செல்போனை துறந்தால் சிறப்பு!

செல்போனால் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து சந்தேகம் எழுப்புபவர்களால் கூட அது இல்லாமல் இயங்க முடியாது என்பதுதான் இன்றைய யதார்த்தம்.

ஆனால் செல்போனுடனான உறவை ஒருவர் தற்காலிகமாவாவது துண்டித்துக்கொள்வது அவரது ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும், வேலைத் திறனையும் அதிகரிக்கும் என்கிறது புதிய ஆய்வு. வாரம் ஒருமுறை ஒரு மாலையாவது செல்போனுக்கு விடைகொடுப்பது நல்ல பயனைத் தரும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலை சேர்ந்த அந்த ஆய்வாளர்கள், இதற்காக ஒரு முன்னணி நிறுவனத்தைச் சேர்ந்த ஆயிரத்து 400 பேரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் வாரம் ஒரு முறை 6 மணிக்கு மேல் `ஸ்மார்ட்போன்களை’ பயன்படுத்துவதற்குத் தடை விதித்தனர்.

இவ்வாறு மூன்றாண்டு காலத்துக்கு பேராசிரியர் லெஸ்லி பெர்லோவ் தலைமையிலான ஆய்வுக்குழு அந்த ஊழியர்களைக் கண்காணித்தது.

ஆரம்பத்தில் அந்த ஊழியர்கள் குறிப்பிட்ட ஆய்வு குறித்த தங்கள் தயக்கத்தை வெளிப்படுத்தினர். தங்கள் வேலையில் சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தினாலும் ஆய்வில் இருந்து விலகிக்கொள்வோம் என்றனர்.

சிலர் இந்த ஆய்வுக்கு முற்றிலுமாக எதிர்ப்புத் தெரிவிக்க, சிலரோ ஓரளவு இதைக் கடைப்பிடித்தனர்.

ஆனால் ஆய்வு விதிப்படி குறிப்பிட்ட நேரத்தில் கண்டிப்பாக செல்போனை பயன்படுத்தாமல் இருந்தவர்கள், தாங்கள் நல்ல வேலைத் திருப்தியை அனுபவித்ததாகக் கூறினர். அவர்கள், குறிப்பிட்ட நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிவோம் என்ற உணர்வையும் பெற்றனர்.

மேலும் அந்த ஊழியர்கள், தங்களின் வாழ்க்கைக்கும், வேலைக்கும் இடையிலான சமநிலை மேம்பட்டிருப்பதாகவும், தங்களின் பணித் திறன் மேலும் அதிகரிப்பதாகவும் கூறினர்.

மேற்கண்ட ஆய்வை நிராகரித்த 27 சதவீதம் பேரை விட, ஆய்வை ஏற்றுக்கொண்டு உட்பட்ட 59 சதவீதம் பேர், `மறுநாள் காலையில் தாங்கள் ஆர்வத்துடன் வேலைக்குப் போனதாக’க் கூறினர்.

வேலையில் திருப்தி ஏற்பட்டதா என்ற கேள்விக்கு, வாரம் ஒருநாள் மாலை செல்போனை பயன்படுத்தாத 78 சதவீதம் பேர் திருப்தி அளிப்பதாகக் கூறினர். குறிப்பிட்ட காலத்தில் `ஓரளவு’ செல்போனை பயன்படுத்தியவர்களில் 67 சதவீதம் பேரும், ஆய்வுக்கு உட்பட மறுத்த 49 சதவீதம் பேரும் பணித் திருப்தி கிடைப்பதாகக் கூறினர்.

ஒட்டுமொத்தத்தில் இந்த ஆய்வு, செல்போனை சிறிதுநேரம் விலக்கி வைத்தாலும் நன்மைகள் அதிகம் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.