காலம் அறிந்து காரியம் செய் -கவியரசு கண்ணதாசன்

காலங்கள் கடவுள் பாடும் ராகங்கள், அவை வீணடிக்கப்பட்டு விட்டால் திரும்பக் கிடைப்பதில்லை.

ஒரு வருஷம் முடிகிறது என்றால், ஒரு வயது முடிகிறது என்று பொருள்.

வயதுக்கு ஏறுகிற சக்தி உண்டே தவிர, இறங்குகிற சக்தி கிடையாது.

எத்தனை வயது வரை ஒருவன் வாழ்ந்தான் என்பது கேள்வியல்ல; ஒவ்வொரு வயதிலும் அவன் என்ன செய்தான் என்பதே கேள்வி.

மராட்டிய வீரன் சிவாஜியின் வயதைப்பற்றி யார் கவலைப்பட்டார்கள்? அவன் நடத்திய வீர சாகஸங்கள் வரலாறாயின!

ஆதிசங்கரர் சமாதி அடையும்போது வயது முப்பத்து இரண்டுதான்.

ஆனால், அந்த வயதுக்குள் அவர் ஆற்றிய காரியங்களின் பயனே இன்றைய பீடங்கள்.

இந்து தர்மத்தின் மறுமலர்ச்சிக்கு ஆதிசங்கரர் ஒரு மைல்கல்.

இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இலக்கணம் வகுத்தவரும் அவரே.

வயதுகள் கூடலாம், குறையலாம்; ஆனால் ஓடுகிற வருஷங்கள் உருப்படியான வருஷங்களாக இருக்க வேண்டும்.

இன்ன ஆண்டில், இன்ன காரியம் நடந்தது என்று வரலாறு எழுதப்படுமானால், அந்த வரலாற்றில் எங்காவது ஒரு மூலையில் நம்முடைய பெயர் இருக்க வேண்டும்.

உண்டோம், உறங்கினோம், விழித்தோம் என்று வாழ்கிறவர்கள் விலங்குகளே!

பயனற்ற காரியங்களில் பொழுதைச் செலவழிப்போர் பயனற்ற பிறவிகளே!

எந்தக் காரியத்தை எந்தக் காலத்தில் செய்ய வேண்டுமோ, அந்தக் காலத்தில் செய்துவிட வேண்டும். இல்லையேல் பின்னால் வருந்த நேரிடும்.

எனது இளமைக் காலங்கள்- அவற்றை நான் எண்ணிப் பார்க்கிறேன்.

எழுத உட்கார்ந்தால் மளமளவென்று என் கைப்படவே நாற்பது ஐம்பது பக்கங்கள் எழுதியதை எண்ணிப் பார்க்கிறேன்.

பரபரப்பான நடை; சுறுசுறுப்பான சிந்தனை; துருதுருவென்றிருந்த மூளை.

எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்கிறேன்.

அவை, எவ்வளவு வீணாகி விட்டன என்பதை எண்ணும் போது, `இறைவா, இன்னொரு முறை இளமையைத் தர மாட்டாயா?’ என்று கெஞ்சத் தோன்றுகிறது.

`அதைப் புத்தகமாக எழுத வேண்டும். இதைப் புத்தகமாக எழுத வேண்டும்’ என்றெல்லாம் இப்போது ஆசை பெருக்கெடுத்து ஓடுகிறது.

திடீர் திடீரென்று உடம்பு சோதனை செய்கிறது.

இந்தச் சோதனை இல்லாத காலங்களில் பயனற்ற அரசியல் கட்டுரைகளை எழுதினேன்; பயனற்ற மேடைகளில் காட்சியளித்தேன்; வீண் வம்புகளில் ஈடுபட்டேன்; விளையாட்டுகளையே வாழ்க்கை என்று கருதினேன்.

சிந்தனைகளைச் செயல்படுத்தும் ஆசைகள் வளர்ந்தபோது அந்தச் சக்தியை வழங்க, உடம்பு அடிக்கடி மறுக்கிறது.

இரணியனுக்கும் பிரஹலாதனுடைய வயதிருந்தால் அவன் நரசிம்ம அவதாரத்துடனேயே சண்டை போட்டுப் பார்த்திருப்பான்.

அறிவும் உணர்ச்சியும் தாமதித்தே வருகின்றன; ஆனால், காலம் முந்திக் கொண்டு வருகிறது.

இருபது வருஷங்களுக்கு முன்பு குமரியாக இருந்தவள் இப்போது கிழவியாகக் காட்சியளிக்கிறாள்.

அப்போது அவளுக்காக ஏங்கிய ஆடவர்களும், இப்போது அவளிடம் ஆத்ம விசாரம்தான் பேச முடிகிறது.

முன்பு எனக்கு வந்த வருமானம் இப்போது இல்லை.

அந்த வருமானத்தை நான் செலவழித்த போது இதே போல் வந்து கொண்டே இருக்கும் என்று கருதினேன்.

ஆனால், அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் உள்ள பேதம் இப்போதுதான் புரிகிறது.

