பயங்கரவாத ஆதரவு… ஸ்டாலினை குறிவைக்கும் பா.ஜ.க!

டீ-ஷர்ட் ஜீன்ஸ் பேன்ட், கையில் ரோலக்ஸ் வாட்ச் சகிதம் ஸ்டைலாக வந்த கழுகாரிடம், ‘‘இடைத்தேர்தல் நிலவரம் எப்படியிருக்கிறது?’’ என்று கேட்டோம். தகவல்களை பரபரவெனக் கொட்ட ஆரம்பித்தார் கழுகார்.

‘‘இரண்டு தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விறுவிறு பிரசாரத்தில் இறங்கிவிட்டார்கள். விக்கிரவாண்டித் தொகுதியில் தி.மு.க-வின் வேகத்தைவிட அ.தி.மு.க-வின் வேகம் அதிகமாக இருக்கிறது. முதல் ரவுண்டிலேயே வைட்டமின் ‘ப’வை தாராளமாகப் புழங்கவிட்டிருக்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். தி.மு.க வேட்பாளர் வெளியூர் நபர் என்கிற கோஷத்தை அ.தி.மு.க தரப்பில் வைக்கிறார்கள். அதற்கெல்லாம் பதிலடி கொடுக்க வேண்டிய தி.மு.க தொகுதி பொறுப்பாளரான பொன்முடி, இன்னும் அமைச்சர் கோதாவிலேயே தொகுதியை வலம்வருவதாக சொந்த கட்சியினர் மத்தியிலேயே புலம்பல்கள் கேட்கின்றன.’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம். தி.மு.க-வின் பிரசாரம் வேகமாக இருந்தாலும், வைட்டமின் ‘ப’-வை இறக்குவதில் அவர்களின் செயல்பாடு மந்தமாகவே இருக்கிறதாம். தி.மு.கழக எம்.பி-யான ஜெகத்ரட்சகன் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்த வாக்குகளைக் குறிவைத்து தன் சமூகத்தினரிடம் திண்ணைப் பிரசாரம் செய்துவருகிறார். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் சூடுபிடிக்கும்.’’

‘‘நாங்குநேரி நிலவரம்?’’

‘‘நாங்குநேரி, காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டதில் பல்வேறு சர்ச்சைகள் இருக்கின்றன. ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து, சென்னையில் செட்டிலானவரை வேட்பாளராக நிறுத்திவிட்டார்கள். கரன்சியை வைத்தே வேட்பாளர் தேர்வு நடந்துள்ளது’ என்று புலம்பல் சத்தம் கேட்கிறது. சஞ்சய் தத், முகுல் வாஸ்னிக் இருவருமே மனோகருக்கு சப்போர்ட் செய்துள்ளனராம். புலம்பல்கள் ஒரு பக்கம் இருந்தாலும், கிறிஸ்தவ நாடார் வாக்குகளை அ.தி.மு.க-விடமிருந்து மடைமாற்றத் துடிக்கிறது காங்கிரஸ் கட்சி.’’

‘‘தஹில் ரமானி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதே?’’

‘‘சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த அவர்மீது ஏற்கெனவே சில புகார்கள் வந்ததையடுத்துதான் மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியதாம் உச்ச நீதிமன்ற கொலீஜியம். ஆனால், அதை ஏற்கவில்லை. பிறகு அவர் ராஜினாமா செய்ய, அதையும் ஏற்றுக்கொண்டுவிட்டது உச்ச நீதிமன்றம். அவர், சென்னையில் சொத்துகள் வாங்கியுள்ளார்; மூத்த அமைச்சரின் சிபாரிசு அடிப்படையில் சில வழக்குகளில் முடிவுகள் எடுத்திருக்கிறார் என்று சர்ச்சைகள் கிளம்பியதை ஏற்கெனவே நானும் சொல்லியிருந்தேன். தற்போது சி.பி.ஐ விசாரணைக்கே உத்தரவிட்டுவிட்டது உச்ச நீதிமன்றம்.’’

‘‘இதில் மூத்த அமைச்சர் எங்கிருந்து வருகிறார்?!’’

