இதுதான் ரகசியம்

`நான் நினைத்த மாதிரியே நடந்துவிட்டது..!`- என்ற வார்த்தைகளை சாதாரணமாக இன்று, எல்லா இடங்களிலும் கேட்க முடிகிறது.

நாம் நினைத்ததுபோல் நடந்துவிடுவது என்பது நல்ல விஷயம்தானே. அதனால் நாம் மகிழ்ச்சிதானே அடையவேண்டும்!

`அது இல்லேங்க.. நான் எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அவைகள் எல்லாம் நடப்பதில்லை. ஆனால் நான் கெட்டதை எல்லாம் நினைக்கும்போது அது அப்படியே நடந்துவிடுகிறது’ – என்பதுதான் பலரது வாதமும்!

தான் நினைக்கும் எல்லா நல்ல விஷயங்களும் நடக்கவேண்டும். தனக்கு லாபம் பெருகவேண்டும். மரியாதை உயரவேண்டும். செல்வம் பொங்கி வழியவேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள். அவைகளை எல்லாம் சாத்தியப்படுத்தும் வழி முறைகளை கற்றுத்தருவதாக தினமும் கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், பாடங்கள் எல்லாம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவைகளில் நிறைய பேர் கலந்துகொள்கிறார்கள். அங்கு கிடைக்கும் பயிற்சிகள் மூலம் கெட்டதை அதாவது எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, நல்லெண்ணங்களையும், பாசிட்டிவ் சிந்தனைகளையும் உருவாக்கிக்கொள்ளத்தான் செய்கிறார்கள். ஆனாலும் எதிர்பார்த்த அளவு பலன் கிடைக்காமல் போவதுதான் உண்மை. அது ஏன்?

நமது மனதில் என்னவெல்லாம் பதிந்து கிடக்கிறது என்று நினைத்துப்பாருங்கள். இவ்வளவு காலமும் நீங்கள் எதை எதை மனதில் சேகரித்து வைத்திருங்கள் என்று நினைத்துப்பாருங்கள்.

– மனவேதனை.

– துக்கம்.

– பயம்.

– பாதுகாப்பற்ற தன்மை.

– பலர் மனதை காயப்படுத்தியது.

– கசப்பு.

– வேதனை.

… இப்படிப்பட்டவைகளைத்தான் நம் மனது பெரும்பாலும் பசுமரத்தாணி போல் பதிய வைத்திருக்கிறது. அந்த எதிர்மறை விதைகள் உள்ளே விதைக்கப்பட்டிருந்தால் அதைத்தானே நினைப்பீர்கள். அப்படி நீங்கள் நினைப்பது நடந்துவிடுகிறது. நீங்கள் நினைக்கும் கெட்டவை நடந்துவிட அதுதான் காரணம்.

நீங்கள் பெறும் நல்லெண்ண பயிற்சிகள் உங்கள் மனதில் மேலோட்டமாக மட்டும் நின்றுவிட்டால், உள்ளோட்டமாக விதைக்கப்பட்டிருக்கும் எதிர்மறை சிந்தனைகளை அந்த பயிற்சிகளால் சரிசெய்ய செய்ய இயலாது. விதைக்கப்பட்டவைகளுக்கு மட்டுமே எப்போதும் வீரியம் அதிகம்.

அதனால் என்ன செய்யவேண்டும்?

மனதில் `பாசிட்டிவ்’ எண்ணங்களை உருவாக்குவதற்கு பதில், மனதையே பாசிட்டிவ் ஆக மாற்ற வேண்டும். அதைத்தான் இந்த இயக்கம் செய்துகொண்டிருக்கிறது.