மலர் பூத்தவுடனேயே அது கூந்தலுக்குப் போகாவிட்டால், அது வாடியவுடனேயே காலடியில் விழத்தான் வேண்டியிருக்கும்.

ஈயம் பத்திரமாக இல்லாவிட்டால், அது பேரீச்சம் பழத்துக்குத்தான் விலையாக இருக்கும்.

குருஷேத்திரம் எப்போது நடந்தது?

பாண்டவர்கள் வனவாசம் முடிந்த பிறகு.

அதற்கு முன்னாலேயே கண்ணன் அந்தப் போரைத் துவக்கி இருக்கலாம். ஆனால் அந்தக் காலம், யுத்த தர்மத்திற்கு நியாயமான காலமாக இருக்காது.

இரண்டாவது உலக யுத்தத்தை ஹிட்லர் தொடங்கிய காலம் அற்புதமான காலம்.

அவன் திட்டம் ஒழுங்காக இருந்திருக்குமானால் அவனே உலகத்தின் ராஜா!

அதுபோலவே, தாமதித்து அமெரிக்கா போரில் இறங்கின காலமும் அற்புதமான காலம்.

பங்களா தேசத்துக்குள் இந்தியா புகுந்த காலமே அருமையான காலம். அதற்கு முந்தி இருந்தால் உலகத்தின் வசை இருந்திருக்கும்; பிந்தி இருந்தால் இந்தியப் பொருளாதாரம் நாசமாகி இருக்கும்.

இளம் பருவத்தில் பைரன் ஒரு இளம் பெண்ணைக் காதலித்தான்; அவள் மறுத்து விட்டாள்.

நாற்பது வயதுக்கு மேல் அவளே அவனைத் தேடி வந்தாள் ஆசையோடு; அவன் மறுத்து விட்டான்.

சகல வசதிகளும் படைத்த இராவணன், சீதையின் சுயம்வரத்திற்கு முன்பே அவளை சிறையெடுத்திருந்தால் அவன் மீது பழி வந்திருக்காது. ஒரு வேளை சீதையே அவனை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும்.

அரசாங்க வேலையில் சேருவதற்குக் குறிப்பிட்ட ஒரு வயது நிர்ணயித்திருக்கிறார்கள். அந்த வயது கடப்பதற்கு முன்னாலேயே அதில் சேர்ந்து விடவேண்டும். காலம் போய்விட்டால், பிறகு கடைகளில் தான் வேலை பார்க்க வேண்டிவரும்.

சபரிமலை, ஜோதி கூட ஒரு குறிப்பிட்ட நாளில்தான் தெரிகிறது; தினசரி தெரிவதில்லை.

காலத்தின் பெருமையை உணர்ந்தவன்தான் காரியத்திலும் பெருமை கொள்ள முடியும்.

இன்று நான் செய்யும் புத்தகப் பணிகளைப் பத்து ஆண்டுகளுக்கு முன் நான் துவங்கியிருந்தால், எதிர்கால மாணவன் சிலப்பதிகாரத்திற்கும், மணிமேகலைக்கும் என் உரையைத்தான் படிப்பான்.

`இப்போது திருக்குறள் உரையை மட்டுமாவது எழுதி முடித்து விட முடியாதா?’ என்று தோன்றுகிறது.

`முடியும்’ என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே எனது சினிமாப் பாடல்களையும், இசைத் தட்டுக்களையும் தொகுத்து வைத்திருந்தால், இன்று இது ஒரு தனி `லைப்ரரி’ ஆகியிருக்கும்.

முறையாக 1944-ல் இருந்தே நான் டைரி எழுதத் தொடங்கி இருந்தால், உலகத்தில் வேறு எவனுக்கும் இல்லாத வரலாறு எனக்கு இருப்பதை உலகம் கண்டு கொண்டிருக்கும்.

வெள்ளம் போல வருமானம் வந்தபோது ஒரு தோட்டத்தையும் வாங்கி, ஒரு கிருஷ்ணன் கோயிலையும் கட்டி வைத்திருந்தால், இப்போது அந்த ஆசையால் வெந்து சாக வேண்டியிருக்காது.

அப்போது குழந்தைகள் பெயரால் குறைந்த பட்ச டெபாசிட் போட்டிருந்தால்கூட, மரணத்தைப் பற்றிய நினைப்பு வரும்போது குழந்தைகளைப் பற்றிய கவலை வராது.

அப்போது வாங்கிய சொத்துகளை விற்காமல் இருந்திருந்தால் கூட இப்போது எதிர்காலத்தைப் பற்றிய கவலையிராது.

அப்போது காலம் கனிவாக இருந்தது.

பணம் வந்தது; உடம்பு துடிதுடிப்பாக இருந்தது; `போனால் போகட்டும் போடா’ என்ற புத்தியும் இருந்தது.

இப்போது பழங்கணக்குகள் பரிசீலிக்கப்படுகின்றன.

பாய்மரக் கப்பல், காற்றை நம்பிப் போய்க் கொண்டிருக்கிறது.

