ஆம்பள’அரசியல்! – பற்றவைத்த குருமூர்த்தி… பாயத் தயாராகும் பா.ஜ.க

எடப்பாடியின் ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்வார்கள். அதற்குக் காரணமாக ‘ஊழல் ஆட்சி’ என்ற கோஷத்தை முன்வைப்பார்கள்.

கழுகார் உள்ளே நுழையும்போது, தொலைக்காட்சியில் ‘உன் பேரென்ன தெரியாது, உன் ஊரென்ன தெரியாது, நீ யாருன்னே தெரியாது…’ என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. ராகத்துக்கேற்ப தலையை ஆட்டிய கழுகார் “இது, ‘ஆம்பள’ படப் பாடல்தானே?’’ என்று கேட்டார்.

‘‘தமிழகமே இப்போது ‘ஆம்பள’ அரசியலைத்தான் பேசிக் கொண்டிருக்கிறது. உம்மிட

மும் அதைப் பற்றி ஏதாவது செய்தி இருக்குமே!’’ என்று கேட்டோம்.

டி.வி வால்யூமை ‘ம்யூட்’ செய்துவிட்டுப் பேச ஆரம்பித்தார் கழுகார்.

‘‘திருச்சியில் நடந்த துக்ளக் இதழின் பொன்விழா கூட்டத்தில், ‘சசிகலா முதல்வர் ஆக முயன்றபோது பன்னீர்செல்வம் என்னிடம் வந்து புலம்பினார். அவரிடம் `நீங்கெல்லாம் ஆம்பளையா?’ என்று கேட்டேன்’ என்று ஆடிட்டர் குருமூர்த்தி பேசியது, அ.தி.மு.க-வுக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அதற்கு உடனடியாக ரியாக்‌ஷன் காட்டிய அமைச்சர் ஜெயக்குமார், ‘குருமூர்த்தியின் பேச்சு திமிர்த்தனத்தின் உச்சம். இவ்வளவு திமிர் கூடாது; நாவடக்கம் தேவை. அ.தி.மு.க மீது கை வைத்து வாங்கிக்கட்டிக்கொண்ட வரலாறும் குருமூர்த்திக்கு உண்டு’ என்று காட்டமாக பதிலடி கொடுத்தார்.’’

‘‘மறுநாளே குருமூர்த்தி அதற்கு விளக்கம் அளித்தாரே!’’

‘‘ஆமாம். ‘பன்னீர்செல்வத்தை தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. அ.தி.மு.க-வினர் துணிச்சல் இல்லாமல் சசிகலா காலில் ஏன் விழுகிறார்கள் என்ற அர்த்தத்தில்தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர்தான் அ.தி.மு.க-வை சசிகலாவிடமிருந்து காப்பாற்றினார். அவர்மேல் எனக்கு மிகவும் மரியாதை இருக்கிறது’ என ட்வீட் போட்டிருந்தார். அதற்கு பன்னீர்செல்வம் தரப்பு எதிர்வினை ஆற்றாதது மற்றொரு விவாதமாகியிருக்கிறது.’’

அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில்...

அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில்…

‘‘எடப்பாடி பழனிசாமியைப் பற்றி யாராவது இப்படிப் பேசியிருந்தால் ‘நமது அம்மா’வில் கிழித்தெடுத்திருப்பார்களே?’’

‘‘உண்மைதான்… எடப்பாடி தரப்பு இதை உள்ளூர ரசிக்கிறது என்கிறார்கள். அதனால்தான், பெரியதாக ரியாக்‌ஷன் காட்டவில்லையாம். கட்சிக்குள் இப்படிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும் ஆடிட்டரின் பேச்சு பொதுவெளியில் கடும் கண்டனங்களைச் சம்பாதித்திருக்கிறது. ‘ஆம்பள’ என்கிற சொல் பதத்தையே பலரும் அநாகரிகத்தின் உச்சம் என்கிறார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்கிற பாலினச் சமத்துவத்தைக் கேள்விக்குறியாக்கி யிருக்கும் அவரின் பேச்சை சுட்டிக்காட்டும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும், ‘பெண் என்றால் இளக்காரமா?’ என்று கொந்தளிக் கிறார்கள். மற்றொரு தரப்போ, ‘இது பன்னீர் தரப்பையும் ஆடிட்டரையும்வைத்து தமிழகத்தில் பா.ஜ.க ஆடப்போகும் ஆட்டத்துக்கான டிரெய்லர்’ என்கிறது.’’

