Daily Archives: பிப்ரவரி 23rd, 2012

தங்கத்தில் முதலீடு!

முதலீடுகள் பலவிதம். அதில் தங்கத்தில் முதலீடு செய்வது ஒரு விதம். உடனடியாக பணமாக மாறக்கூடிய அதன் தன்மையினால் தங்கத்தை லிக்விட் அசெட் (Liquid Asset) என்கிறோம். எனவே, தங்கத்தை நேரடியாக வாங்கி சேமிக்கலாம்.

கடந்த 2011 ஆம் ஆண்டில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதார சீர்குலைவு நம் நாட்டு பங்கு சந்தைகளிலும் எதிரொலித்து பங்கு சந்தை குறியீட்டு எண் (சென்செக்ஸ்) ஏறத்தாழ 24 சதவீதம் சரிவினை எதிர் கொண்டது.

அப்படிப்பட்ட நிலையிலும், 2011 ஜனவரி மாதத்தில் 10 கிராமுக்கு ரூ. 20,600 ஆக இருந்த தங்கத்தின் விலை நவம்பர் மாதத்தில் ரூ. 28 ஆயிரமாக உயர்ந்தது. அதாவது இந்த வளர்ச்சி 40 சதவீதமாக இருந்தது.

சமீப காலம் வரை நம் நாட்டில் தங்கத்தை ஆபரணங்களாக வாங்கி முதலீடு செய்வதையே அதிகம் விரும்பி வந்துள்ளோம்.

ஆனால், வேறு விதத்தில் தங்கத்தில் முதலீடு செய்யத்தக்க அளவில் கோல்டு ஈ.டி.எப் (Gold Exchange Traded Fund) என்னும் திட்டம் தற்போது பிரபலமாகி வருகிறது.

இத்திட்டத்தின்படி, தொழில் நிறுவனங்களின் பங்குகளை எப்படி பங்கு சந்தை வர்த்தகத்தின் மூலம் வாங்கவோ விற்கவோ இயலுமோ அதே போல் தங்கத்தை கோல்டு ஈ.டி.எப். திட்டங்கள் மூலமாகவும் வாங்கலாம்; விற்கலாம். இம்முறையில் பரிவர்த்தனையாகும் தங்கம் நேரடியாக தரப்படமாட்டாது. மாறாக அது வாங்கிறவரின் டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். தேவை ஏற்படும் போது பங்குகளை விற்பதைப்போல் இந்த தங்கத்தையும் விற்பனை செய்து பணமாகவோ தங்கமாகவோ வாங்கிக்கொள்ளலாம்.

இம்முறையில் வாங்கப்படும் தங்கத்தின் அளவு, தரம், அதன் பாதுகாப்பு குறித்த எந்த கவலையும் முதலீட்டாளருக்கு இல்லவே இல்லை. அதே நேரம், மிக குறைந்த அளவான அரை கிராம் அல்லது ஒரு கிராம் கூட இதன் மூலம் வாங்க முடியும். தங்கத்தை வீட்டில் வைத்திருப்பது பாதுகாப்பற்றதாக கருதப்படுவதால், நேரடியாக தங்கத்தை வாங்குவதை காட்டிலும் கோல்டு ஈ.டி.எப். திட்டங்கள் வாயிலாக வாங்கும் மனோபாவம் முதலீட்டாளர்களிடையே அதிகரித்து வருகிறது.

கடந்த 2011 ஏப்ரல் மாதம் நம் நாட்டில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் கோல்டு ஈ.டி.எப். திட்டங்களில் முதலீடு செய்திருந்த தொகை ரூ. 4,800 கோடி. அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் இவ்வகை முதலீடு ரூ. 9,500 கோடியாக அதிகரித்துள்ளது. இது இத்திட்டம் பிரபலமாகி வருவதை எடுத்துக்காட்டுகிறது.

காகிதத் தங்கம் எனப்படும் இந்த கோல்டு ஈ.டி.எப். திட்டத்தை விரும்பாதவர்கள், சேமிப்பு என்ற அடிப்படையில் தங்கம் வாங்கினால் நாணயங்களாக வாங்குவது நல்லது. தங்க நாணயமோ, தங்க நகையோ வாங்கும் போது கீழ்க்கண்ட அம்சங்களை கவனத்தில் கொள்வது அவசியம். அவை:-

1) தங்க நாணயம் அல்லது தங்க நகை வாங்குவதாக இருந்தால் அவை ஹால் மார்க் முத்திரை 916 தரச்சான்று கொண்டவையா? என்பதை கவனிக்க வேண்டும்.