புயல் காலத்தில் வானளாவி எழுந்த அலைகள், இப்போது அமைதியாக நாக நர்த்தனமாடுகின்றன.

நம்முடைய நண்பர்களும் காலங்களே; பகைவர்களும் காலங்களே.

காலங்களே தருகின்றன; அவையே பறிக்கின்றன.

காலங்களே சிரிக்கச் செய்கின்றன; அவையே அழவும் வைக்கின்றன.

`ஞாலம் கருதினும் கைகூடும்; காலம்
கருதி இடத்தால் செயின்’

என்றான் வள்ளுவன்.

காலம் பார்த்துக் காரியம் செய்தால், பூமியையே விலைக்கு வாங்கலாம்.

பத்து வருடங்களுக்கு முன்னால் கேரளாவில் பரபரப்பான கொலை ஒன்று நடந்தது.

கேரளா முழுவதிலும் அதைப்பற்றிய பேச்சாகவே இருந்தது. அடுத்த மாதமே அதைக் கதையாக எழுதிப் படமாக எடுத்து விட்டார் ஒருவர். அவர் லட்சாதிபதியாகி விட்டார்.

கைவண்டிக்காரர்கள் காய்கறி விற்கிறார்கள்; மாம்பழ சீஸன் வந்தால் மாம்பழம் விற்கிறார்கள்.

பனிக்காலத்தில் ஐஸ் கட்டியையும், காற்றடிக்கிற காலத்தில் மாவையும் வியாபாரம் பண்ணக்கூடாது.

`முறைகோடி மன்னவன் செய்யின்; உறைகோடி
ஒவ்வாது வானம் பெயல்’

-என்றான் வள்ளுவன்.

சித்திரை வைகாசி மாதங்களில் ஏரி குளங்களைத் தூரெடுக்க வேண்டும். அப்படித் தூரெடுக்கத் தவறினால், ஐப்பசி கார்த்திகையில் பெய்கிற மழைத் தண்ணீர் குளங்களிலும், ஏரிகளிலும் தங்காது.

வானம் பார்த்த பூமியில் பங்குனி மாதம் விதை விதைக்கின்றவன் விதைத்த விதையையும் சேர்ந்தே இழப்பான்.

`ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பார்கள்.

ஆவணியில் தண்ணீர் இறைத்தால் போதும், புரட்டாசியில் இருந்து மழை உதவி செய்துவிடும்.

காலங்களிலேயே காரியங்களின் வெற்றி தோல்விகள் அடங்கி இருக்கின்றன.

நல்ல பெண் கிடைக்கும் போது திருமணத்தை முடிக்காமல் விட்டுவிட்டால், பிறகு எந்தப் பெண் கிடைத்தாலும் போதும் என்ற நிலைமை வந்து விடும்.

காலத்தால் கிடைக்கும் நல்ல நண்பர்கள் மீண்டும் கிடைக்க மாட்டார்கள்.

இராவணன் தோற்ற பிறகு விபீஷணன் ராமனைத் தேடி வந்திருந்தால், ராமனே அவனை ஒரு அடிமையாகத்தான் நடத்தி இருப்பான்.

காலம் பார்த்து சுக்ரீவன், ராமனைச் சேராமல் இருந்திருந்தால், வாலி வதமும் நடந்திருக்காது; சுக்ரீவனுக்குப் பட்டமும் கிடைத்திருக்காது.

கம்சன் போட்ட தவறான காலக் கணக்கினால் தான் கிருஷ்ணாவதாரம் நமக்குக் கிடைத்தது.

காலத்தின் கருணையால்தான் அசுரக் கூட்டம் அழிந்தது.

காலத்தைச் சரியாகப் பிடித்துக் கொண்டால், தெருப் பிச்சைக்காரியும் மகாராணியாகலாம்.

சினிமா உலகிலேயே நான் பார்க்கிறேன். காலத்தால் தவறான ஆட்களைச் சந்தித்து, கல்யாணம் என்ற பெயரில் வாழ்வு இழந்து போன நடிகைகளும் உண்டு. பெரும் பணக்காரர்களைப் பிடித்துக் கொண்டு உலகம் முழுவதும் விஜயம் செய்யும் நடிகைகளும் உண்டு.

அதிர்ஷ்டம் என்பது வேறொன்றுமில்லை; வருகின்ற காலத்தை ஒழுங்காகப் பிடித்துக் கொள்வதே.

நீங்கள் அதிர்ஷ்டக்காரர்களா என்பதைச் சோதிக்கக் காலம் அறிந்து காரியம் செய்தீர்களா, என்பதை எண்ணிப்பாருங்கள்.

 

ஒரு மறுமொழி

  1. koduthirukkindra sinthanaigal indralavum mattrumindri ini eppothum unmai. Athil ulla seithigalai chinthithu parthal unmai vilangum. Peria thathuvangal miga elimaiyaga kodukkapattirukkirathu. Arivarum padithu sinthikka vendriya ondru.