Daily Archives: ஏப்ரல் 9th, 2012

கண்ணுக்கு கண்ணாக…

பார்வையற்றவர்கள் மற்றும் விபத்தினால் கண் இழந்தவர்களின் முகத்தோற்றத்தை, அழகாக மாற்றவும், அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், செயற்கை கண்களை உருவாக்கும் உன்னத பணியில், காது கேளாத, வாய் பேச இயலாத, மூன்று மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்.பி.தினேஷ், சி.கார்த்திக், வி.லோகேஷ் இவர்கள் மூவரும், காது கேளாத, வாய் பேச இயலாத சென்னை மாணவர்கள். நன்றாக படிக்கும் இவர்களுக்கு, படிப்பைத் தாண்டி, அருமையாக ஓவியங்கள் வரையும் திறமை உண்டு.
இவர்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகளில், திறமையான மாணவர்களைக் கண்டுபிடித்து, அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் புனிதமான பணியில், டாக்டர் சுந்தர் தலைமையிலான பிரீடம் டிரஸ்ட் ஈடுபட்டுள்ளது. தங்களது பணியின் ஒரு கட்டமாக, இந்த மாணவர்களது ஓவியங்களை தொகுத்து, ஓவியக் கண்காட்சி நடத்தியது.
இவர்களது அற்புதமான ஓவியங்களைப் பார்த்த டாக்டர் சுந்தருக்கு திடீரென, மனதிற்குள் ஒரு யோசனை தோன்றியது.
பிறவியிலேயே பார்வைத் திறனற்றவர்கள், விபத்தினால் கண் பார்வை இழந்தவர்கள், கண் சுருக்கம் மற்றும் கண்புரை உள்ளிட்ட குறைபாடுகள் உடையவர்களின் முகத்தோற்றம், பார்ப்பதற்கு பொலிவற்று காணப்படும். இவர்களது அழகான தோற்றத்தையும், தன்னம்பிக்கையையும் மீட்டுத் தருவது செயற்கை கண்கள்தான்.
இந்த செயற்கை கண் பொருத்துவதன் மூலம், இழந்த பார்வையை திரும்ப பெற முடியாது. ஆனால், இழந்த கண்ணை திரும்ப பெற்றது @பான்ற திருப்தியிருக்கும், தன்னம்பிக்கை ஏற்படும், தாழ்வு மனப்பான்மை நீங்கும்.
“பாலி மீத்தைல் மெத்தாக்கிரை லேட்’ என்ற மருந்து வகை பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்படும் இந்த செயற்கை கண் பொருத்துபவர்களின் கண்கள், ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாக இருக்கும்.ஏற்கன@வ இருக்கும் கண்ணை போலவே பிளாஸ்டிக்கின் மூலம் தத்ரூபமாக செயற்கை கண்ணை வரையும் பணியை, ஏன் இந்த காது கேளாத, வாய் பேச இயலாத மாணவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்று எண்ணியதன் விளைவு, இப்பொழுது இந்தியாவிலேயே, இது போல தத்ரூபமாக செயற்கை கண் உருவாக்கி பொருத்துபவர்கள், நாங்களாகத்தான் இருக்க முடியும் என்கிறார் செயற்கை கண் நிபுணர் திவாகர்.
இந்த மாணவர்கள் வரைந்த செயற்கை கண்கள் பொருத்தபட்ட வழக்கறிஞர் சிவகுமார், குடும்பத் தலைவியர் தனலட்சுமி, முனீஸ்வரி ஆகியோரைப் பார்த்தபோது அதை உணர முடிந்தது. அவர்களாக சொன்னபோதுதான், எது செயற்கை கண் என்றே கண்டுபிடிக்க முடிந்தது. அந்த அளவிற்கு மாணவர்களின் திறமை தென்பட்டது.
தங்களது ஓவிய திறமை, இப்படி பயன் படுவதில் பெரிதும் மகிழும் இவர்களை ஒருங் கிணைத்து, ஏழை, எளியவர்களுக்கு செயற்கை கண் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள, ஜெயஸ்ரீ(9003262021) ஹேமா(9382705849) ஆகியோரை, செயற்கை கண் தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம்

எந்த உணவு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று வீட்டிலிருக்கும் பெரியவர்களைக் கேட்டால் இட்லி, தோசை, பிஸ்ஸா, பர்கர், பாஸ்தா என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். `கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் செய்த கூழ் குடிப்பதிலும், கைக்குத்தல் அரிசி சாதம் சாப்பிடுவதிலும் இருக்கும் சுகம் வேறெதிலும் வராது’ என்றுதான் சொல்வார்கள்.