2) முதலீடு நோக்கத்தில் தங்க நாணயத்திற்கு பதிலாக கோல்டு இ.டி.எப். மற்றும் இ-கோல்டு போன்றவையாகவும் வாங்கலாம். இது வாங்குவது எளிது. சில நிறுவனங்கள் மாதம் ரூ. 500 முதல் செலுத்தி தங்கம் வாங்கும் வசதியை அளிக்கின்றன. சில தங்க நகைக்கடை நிறுவனங்கள் மாத சேமிப்பு திட்டத்தில் கூட தங்கமாக சேமிக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளன. அவற்றை பயன்படுத்தி மாதம் தோறும் தங்கமாக சேமிக்கலாம்.

3) நகை வாங்கும் போது சேதாரம் எவ்வளவு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் வாங்கும் நகையில் அதிக நுண்ணிய வேலைப்பாடு இருந்தால் மட்டுமே அதிக சேதாரம் இருக்கும். எனவே சாதாரண நகைகளுக்கு அதிக சேதாரம் இருந்தால் கவனத்தில் கொள்ளுங்கள்.

4) நகைகள் வாங்கும் போது அதிக கற்கள் பதித்த நகைகளை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ஏன்என்றால் அந்த நகையை மீண்டும் விற்கும் போது குறைந்த மதிப்பில் தான் பணம் கிடைக்கும். நகையில் பதிக்கும் சாதாரண கற்களுக்கு மதிப்பு கிடையாது.

நடக்கும்போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே

நம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்ப டெக்ஸ்ட் அமைப்பதனையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு ஆபத்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. 20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது. மொபைல் போன்களைப் பயன்படுத்துவதில் திறமைசாலிகளாய் இருக்கும் ஆண், பெண்களையே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 30 அடி தூரத்தில் உள்ள ஓர் இடத்தை இலக்காகக் கொண்டு முதலில் இவர்களை நடக்கவிட்டனர். பின்னர், பார்வையை பாதியாக மறைத்துக் கொண்டு இவர்களை அதே இலக்கை நோக்கி நடக்க விட்டனர். அவர்களின் நடக்கும் தன்மை, வேகம் முதலியன கண்காணித்து அளவெடுக்கப்பட்டன. பின்னர், மொபைல் போனில் பேசிய படியும், டெக்ஸ்ட் டைப் செய்த படியும் நடக்கவிடப்பட்டனர்.
ஆய்வுகளில் தெரிந்த முடிவுகள் மிகவும் பயமுறுத்தும் வகையில் இருந்தன. மொபைல் போனில் பேசியபடி நடக்கையில் 16% வேகமும், டெக்ஸ்ட் டைப் செய்கையில் 33% வேகமும் குறைந்தது. நேராக நடக்காமல் 61% திசை மாறி நடந்து பின்னர் இலக்கினை அடைய முடிந்தது. குறிப்பாக டெக்ஸ்ட் டைப் செய்கையில், இலக்கை விட்டுவிட்டு எங்கோ சென்றது தெரியவந்தது.
இதனால் இவர்களின் உணர்திறன் குறைந்தது. செயல் திறன் நினைவு தப்பியது. எந்த இடத்தில், எப்படி செயல்படுகிறோம் என்பதையும் சூழ்நிலையை உணர்ந்து செயல்படும் நிலையையும் இந்த பழக்கங்கள் மறக்கடிக்கச் செய்கின்றன. இவையே பல ஆபத்துக்களை தானாக வலிய வரவேற்கும் வழிகளைத் திறக்கின்றன என இந்த ஆய்வின் முடிவுகள் தெரியப்படுத்தி உள்ளன. ஓடும் கார்களின் பாதையில் செல்வது, திறந்திருக்கும் கழிவுநீர் குழிகளில் விழுவது, மேடு பள்ளங்களில் தடுமாறி மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் விழுவது போன்ற விளைவுகளைச் சுட்டிக் காட்டி இந்த ஆய்வு எச்சரித்துள்ளது. உயிர் வாழ்ந்தால் தானே, உடம்பில் கை, கால்கள், கண்கள் சரியாக இருந்தால் தானே நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியும். எனவே நடக்கும்போது மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்.