கம்ப்யூட்டர் பராமரிப்பு

நம் சாலைகளில் ஓடும் பெரிய லாரிகளைக் கவனித்தால், அதன் நீளமான பேட்டரி பெட்டிகளில் தினமும் என்னைக் கவனி என்று எழுதப் பட்டிருக்கும். அதில் உள்ள டிஸ்டில்ட் வாட்டர் மாற்றுவது, சேர்ந்திருக்கும் தூசு மற்றும் துருவினை நீக்குவது போன்ற வேலைகளை அன்றாடம் கவனிக்க வேண்டும். அது போல லாரி மட்டுமின்றி, ஆட்டோ மொபைல் வாகனம் ஒவ்வொன்றையும் அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் அது ஓடாத மோட்டார் வாகனமாக மாறிவிடும்.
அதே போல கம்ப்யூட்டரிலும் சில விஷயங்களைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். அவற்றைப் பார்க்கலாமா!
1. தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள் பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பதுதான். இதற்கு சி கிளீனர் போன்ற இலவச புரோகிராம்கள் நமக்கு உதவுகின்றன.
2. இன்டர்நெட் இணைப்பு பெற்று இணைய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க்கில் பணியாற்று பவர் என்றால் தினந்தோறும் கூட அப்டேட் செய்திடலாமே. இதற்கென ஓரிரு நிமிடங்கள் தானே ஆகும்.
3. கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் (Defrag) செய்வது மிக அவசியம். இதற்கான கால அவகாசம் நீங்கள் புரோகிராம்களை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்வதனைப் பொறுத்துள்ளது. இருப்பினும் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்வது நல்லது.
4. சிகிளீனர் போல கிளீன் மை டிஸ்க் புரோகிராம்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். சிலர் வாரத்தில் மூன்று முறை இதனைப் பயன்படுத்து வார்கள். டெம்பரரி பைல்களை நீக்குகை யில் ரீசைக்கிள் பின் மற்றும் இன்டர்நெட் டெம்பரரி பைல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனவா என்று பார்க்கவும்.
5.இன்னொரு வழியும் உள்ளது. ஸ்டார்ட் சென்று அங்கு கிடைக்கும் ரன் பாக்ஸ் (Start>Run) செல்லுங்கள். %temp% என டைப் செய்து ஓகே கிளிக் செய்திடுங்கள். உடனே தற்காலிக பைல்கள் உள்ள போல்டர்கள் அனைத்தும் கிடைக்கும். வேறு எந்த தயக்கமும் இன்றி அனைத்தும் டெலீட் செய்திடுங்கள். ஒரு சில பைல்கள் அல்லது போல்டர்கள் அழிக்கப்பட முடியவில்லை என்று செய்திகள் வரலாம். எவ்வளவு அழிக்க முடியுமோ அவ்வளவையும் அழித்திடுங்கள்.
6. விண்டோஸ் தரும் ஆட்/ரிமூவ் புரோகிராம் மூலம் புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்தால், அது அந்த புரோகிராம் சார்ந்த பைல்களை முழுமை யாக நீக்குவதில்லை. எனவே இதற்கென உள்ள சில புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தவும். http://www.revouninstaller.com/revo_uninstaller_free_download.html என்ற தளத்தில் இந்த புரோகிராம் ஒன்று கிடைக்கிறது.
7. நீங்கள் வைத்து அவ்வப்போது அப்டேட் செய்திடும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சில மால்வேர்கள் மற்றும் ஸ்பை வேர்களை நீக்கக் கூடிய திறன் இல்லாமல் இருக்கலாம். எனவே அவற்றை நீக்குவதற்கென உருவாக்கப்பட்ட புரோகிராம்களை தினந்தோறும் இயக்கவும்.
8. கம்ப்யூட்டரை கிளீன் செய்வதைப் போல அதில் உள்ள டேட்டாவினப் பாதுகாப் பதற்கும் சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். எனவே தினந்தோறும் வேலை முடித்தவுடன் நாம் உருவாக்கிய மற்றும் திருத்திய பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
தினந்தோறும் பேக் அப் செய்தாலும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் ஹார்ட் டிஸ்க் முழுவதையும் ஒரு இமேஜாக உருவாக்கி பேக் அப் டிஸ்க்கில் வைப்பது நல்லது. இந்த் இமேஜ் இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இந்த இமேஜ் விண்டோஸ் இயக்கம் முதல் உருவாக்கிய பைல்கள் வரை அனைத்தும் தரும்.

