Daily Archives: ஏப்ரல் 30th, 2012

மொதல்ல, பல்ல வெளக்குங்கப்பா!

காதலிப்பது பெரிய விசயமில்லை, அந்த காதலை வெற்றிகரமாக்குவதில்தான் இருக்கிறது சூட்சுமம். நிறைய பேருக்கு அதன் டெக்னிக் தெரிவதில்லை. என்ன செய்தால் காதலில் வெற்றி பெறலாம் என்பது தெரியாமல் இருப்பதால்தான் நிறைய காதல்கள் தோற்றுப்போகின்றன. இது குறித்து நடைபெற்ற ஆய்வில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன. சுவாசப் புத்துணர்ச்சி பெரும்பாலான காதல் தோற்றுப் போனதற்கு வாய் துர்நாற்றம் முக்கிய பங்கு வகித்துள்ளது. எனவே சுத்தமாக பல்விலக்கிவிட்டு சுவாசப் புத்துணர்ச்சியோடு இருந்தாலே காதல் வெற்றி பெரும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

காதலியின் செல்லப்பிராணி

அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகமான ஹஸ்டன் பல்கலையின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் காதல் வெற்றிக்கு காதலி வளர்க்கும் நாய் முக்கிய பங்கு வகிக்கிறதாம். 120 ஜோடிகளிடம் இணையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தான் இது கண்டறியப்பட்டது.

நாயை நேசியுங்கள்

நாய் வளர்ப்பதில் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உணர்வு ரீதியாக பெரும் வேறுபாடு காணப்படுகின்றது. பொதுவாக ஒரு ஆண் செல்லப் பிராணி ஒன்றை வளர்க்கும் போது தனது காதலியும் அதன் மேல் அன்பு செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஆனால் ஒரு பெண் தான் வளர்க்கும் நாயை தனது காதலனும் அளவுக்கு அதிகமாக நேசிக்க வேண்டும் என எதிர்பார்கிறாள்.

எனவே காதலில் வெற்றி பெற உங்களின் காதலி ஆசை ஆசையாக வளர்த்து வருகின்ற நாயை நீங்கள் நன்றாக நேசியுங்கள் அதன் மீது அன்பு செலுத்துங்கள் உங்களின் காதல் தானாகவே வளரும். அப்படி உங்களால் நேசிக்க முடியாவிட்டால் கூட நாயை நேசிப்பது போல் ஆவது நடியுங்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஒருதலைக் காதல்- ஒரு புதிய பார்வை

ருதலைக்காதல் என்பது, ஒரு வகையான வற்புறுத்தல். தான் விரும்பும் ஒருத்தர் தன்னை விரும்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும் முறை. மற்றவரை தன் வசப்படுத்த எடுத்துக் கொள்ளும் முயற்சி. இதில் வெற்றியும் கிடைக்கலாம். தோல்வியும் கிடைக்கலாம்.

ஒருவர், இன்னொருவரை காதலிக்க பல காரணங்கள் இருக்கலாம். அதுபோல் ஒருவர், இன்னொருவரை காதலிக்காமல் போகவும் பல காரணங்கள் இருக்கலாம். ஒருதலைக் காதலர்களுக்கு இந்த உண்மை புரியாமல் போவதால், ஒருதலை காதல் ஒரு வன்முறை யாகவே இருந்து கொண்டிருக்கிறது.

பல நேரங்களில் இந்த ஒருதலைக்காதலில் ஏற்படும் முடிவுகள் விபரீதமானதாக இருக்கின்றன. காதல் தோல்வியில் ஏற்படும் வலியும் வேதனையும் இந்த ஒருதலை காதல் தோல்வியிலும் ஏற்படும். இது ஒருவருக்கு வேதனையாகவும், மற்றவருக்கு தொந்தர வாகவும் இருக்கும். சமூகம் ஒருதலைக்காதலரை எரிச்சலோடு பார்க்கும். அந்த ஒருதலைக் காதலர் ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம்.