‘‘சிலைக்கடத்தல் வழக்கில் பொன்.மாணிக்கவேல் படுசுறுசுறுப்பாகக் காய்களை நகர்த்திவந்தார். நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வுதான் இந்த வழக்குகளை விசாரித்துவந்தது. தங்களுடைய விசாரணையில் எந்தவித குறுக்கீடுகளையும் அனுமதித்ததில்லை மகாதேவன். சொல்லப்போனால், பொன்.மாணிக்கவேலின் நேர்மையான நடவடிக்கைளுக்கு தொடர்ந்து பச்சைக்கொடி காட்டி வந்தது அந்த அமர்வு. அரசுத் தரப்பிலிருந்து சிலபல காரணங்களால் பொன்.மாணிக்கவேலுக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டபோதும், அவருக்குத் துணையாக நின்றது மகாதேவன் அமர்வு.’’

‘‘நீதியின் பக்கம்தானே அவர்கள் உறுதியாக நின்றார்கள்.’’

‘‘அதனால், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் வரையிலும் தமிழக அரசு கொண்டு சென்றது. ஆனாலும், பொன்.மாணிக்கவேலை அந்த வழக்கு விசாரணையிலிருந்து விடுவிக்க உச்ச நீதிமன்றம் உடன்படவில்லை. மாறாக, தானும் பொன்.மாணிக்கவேல் பக்கமே நின்றது. இதையடுத்துதான், சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையையே மகாதேவன் அமர்விடம் இருந்து மாற்றிவிட்டது உயர் நீதிமன்றம். இதிலும் தஹில் ரமானிக்கு ஏதாவது தொடர்பு இருக்குமோ என்பது குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.”

‘‘ஸ்டாலினை பா.ஜ.க நெருக்குவதாகக் கேள்விப்பட்டோமே?’’

‘‘உண்மைதான்… தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பிவருவதால், மத்திய அரசு ஏற்கெனவே தி.மு.க மீது கடுப்பில் இருக்கிறது. தி.மு.க-வின் இந்தப் பரப்புரை நீடித்தால், வரும் சட்டமன்றத் தேர்தலிலும்

பி.ஜே.பி அமைக்கும் கூட்டணி படுதோல்வி அடையும் என எச்சரித்துள்ளனர் தமிழக

பி.ஜே.பி தரப்பினர்.’’

‘‘அதற்கு என்ன செய்யப்போகிறார்களாம்?’’

‘‘காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கம் தொடர்பாக பி.ஜே.பி சார்பில் மாநிலம் முழுவதும் கலந்துரையாடல் நடைபெற்றுவருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பி.ஜே.பி-யின் டெல்லி பிரமுகர் ஆசீர்வாதம் ஆச்சாரி, ‘ஸ்டாலின் தொடர்ந்து பயங்கரவாதத் துக்கு ஆதரவாக இருந்தால், அவர் கைது செய்யப்படுவார்’ என்று கொளுத்திப் போட்டுள்ளார்.’’

‘‘என்ன… பயங்கரவாத ஆதரவா?’’

‘‘காஷ்மீர் விவகாரத்தில் டெல்லியில் தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஷெஹ்லா ரஷீத் என்பவரையும் அழைத்துப் பேசவைத்தார்கள். டெல்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்த மாணவி காஷ்மீரில் ராணுவத்தினரைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக மத்திய அரசு கருதுகிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கொண்டு இவரை கைதுசெய்யும் வேலைகளில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.’’

‘‘சரி.. அதற்கும் ஸ்டாலினுக்கும் என்ன தொடர்பு?’’

‘‘அந்தப் பெண்ணைக் கைதுசெய்து அவரிடம் `தி.மு.க கூட்டத்தில் எதற்காக, யாருடைய அழைப்பின் பெயரில் கலந்துகொண்டீர்?’ என்று வாக்குமூலம் வாங்கவுள்ளனர். இந்த வாக்குமூலத்தை வைத்து பயங்கவாதத்துக்கு ஆதரவாக இருந்த ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைத்த தி.மு.க-வின்மீது வழக்கைப் பாய்ச்சவுள்ளது மத்திய அரசு. இதேபோல் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் நிற்காமல் தடுக்க, சில சட்டச்சிக்கல்களை ஏற்படுத்தும் வேலைகளிலும் பி.ஜே.பி தரப்பு இறங்கியுள்ளதாம். அதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.’’

