வேர்ட் டேபிள்: செல்கள் இடையே இடைவெளி அமைக்க

வேர்டில் டாகுமெண்ட்கள் இடையே டேபிள்களை அமைக்கும் போது அவற்றை நம் விருப்பத்திற்கேற்ப அமைத்திட பல வசதிகளும், மாடல்களும் தரப்படுகின்றன. இவை முன்மாதிரி என அழைக்கப்படும் டெம்ப்ளேட்டுகளாகக் கிடைக்கின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நாம் டேபிளை அமைக்கலாம். இந்த டேபிள்களில் உள்ள செல்களுக்கு இடையே, சிறிய இடைவெளியை ஏற்படுத்தினால், பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருக்கும். இதற்கு ஏற்கனவே அமைக்கப்பட்ட டெம்ப்ளேட்டுகள் உதவி செய்வதில்லை. ஆனால், இதனை அமைத்திட முடியும். அதற்கான வழிகளை இங்கு காணலாம்.
முதலில் மாற்றப்படாத, மாறா நிலையில் கிடைக்கும் டேபிள் ஒன்றை எடுத்துப் பார்க்கலாம். இந்த டேபிள் முழுவதையும் தேர்ந்தெடுத்தால், அதில் மார்ஜின், இடது பக்கமும் வலது பக்கமும் .08 அங்குலம் இருப்பதனைக் காணலாம். டேபிள் ஒன்று உருவாக்கப்படுகையில், வேர்ட் இந்த மார்ஜின் இடத்தைத் தானாக அமைத்துக் கொள்கிறது. இந்த டேபிளைப் பெற, Insert மெனு சென்று, Tables group பிரிவில் உள்ள Table என்ற பிரிவில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவினைப் பயன்படுத்தி, மூன்று நெட்டு வரிசை (columns) மற்றும் ஐந்து படுக்கை வரிசை (rows) கொண்ட டேபிளை உருவாக்கவும்.
இதில், மேலும் கீழுமாக மார்ஜின் உருவாக்க கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.
1. டேபிள் முழுவதையும் தேர்ந்தெடுக்கவும். மூவ் ஹேண்டில் எனப்படும் ஸ்வஸ்திக் சின்னம் போன்ற கர்சரை டேபிளின் இடது மேல் மூலையில் கிளிக் செய்தால், டேபிள் முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும்.
2. அடுத்து contextual Layout டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள குரூப்பில், Cell Margins என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். எம்.எஸ். ஆபீஸ் 2003 பயன்படுத்துபவர்கள், டேபிள் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Table Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், Table பிரிவில் Options என்பதில் கிளிக் செய்திடுக.
3. கிடைக்கும் டயலாக் பாக்ஸில், மேல் மற்றும் கீழ் (top and bottom) பகுதிக்கான மார்ஜின் அகலத்தினை அமைத்துப் பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இனி, செல்களுக்கிடையே எப்படி இடைவெளி அமைப்பது எனப் பார்க்கலாம்:
1.முதலில் மேலே கூறியபடி ஸ்டெப்ஸ் 1 மற்றும் 2னை மேற்கொள்ளவும்.
2.கிடைக்கும் டயலாக் பாக்ஸில், Allow Spacing Between Cells என்பதில் கிளிக் செய்து. 0.08 என்று குறிக்கவும்.
3. பின்னர் ஓகே கிளிக் செய்திடவும்.
மேலே குறிப்பிட்ட செயல்பாடுகளினால் கிடைக்கும் டேபிள் அமைப்பு மிகவும் ஆர்வமூட்டுவதாகவும், எளிதாகவும் இருப்பதனைக் காணலாம். நாம் செய்ததெல்லாம், மாறா நிலையில் கிடைக்கும் டேபிளில், சிறிது இடம் கூடுதலாக அமைத்ததுதான்.
இன்னொரு வழியிலும் இதனை அமைக்கலாம். செல்பார்டர்களை மறையச் செய்து இதனை மேற்கொள்ளலாம். ஏற்கனவே குறிப்பிட்டபடி டேபிள் ஒன்றை உருவாக்கி, கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.
1. டேபிளைத் தேர்ந்தெடுக்கவும்.
2. contextual Design டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Table Styles குரூப்பில், Borders கீழ்விரி மெனுவினைப் பெறவும். அதில் Borders and Shading என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எம்.எஸ். ஆபீஸ் 2003 பயன்படுத்துபவர்கள், டேபிள் மீது ரைட் கிளிக் செய்து, Table Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Table டேப்பில் Borders and Shading என்பதில் கிளிக் செய்திடவும்.
3. கிடைக்கும் டயலாக் பாக்ஸில், வண்ணங்களுக்கான கட்டத்தில் white கலர் தேர்ந்தெடுக்கவும். அடுத்து பிரிவில் பெரிய அளவில் எழுத்தின் அளவைத் தேர்ந்தெடுக்கவும். வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கையில், டாகுமெண்ட்டின் பின்னணி வெள்ளையாக இருந்தால், வெள்ளை வண்ணத்தினையும், வேறு வண்ணத்தில் பின்னணி இருந்தால், அந்த வண்ணத்தினையும் அமைத்திடவும். இதனால், செல் பார்டர்கள் தானாகவே மறைந்திடும்.
4. அடுத்து Shading டேப்பில் கிளிக் செய்திடவும். செல் பின்புலத்திற்கு தகுந்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும்.
இங்கு, நாம் செல்களுக்கு இடையேயான இடைவெளியை அதிகரிக்கவில்லை. அதற்குப் பதிலாக, செல்களின் பார்டரின் அகலத்தினை அதிகரித்து, பின்னர் இடைவெளி அதிகப்படுத்தப்பட்டிருக்கும் தோற்றத்தைக் காட்ட அவற்றை மறைத்திருக்கிறோம்.
இது ஒரு சோதனை தான். உங்களுக்கும் இதன் மூலம் டேபிளின் கூறுகளை எப்படிக் கையாளலாம் என்பது தெரிந்திருக்கும்.