இருபக்கத்திலும் பாதிப்புகள் ஏற்படும் என்பதால், இந்த மாதிரியான காதலர்களை பக்கு வமாக கையாள வேண்டும்.

ஒருதலைக்காதலை பொறுத்தவரை, `நடந்தால் நடக்கட்டும். இல்லாவிட்டால் போகட்டும்’ என்று மேம்போக்காக காதலிப்பவர்களும் உண்டு. தன்னை திரும்பிப் பார்த்து தன் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இன்னொருவர் மீது காதலை திணிப்பவர்களும் உண்டு. தான் விரும்புகிறவர் தன்னை காதலிக்க எந்த முகாந்திரமும் இல்லாத போதும் எப்படியாவது தன் காதல் ஜெயித்து விடாதா என்ற தவிப்புடன் காதலிப்பவர்களும் உண்டு. எது எப்படி இருந்தாலும் ஒருதலைக்காதல் அன்பு நிறைந்ததல்ல! வம்பு நிறைந்தது!

ஒற்றை சக்கர வண்டி ஊர் போய் சேராது. அதனால் இந்த ஒருதலைக் காதலை கைவிடுவது நல்லது. அப்படி முடியாத பட்சத்தில் அடுத்தவருக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் அமைதியாக இருப்பது காதலுக்கு தரும் மரியாதையாக இருக்கும்.

புகழ் பெற்ற ஒரு ஆங்கில நாவல், ஒருதலை காதலின் தியாகத்தை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. கதாநாயகனின் காதலை ஏற்றுக் கொள்ளாத நாயகி, தனக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்து கொள்வாள். அப்போது கதாநாயகன் `என் உண்மை காதலை உணர்ந்து என்றாவது ஒரு நாள் நீ கண்ணீர்விடுவாய். அப்போது தான் என் தூய்மையான காதல் உனக்குப் புரியும்” என்று கூறுவான். கடைசியில் நாயகியின் கணவனை தூக்கிலிருந்து காப்பாற்றிவிட்டு அவனுக்கு பதில் அவன் தூக்கு மேடையேறிவிடுவான். இறுதியில் அந்த ஒருதலைக்காதலனின் கல்லறையில் நாயகி கண்ணீர் விடுவாள். `உன் ஒருதலை காதலுக்கு நான் தரும் அஞ்சலி இந்த கண்ணீர் துளிகள்’ என்று கூறுவதாக கதை முடியும்.

இப்படி ஒருதலைக்காதலை தியாகத்தில் முடிக் கும் பக்குவம் எத்தனை பேருக்கு இருக்கும்? இதை ஒருவிதத்தில் பக்குவமாக எடுத்துக் கொண்டாலும், இன்னொரு கோணத்தில் பார்த் தால் `இந்த ஒருதலைக்காதலிக்காக அவர் தூக்கு கயிற்றில் ஏறி இருக்கவேண்டுமா?’ என்ற கேள்வியும் எழும்.

காதல் என்றாலே அது திருமணத்தில் முடிய வேண்டும் என்ற கட்டாயமில்லை. காதல் ஒரு தெய்வீக உணர்வு. மனிதனின் இதயத்தை மென்மையாக்கும் அற்புத உணர்வு அது.

ஆனால் ஒருதலைக்காதல் மேற்கூறியவைகளுக்கு நேர் எதிராக மாறுகின்றன. தெய்வீகத்திற்கு பதில் வெறியையும், மென்மைக்கு பதில் முரட்டுதனத்தை அது உருவாக் கும்.

தான் காதலிக்கும் நபர் தன்னை திரும்பிப் பார்க்கவில்லையே என்ற ஆதங்கம், ஏமாற்றம், வேதனை, ஒரு பொறுமையற்ற நிலையை மனதில் ஏற்படுத்தி அவர்களை ஒரு “சைக்கோ”வாக மாற்றிவிடும் கொடுமையும் இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தான் காதலித்த பெண்ணுக்கு நடந்து விட்ட திருமணத்தை சகித்துக் கொள்ள முடியாமல் அவள் தனியாக இருக்கும் நேரத்தில் வம்பு செய்யும் சோகமும் நிகழத்தான் செய்கிறது. இது சமூகத்தை பெருமளவில் பாதிக்கிறது.