‘‘ஓஹோ!’’

‘‘அதே கூட்டத்தில் தமிழருவி மணியன் பேசியதைக் கவனித்தீரா? ‘ஊழலைச் சகித்துக்கொள்ள மாட்டேன் என முழங்கும் பிரதமர் மோடி, தமிழகத்தில் நடக்கும் மோசமான ஆட்சியை எப்படிச் சகித்துக்கொள்கிறார்? பத்து அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தினாலே பல நூறு கோடி ரூபாய் கிடைக்கும். அந்தப் பணத்தை எண்ணுவதற்கே காலம் போதாது’ என்று ஊழலைச் சுட்டிக்காட்டியதுடன், ‘இந்த ஆட்சியைக் கலைத்துவிட்டு ஆறு மாதங்களில் ஆளுநர் ஆட்சியைக் கொண்டுவந்து, மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் பா.ஜ.க வளரும்’ என்றும் ஐடியா கொடுத்திருக்கிறார்.’’

‘‘இதற்கும் ஆடிட்டர் பேச்சுக்கும் என்ன சம்பந்தம்?’’

‘‘எடப்பாடியின் ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்வார்கள். அதற்குக் காரணமாக ‘ஊழல் ஆட்சி’ என்ற கோஷத்தை முன்வைப்பார்கள். இதில் பன்னீர் தரப்பினரைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆளுநர் ஆட்சி கொண்டுவரப்படும். ஊழல் அமைச்சர்கள் உள்ளே போவார்கள். அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். லஞ்ச அதிகாரிகள் கைதாவார்கள். நீண்டகாலமாக நடக்காத பல வேலைகள், பெரிய திட்டங்கள் வேகமாக நடக்கும். ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்படும். மக்களே இந்த ஆட்சி நன்றாக இருக்கிறது என்று பேசும் அளவுக்கு ஆளுநரின் ஆட்சி நடக்கும். அப்போது ‘பா.ஜ.க ஆட்சிதான் இது’ என்று சொல்லி, பா.ஜ.க தலைமையில் ஒரு கூட்டணியை அமைப்பார்கள். இதற்கான அடித்தளம்தான் ஆடிட்டரின் பேச்சு. ‘பன்னீரால்தான் சசிகலாவிடமிருந்து அ.தி.மு.க காப்பாற்றப்பட்டிருக்கிறது’ என்று அவர் சொன்னதுதான் கலகத்துக்கான முதல் குரல்.’’

‘‘ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பும் பா.ஜ.க-வுடன் இணக்கமாகத்தானே இருக்கிறது.’’

‘‘சமீபகாலமாக மாறிவருகிறது அவரின் போக்கு என்கிறார்கள். ஏன்… பொதுக்குழுவில் எடப்பாடியின் பேச்சைக் கவனித்தீரா? நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி, இடைத்தேர்தலில் வெற்றியை ஒப்பிட்டு அவர் பேசுகையில், ‘தமிழகத்தில் நமது ஆட்சி தொடரவேண்டும் என்ற தமிழக மக்களின் விருப்பமே இடைத்தேர்தல் வெற்றி’ என்று குறிப்பிட்டார். அதாவது, ‘தமிழக மக்கள் பா.ஜ.க ஆட்சியை விரும்பவில்லை’ என்றரீதியில் முதல்வரின் பேச்சு இருந்தது. அதேபோல், ‘நாங்கள் அடிமைக் கட்சி என்கிறார்கள். ஆனால் எந்த ரூபத்திலும் நாங்கள் பா.ஜ.க-வுக்கு அடிமையாக இல்லை. இணக்கமான உறவு மட்டுமே இருக்கிறது’ என்றும் பேசியிருக்கிறார்.’’