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்!

கச்சா எண்ணெய்யைச் சுத்திகரித்து பெட்ரோல், டீசல் முதலிய எரிபொருள்கள் தயாரிக்கப்படும்போது வரும் கழிவுகள்தான் பிளாஸ்டிக்காக உருப்பெருகின்றன. இந்தப் பிளாஸ்டிக் கழிவுகள் நெடுநாட்கள் பூமியில் மட்காமல் இருப்பதால், மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது. இப்போது பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய் தயாரிக்கலாம் என்று தெரிகிறது.
சென்னை மாநகரில் தினம்தோறும் 300 டன் குப்பைகள் கொடுங்கையூர், பெருங்குடியில் சேமிக்கப்படுகின்றது. இதிலிருந்து 3,00,000 லிட்டர் அளவு கச்சா எண்ணெய் தயாரிக்கலாம். ஆனால் இதைத் தயாரிக்கத் தகுந்த தொழில் நுட்பம் தெரிந்திருப்பினும், அதற்கான ஆலைகள் வேண்டும்.
பங்களூரு மாநகராட்சி இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் இம்மாதிரியான முயற்சியில் ஈடுபட முடிவெடுத்துள்ளது. பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள எம்.கே. ஆரோமாடிக்ஸ் எனும் நிறுவனம் ஆலத்தூர் எனும் இடத்தில் இம்மாதிரி தொழிற்சாலை அமைத்து, ஏற்கனவே பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய் தயாரித்து வருவதைக் கண்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் இம்மாதிரித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, கச்சா எண்ணெய் தயாரிக்க எண்ணியுள்ளது. ஆரோமாடிக்ஸ் நிறுவனத்திடமிருந்து அவர்களது தொழிற்சாலையில் தயாராகும் கச்சா எண்ணெயிலிருந்து செய்யப்பட்ட டீஸலை வாங்க இவ்வாரியம் முடிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி கூறுகிறார்.
இந்நிறுவனத்தின் தலைவரான திரு மகேஷ் மர்ச்சென்ட இந்தத் தொழிற்சாலை தற்போது பத்து டன் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் 10,000 லிட்டர் கச்சா எண்ணெய் தயாரிப்பதாகக் கூறுகிறார்.
“பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படாததால் காற்று மாசுடைவதில்லை; பிளாஸ்டிக் கழிவுகளைத் திரவ நிலைக்கு உருக்கி அதில் சில இரசாயனப் பொருள்களைச் சேர்த்து, ஆவியய்கி, அதன் மூலமாகக் கச்சா எண்ணெய் தயாரிக்கப்படுகிறது’ என்கிறார் இவர்.
இதற்காகக் கழிவுப் பொருளான பிளாஸ்டிக்கைக் கழுவிச் சுத்தம் செய்வதற்கோ, அல்லது தனியாகப் பிரிப்பதற்கோ அவசியமில்லையாம். இவர்களால் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய்யை டீசலாகச் செய்வதற்கான தொழில்நுட்பமும் அதற்கான உபகரணங்களும் இவர்களிடம் உள்ளதாம்.
நமது மாநகராட்சியின் கஷ்டமெல்லாம் குப்பைகளில் இருந்து தனியாகப் பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்தெடுப்பதுதான். வீடுகளில் சேரும் குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்துப் போடுவதற்கான பச்சை, சிவப்பு நிற தொட்டிகள் கொடுக்கப்பட்டாலும், மக்கள் இவ்வாறு தரம் பிரித்துப் போடுவதற்கு ஒத்துழைக்கவில்லை.
இந்த நிலையைச் சமாளிக்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் வீடுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளைத் தனிப்பட்ட முறையில் விலை கொடுத்து வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளது. இதற்காகவென்றே தமிழ்நாடு அரசு சென்னை மாநகரம் முழுவதும் கலெக்ஷன் சென்டர்களை அமைக்கலாமென்றும் உள்ளது. ஒவ்வொரு கலெக்ஷன் சென்டருக்குமான செலவு 8 லட்சம் ரூபாய்களாகுமாம்.
இது தவிர, பிளாஸ்டிக் கழிவுகளைச் சாலைகளில் போடுவதையும் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க இருக்கிறது அரசு.
நாமும் அரசின் முயற்சியைப் பாராட்டுவதுடன், நமது வீடுகளில் விழும் குப்பைகளைத் தரம்பிரித்து உதவி செய்தோமானால், அரசின் முயற்சி வெற்றியடையலாமல்லவா?

