சொற்களின் சிறப்புகள்

பொங்கல் விழா எப்போதும் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

அவை முறையே போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல்.

இந்த நான்கையும் பற்றி பல ஆண்டுகளாகவே பலர் தவறான விளக்கங்கள் கூறி வருகிறார்கள்.

`போகி நாள்’ என்பதைப் `போக்கி நாள்’ என்கிறார்கள்.

அதாவது வீட்டிலுள்ள கழிவுப் பொருட்களை, பழையனவற்றைப் `போக்கும் நாள்’ என்கிறார்கள்.

எப்போதுமே சுத்தப்படுத்தும் நாளை ஒரு திருநாளாக எந்தக் காலத்திலும் கொண்டாடியதில்லை.

`போகி’ என்ற வார்த்தை தெளிவாகவே இருக்கிறது.

விளைச்சல் என்பது, `போகம்’ என்படும்.

போகத்துக்குரியவன் நிலச்சுவான்தார். அதனால் தான் அந்த விழா, நிலம் உள்ளவர்களின் வீட்டில் மட்டும் தடபுடலாக இருக்கும்.

போகத்துக்குரியவனின் விழா `போகி விழா’

வயலில் இறங்கி உழைக்கும் விவசாயிக்கு உள்ள விழா, `பொங்கல் விழா’. அவனுக்குப் பயன்படும் மாடுகளுக்கான விழா, `மாட்டுப் பொங்கல்’ விழா.

அந்த உணவைப் பகிர்ந்து கொள்ளும் நிலமும் இல்லாத, விவசாயமும் செய்யாத பொதுமக்களின் விழா, `காணும் பொங்கல்’ விழா.

இதுதானே வரிசை.

நிலத்துக்குரியவன்,

விவசாயி,

காளை மாடு,

பொதுமக்கள்.

நான்கு நாள் விழாவிலும் பொங்கல் என்பது எங்கள் பக்கங்களில் திறந்த இடத்திலேயே வைக்கப்படும்; அதாவது சூரிய வெளிச்சம் படுகிற இடத்தில்.

அது வானத்துக்குச் செலுத்தும் நன்றி.

ஆரோக்கியத்திற்காக எந்தெந்தப் பொருட்களை உபயோகப்படுத்துகிறோமோ, அவை எல்லாம் பொங்கலிலே பயன்படுத்தப்படும்.

திருவிழாக்களின் வார்த்தைகளையும், நோக்கங்களையும், அடிப்படைகளையும், புரிந்து கொள்ளாமல் பலர் விளக்கம் கூறி விடுகிறார்கள்.

`கற்பைக் காப்பாற்றிக் கொள்வது’ என்றால், `கர்ப்பப் பையைக் காப்பாற்றிக் கொள்வது’ என்கிறார்கள்.

கர்ப்பமானவளெல்லாம் கற்பை இழந்து விட்டவளா என்ன?

இடம் நோக்கிப் பொருள் கொள்ளுதல் தமிழ் இலக்கிய மரபு.

எங்கள் பக்கங்களில் `ஆடிவேவு’ என்று ஒன்று எடுப்பார்கள்.

புதிதாகக் கல்யாணமான தம்பதிகளை ஆடியிலே பிரித்து வைப்பார்கள்.

காரணம், ஆடியிலே சேர்ந்திருந்தால், சித்திரை வெய்யிலிலே குழந்தை பிறக்குமே என்பதற்காக.

சுயமரியாதை விளக்கக் கூட்டங்களிலே ஒரு விளக்கம் சொல்லுவார்கள்.

`கலி’யாணம் என்றால், `சனியன் பிடித்தல்’ என்று அர்த்தமாம்.

`கலி’ என்றால் சனியனாம்; `ஆணவம்’ என்றால் `பிடித்த’லாம்.

கலிகலி புருஷன்; சரிதான்.

`ஆணவம்’ என்றால் `பிடித்தல்’ என்று இவர்களுக்கு யார் சொன்னது?

அதோடு அந்த வார்த்தை கல்யாணமா? கலியாணமா?

சில காரியங்களுக்கான காரணங்களை, சிலர் நன்றாகச் சொல்லுகிறார்கள்.

“சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்” என்பது பழமொழி.

அதற்கு வாரியார் சுவாமிகள், “சஷ்டியில் விரதம் இருந்தால், அகம் என்னும் பையில் அருள் சுரக்கும்” என்றார்கள்.

இது ஒரு அற்புதமான விளக்கம்.

`அறப்படித்த மூஞ்சுறு கழுநீர்ப்பானையில் விழுந்ததாம்’ என்பார்கள்.

ரொம்பப் படித்த மூஞ்சுறு கழுநீர்ப்பானையில் விழுந்ததென்று சொல்லுவார்கள்.

அதுவல்ல பொருள்.