குருமூர்த்தி

குருமூர்த்தி

‘‘பா.ஜ.க-வின் ரியாக்‌ஷன்?’’

‘‘அவர்கள் இதற்கெல்லாம் நேரடியாக பதில் சொல்வார்களா என்ன… சி.பி.ஐ விசாரித்துவரும் குட்கா வழக்கை தற்போது அமலாக்கத் துறை கையில் எடுத்திருக்கிறது. டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு தமிழக குட்கா வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதைப் பட்டியலிட்டு அவற்றை விசாரிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன் தொடர்ச்சியாகத்தான் ஓய்வுபெற்ற டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரனை வரும் டிசம்பர் 2-ம் தேதியும், ஐ.ஜி-யான தினகரனை டிசம்பர் 3–ம் தேதியும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துள்ளனர். அடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடக்கும் என்கிறார்கள்.’’

‘‘அடேங்கப்பா!’’

‘`இத்தனை நாள்களாக அமைதியாக இருந்துவிட்டு, குட்கா வழக்கில் திடீர் பாய்ச்சல் காட்ட ஆரம்பித்திருப்பதற்கும் பின்னணி இருக்கிறது. சமீபத்தில் தகவல் தொடர்பு தலைமை ஆணையராக கவர்னரின் செயலாளராக இருந்த ராஜகோபால் நியமிக்கப்பட்டார். இந்தப் பதவிக்கு முதல்வர் எடப்பாடி யின் சாய்ஸ், ஓய்வுபெற்ற டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரன்தான். ஆனால், கவர்னர் அலுவலகம் மற்றும் டெல்லி பிரஷர் காரணமாக, அதை அவரால் நிறைவேற்ற முடியவில்லையாம். இதுவும்கூட எடப்பாடி தரப்பைக் கோபப்பட வைத்துள்ளது என்கிறார்கள்.

டி.கே.ராஜேந்திரன் தரப்பிலிருந்தும் பி.ஜே.பி-க்கு எதிராகக் கடுமையான உறுமல்கள் கிளம்பினவாம். அதனால்தான் அவர்மீது அதிரடியாக அமலாக்கப் பிரிவை இறக்கிவிட்டுள்ளார்களாம்.’’

‘‘ம்!’’

‘‘பா.ஜ.க இப்படியும் நினைக்கிறது… ‘தி.மு.க ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காக அ.தி.மு.க ஆட்சியைத் தக்கவைக்க உதவினால், எடப்பாடி தனிப்பெரும் தலைவராகப் பார்க்கிறார். அதனால்தான், டெல்லி சொல்வதையெல்லாம் இப்போது எடப்பாடி அரசு அப்படியே கேட்பதில்லை. இது பா.ஜ.க-வின் வளர்ச்சிக்கு ஆபத்தானது’ என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் பா.ஜ.க டெல்லி புள்ளி ஒருவர்!’’

‘‘உதாரணம்?’’

‘‘சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு விஷயத்தைப் பேசியதாகக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, ‘அ.தி.மு.க ராஜ்யசபா எம்.பி-யான விஜிலா சத்தியானந்தின் எம்.பி பதவிக்காலம் அடுத்த வருடம் முடிகிறது. அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தர விரும்புகிறோம். அவருடைய எம்.பி பதவிக்காலத்தை நீட்டித்துத் தரவும்’ என்று மோடி கேட்டாராம். இதைக் கேட்டதும் எடப்பாடி அதிர்ந்து விட்டாராம். சிறிதும் யோசிக்காமல் அப்போதே ‘நிச்சயமாக முடியாது’ என்று தடாலடியாகச் சொல்லிவிட்டாராம். இதில் மோடி பயங்கர அப்செட் ஆனதுடன், சற்று கோபமாகவே திரும்பினாராம்.’’