நம் வீட்டு பெரியவர்கள் மட்டுமல்ல, நாமும் கூட அப்படிச் சொல்லும் காலம் விரைவில் வந்துவிடும் போலிருக்கிறது. `ஆமாம், உண்மைதான்’ என்று இந்த கருத்தை ஆமோதிப்பதைப் போல்தான் இருக்கிறது, வெள்ளை அரிசி சாதம் உண்பதற்கும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்குமான தொடர்பு குறித்த சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள, ஹார்வர்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வெள்ளை அரிசி சாதம் உண்பதற்கும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்குமான தொடர்பு குறித்து நடத்தப்பட்ட 4 ஆய்வுகளின் முடிவுகள் மறு ஆய்வு செய்யப்பட்டன.

இந்த 4 ஆய்வுகளில், ஆசிய நாடுகளான சீனா மற்றும் ஜப்பானில் இரண்டும், மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இரண்டும் நடத்தப்பட்டன. மேற்கத்திய மக்களுடன் ஒப்பிடுகையில் அரிசி சாதத்தை அதிகமாக சாப்பிடும் பழக்கமுள்ள ஆசிய நாட்டவர்களில், அரிசி சாதம் சாப்பிடுவதற்கும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்துக்குமான தொடர்பு மேலும் உறுதியாக இருக்கிறதா என்பதை கண்டறிவதே இந்த மறு ஆய்வின் நோக்கமாகும்.

4 முதல் 22 வருடங்களாக, நீரிழிவு நோய் இல்லாத சுமார் 3 லட்சத்து 52 ஆயிரம் மக்களின் அரிசி சாதம் உண்ணும் விவரங்களை சேகரித்து பரிசோதனைகளை செய்தனர். இந்த நான்கு ஆய்வுகள் நடத்தப்பட்ட காலங் களிலேயே, ஆய்வில் பங்குபெற்ற சுமார் 13 ஆயிரத்து 284 பேருக்கு டைப் 2 நீரிழிவு ஏற்பட்டது தெரியவந்தது.

அரிசி சாதம் சாப்பிடுவதற்கும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்துக்குமான தொடர்பு இரு பிரிவுகளிலும் இருந்தாலும், ஆசிய நாட்டவர்களுக்கே இந்த தொடர்பு மிகவும் உறுதியாக இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், இந்த தொடர்பானது ஆண்களை விட பெண்களிலேயே மிகவும் உறுதியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில், தொடர்ந்து அரிசி சாதம் சாப்பிட்டு வருபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள்.

மேலும், ஒரு நாளைக்கு இரண்டு வேளை அரிசி சாதம் சாப்பிட்டவர்களுடன் ஒப்பிடுகையில், மூன்று அல்லது நான்கு வேளை அரிசி சாதம் சாப்பிட்டவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் என்று தெரியவந்தது. முக்கியமாக, ஒரு நாளைக்கு சாப்பிடும் அரிசி சாதத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தும் அதிரிக்கிறது என்கிறது இந்த ஆய்வு.

`ஐயய்யோ, வெள்ளை அரிசி சாதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வந்துவிடுமா? அப்படியென்றால், இதை தவிர்க்க இப்பொழுது நான் என்ன செய்வது?’ என்று அதிர்ச்சியாகும் பலரில் நீங்களும் ஒருவரென்றால் கவலை வேண்டாம் என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் ப்ரூஸ் நீல்.

