பிரியாணி, ஃபிரைடு ரைஸில் சேர்க்கப்படும் `எம்.எஸ்.ஜி’ உடல்நலனுக்கு உகந்ததா?

பிரியாணி, ஃபிரைடுரைஸ், பீட்சா, பர்கர், பிஸ்கட், சமோசா, உருளைக்கிழங்கு சிப்ஸ், ஐஸ்க்ரீம் உள்ளிட்ட உணவுகளின் சுவையை அதிகரிக்கச் சேர்க்கப்படுவது `எம்.எஸ்.ஜி’ எனப்படும் `மோனோ சோடியம் குளூட்டமேட்’ (Monosodium glutamate). ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவுகளில் பெரும்பாலும் `எம்.எஸ்.ஜி’ சேர்க்கப்படுவதாகவும் அதனால் நோய்கள் வர அதிக

வாய்ப்புள்ளதாகவும் கூறி அதைத் தடை செய்யுமாறு கோரிக்கைகளும் புகார்களும் அரசுக்கு வந்துள்ளன. இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காற்று மாசுபாடு தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன், `எம்.எஸ்.ஜி’ எனப்படும் `மோனோ சோடியம் குளூட்டமேட்டைத் தடை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகக் கூறினார். மேலும், இந்த விஷயம் தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் கூறினார்.

மக்கள் மத்தியில் மோனோ சோடியம் குளூட்டமேட் அதைத் தயாரித்து விற்கும் பிரபல நிறுவனத்தின் பெயரில்தான் அறியப்பட்டுள்ளது. `எம்.எஸ்.ஜி’ எனப்படும் இது ஒரு வகை உப்பு. இதுபற்றி ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரியிடம் கேட்டோம். விரிவாகப் பேசினார்.

“ `மோனோ சோடியம் குளூட்டமேட்’ என்பதை சைனீஸ் உப்பு என்பார்கள். சீன உணவுகளிலும் பிரியாணி வகை உணவுகளிலும் அவற்றின் சுவையை அதிகரிக்க இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண உப்பில் சோடியம் குளோரைடு இருப்பதுபோல, மோனோ சோடியம் குளூட்டமேட்டில் குளூட்டாமிக் அமிலம் (Glutamic acid) உள்ளது. இதை நாம் பயன்படுத்தலாமா, இது நல்லதா கெட்டதா என்ற சர்ச்சை பலகாலமாக இருந்து வருகிறது.

தக்காளி, சீஸ் போன்றவற்றில் மோனோ சோடியம் குளூட்டமேட்டில் சிறிய அளவில் இயற்கையாகவே உள்ளது. குறைந்த அளவில் உள்ள இந்த மோனோ சோடியம் குளூட்டமேட்டால் எந்தக் கெடுதலும் ஏற்படாது என்று உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாடு நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், அது அளவுக்கு மீறும்போதுதான் ஆபத்தை ஏற்படுத்தும். மோனோ சோடியம் குளூட்டமேட்டில் `உமாமி’ (Umami) என்ற சுவை இருப்பதாகவும் அதனால் அது உணவுக்குச் சுவையூட்டுவதற்காகச் சேர்க்கப்படுவதாகவும் சீனர்கள் கூறுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் உவர்ப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளைப்போல அதுவும் ஒருவகை சுவையைத் தருகிறது என்கிறார்கள். ஆனால், உண்மை நிலையை நாம் ஆராய வேண்டியது அவசியம். அதாவது, நாம் ஏற்கெனவே பயன்படுத்தும் உப்பிலும் சோடியம் இருக்கிறது. இந்த `எம்.எஸ்.ஜி’யிலும் சோடியம் இருக்கிறது என்பதால் சோடியத்தின் அளவு அதிகரித்து உடல்நலனில் பிரச்னையை ஏற்படுத்தும்.

நாம் பயன்படுத்தும் உப்பால் சிறுவயதிலேயே ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. எம்.எஸ்.ஜி அதிகம் பயன்படுத்துவதால் வாந்தி, வயிற்றுவலி, தலைவலி, நரம்புக் கோளாறுகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, `எம்.எஸ்.ஜி’யை உணவில் அதிகம் சேர்க்காமல் தவிர்ப்பது நல்லது. ஏற்கெனவே சோடியம் உப்பை பயன்படுத்தும்போது இன்னோர் உப்பு நமக்குத் தேவையில்லை. அதிலும் குறிப்பாக, நம் பாரம்பர்ய உணவுகளின் சுவையை அதிகரிக்க `எம்.எஸ்.ஜி’ எனப்படும் `மோனோ சோடியம் குளூட்டமேட்’ சேர்ப்பது தேவையில்லாதது” என்றார்.