`அறவடித்த முன்சோறு கழுநீர்ப் பானையில் விழுந்ததாம்’ என்பது பழமொழி. சோற்றை வடிக்கத் தொடங்கும் போது, முன்னால் நிற்கும் சோறு கழுநீர்ச் சட்டியில்தான் விழும்.

இல்லையென்றால் மூஞ்சுறுக்கும், படிப்பிற்கும், கழுநீர்ப்பானைக்கும் என்ன சம்பந்தம்?

`கடவுள்’ என்ற வார்த்தைக்குப் பொருள் சொல்லும் போது, `எல்லாவற்றையும் கடந்து உள்ளிருப்பவன்’ என்று வராது.

கட+உள்கடவுள்.

`நீ பந்த பாசங்கள் எல்லாவற்றையும் கட, உனக்குள்ளே கடவுள் இருப்பான்’ என்பது பொருளாகும்.

தமிழில், `பகுபதம் பகாபதம்’ என இரண்டு வகை உண்டு. அவை பிரித்துப் பார்க்க வேண்டியவை; பிரித்துப் பார்க்கக் கூடாதவை.

கோ+இல்கோயில்.

-இது பகுபதம்

`புரவி’ இது பகாபதம்.

இதை, புர் + அவி, என்று பிரித்துப் பார்க்கக் கூடாது.

அறிஞர் அண்ணா அவர்களும், மற்றும் நாவலரும் மறியல் செய்து கோர்ட்டில் நின்றபோது, அறிஞர் அண்ணா அவர்கள் என்னிடம் கேட்டார்கள், “மறியல் என்ற வார்த்தையை மறு + இயல் என்று பிரித்துப் பொருள் கொள்ளலாமா?” என்று.

மறு + இயல், `மறுவியல்’ என்று வருமே தவிர, மறியல் என்று வராது.

ஆக, தமிழ் இலக்கண மரபிலும், வடமொழி மரபிலும் லேசான மாற்றங்களே கிராமங்களிலும் ஏற்பட்டிருந்தன.

அற்புதமான இலக்கியச் சொற்களெல்லாம், வழக்குச் சொற்களாகப் பயன்படுகின்றன.

இவற்றை உலகிற்குச் சொல்லும் போது, இளைஞனின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

பெரியவர்கள் தவறாகச் சொல்லி விட்டால், அவன் அப்படியே அதை நம்பித் தவறாகப் பொருள் கொண்டு விடுவான்.

என் வாழ்க்கையில் ஒரு உதாரணம்:

பதினெட்டுச் சித்தர்களில் தேரையார் என்பவர் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

அதில், `இரண்டடக்கோம்; ஒன்று விடோம்,’ என்று ஒரு இடம் வருகிறது.

அதன் பொருள், `மலஜலம் வந்தால் அடக்கமாட்டோம், விந்தை வீணாக வெளிப்படுத்தமாட்டோம்’ என்பதாகும்.

இந்தப் பொருளே, எனக்கு இப்போதுதான் புரிந்தது.

நான் ஏழாம் வகுப்பு படித்தபோது, ஒரு ஆசிரியர் எனக்கு சொன்ன பொருள்: `இரண்டடக்கேல்’ என்றால் “மலஜலம் வந்தால் அடக்காதே;” `ஒன்றை விடேல்’ என்றால் “சிறுநீரை அடிக்கடி விடாதே” என்பதாகும்.

ஒன்றுக்குப் போவதென்றால் சிறுநீர் கழிப்பதென்றும், இரண்டுக்குப் போவதென்றால் மலம் போவதென்றும் முடிவு கட்டி, அவர் அப்படிச் சொல்லி விட்டார்.

விளைவு, அடிக்கடி ஒன்றுக்குப் போவதென்றால் நான் பயப்பட ஆரம்பித்தேன்; அடக்க ஆரம்பித்தேன்.

வாத்தியார் சொன்னதாயிற்றே! பயப்படாமல் இருக்க முடியுமா?

ஆகவே, அறிஞர்கள் எனப்படுவோர் வார்த்தைகளுக்குப் பொருள் சொல்லும் போது, அது எதிர்கால இளைஞனின் புத்தியைப் பாதித்துவிடாமல் கூற வேண்டும்.

தமிழிலே சில விஷயங்கள் இயற்கையாகவே மரபாகி இருக்கின்றன.

அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, அத்தை, அம்மான் எல்லாமே `அ’ கரத்தில் தொடங்குகின்றன.

தம்பியும், தங்கையும் `த’கரத்தில் தொடங்குகின்றன.

மாமன், மாமி, மைத்துனன், மைத்துனி, `ம’ கரத்தில் தொடங்குகின்றன.

ஆரம்பத்தில் திட்டமிட்டுச் செய்தார்களா இவற்றை என்பது தெரியவில்லை. ஆனால், சொல்லும் பொருளும் சுவையாக ஓட்டிவரும் மரபு தமிழில் அதிகம்.