காதல் என்பது உலகையே வாழ வைக்கும் ஒரு உன்னதம். அது இப்படி பழி பாவத்தில் போய் முடிய இந்த ஒருதலை காதல் காரணமாகக் கூடாது. காதலர் தினம் கொண்டாடும் யுகத்தில் உண்மையான காதல் என்பது என்ன என்பதையும் விளக்கிச் சொல்லி இளைய தலைமுறையை வழி நடத்த வேண்டியுள்ளது.

இந்த உலகம் மிகப் பெரியது. ஒருதலைக்காதல் என்ற வட்டத்தில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்கள் இந்த பெரிய உலகத்தை மறந்து விடுகிறார்கள். தான் செய்யத் துணியும் காரியத்தின் எதிர்விளைவுகளைப் பற்றிய சிந்தனையும் அவர்களுக்கு இருப்பதில்லை. எப்படியாவது போராடி காதலில் வென்றுவிட வேண்டும் அல்லது கொன்றுவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். வேதனையின் விளிம்பிற்கு சென்று தற்கொலை செய்துக் கொள்வேன் என்று மிரட்டவும் செய்கிறார்கள். தற்கொலை செய்து கொள்கிறவர்கள் இந்த மனிதப்பிறவியின் மகத்துவம் புரியாதவர்கள்.

இன்றைய இளைஞர்களும், இளம் பெண்களும் ஒருதலைக்காதலின் சோகத்தை புரிந்து கொண்டு அதிலிருந்து விடுபட வேண்டும். சமூகத்தில் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வழிவிட வேண்டும்.

வளையும் தன்மையுள்ள அதிநவீன 3டி மெமரி சிப்!

மின்னணு எந்திரங்கள் என்றாலே டிவி, கம்ப்யூட்டர் போல பெரிய பெரிய பெட்டிகளாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு இருந்த மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது கையடக்க தொலைபேசியான செல்போன். இந்த செல்போன்கள் தந்த ஆச்சரியத்திலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்பே மேலும் மாயாஜாலங்களை தொடர்ந்து செய்து வருகின்றன செல்போன் நிறுவனங்கள்.

செல்போனில் தொலைபேச மட்டும்தான் முடியும் என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால் செல்போன் வடிவமைப்பாளர்களோ, `இல்லை இல்லை, செல்போனில் பாட்டு கேட்கவும், படம் பார்க்கவும், கேம்ஸ் ஆடவும் கூட முடியும்’ என்று அசத்தினார்கள். இப்படி பல்வேறு கேளிக்கைகளுக்கு செல்போன் பயன்பட ஒரு முக்கியமான காரணம் மெமரி சிப் அல்லது கார்டுகள். பல மடங்கு டேட்டா அல்லது மின்னணு தகவல்களை ஒரு சிறிய சிப்பில் சேமித்து வைக்கும் திறனுள்ள அசத்தலான கருவிதான் இந்த மெமரி கார்டு.

செவ்வக வடிவமுள்ள, சிறு சிறு அட்டைகள் போல இருக்கும் தற்போதைய மெமரி கார்டுகள் ஒன்று முதல் 64 கிகா பைட்டு (Giga Byte) அளவு வரையிலான தகவல்களை சேகரித்து வைக்க பயன்படுகின்றன. மினி எஸ்.டி. மற்றும் மைக்ரோ எஸ்.டி. என இரு அளவுகளில் கிடைக்கும் இவை கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், வளையும் தன்மையுடன் கண்ணாடி போல இருக்கும் ஒரு அதி நவீன 3டி மெமரி சிப்பை உருவாக்கி அசத்தி இருக்கிறார் அமெரிக்காவிலுள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜேம்ஸ் எம்.டூர்.

