Daily Archives: மார்ச் 13th, 2012

கூகுள் வெப் ஹிஸ்ட்ரியை அழிக்க

சென்ற மார்ச் 1 முதல், கூகுள் நிறுவனம் தன் புதிய பிரைவசி பாலிசியை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் கூகுள் சாதனங்கள் அனைத்திலும் பகிர்ந்து கொள்ளப்படும். அதாவது உங்களுக்கு ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால், அதில் நீங்கள் அக்கவுண்ட் உருவாக்கும் போது தரப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் ஜி ப்ளஸ், ஆர்குட், குரோம் பிரவுசர், யு-ட்யூப் என கூகுள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களிலும் பயன் படுத்தப்படும்.
நாம் கூகுள் மெயில் அக்கவுண்ட் வைத் திருந்தால், கூகுள் நாம் மேற்கொள்ளும் இணைய தளங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் குறித்து வைத்துப் பயன்படுத்தும். உங்கள் தேடல்கள் மற்றும் பார்க்கும் தளங்கள் ஆகிய அனைத்தும் அதன் டேட்டா தளத்தில் பதிவாகும். தேவைப்படும் நேரத்தில் இவை பயன்படுத்தப்படும்.
கூகுள் இது போல நம் இணைய வேலைகளைப் பின்பற்றாமல் இருக்கவேண்டும் எனில், அதற்கான எதிர் வேலைகளையும் நாம் மேற்கொள்ளலாம். இதனை ஜஸ்ட் ஒரு பட்டன் அழுத்தி மேற்கொள்ளலாம் என்பது இன்னும் ஆர்வமூட்டும் ஒரு தகவலாகும். இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.
உங்கள் கூகுள் அக்கவுண்ட்டில், யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து நுழைந்த பின்னர், https://www.google.com/history என உங்கள் பிரவுசரின் முகவரி விண்டோவில் டைப் செய்திடவும். அல்லது கூகுள் சாதனங்களான, கூகுள் ப்ளஸ், அல்லது கூகுள் தேடல் தளத்தில், மேலாக வலது மூலையில் உள்ள கீழ்விரி மெனுவில் Account Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில், கீழாக ஸ்குரோல் செய்து சென்று, Services என்ற இடத்திற்குச் செல்லவும். அடுத்து, “Go to web history” என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருந்தால், நீங்கள் அண்மையில் சென்ற தளங்களின் முகவரி கள், மேற்கொண்ட தேடல்கள் அனைத்தும் அங்கு பட்டியலாக இருப்பதனைக் காணலாம். இங்கு உள்ள Remove all Web History என்ற கிரே கலர் பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து ஓகே பட்டன்களைக் கிளிக் செய்து வெளியேறவும். இதனைத் தொடர்ந்து, உங்களின் இணைய தேடல் பக்கங்கள், தகவல் தேடல் கேள்விகள் அனைத்தும் கூகுளின் கரங்களுக்குள் சிக்காது. பரவாயில்லை, கூகுளுக்குத் தெரிந்தால் நல்லதுதானே என்று எண்ணினால், மேலே தரப்பட்டுள்ள இடத்திற்குச் சென்று அதனை இயக்கி வைக்கவும்.

வங்கிகள் வழங்கும் புதிய வசதிகள்

நாட்டின் பொருளாதார சக்கரத்தின் சுழற்சியை இயக்கி வைத்து அதன் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது வங்கி துறை.

இத்துறை கடந்து வந்துள்ள பாதையை சற்று பின்னோக்கி பார்த்தால், சமீப காலங்களில், குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்தின் அறிமுகத்துக்கு பின்னால், எவ்வளவு நவீனமாகி வந்துள்ளது என்பது புரியும்.

