Daily Archives: ஏப்ரல் 11th, 2012

செல்போனை துறந்தால் சிறப்பு!

செல்போனால் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து சந்தேகம் எழுப்புபவர்களால் கூட அது இல்லாமல் இயங்க முடியாது என்பதுதான் இன்றைய யதார்த்தம்.

ஆனால் செல்போனுடனான உறவை ஒருவர் தற்காலிகமாவாவது துண்டித்துக்கொள்வது அவரது ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும், வேலைத் திறனையும் அதிகரிக்கும் என்கிறது புதிய ஆய்வு. வாரம் ஒருமுறை ஒரு மாலையாவது செல்போனுக்கு விடைகொடுப்பது நல்ல பயனைத் தரும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலை சேர்ந்த அந்த ஆய்வாளர்கள், இதற்காக ஒரு முன்னணி நிறுவனத்தைச் சேர்ந்த ஆயிரத்து 400 பேரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் வாரம் ஒரு முறை 6 மணிக்கு மேல் `ஸ்மார்ட்போன்களை’ பயன்படுத்துவதற்குத் தடை விதித்தனர்.

இவ்வாறு மூன்றாண்டு காலத்துக்கு பேராசிரியர் லெஸ்லி பெர்லோவ் தலைமையிலான ஆய்வுக்குழு அந்த ஊழியர்களைக் கண்காணித்தது.

ஆரம்பத்தில் அந்த ஊழியர்கள் குறிப்பிட்ட ஆய்வு குறித்த தங்கள் தயக்கத்தை வெளிப்படுத்தினர். தங்கள் வேலையில் சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தினாலும் ஆய்வில் இருந்து விலகிக்கொள்வோம் என்றனர்.

சிலர் இந்த ஆய்வுக்கு முற்றிலுமாக எதிர்ப்புத் தெரிவிக்க, சிலரோ ஓரளவு இதைக் கடைப்பிடித்தனர்.

ஆனால் ஆய்வு விதிப்படி குறிப்பிட்ட நேரத்தில் கண்டிப்பாக செல்போனை பயன்படுத்தாமல் இருந்தவர்கள், தாங்கள் நல்ல வேலைத் திருப்தியை அனுபவித்ததாகக் கூறினர். அவர்கள், குறிப்பிட்ட நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிவோம் என்ற உணர்வையும் பெற்றனர்.

மேலும் அந்த ஊழியர்கள், தங்களின் வாழ்க்கைக்கும், வேலைக்கும் இடையிலான சமநிலை மேம்பட்டிருப்பதாகவும், தங்களின் பணித் திறன் மேலும் அதிகரிப்பதாகவும் கூறினர்.

மேற்கண்ட ஆய்வை நிராகரித்த 27 சதவீதம் பேரை விட, ஆய்வை ஏற்றுக்கொண்டு உட்பட்ட 59 சதவீதம் பேர், `மறுநாள் காலையில் தாங்கள் ஆர்வத்துடன் வேலைக்குப் போனதாக’க் கூறினர்.

வேலையில் திருப்தி ஏற்பட்டதா என்ற கேள்விக்கு, வாரம் ஒருநாள் மாலை செல்போனை பயன்படுத்தாத 78 சதவீதம் பேர் திருப்தி அளிப்பதாகக் கூறினர். குறிப்பிட்ட காலத்தில் `ஓரளவு’ செல்போனை பயன்படுத்தியவர்களில் 67 சதவீதம் பேரும், ஆய்வுக்கு உட்பட மறுத்த 49 சதவீதம் பேரும் பணித் திருப்தி கிடைப்பதாகக் கூறினர்.

ஒட்டுமொத்தத்தில் இந்த ஆய்வு, செல்போனை சிறிதுநேரம் விலக்கி வைத்தாலும் நன்மைகள் அதிகம் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

இதுதான் ரகசியம்

`நான் நினைத்த மாதிரியே நடந்துவிட்டது..!`- என்ற வார்த்தைகளை சாதாரணமாக இன்று, எல்லா இடங்களிலும் கேட்க முடிகிறது.

நாம் நினைத்ததுபோல் நடந்துவிடுவது என்பது நல்ல விஷயம்தானே. அதனால் நாம் மகிழ்ச்சிதானே அடையவேண்டும்!