ஏனென்றால், அரிசி சாதம் சாப்பிடுவதற்கும் நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்திற்கும் ஒரு உறுதியான தொடர்பு இருக்கிறது என்றுதான் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதே தவிர, அரிசி சாதம் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்று கண்டறியப்படவில்லை என்று நம் வயிற்றில் பாலை வார்க்கிறார் பேராசிரியர் நீல்.

அதெல்லாம் சரி, வெள்ளை அரிசி சாதம் சாப்பிடுவதற்கும் நீரிழிவு நோய்க்கும் என்ன தொடர்பு?

வெள்ளை அரிசியின் கிளைசீமிக் இன்டெக்ஸ் (glycemic index) அளவு 64. அதாவது, 64/100. இது பிற உணவுகளைவிட மிகவும் அதிகம். உதாரணமாக, ஐஸ்கிரீமின் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு 61, ஆரஞ்சு ஜூஸின் அளவு 50 என்கிறது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் புள்ளி விவரமொன்று.

மாவுச்சத்துக்களை குளூக்கோஸாக மாற்றும் திறனின் அளவுகோள்தான் கிளைசீமிக் இன்டெக்ஸ் என்பது. அரிசி மற்றும் இதர உணவுகளிலுள்ள குளூக்கோஸ் அல்லது சர்க்கரை, ரத்தத்தில் கலந்துவிடும். ரத்தத்தில் உள்ள குளூக்கோஸின் அளவு அதிகரித்தால் அதுதான் நீரிழிவு நோய்.

ஆக, வெள்ளை அரிசி சாதத்தை அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தின் குளூக்கோஸ் அளவுகள் அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகமாக வாய்ப்பிருக்கிறது என்கிறது அறிவியல்!

மேலும், இதற்கு முந்தைய ஆய்வுகளில் அதிக கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவு முறைகளுக்கும் நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்திற்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக, அதிக கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள வெள்ளை அரிசியில் உள்ள போஷாக்குகள் `பிரவுன் ரைஸ்’ என்றழைக்கப்படும் கைக்குத்தல் அரிசியில் இருப்பதை விட மிகவும் குறைவு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆக, `இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்தற்று’ என்று திருவள்ளுவர் சொன்னதைப்போல, அதிக போஷாக்குள்ள கனி போன்ற கைக்குத்தல் அரிசி இருக்க, அதிக கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள காய் போன்ற வெள்ளை அரிசி நமக்கு எதற்கு என்று சொல்லாமல் சொல்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க ஆய்வாளர்கள்.

சொற்களின் எண்ணிக்கை

வேர்ட் டாகுமென்ட் ஒன்றில் எத்தனை சொற்களை நீங்கள் அமைத்திருக்கிறீர்கள் என்று தெரிய வேண்டுமா? தொடர்ந்து அவ்வப்போது இதனை செக் செய்திட வேண்டுமா? இதற்கு View | Toolbars என்று சென்று அதில் Word Count என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டூல்பாரை அப்படி யே மவுஸால் அழுத்திப் பிடித்து ஏற்கனவே இருக்கும் டூல்பாரின் வலது பக்கத்திற்குக் கொண்டு சென்று உங்கள் திரையின் மேலாக விட்டுவிடவும். வேர்ட் கவுண்ட் டூல் பார் அங்கேயே இருக்கும். எத்தனை சொற் களை நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று காட்டும் விண்டோவினையும் நீங்கள் உங்களுக்குத் தேவையான அளவிற்கு மாற்றலாம். இதற்கு Tools | Customize | Toolbars என்று சென்று கிடைக்கும் விண்டோவை மாற்றி அமைத்துக் கொள்ள லாம். கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸில் இருக்கும்போது அளவை மாற்றும் பணியை மேற்கொள்ளலாம். இனி எப்போது சொற் களின் எண்ணிக்கை தெரிய வேண்டும் என்றாலும் டூல்பாரில் உள்ள Recount பட்டனில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் தெரிந்து கொள்ளலாம்.