`ஹெட்போன்’ ஆபத்து!

நடந்து செல்லும்போது `ஹெட்போன்’ அணிந்திருப்பவர்கள் விபத்தைச் சந்திப்பது தடாலடியாக அதிகரித்து வருகிறது, எனவே பாதசாரிகள் `ஹெட்போன்களை’ தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

செல்போன், ஐபாட் போன்ற மின்னணு சாதனங் களுக்காக ஹெட்போன்களை உபயோகிப்போர், கடுமையான விபத்தில் சிக்கிப் பாதிக்கப்படும் எண்ணிக்கை `பகீரிட’ச் செய்வதாக உள்ளதாம்.

ஹெட்போன்களை பயன்படுத்துவதால் பிரச்சினை ஏற்படுவதற்குக் காரணமாகும் நிலையை, `பிரிக்கப்பட்ட கவனம்’ அல்லது `கவனக்குறைவு பார்வையின்மை’ என்கிறார்கள் மனோவியல் நிபுணர்கள்.

அமெரிக்காவில் 2004-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை பாதசாரிகளுக்கு ஏற்பட்ட விபத்துகள் தொடர்பான பல்வேறு தகவல் தொகுப்புகளை அலசியதன் மூலம் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஹெட்போன் இல்லாமல் செல்போன் பயன்படுத்தியவர்கள், ஹேண்ட்ஸ் பிரீ உபயோகித்தவர்கள், சைக்கிள் ஓட்டிகள் ஆகியோர் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.

ஹெட்போன் பயன்படுத்தியதால் விபத்தில் சிக்கி மரணம் அல்லது காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2004- 2005-ம் ஆண்டுவாக்கில் 47 ஆக இருந்தது என்றால், அது 2010- 2011-ல் 116 ஆக இருமடங்காகியுள்ளது.

இந்த 116 விபத்துகளிலும் 70 சதவீதம், உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இதில் கால்பங்கு கேஸ்களில், மோதலுக்கு முன் ஹாரன் அல்லது எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் ஹெட்போனில் ஆழ்ந்திருந்ததால் அதைக் கவனிக்காது விபத்தில் சிக்கியிருக்கிறார்கள்.

நீங்கள் ஹெட்போன் பயன்படுத்துபவரா? கவனமாயிருங்கள்!

தேங்காய் மட்டன் கிரேவி

தேங்காயில் உள்ள சத்துக்கள் ஏராளம். அதனால் தான் கிட்டத்தட்ட எல்லா குழம்புகளிலும் தேங்காயைச் சேர்க்கிறார்கள். குழம்புகளின் ருசிக்கும், மணத்துக்கும் உதவுவதில் தேங்காய் முதன்மையானது. மட்டனுடன் தேங்காய் மிகுதியாக சேர்த்து மணக்க மணக்க கிரேவி தயாரித்துப் பாருங்கள், ருசித்துச் சாப்பிடுவீர்கள்!

தேவையான பொருட்கள்

மட்டன் – 1/2 கிலோ
மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
தனியாத்தூள் – 4 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
கசகசா – 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 5 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – 8
பட்டை – சிறு துண்டு
லவங்கம் – 3
பூண்டு – 6 பல்
வெங்காயம் – 2
தக்காளி – 2
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

* சோம்பு, சீரகம், கசகசா, இஞ்சி இவற்றை அரைக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், தனியா தூள் மற்றும் சிறிது நீர் சேர்த்து மசாலா கலவையாக்கவும்.

* தேங்காய்த் துருவல், முந்திரியை விழுதாக்கவும்.

* வாய் அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். பூண்டு பல்லை நறுக்கிச் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.

* இப்போது மசாலா பொருட்களைச் சேர்க்கவும். சுத்தம் செய்த மட்டனைச் சேர்த்து 20 நிமிடங்கள் வேக விடவும்.

* பின்னர் தேங்காய் விழுதைச் சேர்த்து, ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.

* போதுமான நீர் ஊற்றி, உப்பு சேர்த்து குக்கரில் வைக்கவும். மட்டன், நன்கு வெந்து திக்கானதும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

செப் தாமு