மைக்ரோ எஸ்டியை விட குறைவான அளவில், ஆனால் தற்போதுள்ள அளவை விட மேலும் அதிகமான கிகா பைட்டுகளுடன், சுமார் 1000 பாரன்ஹீட் வெப்பத்திலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான் இந்த 3டி மெமரி சிப்பின் விசேஷமே என்கிறார் ஆய்வாளர் டூர். தற்போதுள்ள மெமரி சிப்களைக் காட்டிலும் அதிக பலன்களைக் கொண்ட இந்த 3டி மெமரி சிப் மின்னணுவியல் தொழில்துறைக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையல்ல.

மெமரி சிப் தெரியும். அதென்ன 3டி மெமரி சிப்?

தற்போதுள்ள மெமரி சிப்களில் இரு முனைகளுக்கு ஒரு பிட் தகவல் என்ற மின்னணுவியல் முறைப்படிதான் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன. ஆனால் குறைவான பரப்பளவில் அதிக மெமரி அல்லது தகவல்களை சேமிக்க வேண்டுமானால், இரு முனைகளுக்கு ஒரு பிட் தகவல் என்ற இரு பரிமாண (2 D ) அளவுக்கு மேலாக மெமரி சிப்பின் உள்ளமைப்புகளை வடிவமைக்க வேண்டும். அதாவது 3டி அல்லது முப்பரிமாண நிலைக்குச் செல்ல வேண்டும். 3டி மெமரி சிப்பில் மூன்று முனைகளுக்கு ஒரு பிட் தகவல் என்ற முறைப்படி மின்னணு தகவல்கள் சேமிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 3டி மெமரி சிப்கள் மிக அதிகமான on off ratio அளவுகளைக் கொண்டவை.

அதாவது, ஒரு மெமரி சிப் தகவல்களை சேமித்து வைத்து இருக்கும்போதும், காலியாக இருக்கும்போதும் எவ்வளவு மின்சாரம் அதனுள் பாய முடியும் என்பதை குறிக்கும் அளவுகோல்தான் இந்த on off ratio என்பது. அதிக on off ratio அளவுகளைக் கொண்ட சிப்களையே மெமரி சிப் தயாரிப்பாளர்கள் அதிகம் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, சிலிக்கான் ஆக்சைடு எனும் வேதியியல் பொருளுக்கு மேல் அதிசய பொருள் (miracle material) என்றழைக்கப்படும் மிக மிக மெல்லிய கிராபீன் அல்லது வேறு வகையான கார்பன் பொருளாலான படிவங்களைக் கொண்டதுதான் மெமரி சிப்.

மெமரி சிப்களின் தகவல் சேமிப்பு திறனுக்கு காரணம் கிராபீன்தான் என்று பல காலமாய் நம்பிக்கொண்டிருந்தனர் மின்னணுவியல் விஞ்ஞானிகள். ஆனால் இந்த கூற்று முற்றிலும் தவறென்பது சமீபத்தில்தான் தெரியவந்தது.

அதாவது, மெமரி சிப்களின் தகவல் சேமிப்பு திறனுக்கு காரணம் கிராபீன் அல்ல, சிலிக்கான் ஆக்சைடுதான் என்னும் அறிவியல் உண்மைதான் அது.

அது சரி, ஒரு மெமரி சிப் வளையும் தன்மையுடன் கண்ணாடி போல இருப்பதால் என்ன பயன்?