கோடை வெயில்: தாக்கும் நோய்கள் தவிர்க்கும் வழிகள்

ப்ரல் தொடங்கும்போதே, கோடையும் தொடங்கிவிட்டது. வெயில், வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு கொளுத்திக் கொண்டிருக்கிறது. குழந்தைகளும், வயதானவர்களும், நோயாளிகளும் இப்போதே வெயிலின் கொடுமையால் வதங்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால் இந்த கோடை வெயில் பாதிக்காத அளவிற்கு எல்லோருமே ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

கோடை வெயிலால் ஏற்படும் பொதுவான பாதிப்புகள் நான்கு. அவை:

* உஷ்ணத்தால் சருமத்தில் ஏற்படும் `சன் பர்ன்’.

* உடலில் நீர்வற்றிப்போகும், `டீஹைட்ரேஷன்’

* ஹீட் எக்ஸ்டாஷன் (Heat Eqaustion)

* அதிகபட்ச வெப்பதாக்குதலான `ஹீட் ஸ்ட்ரோக்’.

இவைகளில் இருந்து தப்பிக்க, பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயில் தாக்கும் அளவிற்கு வெளியே செல்லக்கூடாது. அந்த நேரத்தில் வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் தேவையான முன்னெச்சரிக்கைகளை கையாளவேண்டும்.

ஒரு மனிதனின் உடலில் இருந்து சராசரியாக அரை லிட்டர் தண்ணீர் வியர்வையாக வெளியேறும். கோடை வெயிலால் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் அளவு அதிகரிக்கும். அளவு அதிகரித்து நிறைய வியர்வை வெளியேறினால், உடலில் இருக்கும் தண்ணீர் வேகமாக வற்றிப்போகும். அப்போது உடலில் ஏற்படும் பாதிப்பைதான், `டீஹைட்டிரேஷன்’ என்கிறோம்.

அதனால் கோடைகாலத்தில் வழக்கமாக குடிக்கும் நீர் போதாது. அதிகமான அளவு நீரை, (ஒரே நேரத்தில் இல்லாமல்) கொஞ்சம் கொஞ்சமாக பருகவேண்டும். சோடியம், பொட்டாசியம் போன்ற உப்புகள், உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் சீராக இயங்குவதற்கு தேவைப்படுகிறது. உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறும்போது அத்தகைய உப்புகளும் வெளியேறி, உடலை துவண்டுபோகச் செய்யும். இது ஆபத்தின் அறிகுறி என்பதால் கோடைகாலத்தில் உப்பு சேர்த்த கஞ்சி தண்ணீர், இளநீர், மோர், பழ வகைகள் சாப்பிடவேண்டும்.

பீர், மது, காபி, குளிர்பானங்கள் போன்றவை `டீஹைட்ரேஷனை` தடுக்காது. மாறாக டீஹைட்ரேஷன் பாதிப்பை அதிகரிக்கவே செய்துவிடும். இந்த தாக்குதலின் அறிகுறி என்ன?

முதல் அறிகுறி, தாகம், வாய் வறண்டுபோதல், உமிழ்நீர் வற்றுதல்.

இரண்டாவது அறிகுறி: தாகம் மிகவும் அதிகரிக்கும். நாக்கு வறட்சி, கண் வறட்சி, சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் போன்றவை ஏற்படும். சிறுநீர் வெளியேறுதல் 24 மணி நேரத்தில் மூன்று தடவையாக குறைந்து, அடர்த்தியான மஞ்சள் நிறமாகவோ, தவிட்டு நிறமாகவோ

வெளியேறும்.இறுதிகட்ட அறிகுறி கடுமையானது. மனநிலை மாற்றம், பயம், படுத்தாலும் தீராத தலைசுற்று, நாடித்துடிப்பு குறைவு, சிறுநீர் இல்லாமை, நினைவிழப்பு போன்றவை தோன்றும். இது ஆபத்தான கட்டமாகும்.

வெயிலால் சரும காயம் (சன் பர்ன்) ஏற்படும் விஷயத்தில் இந்தியர்கள் கொடுத்துவைத்தவர்கள். நமது சருமம் தடிமனானது. நிறமும் நமக்கு பாதுகாப்பானது. வெள்ளைக்காரர்களின் சருமம் வெயில் காலத்தில் `சன் பர்ன்’ மூலம் அதிகம் பாதிக்கப்படும். சரும புற்றுநோய்கூட வெள்ளைக்காரர்களுக்கு ஏற்படும்.