‘‘யார் கோபமாக இருந்தால் என்ன… ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் இரண்டாவது பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்திவிட்டார்களே!’’

‘‘ஆமாம்… பொதுக்குழுவைக் கூட்டினால் பிரச்னை வெடிக்கும் என்ற கூற்றைப் பொய்யாக்கும்விதத்தில் ஜெயலலிதாவுக்கு விருப்பமான ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நவம்பர் 24-ம் தேதி அ.தி.மு.க-வின் பொதுக்குழு நடந்து முடிந்திருக்கிறது. ‘ஐந்து ஆண்டு உறுப்பினர் கட்டாயம்’ என்ற சட்டத் திருத்தத்தால் அ.ம.மு.க-வுக்குச் சென்று வந்தவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் சீட் கிடைக்காது. ஆனால், சசிகலாவுக்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகச் சொல்வதும் அபத்தம். ஏனென்றால், சசிகலாவை அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே இதுவரை நீக்கவில்லை. குற்றவாளியாக தண்டனை பெற்றவர் அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தானாகவே விலகிவிடுவார் என்று அ.தி.மு.க தரப்பில் சொல்கிறார்கள். ஆனால், அப்படி எதுவும் விதிமுறை இருப்பதாக உறுதியாகத் தெரியவில்லை.’’

‘‘பொதுக்குழுவில் பொங்கிவிட்டாராமே கே.பி.முனுசாமி?

‘‘பொதுக்குழுவில் புகைச்சலுக்குப் பிள்ளையார்சுழி போட்டது தங்கமணியின் பேச்சுதான். ‘2021-ல் மீண்டும் எடப்பாடி தலைமையில் ஆட்சியமைப்போம்; அடுத்த தேர்தலிலும் முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான்’ என்றார் தங்கமணி. அவருக்குப் பிறகு பேசிய கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி ‘இரட்டைத் தலைமை என்பது கூர்மையான கத்தி போன்றது. நாம் அதை கவனமுடன் கையாளவேண்டும்’ என்று தங்கமணியின் பேச்சுக்கு செக் வைத்தவர், ‘எம்.ஜி.ஆர் – ஜெயலலிதாவை பொதுவெளியில் நாம் எப்படி உயர்த்திப் பேசுவோமோ, அப்படித்தான் எடப்பாடி – பன்னீர் ஆகிய இந்த இரண்டு தலைவர்களையும் பொதுவெளியில் நாம் உயர்த்திப் பேசவேண்டும். அப்போதுதான் இவர்கள் தலைமை மேலும் வலுவடையும்’ என்று ஐடியா கொடுத்தார்.’’

‘‘ம்!’’

“அதே கூட்டத்தில் அ.தி.மு.க – தி.மு.க ரகசிய உறவையும் போட்டு உடைத்துவிட்டார் முனுசாமி. ‘நமது கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் பலரும் தி.மு.க-வினருடன் தொழில்ரீதியில் தொடர்பு வைத்திருக்கிறார்கள். முப்பது ஆண்டுகளாக நமது கட்சியில் இருக்கும் தொண்டர்களுக்கு இது எவ்வளவு அதிருப்தியை ஏற்படுத்தும் தெரியுமா? இனியும் இது தொடர வேண்டாம். எச்சரிக்கையாக இருங்கள்’ என்று சொன்ன முனுசாமியின் பேச்சுக்கு நல்ல ரெஸ்பான்ஸ்.’’

‘‘தி.மு.க தரப்பு செய்தி ஒன்றுமில்லையா?’’

‘‘மகாராஷ்டிர அரசியல் பற்றி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் பா.ஜ.க-வைக் கடுமையாகத் தாக்கியிருந்தார். அதனால் கொதிப்பில் இருக்கும் பா.ஜ.க-வின் ஐ.டி விங், அவருக்கு எதிராக மற்றொரு பெரிய விஷயத்தை கையில் எடுக்கப்போகிறதாம்’’ என்ற கழுகார் பட்டென சிறகை விரித்தார்.