ஒரு மெமரி சிப்பானது கண்ணாடி போல, வளையும் தன்மையுடன் சிறிய அளவில் இருப்பதால் பல விதமான பயன்பாட்டுக்கு உதவுகிறதாம். உதாரணமாக, தினசரி வாகன ஓட்டுதல், ராணுவ மற்றும் விண்வெளி வாகன பயன்பாட்டுக்கு உதவும் வகையில் சீ த்ரூ விண்ட் ஷீல்டுகளின்மேல் ஒட்டிக்கொள்ள வசதியாய் இருப்பதைச் சொல்லலாம். இதன்மூலம், இந்த 3டி மெமரி சிப்கள் தகவல்களை சேமிப்பதற்கு மட்டுமல்லாமல் வாகனங்களின் கண்ணாடியாகவும் பயன்படுகின்றன. ஆக, ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். இதனால் இதர கருவிகளுக்கு தேவையான இட வசதியும் அதிகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரசியமாக, கடந்த 2011 ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ரஷ்யாவின் Russian Progress 44 cargo என்னும் விண்வெளி ஓடத்தில் இந்த அதிநவீன 3டி மெமரி சிப் பரிசோதனைக்காக பொருத்தப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக, இந்த விண்வெளி ஓடம் சைபீரியாவுக்கு மேலே சென்றுகொண்டிருந்த பொழுது வெடித்துச் சிதறிவிட்டது. இதைக் கண்டு சற்றும் மனம் தளராத ஆய்வாளர் ஜேம்ஸ் எம்.டூர், அதிக கதிரியக்க சுற்றுச்சூழலைக் கொண்ட விண்வெளியில் இந்த 3டி மெமரி சிப்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை பரிசோதிக்க, வருகிற 2012 ஜூலை மாதம் மீண்டும் இவற்றை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

இண்டியம் டின் ஆக்சைடு மற்றும் கண்ணாடியால் ஆன தற்போதுள்ள டச் ஸ்கிரீன்கள் (தொடுதிரை) எளிதில் உடையும் தன்மை கொண்டவை. ஆனால், இந்த 3டி மெமரி சிப்களைக் கொண்ட பிளாஸ்டிக் தொடுதிரைகளைக் கொண்டு பழைய டச் ஸ்கிரீன்களை மாற்றிக்கொள்ளலாம். இதன்மூலம், வளையும் தன்மையுள்ள உடையாத தொடுதிரைகளையும் மெமரி சிப்பையும் ஒன்றாக்கி விடலாம். இதனால் நமக்கு இட வசதி அதிகரிக்கிறது. இந்த இடத்தை ஸ்மார்ட்போனுக்கு தேவையான வேறு கருவிகள், அப்ளிக்கேஷன்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு அரிய வாய்ப்பும் கிடைக்கிறது!

முக்கியமாக, ஸ்மார்ட்போனுக்கு தேவையான மெமரியை பெரிய மெமரி கார்டுகளில் சேமிப்பதற்கு பதிலாக டச் ஸ்கிரீன்களில் பொருத்தக்கூடிய அதி நவீன 3டி மெமரி சிப்களில் சேமிப்பதால், தற்போதுள்ள ஸ்மார்ட்போன்களை மேலும் மெல்லியதாக மாற்றிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளில் பார்க்கும் படங்கள் முதல், வீட்டில் பயன்படுத்தும் டி.வி. வரை எல்லாம் 3டி மயமாகிவிட்ட இந்த காலத்தில், மெமரி கார்டுகள் மட்டும் 2 டியாகவே இருந்தால் நன்றாகவா இருக்கும்?!

அதனால், வருக 3டி மெமரி சிப்,

வாழ்க மின்னணுவியல்!