வடமொழியில் இருந்து ஏராளமான வார்த்தைகளை தமிழ் பின்னாளில் எடுத்துக் கொண்டிருக்கிறது. உருதுக்காரர்களும் வாரி வழங்கிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

எந்த மொழி வார்த்தைகள் என்று தெரியாமலே பல வார்த்தைகளும் வழங்கப்படுகின்றன.

விவஸ்தை

அவஸ்தை

சபலம்

வஜா

லவலேசம்

லஞ்சம்

லாவண்யம்

ஜீரணம்

-இப்படி ஏராளமான திசைச் சொற்கள், ஒன்றா இரண்டா?

சரியான பொருள் தரும் சொற்களை அப்படியே கையாளுவதால் மயக்கம் நீங்குகிறது.

உலகத்துக்கும், இறைவனுக்கும் சக்தியை வழங்குவதால், உமாதேவியார் `சக்தி’ என்று அழைக்கப்படுகிறார்.

`ஸ்வம்’ என்றால், தானே எழுந்தது; ஆகவே ஆதிமூலம் `சிவம்’ ஆனது.

`பருவத குமாரி’ பார்வதி ஆனாள்.

`ஸீதா ரஸ்தா’ என்றால் ஹிந்தியில் நேரான சாலை.

`ஸீதா’ என்றால் வடமொழியில் `நேரானவள்’ என்று பொருள்.

அவள் ஜனகனின் மகள்; ஆகவே, `ஜானகி.’

மிதிலைச் செல்வியாதலால், `மைதிலி.’

விவேகம் கொண்டவள் ஆதலால், `வைதேகி.’

ரகுவம்சத்தில் தோன்றியதால் ராமன், `ரகுபதி.’

`கோதண்டம்’ என்ற வில்லை ஏந்தியதால், `கோதண்டபாணி.’

தசரதனின் மகன் என்பதால், `தாசரதி.’

அதுபோலவே `மது’ என்ற அரக்கனைக் கொன்றதால் கண்ணன், `மதுசூதனன்.’

கேசியைக் கொன்றதால், `கேசிநிகேதன்.’

அழகாய் இருப்பதால், `முருகன்.’

துன்பங்களை நாசப்படுத்துவதால், `விநாயகன்.’

இடையூறுகளைத் தீர்த்து வைப்பதால், `விக்னேஸ்வரன்.’

யானை முகம் படைத்தால், `கஜானன்.’

கணங்களுக்குத் தலைவனானதால் `கணபதி’, `கணேசன்.’

நீர்வாழ் இனங்களில் தூங்காதது, `மீன்’ ஒன்றுதான்.

தூங்காமலே இருப்பதால் மதுரையில் இருப்பவள், `மீனாட்சி.’

`காமம்’ என்றால் `விருப்பம்.’ மனித விருப்பதை ஆட்சி செய்வதால் காஞ்சியில் இருப்பவள், `காமாட்சி.’

`தாமரை’ யில் இருந்து உள்ளங்களை ஆள்வதால் இலக்குமிக்குப் பெயர், `பத்மாட்சி,’ `கமலாட்சி.’

வடதிசையில் இருந்தபடி அகில பாரதத்தையும் விசாலமாக ஆள்வதால், `விசாலாட்சி.’

-கிட்டத்தட்ட இந்து மதத்தின் சொற்பொருள்களுக்கு ஒரு அகராதியே தயாரிக்கலாம்.

`தேம்’ என்றாலும் தெய்வம்.

`தேவம்’ என்றாலும் தெய்வம்.

`தேங்காய்’ என்று சொல்லே தேம் + காய் தெய்வத்துக்கான காய்; இனிமையான காய் என்ற இரண்டு பொருட்களைத் தரும்.

ஆக, காரணப் பெயர்கள், பொருட் பெயர்கள் என்று எடுத்துக்கொண்டு போனால், தமிழும், வடமொழியும் போட்டி போட்டுக் கொண்டு மோதுகின்றன.

மோசமானது ஒன்றை `கஸ்மாலம்’ என்கிறோம் அல்லவா? இது `கச்மலம்’ என்ற வடமொழியின் திரிபு என்பதை காஞ்சிப் பெரியவாளின் புத்தகத்தில் படித்தேன்.

சொற்களைக் கேட்கின்றபோது பொருட்களைச் சிந்தியுங்கள்! சொற்களுக்கும் பொருட்களுக்குமுள்ள தொடர்பைச் சிந்தியுங்கள்!

அதுவும் மத சம்பந்தமான சொற்களைக் கூர்ந்து கவனியுங்கள்.

கிட்டதட்ட பாதி விஷயங்கள் உங்களுக்கு இயற்கையாகவே புரிந்துவிடும்.