`அது இல்லேங்க.. நான் எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அவைகள் எல்லாம் நடப்பதில்லை. ஆனால் நான் கெட்டதை எல்லாம் நினைக்கும்போது அது அப்படியே நடந்துவிடுகிறது’ – என்பதுதான் பலரது வாதமும்!

தான் நினைக்கும் எல்லா நல்ல விஷயங்களும் நடக்கவேண்டும். தனக்கு லாபம் பெருகவேண்டும். மரியாதை உயரவேண்டும். செல்வம் பொங்கி வழியவேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள். அவைகளை எல்லாம் சாத்தியப்படுத்தும் வழி முறைகளை கற்றுத்தருவதாக தினமும் கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், பாடங்கள் எல்லாம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவைகளில் நிறைய பேர் கலந்துகொள்கிறார்கள். அங்கு கிடைக்கும் பயிற்சிகள் மூலம் கெட்டதை அதாவது எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, நல்லெண்ணங்களையும், பாசிட்டிவ் சிந்தனைகளையும் உருவாக்கிக்கொள்ளத்தான் செய்கிறார்கள். ஆனாலும் எதிர்பார்த்த அளவு பலன் கிடைக்காமல் போவதுதான் உண்மை. அது ஏன்?

நமது மனதில் என்னவெல்லாம் பதிந்து கிடக்கிறது என்று நினைத்துப்பாருங்கள். இவ்வளவு காலமும் நீங்கள் எதை எதை மனதில் சேகரித்து வைத்திருங்கள் என்று நினைத்துப்பாருங்கள்.

– மனவேதனை.

– துக்கம்.

– பயம்.

– பாதுகாப்பற்ற தன்மை.

– பலர் மனதை காயப்படுத்தியது.

– கசப்பு.

– வேதனை.

… இப்படிப்பட்டவைகளைத்தான் நம் மனது பெரும்பாலும் பசுமரத்தாணி போல் பதிய வைத்திருக்கிறது. அந்த எதிர்மறை விதைகள் உள்ளே விதைக்கப்பட்டிருந்தால் அதைத்தானே நினைப்பீர்கள். அப்படி நீங்கள் நினைப்பது நடந்துவிடுகிறது. நீங்கள் நினைக்கும் கெட்டவை நடந்துவிட அதுதான் காரணம்.

நீங்கள் பெறும் நல்லெண்ண பயிற்சிகள் உங்கள் மனதில் மேலோட்டமாக மட்டும் நின்றுவிட்டால், உள்ளோட்டமாக விதைக்கப்பட்டிருக்கும் எதிர்மறை சிந்தனைகளை அந்த பயிற்சிகளால் சரிசெய்ய செய்ய இயலாது. விதைக்கப்பட்டவைகளுக்கு மட்டுமே எப்போதும் வீரியம் அதிகம்.

அதனால் என்ன செய்யவேண்டும்?

மனதில் `பாசிட்டிவ்’ எண்ணங்களை உருவாக்குவதற்கு பதில், மனதையே பாசிட்டிவ் ஆக மாற்ற வேண்டும். அதைத்தான் இந்த இயக்கம் செய்துகொண்டிருக்கிறது.

புனித நீராட புறப்படுவோம்!