யு.எஸ்.பி. டிரைவ் கரப்ட் ஆனால்…

யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்கள் அனைத்தும் “plug and play” வகையைச் சேர்ந்த சாதனங்கள். இவை நாம் பயன்படுத்தும் பலவகையான, வீடியோ பைல் உட்பட, பைல்களை சேவ் செய்து, மீண்டும் பெற்றுப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இந்த வேலையில் இவை எந்த பிரச்னையையும் தருவதில்லை. ஆனால், கம்ப்யூட்டரில் உள்ள, இதனை இணைக்கும் யு.எஸ்.பி. போர்ட்டிலிருந்து சரியாக இதனை நீக்கவில்லை என்றால், பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, கம்ப்யூட்டர் அதனைத் தேடி, செயல்பாட்டில் வைத்திருக்கையில், கம்ப்யூட்டரிலிருந்து நீக்கினால் நிச்சயம் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. சில வேளைகளில், அதில் உள்ள அனைத்து டேட்டாவினையும் மீண்டும் பெற்று பயன்படுத்த முடியாமல் போய்விடும். அல்லது குறிப்பிட்ட பைல் கரப்ட் ஆகும். அல்லது பிளாஷ் ட்ரைவே பயன்படுத்த முடியாமல் போய்விடலாம்.
பெரும்பாலும், இது போன்ற சிக்கல்களைச் சந்திக்கும் பிளாஷ் ட்ரைவ்களை, அவற்றை மீண்டும் பார்மட் செய்வதன் மூலம், தொடர்ந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம். ஆனால், இந்த வழியை மேற்கொண்டால், உங்கள் பிளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து பைல்களும் அழிக்கப்படும்.
இந்த வேலையை மேற்கொள்ளும் முன்னர், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி. போர்ட் செயல்பாட்டில் சிக்கல் இருக்கிறதா எனக் கண்காணிக்கவும். இதற்கு கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து யு.எஸ்.பி. போர்ட்களையும் அன் இன்ஸ்டால் மற்றும் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இதனை விண்டோஸ் டிவைஸ் மேனேஜர் மூலம் மேற்கொள்ளலாம்.
யு.எஸ்.பி. ட்ரைவை எடுத்துவிடவும். பின்னர், கம்ப்யூட்டரில் உள்ள ஸ்டார்ட் மெனு சென்று, அதன் சர்ச் பாக்ஸில் “Device Manager” என டைப் செய்திடவும். அல்லது கண்ட்ரோல் பேனல் என டைப் செய்து கிடைக்கும் பிரிவில் டிவைஸ் மேனேஜரைப் பெறவும். இதற்கு கண்ட்ரோல் பேனல் பிரிவில் “Hardware and Sound,” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் “Device Manager” என்ற லிங்க்கில் மீண்டும் கிளிக் செய்திடவும். உங்களுடைய யு.எஸ்.பி.போர்ட்களைக் கண்டறிய “Universal Serial Bus” என்று இருப்பதை மவுஸ் கிளிக் மூலம் விரிக்கவும். இதில் கிடைக்கும் பல வரிகளில், முதலாவதாக உள்ளதைத் தேர்ந்தெடுத்து, ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Uninstall” என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். பின்னர், ஓகே கிளிக் செய்திடவும். இப்படியே மற்ற யு.எஸ்.பி. சார்ந்த வரிகளிலும் இச்செயலை மேற்கொள்ளவும். இப்போது கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து யு.எஸ்.பி.போர்ட்களும் அன் இன்ஸ்டால் ஆகி இருக்கும். இவை அனைத்தையும் மீண்டும் தானாக ரீ இன்ஸ்டால் ஆக, மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர, டிவைஸ் மேனேஜர் மேலாக உள்ள, “Scan For Hardware Changes.” என்ற பெயரில் உள்ள புளூ கலர் ஐகானில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவினை, ஏதேனும் ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் இணைத்துச் செயல் படுத்திப் பார்க்கவும்.
இன்னும் தொடர்ந்து உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவ் செயல்படவில்லை என்றால், ட்ரைவினை பார்மட் செய்வதுதான் அடுத்த வழி. ஸ்டார்ட் மெனுவில் “Computer” என்ற பட்டனை அழுத்தவும். “Devices With Removable Storage” என்ற தலைப்பின் கீழாக, உங்கள் ட்ரைவின் பெயரைத் தேடிக் கண்டறியவும். இதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Format” என்பதைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்தவும். பார்மட் செய்து முடித்த பின்னர், ரைட் கிளிக் செய்து “Eject” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து வெளியேறவும். “Format Options” என்ற பிரிவில் என்ற “Quick Format” பாக்ஸின் முன் டிக் அடையாளம் இருந்தால், அதனை எடுத்துவிடவும். இந்த வகை பார்மட்டில், யு.எஸ்.பி. ட்ரைவ் மிக வேகமாக பார்மட் செய்யப்பட்டாலும், கரப்ட் ஆன ட்ரைவினை இந்த வகையில் சீராக பார்மட் செய்திட முடியுமா என்பது சந்தேகமே. வழக்கமான முறையில் ட்ரைவினை பார்மட் செய்த பின்னர், ட்ரைவினை போர்ட்டி லிருந்து எடுத்து விடவும். விண்டோஸ் 7 சிஸ்டம், பாதுகாப்பாக ட்ரைவினை போர்ட்டிலிருந்து நீக்க வசதியைக் கொண்டுள்ளது.இதன் மூலம் ட்ரைவில் பதிந்துள்ள டேட்டா அழிக்கப்படுவதும், ட்ரைவ் கரப்ட் ஆவதும் தடுக்கப்படுகிறது. இதற்கு ட்ரைவ் போர்ட்டில் இணைக்கப்பட்டிருக்கையில், டாஸ்க் பாரில் உள்ள “Safely Remove Hardware and Eject Media” என்ற ஐகானில் கிளிக் செய்திடவும். இந்த ஐகான், டாஸ்க் பாரில் வலது கீழாக இருக்கும். இதில் தரப்பட்டுள்ள “Eject” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டருக்கும் ட்ரைவிற்கும் உள்ள இணைப்பு நிறுத்தப்படும். டேட்டா பரிமாறிக் கொள்ளும் செயல் நடைபெறாது. இதனை உறுதிப்படுத்திக் கொண்டு, பொறுமையாக ட்ரைவினை நீக்கவும்.

மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்’!

டார்பிடோ ரேஸ்

மத்திய தரைக் கடலிலும், வேறு சில கடல் பகுதிகளிலும் வாழும் `ஸ்கேட்ஸ்’ என்ற மீன் வகை உள்ளது. இவற்றை `டார்பிடோ ரேஸ்’ என்றும் அழைப்பார்கள். இந்த மீன்களின் பழக்கவழக்கங்களை பண்டைய ரோமானியர்கள் ஓரளவு அறிந்து வைத்திருந்தார்கள். இம்மீன்கள் நீந்தும்போது அமைதியாகவும், மெதுவாகவும் நீந்தும்.

இவற்றின் அருகே வேறு சிறு மீன்களோ, நண்டுகளோ, பிற கடல்வாழ் உயிரிகளோ வந்துவிட்டால் `சுரீர்’ என்று மின்சார அதிர்ச்சி கொடுக்கும். அதில் அவை துடித்து மடியும். பின்னர் அவற்றை இந்த மீன்கள் உணவாக எடுத்துக்கொள்ளும்.

இந்த மீன்கள் தோற்றுவிக்கும் சக்தி, மின்சாரம் என்பது அக்கால ரோமானியர்களுக்குத் தெரியவில்லை. இவை ஏதோ விஷத்தன்மையுள்ள பொருட்களை வெளியிட்டுத்தான் தமது குறையைச் சொல்கின்றன என்று நம்பினர். தங்கள் மருத்துவச் சிகிச்சைகளுக்காக இம்மீன்களை பெரிய தொட்டிகளில் வைத்து வளர்த்தார்கள்.

`ஸ்கேட்’ மீன்களைப் போலவே மின்சக்தியை வெளிப்படுத்தும் மற்றொரு மீன் வகை, `ஈல்’ என்பதாகும். ஆனால் இவை நன்னீரில் வாழ்பவை.

இந்த மீன்கள் இரவில் மட்டுமே வெளியே வந்து தம் இரையைத் தேடும். தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் நதியின் ஆழமற்ற பகுதிகளில் இம்மீன்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை வெளிப்படுத்தும் மின்சக்தி, பெரிய மீன்களைக் கூட செயலற்றுப் போகச் செய்யும் அளவுக்குப் பலமானது. இதனால் அந்தப் பகுதிகளில் வாழும் பூர்வீகக் குடிமக்கள் அந்நதியில் இறங்கி நடக்கவே அஞ்சுகிறார்கள்.