நமது உடலை, உடை அணிந்து மூடுகிறோம். உடலில் மூடப்படாத பகுதியைதான் சூரிய கதிர் நேரடியாகத் தாக்கி, சரும காயத்தை ஏற்படுத்துகிறது. சூரியனில் இருந்து அல்ட்ரா வயலெட் கதிர் வெளியேறுகிறது. இதனை ஓசோன் மண்டலம் தடுத்து வடிகட்டி அனுப்பும். தற்போது ஓசோன் மண்டலம் பாதிக்கப்பட்டு அல்ட்ரா வயலெட் கதிர் நேரடியாக சருமத்தை தாக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இது சருமத்தையும், கண்களையும் பாதிக்கும்.

கோடையில் காலை 11 முதல் பிற்பகல் 3 மணிவரை அல்ட்ரா வயலெட் கதிர் அதிகபட்சமாக வெளியேறும். கோடைகாலத்தில் சூரியன் மேகத்திற்குள் மறைந்திருந்தாலும், அதில் இருந்து வெளிப்படும் கதிர் அளவு குறையாது. பாதிப்பும் குறையாது. சரும காயம் ஏற்பட்டால் கைமருத்துவம் பார்க்காமல் டாக்டரை சந்தித்து சிகிச்சை பெறவேண்டும்.

கொளுத்தும் வெயிலிலும் வெளியே சென்றாகவேண்டிய நிலையில் இருப்பவர்கள், சூரிய கதிர் நேரடியாகபடும் இடங்களில் `சன் ப்ளாக்’ கிரீமை பூசிக்கொள்ளலாம். அல்ட்ரா வயலெட் கதிர்களை தடுக்கக் கூடிய `சன் புரட்டெக்ஷன் பேக்டர்’ (எஸ்.பி.எப்) 15-20 என்ற அளவில் இருக்கும் கிரீம்களே சிறந்தது. `சென்சிடிவ்’ சருமத்தை கொண்டவர்கள் எஸ்.பி.எப்- 25 க்கு மேல் இருக்கும் கிரீம்களை பயன்படுத்த வேண்டும். மூக்கு, காது, கழுத்தின் பின்பகுதி போன்றவைகளில் சூரிய கதிர் அதிகம் பதிவதால் அந்த பகுதிகளில் கிரீமை பூசவேண்டும். வெயிலில் செல்வதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பே இதனை பூசி, வெயிலில் இருந்து வெளியேறிய இரண்டு மணிநேரம் வரை கிரீமின் தாக்கம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். ஆறு மாதத்திற்கு குறைவான குழந்தைகளுக்கு இத்தகைய கிரீம்களை பயன்படுத்தக்கூடாது. அல்ட்ரா வயலெட் கதிர்கள் கண்களையும் தாக்கும். அதனால் அந்த கதிர்களை தடுக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிகளை அணியவேண்டும். காரில் அதிக தூரம் பயணிக்கும்போதும், கார் கண்ணாடிகளில் சன் ஸ்கிரீன் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

மனித உடலில் சீதோஷ்ண சமன்பாடு எப்போதும் இருந்துகொண்டிருக்கவேண்டும். கோடை காலத்து வெளி வெப்பத்தால், உடல் சீதோஷ்ண சமன்பாடு சீரற்றுபோகும். அப்போது அதிக நேரம் வெயில் நேரடியாகபட்டால், வெப்ப தாக்கம் எனப்படும் `ஹீட் ஸ்ட்ரோக்’ உருவாகும். இதனை உடனடியாக கவனித்து சிகிச்சை பெறாவிட்டால் கிட்னி, இதயம், மூளை போன்றவைகளின் செயல்பாடு முடங்கும். சோடியம், பொட்டாசியம் தொடர்ந்து குறையும்போது அதிகபட்ச சோர்வு, மனக்குழப்பம், சுவாசத்தடை, நாடித்துடிப்பு குறைந்து போகுதல் போன்றவை உருவாகும்.