“விஷு’ என்ற சொல், சூரியன் குறிப்பிட்ட சில ராசிகளில் நுழையும் காலத்தைக் குறிக்கும். மேஷத்தில் நுழையும் காலம் சித்திரை விஷு, துலாமில் நுழையும் காலம் ஐப்பசி விஷு. ஒன்று வெயில் காலம், இன்னொன்று மழைக் காலம். இரண்டுமே சூரியனை சார்ந்து இருக்கிறது. சித்திரையில், வெயில் தாளாமல் தவிக்கும் போது, சூரியனை கரித்துக் கொட்டாதவர்கள் இல்லை. “என்னமா வெயில் அடிக்குது!’ என்பர். ஐப்பசியில் மழை கொட்டும் போது, “இந்த மழை அழுது வடியுறதை எப்பதான் நிறுத்துமோ!’ என்று சலித்துக் கொள்கிறோம்.
ஆனால், இதிலுள்ள உண்மையை புரிந்து கொண்டால், சூரியனை வாழ்த்துவோம். மழை காலத்தில், நம் கண்ணுக்குத் தெரியாத, எவ்வளவோ நுண்கிருமிகள் உற்பத்தியாகின்றன. இவை, மனிதனுக்கு கேடு செய்பவை. இவற்றை அழிக்க, வெயில் சுட்டெரித்தால் தான் முடியும். எனவே தான், “அக்னி நட்சத்திர காலம்’ என்ற ஒன்றைக் கூட, இறைவன் நமக்கு அருளியுள்ளான். இந்தக் காலம் சித்திரையில் துவங்குகிறது.
அதே நேரம், அதிக வெயில், மனிதனுக்கு சில வெப்ப நோய்களையும் தந்து விடுகிறது. அதனால் தான், சித்திரை முதல்நாளில், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதை வழக்கமாக்கினர். அதிலும், தாமிரபரணியில் நீராடுவது மிக மிக புண்ணியத்தையும், உடல் வலுவையும் தரும்.
கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி உள்ளிட்ட, உலகிலுள்ள எல்லா புண்ணிய நதி தேவியரும், சிவபெருமானை சந்தித்து, “ஐயனே… பாவம் செய்த பலரும், எங்களுள் வந்து நீராடுவதால், சுமை தாளாமல் அவஸ்தைப் படுகிறோம். எங்கள் சுமையைக் குறைக்கும் வழி சொல்லுங்கள்…’ என்றனர்.
“பெண்களே… நீங்கள், சூரியன் மேஷத்தில் புகும் சைத்ர மாசம் (சித்திரை) முதல் நாளில், தாமிரபரணியில் மூழ்குங்கள். உங்கள் பாவங்கள் அனைத்தும் மறைந்து விடும்…’ என்றார் சிவன்.
“தாமிரபரணிக்கு அப்படியென்ன சிறப்பு?’ என்று, நதி தேவியர் கேட்டனர்.
“கயிலாயத்தில் என் திருமணம் நடந்த போது, எல்லா மக்களும் அங்கு கூடினர். எனவே, உலகம் சமநிலை இழந்தது. யாராவது ஒருவர் பொதிகைக்கு சென்றால், உலகம் சமப்படும் என, நான் சொன்னேன். யாரும் முன்வராத நிலையில், ஒரே ஒருவர் மட்டும் தியாக உணர்வுடன் பொதிகை மலைக்கு செல்ல ஒப்புக் கொண்டார். அவரே அகத்தியர். அவர், தன் மனைவி லோபமுத்திரையை, புனித நீராக உருமாற்றி, ஒரு கமண்டலத்தில் அடைத்திருந்தார். குடகுமலைக்கு சென்ற சமயம், விநாயகர் அந்த கமண்டலத்தை தட்டி விட்டார். அது, காவிரி எனும் பெயரில் ஓடியது. அதிர்ச்சியடைந்த அகத்தியர், வேகமாக கமண்டலத்தை எடுத்தார். எஞ்சிய நீருடன் பொதிகை வந்தார். அந்த மலையின் உச்சியில், மீதி நீரை ஊற்றினார். அது தாமிர பரணியாக பெருக்கெடுத்தது. அந்த ஆற்றின் கரையில், சித்திரை முதல் நாளில், நான் அவர்களுக்கு திருமணக் காட்சியளித்தேன். அந்த நன்னாளில், தாமிரபரணியில் புனித நீராடி, இந்த திருமணக் காட்சியைக் காண்பவர்கள், நற்கதியடைய வேண்டும் என்று, அவர் என்னிடம் வேண்டினார். அந்த வரத்தை அவருக்கு அளித்தேன்…’ என்றார்.
இப்போதும், சித்திரை விஷுவன்று நள்ளிரவில் அகத்தியருக்கு, சிவபார்வதி திருமணக்கோலம் காட்டியருளும் நிகழ்ச்சி, தாமிரபரணியின் முதல் தலமான பாபநாசம் பாபநாசநாதர் கோவிலில் நடக்கிறது. திருநெல்வேலியில் இருந்து, 50 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. நவகைலாயங்களில், இது சூரியனுக்குரிய தலம் என்பதால், இங்கு நீராடுவது இரட்டிப்பு நன்மையைத் தருகிறது.
இந்தக் கோவிலில் மட்டுமே அகத்தியரை, அவரது மனைவி லோபமுத்திரையுடன் தரிசிக்க முடியும். அகத்தியர் அருவி, அகத்தியர் கோவில் ஆகியவையும் பொதிகை மலையில் உள்ளன.
புனிதமான தாமிரபரணியில் நீராட புறப்படுவோமா!