1992 ம் ஆண்டிற்கு பிறகு நாட்டின் பொருளாதார வளர்ச்சி புதிய உத்வேகம் பெற்றது. தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல் மற்றும் உலக மயமாக்கல் போன்ற புதிய பொருளாதார கொள்கைகள் மூலம் இத்துறையில் சர்வதேச மற்றும் தனியார் வங்கிகளின் ஆதிக்கம் வலுப்பெற ஆரம்பித்தது. இதனால் வங்கிச்சேவையில் போட்டிகளும் சவால்களும் அதிகரிக்க ஆரம்பித்தன. புதிய விஞ்ஞான கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்களின் உதவியுடன் இந்த போட்டிகளையும் சவால்களையும் வெற்றிகரமாக எதிர் கொள்ள இந்திய வங்கி துறை தயாராகி வந்தது.

அவ்வப்போது உலக பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் நம் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்த தவறுவதில்லை. அந்த வகையில், உலகின் எந்த நாடாயினும் சரி உலக பொருளாதாரத்தின் பாதிப்பை எதிர் கொண்டாக வேண்டியது தவிர்க்க இயலாதது. இந்த விதிக்குட்பட்டு, நம் பொருளாதாரமும் உலக பொருளாதார நிலவரங்களை சார்ந்தே இயங்கி வருகிறது.

தற்போது நிலவி வரும் உலகப்பொருளாதார சிக்கல்களினால் நம் நாட்டில் உற்பத்தி குறைந்து பணவீக்கம் அதிகரித்தது. பணவீக்கம் அதிகரிப்பினால் விலைவாசிகள் உயர்ந்தது. இந்நிலையில் அதிகரித்து வந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்த வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி வீதத்தை பாரத ரிசர்வ் வங்கி அதிகரித்தது.

அதே நேரம், வங்கிகள் டெபாசிட்டுகளுக்கு வழங்கும் வட்டி வீதத்தை சமீப காலம் வரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாரத ரிசர்வ் வங்கி தற்போது அந்த உரிமையை வங்கிகளுக்கே வழங்கியுள்ளது. இதன் பின்னர் டெபாசிட்டுகளை பெறுவதில் வங்கிகளுக்கு இடையே போட்டிகள் அதிகரித்துள்ளதால், முதலீட்டாளர்களை கவர வங்கிகள் டெபாசிட்டுகளுக்கான வட்டி வீதங்களை அதிகரிப்பதுடன் சில சலுகைகளையும் அறிமுகம் செய்யத்துவங்கியுள்ளன. மேலும், வங்கிகள் தங்களது சேவையை மேம்படுத்தவும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறவும் முனைந்து செயல்பட தொடங்கியுள்ளன.

தற்போது அறிமுகமாகியுள்ள சலுகைகளில் ஒன்று தான் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு இருப்பதைப்போல் காப்பீட்டு வசதியை வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளுக்கும் ஏற்படுத்துவது. சேமிப்பு கணக்கானாலும் சரி நீண்ட கால வைப்பு நிதியானாலும் சரி அவற்றுக்கு காப்பீட்டு வசதிகளை ஏற்படுத்தி தர தற்போது வங்கிகள் முன் வந்துள்ளன. இந்த காப்பீடுகளுக்கான பிரிமிய கட்டணங்களின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ வங்கிகளே ஏற்றுக்கொள்கின்றன.

இது வரையிலும் விபத்துக்காப்பீட்டு வசதிகளை மட்டுமே ஏற்படுத்தி தந்த வங்கிகள் தற்போது ஒரு படி மேலே சென்று மருத்துவ காப்பீட்டு வசதிகளையும் வழங்க ஆரம்பித்துள்ளன. இவ்வகை திட்டங்கள் குரூப் இன்ஸூரன்ஸ் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.

எண்பது வயது வரையுள்ள வாடிக்கையாளர்களும் இவ்வகை காப்பீட்டு திட்டங்களில் பயன்பெற முடிகிறது.

ஆயுள் மற்றும் பொது காப்பீடு நிறுவனங்களும் தேவைகளை கருத்தில் கொண்டு தங்கள் பங்கிற்கு வங்கி சேமிப்பு வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் புதிய காப்பீட்டு திட்டங்களை வடிவமைத்து வருகின்றன.