நமது உடலை சூட்டில் இருந்து பாதுகாக்க நமது உடலுக்குள்ளே ஒரு இயற்கை `குளிரூட்டும் கட்டமைப்பு’ இருக்கிறது. அதில் வியர்வை குறிப்பிடத்தக்கது. வியர்வை வெளியே வந்து ஆவியாகும்போது உடல் குளிர்ச்சியடையும். இதன் மூலம் உடலுக்குள் சீதோஷ்ண சமன்பாடு உருவாகும். ஆனால் கோடையில், உடலில் நீர்வற்றிப்போனால் உடலில் வியர்வையை உருவாக்கும் கட்டமைப்பு தற்காலிகமாக தன் செயலை நிறுத்திவிடும். அதனால் உடல் சீதோஷ்ண சமன்பாடு தாறுமாறாகி, உடலுக்குள் உஷ்ணம் அதிகரித்து, `ஹீட் ஸ்ட்ரோக்’ உருவாகிறது. இதற்கு உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால் உயிருக்குகூட ஆபத்து ஏற்படலாம்.

இதனை தவிர்க்க நேரடியாக வெயில்படும் அளவிற்கு வெளியே செல்லக் கூடாது. அப்படி செல்லும் நிலை ஏற்பட்டால் குடை, தொப்பி போன்றவைகளை பயன்படுத்தவேண்டும். சிறுவர்களும், வயதானவர்களும் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். குண்டான உடல் வாகு கொண்டவர்களின் உடல் சுற்றளவு அதிகமாக இருக்கும். அதனால் வெயில் அவர்கள் மீது படும் சுற்றளவும், வியர்வை வெளியேறும் சுற்றளவும் அதிகரிப்பதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

கோடைகாலத்தில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா செல்வார்கள். இதனால் வெளி இடங்களில் அவர்கள் சாப்பிட வேண்டியதாகிறது. சுகாதாரமற்ற வெளி இடத்து சாப்பாடு, `புட் பாய்சனிங்’ ஆகிவிடுகிறது. சுற்றுலாதலங்களில் உள்ள பெரிய ஓட்டல்களில் அதிக அளவில் இறைச்சி தேவைப்படுவதால் அவர்கள் பாதுகாக்கப்பட்ட பழகிய இறைச்சி வகைகளை பயன்படுத்துவதுண்டு. பழகிய இறைச்சி (ஷிமீணீæஷீஸீமீபீ விமீணீå) என்றால், அதில் பாக்டீரியா உருவாகியிருக்கும். அதை சாப்பிடுகிறவர்கள் வயிற்றுக்கோளாறு, வாந்தி போன்றவைகளால்

பாதிக்கப்படுவார்கள்.வாந்தி, பேதி உருவாகிவிட்டால் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தால் மட்டுமே அவர்களது உயிருக்கு உத்திரவாதம் கிடைக்கும்.

சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், இதயநோய், வலிப்பு போன்றவைகளுக்கு மருந்து சாப்பிடுகிறவர்கள் சுற்றுலா சென்றால், தினமும் சாப்பிடும் மருந்து, மாத்திரைகளை கையோடு எடுத்து செல்லவேண்டும். அங்கு போய் வாங்கி சாப்பிடலாம் என்று கருதி அலட்சியமாக சென்றுவிடக் கூடாது. நீங்கள் செல்லும் இடத்தில் அந்த மாத்திரை கிடைக்காமல் போகக்கூடும். அவர்கள் ஒரு நாள் மாத்திரை சாப்பிடாவிட்டால்கூட மேற்கண்ட நோய்களின் பாதிப்பு அதிகமாகிவிடும்.

கோடையை கொண்டாடுங்கள். ஆனால் அது உங்களுக்கு திண்டாட்டத்தை ஏற்படுத்தாத அளவிற்கு பார்த்துக்கொள்ளுங்கள்.

விளக்கம்: பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி, DSc., F.R.C.S.