‘‘எடப்பாடி தரப்பு என்ன செய்கிறது?’’

‘‘எடப்பாடி ஜித்தனிலும் ஜித்தனாக இருக்கிறார். விக்கிரவாண்டி, நாங்குநேரி இரண்டு தொகுதிகளிலும் தங்களை எதற்கும் கலந்தாலோசிக்கவில்லை என்று தமிழக பி.ஜே.பி உள்ளுக்குள் குமுறிவந்தது. அதைப் பற்றி டெல்லி தலைமையிடமும் தெரிவித்திருந்தனர். எடப்பாடி ஒரு மாஸ்டர் பிளான் போட்டு செப்டம்பர் 30-ம் தேதி சென்னைக்கு வந்த மோடியை மொத்த அமைச்சரவையையும் கூட்டிக்கொண்டு போய் வரவேற்பு கொடுத்து அசத்திவிட்டார். அத்துடன் விடவில்லை… மோடியிடம் நைஸாக, ‘இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க-வுக்கு உங்கள் ஆதரவு தேவை’ என்று கோரிக்கையும் வைத்துவிட்டார்.’’

‘‘ஆனால், இதற்கு மோடி எந்தப் பதிலையும் நேரடியாகத் தரவில்லையாமே!’’

‘‘அது உமது காதுகளுக்கு வந்துவிட்டதோ. பி.ஜே.பி-யின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர ராவிடம் பேசும்படி சொல்லி ஒதுங்கிக் கொண்டார் மோடி. பிறகு, முரளிதர ராவை போனில் பிடித்த எடப்பாடி விஷயத்தைச் சொல்ல, ‘அமித் ஷாவிடம் கேட்டுச் சொல்கிறேன்’ என்று நழுவிவிட்டாராம் ராவ். அவர் போனை வைத்ததுமே, ஓ.பி.எஸ் போன் செய்துள்ளார். அவருக்கும் அதே பதிலைத் தந்துள்ளார் ராவ். இதனால், முதல்வரும் துணை முதல்வரும் அப்செட்.

‘‘ஏன் இந்த விஷயத்தில் பி.ஜே.பி இப்படி இழுவையைப் போடுகிறது?’’

‘‘நாங்குநேரி தொகுதியை எதிர்பார்த்தார்கள் அல்லவா பி.ஜே.பி-யில். அது இல்லை என்கிற கடுப்பாகக்கூட இருக்கலாம். இது இப்படியிருக்க, கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வேலையில் எடப்பாடி இறங்கிவிட்டார். அவருடைய ஒரே இலக்கு, இப்போது சசிகலாவை சிறையிலிருந்து வெளியே கொண்டுவருவதுதான் என்கின்றனர்.’’

‘‘தினகரன் கடுப்பாவாரே!’’

‘‘உண்மைதான். சசிகலா தரப்பில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள சீராய்வு மனு விசாரணைக்கு வரும்போது, தமிழக அரசு எந்த வகையில் அதற்கு உதவ முடியும் என்று மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் எடப்பாடி சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளாராம். ஏற்கெனவே சுப்பிரமணியன் சுவாமி ஒருபுறம் சசிகலாவின் விடுதலைக்கு முயன்றுவருகிறார். அடுத்த ஆண்டு மே மாதம் வரையே சசிகலா அதிகபட்சம் சிறையில் இருப்பார் என்கின்றனர். ஆனால், தமிழக உளவுத் துறையினர் சசிகலா – எடப்பாடி இடையே இப்போதே இணக்கமான உறவு இருப்பதாகத் தொடர்ந்து செய்திகளைக் கசியவிட்டு வருவதால், தினகரன் அப்செட்டில் இருக்கிறார். இந்தச் செய்தியைப் பரப்பி தன்னிடம் உள்ள நிர்வாகிகளை அ.தி.மு.க பக்கம் கொண்டு போகிறார்கள் என்று தினகரன் கடுப்பில் இருக்கி றாராம்” என்ற கழுகார் சட்டெனப் புறப்பட்டார்.