இந்த மீன்களின் உடலிலிருந்து தோன்றும் மின்சாரத்தின் அளவு எவ்வளவு தெரியுமா? சாதாரணமாக நம் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்சாரத்தின் அளவு 220 வோல்டுகள் ஆகும். ஆனால் ஈல் தோற்றுவிக்கும் மின்சாரத்தின் அளவு சுமார் 600 வோல்ட்!

இவ்வளவு மின்சக்தியை அந்த மீன் பெற்றுள்ளது, அது வாழும் நன்னீர் சூழலுக்கு ஏற்றதே ஆகும். நன்னீர், மின்சாரத்தைக் கடத்தும் பண்பு கொண்டதில்லை.

ஈல்

கடல்நீரில் வாழும் ஸ்கேட் மீன் தோற்றுவிப்பது 60 வோல்ட் மின்சாரம் என்றாலும், கடல்நீர் மின்சாரத்தைக் கடத்தும் பண்பு உடையது ஆகையால் இக்குறைந்த அளவு மின்சாரம் அம்மீனுக்குப் போதுமானது.

மீன்கள் எவ்வாறு அவற்றின் உடலில் இருந்து மின்சாரத்தைத் தோற்றுவிக்கின்றன? அதற்குப் பயன்படுவது அவற்றின் உடலில் உள்ள நரம்பு முனைகளும், தசைகளும்தான். நரம்பு முனைகள்தான் மின்வாய்த் தகடுகளாக அமைகின்றன. இந்தத் தகடுகள் தொகுதி தொகுதியாய் அமைந்துள்ளன. ஒரு தொகுதியில் உள்ள தகடுகள் தொடர் அடுக்கில் இணைந்துள்ளன. ஆனால் தொகுதிகள் எல்லாம் தங்களுக்குள் பக்க அடுக்கில் அமைந்துள்ளன. சாதாரணமாக, மின்சாரத்தைத் தோற்றுவிக்கும் உறுப்பு, எலும்புடன் இணைந்த தசையுடன்தான் அமைந்திருக்கும்.

நரம்பால் உண்டாகும் தூண்டுதலின்போது இந்த எலும்புத் தசை சுருங்கும். அப்போது மின் தூண்டல் ஏற்படுகிறது. அந்த மின் தூண்டல், தசையிலிருந்து நரம்பு முனையை அடையும்போது ஒரு சிறப்பு ரசாயனப் பொருள் அங்கு சுரக்கப்படும். அதன் விளைவாகவே தசைகள் சுருங்கும். ஆனால் மின் உற்பத்தி உறுப்பால் தசைகள் சுருங்கிக்கொள்வதில்லை. அதற்குப் பதிலாக அவை மின் தூண்டலைத் தோற்றுவிக்கும் உறுப்புகளாக இயங்குகின்றன.

சாதாரணமாக இப்படித் தோன்றும் ஒவ்வொரு சிறு மின் தூண்டலும் சுமார் 150 மில்லி வோல்ட் திறன் கொண்டதாகும்.

ஈல் மீனின் மின் உற்பத்தி உறுப்பில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் 6ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை உள்ள இத்தகடுகள் தொடர் அடுக்கில் இணைந்து செயல்படுவதால் அதன் மொத்தப் பலனாக 600 வோல்ட் மின்சாரம் தோற்றுவிக்கப்படுகிறது.

அதேநேரம் டார்பிடோ ரேஸ் மீனில் சுமார் ஆயிரம் தகடுகள்தான் ஒரு தொகுதியில் உள்ளன. இத்தொகுதிகள் 200 தான் உள்ளன. அவையும் பக்க அடுக்கில் இணைந்திருப்பதால் இம்மீன் உண்டாக்கும் மின் திறன், ஈல்மீனைப் போன்று அதிக அளவுடையதாய் இருப்பதில்லை.