Daily Archives: பிப்ரவரி 24th, 2010

வந்துவிட்டது, ‘ஹண்டா வைரஸ்’

கொசுவால், சிக்குன் குனியா வந்து பாடாய் படுத்தி விட்டது; அடுத்து, பன்றிகளால் பன்றிக்காய்ச்சல் வந்து, இன்னும் விட்டபாடில்லை. ஏற்கனவே, கோழிகளால் பறவைக் காய்ச்சல் வந்து, இந்தியா உட்பட பல நாடுகளை பயமுறுத்திச் சென்று விட்டது. இந்த நிலையில், அடுத்து நம்மை பயமுறுத்த வருகிறது எலிகளால் வரும் ஒரு வித வைரஸ் காய்ச்சல். போதுமான சிகிச்சை பெறாவிட்டால், 70 சதவீதம் பேர் இறந்து விடுகின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
செத்த எலிகளால், பிளேக் என்ற கொடிய நோய் வரும். இந்தியாவில், சூரத் நகரத்தில் சில ஆண்டுகளுக்கு முன் பலர் பலியாயினர். ஆனால், உயிருள்ள எலிகள் மூலம் இப்படி ஒரு கொடிய நோய் வரும் என்பது இப்போது தான் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில், மும்பையை சேர்ந்த செம்பூரில் வசிக்கும் ஜியோத்சனா என்ற வயது 21 பெண், தொடர்ந்து மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்; வாந்தி, மயக்கம், தலைசுற்றல், மூச்சுதிணறல் என்று அடுக்கடுக்காக கோளாறுகள் தொடர, கடைசியில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எவ்வளவோ சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் போனதால், சிறப்பு நிபுணர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் பரிசோதித்ததில் ஜியோத்சனாவின் ரத்த சிவப்பு அணுக்கள் அளவு வெகுவாக குறைந்து வருவதை கண்டுபிடித்தனர்.
அதிர்ந்து போன டாக்டர்கள்,அவருக்கு புதிய ரத்தம் செலுத்தும் பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததால், அவருக்கு மாற்று ரத்தம் செலுத்தும் நடவடிக்கையும் தொடர்ந்தது. அவரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, அதன் ஆய்வு முடிவுகள், வெளிநாட்டு நிபுணர்கள் பார்வைக்கு அனுப்பியபின் தான் புதிய அதிர்ச்சி தகவல் வெளியானது. அவருக்கு பாதித்திருப்பது , “ஹண்டா வைரஸ்’ என்ற எலிகள் மூலமாக, பரவும் வைரஸ் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், குணம் தெரிய ஆரம்பித்தது. இந்த வகை வைரஸ்கள் வெகு சீக்கிரத்தில் யாரையும் தாக்காது. ஆனால், வைரஸ் தாக்கினால், உடனடியாக கண்டுபிடித்து சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால், 70 சதவீத நோயாளிகள் இறக்கும் அபாயம் உள்ளது. அதிக அளவில் இன்னும் இது பரவவில்லை. இருப்பினும், சுற்றுச்சூழல் பாதிக்கப் பட்டால், எதிர்காலத்தில் இது போன்ற எலி வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை உயரும் ஆபத்து உள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதென்ன, “ஹண்டா வைரஸ்?’ எலி, பெருச்சாளி போன்ற கொறித்து தின்னும், வலுவான பற்களை கொண்ட பிராணிகள் மூலம் தான் இந்த வைரஸ் பரவுகிறது.
* நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருந்த அறையில், மேஜையில் எலிகள் இருந்தால், அவற்றின் கழிவுகள் காணப்படும்.
* நாட்கணக்கில் இந்த கழிவுகள் வறண்டு போய், தூசாக கிளம்பும்.
* இந்த தூசியை சுவாசிக்கும் சிலருக்கு, “ஹண்டா வைரஸ்’ தொற்றும்.
* சுவாசமண்டலத்தைத் தான் இது முதலில் பாதிக்கும்; தொடர்ந்து மர்ம காய்ச்சல், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் பாதிப்பு ஏற்படும்.
இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று ஏற்படுவது மிக மிக குறைவு தான் என்றாலும்; நீண்ட நாள் பூட்டியிருந்த இடங்களில் இந்த வைரஸ் பரவி இருக்கும். பலவீனமானவர்களுக்கு உடனே தொற்றும் ஆபத்து உள்ளது. எனவே, ஆரோக்கியம் காப்பாற்றப்பட வேண்டுமானால், சுற்றுச்சூழலை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை தூக்கியெறிந்து, எலிகள் இல்லாமல் வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே இது போன்ற நோய்கள் வராமல் தவிர்க்கலாம்.

பெற்றோரிடம் இருந்து குழந்தைக்கு தாவும் மனஅழுத்தம்

மனஅழுத்தம் ஒரு தொற்றுநோய். வாழ்க்கையின் சூழல் பலருக்கும் மன அழுத்தத்தை தரலாம். ஆனால் அது குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் மூலம்
பரவுகிறது என்கிறது புதிய ஆய்வு.

பின்லாந்து கல்வி அமைப்பு ஒரு ஆய்வை நடத்தியது. டீன்ஏஜ் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் 500 பேரை பரிசோதித்தது. அதில் அவர்களுக்கு இடையே உள்ள தொடர்பால் குழந்தைகளுக்கு மனஅழுத்தம் தொற்றுவது தெரியவந்துள்ளது.

குறிப்பாக வேலை செய்யும் பெற்றோர்களின் அனுபவமே அவர்களின் குழந்தைக்கு மன அழுத்தம் தொற்ற அடிப்படையாக உள்ளது. ஒருவர் தனது அலுவலகத்தில் மேலதிகாரி மற்றும் ஊழியர்களுடன் மனக்கசப்பான அனுபவங்களைப் பெறலாம். அதனால் ஏற்படும் மனச்சோர்வுடன் அவர் வீட்டை அடை கிறார். அந்தச் சோர்வு குறையும் முன்பே வீட்டில் குழந்தைகள் சேட்டை செய்ய ஆத்திரம் தலைக்கேறி கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள் பெற்றோர்கள். இதனால் குழந்தைகளின் கவனம் சிதறுகிறது.

அது அத்துடன் நிற்காமல் மறுநாள் பள்ளியிலும் எதிரொலிக்கிறது. வீட்டுப்பாடம் முடிக்காவிட்டால் அல்லது தவறு செய்திருந்தால் ஆசிரியர்களிடம் அவமானப்பட வேண்டி இருக்கிறது. அதே மனநிலையுடன் செயல்படுவதால் நண்பர்களுடனும் சரியாக ஒத்துழைக்க முடிவதில்லை. நாளடைவில் இது மனஅழுத்த வியாதியாக பரிணமித்துவிடுகிறது.

பெற்றோர்கள் சண்டையிட்டுக் கொள்வதால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான். சண்டை கூட வேண்டாம், ஏதோ வெறுப்பில் பேசினால்கூட குழந்தைகளை மனஅழுத்தம் தொற்றிக் கொள்கிறது என்பது பெற்றோர்கள் அறிய வேண்டிய செய்தி.