சின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவை மையப்படுத்தியே அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இந்த நிலையில் சொந்த ஆதாயங்களுக்காக பாஜகவால் ஒட்டவைக்கப்பட்ட அந்த கட்சியில், அதே சசிகலாவால் மீண்டும் சூறாவளி சுழன்றடிக்கத் தொடங்கியுள்ளது.

நன்னடத்தை அடிப்படையில் வரும் புத்தாண்டு தொடக்கத்தில் சசிகலா நிச்சயம் விடுதலை ஆவார் என அண்மைக் காலமாகவே செய்திகள் சிறகடித்தவண்ணம் உள்ளன.

‘சிறை மீளும் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பதா, அப்படியே சேர்த்தாலும் அவருக்கு என்ன பொறுப்பு வழங்குவது?’ என்பதுதான் அதிமுக உயர்மட்டத்தில் இப்போது முக்கிய பேசுபொருளாக இருக்கிறது.

சசிகலாவின் கண்ணசைவில் ஆட்சி சக்கரம் சுழன்ற காலகட்டத்தில், கப்பம் கட்டுவதில் தொடங்கி, அத்தனை திரைமறைவு காரியங்களையும் கச்சிதமாக முடித்து அவரிடம் நல்ல பெயர் எடுத்தவர்களில் இன்றைய முதல்வர் எடப்பாடிக்குத் தனியிடம் உண்டு.

இதன் காரணமாகவே, தான் சிறை செல்ல நேரிட்ட சமயத்தில் அவர் எடப்பாடியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தார். பின்னர் எதிர்பாராதத் திருப்பங்கள் அரங்கேற, எடப்பாடி தனி ரூட் எடுத்தார்.

இன்றைக்கு தினகரனை அடியோடு வெறுத்தாலும், சசிகலா மீதான அபிமானம் எடப்பாடியிடம் அப்படியே இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

அதேநேரம் சசிகலாவின் வருகையால், ‘வாராது வந்த மாமணி’ போல கிடைத்த முதல்வர் அரியாசனத்தை விட்டுத் தர எடப்பாடி எந்த நிலையிலும் தயாராக இல்லை. இதற்கேற்ப அவரது நடவடிக்கைகள் இருக்கும் என இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

சசிகலா மீதான எடப்பாடியின் ‘சாப்ட் கார்னர் அப்ரோச்சுக்கு’ அரசு கேபிளில் ஜெயா டிவிக்கு மீண்டும் இடம் கிடைத்ததைச் சொல்லலாம். அதேபோல முன்பு அரசுக்கு எதிராகப் பொங்கியெழுந்த ஜெயா டிவி, இப்போது அடக்கி வாசிப்பதையும் பலரும் கவனிக்கத் தவறவில்லை.

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் விஷயத்தில் துணை முதல்வர் பன்னீர் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லையாம். ”நம்ம பொசிஷனுக்கு எதுவும் பாதிப்பு வராமல் இருந்தால் சரிதான்’ என்கிற மனநிலையில் அவர் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

அமைச்சர்களில் பெரும்பாலானோர் சசிகலா வருகைக்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், எதிர்ப்பை இதுவரை பதிவு செய்யவில்லை.

ஆனால் ஜெயக்குமார், தங்கமணி ஆகிய இருவர்தான் ”மன்னார்குடி குடும்பத்திலிருந்து இனி ஒருத்தரைக் கூட கட்சியில் சேர்க்கக் கூடாது’ என மல்லுக்கு நிற்பதாகக் கேள்வி.

”இன்றைக்கு சசிகலாவைச் சேர்த்தால் நாளை அவர் பலம் பெற்று மீண்டும் தினகரனைச் சேர்க்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது? எனவே வம்பை விலைகொடுத்து வாங்க வேண்டாம்’ என தங்கமணி சொன்னதற்கு, எடப்பாடி ரியாக்ஷன் எதையும் காட்டவில்லையாம்.

அதேநேரம் இதே கருத்தை வேறு தொனியில் ஜெயக்குமார் சொன்னபோது பதிலுக்கு எடப்பாடி அவரிடம் ரொம்பவே சீறியிருக்கிறார்.

”ஆளாளுக்கு அட்வைஸ் பண்றீங்க. எனக்கு எதுவும் தெரியாதுண்ணு நினைச்சீங்களா? எந்த நேரத்தில் எதைச் செய்யணுமோ அதை நான் செய்வேன். என்னிடம் பேசிய மாதிரி வெளியில் எங்கும் பேச வேண்டாம்’ என ஜெயக்குமாரை எடப்பாடி லெப்ட் அண்ட் ரைட் வாங்கியதுதான்.அதிமுக மேல்மட்டத்தில் இப்போது ஹாட் டாபிக்காக வலம் வருகிறது